செம்மஞ்சள் சரக்கு

ஒடம்பு நாஞ் சொல்றதக் கேக்க மாட்டேங்குது. சோம்பேறித்தனம் கூடிப்போச்சு. அதுவா நானான்னு காலையில ஒரு முடிவா எந்திரிச்சு நிலைமிதிவண்டியைச் சுத்துனேன். பிபிசி தமிழோசை கேட்டுக்கிட்டே. கடைசியில் வந்த அனைவருக்கும் அறிவியலிலிருந்து என்னைத் துணுக்குற வைத்தது ஒரு துணுக்கு. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் படித்தது இது:

வியட்நாமியப் போரின் போது 1961லிருந்து 1971 வரைக்கும் அமெரிக்கா வியட்நாமின் மீது ஒரு வேதிப்பொருளைத் தெளித்தது. கொரில்லாப் போராளிகள் காடுகளுக்குள் ஒளிந்திருந்து தாக்கியதால் அடர்ந்த காடுகளின் இலைகளை அழிப்பதற்காகத் தெளிக்கப் பட்டது இது. இது செம்மஞ்சள் நிறமடித்த உலோகப் பீப்பாய்களில் இருந்ததால் செம்மஞ்சள் சரக்கு (Agent orange) என்றழைக்கப் பட்டது. இது சுமார் 72 மில்லியன் லிட்டர்கள் வியட்நாமில் தெளிக்கப் பட்டது. இதில் 170 கிலோ அளவுக்கு டயாக்ஸின் (dioxin) என்ற நச்சு இருந்திருக்கும்.

டயாக்ஸின் புற்று நோய்கள் உட்பட பல்விதமான கேடுகளை உண்டாக்கும் ஒரு நச்சு. போர் முடிந்து 30 வருடங்களாகியும் நீக்கப்படாத வெடிகுண்டுகள் ஒருபுறமிருக்க, மண், மரம், தண்ணீர் என்று உணவுச்சங்கிலியில் கலந்திருக்கும் இந்த நச்சு, இருக்கும் மக்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இதே நச்சினால் தாமும் பாதிக்கப் பட்டிருப்பதாக வியட்நாமில் போர் புரிந்த முன்னாள் அமெரிக்கப் போர் வீரர்களும் அரசிடம் ஏற்கெனவே முறையிட்டிருக்கிறார்கள். இதைத் தயாரித்த டவ் (Dow) கெமிக்கல்ஸ் எல்லா விபரீதங்களையும் தெரிந்தே இதைச் செய்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

நான் பல்கலைக்கு வரும் வழியில் முன்னாள் போர் வீரர்களுக்கான மருத்துவமனையொன்று இருக்கிறது. தினமும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் குடாப் போர் நோய்க்குறி (gulf war syndrome), மனோவியல் பாதிப்புகள் என்றெல்லாம் யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. இன்றைக்கு வரும்போது செம்மஞ்சள் சரக்கையும் நினைத்துக் கொண்டேன்!

24 comments:

said...

அப்படின்னா அப்பவே(61 ல்) கெமிக்கல் வெப்பன்ஸ் உபயோகப்படுத்திருக்காங்க. எழவெடுத்தவனுங்க.

said...

அமெரிக்கா செய்யும் அநியாயத்தை விட்டு விட்டு, என் சந்தேகத்தைத் தீத்து வையுங்க.

//நிலைமிதிவண்டி\\
என்ன இது?

said...

//நிலைமிதிவண்டி\\

அம்மணி! அது ஜிம்-மில் இருக்கும் ஸ்டாண்டு போட்ட சைக்கிள்-வண்டி !!

said...

ஆ அப்பிடி சுத்த தமிழில சொன்னாப் புரிஞ்சிட்டுப் போறன்.
அம்மணி!????

said...

stationary bike ங்க!

said...

