இடமாற்றம்!

இது வரை அறியாத நண்பர்களுக்காக:
என் வலைப்பதிவை பாரதி.நெட் தளத்திற்கு மாற்றியிருக்கிறேன், அங்கு வருகை தரவும்.
இத் தளங்களை வடிவமைத்துத் தந்த மதிக்கு என் நன்றி!

இயேல் கட்டிடங்கள் - 4

Image hosted by Photobucket.com
இது நம்மூர்ப் பக்கத்துக் கதவுகளை நினைவூட்டியது!

கார்த்திக்ராமாஸ் வரவு, நியூஹேவன் விழாக்கோலம்!

நியூஹேவனின் Art & Ideas நிகழ்வுகளை இந்த வருடம் அதிகம் பதிய முடியவில்லை. 10 ஆவது வருட நிகழ்வின் இறுதி நாளான சனிக்கிழமை திடீர் விருந்தாளியான கார்த்திக்குடன் (செர்ரி, கதிர்காமஸ் போன்ற அவதாரப் பெயர்களையும் தாங்கியவர்) சென்று கலந்து கொள்ளவொரு வாய்ப்புக் கிட்டியது. இதை கார்த்திக்கின் வருகையையொட்டிய விழாவாகவும், அவரது பத்தாவது பிறந்த நாளாகவும் என்னைப் போலவே நீங்களும் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல!

பாலகருக்கு அகவை மகுடம் சூட்டும் பாலகன்
Image hosted by Photobucket.com

பிறந்த நாளுக்கு வந்திருந்த திருக்கூட்டம்
Image hosted by Photobucket.com

மக்களுக்கு விநியோகிக்கப் பட்ட இனிப்பு
Image hosted by Photobucket.com


கார்த்திக்கிற்காக ஏற்பாடு செய்யப் பட்ட Bomb Squad இசைக் குழு
Image hosted by Photobucket.com

கார்த்திக்கின் திருமுகப் பொம்மையை ஏந்தி வலம் வரும் தொண்டர்கள்
Image hosted by Photobucket.com


வலைப்பதிவர்கள் இருக்குமிடத்தில் முகமூடி இல்லாமலா?!
Image hosted by Photobucket.com

பாய்மரப் படகில்

அன்றைக்கு மாலை. நானும் மற்றும் இரு அலுவலக நண்பர்களும் கிளம்பினோம். பேராசிரியர் தன்னோடு பாய்மரப் படகுச் சவாரிக்கு அழைத்திருந்தார். பரிசல், விசைப்படகு, துடுப்புப் படகு எல்லாவற்றிலும் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று சுற்றுலாக் காரனின் பரவசத்தோடு தத்தளித்துச் சுற்றியதுண்டு. ஒரு முறை பாய்மரப் படகிலும் யாரோ செலுத்த 30 பேரோடு கும்பலாய் உட்கார்ந்திருந்துவிட்டு வந்ததும் உண்டு. ஆனால் இது வித்தியாசமான அனுபவம். ஒரு பத்து மீட்டர் நீளமுள்ள படகு. படகின் அடித்தளத்தில் சில அறைகள். அதில் இருவர் வசிப்பதற்கான படுக்கை, கழிவறை, சமையலறை வசதிகள். மேலே 15 மீட்டர் உயர இரும்புத் தண்டு. அதிலிருந்து கிளைக்கும் கம்பிகள்.

நிறுத்துமிடத்திலிருந்து விசைப் படகாகக் கிளப்பினார். கடலுக்குள் வந்ததும் மோட்டாரை அணைத்து விட்டுப் பாய்களை விரித்தோம். இரண்டு வெள்ளை முக்கோணங்களாய்ப் பாய்கள் உயர்ந்து விரிந்து கொண்டன. படகைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. கூட வந்த ஒருவனுக்குத் தெரியும், பேராசிரியருக்குத் தெரியும், அவர்தான் தலைமை மாலுமி, இந்தக் கயிற்றை இழு, இதை அவிழ்த்துவிடு, இறுக்கு, தளர்த்து, அதைப் பிடி என்பார் நாங்கள் ஓடி ஓடிச் செய்து கொண்டிருந்தோம். அன்றைக்குக் காற்று பலமில்லை. ஒரு நாட்டிகல் மைல் வேகத்தில் படகு செல்வதே பெரும்பாடாக இருந்தது, அத்தோடு கடைந்தெடுத்த மாலுமிகள் (நாங்கதான்!) வேறு. இந்த அழகோடு அங்கு நடந்து கொண்டிருந்த படகுப் போட்டியிலும் துணிந்து நுழைந்துவிட்டோம்.

ஒரு படகில் போட்டி நடத்துவோர் நங்கூரமிட்டிருந்தார்கள். படகின் பெயரைக் கேட்டுக் கொண்டார்கள். இன்னும் சில நேரங்களில் குழலூதுவோம், ஐந்து நிமிடங்களில் இந்த எல்லைக் கோட்டைக் கடந்து நீங்கள் படகைச் செலுத்தி அதோ அந்த என்னமோ பாறையைச் சுற்றிவிட்டு வர வேண்டும் என்பதாய்ப் போட்டி. காற்று இல்லை. படகுகளெல்லாம் அங்கேயே மிதந்து கொண்டிருந்தன.

நேரம் சென்றதேயொழியப் படகு செல்லவில்லை. மழை இருண்டு வந்தது. சட சட. நனைவது சுகம், குளிராதவரையில்! காற்றுமில்லை, மழை வேறு, இனி போட்டியில் இருப்பது அர்த்தமில்லையென்று போட்டியிலிருந்து விலகி, மோட்டாரை இயக்கிக் கரையை நோக்கி வர ஆரம்பித்தோம். பாதித் தொலைவு வந்ததும் காற்று வேகங்கூடி இருப்பதை உணர முடிந்தது. மறுபடியும் மோட்டாரை அணைத்துவிட்டுப் பாய்மரத்தால் செலுத்தினோம். மழைக் காற்று. இப்போது தள்ளியது. 4 நாட்டிகல் மைல் வேகத்தில் படகு சென்றது. மோட்டாரின் இறைச்சலில்லாமல், சடசடக்கும் மழையின் சத்தத்திலும் படகு கிழிக்கும் நீரின் சத்தத்திலும் அந்தப் பொழுது என்னவோ செய்தது. மழையின் முடிவில் கீழ்வானில் வானவில். இந்தக் கோடியில் கிளம்பி அந்தக் கோடி வரை முற்று முழுதாய் ஒரு வில். அதனருகிலேயே புரண்ட நிறங்களோடு இன்னொன்றும். இருட்டும் வரை படகைச் செலுத்திக் கொண்டிருந்துவிட்டுப் பின் திரும்பினோம்.

Image hosted by Photobucket.com

அந்த மாலை ஒரு புது அனுபவம். படகிலும், பயணத்தின் பின்னும் தமிழர்களின் திரைகடலோடிய திறனை நினைத்துப் போற்றாமலிருக்க முடியவில்லை. மெல்ல விரியும் அழகான அந்தப் பழங்கனவை, இப்போது தமிழர்களிடம் எத்தனைப் பாய்மரப் படகுகள் இருக்கின்றன, என்ற கேள்வி அடித்துக் கலைக்கிறது.

தென்னிந்திய வரலாற்று வரைபடம்

இன்றைய பிபிசி தமிழோசையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் கே. இராஜன் அவர்களுடனான செவ்வியைக் கேட்டேன். இவரும் இவரது சக ஆராய்ச்சியாளர்களும் தென்னிந்தியாவின் வரலாற்று வரைபடங்களைத் (Atlas, படத் தொகுதி?) தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ் வரைபடங்கள் அரசியல், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரத் தகவல்களைத் தாங்கியிருக்கும். கற்காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசின் காலம் வரையிலான தகவல்கள் தொகுக்கப் படுகின்றன. கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முதல் முயற்சியாகப் புதுக்கோட்டை மாவட்டத்தினைக் குறித்த விபரங்கள் சேகரிக்கப் பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன (இன்னும் முழுமையடையவில்லை). ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இப்புறத்திட்டுக்கு பிரெஞ்ச்-இந்திய அமைப்பொன்றும் ஃபோர்டு அறக்கட்டளையும் உதவுகின்றன. இப்புறத்திட்டினைப் பற்றிய மேலதிகத் தகவல்களை Historical Atlas of South India எனும் இணைய தளத்தில் காணலாம். வரைபடங்களை மோசில்லா உலாவியை விட எக்ஸ்ப்ளோரரின் மூலம் நன்றாகக் காண முடிகிறது.

இயேல் கட்டிடங்கள் - 3

இது இயேலின் ஒரு நூலகம். ஸ்டெர்லிங் நினைவு நூலகம். முன்பொருநாள் இதைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். இது அப்பதிவில் பார்க்கும் கட்டிடந்தான், கொஞ்சம் அருகில்!

Image hosted by Photobucket.com

சில கோக்கு மாக்கான குறிப்புகள்!

Image hosted by Photobucket.com

1. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் திறக்கப் படவிருக்கும் கோக் கும்பெனியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி. இக் கும்பெனி நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர்கள் தண்ணீரைப் பயன்படுத்த அரசால் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. தாமிரபரணியிலிருந்து இந்தத் தண்ணீர் உறிஞ்சப்படும். சொன்னதை விட அதிகமாக, அதாவது நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர்களை உறிஞ்சுமென மக்களால் அச்சம் தெரிவிக்கப் படுகிறது. சுற்றுப் புற விவசாயிகள் தாமிரபரணியையே நம்பியிருப்பதால் நாளடைவில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமென அஞ்சுகிறார்கள். மேலும் கோக் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள் இருக்கும் சுற்றுப்புறத் தண்ணீரையும், விளைநிலங்களையும் பாழடிப்பதாகவும் உதாரணங்கள் இருக்கின்றன.

2. இதே போன்றவொரு தண்ணீர் உறிஞ்சும் மற்றும் மாசுபடுத்தும் கோக் தொழிற்சாலை, பாலக்காட்டுக்கருகிலிருப்பது, போராட்டங்களின் காரணமாகத் தற்போது மூடப்பட்ட நிலையிலும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் இருக்கின்றது. (இந்தியாவில் மொத்தம் 27 கோக் தொழிற்சாலைகளுள்ளன!). பெருங்கோக்குப் புள்ளிகள் இந்தியாவுக்கு விரைந்திருப்பதாக இன்றைய செய்திகள்.

3. கோக் கும்பெனி விளைவிக்கும் கேடுகள் எண்ணிடலடங்கா. முக்கியமான சில:
அ) கொலம்பியாவில் முறைகேடுகளை எதிர்த்துப் போராடிய தொழிற்சங்கக் காரர்களை, கோக் வளாகத்துக்குள்ளேயே இராணுவம் கொன்றது;
ஆ) அமெரிக்காவில் கறுப்பரினத்தின் மீது சம்பளம், பணிவுயர்வு போன்றவற்றில் பாரபட்சமாக நடந்து கொண்டது;
இ) சோடாபுட்டியுடன் மெல்ல ஒரு நாட்டின் சந்தைக்குள் ஊடுருவும் கோக், கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டின் தண்ணீர் விற்பனையைக் கையகப் படுத்துகிறது. (தசானி கோக்கோட தண்ணிதான், இதுல புற்று நோய் வர வைக்கும் ப்ரோமேட் எனும் நச்சு அளவுக்கதிகமா இருக்கு!) விளைவு? நம்ம ஊரு ஆத்துத் தண்ணியை கோக் நமக்கே விற்கும்;
ஈ) இவை தவிர கோக்கின் உலகறிந்த சுகாதாரக் கேடுகள்!

4. கோக்கின் இத்தகைய பிறழ்வுகளை எதிர்த்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன. அவற்றில் சில:
அ) கோக்கைப் புறக்கணிப்போம் என்ற பொதுமக்களின் கூப்பாடுகள் (கோக்கின் பொருட்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும்);
ஆ) இந்திய நாடாளுமன்றம் தனது வளாகங்களில் கோக்கை விற்க அனுமதிப்பதில்லையென்ற சட்டம்;
இ) உலகெங்கிலும் பல பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் கோக்கைப் புறக்கணித்தல், உதாரணம் க்வீன்ஸ் பல்கலை, கனடா, கலிபோர்னிய மாநிலப் பல்கலை;
ஈ) அண்மையில் வாஷிங்டன் மாநில மக்களாட்சிக் கட்சி (36வது மாவட்டத்தில்) அனைத்து கோக் பொருட்களையும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

இந்த கோக்கை நாம புறக்கணிக்கனுமா வேண்டாமா? கங்கை கொண்டான் தண்ணியை கோக் உறிஞ்ச விடலாமா?

தொடர்புடைய சுட்டிகள் (தலைக்கு ஒன்று மட்டும்):
கங்கை கொண்டான் போராட்டம்
பாலக்காடு கோக் எதிர்ப்பு (மேதா பட்கரும் களத்தில்)
கொலம்பியா கொலைகள்
தண்ணீர்த் தொழிலை விழுங்கும் கோக்
அமெரிக்காவில் கோக்கின் இன வெறி
பொதுவான கோக் புறக்கணிப்புகளைப் பற்றிய தளம் (அடிக்கடி புதுப்பிக்கப் படுகிறது).

ஊர்க்குறிப்பு: கோக் என்றில்லை, எல்லா சோடா ரகங்களும் உடல் நலத்துக்குக் கேடானவை, எனவே இவற்றைப் பள்ளிகளிலிருந்து அகற்ற வேண்டுமென அமெரிக்காவின் கனெக்டிகட் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அதெல்லாம் அம்மாப்பா பாடு என்று ஆளுநர் தூக்கியெறிந்து விட்டார். இந்தத் தீர்மானத்தைத் தூக்கியெறிய வைக்க சோடாக் கம்பெனிகள் செலவழித்தது 250,000 டாலர்கள்!

இயேல் கட்டிடங்கள் - 2

Image hosted by Photobucket.com

காற்றுவாரி
கானெறி
திட்டி
நுழை
பலகணி
காலதர்
சாலேகம், சாலகம், சாலம்
நூழை
கதிர்ச்சாலேகம்
பின்னற்சன்னல்
குறுங்கண்
குறுங்குடாப்பு
காற்றுவாரிப்பலகை
நேர்வாய்க்கட்டளை
பசுக்கற்சன்னல்
இலைக்கதவு

இதெல்லாம் என்னன்னு கேக்குறீங்களா? சன்னலில் இத்தனை வகைகள் என்று விளக்குகிறார் மதுரபாரதி. சரி, மேலேயிருப்பது எதில் சேர்த்தி?

இயேல் கட்டிடங்கள்

வானை முட்டும் பெட்டியடுக்குக் கட்டிடங்கள் என்னைப் பெரிதும் வியப்புற வைப்பதில்லை. நியூ யோர்க்கைச் சற்றுத் தள்ளியிருந்து பார்த்தால் என் குவியத்தின் கூர்நுனி அந்தக் கட்டிடங்களுக்கிடையில் சிக்கித் திணறுவதைப் போலிருக்கும். புதிய கட்டிடக் கலையென்ற பெயரில் பழைய அழகிய நுணுக்கங்கள் பலவற்றையும் தப்ப விட்டு விடுகிறோமோ என்று நினைப்பதுண்டு. இவ்வகையில், பழைய கட்டிடக் கலையம்சங்களை இன்றளவும் தாங்கி நிற்கும் இயேல் (Yale) பல்கலையின் கட்டிடங்களை எனக்குப் பிடிக்கும். தேவையெனில் இக்கட்டிடங்கள் மிகுந்த அக்கறையுடன் (யோசிக்க வைக்கும் செலவுடனும்!) இயல்பு/தோற்றம் மாறாமல் மீட்டுருவாக்கம் செய்யப் படுகின்றன. இத்தொடர் பதிவில் நான் எடுத்த இயேலின் சில புகைப்படங்களை, குறிப்பாக வாயில்கள் மற்றும் சாளரங்களினதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

(போச்சு, இதை எழுதி முடித்துவிட்டு வாசித்த போது "காலத்தின் முடிவுறா வெளியில் எது புதியது எது பழையது என்று எப்படித் தெளிவாகச் சொல்வாய், கெக்கெ?" என்ற கேள்வியுடன் உள்ளேயிருந்து ஒருவன் எழுந்து வருகிறான் (அவனுக்குக் காலத்துக்குள் வெளியா அல்லது வெளிக்குள் காலமா என்றொரு உபகேள்வியும் இருப்பதாகப் பிறகு என்னிடம் சொன்னான்), அவனிடம் "பழையதைவிடப் புதியதைப் புதியது என்போம்" என்று சொல்லிப் பார்க்கிறேன். "அப்படியென்றால் பழையதும் முன்பு புதியதுதானே?" என்றபடி என்னை இந்தப் படத்தைப் போட விடாமல் இழுத்து மௌனத்தில் தள்ளிவிடப் பார்க்கிறான். இது ஒத்து வராது, இப்போதைக்கு அவனை விட்டுவிட்டுப் படத்தைப் பார்ப்போம்!)

Image hosted by Photobucket.com

'அற்றம்' பெற்றோம்!

அற்றம் என்றால் சமயம், சோர்வு, வருத்தம், அவமானம், வறுமை, அழிவு என்பதாகத் தமிழ் அகராதி சொல்கிறது. பூக்களையும், இசைகளையும் இதழ்களின் பெயர்களாகக் கேட்ட காதுகளுக்கு இழப்பும் துயரும் சார்ந்த எதிரிடையான பெயர் ஒரு வித்தியாசம். சட்டென்று பதியும் முகப்பெழுத்துருவம். புலம்பெயர் வாழ்வு அனைவருக்கும் சிக்கலானது, இதில் யாரையும் தனித்து விடும் எண்ணமில்லை, பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல, எழுத்தில் ஆர்வமுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை போன்ற கட்டியங்களுடன் வருகிறது அற்றம். டொராண்டோ வலைப்பதிவர் கூட்டத்தில் நான் சந்தித்த தான்யா, பிரதீபா ஆகியோருடன் கஜானி, கௌசலா ஆகியோரைக் கொண்ட குழுவினால் நடத்தப்படுகிறது.

சிறுமிகளும் பெண்களுமாய் 16 அஞ்சல் தலைப் படங்களை முன்னட்டையில் கொண்ட மே 2005 இதழை வாசித்து முடித்த போது ஒரு மனக்கனம். சிறுகதைகள் என்றாலே அண்மைய காலங்களில் பின்வாங்குக்குப் போய்விடுகிறேன். இந்த இதழிலும் அதைக் கடைசியாகத்தான் படித்தேன். ஆனால் நிருபாவின் 'ஒரு பழம் தப்பிச்சுண்ணு' கிறக்கந்தரும் ஒரு மொழியுடனும், ஆங்காங்கே அள்ளித் தெளித்த அடிகளுடனும், மென் நகைகளுடனும், பாரந்தரும் முடிவுடனும் பிடித்துப் போனது. நெடுநாட்களின்பின் ஒரு நல்ல கதையைப் படித்திருக்கிறேன். கண்மணியின் 'மண்ணில் நல்ல வண்ணம்' கதை ஆதாம் ஏவாளை இன்னொரு தரம் போய்ப் பார்க்கிறது, அவர்களின் உரையாடலைப் பெண்மொழியில் பதிகிறது. சி.டி.பி.சி வானொலியில் சில நேரங்களில் கேட்டிருக்கும் நேயர் அழைப்பினை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இதழில் ஆங்காங்கே கவிதைகள். ஆகர்ஷியா, ஆழியாள், தான்யா, சுகந்தி சுப்ரமணியத்தின் கவிதைகள். கண்ணீர் வேண்டாம் சகோதரி, இனூயிட், BLACK, நடன அரங்கேற்றம் என்று கட்டுரைகள்/விமர்சனங்கள்/திறனாய்வுகள். 'அட' என்றொரு பத்தி பெண் எழுத்தாளர்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதை இயல்பு படுத்துகிறது. இன்னொரு பிடித்த பகுதி நூலறிமுகம். பச்சைத் தேவதை, ரத்த உறவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், புதிய கதைகள், ஏன் பெண்ணென்று, தொடரும் தவிப்பு ஆகிய புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள். வாசிக்க வேண்டுமென நினைத்தவை புதிய கதைகளும், தொடரும் தவிப்பும். 'ஓரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்து கொள்ளுதல்' என்றொரு உரையாடலைத் தொடங்கியிருக்கிறார் பொடிச்சி (ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் என்ன/யாரென்று தெரியவில்லை இச்சிறு மூளைக்கு). எனக்கென்னவோ 'ஓரின'ங்கற வார்த்தை இடிக்குது. ஆணும் பெண்ணும் மனித இனந்தானே. ஆண்பால், பெண்பால் மட்டுமே வெவ்வேறு என்பதால் 'தற்பால்' அப்படிங்கறதுதான் பொருத்தமாத் தெரியுது. கதையுரைத்தல் என்ற பகுதியில் அதீதா எழுதியிருக்கும் துணிவுமிக்க பெண்களை என் கிராமத்திலும் கண்டிருக்கிறேன். கடைசியா உங்க மூளைக்கு வேலை தந்தே ஆவோம் என்று இலக்கியப் புதிர் போடுகிறார்கள், கிசு கிசுக்களுக்கும் ஊர் வம்புகளுக்கும் உத்தரவாதம்! புலம் பெயர் வாழ்வில் அயலகத்தின் சமூக, அரசியற் கருத்துக்களோடும், கருத்துப் பதிவுகள் மற்றும் வெளிப்பாட்டு உத்திகளோடும் நாம் எவ்விதமெல்லாம் ஊடாடுகிறோம் என்பதையெல்லாம் அற்றம் சொல்லி வரும் என நம்புகிறேன்.

