'அற்றம்' பெற்றோம்!

அற்றம் என்றால் சமயம், சோர்வு, வருத்தம், அவமானம், வறுமை, அழிவு என்பதாகத் தமிழ் அகராதி சொல்கிறது. பூக்களையும், இசைகளையும் இதழ்களின் பெயர்களாகக் கேட்ட காதுகளுக்கு இழப்பும் துயரும் சார்ந்த எதிரிடையான பெயர் ஒரு வித்தியாசம். சட்டென்று பதியும் முகப்பெழுத்துருவம். புலம்பெயர் வாழ்வு அனைவருக்கும் சிக்கலானது, இதில் யாரையும் தனித்து விடும் எண்ணமில்லை, பெண்ணியத்தை அறைகூவி விற்பதற்கல்ல, எழுத்தில் ஆர்வமுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை போன்ற கட்டியங்களுடன் வருகிறது அற்றம். டொராண்டோ வலைப்பதிவர் கூட்டத்தில் நான் சந்தித்த தான்யா, பிரதீபா ஆகியோருடன் கஜானி, கௌசலா ஆகியோரைக் கொண்ட குழுவினால் நடத்தப்படுகிறது.

சிறுமிகளும் பெண்களுமாய் 16 அஞ்சல் தலைப் படங்களை முன்னட்டையில் கொண்ட மே 2005 இதழை வாசித்து முடித்த போது ஒரு மனக்கனம். சிறுகதைகள் என்றாலே அண்மைய காலங்களில் பின்வாங்குக்குப் போய்விடுகிறேன். இந்த இதழிலும் அதைக் கடைசியாகத்தான் படித்தேன். ஆனால் நிருபாவின் 'ஒரு பழம் தப்பிச்சுண்ணு' கிறக்கந்தரும் ஒரு மொழியுடனும், ஆங்காங்கே அள்ளித் தெளித்த அடிகளுடனும், மென் நகைகளுடனும், பாரந்தரும் முடிவுடனும் பிடித்துப் போனது. நெடுநாட்களின்பின் ஒரு நல்ல கதையைப் படித்திருக்கிறேன். கண்மணியின் 'மண்ணில் நல்ல வண்ணம்' கதை ஆதாம் ஏவாளை இன்னொரு தரம் போய்ப் பார்க்கிறது, அவர்களின் உரையாடலைப் பெண்மொழியில் பதிகிறது. சி.டி.பி.சி வானொலியில் சில நேரங்களில் கேட்டிருக்கும் நேயர் அழைப்பினை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இதழில் ஆங்காங்கே கவிதைகள். ஆகர்ஷியா, ஆழியாள், தான்யா, சுகந்தி சுப்ரமணியத்தின் கவிதைகள். கண்ணீர் வேண்டாம் சகோதரி, இனூயிட், BLACK, நடன அரங்கேற்றம் என்று கட்டுரைகள்/விமர்சனங்கள்/திறனாய்வுகள். 'அட' என்றொரு பத்தி பெண் எழுத்தாளர்கள் தமக்குள் முரண்பட்டுக் கொள்வதை இயல்பு படுத்துகிறது. இன்னொரு பிடித்த பகுதி நூலறிமுகம். பச்சைத் தேவதை, ரத்த உறவு, தனிமையின் ஆயிரம் இறக்கைகள், புதிய கதைகள், ஏன் பெண்ணென்று, தொடரும் தவிப்பு ஆகிய புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகங்கள். வாசிக்க வேண்டுமென நினைத்தவை புதிய கதைகளும், தொடரும் தவிப்பும். 'ஓரினச் சேர்க்கையாளர்களைப் புரிந்து கொள்ளுதல்' என்றொரு உரையாடலைத் தொடங்கியிருக்கிறார் பொடிச்சி (ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் என்ன/யாரென்று தெரியவில்லை இச்சிறு மூளைக்கு). எனக்கென்னவோ 'ஓரின'ங்கற வார்த்தை இடிக்குது. ஆணும் பெண்ணும் மனித இனந்தானே. ஆண்பால், பெண்பால் மட்டுமே வெவ்வேறு என்பதால் 'தற்பால்' அப்படிங்கறதுதான் பொருத்தமாத் தெரியுது. கதையுரைத்தல் என்ற பகுதியில் அதீதா எழுதியிருக்கும் துணிவுமிக்க பெண்களை என் கிராமத்திலும் கண்டிருக்கிறேன். கடைசியா உங்க மூளைக்கு வேலை தந்தே ஆவோம் என்று இலக்கியப் புதிர் போடுகிறார்கள், கிசு கிசுக்களுக்கும் ஊர் வம்புகளுக்கும் உத்தரவாதம்! புலம் பெயர் வாழ்வில் அயலகத்தின் சமூக, அரசியற் கருத்துக்களோடும், கருத்துப் பதிவுகள் மற்றும் வெளிப்பாட்டு உத்திகளோடும் நாம் எவ்விதமெல்லாம் ஊடாடுகிறோம் என்பதையெல்லாம் அற்றம் சொல்லி வரும் என நம்புகிறேன்.

அற்றம் பெற விரும்புவோருக்கான குறிப்பு:
அற்றத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள attamm at gmail dot com

14 comments:

said...

