பழங்குடி மக்களைப் பற்றிய கட்டுரை ஒன்று

தமிழக வரலாறு என்றதும் மூவேந்தர்களோடும், விடுதலைப் போராட்டம் என்றால் மிகக் குறுகிய எண்ணிக்கையுள்ள அரசியல் தலைவர்கள், மன்னர்கள் என்பதோடும் நின்றுவிடுகிறது நம் கல்வி.
ச. பாலமுருகன் கீற்றில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில் (பழங்குடி மதிப்பீடுகள் நம்பிக்கைகள்) பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கையோடு அவர்கள் கொண்டிருந்த கொடுக்கல் வாங்கல் உறவுகள், தம் பகுதியின் மீதான ஆக்கிரமிப்பினை அவர்கள் எதிர்த்த வீரம், இந்திய விடுதலைப் போரில் அவர்கள்து பங்கு ஆகியவற்றை அழகாகத் தொகுத்துள்ளார். மேலும், பழங்குடியினருக்கும் அவர்களது வாழ்வாதாரமான மலை/காடுகளுக்கும் தற்போது பொதுமக்களாகிய நாமும், நாம் அங்கம் வகிக்கும் அரசாங்கமும் நிகழ்த்தும் இடர்களையும் காட்டியுள்ளார். நீங்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை. இவர்தான் சோளகர் தொட்டியை எழுதிய பாலமுருகனா என்று தெரியவில்லை. அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

சிலுவையில் தொங்கும் முயலும், முட்டையும்

இந்த வருடமும் ஈஸ்டர் வருகிறது! வழக்கம் போலவே முயலையும், முட்டையையும் கடைகளில் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பலூன் முயல், பஞ்சு முயல், துணி முயல், முட்டை முட்டாய், முட்டை ரொட்டி, முட்டைக்குள் முட்டாய் என்றும், டோரா முட்டை, ஸ்பைடர் மேன் முட்டை என்றும் பலவகையாக நீங்கள் பார்க்கலாம். இந்நாட்களில் ஏசுவை விட, புனித வெள்ளியைவிட அதிகமாகப் பேசப்படுவது ஈஸ்டர் கொண்டாட்டம், அப்போதைய துணிக்கடைத் தள்ளுபடிகள், பீர் கடை கொண்டாட்டங்கள் இவை பற்றித் தாம். ஒரு மனுசன், நீங்க யோசிக்கிறதுக்கு நாலு தத்துவத்தைச் சொல்லிட்டு, உங்ககிட்ட அதைச் சொன்னதுக்காக சிலுவையில தொங்கிப் போனாரே அதை நெனைக்கிறீங்களா, அல்லது அவரு மறுபடியும் வந்தாருன்னு கொண்டாட நெனைக்கிறீங்களா, அல்லது உங்களுக்கு சுகமும் துக்கமும் கொண்டாட்டாந்தான் என்ற பேரின்ப நிலையில இருக்கீங்களா? ஒன்னுமே புரியலையேப்பா. அது சரி, என்னத்துக்கு இத்தனை முட்டை? முட்டைக்கும் ஈஸ்டருக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை 40 நாள் விரதமிருந்தவங்கள்லாம் விரதம் முடிக்கிறப்ப தெம்புக்காக முட்டை சாப்பிடுவாங்களான்னு யோசிச்சேன். இருக்கலாம். ஒருத்தரு சொன்னாரு, முட்டை என்பது உயிர்ப்பின் அடையாளம். அதுக்குள்ளேருந்துதான் எல்லாம் வருது. அதே மாதிரி ஏசுவும் மறுபடியும் வருவார். சரி, இருக்கட்டும், முயல்? அதுவா, அது வந்து ஸ்பிரிங்க் வருதுல்ல, அது. துள்ளித் துள்ளிக் குதிக்குதுல்ல, அதான். ரொம்பச் சரி. உங்க கடைகளையும், 50% சிறப்புத் தள்ளுபடி விளம்பரங்களையும் பாத்துட்டு, உங்களுக்காகத் தொங்கின ஆளோட ஆத்மா சாந்தியடைஞ்சாச் சரிதான்.