அற்றம் பெற விரும்புவோருக்கான குறிப்பு:
அற்றத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள attamm at gmail dot com

புத்தகங்களை விட்டுத் தப்பியோடி

நானும் என் வாசிப்பை எழுதியே தீருவது என்று முடிவெடுத்து விட்டேன். இனி உங்கள் பாடு, கேட்ட தங்கமணி, பிரதீபா பாடு!

அது ஒரு சின்ன பீரோ. அப்பாவுடையது. இதில் நான் எப்போது புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன் என்று தெரியாது. நினைவுக்கு வருவதெல்லாம் தாகூரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சின்னப் புத்தகம். அவரே எழுதியிருப்பதைப் போன்றது. அகமது எனும் ஓடக்காரனோடு ஆற்றுக்குப் போய் முதலையிடமிருந்து தப்பியதிலிருந்து, பூக்களைப் பிழிந்து அந்தச் சாற்றில் கவிதை எழுதும் பரிசோதனை, குத்தகைக்குக் காணி கேட்டு வரும் ஆளின் கதை வரை அருமையான சம்பவங்கள் அடக்கம். சில வரிகள் இன்னும் நினைவிலிருக்கின்றன, "பூக்கள்தாம் குழைந்து கூழாயினவே தவிர" ரசம் வரவில்லை என்பதாய். அந்தப் புத்தகத்திலேயே என்றுதான் நினைக்கிறேன், அவரது சிறுகதைகளும் இருக்கும். தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் கல்லினைத் தொலைத்துவிட்டு ஆற்றங்கரைக் கூழாங்கற்களையெல்லாம் பொறுக்கியபடி திரியும் ஒரு பைத்தியக்காரன், காஞ்சி மன்னனுக்கும் காசி மன்னனுக்கும் சண்டையென்று தோப்பில் விளையாடும் சிறுபிள்ளைகள் இப்படியாக. பிறகு அதே பீரோவுக்குள்ளிருந்த "அன்பின் வடிவம் டாக்டர் ஐடா" எனும் ஒரு புத்தகம். இது டாக்டர் ஐடா ஸ்கடர் எனும் மருத்துவரைப் பற்றியது. வேலூர் சி.எம்.சியை நிறுவியவர் என்று பின்னால் தெரிந்து கொண்டபோது வியப்பாயிருந்தது. நெ.து.சுந்தரவடிவேலின் (இவர் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தாராம்!) நஞ்சுண்ட நாயகர்கள். யாரோ ஒருவர் விஷக் கோப்பையோடு இருப்பது மாதிரி ஒரு படம். இவற்றைத் தவிர அழ.வள்ளியப்பாவின் கவிதைகளும், பள்ளிக்கூடத்து நூலகத்தில் (அப்படியொன்று இருப்பதே ரொம்ப நாட்களுக்குத் தெரியாது) எப்போதாவது கிடைக்கும் 'வரப்புத் தகராறு' போன்றவையும்.

ஆறோ ஏழோ படிக்கும்போது பக்கத்து வீட்டுக்கு இன்னொரு ஆசிரியர் குடும்பம் வந்தது. அந்தப் பிள்ளைகளிடம் ரத்னபாலா (அதில் வந்த துப்பறியும் சுந்தர் நானென்றுதான் நினைப்பு!). அப்போதிலிருந்துதான் பொது நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்பா தன்னுடைய நூலக எண்ணான 51ல் புத்தகம் எடுக்கும் உரிமையை எனக்களித்தார். சில காலம் கழித்து எண் 621க்கு எனக்கொரு 5 அல்லது 10 ரூபாய் கட்டினார். காட்டுச் சிறுவன் கந்தன், கமலாவும் கருப்பனும், ராஜா மகள், ராட்சத சிலந்தி, பொம்மக்கா மற்றும் சிறுவர்களுக்கான நல்லொழுக்கக் கதைகளாகப் படித்து அந்நாயகர்களின் உலகில் சஞ்சரித்தபடியே வீட்டுக்கு வருவேன். இவற்றிலே பல கதைகளின் சம்பவங்கள் இப்போதும் திடீரென்று ஒரு கணத்தில் தலை தூக்குவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வேன். மறந்து போயிருக்கும் கதைகளினூடே இழையும் சோகம் கும்மென வந்து கவியும். இந்தக் காலகட்டத்தில்தான் அப்பாவின் பாரதியார் கவிதைகளைக் கையகப் படுத்தி என் பெயரைப் பச்சை நிற ஸ்கெட்ச் பேனாவால் கோணலாக எழுதி வைத்துக் கொண்டேன். நல்லதோர் வீணை செய்தேயில் ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து வருகிறது.

நாளாக ஆக சிறுவர் கதைகள் ரொம்பவும் சிறிய பிள்ளைகளுக்கானதோ எனுமொரு தோற்றம். இருந்தாலும் "பெரியவர்களுக்கான" புத்தகங்களை எடுப்பதில் ஒரு தயக்கம். ஒரு நாள் ஏதோ ஒரு கதையின் முதல் வரியைப் படித்துவிட்டுக் கிடந்து சிரித்தேன் "துங்காநாயருக்குக் கோவம் வந்தது, கேவலம் ஒரு குண்டி வேட்டிக்குக் கூட" வழியில்லையே என்பதாக ஆரம்பிக்கும் கதை. இதன் மூலம் என்னைப் பெரியவர்களின் புத்தகங்களுக்கு அறிமுகம் செய்து கொண்டேன். இன்னொரு பட்டாம்பூச்சி, பாபி போன்றவற்றை மாமா வீட்டில் வாசித்தேன், அவர் குமுதம், விகடன் தொடர் கதைகளைக் கட்டித் தைத்து 'ஜெகதா படிப்பகம்' என்ற பெயரில் கேட்பவர்களுக்குக் கொடுப்பார். புரியாத கதைகளும் ஓவியங்களும் கவிதைகளும் அறிமுகமாயின. மருது எப்போதும் எனக்குப் பிடித்த ஓவியர். பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த தாத்தா ஒருவர் போகும்போது சத்தியசோதனையைக் கொடுத்துவிட்டுப் போனார். அதிலும் கொஞ்சம் படித்துவிட்டு ஜோகான்னஸ்பர்க் என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன், அயலகத்திற்கு வந்தபோது சீமான்கள் சீமாட்டிகளின் தொப்பிகளைப் பார்க்கும்போது அடுத்தாரின் தொப்பியைத் தொட்டுப் பார்த்து அவமானப்பட்ட இளங்காந்தியை நினைத்துக் கொள்வேன். அது பதின்மங்களின் கோளாற்றுக் காலம். கழுதைக்குக் 'காதலும்' அதற்கு ஒரு 'சோகமும்' வேறு சேர்ந்து கொண்டன! பிறகென்ன, கவிதைதான். அப்போதும் அதிகம் படிக்கவில்லை. ஒரு நாள் நண்பனொருவன் கொடுத்த "கருவண்டுக் கண்ணழகி"யைச் சாதாரணப் புத்தகம் என்று வீட்டுக்குக் கொண்டு வந்து படித்துப் பார்த்தேன். அது நான் முதன்முதலாகப் படித்த 'வயது வந்தோருக்கான இலக்கியம்'! பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள், பிள்ளைகளுக்கு, குறிப்பாய் வாத்தியார் பிள்ளைகளுக்கு, ஒரு ஊழ்வினையென்றுதான் சொல்ல வேண்டும். இக்காலத்தில் மற்ற புத்தகங்களை யார் கண்டது!

கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பின் இன்று வரையிலும் என் வாசிப்புக்கு முக்கியக் காரணம் தங்கமணி. தான் படிப்பவற்றையெல்லாம் எனக்கும் சொல்வான், படிக்கக் கொடுப்பான். அவனோடிருப்பதே போதுமென்ற அனுபவம். பல புத்தகங்கள் தரும் ஒரு உணர்வு. கல்லூரிக் காலங்களில் பாடந்தான் முதன்மையென்றாலும் நடுநடுவே விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த காலங்களிலும் கல்லூரியிலேயும் படித்த புத்தகங்களில் சிலவற்றை என் நாட்குறிப்பில் குறித்திருக்கிறேன். இப்போது படித்தால் வேடிக்கையாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும், சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதைப் பெயர்த்து இங்கு:

29.5.1989 திங்கள். I dont know why I want to have friendship with younger boys and girls. I love them. அவர்களைப் போல் நாமும் இருக்க முடியாதா என்றொரு ஏக்கம். ஆகாச வீடுகளில் (வாஸந்தி) அந்த மீனு ராஜுவின் கையைப் பிடித்துக் கொண்டு வயல்வெளிகளில் நாரைகளைப் பிடிக்க ஓடுவது போல் ஓடமுடியாதா என்றொரு ஊமைக் கனவு. வயது? வீட்டில் விளையாடுவதற்கே முணுமுணுப்புகள். சின்ன வயதில் பெரியமனிதத் தனம், இப்போது சிறுபிள்ளையாக ஏக்கம். இக்கரைக்கு அக்கரைப் பச்சையா?

4.6.1989 ஞாயிறு. இன்று காலையில் விழிக்கும்போதே ஒரு கற்பனை, ஏதோ பெரிய எழுத்தாளன் போல "இரு முழங்கால்களுக்கிடையே அகப்பட்ட ஈயை உயிருடன் பிடிக்கப் பிரயத்தனப் படுபவன் கூனிக் குறுகுவதைப் போல அவன் கூனிக் குறுகினான்" - எப்படி இருக்கிறது. தெரியவில்லை. சிரிப்பு வந்தது. படுத்துக் கொண்டே ஏதேதோ யோசித்தேன். தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'ஐப் படித்தேன். அதில் வருகின்ற அப்புவை நினைத்தேன். பாவம் அவன். என் தாய் தூயவள் என்று நினைத்துக் கொண்டேன். அலங்காரம் தன் மகனின் தேஜஸ் தீயின் மூலம் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம் என்று பாவம் செய்திருப்பாளோ என்று நினைக்கிறேன்.

5.6.1989 எண்டமூரி வீரேந்திரநாத்தின் 'பணம்' படித்துக் கொண்டிருக்கிறேன். எண்ண அலைகள் கொஞ்சம் லேசாக அடித்துக் கொண்டிருக்கின்றன. நிறைய யோசிப்பதில்லை. படிக்கிறேன். பேசுகிறேன். எழுதுகிறேன்(?).

16.6.1989 சுபா படித்தேன். Not bad. But I hardly like crimes. I want to read effective ending or tragic ending stories. இப்போது வீட்டில் நகை பேச்சு. 'பணத்'தில் படித்த ஒரு சில வரிகள்:
Money can buy books - not wisdom
Money can buy medicines - not health
Money can buy wealth - not happiness
Money can buy clothes - not beauty.
அவ்வரிகளின் நிஜம் எனக்குப் புரிந்தது. பணத்தின் தேவையும் புரிந்தது, But I totally dislike the people who are wandering for money only. Do they have any mind with affection? They can do anything for money. They are uselsss. Money is after all nothing. It is needed for living but money only is not life.

21.6.1989 இன்றுதான் கடைசி முழுநாள். நாளைக்குக் கல்லூரி. இப்ராம்சாவுக்கு லெட்டர் போட்டேன். ஒரு 60க்கு மேல் உள்ள கிழவருக்கும் (நார்த்தாமலை பூசாரி) ஒரு 25க்கும் திருமணம். பாவம் பெண். பரிதாபப் பட்டேன். தாலி கட்டிய விரல்களில் தடுமாற்றம். தளர்நடை. ஹ¥ம் சொத்துக்காக இருக்கும். தூங்கினேன். ஜானகிராமனின் 'அமிர்தம்' படித்தேன். மனதில் நாளை காலேஜ் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததாலும் தலை வலித்ததாலும் அக்கதையின் முடிவு என்னை மிகவும் பாதிக்கவில்லை. only to a slight extent.

26.6. 1989. Ananda vayal is a very effective novel. In moonstone I very much like the character Rosanna. அவளுடைய காதல் on Franklin is divine one.

17.8.1989, வியாழன். கன்யாலால் முன்ஷி எழுதிய ஜெய்சோம்நாத் எனும் நாவல் படிக்கிறேன். அப்பா! படிக்கும்போதே மயிர்க்கூச்செறிகிறது. சஜ்ஜன், பத்மடியுடன் ஒரு பிரிவு கஜினியின் படையைப் பாலைவனத்தின் கோரப் புயலில் மாட்டிவிட்டுத் தன் வாளைச் சுழற்றியபடி "ஜெய் சோம்நாத்" என்று கத்தும் போதும், கோகா ராணா கோட்டையில் இருந்து இறங்கி வந்து கஜினியின் படையினும் புகுந்து போரிட்டு வீழும்போதும் மெய் சிலிர்க்கிறது. இந்துக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

6.11.1989. நேற்று அகல்யா by Balakumaranல் இருந்து கொஞ்சம் படித்தேன். அதில் அவன் (சிவசு) சொல்வது போல் நான் இயல்பாய் இருக்கின்றேனா அல்லது ஒவ்வொருவரிடமும் நான் எனது வேஷத்தை மாற்றுகின்றேனா என்பது தெரியவில்லை. எனது நண்பர்களுக்கு நானொரு joker. வீட்டில் படு அமைதி. என்னியல்பு எது? கூடித்திரிகையில் கும்மாளமிடுவதா? தனியேயிருக்கையில் மனஞ்சுருங்கி அல்லது மிக விரிந்து, ஆடி அல்லது ஒடுங்கி, காமுற்றுத் திரிவதா? எல்லாவற்றையும் easyயாக எடுத்துக் கொள்வதா? கோபப் படுவதா? எல்லாவற்ருக்கும் சிரிப்பதா? வீண்வம்பு செய்வதா அல்லது சண்டை வந்தாலும் விலகிச் செல்வதா? எது என் இயல்பு எனக்கே தெரியவில்லை. இவை அனைத்தையும் நான் செய்கிறேன். ஆனால் அதிகம் செய்வது அதிகமாக ஆடுவதுதான். துருதுரு.

11.5.1991. பாலகுமாரனோட முன்கதைச் சுருக்கம் படிச்சேன். எனக்குள் ஒரு நெருப்பு. தங்கமணி சொல்வது போல். கொட்டாங்கச்சியாய்ப் பரபரவென்று திகுதிகுவென எரிகிறது. நீறு பூத்தது போலும் கனன்று கொண்டிருந்தது. கதை. எழுத வேண்டும். பக்கம் பக்கமாய். புத்தகம் புத்தகமாய். மொழி மொழியாய். இல்லை வேணாம். தமிழ்ல மட்டும். ஒவ்வொரு வார்த்தையும் கதையாய் வர வேண்டும். அப்படி யோசிக்கணும். மண்டை வெடிக்கணும். கண்னு முழியெல்லாம் பிதுங்கி ரிசல்ட் கொண்டு வந்து, பெருமூச்சு விடணும். வெறி. அனல் பறக்கும் மூச்சை இழுத்துக் கொண்டு பாலைவனத்தில் உத்வேகத்துடன் பறக்கும் வெள்ளைக் குதிரை மாதிரி, பிடறி சிலிர்க்க அப்படி ஒரு வெறி. எழுத வேண்டும். பணத்துக்காக அல்ல. புகழுக்காகவா? அதற்காக இருக்கலாம். இல்லாமலிருக்கலாம். என் மனதைக் கொட்ட வேண்டும். டன் கணக்கில் ஏற்றி வைத்துக் கொண்ட சுமைகளைக் கொட்ட வேண்டும். கொட்டியே ஆக வேண்டும். நான் பச்சை வயல் மனது ரெண்டாவது கதைல வர்ற புனிதாவாம். தங்கமணி சொல்றான். நெஜமா? இருக்குமா? நான் innocentஆ? நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. எனக்கு peak life வேணும். excitement வேணும். கீழே வர வேணாம். what i mean is mentally. இ.ரா மாதிரி. ஆனா அப்படி ஒரு பதட்டம் வேணாம். ஒரு அப்பாவித்தனமோ, மழுங்கலோ வேணாம். தீர்க்கமாய், நச்சென்று, வெண்ணெயை செவத்துல அடிக்கிற மாதிரி, சிட்டுக்குருவி தலையைத் திருப்புற மாதிரி வாலாட்டற மாதிரி, சப் சப்பென்று மூஞ்சியில அடிக்கிற மாதிரி அப்படி ஒரு புத்தியோட, தெளிவோட, pointஆ ஒரு excitement வேணும். அப்ப உக்காந்து எழுதனும். நான் எழுத முடியுமா? பாலகுமாரன் கன்னியா ராசி உத்திர நட்சத்திரமாம். நானும் தங்கமணியும் அதே. எனக்கு எழுத வருமா? எழுதுவேன், at least இது மாதிரி டைரியாவது. தினம் ஒரு நாலு பக்கம். போதுமே. வாழ்க்கைல retire ஆனதுக்கப்புறம் படிக்க ஒரு புக் கிடைக்குமே. ஒவ்வொரு secondஐயும் எழுதணும். எழுதணும். யோசிக்கணும். என்ன பண்ணலாம். தங்கமணி, யப்பா. என்ன அறிவு என்ன பேச்சு, தீர்க்கமென்ன, சுத்தி சுத்தி யோசிச்சு, நொறுக்கித் தள்ளி, அமுக்கி அப்படியே அந்தக் கருத்தைக் கழுத்தோட புடிச்சு நிர்வாணமா நமக்குக் காட்டுற தெளிவு என்ன தீவிரம் என்ன! (கட் கட்!). எழுதுவேன். ஒவ்வொன்று பற்றியும் தீர்க்கமாய், ஆணி அறைந்தாற்போல் எழுதுவேன். நிச்சயம் எழுதுவேன். பாலகுமாரா! Thanks. நானும் எழுதுவேன். உன்னை விட அதிகமாய். வீறு கொண்டு பரிணாம வளர்ச்சியோடு, துள்ளலாய், இளமையாய் இன்னும் எப்படியெல்லாமோ எழுதுவேன் at least இந்த டைரியையாவது.

