எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?


//bombing of civilian areas cannot be contemplated by any civilised society.// - N. Ram, The Hindu.

மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசுவதை நாகரீகமுள்ள எந்தச் சமூகமும் எண்ணிப் பார்க்கவியலாது - இந்து என். ராம்

இந்துப் பத்திரிகை மீதும், அதன் ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் மீதும் பல பழிச் சொற்கள் வீசப்படுகின்றன. நேற்று வந்திருக்கும் அவரது தலையங்கத்தைப் படிப்பவர்களுக்கு அவரது மனிதாபிமானமும், சமாதானத்தின் மேலும், துயரப்படும் மக்கள் மற்றும் போராளிகள் மீது அவருக்குள்ள அன்பும் விளங்கும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வன்முறையும் வளர்ந்து வருகிறது என்பது நாமறிந்தது. சத்திஸ்கரில் வைத்து இந்திய இராணுவ உலங்குவானூர்தி மீது நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து, இதனைப் போன்ற தாக்குதல் இனி நடந்தால் "தற்காப்புக்காக" எதிர்த் தாக்குதலை நடத்தலாமா என்று கேட்டது வான்படை. இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் பேசிய ப.சிதம்பரம், அந்த அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதற்குப் பதில், வான்படை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறிவிட்டார். (அப்போது, நக்சலைட்டுகளும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறீர்கள், அரசாங்கமும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறது, வாருங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம் என்று சொல்லியிருப்பது தனி நகைச்சுவை!). நிற்க. இந்த நிலையில்தான் வெளிவந்திருக்கிறது இந்து ராமின் தலையங்கம். அதில் நக்சலைட்டுகளுடன் கடினப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாதென்றும், அவர்களுடைய சமூகத் தேவைகளை நிவர்த்திப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது, அவர்களது வன்முறைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அரசாங்கம் களைவது போன்ற முயற்சிகளில்தான் ஈடுபடவேண்டுமே தவிர, அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அதிலும் குறிப்பாக வான் தாக்குதல் என்பது நாகரீகமுடைய சமூகத்தின் செயலன்று (bombing of civilian areas cannot be contemplated by any civilised society.) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ஈழத்தில் நிகழ்ந்த இனப்போராட்டத்துக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவருவாரா? கண்ணை மூடிக்கொண்டு இலங்கையரசாங்கம் வீசிய குண்டுகளெல்லாம் எங்கே வீழ்ந்து வெடித்தன என்பதை இவர் காணவில்லையா? தமிழர்களின் மீது ஏவப்பட்ட வான் தாக்குதல்களும், அரச வன்முறைகளும் நியாயமாகத் தெரிகின்ற இவருக்கு, நக்சலைட்டுகளின் மீது இரக்கம் கொப்பளிக்கக் காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

செஞ்சீனத்தின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தியானென்மென் சதுக்கத்துக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். மற்ற பத்திரிகைகள் சீனாவின் மனித உரிமைகளைக் கண்டித்தும், திபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மாசேதுங்கின் ஆட்சியின்போது கொல்லப்பட்ட பல இலட்சக் கணக்கான மக்களைக் குறித்தும் எழுதிக் கொண்டிருக்க, இந்து ராம் அவர்கள் செஞ்சீனத்தின் அருமைபெருமைகளை எழுதிக் குவித்தார். நக்சலைட்டுகளுக்கும் மாசேதுங்-சீனாவுக்குமிருக்கும் தொடர்புகள் வெள்ளிடைமலை. அதேபோல இலங்கைக்கும், சீனாவுக்கும் இருக்கும் உறவும் நமக்குத் தெரியும். இலங்கையரசாங்கம் அய்யா இராமுக்குத் தரும் ராஜாங்க மரியாதையும், விருதுகளும் நமக்குத் தெரியும். ஆக, அய்யா அவர்கள் செஞ்சீனத்தின் ஒரு சிறப்புப் பிரதிநிதியாக இந்தப் பிராந்தியத்திலே வலம் வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கிறது? அப்படியென்றால், இந்தியாவுக்குச் சீனாவினால் நிகழ்ந்துவரும் நெருக்கடிகள் (string of pearls முதலானவை) ராமுக்குத் தெரியாமல் இருக்குமா? இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் உட்பட, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பரவுதல் வரை எல்லா வகைகளிலும் இந்தியாவானது சீனாவுக்கு மண்டியிடவேண்டிய நிலை வரப்போகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது. இதெல்லாம் ராமுக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இந்தியாவின் நலன்களை சீனாவுக்கு முன்னர் பலியிடத் திட்டமிட்டிருக்கிறாரா? இந்தியர்கள் யோசிக்க வேண்டும். ஈழப் போரினால் பாகிஸ்தானும், சீனாவும் அதிகாரமிக்கவர்களாக ஆகியிருக்கிறார்களே தவிர, இந்தியா தனது மதிப்பை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இழந்திருக்கிறது. இலங்கையே இந்தியாவை மதிப்பதில்லையே. இந்த வெளியுறவுக் குளறுபடிக்கு யார் யாரெல்லாம் காரணமென்று பட்டியலிட்டால் அதில் இந்து ராம் இருப்பாரா மாட்டாரா?