படம்: எல்லாப் பெற்றோர்களும் தலா 12 பிளாஸ்டிக் முட்டைகளை வாங்கி அதற்குள் பரிசை (மிட்டாய் என்று அர்த்தம்) வைத்துப் பள்ளிக்கூடத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அங்கே ஆசிரியர்கள் அதை 'ஒளித்து' வைத்துவிட்டுப் பிள்ளைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வார்கள். நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு எண்ணைச் சொல்லிவிட்டு அந்த எண் போட்டிருக்கும் முட்டையைத்தான் அந்தப் பிள்ளை கண்டுபிடிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஒவ்வொரு எண்ணையும் 12 முட்டைகளின் மேல்தான் போடுவார்கள். இதனால் எல்லோருக்கும் ஒரே எண்ணிக்கையுள்ள முட்டைதான் (12) கிடைக்கும். தெறமை இருக்க புள்ள பொறுக்கிக்கன்னு விட மாட்டாங்க. ஏன்னா சில பிள்ளைகள் பொறந்ததுலேருந்து முட்டை பொறுக்கிக்கிட்டே இருக்கும், சிலதுகளுக்கு முட்டைன்னா என்னன்னே தெரியாது, அதை எங்க ஒளிச்சு வைப்பாங்கன்னே தெரியாது. அப்படி இருக்கப்ப “இந்தா புள்ளைகளா, இங்கின 240 முட்டை இருக்கு, தகுதியும் தெறமையும் இருக்க புள்ளைக போயி பொறக்கிக்கங்க”ன்னா வகுப்பு வெளங்குமா? அதுக்குத்தான் சமமாக் குடுக்கணும்கறது. படம் மாசிலன் எடுத்தது.

கறுப்பும் வெளுப்பும்

இந்த ஒளிப்படத்தைப் பாருங்கள். 


குற்றவாளி என்று கருதப்படும் ஆள் ஓடுகிறார். அவரைத் துரத்துகிறது போலீஸ் கார். அவர் தப்புவதற்காக சாலையோரத்துக்கு ஓடுவதற்குள் அவரை அடித்துத் தூக்கியெறிகிறது கார். சற்றைக்குப் பின் அவர் மேல் காரை மோதியதைப் பெருமையோடு நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார் காவலர். அடிபட்டது கறுப்பர். காவலர் வெள்ளையர். இது நேற்று வெளிவந்திருக்கும் செய்தி. அடிச்சது சரிதான் என்று சிலர். என்ன இருந்தாலும் இப்படியா என்று சிலர். தெரியாம அடிச்சுட்டாரு என்றொரு போலீஸ்காரர். இப்படி அடிச்சதோட இல்லாம அதப் பத்தித் தம்பட்டம் அடிச்சுக்குற போலீஸ் எங்களுக்கு வேணாம் அப்படின்னாங்க கூட வேலை செய்யுற அம்மா. 


கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதுல இயக்குனர் மறைந்திருந்து படம் பிடிக்கிறார். சில பதின்ம வயதுப் பையன்களைக் கொண்டு அங்கே நிறுத்தியிருக்கும் கார் ஒன்றின் மீது (அவர்களது கார்தான்) பெயிண்டால் கிறுக்கவும், ஏறிக் குதிக்கவும் சொல்கிறார். அது வழியே நடந்து போகிறவர்கள் என்ன மாதிரி நடந்துகொள்கிறார்கள், யாரேனும் போலீஸைக் கூப்பிடுகிறார்களா, அந்தப் பையன்களைக் கண்டிக்கிறார்களா என்று பார்க்கிறார். முக்கியமானது - அந்தச் சோதனையை வெள்ளைக்காரப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும், கறுப்புப் பையன்களைக் கொண்ட ஒரு குழுவைக் கொண்டும் நிகழ்த்துகிறார். வெள்ளைக்காரப் பிள்ளைகள் அட்டகாசம் செய்தபோது தட்டிக் கேட்டவர்கள் ஒன்றோ என்னவோ. 911க்கு ஒருத்தரோ இரண்டு பேரோதான் கூப்பிட்டார்கள். ஆனால் அதையே கறுப்புப் பையன்கள் செய்யும் போது 911 அனல் பறந்தது, யார் யாரோ வந்து கேட்கிறார்கள். இது எதைக் காட்டுது? கறுப்பர்கள் என்றாலே தப்பு செய்பவர்கள், கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதாக நம்மிடையே வளர்க்கப்பட்டிருக்கும் மனோநிலையைத்தான்.


தென் கரோலினாவில் கறுப்பர்கள் நிறைய. மேற்கண்ட ஒளிப்படம் சில அதிர்வுகளைப் பரப்பும். நேத்து ராத்திரி ஒபாமா, நிறப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். உரையாடலையாச்சும் தொடங்குவாங்க. 


சில புழுக்களை ராணியாக்குவது எப்படி?