அப்படியான ஒரு காலம். அதில் புத்தகங்களை விட மனிதர்களையும், என்னையும் அதிகமாக நேசித்தேன், உற்றுப் பார்த்தேன். என் சின்ன உலகில் நிகழ்வுகளையெல்லாம் நானே சென்று சேகரித்துக் கொண்டேன். மனிதர்களோடேயே இருந்ததாலோ என்னவோ புத்தகங்களை அதிகமாய்ப் படிக்காதது போன்றதொரு உணர்வு. சென்னைக்கு வந்து தங்கமணியின்றி இருந்த முதல் நாலைந்து வருடங்கள் வாசிப்பின் களப்பிரர் காலம் போலத்தான். அவன் வந்த பிறகு உயிரும் வந்தாற்போல். நிறைய வாசிப்பான். அறை முழுக்கப் புத்தகங்களாக இருக்கும். தாய், கன்னிநிலம், மக்ஸீம் கார்க்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டு, மூன்று தொகுதிகள்), தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் என்று பலதையும் படிக்க வாய்த்தது. விக்ரமாதித்யனின் உயிர்த்தெழுதலைப் படித்துவிட்டு கோவளம் தர்ஹாவுக்குக் கிளம்பிப் போனேன். பாவாவைப் பாக்கணுமென்றேன். பாவா இறந்துவிட்டிருந்தார். அவர் மகனைப் பார்த்துவிட்டு வந்தேன். அதே சூட்டோடுதான் ருத்ரனையும் பார்த்தேன். பாரதியார், தாயுமானவர் கவிதைகளையெல்லாம் வரிவரியாய்ப் படித்துப் பேசிக் கொண்டிருப்போம்.

பிறகு புதுடில்லியில் ஒரு வருடம். டில்லித் தமிழ்ச்சங்க நூலகம் மிகப் பிடித்தவொன்று. தி.ஜாவின் மரப்பசு, பிறகு செம்மீன், காண்டேகாரின் புத்தகங்கள் சில, ஜெயகாந்தனின் நாவல்களில் விட்டுப் போயிருந்தவை என்று. பெயர்ந்தகத்திற்கு வரும்போது சொற்பமான புத்தகங்களுடனேயே வந்தேன், சிந்தனையாளர் நியெட்ஸே (மலர்மன்னனின் மொழிபெயர்ப்பு), இராமாயணப் பாத்திரங்கள் (தந்தை பெரியார்) இப்படியாக விரல் விட்டு எண்ணி விடலாம். பின்பு மதுரையிலிருந்து கலீல் கிப்ரானின் ஞானிகளின் தோட்டம், தீர்க்கதரிசி, கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தனின் கடிதங்கள்) இன்ன பிறவும் வரவழைத்துக் கொண்டேன். டொராண்டோவில் உறவேற்பட்ட பின்னர் (!) புத்தகங்களின் வரவு அதிகம். தலித்திய விமர்சனக் கட்டுரைகள், எட்வர்ட் செய்து, மகாராஜாவின் ரயில்வண்டி, இரவில் நான் உன் குதிரை இந்த வகையில். ஊருக்குப் போயிருந்த போது தங்கமணி எனக்காக ஒரு பெட்டியில் சில புத்தகங்களைப் போட்டு வைத்திருந்தான். டோட்டோசான் மட்டும் படித்திருக்கிறேன். உபபாண்டவம் இன்னுமில்லை. நிறைய புத்தகங்களை வாங்கியிருந்தாலும் கணிசமானவை அன்பளிப்பாகக் கிடைத்தவையே! இப்படியாக இப்போதைய டொராண்டோ சந்திப்பில் அன்பளிக்கப் பட்டவை ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், கொரில்லா என்று ஒரு தொகை. பாதி படித்ததும் தொடாததுமாய் ஏகப்பட்டவை இருக்கின்றன. எப்போதாவது படித்து ஞானியாகிவிடுவேனாக்கும்!

இத்தனைப் புத்தகங்களும் சொல்லாத கதைகளையும் கவிதைகளையும் என் நட்புகளும் உறவுகளும் என் நாட்களில் எழுதுவதாக ஒரு நினைப்பு. அதனாலேயே என்னை அதிகம் பாதிப்பதும் இவர்கள்தான். அப்படித்தான் நேற்று மாசிலன், அப்பா நானும் உங்களோடு குளிக்கிறேன் என்றார். சரியென்றேன். குளிக்கும்போது, அப்பா பாடிக்கிட்டே குளிங்கன்னார். விடுவேனா கிடைத்தவொரு ரசிகனை. என்ன பாடலாமென்று யோசித்தபோது முந்திக் கொண்டு வந்தது பாரதியின் 'மோகத்தைக் கொன்றுவிடு'. பாடினேன். 'பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர் பாரத்தைப் போக்கிவிடு' என்று பாடிப் போனவனை இடைமறித்துக் கேட்டார் பிள்ளை "எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வரிகள் கொடுக்கும் அதிர்வை, சிரிப்பை அவன் கேள்வி கொடுத்தது. இந்த மாதிரிப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்னத்துக்குப் புத்தகம் படிக்கணும்னேன்?!

தங்கமணிக்கும், தம் பொழுதுகளையும் புத்தகங்களையும் பகிர்ந்த, பகிரும் நெஞ்சங்களுக்கும் நன்றி!

"இணையத்தில் தமிழ்" குறுந்தகடு வேண்டுமா?

Image hosted by Photobucket.com

தமிழ்ல கிறுக்கிக் கீறி நோட்டு நோட்டாவும், தாள் தாளாகவும் சேத்து வச்ச நானெல்லாம் இன்னிக்கு லொட்டு லொட்டுன்னு பொட்டிதட்டி வலையேத்துறேன்னா அதுக்கெல்லாம் காரணம் எத்தனையோ ஆர்வலர்களோட உழைப்பு. தமிழ் இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறேன் அப்படின்னு செருமிக்கிட்டு ஒரு உரை நிகழ்த்துமளவு எனக்கு இதில் படிப்பினை இல்லை. நம்மில் பலரைப் போலவே எனக்கும் உரித்துக் கொடுத்தால் தின்னத் தெரியும். நிற்க!

எழுத்துருக்கள், தேடுபொறிகள், உலாவிகள், இலக்கியங்கள் என்று பரந்து கிடக்கும் தமிழ் இணைய உலகி்ன் முக்கியமான ஆக்கங்களை வெங்கட், டிசே மற்றும் மதி ஆகியோர் ஒரு குறுந்தகட்டில் திரட்டி வைத்திருக்கிறார்கள். "இணையத்தில் தமிழ்" எனும் இந்தக் குறுந்தகடு டொராண்டோவில் கடந்த வாரம் நிகழ்ந்த சந்திப்புகளின்போது புதியவர்களுக்கும், வேண்டுவோருக்கும் அளிப்பதற்காகத் தயாரிக்கப் பட்டது. என்னிடமும் சிலவற்றைக் கொடுத்து அமெரிக்காவிலிருப்போரிடம் பகிர்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். எனவே அமெரிக்கவாழ் ஆர்வலர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் (sundarappaa yahoo com) அனுப்பி இக்குறுந்தகட்டினைப் பெற்றுக் கொள்ளலாம் (இலவசம்).

குறுந்தகட்டில் இருக்கும் கோப்புகள்:
கேட்பி (audio tool, audacity)
எ-கலப்பை
மின்னஞ்சல் (Chanakya, Columba Linux)
தமிழ் எழுத்துருக்கள்
காசியின் நியூக்ளியஸ் பற்றிய கோப்புகள்
மதுரை மின் தொகுப்புத் திட்டத்திலிருக்கும் நூற்கள் (இது ஒன்னே பத்தாதா?!)
சுரதாவின் செயலிகள் (எழுத்துருமாற்றிகள், தேடுபொறிகள்...)
உமரின் தமிழ் ஒருங்குறி

இவற்றையெல்லாம் உருவாக்கி நமக்களித்தவர்களுக்கு மீண்டுமொரு முறை நம் நன்றி!

இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!

Image hosted by Photobucket.com

புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள். அதாவது சிகரெட் நிறுவனங்கள் பெண்களைப் புகைக்கு அடிமைப் படுத்தும் நோக்கில் சிகரெட்டுகளைத் தயாரிக்கின்றனவாம். பெண்கள் விரும்புகின்ற வடிவுடனும், சுவையுடனும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற தோற்றத்துடனும் இவை தயாரிக்கப் படுகின்றனவாம். இது உலக நலத்தில், முக்கியமாக வளரும் நாட்டுப் பெண்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இதற்கு முந்தைய ஆய்வுகளின்படி சிகரெட்டுக் கம்பெனிகளின் விற்பனை உத்திகள் பெண் விடுதலை, அழகு/கவர்ச்சி, வெற்றியடைதல், மெலிந்திருத்தல் போன்றவற்றைச் சுற்றிப் பின்னப் பட்டிருந்தன. ஆனால், சிகரெட்டின் வடிவமைப்பு ஏன் எப்படி பெண்களைப் புகைப்போராய் ஆக்குகிறது என்பது பற்றி இன்று வரை அறியப் படவில்லை.

1998 Tobacco Master Settlement Agreementன் பின்னர், பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட சிகரெட் கம்பெனிகளின் ஆவணத்தை ஆராய்ந்த கேரி முர்ரே கார்ப்பெண்டர் (Carrie Murray Carpenter) என்ற ஹார்வர்டு பொதுநலக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் "இது வெறுமனே விற்பனை, விளம்பரம் என்ற கூறுகளையெல்லாம் தாண்டியது", என்கிறார். கடந்த 20 வருடங்களாக இந்தக் கம்பெனிகள் கடும் முயற்சியெடுத்து, பெண்களிடையே புகைப்பதை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பெண்களையும், இளமங்கையரையும் புகைக்க ஊக்குவிக்கும் காரணிகள் என்னென்ன, அவர்கள் எவ்விதமாகப் புகைக்கிறார்கள், எந்தெந்த வகை சிகரெட்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றை இக்கம்பெனிகள் ஆராய்ந்திருக்கின்றன.

இவ்விதமான தந்திரங்களுடன் தயாரிக்கப் பட்டவை இலேசான சிகரெட்டுகள். இவை சுகாதாரமானவையென்றும், பாதுகாப்பானவையென்றும் பெண்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; மேம்பட்ட வாசனை, புகைத்தலின் பின்னான உருசி, குறைந்த அளவு புகை இவற்றின் மூலம் இவ்வகை சிகரெட்டுகளை நல்லவை என்று கருத வைக்கப் பட்டார்கள்; இவ்வகை சிகரெட்டுகள் பெண்களுக்குப் பிடித்தமான வாசனையுடனும், இதமான மென்மையான சுவையுடனும் வந்தன; பெண்களின் உடற்கூறியலின்படி இச்சிகரெட்டுகளை எளிதாக உறிஞ்சும்படியும், உணர்வின்பத்தைத் தூண்டும்படியும், நிகோடின் மற்றும் தார் அளவினை மாற்றியும் வடிவமைத்தார்கள். இதற்கெல்லாம் மேலும் பசியைக் குறைக்கும் பொருட்களைக் கலந்து, புகைப்பதன் மூலம் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் உருவாக்கப் பட்டது. இந்த வகை இலேசான, மெல்லிய, நீண்ட சிகரெட்டுகள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதவை, மன இறுக்கத்தைப் போக்குபவை, உடலை இளைக்க வைப்பவை போன்ற தோற்றங்கள் உருவாக்கப் பட்டன. இதன் விளைவாக, புகைப்பதற்கு எதிரான முழக்கங்கள் அதிகம் பலனளிக்காமல் போய்விடுகின்றன. புகைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய சிகரெட்டுகளில் இருக்கும் நிகோடின், தார் போன்றவற்றின் அளவு தெரிவதில்லை, ஆனால் சிகரெட்டின் தோற்றத்திலிருந்து கேடு குறைவுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

1970களிலிருந்து இந்த சிகரெட்டுக் கம்பெனிகள் மனோரீதியாகவும், நடத்தை முறைகளாலும் பெண்களின் புகைக்கும் பழக்கங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றன. ஒரு கம்பெனி சிகரெட்டிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறுவோர்களைக் குறிவைத்து கம்பெனிகள் தங்கள் வடிவமைப்பை மாற்றியவண்ணம் இருந்தன, முக்கியமாக 1970க்கும் 90க்குமிடையே. இன்றளவும் சிகரெட்டுக் கம்பெனிகள் பெண்களையே குறிவைக்கின்றன, ஆனால் இவர்களது உத்திகள் பலதரப்பட்டவையாகவும், எளிதில் அடையாளம் காணப்பட இயலாதனவாகவும் இருக்கின்றன.

சிகரெட் கம்பெனிகளின் இந்த நடத்தை வளரும் நாடுகளிலிருக்கும் நலத் துறையாளர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் வளரும் நாடுகளில் ஆண்களின் புகைப் பழக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், பெண்கள் புகைப்பது குபுகுபுவென்று ஏறிக்கொண்டே செல்கிறது. அதாவது 2025ம் வருடத்துக்குள் இன்னும் 20% பெண்கள் அதிகமாகப் புகைப்பார்களாம். இன்றைய நிலையில் புகைப்பதால் பெண்களுக்கு வரும் சுகாதாரக் கேடுகளுக்கு இந்தக் கம்பெனிகளின் தந்திரமே காரணமென்றும் இதனால் இன்னும் கேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதென்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

புகைக் கட்டுப்பாட்டுக்கு இன்னொரு ஆராய்ச்சியாளர் இந்த அழைப்பை விடுக்கிறார்: "பெண்களைப் புகைக்கு அடிமையாக்கும் வகையில் இந்தக் கம்பெனிகள் சிகரெட்டுகளை வடிவமைக்கின்றன என்று தெரிந்து விட்டது. இனி நாம் இந்த முயற்சிகளைத் தடுக்கவும், புகைப் பழக்கத்தை ஒழிக்கவும் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இப்புகைக்கு, வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே நம் பெண்டிர் பலரைப் பலி கொடுத்தாயிற்று. இனியேனும் இந்தப் புதிய ஆராய்ச்சியின் முடிவுகளைப் பயன்படுத்தி, வளரும் நாட்டுப் பெண்கள் மடிவதைத் தடுக்க முற்படுவதே நம் தலையாய பணி."

தகவல்: Scienceblog
படம் நன்றி: Womenfitness
தலைப்பு: "இனியும் அழ வேண்டாம் சகோதரி", விவரணப் படத்தின் தழுவல்.

எ யெ ஏ யே மொழிக்குழப்பியே!

நான் Yaleஐ ஏல்னுதான் நெனச்சேன். அப்புடித்தான் எழுதிக்கிட்டிருந்தேன். முந்தி பெயரிலியும் அப்புறம் சமீபத்துல பத்ரியும் யேல்னு எழுதுனதைப் பாத்ததுக்கப்புறம் யோசிச்சுப் பாக்குறேன். யேல்தான் சரின்னு படுது. நான் ஏன் யேலை ஏல் என்று எழுதினேன் என்ற கேள்வியோட எனக்குள்ளே தூங்கிக் கொண்டிருந்த மொழிக்குழப்பி எந்திரிச்சுட்டான். இதற்கு விடை காணும் பொருட்டு அவன் கடந்த சில நாட்களாகப் பகலிலும், இரவிலும், தனிமையிலும், கூட்டந்தன்னிலும் எலி, யெலி, எறும்பு, யெறும்பு, ஏணி, யேணி என்று சொல்லிக் கொண்டும், எங்கே நிம்மதீx2, எலந்தப்பயம்x2, எங்கேயெனது கவிதை என்று பாடிக்கொண்டும் திரிந்தான். இந்த ஞானத்தேடலைத் தன்னோடு நிறுத்திக் கொண்டுவிடாமல், நெடுவாரக் கடைசியில் குடும்பத்தோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்த தன் நண்பர்களைக் கூப்பிட்டு நடுச்சந்திகளில் வைத்து எங்கே எ, யெ சொல்லு பாப்போம் என்று பயமுறுத்தினான் (இந்த நண்பர்களிலேயொருத்தன் தன் கைப்பேசியில் ஏ, யே என்றபோது முன்னாலே நடந்து போய்க்கொண்டிருந்தவர் திரும்பிப் பார்த்துப் போனாரென்பது உபகதை).

ஆகக் கடைசியில், இல்லை இப்படிக் கடைசியில் என்று முடிவாய்ச் சொல்லிவிட முடியாது என்பதால், இதுவரை மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த மொழிக்குழப்பி கண்டுபிடித்தது என்னவென்றால், நம்மில் பெரும்பாலானோர் 'எ'யை 'யெ' என்றுதான் உச்சரிக்கிறோம். அதேபோலத்தான் ஏயும் யேயும். இது தவறு என்பது மொழிக்குழப்பியின் பக்கவாதம். ஒரே உச்சரிப்புக்கா ரெண்டு எழுத்துக்களை வச்சிருப்பாங்கன்னு தன் கறுப்பு மேலங்கியை மாட்டிக் கொண்டு கேக்குறான். அப்போ எது சரி? (இந்த இடத்துல, சாம்பல் பூசியிருந்த ஒரு சன்னாசி எந்திரிச்சு, தம்பி இதெல்லாம் சரி, இதெல்லாம் தவறுன்னு எதையெல்லாம் சொல்லுவாய் என்று கேட்டுவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டார். இது புதுக் குழப்பம், தனியாக வைத்துக் கொள்வோம்.) அப்ப, எயை எப்படித்தான் சொல்றதுன்னு கேட்ட மொழிக்குழப்பிக்கு ஒரு விடையை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லுது. ஒரு பி.எச். அப்துல் அமீது மாதிரி தன்னை நினைத்துக் கொண்டு எமது சேவை, எங்கள் மொழி, எந்தேயத்தவர்கள் என்று சொல்லிப் பார்க்கிறான். நல்ல வேளையாக இதையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியிருக்கவில்லை. இந்த எ வித்தியாசமாயிருந்தது. யாராவது உச்சரிப்பொலிகளை/சுட்டிகளைக் கண்டால் தரலாம்!

அதனால இப்போதைக்கு எயும் யெயும் வெவ்வேறு என்பதைக் கண்டறிந்த மற்றும் இப்படி இருக்கலாமென்றொரு மாற்று உச்சரிப்பினைக் கண்டறிந்த மாபெரும் திருப்பதியோடு மொழிக்குழப்பி வேலையைக் குழப்பக் கிளம்புகிறான்!

யேலும் யாழும்

Image hosted by Photobucket.com

வணக்கம்!
நானொரு நூலகம். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கல்வி நூலகம். ஸ்டெர்லிங் மரணிக்கும் முன்னர் எனக்காக விட்டுச் சென்ற பெருந்தனத்துக்காக அவர் பெயரையே நான் சூடியிருக்கிறேன். 1930ல் நான் கட்டப் பெற்றேன். என் மாடங்கள், சாளரங்கள், கதவுகளெங்கும் சிற்பங்களும், ஓவியங்களும். என்னை உருவாக்கப் புத்தகம் சுமந்து வந்த மாட்டு வண்டியிலிருந்து, என் நாட்டின் வரலாறு உட்பட உலகத்துக் கலாச்சாரங்களை இவ்வேலைப்பாடுகள் பேசும். இவை என் நாட்டு வரலாற்றின் பதிவுகள். கலாச்சாரத்தின் கடைசல்கள். நான் இந்த மக்களின் பெருமை. என்னை இவர்கள் பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறார்கள். பாட்டரைக் காணும் பேரக்குழந்தைகளைப் போல் இவர்கள் வந்து தொட்டுப் பார்க்கிறார்கள். ஒட்டி நின்று புன்னகைக்கிறார்கள். தூணின் விளிம்பில் சின்னச் சிதிலமென்றாலும் பக்குவமாய் மீட்டுருக் கொடுக்கிறார்கள். இவர்கள் என் பிள்ளைகள். இவர்களது காவல் என் பெருமை. வந்தமரும் பறவைகள் பழங்களை உண்டபடி விதைகள் எங்கெங்கோ முளைக்கின்றனவென்று பேசிக் கொள்கின்றன. சூழ்வெண்பனிக் காற்றிலும், வசந்த காலத்தின் வெம்மையிதத்திலும் அவர்கள் என்னைச் சுற்றிப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இசையில் நான் மோனத்திலிருக்கிறேன்.
_______________________________________________

Image hosted by Photobucket.com

வணக்கம்.
நானொரு நூலகம். 1930களில்தான் நானும் செல்லப்பாவின் சிந்தையிலும் யாழ்ப்பாணத்திலொரு சிறு வீட்டறையிலும் உருப் பெற்றேன். தாகம் கொண்டோர் பெருகப் பெருக என் குடியிருப்பைப் பெரிய வீடுகளுக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கும் பிள்ளைகளுண்டு. அவர்களுக்கும் என்னைப் பற்றிய பெருமையுண்டு. பொருளும் திறனும் திரட்டி என்னை இங்கே இருத்தினர். என் தூண்கள் அழகியன. என் கோபுரம் தமிழின் இருப்பை ஓங்கிச் சொன்னது. என் பெட்டகங்களில் எத்தனையோ குரல்களிருந்தன. 97,000 புத்தகங்களென்று யாரோ கணக்கெழுதினார்கள். 1981, மே 31/ஜூன்1ல் சிங்களக் காவல் துறை வந்தது. அந்த இருளில் பெட்ரோல் வெளிச்சத்தில் தமிழ் படிக்க ஆசைப் பட்டது போலும். அந்த இரவின் முடிவில் என்னில் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. கல்லும் தூணுமாய் நான் இன்னும் இருக்கிறேன், என் தீக்காயங்களோடும், என்னைச் சுற்றிலும் தமக்குள்ளேயே சண்டையிட்டு மடியும் என் பிள்ளைகளோடும்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஸ்டெர்லிங் நினைவு நூலகம், யேல் பல்கலைக் கழகம்.
யாழ் பொது நூலகம் நினைவாக (படம் நன்றி).