இன்னொருபுறமாகப் பார்த்தால், அண்மையில் அமெரிக்காவின் சில நகர்வுகள் சீனாவுடன் இணக்கப்பாட்டினைக் கடைபிடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் Empire State Building கோபுரமானது சீனாவின் 60வது விழாவுக்கு சிவப்பும், தங்க நிறங்களாலுமான விளக்குகளால் சொலித்தது. இது அமெரிக்காவுக்குப் புதியது. வெளியே திபெத் ஆதரவாளர்கள் போராடினார்கள். நேற்று வானொலியில், மனித உரிமை என்பது அமெரிக்காவுக்கு, பொருளாதாரத்துக்கு அடுத்துதான் என்ற கருத்து உருவாகிவருகிறது என்று ஒருவர் பேசினார். அதனால்தான் சீனாவுடன் கைகோர்க்கத் துணிகிறது அமெரிக்கா. சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார பலத்துக்கு முன் அமெரிக்கா மோதலில் இறங்கத் துணியவில்லை என்பது உண்மை. ஆக, சீன-அமெரிக்கக் கூட்டுறவு எந்தெந்த வகைகளிலெல்லாம் தமிழர்களை அணுகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டணிக்கிடையில் இந்து ராம் போன்றவர்கள் என்ன செய்வார்கள், இலங்கை என்ன செய்யும் என்பதையும் யோசிக்க வேண்டும். இந்தக் குழப்பத்தில் இந்தியாவின் நலன்களை யார் யாரெல்லாம் சூறையாடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் தன்னைத் திறந்துவிட்டுவிட்டு, நாட்டின் சிறிய விகித மக்களை உயர்த்தி, ஏனையோரை நசுக்கியழிக்குமா என்பதும் கவலைக்குரியது. அப்போது அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவங்கள் இந்தியாவுக்குள் மாயமாகிப்போய், சீனாவின் போலி சோசலிசத்தின் முகமூடிகளையணிந்துகொண்டு இங்கே ஆட்சி செய்யப் போவது எது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா?

திசைநாயகம்: இலங்கை அரசின் தண்டனையும், அனைத்துலகத்தின் விருதுகளும்


J.S. திசைநாயகம் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இலங்கையில் தமிழர்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்கொடுமைகளைப் பற்றி எழுதியமைக்காக மார்ச் 2008ல் கைது செய்யப்பட்டார். சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமல் பயங்கரவாதத் தடை சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகளுடன் "விசாரிக்கப்பட்டார்". இனப் பாகுபாட்டை வளர்த்ததற்காகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு உதவியமைக்காகவும் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆகஸ்டு 31, 2009ல் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பாகி, தற்போது சிறையில் இருக்கிறார். தமிழர்களின் நியாயமான குறைகளைக் குறித்தும், அந்நாட்டு அரசாங்கத்தின் குற்றங்களைக் குறித்தும் துணிச்சலோடும், ஊடக நெறிகளுக்கு ஏற்பவும் எழுதியமைக்காகவே அவருக்கு இந்தத் தண்டனை. இதற்கும் வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த தண்டனைக்கும் அதிக வித்தியாசமில்லை. இந்தத் தண்டனையை எதிர்த்து அனைத்துலகப் பத்திரிகைகளும், ஊடக அமைப்புக்களும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றன.
"ஒடுக்கப்பட்ட ஊடகத்தின் சின்னம்" என்று ஒபாமாவினால் வர்ணிக்கப்பட்டவர் திசைநாயகம். தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி சர்வதேசத்தின் அதிருப்தியையும், புறக்கணிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இன்னொரு கோர முகமே திசைநாயகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை. இது எக்காலத்திலும் தமிழர்களுக்கான நியாயமான அரசியல், சமூக சுதந்திரத்தை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை என்பதை இன்னொரு முறை உறுதி செய்கிறது. இவ்வகையான உதாரணங்களைக் கொண்டு அனைத்துலக நாடுகள் இலங்கையைத் தனிமைப்படுத்த முனைகின்றன. இத்தகைய தனிமைப்படுத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் ஒரு விருது அறிவிப்பு.

"துணிச்சலான, நெறியான பத்திரிகையாளரு"க்கான விருதாகிய பீட்டர் மேக்லர் விருதினைப் (Peter Mackler Award for Courageous and Ethical Journalism) பெறும் முதலாவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திசைநாயகம். பீட்டர் மேக்லர் என்பவர் AFP செய்தி நிறுவனத்தில் கடமையாற்றியவர். அந்நிறுவனத்தின் ஆங்கிலச் செய்திப் பிரிவை உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவர். மேலும் போர்கள், தேர்தல்கள் போன்ற நிகழ்வுகளைக் குறித்த செய்திகளை வெளியிட்டவர். அவரது பெயரால் சென்ற ஆண்டில் Reporters Without Borders (US Branch) மற்றும் Global Media Forum ஆகியவற்றால் நிறுவப்பட்டிருக்கும் இவ்விருதினைப் பெறும் முதலாமவர் திசைநாயகம். அவர் சிறையிலிருப்பதால் அவரது மனைவி நேற்று அமெரிக்கத் தலைநகரில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். திசைநாயகத்துக்கு ஏற்கெனவே 2009ஆம் ஆண்டின் அனைத்துலக ஊடகச் சுதந்திர விருது (2009 International Press Freedom Award) வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் காலங்காலமாக நிலவிவரும் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில், இலங்கை அரசு விட்டெறியும் விருதுகளுக்கு நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் தரும் செய்திகளை கர்ம சிரத்தையுடன் அப்படியே வெட்டி ஒட்டி வெளியிடும் ஊடக தர்மகர்த்தாக்களுக்கு மத்தியில், மானத்தோடும், துணிச்சலோடும், நெறியோடும் வாழும் திசைநாயகம் போன்றவர்களைக் கைகூப்பி வணங்குகிறேன். அனைத்துலக அழுத்தங்களுக்குப் பணிந்து இலங்கை அரசு அவரை விடுதலை செய்யும் நாளை எதிர்நோக்குவோம்.