இருளை அகற்றிய ஒளி



யாதும் ஊரே பாடலை நினைக்கும்போதெல்லாம் அதனை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றும். அதன் முதல் வரியைப் பல கோணங்களில் யுவாவுடன் பேசிப்பார்ப்பதுண்டு. எல்லாம் உன் ஊர்தான், எல்லா ஊர்களும் உன்னுடைய ஊரைப் போலவே சிறப்புடையவைதாம் என்பன சில உதாரணங்கள். இதனை இன்னொரு மாதிரி நேற்று புரிந்துகொண்டேன். அதுதான் இக்குறிப்பு: 

நேற்று மாலை ஒரு சிறிய நடைப் பயணம். நாங்கள் முன் குடியிருந்த பகுதியில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தேன். சற்றே இருட்டிக்கொண்டு வரும் நேரம். சாலைக்கருகே ஒரு வாய்க்கால். மரங்களிலிருந்து சுவர்க்கோழிகள் கத்தத் துவங்கியிருந்தன. சட்டென்று வாய்க்காலுக்குள்ளிருந்து நான்கைந்து பறவைகள் எழுந்து பறந்து சென்றன. இவை இப்போது நாங்கள் வசிக்கும் பகுதியிலிருக்கும் பறவைகளைப் போலவே இருந்தன. இது வெஸ்ட் ஆஷ்லே பறவையா, அல்லது மௌண்ட் ப்ளசண்ட் பறவையா, எல்லா இடங்களிலும் அது பறவைதான், அதற்கேது ஊரும் நாடும் என்று நினைத்துச் சிரித்தேன். அப்போதுதான் தங்கமணியின் ஒரு பறவைப் படமும் அதன் குறிப்பும் நினைவுக்கு வந்தன. அப்பறவை எங்கோ வேறு தேசத்திலிருந்து வருமாம், இங்கே குஞ்சு பொறிக்குமாம், பிறகு திரும்பிவிடுமாம். இங்கு குஞ்சு பொறிப்பதால், அது இந்த ஊரா, அல்லது அங்கு பறந்து திரிவதால் அது அந்த ஊரா? இரண்டும் அதன் ஊர்தான். செல்லுமிடமெல்லாம் அதன் ஊர்தான். இந்தியாவில் பிறந்ததால் இந்தியரா, அமெரிக்காவில் வாழ்வதால் அமெரிக்கரா? அப்படியெல்லாம் இல்லை. நீ எங்கு இருக்கிறாயோ அதுதான் ஊர். எங்கெங்கெல்லாம் போகிறாயோ அதுவெல்லாம் ஊர். யாதானும் நாடாமால் ஊராமால் என்ற குறள் நினைவுக்கு வருகிறது. உன்னால் போக முடிகிறதெல்லாம் ஊர்தான். ஒரு பறவையைப் போல. உனக்கெனச் "சொந்தமான" ஊர் என்றோ, நீ இந்த மண்ணுக்கு உரியவன் என்ற கட்டிப்பிணைப்போ எதுவுமில்லை. யாதும் ஊரே என்ற இப்பதம் கட்டற்ற நிலையின் உச்சம். பிணைப்புக்களிலிருந்து விடுபடவைக்கும் மந்திரம். 
யாவரும் கேளிர்: பகைமையின் எதிர்ப்பதம் கேண்மை (பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்). பகைமை கொண்டிருப்பவர் பகைவர், கேண்மை கொண்டிருப்பவர் கேளிர். பறவைகள் பல்வேறு விதமான நிறங்கள், இயல்புகள் என்பவற்றோடு இருந்தாலும் (உணவுத் தேவையைத் தவிர, அல்லது பொதுவாக) ஒன்றோடொன்று அடித்துக் கொண்டே இருப்பதில்லை. பகைமை பாராட்டுவதில்லை. அருகருகே அமர்ந்து பறந்து அதன் பாட்டிலேயே அதனதன் வேலையைப் பார்த்துத் திரிகின்றன. இதைப்போலவே இரு. 
தீதும் நன்றும் பிறர் தர வாரா: உனக்கு நிகழும் எல்லாவற்றுக்கும் நீதான் காரணம், வேறு யாருமல்ல. 
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன: உனக்கு வரும் நோய்க்கும் நீதான் காரணம், அது தணிந்து விலகுவதற்கும் நீதான் காரணம். (நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம், நோய் செய்யார் நோயின்மை வேண்டுபவர்!). நாம் நன்றாக உடம்பைப் பேணினால் நோய் வராது. நாம் மருந்தை ஒழுங்காக உட்கொண்டால் நோய் தணியும். எல்லாப் பொறுப்பும் நமக்கே. உன் நோய்க்குக் கோக், பெப்சி, பியர், பிட்சாவைக் குறை சொல்லாதே. ஒழுங்காக தினமும் யோகப் பயிற்சி செய் :)
சாதலும் புதுவதன்றே: சாவது புதுமையில்லை. தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம் உறங்குவது போலும் சாக்காடு. நாளது ஒன்றுபோல் காட்டி உயிர் ஈறும் வாள். தினமும் மரணத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம். அதைப் புதுமை என்று நினைத்து பயப்படாதே.
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் இன்னாதென்றலும் இலமே: வாழ்க்கையை நிதானமாகப் பார். இது இன்பமும் இல்லை. துன்பமும் இல்லை. இவை இரண்டு நிலைகளும் மனதின் பார்வைகளே, வாழ்வின் உண்மை இயல்பு அதுவல்ல. இன்பத்துள் இன்பத்தைத் தேடாதவர் துன்பத்துள் துன்பமடைவதில்லை. தாமரை இலைத் தண்ணீரைப் போல. முதல் வரியான யாதும் ஊரேயில் சொன்ன பிணைப்பற்ற நிலையில் இருப்பவருக்கு இன்பமும் துன்பமும் ஒருசேரவே தோற்றமளிக்கும். 