மதுநமக்கு

Image hosted by Photobucket.com

மதுநமக்கு, மதுநமக்கு, மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு, மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும், மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு மண்ணு நீரும், மதுநமக்கு மலையெலாம்;
மதுநமக்கொர் தோல்விவெற்றி, மதுநமக்கு வினையெலாம்
மதுநமக்கு மாதரின்பம், மதுநமக்கு மதுவகை
மதுநமக்கு மதுநமக்கு, மதுமனத்தொ டாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.

-மகாகவி சுப்ரமணிய பாரதியார்.


படம்: ஒரு விளம்பரப் பலகை, நியூயோர்க்.

காய் கவர்ந்து விற்றல்!

Image hosted by Photobucket.com

அப்னா சப்ஜி மண்டி, ஜாக்ஸன் ஹைட்ஸ், நியூயோர்க்.

ஏலே ஏலேலே!

Image hosted by Photobucket.com

அப்பாம்மா, குடும்பம் குட்டிகளோடு கறுப்பு அங்கி, குஞ்சமாடும் குல்லாய்களோடு புதுப் பட்டதாரிகள். வெளியெங்கும் ஆரவாரமாய் மக்கள். இன்றைக்கு ஏல் பல்கலையில் பட்டமளிப்பு விழா. 304வது வருடம்! சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல் (இவரைப் பற்றித் தனியாக ஒரு நாள்) என்பவரின் நிதியுதவியால் ஒரு கல்லூரியாக 1700களின் ஆரம்பத்தில் தொடங்கப் பட்டது இப்பல்கலைக் கழகம். இன்றைக்குப் பல்வேறு துறைகளிலும் சுமார் 3000 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு புலத்திலும் தனித் தனியாக விழா.

நான் கண்டது மருத்துவப் பள்ளியில். பல்கலைக்கொரு கரவொலி, துணையாயிருந்த குடும்பத்தினருக்கு ஒரு கரவொலி, பாடம் நடத்திய ஆசிரியர்களில் யார் சிறந்தவர் என்று மாணவர்கள் மதிப்பிட்டு அந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்.

சிறப்புரைக்கு ஒரு விருந்தினர், ஜொய்ஸ்லின் எல்டர்ஸ் (Joycelyn Elders). இவர் அமெரிக்காவின் முன்னாள் பெருமருத்துவர் (Surgeon General of the USA). க்ளிண்டனால் நியமிக்கப் பட்டவர். இப்பதவிக்கு வந்த இரண்டாவது பெண்மணியும், முதல் கறுப்பரினத்தவரும். பருத்தியெடுக்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ நிறப் பாகுபாடுகளைச் சந்தித்துத் துணிச்சலுடன் ஏறி வந்திருப்பவர். ஏழைகள், குழந்தைகள் ஆகியோரின் சுகாதாரத்துக்காக ஓயாது குரலெழுப்பியவர். பதின்ம வயதுக் கர்ப்பம், பாலியல் தொற்று நோய்கள் போன்றவற்றைக் குறைக்கப் பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும், கருத்தடைச் சாதனங்களைப் பள்ளியில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று முழங்கி கன்சர்வேட்டிவ்களுக்குப் புளியைக் கரைத்தவர். இவ்விதமான தடாலடிப் பேச்சுக்களால் வற்புறுத்தலின் பேரில் பதினைந்தே மாதங்களில் பெருமருத்துவர் பதவியிலிருந்து விலகினார். இவரே தமக்குப் பட்டமளிக்கையில் பாராட்டுரை வழங்க வேண்டுமென்று மாணவர்கள் தேர்வு செய்திருந்தார்கள். ஆமாம், மாணவர்களின் விருப்பப் படியே இந்த விருந்தினர் அழைக்கப் படுவார்.

எல்டர்ஸின் உரையில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டது எல்லோருக்கும் நலத்தைப் போதியுங்கள், அவர்களுக்குச் சுகாதார அறிவு கிடைக்கச் செய்யுங்கள், எண்ணற்ற குழந்தைகள் அன்பும் அரவணைப்புமின்றி இருக்கிறார்கள், உணவின்றிப் பசியோடு உறங்கச் செல்கிறார்கள், அவர்களைக் காக்க முயலுங்கள். முழக்கமாயிருந்தது அவர் பேச்சு. கறுப்பு அங்கிகளும், இவரது ஆளுமையும் மனசில் மோதிக் கிடக்கின்றன. பட்டம் சூட்டிக் கொண்டோருக்கு நம் பாராட்டுக்கள். அப்படியே நம் வலை வெளியில் இருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்!
படம் நன்றி: Fred

இன்று தமிழீழ நாள்!

மே 22ஐ தமிழீழ நாளாக அறிவித்து மாசசூசெட்ஸ் மாநில அவையில் 1979ம் ஆண்டு ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாசசூசெட்ஸ் இதை இப்போதும் கடைபிடிக்கிறதா என்று அறிந்தவர்கள் கூறவும். இது நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தவர் மரி எலிசபெத் ஹோவே. இவர் இன்றளவும் தமிழர்கள் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்பதிலும், அவர்களுக்குத் தனிநாடு ஒன்றே தம் உரிமைகளைக் காத்துக் கொள்ளும் வழி என்பதிலும் உறுதியாயிருக்கிறார். இவரைப் பேட்டி கண்ட ஆசியா ட்ரிப்யூனி்ன் தயா கமகே புலிகளைப் பற்றி இவரது வாயைக் கிளற எவ்வளவோ முயன்றிருப்பது தெரிகிறது. ஆனாலும் ஹோவே, தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாயிருக்கிறார். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னான சிங்கள ஒடுக்குமுறை வரலாற்றை இத்தீர்மானம் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
கட்டுரையைத் தமிழாக்கிப் போட நேரமில்லாத நிலை. அதனால் சுட்டி: ஆசியா ட்ரிப்யூன்.

அந்தப் பிள்ளை!

Image hosted by Photobucket.com

சில்லு விளையாட்டின் மேல்
வண்டியோட்டியவனை
விரட்டியபடி
அல்லது
இடுப்பில் தம்பியோடு
எலந்தைப் பழம் பொறுக்கியபடி
இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்
சிறிய மண்சாலைத் தெருக்களில்
இவளை நீங்கள்
கண்டிருக்கக் கூடும்.
அன்றைக்கு இவள்
அந்தக் கல்யாண வீட்டுக்கு
வந்திருந்தாள்.

எவ்வழி வந்தோம்?

உங்களுக்குக் கற்பனை செய்யத் தெரியுமா? அப்படின்னா என்னோடு வாங்க. ஒரு 150,000 வருசத்துக்கு முந்தி போவோம். இது ஆப்பிரிக்கா. நாமதான் இந்தப் பூமியோட புது மனுசங்க. இப்ப நாம கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர ஆரம்பிக்கிறோம். இதோ இந்தக் கிழக்காப்பிரிக்கக் கடற்கரையோரமாவே வடக்கே போறோம். ஆயிரமாயிரமா வருடங்கள் கடக்குது. நம்ம புள்ளை, அதுக்குப் புள்ளை எல்லாம் நம்மள மாதிரியே நடந்துகிட்டே இருக்கு. செங்கடல் வருது. மேற்கே போக முடியாது, பாலை. செங்கடல் சின்னதாத்தான் தெரியுது. நமக்கு ஓடம் கட்டத் தெரியும். நாம் ஓடம் கட்டி அந்தக் கடலைக் கடக்குறோம். அரேபியப் பிரதேசம் வருது. இங்கேயும் வடக்கேயோ மேற்கேயோ போக முடியலை. வெப்பம். மெல்லக் கடற்கரையோரமாவே போய்க்கிட்டு இருக்கோம். பாதையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் தலைமுறைகளையும் ஒழித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறோம். வழியெங்கும் நம் தடங்களை விட்டுக் கொண்டே வருகிறோம். இந்தியாவையும் மெல்லத் தாண்டி அந்தமான் நிகோபார், மலேசியா, ஆஸ்திரேலியா வரை நாம் வந்து விட்டோம்.

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........

இப்படித்தான் இருந்திருக்குமாம் மனித இனத்தின் பயணம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளப் பட்டதும் தெரிஞ்சதும்தான். ஆனா சரியாத் தெரியாதது என்னன்னா, ஆப்பிரிக்காவுலேருந்து வடக்கு முகமாகக் கிளம்பின கூட்டம் வடக்கே நைல் நதி, ஐரோப்பான்னு போயிட்டு இந்தியா பக்கம் வந்துச்சா (கீழேயிருக்க படத்துல பாருங்க) அல்லது செங்கடலைக் குறுக்கே தாண்டி இந்தியா பக்கம் போச்சான்னு தெரியாம இருந்துச்சு. ஐரோப்பாவில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் வெறும் 45,000ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. மேலும் இந்த இடம்பெயர்வின் போது அங்கு பாலையின் வெப்பநிலையிருந்ததால் கூட்டம் தெற்கே நகரத்தான் அதிகம் வாய்ப்பிருந்திருக்க வேண்டும். இப்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு இந்த செங்கடல்-இந்தியப் பாதை ஊகத்தை மேலும் நிச்சயப்படுத்துகிறது.

சுமார் 65,000-70,000 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்குள் இந்த மனித இனம் வந்திருக்கலாம். இங்கிருந்து கிளம்பி அந்தமானுக்குச் சென்ற கூட்டங்களில் ஒன்று அங்கேயே மாட்டிக் கொண்டு இத்தனைக் காலமும் அங்கேயே இருந்திருக்கிறது. நிக்கோபார் தீவிலிருப்பவர்கள் சீனர்களைப் போலிருக்க, அந்தமானில் இருக்கும் இந்த இனம் (அந்தமானீஸ், ஒங்கே, கிரேட் அந்தமானீஸ் குடிகள்) எப்படி ஆப்பிரிக்கர்களை மாதிரி இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. யாருக்கு? ஐதராபாத் தங்கராஜுக்கும்(Centre for Cellular and Molecular Biology) கூட்டாளிகளுக்கும். அந்த இனக்குழுக்களின் இரத்த செல்களிலிருந்து மைட்டோகாண்டிரியா எனும் அறைக்குள் இருந்த மரபணுவைப் (mitochondrial DNA, சுருக்கமாக mtDNA) பரிசோதித்தார்கள்.

இந்த மரபணுவின் சிறப்பு என்னன்னா, இது அம்மாகிட்டேருந்து மட்டுந்தான் பிள்ளைகளுக்குப் போகும். அப்பாகிட்டேருந்து போவாது. அதனால இதிலிருக்கும் மரபு மூலக்கூறு வரிசையை வச்சு அம்மம்........ம்மாவுக்கு அம்மாச்சிக்கு அம்மாயி யாருன்னு சொல்லலாமாம். கிட்டத்தட்ட 150,000 வருசத்து அம்மா வழிக் கதையெல்லாம் தெரிய வாய்ப்பு இருக்காம். இந்த வகையில பாத்தா அந்தமான் காரங்களோட பூர்வீகம் ஆப்பிரிக்கான்னு தெரிஞ்சது. இத வச்சு தலைமுறைக் கணக்குப் போட்டுப் பாத்தாரு தங்கராஜ். கிட்டத்தட்ட 50,000-70,000 வருசத்துக்கு முந்தி இந்த ஆளுக அந்தமானுக்கு வந்திருக்கனும்னு கணிச்சாரு. அப்படின்னா 45,000-50,000 ஆண்டுகளே பழமையான ஐரோப்பிய இனத்திலிருந்து இந்த இந்திய-அந்தமான் இனம் வந்திருக்காது என்பதாகத்தானே அர்த்தம்?

இதே மாதிரிதான் மெக்காலேன்னு ஒருத்தரு (ஸ்காட்லாந்து, க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்) மலேசியாவுல இருக்க ஓரங் அஸ்லி (Orang Asli) பழங்குடி மக்கள்கிட்ட இதே மாதிரி ஆராய்ச்சி பண்ணி அவங்க 64,000 வருடங்களுக்கு முந்தி மலேசியாவுக்கு வந்திருக்கலாம்னு கணிச்சாரு. இதுவும் வடக்கு நோக்கிய இடம் பெயர்தலை சாத்தியப் படுத்தாமல் செங்கடல்-இந்தியப் பாதைக்கே வலுச் சேர்க்கிறது. இவங்களோட வழித் தோன்றல்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கும் சுமார் 63,000 வருசங்களுக்கு முந்தி போயிருக்காங்களாம். இந்த மக்கள் ஒரு வருசத்துக்கு 4 கிலோமீட்டர் இடம் பெயர்ந்திருக்காங்கன்னு சொல்றார் மெக்காலே. அப்போ ஆப்பிரிக்காவுலேருந்து மனுசப் புள்ள கிளம்பிப் போன பாதையைக் கோடு போட்டம்னா இப்புடி வருதாம்.

Image hosted by Photobucket.com

இதுல Sinai வழியாப் போகாம செங்கடலைத் தாண்டிய வழித்தடம் இருக்கு பாருங்க, அது வழியாத்தான் நாமெல்லாம் வந்தோம்னு இந்த ஆராய்ச்சி சொல்லுது. இப்பதிவை நாராயணனின் "மனித இனத்தின் வரலாறு" பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். இனி வரும் ஆராய்ச்சிகளில் இந்திய இனக் குழுக்களையும் அவர்களின் குடியேறுதல் பற்றியும் மென்மேலும் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்கக் கூடும். இதிலிருக்கும் தங்கராஜ் மற்றும் மெக்காலேயின் கட்டுரைகள் மே 13ம் தேதியிட்ட Science பத்திரிகையில் (படம் நன்றி). முழுக்கட்டுரை வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும்! இக்கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்: National Geographic.

பிற்சேர்க்கை: ரோசாவசந்த் சுட்டிக்காட்டியதன் பேரில் இப்பதிவோடு தொடர்புடைய இன்னும் இரண்டு பதிவுகள்:
1. அனாதை ஆனந்தன்
2. மாண்ட்ரீஸர் எழுதிய "மொட்டை பிளேடு"

ஒரு நண்பிக்கு!

Image hosted by Photobucket.com

முற்று முழுதாய் எனக்கேயாய்
வரப்புகளின்றிப் பரந்த நேரம்
இப்போது அலையடித்து நீர்கலக்கும்.
குளிர்க் காற்றில் அவசரமாய்
இழுத்து விட்ட விடுதலை மூச்சில்
நுரையீரல் உறைகிறது.
பெருவாயிலொன்றில் யாரோ
நடந்துள் மறைகின்றார்
உன்னைப் போலே.
சிறுமகவைக் கைப்பிடித்து
நடக்கின்றாள் தாயொருத்தி.
போகட்டும்,
இவையெல்லாம் பெருநடை நடந்தும்
கடக்க முடியா என் வெளியில்.
நீ நலமா?
நம் மகனைக் கேட்டதாகச் சொல்!

மறந்திருந்த விளக்கு

Image hosted by Photobucket.com

ஊரில் ஒரு நாள்
மின்சாரம் ஒழிந்த இருளில்
மண்ணெண்ணெய் மணத்துடன்
துலங்கிய வெளிச்சமொன்று.

கருப்பன்

அம்மா சொல்லும் வரை உணராமலிருந்தேன், இப்போது ஊரில் கோடை விடுமுறையென்பதை. திருவிழாக்களின் காலம். ஒன்னு போன வாரம் முடிஞ்சு போச்சு. கருப்பையா கோயில். சுட்டுத் தகிக்கும் வெய்யில். சுற்றியாடும் காவடிகள். கூட்டங் கூட்டமாய்ப் போகும் மக்களின் சத்தம். கொட்டும் பறையும் மேளமும். காவடி, பால்குடம், கரும்புத்தொட்டி எல்லாருக்கும் தண்ணி கொண்டுபோய் ஊத்தனும். தார் ரோடு, ஆடும் சாமிக்குச் சுடும். வற்றாத பொய்கை வளநாடு கண்டு மயில்மேலிருந்த குமரா... யாரோ உச்சக் குரலில் பாடுவார்கள். அரோகரா என்கும் கூட்டம். கூட்டத்தில் நானுமிருந்தேன். உற்றாரெனக்கு ஒருபேருமில்லை உமையாள்தனக்கு மகனே...அரோகரா. சித்தப்பாவுக்கு சாமி ஒடனே வந்துரும். சில பேருக்கு நிறைய பாடணும். விரதம் ஒழுங்கா இருந்திருக்கனும். புள்ளையார் கோயில்ல கிளம்புற காவடி கருப்பையா கோயிலுக்கு வரும். வரும் வழியில் சில தண்ணீர்ப்பந்தல்கள். தங்கமணி வீட்லயும் ஒன்னு இருக்கும். பானகம், தாளிச்ச நீர்மோர். எத்தனைக் காவடிகளின் பின்னாலோ யார் கண்டது. எங்க இந்தப் பய, அடேய் சாப்புட்டாச்சும் போடா. ம்ஹ¥ம். காவடிக்கு ஊத்துற தண்ணியில் கால் நனைத்துக் கொண்டு ஓடிக் கொண்டேதானிருந்தேன். தினமும் குளித்துவிட்டுக் கிட்ட நின்று பார்க்கும் சாமிதானென்றாலும் இன்றைக்குக் கல்யாண மாப்பிள்ளை மவுசு கருப்பருக்கு. அண்ட முடியாக் கூட்டமாயிருக்கும். நாளின் முடிவில் வள்ளித் திருமணமோ, பவளக் கொடியோ. முடிந்தது. திருவிழாக் கடைகளையெல்லாம் யாரோ பிரித்து கொண்டு போகிறார்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தபோது விசாரித்து வரப் போயிருந்தேன். சுகந்தான் என்று முறுக்கிய மீசையும் அரிவாளுமாய் அதே பார்வை பார்த்தார். அவர் குதிரைகளுக்கெல்லாம் புது வண்ணமடித்திருக்கிறார்களாம். சொன்னார். எனக்குப் புது மணி, மோளமெல்லாம் வாங்கிருக்காங்கய்யா, ஆமா, ஐயர் தீவாராதன காட்றப்ப சுச்சு போடுவார், கரண்டுலயே அடிக்கும். பார்த்தேன்.

Image hosted by Photobucket.com

சுருட்டு வாங்கியாறவான்னேன். இல்ல இப்பல்லாம் வாழப்பழமும் தேங்காயுந்தான். கொம்புக்காரனுக்கும் ஒரு ரூமு கட்டிக் குடுத்திருக்குன்னார், ந்தா அங்கெ. கிளம்பினேன். அடுத்து எப்ப வருவன்னார். தெரியாது கருப்பா. என் கருப்பன் ஒரு வெகுளி, அப்படியேதானிருக்கிறான்.