தேனீக்களின் வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். சமூக ஒழுங்கு மட்டுமில்லை, புதுப்புது உயிரியல் விளக்கங்களையும் தேனீக்களிடமிருந்து பெறலாம். அதுமாதிரியாக வந்திருப்பதுதான் இந்தப் புதுக் கதை. உங்களுக்கு ராயல் ஜெல்லின்னா என்னன்னு தெரியுமா? வளர்ந்த தேனீக்களின் தலைப்பகுதியில் (உமிழ்நீர் சுரப்பிகளுக்கருகில்) ராயல் ஜெல்லி சுரக்கிறது. அதுவே தேனீக்களின் புழுப் பருவத்தில் முக்கியமான உணவு. எல்லாப் புழுக்களும் ஒன்றுதான். ஒரே ராணித் தேனீயால் இடப்பட்ட முட்டையிலிருந்து வந்தவைதான். எல்லாப் புழுக்களுக்கும் சில நாட்களுக்கு ராயல் ஜெல்லி கிடைக்கும். ஆனால் தொடர்ந்து அதிக அளவில் ராயல் ஜெல்லி மட்டுமே புகட்டப்படும் புழுக்கள் மட்டுமே பின்னாளில் ராணித் தேனீயாகின்றன. புரிந்துகொள்ள வேண்டிய 1) ராயல் ஜெல்லியைத் தாராளமாகச் சாப்பிடும் புழுக்கள், இனப்பெருக்கத் திறனும், நீண்ட ஆயுளும், பெரிய உருவமும் கொண்ட ராணித் தேனீக்களாகின்றன; அதே வேளையில் ராயல் ஜெல்லி கொஞ்சூண்டு கிடைத்த புழுக்கள் சிறியதான, குறைந்த ஆயுளைக் கொண்ட, மலட்டுத்தன்மை கொண்ட வேலைக்காரத் தேனீக்களாகின்றன. அப்படின்னா அந்த ராயல் ஜெல்லியில என்னமோ இருக்கு. சரி அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

நம் உடம்பு மரபலகுகளின் (ஜீன்கள்) வேலைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது ஒரு மரபலகு எல்லா நேரங்களிலும் எல்லாத் திசுக்களிலும் இயங்கிக் கொண்டு இருப்பதில்லை (இயங்குதல் என்பது அதற்கான புரதத்தை உண்டாக்குதல் எனக் கொள்க). சில நேரம் அமைதியா இருக்கும். அந்த அமைதிக்குக் காரணம் அந்த மரபலகின் மூலக்கூறுகளில் (டி.என்.ஏ) ஏற்படும் ஒரு சின்ன வேதியியல் மாற்றம், Methyl ஏற்றம். (சரக்கு அடிச்சா அதுல இருக்கது Ethyl alcohol. எத்திலை விடக் கொஞ்சம் சிறியது மெத்தில். ஆனா நீங்க சரக்கடிக்கிறதுக்கும் இதுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கான்னு கேக்கப்படாது. இல்லன்னு நானும் சொல்ல முடியாது!). மெத்திலேற்றம் நடந்த மரபலகு அமைதியா இருக்கும். அமைதியா இருந்தா அது உண்டாக்க வேண்டிய புரதம் உண்டாகாது. அந்தப் புரதம் இல்லன்னா அந்த செல்லோட வேலைப்பாடு மாறும். ஒன்ன மாதிரி நாலு பேரு இருந்தா வேலை நடந்துடும் அப்படின்னு நாம சொல்றது இல்லையா. அதுமாதிரிதான், ஒரு நாலு புரதங்கள் சேர்ந்தா, அல்லது இல்லாமப் போனா, உடம்பே மாறிப் போயிடும். இந்த மெத்திலேற்றத்தைச் செய்யும் ஒரு நொதிக்குப் பேர் DNMT3. சில மரபலகுகளை DNMT3 மெத்திலேற்றம் செய்து வைக்கும்போது அந்த மரபலகு அமைதியாக இருக்கிறது. இப்போ நீங்க DNMT3 ஐ லபக்குன்னு புடுங்கி எறிஞ்சுர்ரீங்க, அப்போ என்னாகும், எந்தெந்த மரபலகுகளை DNMT3 அமுக்கி வைத்திருந்ததோ அதெல்லாம், மடை திறந்த வெள்ளமாகப் பாயும். அந்தப் புரதங்களெல்லாம் அதிகமாக உருவாகி, செல்லை, உடம்பை மாற்றும். புரிந்துகொள்ள வேண்டிய 2) DNMT3 ஒரு விசை. அதை இயக்குவதன் மூலம் முக்கியமான மரபலகுகளின் வேலைகளை இயக்கலாம். சரி, இதுக்கும் தேனீக்கும் என்ன சம்பந்தம்? அதான் அடுத்தது.