மின்னொடு வானம்..மல்லல் பேர்யாற்று: 
இது அமைதியான காட்சியில்லை. யோசித்துப் பாருங்கள். வானம் இருள, மின்னல் வெட்ட, கடுஞ்சத்தத்துடன் மழை பொழிகிறது. அப்படிப் பொழிந்த மழையால் பெருக்கும் ஆறானது பாறைகளில் மோதி அதிரோசையை ஏற்படுத்துகிறது. இந்த வரிகளில் முகத்தில் நீர் அறைகிறது. ஒரு வேகம். காட்டாற்றின் சீற்றம் தெறிக்கிறது. வாழ்க்கை இப்படியும் இருக்கலாம். சில நேரங்களில் இப்படியும் வன்மம் தோன்றலாம். பயமென்ற இருள் மேகம் சூழலாம். துன்பமெனும் மின்னல் வெட்டிப் பொசுக்கலாம். துக்கமென்னும் ஆறு நமை இழுத்துப் போகலாம். 

நீர்வழிப் படூஉம் புனைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்: 
எந்த ஆறும் மேற்கண்ட சீற்றத்துடனேயே பாய்வதில்லை. எல்லாம் முறைப்படும். அமைதியாகும். நிரந்து பாயும், புனைகளைச் சுமந்து மெதுவாகச் செல்லும் அமைதியை அடையும். அதுவே ஆற்றின் முறை. வழி. இயல்பு. அப்படியாகவே வாழ்வும் சீற்றம் தணிந்து அமைதியாகும். ஆறு என்பதே முறையாகச் செல்வதுதான். ஆற்றுப்படுத்தல் என்பது முறைப்படுத்தல். வாழ்க்கை எவ்விதமாகத் தாறுமாறானதாக, இரைச்சலும், இருளும், சீற்றமும் நிறைந்ததாகக் காணப்பட்டாலும், அது மாறக் கூடியது. இடம் மாறும், காலம் மாறும். அப்போது அங்கு ஓடங்கள் மிதக்கும். மாற்றங்கள் ஏற்படுவதற்கான கால, இட அவகாசத்தைக் கொடுக்க, காத்திருக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார் போல. 

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 

பெரியோர் என்பதும் சிறியோர் என்பதும் ஆற்றினதைப் போலவே தோற்றங்களே. அவற்றுக்கென்று அவற்றைப் புகழவும் இகழவும் வேண்டியதில்லை. 

"நீ உன் பாட்டுக்கு இரு. அது அது பாட்டுக்கு இருக்கட்டும்" என்று அம்மா அப்பா சொல்வது காதில் விழுகிறதா :) 

இது ஒரு அடைதற்கரிய பெரு நிலை. இதைத்தான் பண்டைச் சமூகம் வலியுறுத்தியது. பெரும் கோயில்களையும், அணைகளையும், ஆறு, வாய்க்கால், குளம், வயலைக் கட்டியவர்கள் 6 பெட்ரூம் வீடுகளைக் கட்டிக் கொண்டு அதற்குள் இருந்ததில்லை. வெடியுப்பை மருந்துக்குப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்குத் துப்பாக்கியைக் கண்டுபிடிக்கத் தெரியாமலில்லை. வகை வகையாகச் சாப்பிடத் தெரிந்த அவர்கள்தாம் உண்பது நாழி என்றும், அழகிய ஆடைகளை நெய்தவர்கள்தாம் உடுப்பது நான்கு முழம் என்றும் அளவினை அறிந்தார்கள். எத்தனை இருந்தாலும் நிலைப்பது புகழொன்றே என்ற நிலையை அடைந்தார்கள். அதனால்தான் எந்த அழகும் அழகல்ல, நெஞ்சத்துள் நல்லம் யாம் என்னும் கல்வி அழகால் பெற்ற அழகையே அழகு என்றார்கள். நிலையற்ற செல்வத்தின் பின்னே செல்வதை விட நிலையான செல்வத்தைத் தேடுதலே சிறந்தது என்றார்கள். 

இப்படித்தான் என்னுள் ஏதோ துலக்கமாகிறது. இதற்குப் பெயர்தான் தீபாவளியாக இருக்கலாம் :)





Poem from Purananuru - Song Number 192
Written by Kaniyan Poongundranaar (around 500 B.C.E)

(Modified by Sundar Balasubramanian from translations of Vaidehi Herbert and G.U.Pope) 2/28/15

Version date: 10/29/16

We live everywhere
Everyone is a kin
Adversity and goodness are not caused by others
So are the pain and relief
Death is nothing new
We do not rejoice saying life is sweet 
Nor do we say life is awful when we suffer
Through the vision of those enlightened we are clear
that the precious life will take shape -
Like a raft making its way through huge raucous river,
that roars tussling with the rocks nonstop
fed by cold rain with bolts of lightning.
So, we do not marvel at the greatness of the great

Much less, we do not ridicule the commoners.