கருப்பனைப் பற்றித் தங்கமணியின் முந்தைய பதிவொன்று.

செம்மஞ்சள் சரக்கு

ஒடம்பு நாஞ் சொல்றதக் கேக்க மாட்டேங்குது. சோம்பேறித்தனம் கூடிப்போச்சு. அதுவா நானான்னு காலையில ஒரு முடிவா எந்திரிச்சு நிலைமிதிவண்டியைச் சுத்துனேன். பிபிசி தமிழோசை கேட்டுக்கிட்டே. கடைசியில் வந்த அனைவருக்கும் அறிவியலிலிருந்து என்னைத் துணுக்குற வைத்தது ஒரு துணுக்கு. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் படித்தது இது:

வியட்நாமியப் போரின் போது 1961லிருந்து 1971 வரைக்கும் அமெரிக்கா வியட்நாமின் மீது ஒரு வேதிப்பொருளைத் தெளித்தது. கொரில்லாப் போராளிகள் காடுகளுக்குள் ஒளிந்திருந்து தாக்கியதால் அடர்ந்த காடுகளின் இலைகளை அழிப்பதற்காகத் தெளிக்கப் பட்டது இது. இது செம்மஞ்சள் நிறமடித்த உலோகப் பீப்பாய்களில் இருந்ததால் செம்மஞ்சள் சரக்கு (Agent orange) என்றழைக்கப் பட்டது. இது சுமார் 72 மில்லியன் லிட்டர்கள் வியட்நாமில் தெளிக்கப் பட்டது. இதில் 170 கிலோ அளவுக்கு டயாக்ஸின் (dioxin) என்ற நச்சு இருந்திருக்கும்.

டயாக்ஸின் புற்று நோய்கள் உட்பட பல்விதமான கேடுகளை உண்டாக்கும் ஒரு நச்சு. போர் முடிந்து 30 வருடங்களாகியும் நீக்கப்படாத வெடிகுண்டுகள் ஒருபுறமிருக்க, மண், மரம், தண்ணீர் என்று உணவுச்சங்கிலியில் கலந்திருக்கும் இந்த நச்சு, இருக்கும் மக்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இதே நச்சினால் தாமும் பாதிக்கப் பட்டிருப்பதாக வியட்நாமில் போர் புரிந்த முன்னாள் அமெரிக்கப் போர் வீரர்களும் அரசிடம் ஏற்கெனவே முறையிட்டிருக்கிறார்கள். இதைத் தயாரித்த டவ் (Dow) கெமிக்கல்ஸ் எல்லா விபரீதங்களையும் தெரிந்தே இதைச் செய்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

நான் பல்கலைக்கு வரும் வழியில் முன்னாள் போர் வீரர்களுக்கான மருத்துவமனையொன்று இருக்கிறது. தினமும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் குடாப் போர் நோய்க்குறி (gulf war syndrome), மனோவியல் பாதிப்புகள் என்றெல்லாம் யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. இன்றைக்கு வரும்போது செம்மஞ்சள் சரக்கையும் நினைத்துக் கொண்டேன்!

இளமையெனும் பூங்காற்று!

ஒங்களுக்கு நோயின்றி நீடூழி வாழ ஆசையா? அப்ப வாங்க, போன வாரம் வெளி வந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் பார்ப்போம். இந்தக் கட்டுரை பல வழிகள்ல முக்கியமானதா எனக்குத் தோணுது.

மொதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம ஒடம்புல இருக்க செல்லெல்லாம் தொழிற்சாலைகள் மாதிரி. விளைபொருளும் உற்பத்தியாகும், வேண்டாக் கழிவும் உற்பத்தியாகும். கழிவை நீக்குறது ஒரு ஊருக்கு எப்படி முக்கியமோ அப்படித்தான் செல்லோட கழிவை நீக்குறதும் ஆரோக்கியத்துக்கு முக்கியம். செல்லோட கழிவுன்னு எதைச் சொல்றேன்னா, கொஞ்ச நேரமே உயிரோட இருக்க, ஆனா துருதுருன்னு நாசவேலைகளைச் செய்யுற ஒரு விதமான வேதிப் பொருளை. இதனைக் கட்டிலா உருபுகள் (free radicals; கட்டு இல்லாத உருபுகள்; தமிழ்ல வேற எப்படிச் சொல்லலாம்?) என்று சொல்வார்கள்.

இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குவதற்கு செல்லுக்குள் நிறைய நொதிகள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினை எங்கே முளைக்கின்றதென்றால், இந்தக் கட்டிலா உருபுகள் அதிகமா உண்டாகும்போது, அல்லது குறைவா நீக்கப் படும்போதுதான். இதுவரைக்குமான ஆராய்ச்சில என்ன கண்டுபுடிச்சிருந்தாங்கன்னா புற்று நோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் இந்த மாதிரி நிறைய வியாதிகளுக்கு கட்டிலா உருபுகள் அதிகமா இருக்கதே காரணம் அப்படின்னு. அப்போ இவற்றைக் குறைச்சோம்னா இந்த வியாதிகள்லாம் வராதான்னு ஒரு கேள்வி கிளம்புது இல்லையா? அந்தக் கேள்விக்கான விடையைத்தான் இந்தப் புது ஆராய்ச்சிக் கட்டுரை சொல்லுது.

கேட்டலேஸ் (catalase) அப்படிங்கற நொதி இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குறதுல ஒரு முக்கியமான நொதி. இது ஹைட்ரஜன் பெராக்ஸைடைத் (hydrogen peroxide) தண்ணியாவும், ஆக்ஸிஜனாவும் மாத்துது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்துல இருக்க ஆராய்ச்சியாளருங்க என்ன செஞ்சாங்கன்னா, இந்த கேட்டலேஸ் நொதியை செல்லோட மூன்று இடங்கள்ல அதிகமா உருவாகச் செஞ்சாங்க. எங்கன்னா, ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியா(mitochondria), மரபு மூலக்கூறுகளை வச்சிருக்க உட்கரு(nucleus), அப்புறம் இந்த கேட்டலேஸ் உருவாகுற எடமான பெராக்ஸிசோம்(peroxisome).

இதையெல்லாம் எதுல செஞ்சாங்க, சுண்டெலியில. அப்போ அவங்ககிட்ட மூணு விதமான சுண்டெலிகளும், எந்த மாற்றமும் செய்யப் படாத ஒரு சுண்டெலி வகையும் இருந்துச்சு. சரி, இப்போ இந்த நாலு வகையிலயும் யாரு ரொம்ப நாள் இருக்கது, ஆரோக்கியமா இருக்கதுன்னு பாத்தாங்க. பாத்தா, ஆற்றல் சாலையில கேட்டலேஸ் நிறைய உருவாகுற சுண்டெலிகள் 20% காலம் அதிகமா இருந்துச்சாம் (உதாரணமா 100 வருசத்துக்குப் பதிலா 120 வருசம் மாதிரி). அதோட அந்த சுண்டெலிகளுக்கு இதய நோய், கண்புரை போன்ற நோய்கள் வருவதும் மத்த சுண்டெலிகளை விடக் குறைவா இருந்துச்சாம். ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியாவுலதான் நிறைய கட்டிலா உருபுகள் உருவாகறதும், அங்கதான் கேட்டலேஸோட வேலை அதிகமாத் தேவைப்படுறதும்னும் தெரியுது.

இப்போ இது எப்படி நமக்கு முக்கியம்? தமிழர்களின் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப் படும் நிறைய மருந்துகளுக்கு இத்தகைய கட்டிலா உருபுகளைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இது அனேகமாக சீன மருத்துவம் உட்பட கீழைநாட்டு மருத்துவ முறைகள் பலவற்றுக்கும் பொதுவானது. கட்டிலா உருபுகளைக் குறைப்பதன் மூலம் உடம்பின் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது கீழை மருத்துவத்தின் முக்கியமான கூறு. இத்தகைய பண்பு அகத்திக்கீரை, ஆவாரை தொடக்கம் வெட்டி, வேம்பு என்று சகலத்திலும் காணப் படுவதால் நம் நாட்டு உணவு வகைகளுக்கும் அந்தப் பண்பு இருக்கும். உணவே மருந்து என்பதும் நம் பார்வைகளில் ஒன்று. அதனாலேயே திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உணவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆக, இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாக நம்மிடம் இருக்கும் மருத்துவ/உணவுச் செல்வங்களின் மதிப்பு நமக்கு அதிகம் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. நல்லாச் சாப்பிடுங்க, நல்லாயிருங்க!

தொடர்புடைய சுட்டி

ராம்லீலா

நேற்று ஒரு கூட்டத்துக்குப் போனேன்.உலகக் கலாச்சாரங்களைப் பற்றியவொன்று. அறைக்குள் நுழைந்த போது கரும்பலகையில் இப்படியொரு படத்தை வரைந்து கொண்டிருந்தார் ஒருவர்.

Image hosted by Photobucket.com

அவர் புகழ் பெற்ற நாடக ஆராய்ச்சியாளர் (Performance Studies, நிகழ்வியல் என்று சொல்லலாமா?) ராபர்ட் ஷெக்னர் (Robert Schechner). அவர்தான் முதலில் பேச வந்தார். இராமாயணம் என்னையும் உங்களையும் இன்னொரு முறை பிடித்துக் கொள்கிறது! அவரது உரையின் தலைப்பு:'Ramlila of Ramnagar: Religion and Politics and Performance'. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் காசிக்கருகிலுள்ள ராம்நகரில் நடக்கும் ராம்லீலா எனும் நாடகத்தினைப் பற்றியும் அது சார்ந்த அரசியலைப் பற்றியும் பேசினார். பேச்சின் சாரம் உங்களுக்கு:

"ராம்லீலா என்றால் என்ன?
ராம்லீலா என்பது காசிக்கருகிலிருக்கும் ராம்நகரில் 31 நாட்கள் நடக்கும் இராமாயண நாடகம். ராம்நகரின் ஓரிடம் அயோத்தியாக இருக்கும், ஓரிடம் வனமாக இருக்கும், ஓரிடம் இலங்கையாக இருக்கும். இப்படி ராம்நகரின் ஒவ்வொரு இடமும் நாடகமும் நிகழுமிடம். மக்கள் திரள் பலவிடங்களிலும் இருந்து வந்து குவியும். பக்தி கொண்ட திரள் ராமரையும் சீதையையும் நடிகர்களென நினைப்பதில்லை. அவர்கள் தெய்வங்கள். பாதபூஜை செய்வார்கள், கும்பிடுவார்கள், அவர்களின் கை தம்மீது படாதா என்று ஏங்குவார்கள். தொலைக்காட்சியில் ராமர் வரும்போதும் கூடத் தொலைக்காட்சிக்கு மாலை போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். போரின் முடிவில் கும்பகர்ணன், இராவணனின் சொக்கப் பனைகள் கொளுத்தப்படும். பட்டாபிஷேகத்தில் சுகமாக முடியும். ராம்லீலா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபரில் நடக்கிறது.

ராம்லீலாவின் வரலாறு
1800களில் காசியை ஆண்ட ஒரு மன்னரால் இது தொடங்கப்பட்டது. 1600களில் துளசிதாசர் எழுதிய ஹிந்தி இராமாயணமான ராம்சரிதமானஸே மூலப் பிரதியாகக் கொள்ளப் படுகிறது. அதிலிருந்து உருவாக்கப் பட்ட எளிய பாடல்களையும் வசனங்களையும் கொண்டது ராம்லீலா. இந்நிகழ்வின்போது ராம்சரிதமானஸ் ஓதப் படுகிறது. காசி மன்னரே முன்னின்று நாடக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பார், ஜூன் - ஜூலை வாக்கில். ராமன், லெட்சுமணன் போன்ற பாத்திரங்களுக்குப் பிராமண சாதிப் பிள்ளைகளும், குரங்கு, கரடி போன்ற பாத்திரங்களுக்குக் கீழ்ச்சாதிப் பிள்ளைகளும். இப்பாத்திரங்கள் குரல் உடையாத சிறார்களும் பதின்ம வயதுப் பிள்ளைகளுமே. இளையவர்களின் குரலும் தோற்றமும் குற்றமற்றதாக இருப்பதால் பெரியவர்களை விட இவர்களது நடிப்பே மனசைத் தொடும். இதே உத்திதான் ஜப்பானிய நாடகக் கலைகள் சிலவற்றிலும் பயன்படுத்தப் படுகிறது. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தது. இதில் காசி மன்னர் ஆங்கிலேயரின் பக்கம் இருந்தார். இதனால் அவரது ஆட்சிக்கும் ராம்லீலாவுக்கும் பின்னாளில் எந்தக் குந்தகமும் இல்லை. சொல்லப் போனால் ராம்லீலா கொண்டாட்டத்தின் முடிவினை அறிவிக்க பீரங்கிக் குண்டுகள் முழங்குவது சம்பிரதாயமாக்கப் பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த போது காசியும் இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப் பட்டது. ஆனாலும் ராம்லீலா நடத்த மன்னர் அவசியம். மன்னரின் இருப்புக்கு ராம்லீலா அவசியம். எனவே காசியில் மன்னர் என்பவர் எப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். 1938லிருந்து 2000 வரைக்கும் இருந்த மன்னர் விபூதி நாராயண் சிங். இவரோடு எனக்கு நெருங்கிய பழக்கமுண்டு. ராம்லீலா ஊர்வலங்களின் போது என்னையும் ஒரு யானையில் அமரச் செய்து சுற்றிவரச் செய்வார். 2000ல் இந்த மன்னர் இறந்ததன் பின்பு அவரது மகன் அனந்த நாராயண் சிங் மன்னராக இருக்கிறார்.

ராம்லீலாவின் அரசியல்
ஆரம்பத்தில் சமய வழிபாடு என்று ஆரம்பித்த ராம்லீலாவும் அதனைச் சார்ந்த ராம பக்தியும் பின்னாளில் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. 1920களின் பின் வலுப்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி இந்த ராம பக்தியைக் கொண்டு மக்களைச் சுதந்திரப் போராட்டத்தை நோக்கித் திருப்பினார். ராமசரித மானஸின் 'ரகுபதி ராகவ ராஜாராமி'ன் இந்து உணர்ச்சியையும், அதில் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று சேர்த்த போது வந்த இந்திய உணர்ச்சியையும் திறமையாகப் பயன்படுத்தி மக்களை ஒன்றிணைத்தார். சுதந்திரம் அடைந்து சுமார் 25 வருடங்களின் பின்பு இந்த உணர்ச்சி மறுபடியும் தூசு தட்டி எடுக்கப் படுகிறது. இப்போது எடுத்திருப்பது பாரதீய ஜனதா கட்சி. இது ராமன் நம் நாயகன், ராமனைப் போற்றுதல் இந்தியாவைப் போற்றுவதற்குச் சமம் என்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. ராமனை வைத்து முன்னிருத்தப் படும் நடை முறைக் கோட்பாடுகள், ஒழுக்க சூத்திரங்கள் இந்தியாவிற்குப் பொதுவானதென்ற கருத்து உருவாக்கப் படுகிறது. இதன் விளைவாக ராம்லீலாவின் போது சமீப காலங்களில் ஊர்வலம் செல்லும் பாதைகளிலிருக்கும் முஸ்லிம் பகுதிகளில் கல்லெறிதல் போன்றவை நடக்கின்றன. இதில் மன்னருக்கு வருத்தந்தான். பா.ஜ.கவால் கிளப்பப் பட்ட இதே இந்துத்வ உணர்வுதான் 150 மைல் தள்ளியிருக்கும் அயோத்தியில் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. இவ்வாறாக ராமர் ஒரு இந்து/இந்திய அடையாளமாக்கப் பட்டிருக்கிறார். இது பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாக ஆட்சியைப் பிடிப்பது போன்ற பலன்களைத் தரக்கூடும்".

இவ்வாறாக முடிந்தது பேராசிரியர் ஷெக்னரின் பேச்சு. இதன் பின்னணியில் ராமன் எனும் கதாபாத்திரம் முன்னிறுத்தும் குணாதிசயங்களை நெஞ்சிலெடுத்துக் கொண்டு போகும் அம்மக்களை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களால் கற்பினைக் காரணம் காட்டி சதிமாதாக்களை உண்டாக்க முடியும். மதத்தைக் காரணம் காட்டி மசூதிகளை உடைக்க முடியும். மாற்று மதத்துக்காரன் வீட்டில் கல்லெறிய முடியும். இச்செயல்களை இவர்களது லட்சிய புருஷன் செய்யச் சொன்னதாக இவர்களால் நம்ப முடியும். இவர்கள் ஒரு பெரும் படை. இந்தப் படை அரசியலுக்கு முக்கியம். தந்திரம் தெரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு ராம தூண்டுதலைப் பெருமளவில் ஏற்படுத்த முடியாமலிருக்கின்ற இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பிள்ளையார் கோயில்கள் முளைக்கின்றன. ராம்லீலா செய்வதைப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் செய்கின்றன. பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.

வெங்கட்டுக்கு பதில்

பொழுது விலக்கமும், பாத் திரித்தவன் பொறுப்பும்

நானும் கம்பராமாயணத்தைப் பெருசா படிச்சதில்லை. பள்ளிக்கூடத்துல மனப்பாடப் பாட்டு, கல்லூரியில கொஞ்சம். இப்போ இந்தத் தாடகை வதம் மட்டும் படிச்சுக்கிட்டிருக்கேன். இதனால் நான் கம்பனை விமர்சிக்கும் அருகதையற்றவன் என்று யாரும் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.

கம்பன் ஒரு தெசாரஸை வச்சுக்கிட்டு எழுதியிருக்கார். ஒரு கதையைச் சொல்லியிருக்கார். வார்த்தைகளுக்குள்ள போட்டுக் கதையை மூடி வச்சிருக்கார். மனுசனுக்கு உடைச்சுப் பிரிச்சுச் சாப்பிடும்போது சுவை கூடுதலா இருக்கும்கற எளிய உத்தியைப் பயன்படுத்தி, சொல்ல வந்த கதையை வார்த்தைகளுக்குள் வைத்துத் தைத்திருக்கிறார். பல்லுங்காம எயிறுன்னு சொல்லியிருக்கார். தேனா ஒழுகுற ஒரு ஓட்டத்தோட கதையைச் சொல்லியிருக்கார்.

இதுதான் அவர் செஞ்சிருக்காரே தவிர புது தத்துவம் எதையும் சொல்லிடலை. ("ராமன் விட்ட அம்பானதூ படிக்காத மடையன்கிட்ட படிச்ச நல்லவர் சொன்ன வாசகம் போனது மாதிரியாகத் தாடகையைத் துளைத்துக் கொண்டு போனதே" மாதிரியான "தத்துவங்கள்" வேண்டுமானால் நிறையக் கிடைக்கும்). இது ஒரு கதை, அவ்வளவுதான். என்ன ஒரு சிறப்பம்சம், ஒரு ராசாவோட கதை. எழுதச் சொன்ன வள்ளலுக்கு ராமனைத் தூக்கிப் பிடிக்கணும். அதுக்குத்தான் காசு குடுத்துக் கம்பனைக் கூப்பிட்டிருக்கார். அவருகிட்ட சம்பளம் வாங்கி இராவண காவியமா எழுத முடியும்? ஜெயலலிதா மேடையில இருக்கப்ப "சோழ நாட்டுக்குக் கரிகாலனால் வந்தது சாதனை, கருணாநிதியால் வந்தது சோதனை"ன்னுதான் ஒருத்தன் பாட முடியும்.