சுந்தரவடிவேல், நீங்களும் டிசேதமிழனும் நல்ல அறிமுகத்தினை இச்சஞ்சிகை குறித்துத் தந்திருக்கின்றீர்கள். நன்றி.

said...

அறிமுகம் செய்தத்ற்கு மிக்க நன்றி.

Anonymous said...

அற்றம் என்றால் சமயம் மற்றும் பல எனக்கூறிவிட்டு., இழப்பும் துயரும் சார்ந்த எதிரிடையான பெயர் என அருமையாக கூறினீர்கள். பெண்ணியத்தை அறைகூவி விற்பதைக் கூட அதீத உணர்வு வெளிப்பாடெனக்கொள்ளலாம், அதிர்சிதரும் வகையில் எழுதி கவனம் கவர்தலே இன்றைய பெண் எழுத்துக்களின் சாபம்., அற்றம் வரமாக மாற்றுமா? (நம் சகோதரிகள் இருப்பதாலேயே இந்த எதிர்பார்ப்பு). இதழ் அறிமுகத்திற்கு நன்றி.

said...

(ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் என்ன/யாரென்று தெரியவில்லை இச்சிறு மூளைக்கு).
ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் யாரென்று தேடி கண்டுபிடித்தேன்: அது நான்தான்.:0
ஆப்ஸ்ரஸ்க்கா என்றால் என்ன? :-(


'தற்பால்' என்பதுதான் சரியான பிரயோகம் என்றால் அப்படியே மாற்றலாம்!

நல்ல அறிமுகம்.
என்னிடமிருக்கிற அற்றம் இதழில் இருக்கிற மின்னஞ்சல் முகவரி: attamm@gmail.com

said...

அப்புறம் ஒரு கொசுறுச் செய்தி; காற்றுவாக்கில் வந்தது:

நம்ம ஷோபாசக்தி கூட்டாளியுடன் சேர்ந்து 'அநிச்ச' என்றொரு இதழ் (அதுவும் இருமாத்திற்கொருமுறை!) கொண்டு வருகிறாறாரம்; முதல் இதழும் வந்துவிட்டது! 'அநிச்ச' 'அற்ற'த்திற்குப் போட்டியா வந்திருக்குமோ?!?!
;-)

said...

சபாஷ்! சரியான போட்டி!

said...

Sundar, Could you please check ur email (sundarappaa@yahoo)

appa!!

said...

அடடா, அற்றத்தில் இவ்வளவு விடயம் உள்ளதா? பார்க்க சிறு சஞ்சிகை போல இருந்திச்சே.
எனது சஞ்சிகையை என் நண்பனொருவன் திருடிவிடான்.

said...

//எனது சஞ்சிகையை என் நண்பனொருவன் திருடிவிடான்.//
சத்தியமாய் அது நானில்லை. கிஸோ மேலதிகமாய் ஒன்றிரண்டு 'அற்றம் 'பிரதிகள் என்வசம் இருக்கின்றன. ரொரண்ரோ வரும்போது ஞாபகப்படுத்தும். கொண்டுவந்து தாறன். 'இயற்கையை' மட்டும் இரசிக்காமல் இதுகளையும் அவ்வவ்போது வாசித்துப் பாரும் :-).

said...

எனக்கு வெறும் கேள்விக்குறி மட்டும் தானே தெரியுது? பணியிடத்தில் வீட்டில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டேன்... என்னவோ ஆகிவிட்டது உங்களின் இந்தப் பதிவுக்கு.

said...

ஒரு தப்பு நடந்து போச்சு! மேக் கணிணியிலேருந்து அற்றம் மின்னஞ்சலை அவசரமாய்ச் சரி செய்து வலையேற்றினேனா அது ஒரே ?????யாப் பதிஞ்சிருக்கு போல. செல்வராஜ் (நன்றி) சொல்லித்தான் கவனிச்சேன்! முந்தைய பதிவுக்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கலாம், சரியாய்ச் சேமிக்காததே இதற்குக் காரணம்!
நண்பர்களின் முன்னுகைக்கு நன்றி! விரிவாகப் பின்பு!

said...

நல்ல அறிமுகம். நீ எனக்கு புத்தகங்களை அனுப்பும் போது இதையும் அனுப்பு.

//'அற்றம்' பெற்றோம்! //

தலைப்பு கொஞ்சம் உதைக்குதே தம்பி! :)

said...

//தலைப்பு கொஞ்சம் உதைக்குதே தம்பி! :)//
இந்தத் தலைப்பே உதைச்சா அற்றம் எப்படியெல்லாம் உதைக்கும்னு பாத்துக்க:))
அப்ஸ்ரஸ்கா, இது என்ன, ஊட்டி ரஸ்க் மாதிரி ஒரு வகையான ரஸ்க் பிரியையா நீங்க? அல்லது அப்ஸ்ட்ராக்டையெல்லாம் ரஸ்க் மாதிரி விரும்பிச் சாப்பிடுவதால் இப்படியொரு பெயரா? என்னமோ போங்க!
டிசே, // மேலதிகமாய் ஒன்றிரண்டு 'அற்றம் 'பிரதிகள் என்வசம் இருக்கின்றன.// எங்கிட்ட இருந்த ஒன்றிரண்டு எங்கேயென்று இப்போ விளங்கிருச்சு:))

said...

எனக்கும் விளங்குது. நன்றி டீசே.