தேனீக்களின் புழுக்கள்ல இருக்க DNMT3 ஐ நீக்கிட்டா அந்தப் புழுக்கள் எல்லாம் ராணித்தேனீயா மாறுது. பூம்!! ராயல் ஜெல்லி புகட்டாமலேயே இது நடக்குது. இது எப்படி நடக்குது? DNMT3 இல்லாத போது புழுக்களில் இருக்கும் 'இராணித் தேனீயாக்கும்' புரதங்கள் தங்குதடையின்றி உருவாகின்றன. சாதாரணப் புழுக்களில் ராயல் ஜெல்லியை நன்றாகப் புகட்டினால்தான் இப்படியான ஒரு நிலை ஏற்படும். அப்படியென்றால், ராயல் ஜெல்லி எப்படியோ ஒரு வழியாக DNMT3 மூலம் ஏற்படும் மெத்திலேற்றத்தைக் குறைத்து ராணியாவதற்குரிய வழியைச் செய்கிறது. புரிந்துகொள்ள வேண்டிய 3) தேன் புழுக்களின் உடலிலிருந்து DNMT3 ஐக் கழற்றிவிட்டால் அத்தனையும் ராணியாகிவிடும்.

அதுனால என்னா இப்ப?
1) நாம் இயற்கையைப் படுத்தும் பாட்டில் உலகம் முழுக்கத் தேனீக்கள் குறைந்துகொண்டே வருகின்றன. ராணித் தேனீக்களை நிறைய உருவாக்கினால் கூடுகளை உயிர்ப்பித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
2) ராயல் ஜெல்லியை ஏற்கெனவே புட்டியில அடைச்சு வச்சு, நீடித்த வலிமை, குன்றாத இளமை, அழகு அப்படின்னு கந்தர் சஷ்டி கவசம் பாடினா கிடைக்கக் கூடிய அத்தனை நன்மைகளும் ராயல் ஜெல்லியால கிடைக்கும் அப்படின்னு ஒரு இணையத்துல கடை கட்டிக்கிட்டுத் திரியிறாங்க்ய. அவங்களுக்கு லாபம் பார்க்க இன்னொரு 'அறிவியல் கண்டுபிடிப்பு.'
3) தேனீக்களுக்கு என்ன? DNMT3 இன்னும் எதுக்குத் தேவைன்னு தெரியாத நிலையில் அதைப் புடுங்கி எறியுறது தேனீக்களுக்கு ஆபத்தாகப் போகலாம். இன்னொரு மரபுமாற்றம் செய்யப்பட்ட வீரிய கொடுக்கால் இப்போதிருக்கும் தேனீக்கள் கொட்டப்பட்டு விரட்டப்படப் போகின்றனவா?

சைக்கிள் பாதை

வீட்டுலேருந்து வேலைக்கு 16 மைல். அந்தக் கார் நெரிசல்ல நகர்ந்து நகர்ந்து போறதுக்குள்ள மனுசனுக்கு சீவனத்துப் போயிரும். அப்படி அல்லாடுனப்பதான் புதுப் பேருந்து, எக்ஸ்பிரசாக்கும், ஒன்ன விட்டாங்ய. பெட்ரோல் விக்கிற விலையில மாசத்துக்கு நூத்தம்பது டாலர் பெட்ரோலுக்கே போகுதேன்னு தாடையைச் சொறிஞ்ச வேலையில இது நல்ல சேதிதானே. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்க சூப்பர் வால்மார்ட்டுலேருந்து கிளம்புது. சுமார் 40 நிமிசத்துல வேலைக்கு வந்துடலாம். போக ஆரம்பிச்சேன். படிக்கலாம், தூங்கலாம், நாம பஸ்சை ஓட்ட வேண்டியதில்லை. பஸ் புடிச்சிருச்சு.