கம்பனை இப்படியொரு கலைஞனாக, கொடுத்த காசுக்குக் காசு கொடுத்தவன் கேட்டமாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப் போடும் ஒரு பத்திரிகையாளனாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பாரதியும் சீட்டுக்கவி எழுதியே இருந்திருக்கிறான். எவ்வளவு நாள் எவ்வளவு தூரம் இணங்கிப் போகிறான் என்பதிலிருந்துதான் ஒரு கவிஞன்/கலைஞன் தன்னை விற்றுக் கொள்ளாமலிருக்க முடியும். சரி, இப்படி வைத்துக் கொள்வோம், கம்பனுக்கு உண்மையிலேயே ராமபக்தி விஞ்சி அதனால் இராமாயணத்தைப் பாடியிருப்பானேயானால், அதில் எவ்வாறு ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க/வர்ணிக்க முடிகிறது? உயர்ந்த நோக்குள்ள ஒரு புலவனுக்கு, இராமனின் கருணையாலும் தெய்வாம்சத்தாலும் உந்தப்பட்ட ஒரு கவிஞனுக்கு (இவ்விடத்தில் கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது) எப்படி ஒரு பெண்ணை இவ்வளவு கோரமாகவும் வர்ணிக்க முடியும்? (எவ்வளவு கோரமாக என்று தாடகை வதைப் படலத்தைப் பார்த்தால் தெரியும், அதைப் பற்றி விரிவாய் எழுதும் எண்ணமிருக்கிறது). அது அந்தக் காலம், அது அப்படித்தானிருந்தது என்பீர்களேயானால், அதனினும் காலத்துக்கு முந்திய சிலப்பதிகாரம் நினைவுக்கு வருகிறது. இதில் எங்காவது இப்படியான அருவருக்கத்தக்க பாத்திரப் படைப்பை இளங்கோ செய்திருக்கிறானா? எனக்குத் தெரியாது? ஒரு இளங்கோவிடம், வள்ளுவனிடம் இல்லாத இந்த வார்த்தை வன்முறை ஏன் கம்பனிடம் தெறிக்கிறது என்றால், ஒன்று அது ராமவெறி அல்லது வாங்கிய காசுக்கு ரொம்பவும் கண்ணியமாக நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேங்கன்னு எழுதிக் கொடுத்த நாணயம்.

இந்த மாதிரி கொடுக்கல் வாங்கல், வென்றவன் தோற்றவன் விழுமியங்களெல்லாம் காலத்தால் மாறாதது, பண்பாடுகளால் மாறாதது, ஓடுற நாயக் கண்டா குலைக்கிற நாய்க்குக் கொண்டாட்டம் மாதிரிப் பதிஞ்ச பரிணாமப் பண்பு. அந்தக் காலத்து டெரிட்டரி, மேப்பு யாருக்குத் தெரியும், ஆனா மனுசனோட மனசு தெரியும். அது இயங்கும் விதம் புரியும். இப்படித்தான் இருந்தான்னு ஆதார பூர்வமா நிரூபிக்க முடியாது. சில புள்ளிகளை வச்சுக்கிட்டு நீங்க ஒரு கோலம் போட்டுக்கறீங்க, இன்னொரு கூட்டமான புள்ளிகளைக் கூட்டி நா ஒரு கோலம் போடுறேன். இதுல எந்தக் கோலம் யாருக்குப் பூச்சாண்டி காட்டுதுன்னுதான் சிக்கலே. கம்பன் எழுதின பாட்டை அது ஏற்படுத்தின சமுதாயத் தாக்கத்தை ஒதுக்கி வச்சுட்டு என்னால பாக்க முடியாது. இப்போது இருப்பது மாதிரியான ஒரு சீர்கேட்டை அது ஏற்படுத்தியிருக்குன்னா, அது எந்தக் கோலம் காட்டுன பூச்சாண்டின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த இடத்துல ராம காதைக்குக் கிடைச்ச "ராஜ" மரியாதை மத்த இலக்கியங்களுக்குக் கிடைச்சுதான்னு ஒரு கேள்வி வருது. கூடவே அக்னிதேவர் சாப்பிட்ட ஓலைச் சுவடியெல்லாம் கட்டுக் கட்டாத் தெரியுது. அதை விசிறி விட்டதுல ராமாயண விசிறிக்கும் பங்கு இருக்குங்கறது என்னோட கருத்து, அதையேதான் வேற வார்த்தைகள்ல நீங்களும் சொல்லியிருக்கீங்கன்னு நெனக்கிறேன்.

செவ்வியல் இலக்கியங்களோடு எப்படி உறவு கொள்ளலாம் என்பது குறித்து என் பதில்களை எழுத இப்போது இயலவில்லை. ஒன்றே ஒன்று மட்டும், ஏழாவது பாயிண்டுக்கு,
//ஐந்து பத்து நூற்றாண்டுக்கு முன்னால் கதையெழுதிப் போனவனைக் காவுகொடுக்காமால் இருக்கலாம்.//
செய்யலாம், எப்போதென்றால் அவனைப் போன்றவர்களால் எழுதப்பட்ட கதைகள் இன்று காவு கேட்காமல் இருந்தால்.

அவமதிக்கப்படும் ஒரு போராளி

தாடகை. இவளொரு அரக்கி. அப்படித்தான் நம் புத்தகங்கள் சொல்கின்றன. கம்பராமாயணத்திலிருந்து ராமானந்த சாகரின் பெட்டிப்படம் வரைக்கும் அப்படித்தான் காட்டியிருக்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இவளுடைய கருத்தாக்கத்திலிருக்கும் அரசியல் புரியும். நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.

விசுவாமித்திரன் எனும் அந்தணர் வந்து "கரிய" செம்மல் ராமனையும் கூடவே இலக்குவணனையும் அழைத்துப் போகிறார். எதுக்கு? அவரோட வேள்வியை அரக்கர் கெடுக்குறாராம், அதைக் காப்பாத்த. போகும் வழியில் பாலை நிலமொன்று. இது என்ன இந்த இடம் மட்டும் இப்படிப் பாலையாயிருக்கிறதென ராமன் கேட்க, இதுதானப்பா அந்த அரக்கி தாடகை இருக்குமிடம். ஆயிரம் மதயானை பலசாலி, அவ இடையும், அவ பல்லும், கேடு கெட்டவ, அவளக் கண்டாலே எல்லாருக்கும் நடுங்கும், இலங்கை அரசனோட ஆணைப்படி நம்ம எதிரிகளையெல்லாம் கூட்டி வச்சுக்கிட்டு நம்ம வேள்வியைத் தடுக்குறா. அப்படின்னு சொல்றாரு.

சொல்லிக்கிட்டு இருக்கப்பவே தாடகை வர்றா. அங்கின கம்பர் அவளை யானைத் தும்பிக்கையால புடிக்க முடியாத இடையழகு, எரியும் கண்ணழகு, பிறை போன்ற பல்லழகு, கறுப்பி அப்படின்னெல்லாம் "அழகா" வர்ணிச்சிருப்பார். தாடகை வந்து கேப்பா: "இது என்னோட எடமப்பா, இங்க ஒங்களுக்கு நல்ல எறைச்சி இருக்குன்னு வந்தீகளா இல்ல வேற என்ன வேணும்னு வந்தீக? மரியாதையாப் போறீங்களா, இல்ல வகுந்து எறியவா?" ஒடனே ராமரு யோசிக்கிறாரு அய்யோ பொண்ணாச்சேன்னு. அந்தணர் சொல்லிக் குடுக்குறாரு. தம்பீ அது பொண்ணு இல்ல, நாணம் இருக்கவதான் பொண்ணு, இவகிட்ட ஆம்பளையெல்லாம் தோத்துப் போவான், இவளா பொண்ணு, இந்திரனெல்லாம் இவகிட்ட தோத்தான், அசுரர் தேவரெல்லாம் ஓடுனாங்ய, இவளா பொண்ணு, தாக்கு தம்பீ. சண்டை வருது. அவ கண்ணிமைக்கும் நேரத்துல கடலைத் தூர்க்குற அளவு கல்லெடுத்து எறியுறா. தெரியுந்தானே ராமர் திறம்? தட்டிவுடுறார். அப்புறமா ஒரு அம்பெடுத்து வைரக்குன்றக் கல் மாதிரி இருந்த தாடகையின் நெஞ்சுல பாய்ச்சுறாராம். தாடகை விழுந்தாள். கம்பர் இந்த எடத்துல மறுபடியும் "அழகா" சொல்லுவார். அதாவது மார்புலேருந்து வழிஞ்ச ரத்தம் அந்தக் காட்டைக் கடலாக்கி அந்திவானத்துச் சிவப்போட கலந்துச்சாம். அரக்கர் குலத்துக்கு அன்றைக்குச் சாவு மணி அடிக்க ஆரம்பிச்சுச்சாம்.

எப்படிக் கதை? இதை வாயப் பொளந்து நாம கேட்டுக்கிட்டு இருக்கோம். கம்பனுக்கு விழா எடுக்குறோம். ராமருக்குக் கோயில் கட்டுறோம். அதோட சேர்த்து எதைப் புதைக்கறோம்? ஒரு பூர்வ குடிப் போராளியை. ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போரை. அவளையும் கொன்னு, அவளையே அரக்கியுமா ஆக்கிக்கிட்டோம். வெக்கமா இருக்கு.

இன்னைக்கும் தாடகை மலை இருக்காம். மிஸ்டர் நாரதர்ன்னு ஒரு சத்யராஜ் படம் புடிச்சாங்களாம். அதுதான் இதுவா, இங்கதான் "அங்க நாடு" இருந்துச்சா அப்படின்னெல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு தெரியுது, தாடகை வணக்கத்துக்குரிய ஒரு போராளி. வரலாற்றால் சொந்த நில மக்களாலேயே அரக்கியாகச் சித்தரிக்கப் படும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டாள். சித்தரித்தவன் ஆழ்வானாகவும், கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள்.

பிள்ளைகளா சுண்டெலிகளா?

அமெரிக்கா தான் கண்டுபுடிக்கிற மருந்தையெல்லாம் ஏழை நாட்டு மக்கள் மேல குத்திப் பாத்துப் பரிசோதிக்கிற கதை தெரிஞ்சதுதான். இப்போ ஒரு புதுக் கதை. தன் சொந்த நாட்டு மக்கள் மேலயும் ஒரு சோதனை நடத்திப் பாக்குது. மக்கள் யாருங்கறதுதான் முக்கியம். குழந்தைகள். பச்சிளம் குழந்தைகளிலிருந்து பதின்ம வயதுப் பிள்ளைகள் வரை. கருப்பர்களும், ஹிஸ்பானிக்குகளும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பிள்ளைகள் அனாதைகள்!

ஆமாம். சுமார் ரெண்டு டஜன் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில், எயிட்ஸ் உட்பட்ட நோய்களுக்கு, இந்தப் பிள்ளைகளின் மேல் மருந்துகள் ஏவிப் பரிசோதிக்கப் படுகின்றன. 1988 முதல் 2001 வரைக்கும் நியூயோர்க் மட்டும் 465 பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இதுக்கெல்லாம் National Institutes of Health நிதியுதவியும் செய்திருக்கிறது. Johns Hopkins மாதிரிப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களும் இந்தப் பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. நிறைய மாநிலங்களில் இது நடக்கலாம். சில மாநிலங்களில் இந்த ஆராய்ச்சிப் பிள்ளைகளைப் பற்றிய கணக்கெதுவுமில்லை. சில சோதனைகளில் மாண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை "வருந்தும்படி" அதிகந்தான் என்றார்களாம்! இவர்கள் உபதேசமெல்லாம் ஊருக்குத்தானோ?

சுட்டியொன்று: Alliance for Human Research Protection.

திருமூலன் அப்படி இருந்திருப்பானோ?

இன்னக்கி ஒரு கூட்டத்துக்குப் போனேன். ஒருத்தரு பேசுனாரு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துல ஒரு விஞ்ஞானி. மூலச் செல் சிகிச்சை (stem cell therapy) ஆராய்ச்சியில கொம்பர். பேரு டக்ளஸ் மெல்ட்டன் (Douglas Melton). இன்னக்கி என்ன சொன்னாருன்னு ஒங்களுக்குச் சுருக்கமாச் சொல்லவா? விரிவா வேணும்னா கேள்வி கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்!

20ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட மரபணுவான டி.என்.ஏ (DNA) யைச் சுத்தியே வாயப் பொளந்துக்கிட்டு வந்துச்சு. 1900ல மெண்டல்ல ஆரம்பிச்சது, அப்புறமா டி.என்.ஏயைக் கண்டுபிடிச்சது, அதோட மூலக்கூறு வடிவத்தைக் கண்டுபிடிச்சது, வரிசையைப் படிக்கற முறையக் கண்டுபிடிச்சது, அப்புறமா 2001ல மனுச டி.என்.ஏ வரிசையையே வெளியிட்டதுல வந்து நிக்குது. இது ஒரு நல்ல விசயம்னாலும் இந்த நூற்றாண்டு செல்களின் நூற்றாண்டா இருக்கப் போவுது. ஏன்னா செல்களைப் பத்தின ஆராய்ச்சி அதிலும் மூலச் செல்களைப் பத்தின ஆராய்ச்சிதான் மேல நிக்கும்னாரு.

அது என்னங்க மூலச்செல்? விந்தும் அண்டமும் ஒன்னாச் சேருதுல்ல, அப்போ வர்ற கருமுட்டை ரெண்டாகி, நாலாகிக் கொஞ்சம் செல்களோட இருக்கில்ல அந்த செல்களை எடுத்தோம்னா ஒடம்புல இருக்க எந்த செல்லை வேணும்னாலும் ஆய்வகத்துல செஞ்சுக்கலாம். அந்த செல்களைத்தான் கருமூலச்செல் (embryonic stem cell) அப்படின்னு சொல்றாங்க.

மெல்ட்டன் என்ன செய்றாருன்னா சக்கரை வியாதிக்காரங்களோட கணையம் (pancreas) இருக்குல்ல, அதுல இருக்க பீட்டா (beta) செல்லெல்லாம் பாதிப்படைஞ்சதால இன்சுலின் சுரக்க முடியாமப் போவுதுல்ல, அவுங்களுக்கு மூலச் செல் சிகிச்சை செய்யலாங்கறாரு. அது மட்டுமில்ல இத்தனை நாளா பீட்டா செல்லை மூலச்செல் மட்டுந்தான் உண்டாக்கும்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருந்தாங்க, இவருதான் அடேய் பீட்டா செல்லே குட்டி போடுமுடா அப்படின்னு புதுசாப் போன வருசம் கண்டுபுடிச்சிருக்கார். இது ஒரு பரபரப்பு. ஆ, அப்புடின்னா குட்டி போடாதுன்னு நெனச்ச மத்த செல்லெல்லாம் குட்டி போடுமான்னு ஒரு கூட்டம் கிளம்பிருக்கு. ஒடனே நீங்க கேக்கலாம், அப்படின்னா பீட்டா செல்ல வச்சே பீட்டா செல்லை உண்டாக்கலாமே, என்னத்துக்குங்க இந்த அரசியல் சச்சரவு புடிச்ச மூலச்செல் வெவகாரம்னு கேக்கலாம். மெல்ட்டன் விடை வச்சிருக்காரு, அதாவது சக்கரை வியாதிக்காரருக்கு பீட்டா செல்லை வைக்கணும்னா அதைக் குடுக்குறதுக்கு ஒரு சவம் வேணும், ஏன்னா உயிராயிருக்கவங்ககிட்டேருந்து எடுக்குறது கஷ்டம். தானம் செய்றவங்க கிடைக்கிறது, அத ஒடனே போயி எடுக்குறது, பிரிச்செடுக்குறது, உள்ள வக்கிறது, வச்சது எதிர்ப்பாற்றலால சாவாம இருக்கது இதெல்லாம் கஷ்டம். இங்கதான் மூலச்செல் சிகிச்சை சிறப்பாத் தெரியுது. மூலச்செல் கையும் காலும் மொளச்ச கொழந்தயில்ல. அது ஒரு 30, 40 செல். ரொம்ப உணர்ச்சிவசப்படாம இந்தப் பாதிரி மாருங்க மனசு வச்சா ஒழுங்கா ஆராய்ச்சி செய்யலாம். சீக்குக்கு மருந்து கெடைக்கும் அப்படிங்குறாரு மெல்ட்டன்.

யோசிச்சுப் பாக்குறேன், நம்ம திருமூலர் 3000 வருசம் இருந்து வருசத்துக்கொன்னா 3000 பாட்டெழுதுனாராம். அது ஒரே திருமூலரா வெவ்வேற ஆட்களான்னு ஒரு குடுமிபிடி சண்டை போடலாம். ஆனாலும் மூலச்செல்களைத் தூண்டிவிட்டுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் அங்கமெல்லாம் புதுசாகி ஒரு மனுசன் 3000 வருசம் இருந்திருப்பானோங்கற யோசனை ரொம்பக் கவர்ச்சியா இருக்கு. இது திருமூலன் மேல இன்னும் காதலைக் கூட்டுது.

Image hosted by Photobucket.com

வசந்தன் ஒரு நட்சத்திரம்!

வசந்தன் ஒரு அமெரிக்கப் புள்ள. நா மொதல்ல பாத்தப்ப அவருக்கு வயசு ஒம்போதிருக்கும். இப்ப 15. நா அவரப் பாத்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. அவங்கப்பா அன்னக்கி ஒரு சேதி சொன்னாரு. மலைப்பா இருக்கு. சொல்றேன்.

வசந்த் வருசா வருசம் இந்தியாவுக்குப் போவார். கோடை விடுமுறைக்கு. கிருஷ்ணகிரி பக்கத்துல மகனூர்ப்பட்டி பள்ளிக் கூடத்துக்கும் போவார். அவங்கப்பா படிச்ச பள்ளிக்கூடம். மூணு வருசமா ஒவ்வொரு விடுமுறையிலயும் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றார். உங்க அப்பாம்மா மாதிரியே நீங்களும் பண்ணையடிக்கப் போவேண்டியதில்லை, படிச்சு உங்க கனவுப்படியுமாகலாம்னும் சொல்லிக் குடுக்குறார். தோழனாய்க் கூடி விளையாடி நம்பிக்கையூட்டுறார்.

மறுபடியும் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து அந்த அனுபவத்தையொரு கட்டுரையாய் எழுதப் போக, அங்கிருந்து ஆரம்பிக்கிறது அடுத்த கதை. நம்பிக்கையூட்டிக்கு இன்னொரு திரியைப் பற்ற வைக்கிறார் இந்தவூர் வாத்தியார். நீங்க ஏன் அந்தப் பள்ளியின் வசதிகளை மேம்படுத்தக் கூடாது? உண்டியல். பிள்ளைகளின் ஐந்து செண்ட், பத்து செண்ட், 50 ரூவா, கோடையில கார் கழுவி உழைச்சது. அந்தப் பள்ளி மட்டுமில்ல, ஊர்ல இருக்க நிறைய பள்ளிகள்ல. நிறைஞ்சுக்கிட்டிருக்கு. நேத்து பேசினேன். 5000 டாலர் சேந்திருக்கு. இன்னும் 25 நாள்ல ஊருக்குப் போகப் போறேன். அதுவரைக்கும் கிடைக்கிறதைக் கொண்டு போவேன். அந்த நூலகத்துக்குப் புத்தகம் வாங்கித் தருவேன், ஆய்வகத்தை மேம்படுத்த, மேசை நாற்காலி வாங்க, இப்படி எத்தனையோ செய்றதுக்கு இருக்குன்னார்.

நிஜம். இன்னொரு நம்பிக்கையாளனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் வசந்தன்!

இந்தவூர் செய்தித் தாளொன்றில் வசந்தனைப் பற்றி:
பக்கம் 1, பக்கம் 2.

ஞான்பித்

துருதுருத்த கைக்கும் மெய்க்கும் வாய்த்தது உமக்கும். வழக்கம் போல் எந்த இலக்கணத்துக்கும் பிடிபடாமற் போனால், போனதுதான்!

மன்று பறித்துண் ணாய் மன்றில்
தொன்று காத்தாளை விற்றுண் ணாய்
நன்று பற்காவியம் தீட்டி யோனாய்
இன்று ஞானப்பீடை நக்கி னாயே!

தராக்கி/ஐ. நா. மனு/கையொப்பம்

தராக்கியின் படுகொலை மீது நியாயமான விசாரணை தேவை. இதை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துதல் அவசியம். இது சம்பந்தமாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட ஒரு மனு தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதில் அனைவரும் கையொப்பமிடுவோம். செய்தியை நண்பர்களுக்குப் பரப்புவோம். கையொப்பமிடுவதற்கான சுட்டி இதோ:
http://www.petitiononline.com/Tharaki/petition.html

தமிழகத்தில் தராக்கி

ஒரு முக்கியமான பத்திரிகையாளன் கொல்லப் பட்டிருக்கிறான். நானும் தேடித்தேடிப் பார்த்தேன், நம் "வெகுசன" தினமணி, தினமலர், தினத்தந்தி எதுவும் அதைப்பற்றி மூச்சே விடவில்லையே. இந்து வழக்கம் போல் அந்தாளு ப்ளொட் காரனாயிருந்ததாலயும் எதிரிகள் இருந்திருக்கலாம் என்பதாக ஒற்றைக் கோணத்தையும், அதிலே இலங்கை அரசின் உடனடிக் கண்துடைப்பு நாடக வசனங்களையும் எடுத்துப் போட்டிருக்கிறது. அந்த ஆள் ஒரு தொடை நடுங்காப் பத்திரிகையாளன் என்பதையோ அவன் கட்டுரைகளைத் தாம் படித்துக் கற்றோம் என்பதையோ மறந்தும் குறிப்பிட்டு விடவில்லை, ஒரு சிங்களவன் சொல்லிக் கொள்ளுமளவு கூட. இவர்களது சான்றிதழோ அங்கீகாரமோ அவனுக்குத் தேவை என்பதற்காக இதை எழுதவில்லை. உருட்டுக்கட்டையோடு வந்து அலுவலகத்தைத் தாக்கினார்கள், கர்நாடக எல்லையில் காரைச் சோதனை போட்டார்கள் என்றெல்லாம் வரிந்து கட்டிப் பத்திரிகைச் சுதந்திரம் பேசும் நம்மவர்களுக்கு இந்தக் கொலையெல்லாம் கண்ணுக்கே தெரியவில்லையா? கூட்டாகத் திட்டமிடப்பட்ட ஒரு இருட்டடிப்பில் தமிழகம் ஆழ்த்தப் படுவது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

பாதரசம் சேர்ந்த மருந்துகள் - 2

மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் கட்டுரையின் மீதிப்பகுதி:

இரச மருந்துகளைப் பற்றிய எனது சில அனுபவங்கள்

இன்றைக்குச் சித்த மருத்துவத்துறையில் பரவலாக, மிக அதிகமாகக் கையாளப் படுகின்ற இரசக் கலப்புள்ள மருந்துகளில் மிக முக்கியமான ஒன்று இரசகந்தி மெழுகு. இந்த மருந்தை ஒரு வேளைக்கு 1 கிராம் வீதம் ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து கொடுத்தாலும், அதன் பின் சோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளியின் இரத்தத்தில் அல்லது சிறுநீரில் பாதகமான குறிகள் எதையும் காண முடிவதில்லை.

ஏனைய மருந்துகளோடு கலப்புறுகின்ற போது இரச மருந்துகளின் உலோக நச்சுத்தன்மை இழப்பதோடு மட்டுமல்லாமல் மருந்துத் தன்மையிலும் பாதுகாப்பான தன்மையோடு செயல்படுவதை நமது பட்டறிவு காட்டுகின்றது. நாட்பட்ட கீல்வாத நோய் (rheumatoid arthritis), தொழுநோய் (leprosy) போன்ற நோய்களுக்காக ஒரு மாதத்திற்கு ஒரு வாரம் இடைவெளிவிட்டுத் தொடர்ச்சியாக ரசகந்தி மெழுகு உண்டு வருகிறவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை serum creatinine, blood urea மற்றும் சிறுநீரில் புரதம், சீழ் அணுக்கள், சிவப்பு அணுக்கள் இருக்கின்றனவா என்று கவனித்துக் கொள்கிறேன். ஆனால் இரச மருந்துகள் பிருக்கம், ஈரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் மீது கடுமையான நச்சுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்ற நவீன அறிஞர்களின் கணிப்பை எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

அத்தகைய மதிப்பீடு மகா வீர மெழுகு, வான் மெழுகு போன்ற இரச சம்பந்தமான பச்சைவெட்டு மருந்துகளை வழங்குகின்றபோது நமது அனுபவத்திலும் ஒத்து வருவதாகவே உள்ளது. அம்மெழுகுகளை அம்மருந்தின் குறைந்த அளவாகிய 50 மில்லி கிராம் அளவில் நாளுக்கு இரண்டு முறை என்ற கணக்கில் கொடுத்த மூன்று நான்கு தினங்களிலேயே வாயில் உலோகச் சுவை, முகம் வீங்குதல், தோலில் அரிப்பு போன்ற நச்சுக் குறிகுணங்களைக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட நோயாளிகளில் பலரின் சிறுநீர் பரிசோதனையின்போது புரதத்தின் தடயம் (traces of albumin) இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

ஆனால் சண்டமாருதம், அயவீரம் ஆகிய மருந்துகளில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இவற்றைத் தேனில் குழப்பிக் கொடுப்பதால் இம்மருந்துகள் பெரும்பாலும் வாய்ப்புண், அல்லது ஈறு அழற்சியை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் மகாவீர மெழுகைப் போலவோ வான் மெழுகைப் போலவோ வழங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே நச்சுத் தன்மையைத் தோற்றுவிப்பதில்லை. சிலரில் 20 முதல் 30 நாட்கள் வழங்கிய பின்னரே நச்சுக் குறிகுணங்கள் நோயாளிகளால் மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

நன்றாக முடிக்கப் பெறாத நிலையில் இரண்டாம் நாளிலேயே சண்ட மாருதத்தின் நச்சுத்தன்மையால் வாய் வீங்கியவர்கள் உண்டு.

என்னுடைய நோயாளிகளில் நீண்ட கால இரச மருந்து சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்குச் சண்டமாருதத்தை 10 முதல் 20 மில்லி கிராம் அளவிற்கு மிகாமல் 500 மில்லி கிராம் அமுக்கிராச் சூரணத்தில் கலந்து ஒரு நாளைக்கு 2 முறை கேப்சூல்களில் போட்டு விழுங்கச் செய்து அரைத் தேக்கரண்டி தேனைக் குடிக்கச் சொல்வேன். இவர்களில் ஒரு மாத காலம் விழுங்கினாலும் எந்த வித நச்சுத் தன்மையும் தோன்றுவதில்லையென்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த நோயாளிகளின் நீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகளும் பாதகமான அறிவிப்புகளை ஏதும் தரவில்லை.

ஏனைய மருத்துவத் துறைகளில் மருத்துவம் பெற்றும் வலியின் காரணம் கண்டறியப்படவில்லை, வலியும் குணமாகவில்லை (pain of unknown origin) என வந்த மூன்று நோயாளிகளில் சண்ட மாருதத்தை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறேன்.

இந்த மூன்று நோயாளிகளில் இருவர் sciatica வகை ஒத்தைக்கால் வலியினாலும் ஒருவர் brachial neuralgia வகை ஒத்தைக் கால் வலியினாலும் பல மாதங்களாகச் சிரமப் பட்டவர்கள்.

சண்டமாருதத்தை மிகக் குறைந்த அளவில் அமுக்கிராச் சூரணத்துடன் வழங்குகின்ற போது அதன் கூட்டுச் செயல்பாடு சண்ட மாருதத்தின் நச்சுத் தன்மையைக் குறைத்து மருத்துவத் தன்மையை மேம்படுத்துவதாகத் தெரிகிறது. இரசக் கலப்பினால் திசுக்கள் சேதமடையாமல் அமுக்கிரா காப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் போபாலில் நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோன்றிய புண்களைப் பரிகரித்து லட்சுமணபுரி கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர சிங் இரசாயனங்களால் திசுக்களில் ஏற்படுகின்ற சேதத்தை அமுக்கிரா தடுப்பதாக அவரது ஆய்வின் முடிவை அறிவித்திருக்கிறார்.

பூரம் (mercurous chloride) சேர்ந்த மலமிளக்கி மருந்துகள் முந்தைய நாட்களில் நவீன மருத்துவத் துறையில் வழக்கில் இருந்து வந்ததாகவும், அதன் நச்சுத் தன்மை பிருக்கத்தைப் பாதிக்கும் அறிகுறிகள் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டதால் மருத்துவ வழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அறிகின்றோம்.

ஆனால் சித்த மருத்துவத் துறையில் சிற்றாமணக்கெண்ணெய், ஏலரிசி, சுக்கு இவை சேர்த்துச் செய்யப் படுகின்ற வெள்ளை எண்ணெய் மிகச் சிறப்பான மலமிளக்கியாகப் பயன்பட்டு வருகிறது. சிற்றாமணக்கெண்ணெய் குடித்தவர்களுக்குக் கழிச்சலைத் தொடர்ந்து ஏற்படுகின்றன மலச்சிக்கல் வெள்ளை எண்ணெய் வழங்கப்படும்போது காணப்படுவதில்லை. இப்படி வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவர்களில் பூரத்தினால் பிருக்க நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்காணிக்கும் வகையில் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்ட மறுநாள் இத்தகைய இருபது நோயாளிகளின் சிறுநீர் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் கவனிக்க இயலவில்லை.

கீல்வாத நோய்க்கு மருத்துவம் பெறுகின்றவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளை எண்ணெயை 15மிலி வழங்கி வருகிறோம். அவர்களில் எந்த வித பாதகமான நச்சுக் குறிகுணங்களையும் காண இயலவில்லை.

இரசக் கற்பூரத்தோடு சிற்றாமணக்கெண்ணெயும் அவற்றின் நச்சுத் தன்மையை இழந்து அவற்றின் மருத்துவப் பயனை மட்டுமே காட்டுகின்ற வகையில் வெள்ளையெண்ணெயின் மருத்துவக் கட்டு அமைந்திருக்கிறது. மேலும் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவருக்குக் கழிச்சலை நிறுத்தும் பொருட்டு after purgative வழங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது கிடையாது.

பாதரச வெளிப்பூச்சு மருந்துகள் (Topical applications)

நவீன மருத்துவத் துறையில் வெளிப்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகின்ற களிம்புகளில் பாதரசத்தைச் சேர்ப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குச் சொல்லப் படுகின்ற காரணம் இத்தகைய களிம்புகளில் சேர்கின்ற இரசம் உடல் குருதிச் சுற்றோட்டத்தினுள் ஈர்க்கப்பட்டுப் பொதுவான நச்சுக் குணங்களைக் காட்டலாம் என்பதே. சுரம், தோல் அரிப்பு முதலிய நச்சுக் குறிகுணங்களைக் கவனித்திருப்பதாகப் பதிவும் செய்திருக்கின்றனர். ஆனால் நடை முறையில் சித்த மருத்துவர்கள் அமிர்த வெண்ணெய், மேகவிரணக் களிம்பு, ஆகியவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் பயன்படுத்தி வருகிறோம். இவை நச்சுக் குணங்களைத் தோற்றுவிப்பதை எனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செயல் படுமாறு அதனுடைய இரசாயனக் கலவையை எவ்வாறு அமைத்துள்ளனர் என்பதை இரசாயன அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்தால் இத்தகைய மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்ய வசதியாக அமையும்.

ஆனால் இத்தகைய தரக்கட்டுப்பாடுகளைச் செய்வதற்கு மிக நுட்பமான தொழில் நுட்ப வசதிகள் தேவைப் படுவதாக அறிகிறோம். எடுத்துக்காட்டாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் அதனுடைய பொறுப்பு இயக்குநர் டாக்டர் ஜி. வேலுச்சாமியின் வழிக்காட்டுதலில், இலிங்கச் செந்தூரத்தில் சுரத்தைக் குறைக்கும் ஆற்றலை மதிப்பீடு செய்திருக்கின்றனர். இலிங்கச் செந்தூரத்தை 200 முதல் 300 மிகி வரை பாதுகாப்பாக வழங்கலாம். ஆனால் இலிங்கச் செந்தூரம் வழங்கப்பட்ட நோயாளிகளில் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்ததில் அதில் பாதரசத்தின் தடயமே கிடைக்கவில்லை. சிறுநீரிலும் அதற்குரிய அறிகுறிகள் காணப்படவில்லை என்கின்றனர்.

அண்மையில் சென்னை மைய சித்த மருத்துவ ஆராய்ச்சி மாளிகையின் மருந்தியல் நிபுணர் திரு கோஷ் அவர்கள் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த போது இது பற்றிக் கலந்துரையாடினேன். அவர்களுடைய கருத்துப்படி கொஞ்சமாவது பாதரசம் இரத்தத்தில் கலந்திருக்கக்கூடும். ஆனால் அதை அறுதியிட்டு ஆராயக் கூடிய வசதி இந்தியாவில் மிகச் சில அணுசக்தி நிலையங்களிலேயே இருக்கக் கூடும் என்றார்.

பாதரசத்தை சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தாத பிரிவுகளே கிடையாது எனலாம். ஆகவே அத்தகைய பாதரச மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்வதற்கு நுட்பமான கருவிகளோடு கூடிய மருந்துத் தரக்கட்டுப்பாடு நிலையம் ஒன்றினை நிறுவிட வேண்டும்.

முடிவுரை

சித்த மருத்துவத்தின் சிறப்பிற்குக் காரணமாக இருப்பவை அதனுடைய பாதரசக் கலப்புள்ள மருந்துகளே. பாதரச மருந்துகள் முக்கிய உறுப்புகளுக்குக் கேடு செய்யலாம் என்ற எச்சரிக்கையை நவீன மருந்தியல் அறிஞர்கள் தந்துள்ளனர். ஆனால் நடைமுறையில் இத்தகைய அச்சம் எல்லாப் பாதரச மருந்துகளுக்கும் பொருந்துவதில்லை என்பதைக் கண்டிருக்கிறோம். நன்றாக முடிக்கப் பெறாத, முறைகேடாக வாங்கப்படும் இரச மருந்துகளால் தீங்குகள் ஏற்படும் என்பதிலே நமக்கும் உடன்பாடுதான். ஆகவே பாதரச மருந்துகளை நீண்ட கால நோய்களுக்கு வழங்குகின்ற காலத்தில் முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது பாதரச் அம்மருந்துகளைச் சிறந்த முறையிலும் ஆபத்து இல்லாமலும் வழங்குவதற்கு உதவியாக இருக்கும். நவீன வேதியியல் அறிஞர்களும், உயிர் வேதியியல் அறிஞர்களும், மருந்தியல் அறிஞர்களும், மருத்துவ அறிஞர்களும் அவர்களுக்குள்ள வாய்ப்பிற்கு ஏற்பச் சித்த மருத்துவத்திலுள்ள இரச மருந்துகளை ஆய்வு செய்ய முன் வர வேண்டும். அப்படி முன் வந்தால் உலக மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இன்னும் சிறந்த முறையில் பாதரச மருந்துகளைப் பயன்படுத்தலாம்.


---------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை கீழ்க்கண்ட புத்தகத்திலிருந்து தட்டச்சு செய்யப்பட்டது:

சித்த மருத்துவ ஆய்வுக் கோவை. தொகுதி -1, பக்கம் 9-19
தொகுத்தவர் பேராசிரியர் மு. சதாசிவம், இயக்குனர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
முதற்பதிப்பு 1990. இரண்டாம் பதிப்பு 2000. விலை ரூ 125.

இப்புத்தகம் 1990ல் நடந்த சித்த மருத்துவக் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட 75 கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பல அரிய செய்திகளும், வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

பாதரசம் சேர்ந்த மருந்துகள்-1

நேற்றைய பதிவு/பின்னூட்டங்களைத் தொடர்ந்து இக்கட்டுரையை இங்கு தட்டச்சி இடுவது பயனளிக்கும் என நினைக்கிறேன்.

பாதரசம் சேர்ந்த மருந்துகள் - சில அனுபவங்கள், சில கருத்துக்கள்.
புது.ஜெயப்பிரகாஷ் நாராயணன், எம். டி (சித்தா)
இணைப்பேராசிரியர், மருத்துவம்
அரசினர் சித்த வைத்தியக் கல்லூரி, பாளையங்கோட்டை.


முன்னுரை

"சூதகந்தி தாதுபற்பம் சொன்னநாட்டார் சிகிச்சை
ஓதரியமூலி இம்மண்ணூர் சிகிச்சை - வேதடரும்
சத்திரசாராக்கினி நிசாசரச் சிகிச்சையென்றே
முத்தரத்தது ஆகும் மொழி"

-பதார்த்த குண சிந்தாமணி

தாதுப் பொருட்களைக் கொண்டும் பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்படுகின்ற மருத்துவமே சிறந்த மருத்துவம் என அனுபவ அறிவினால் உறுதிப்படுத்தியவர்கள் சித்தர்கள். இன்று அரசினரால் நடத்தப்படுகின்ற சித்த மருத்துவ மனைகளில் பல வகையான பாதரச மருந்துகள் (mercurial preparations) உள்ளுக்கு வழங்கப்படும் மருந்துகளாகவும், புறப்பூச்சு மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் பயன்கள் கண்கூடாகக் கண்டவை. இன்றைய அறிவியலில் உன்னதமான அளவிற்கு உயர்ந்திருக்கின்ற நவீன மருந்தியல் துறையில் அவர்கள் பயன்படுத்திய பாதரசம் சேர்ந்த மருந்துகள் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்டுப் பாதரசம் சேர்ந்த மருந்துகள் பெரும்பாலானவை அவர்களுடைய பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றப் பட்டுவிட்டன.

சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படுகின்ற பாதரசம் சேர்ந்த பச்சை வெட்டு மருந்துகளைப் பொறுத்த வரை மேற்கண்ட நவீன அறிஞர்களின் கருத்துகள் பெருமளவுக்குப் பொருத்தமுடையனவாக இருக்கலாம். முறையாகத் தூய்மைப் படுத்தப்பட்டு இரசாயனச் சமையலுக்கு உட்படுத்தப் படுகின்ற பாதரச மருந்துகளுக்கு இந்த மதிப்பீடு பொருந்தாது. பாதரசத்தோடு சேர்கின்ற ஏனைய மருந்துப் பொருட்கள், துணை மருந்துகள், பத்திய முறைகள் இவைகளெல்லாம் பாதரச மருந்துகள் உடலில் செயற்படும் முறையை (pharmacodynamics) சீர்படுத்துகின்றன எனக் கருத இடமிருக்கிறது.

நடைமுறையிலுள்ள இரசக் கலப்புள்ள மருந்துகள்:

உள் மருந்துகள்

1. அயவீரம் (mercuric chloride)
2. ஆறுமுகச் செந்தூரம் (mercury)
3. இலிங்கச் செந்தூரம் (red sulphide of mercury)
4. கௌரி சிந்தாமணி (mercury)
5. சண்டமாருதச் செந்தூரம் (mercuric chloride, mercurous chloride, red sulphide of mercury)
6. சிவனார் அமிர்தம் (mercury)
7. இரசகந்தி மெழுகு (mercury, mercurous chloride)
8. படிகலிங்கத்துவர் (red sulphide of mercury)
9. பூரணச் சந்திரோதயம் (mercury)
10. வெள்ளை எண்ணெய் (calomel)
11. பரங்கிப் பட்டைப் பதங்கம் (mercury, cinnabar)
12. பட்டுக் கரும்(ப்?)பு (mercury, cinnabar, mercuric chloride, mercurous chloride)
13. கஸ்தூரிக் கரும்(ப்?)பு (mercury, calomerl, cinnabar, red sulphide of mercury)
14. இடி வல்லாதி (calomel)
15. மேகநாதக் குளிகை (cinnabar, red sulphide of mercury)
16. அகத்தியர் குழம்பு (mercury)
17. சாந்தச் சந்திரோதயம் (calomel)
18. வசந்த குசுமாகரம் (cinnabar)
19. பிரமானந்த பயிரவம் (cinnabar)

புறமருந்துகள்

1. அமிர்த வெண்ணெய் (mercuric chloride)
2. மேகவிரணக் களிம்பு (mercury, calomel, mercuric chloride, cinnabar)
3. வங்கவிரணக் களிம்பு (calomel, red sulphide of mercury)

இன்னும் பல இரசக் கலப்புள்ள மருந்துகள் பரம்பரை மருத்துவர்களால் கையாளப் படுகின்றன. விரிவு கருதி இங்கே குறிப்பிடப் படவில்லை.