இந்த ஊரு பஸ்ல எல்லாம் முன்னாடி, வெளிய, ஒரு சின்ன rack இருக்கு. அதுல ரெண்டு சைக்கிள் வச்சுக்கலாம். போற எடத்துக்கெல்லாம் சைக்கிளையும் எடுத்துக்கிட்டுப் போகலாம். அதைப் பார்த்ததும் எனக்கும் சைக்கிள் ஆசை வந்துடுச்சு. ஆனா பிரச்சினை வீட்டுலேருந்து வால் மார்ட்டுக்கு வர்றது 55 மைல் வேகப் பெரிய ரோடுதான். அதுல சைக்கிள் பாதையும் இல்ல. ஒரு ஞாயித்துக் கெழம சைக்கிளை எடுத்துக்கிட்டு அது வழியாத் திரிஞ்சப்ப ஒரு சின்ன உள் ரோடு இருக்கதைக் கண்டுபிடிச்சேன். அது ஒரு காடு மாதிரி இருக்கும். Campground இருக்க இடம். ஒரு அழகான சின்ன ஏரி, அல்லது பெரிய குளம். நிறைய மரங்கள். வளைந்து வளைந்து போகும் பாதை. காரோடு முட்டிக்கத் தேவையில்லாம சின்ன நடை/சைக்கிள் பாதை. ஆகா. கிளம்பிட்டேன். இப்பதான் கொஞ்சம் குளிர் குறைஞ்சுக்கிட்டு வருது.

நேத்து நல்ல வெய்யில். சைக்கிள்லதான் வந்தேன். ஊர்ல இருக்கும்போது, விடுமுறைக்குப் போகும்போதோ தங்கமணியுடன் சேர்ந்துகொண்டு பெரியாறு, கருப்பர்கோயில் அப்படின்னு சைக்கிள்ல திரிவோம். சைக்கிள்ல போயிக்கிட்டே அவனைக் கூப்பிட்டேன். இருந்தான். கொஞ்ச நேரம் கதையடிச்சோம். அப்புறம் அமெரிக்கக் குடிநீர்ல மருந்து கலந்திருக்காம்னு பேச்சு வந்துச்சு. செயற்கை மருந்துகள். மண்ணுயிரிகளால் சாதாரணமாக அழிக்கப் பட முடியாத மருந்துகள். உங்க உடம்புல ரொம்ப நேரம் தங்கி வேலை செய்யணும்னே திடமாகச் செய்யப்பட்ட மருந்துகள். திடமாகவே மண்ணிலும், தண்ணீரிலும் தங்கிவிடுகின்றன. மறுபடியும் மனிதனுக்கே வருகின்றது என்று பதறுகிறார்கள். யாரு அப்படியாபட்ட மருந்துகளைக் கண்டுபுடிக்கச் சொல்லுறது? இயற்கை மருந்துகளைப் பற்றிய அறிவை நாம் சரிவரப் பயன்படுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் நம்ம ஊர்லயே மஞ்சளிலிருந்து கிடைக்கும் curcumin என்ற மருந்தை, கூடுதல் செயற்பாட்டுக்காக வேதிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் சாதாரணமாக மட்கிப் போகக் கூடிய இயற்கை மருந்துப் பொருட்களை ப்ளாஸ்டிக் மாதிரி ஆக்கி உடம்பையும், வெளியையும் மாசுபடுத்துகின்றன. இதில் இந்த மருந்துக் கம்பெனிகளின் அராஜகம் தாங்க முடியாதது. இதெல்லாம் மாற வேண்டுமானால் மக்களின் உணவு முறையில், இயற்கை சார்ந்த உணவாக, வாழும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதை அமெரிக்கா விரும்பாது. இப்படியாக வளர்ந்த பேச்சு கீற்றின் பக்கம் திரும்பியது. யமுனா ராஜேந்திரன் சினிமா விமர்சனத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் சினிமாவின் விமர்சகர்கள், சினிமாவைப் பற்றிய இலக்கியப் படைப்பாளிகள் ஆகியோரை ஒரு வாங்கு வாங்கியிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உபபாண்டவம் படித்து முடித்து எஸ்.ராமகிருஷ்ணன் சுழற்றிவிட்டிருந்த பரிசலில் மிதந்துகொண்டிருந்தேன். சினிமா, மற்றும் சினிமா அரசியல் குறித்து எஸ்.ராவை யமுனா போட்ட போட்டில் பரிசல் ஆட்டம் கண்டுபோச்சு.

அ! வீடு வந்துடுச்சு. சைக்கிளை வெளியே சுவரோரம் சாய்த்துவிட்டு (ஏன்னா ஸ்டாண்டு இல்ல பாருங்க) வீட்டுக்குள்ள போனேன். ஒரு சிங்கம் பாய்ந்து வந்தது. ஆமா, அவங்க பள்ளிக்கூடத்துல இன்னக்கி சர்க்கஸாம். இவர்தான் சிங்கமாம். மூஞ்சியில அப்பின சாயத்தோட அப்பாகிட்ட காட்டுறதுக்காக நிக்கிறார். இனிமே பேச்செல்லாம் வேற இடங்களுக்குப் பறந்து போகும்.