நுட்ப மருத்துவம்

பாதரசத்தையும் பாதரசக் கலப்புள்ள மருந்துகளையும் கையாளுவதில் தற்கால மருத்துவ விஞ்ஞானிகளை விடச் சித்தர்கள் மிக விரிவான அனுபவ அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்குப் போதுமான நூலாதாரங்கள் உண்டு. இலிங்கத்திலிருந்து இரசத்தைப் பிரித்தெடுத்தல் (destructive distillation of mercury from cinnabar by sublimation), தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றில் இரசத்தைச் சேர்த்து இரசக் கலவையை (amalgam) உண்டாக்கி லோகமாரணம் செய்து மருந்தாக்கிப் பயன்படுத்தியது சித்தர்களுடைய மருந்தியல் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நவீன மருத்துவத்தில் பாதரசக் கலப்புள்ள மருந்துகள் சிறுநீர் பெருக்கிகளாகவும் (diuretics), மேகப்பிணி விலக்கியாகவும் (anti-syphilitic), மலமிளக்கியாகவும் (laxative), அழுகலகற்றியாகவும் (anti-septic) சில தோல் நோய்களில் வெளிப் பிரயோகமாகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சித்தர்கள் மேற்குறித்த நிலைகளில் மட்டுமல்லாமல் சுரப்பிணி, குன்மம், கழிச்சல் நோய்கள், கீல்வாத நோய்கள், புற்று நோய்கள் ஆகியவற்றில் தேவைக்கேற்ப உள் மருந்தாகவும், புற மருந்தாகவும் பயன்படுத்தி வந்திருப்பது இரச மருந்தியலில் அவர்களின் ஆழ்ந்த நுட்பத்தையும் அனுபவத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் வயிற்றுப் புண், கீல்களில் ஏற்படும் அழற்சி, புற்று நோய் போன்ற நோய்களில் சித்த மருத்துவத் துறையில் வழங்குவதைப் போல் வழங்குவதில்லை. நவீன மருத்துவ அறிஞர்களைக் கேட்டால் மேற்குறித்த மருந்துகளை விடச் சிறந்த மருந்துகளைக் கண்டறிந்திருக்கின்றோம் எனச் சொல்வார்கள். எது சிறந்தது என்பதை ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால்தானே கண்டறிய முடியும். ஒப்பு நோக்கும் ஆய்வு நடத்த வேண்டும் என்றால் நம்மால் அது முடியாது. சித்த மருத்துவத் துறையோடு தொடர்புடைய நவீன மருந்தியல் அறிஞர்களும் (non-clinical pharmacologists) மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை அணுகும் கல்வி அறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களே சித்த இரச மருந்துகள் மேற்கண்ட நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையவை என்று சொன்னாலும் மருத்துவமனையில் வழங்கிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறார்களா என்ற கேள்வி எழத்தான் போகிறது.

சித்த மருத்துவத் துறையில் வழக்கத்தில் உள்ள பாதரச மருந்துகள் எந்த அளவிற்கு மருத்துவப் பயன் உடையவை, தீய குணங்கள் இல்லாமல் எந்த அளவிற்குப் பயன்படுத்தத் தக்கவை என்பதை நவீன மருத்துவ அறிஞர்களோடு இணைந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். இத்தகைய ஆய்வுகள் நடத்தப் பட்டாலும் நடத்தப் படாவிட்டாலும் பாதரச மருந்துகள் சித்த மருத்துவத் துறையிலிருந்து வழக்கொழிந்து போய்விடப் போவதில்லை. ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால் இன்னும் அதிகமான மக்கள் இதன் பயனைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.

குடற்பகுதியில் மட்டுமே அதிகமாக, குறிப்பாக செயல்படக் கூடியதாகவும் அதே நேரத்தில் உடலில் அதிகமாக ஈர்க்கப் படாமல் செயல்படக்கூடிய இரச மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்று கழிச்சல் நோய்களுக்கான மருந்துகளில் இலிங்கத்தைச் சேர்த்தது வியக்கத் தக்க சித்தர்களுடைய பட்டறிவிற்கு எடுத்துக்காட்டு.

இரச நஞ்சு பற்றிய அறிவு

நன்றாக முடிக்கப் பெறாத அல்லது பொருத்தமான முறையில் வழங்கப்படாத இரச மருந்துகள் எத்தகைய கேட்டினை விளைவிக்குமென்பதைக் குறி குணங்கள் வாயிலாகச் சித்தர்கள் விளக்கியிருப்பது இன்றைய நவீன மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்ற இரச நஞ்சுக் குறி குண இயலுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன. பிருக்கப் (kidney) பாதிப்பை ஏற்படுத்தி உடலை வீங்கச் செய்வது, செரிமான மண்டலத்தில் தீவிர அழற்சியை ஏற்படுத்தல், நரம்பு மண்டலத்தைத் தாக்கி மனநோய்க் குறிகுணங்களை ஏற்படுத்தல் இவற்றையெல்லாம் சித்தர்கள் நன்கு கவனித்துப் பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்டிருக்கிற இரச நஞ்சு முறிவுகளும் நல்ல பயனை அளிக்கின்றன. உயிர் வேதியியல் அடிப்படையிலும், வேதியியல் அடிப்படையிலும் இவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் கண்டறிந்தால் இரச மருந்துகளை மிகச் சிறப்பான முறையில் கையாளலாம்.

இக்கட்டுரையின் மீதி அடுத்த பதிவில்.

நாட்டு வைத்தியம் - சசிக்கு ஒரு பதில்

இது சசியின் பதிவிற்கான மறுமொழி.

விரிவாய் அலசியிருக்கிறீர்கள். எல்லா மூலிகை வைத்தியர்களும் வெத்து வேட்டுக்கள் என்பதான ஒரு மனநிலையைப் படிப்பவர்களுக்கு இது ஊட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்விளக்கத்தை எழுதுகிறேன்.

RIMP என்பது Registered Indian Medical Practioner என்பதைக் குறிக்கும். இதற்குள் நிறைய குளறுபடிகள் நடக்கின்றனவென்றாலும் நாம் இங்கு சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் இந்த டாக்டர்கள்தான் தலைவலிக்கும் சுரத்துக்கும் அடிபட்டதற்குக் கட்டுக் கட்டவும், விஷம் குடித்தவர்க்கு வாந்தி எடுக்க வைத்துப் பக்கத்தூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்புவதும். எல்லா குக்கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்புலன்ஸ் அல்லது எல்லாக் குடிகளுக்கும் சாரிடான், மெட்டாசின் தெரியும் வரைக்கும் இந்த டாக்டர்கள்தான் இவர்களது குறுகிய கால வைத்தியர்கள். இவர்கள் வாங்கும் ஊதியம் 5 அல்லது 10 ரூபாய்கள், அல்லது அவர்களது உண்டியலில் ஒரு காணிக்கை. இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதில்லை. இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது, ஊசி போடக் கூடாது. ஆனால் மக்களின் உடனடித் தேவைக்காக இவர்கள் இதைச் செய்யத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு நிறைய ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமலிருக்கலாம். ஆனால் இத்தகைய தவறுகள் "நவீன" மருத்துவர்களாலும் செய்யப் படுகின்றன. வயாக்ஸ் விசயத்தில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்த ஆங்கில மருந்தும் பக்க விளைவுக்கு அப்பாற்பட்டதில்லை. எம்.டி அதைத் தெரிந்தோ (தெரியாமலோ) கொடுக்கிறார். ஆர்.ஐ.எம்.பி யும் அதைத் தெரிந்தோ தெரியாமலோ கொடுக்கிறார். அதற்காக அவர்கள் எல்லோரும் செய்வதை நான் நியாயப் படுத்துவதாக நினைக்க் வேண்டாம். பணத்துக்காக மக்களின் நலத்தோடு விளையாடுவதென்பது கோயில்களில் நடக்கும் கொள்ளையைப் போன்றதே.

அடுத்ததாக மூலிகைகளைப் பற்றிக் கொஞ்சம். நமது தமிழ் மூலிகை மருத்துவம் எவ்வளவு செறிவானது என்பதை நாம் படிக்க வில்லையென்றாலும் கேள்வியாவது பட்டிருப்போம். அகத்தியரில் தொடங்கி 18 சித்தர்கள் வளர்த்தெடுத்த மருத்துவ முறைகள். கண் நோய் 96 என்று அவர்களுக்குத் தெரியும். சிறுநீரின் நிறம், மணம், குணம் கொண்டு இந்தாளுக்கு இன்னதென்று கணிக்கத் தெரியும். வாத, பித்த, கப நாடிகளின் பிறழ்வாலேயே (முக்குண தோசம்) பிணிகள் வருகின்றனவென்பதும், எந்தெந்த மூலிகைக்கு வாத/பித்த/கப குணம் என்றும் எதனை எப்படிக் கையாள்வதென்றும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். இயற்கையாய்க் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு அவர்கள் மருத்துவம் செய்தார்கள். அது பலனளிக்காத போது உப்புக்களைப் பயன்படுத்தினார்கள். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் மட்டுமே கனிமங்களைச் சுத்திகரித்துப் பயன்படுத்தினார்கள். கனிமங்கள் அவர்களது கடைசி ஆயுதம். அவற்றின் பக்க விளைவுகளையும், மாற்றுக்களையும் தெளிவாகவே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வாளால் அறுத்துச் சுடுதலும் தெரியும். நம் தவறு என்னவென்றால் இவ்வறிவைப் பேணாமல் மேற்கத்திய மருந்துகளுக்கும், அறிவியல் முறைகளுக்கும் கேள்வியின்றி நம்மைப் பலியாக்கிக் கொண்டு விட்டோம். அமெரிக்காவில் இயற்கை மருத்துவம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதைப் பணக்காரர்கள்தான் செய்து கொள்ள முடியும். நாலு வல்லாரை மாத்திரைகளைப் போட்ட குப்பியை 20 டாலருக்கு அவர்கள்தான் வாங்கிக் கொண்டு போகிறார்கள். நம்மிடம் அது இருந்தும் அதை வளர்த்தெடுக்காமல் இருக்கிறோம். இன்றும் புற்று நோய் தொடக்கம் கல்லீரல் நோய் என்று பல வகையான நோய்களுக்கும் மருந்துகளைத் தாவரங்களிலிருந்தே பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மருந்துத் தாவரங்களை எப்படி வளர்ப்பது, பாகங்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு எப்படி அனுப்புவது என்பதற்கு நம்மூரில் வகுப்பு நடத்துகிறார்கள். கத்தாழையும், அமுக்குராவும் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. நாம் இவர்களது ஸ்டீராய்டுகளை அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். BSMS என்றொரு சித்த மருத்துவப் பட்டம் உண்டு. ஏதோ ஒன்றிரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும். பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளில் இவர்களில் ஒருத்தர் உட்கார்ந்து மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். இம்ப்காப்ஸ் (Indian Medical Practioners Cooperative Pharmacy and Stores) என்றொரு நிறுவனம் இம்மருந்துகளைத் தயாரித்து விற்கிறது. மத்திய அரசு பேருக்கு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை வைத்திருக்கிறது. இம்மருத்துவமும் ஒரு வரலாறு, அறிவியல், சமூகவியல். தமிழரின் சொத்து. இதைப் பேணுதலும் போற்றுதலும் நம் கடமையே.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது அதிலிருக்கும் குறைகளைக் களைவதும், இன்னும் நமக்குத் தெரியாதவற்றை அறிவதுமே. அல்லது நாட்டு வைத்தியர்களெல்லாம் மட்டம், அவர்களிடம் மருந்து சாப்பிடாதீர்கள், மூலிகைகளெல்லாம் சும்மா என்று "அறிவுறுத்தாமலிருத்தல்" கூடப் பயன் தருவதே! இது ஒரு விரிவான அலசுதலுக்கான விசயம். சித்த வைத்தியம் vs "modern"வைத்தியம் என்று இன்னும் எழுத நிறைய இருக்கிறது, நம்மில் பலருக்கும்!

St Patrick's Day Parade

உடைகள், தொப்பி, தலை முடி, தாடி, மீசை எங்க பாத்தாலும் பச்சை. யாரப் பாத்தாலும். என்னன்னு கேக்குறீங்களா? புனித பேட்ரிக் தினமாம். அப்புடின்னா. அவரு அயர்லாந்துல கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புனாராம். கி. பி. 400 வாக்கில். பதின்ம வயதில் ஏதோ ஒரு சண்டையில் பிடிபட்டு அடிமையாய் விற்கப்பட்டு, ஞானமடைந்து தப்பியோடி, கிறிஸ்தவ போதனையை அயர்லாந்து முழுக்கப் பரப்பியிருக்கார். ஐரிஷ் குடிகளைக் கிறிஸ்தவக் குடிகளாக்கியிருக்கார். அயர்லாந்து முழுக்கப் பாம்புகளே கிடையாதாம். இவருதான் ஓடிப் போன்னுட்டாருன்னு ஒரு கதை. என்னென்னமோ கதையையெல்லாம் நம்புறீங்கள்ல இதையும் நம்புங்க.

உலகமெங்கும் சுமார் 70 மில்லியன் ஐரிஷ் குடிகளாம். அயர்லாந்தின் வரலாறு எல்லா வரலாறுகளையும் போலவே ஆக்கிரமிப்பும், 'அரசங்கீகாரம்' பெற்றக் குடியமர்வுகளும், பின் தோன்றிய மதங்களும், மதங்களுக்கிடையேயான பூசல்களும், பூனைகளின் ஆப்பத்தைப் பங்கு பிரித்த நாட்டாமைக் குரங்குகளும், இத்தனைக்கும் நடுவிலே குடியும், இசையும், கூத்துமாய் அந்தப் பசும் நிலத்தில் மக்களைப் புரட்டியெடுத்திருக்கிறது.

மார்ச் 17, இந்த நாள் உலகெங்குமிருக்கும் அத்தனை ஐரிஷ் காரர்களுக்கும் மண்ணை நினைத்துக் கொள்ளும் ஒரு நாள். புனித பேட்ரிக்கை நினைக்கிறார்களோ இல்லையோ, தாயகத்தை நினைத்துக் கொள்கிறார்கள். கோயிலுக்கும் போகலாம், குடிக்கடைக்கும் போகலாம். சந்தோஷமாயிரு.

Image hosted by Photobucket.com

அமெரிக்காவிலும் பல நகரங்களில் இந்நாள் ஒரு கொண்டாட்டந்தான். 17ந்தேதி வார நாளில் வருவதால் முன்னதாகவே முந்தாநாள் ஊர்வலத்தை நடத்திவிட்டார்கள். போனோம். ஸ்கர்ட்டு போட்ட ஆண் பாண்டு வாத்தியக் காரர்கள், பெரிய பெரிய தலைப்பாகைகள், மீசைகள், பழங்கால இக்கால உடைகள், வாத்தியங்கள், வாகனங்கள். ஐரிஷ் மட்டுமில்லை, அமெரிக்க-ஐரிஷ், அமெரிக்கக் கலாச்சாரமும் ஒட்டிக் கொண்டே வருகிறது. அமெரிக்கத் தீயணைப்பு, காவல், ஆமி, நேவி, போரில் ஊனமுற்றோர். இப்படித்தான் எங்காவது கூட்டம் திரண்டுவிட்டால் அமெரிக்கா நாட்டுப் பற்றை ஊடே சொருகி விடும்.

Image hosted by Photobucket.com

பார்க்கத் திகட்டாத ஊர்வலம் வந்து கொண்டேயிருந்தது. ரெண்டுமணி நேரந்தான் நிக்க முடியும். கிளம்பியாச்சு. பெருமூச்சு. திருமூலனுக்கு ஒரு விழாக் கொண்டாடலாமா இப்படி? உலகத் தமிழரெல்லாம் இப்படிச் சேருவமா?... இதுக்கு மேல நினைக்க முடியல அல்லது நெனக்கிறத எழுத முடியல. அயர்லாந்துக் குடியரசுப் படைக்காரன், ரெண்டு குண்டு போட்டு பன்னிரெண்டு வருஷம் சிறையிலிருந்தவனெல்லாம் ராஜ மரியாதையோடு ஊர்வலத்துல போவான், கேட்டா மண்ணும்பான், விடுதலைம்பான், மொழிம்பான். தமிழனின் ஒற்றுமை, இனவுணர்வு, விடுதலை மட்டும் தமிழனுக்கே கேலி, பயங்கரவாதம்!

Image hosted by Photobucket.com

இன்னொரு தரம், வலம்புரி ஜானுக்கு...

அமெரிக்க வலைப்பதிவு நண்பர்களுக்கு,
எனக்கு வலம்புரி ஜானைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது பேச்சாற்றலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய ஒரு முறையும் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஆனால் இலக்கியத்துக்காக என்னென்னவெல்லாமோ செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது விமர்சனங்கள், சொல்லாக்கங்கள் ஆங்காங்கே மேற்கோளிடப்படுகின்றன.

அவருடைய தற்போதைய உடல்நல மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளை முன்னிறுத்தி மன்னை மாதேவன் நேற்று ஒரு பதிவினை இட்டிருந்தார். சென்ற மாதத்தில் ஜோ (கணியம்) என்பவரும் ஒரு பதிவினை இட்டிருந்ததைக் கண்டேன். ம்யூசிக் இந்தியா.காம் இணையதளத்திலும் ஒரு செய்தி காணக்கிடைக்கிறது. நானறிந்திராத அவருடைய அரசியல் வாழ்வைத் தாண்டித் தமிழுக்காகத் தொண்டு செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு உதவ நமக்கொரு (வலைப்பதிவாளர்கள்) கடமை உண்டு என நினைக்கிறேன். அதிமுக்கா திமுக்கா தமுக்கா கட்சிகளெல்லாம் செய்யாது, அவர்களுக்கு இன்றைக்கு வாயடிக்க வண்ணையோ காலில் விழக் காளிமுத்தோ போதும், வலம்புரி ஜான் இனித் தேவையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது.

அமெரிக்காவில் இருக்கும் வலைப்பதிவர்கள் யாருக்கேனும் கொடுக்கும் ஆவல் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (sundarappaa@yahoo.com). நீங்கள் சொல்லும் பணத்தை மொத்தமாக அனுப்பி விடுகிறேன், நீங்கள் இன்றோ நாளையோ எவ்வளவு என்று சொல்லிவிட்டு வரும் வாரத்தில் அனுப்பினால் போதும். நம் 10 டாலர் கூட அவருக்கு உதவியாயிருக்கும் என நம்புகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்பவர் பிரமீளைப் (சிவராமுவை) பற்றிச் சொல்லும்போது //செத்தவுடனே சிலாக்கிக்குற தமிழ் ஈ-இளி-இலக்குயத்தப்பாத்தா இவளுக்கு வாந்தி வாந்தியா வருது. ஆனாலும் இணையத்துக்கு வர சிவராமுவுக்கு முடிஞ்சிருக்குமான்னும் தெரியல. அசோகமித்திரன் சாரு இலக்கியவாதியா இருந்து இங்க ஒன்னும் கிழிக்கமுடியாதுன்னு சொல்லிருந்ததும், பாரதி வெறுத்துப்போயி டோப்பு அடிச்சதும் சில நேரம் யோசிக்கத்தகுந்ததுன்னும் சொல்லிக்கிறா.// அப்படிங்கறார்.

நாம செய்ய வேண்டியது என்னன்னு உங்களுக்குத் தெரியும். உங்கள் மின்னஞ்சலை எதிர் நோக்குகின்றேன். நன்றி!

பின் குறிப்பு: இது எனது முந்தைய பதிவேதான். இன்னொரு முறை பதிந்தால் கவனம் கூடலாம் என்ற எதிர்பார்ப்பில்! இன்றைக்கு மதியம் அனுப்பப் போகிறேன், விரைந்து உங்கள் பதிலைத் தெரிவியுங்கள். நன்றி!