/இது செம்மஞ்சள் நிறமடித்த உலோகப் பீப்பாய்களில் இருந்ததால் செம்மஞ்சள் சரக்கு (Agent orange) என்றழைக்கப் பட்டது./
சுந்தரவடிவேல், லூயிஸியானா, மிஸிஸிப்பி, அலபாமா மாநிலங்களிலே இந்த வியட்நாம் போர் காலத்து மாசு வேதியலாயுதங்கள் மூடித் தாழ்க்கும் இடங்களாப் பயன்படுவதையிட்டு இன்னமும் சின்னச் சின்ன சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அவை பெரிதும் வெளியே பேசப்படுவதில்லை. இதிலே இனஞ்சார் நச்சுத்தன்மை (racial toxicity) உம் ஒரு பெரிய விடயம். இது தனியே இப்படியான செம்மஞ்சட்சரக்குகளாலே மட்டுமல்ல, மருந்து தொடக்கம் வேறுபல வேதியல் உபவிளைவுகளினான உபாதையுங்கூட. உலூஸியானாவிலே நியூ ஓர்லியன்ஸுக்கும் மாநிலத்தலைநகர், பட்டன் உரூச்சுக்குமிடையே இருக்கும் இப்படியான தொழிற்சாலைப்பிரதேச நெடுஞ்சாலையை, Cancer alley என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், இதிலே பாதிக்கப்படுகின்றவர்களைப் பார்த்தால், கறுப்பினத்தவர்களும் வருவாய் குறைந்தவர்களுமே அதிகம். அப்படியாகத்தான் இடம் பார்த்துச் செயல் நடக்கின்றன. ஆனால், மூன்றாம் உலகநாடுகளும் ஏன் இந்தியா சீனா போன்ற தொழில்நுட்பத்தின் எதிர்காலமெனச் சொல்லப்படும் நாடுகளுங்கூட, இதே மாதிரியான அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகூடங்களாகச் சத்தமின்றி மாறிவருகின்றன. மற்றும்படி, அமெரிக்காவிலே, ஹட்சன் ஆற்றின் படுக்கை வண்டலிலே dioxin தொடக்கம் பல குளோரினேற்றப்பட்ட நச்சுக்கள் விதைக்கப்பட்டிருந்தன. ஆனால், அமெரிக்காவின் Superfund திட்டத்தின்கீழே பெருமளவிலே இவையெல்லாம் நீக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், டயோக்ஸின் நச்சு அண்மையிலே பெரிமளவு பேசப்பட்டது தனிமனிதர் ஒருவருக்காக; உக்ரேனினின் விக்ரர் உயூசெங்கோவிற்கு ஊட்டப்பட்டிருக்கலாமென்பதற்காக.... எத்தனையோ மனிதர்கள் பிற இடங்களிலே சத்தமின்றி இறந்து கொண்டிருக்கின்றார்கள் :-(

said...

//கெமிக்கல் வெப்பன்ஸ்//
ஓம்! ஆனா அதுக்குப் பேரு அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்க, அது சும்மா ஒரு பயிர்க்கொல்லி, இல்லன்னா செம்மஞ்சள் சரக்கு!

said...

பெயரிலி, உங்கள் மேலதிக விபரங்களுக்கு நன்றி. பாரம்!

said...

சுந்தரவடிவேல்
நேற்றுத்தான் ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன். அதில் வேதியியல், ரேடியோ கதிர்கள், மற்றும் உயிரியல் கிருமிகள் இவற்றின் மூலம் உள்ல அபாயங்களையும் அதை தடுப்பது பற்றியும் கலந்துரையாடிக்கொண்டிருந்தோம். செம்மஞ்சள் பற்றி விரிவாக எழுத் இருக்கிறேன்.BT தடுப்பது பற்றி பயிற்சியும் mock exceciseம் முடித்தகி இப்போது WMD பற்றி கூட்டங்கள்.
ஆச்சரியப்பட்ட முறையில் இந்த கூட்டதில் கிடைத்த ஒரு தகவல்: முதன்முதலில் வேதியியல் கருவிகளை (chemical weapons)பயன் படுத்தியது இந்தியா.அதுவும் சீனாவிற்கு எதிராக என்று. அமெரிக்கர்கள் போருக்கு போகும் முன் இதற்கான antidoteஎடுத்திக்கொண்டதாகவும், எடுத்துக்கொள்ளாத சிலரை கட்டுபாடுகளை மீறியதாகவும் சொல்லி தண்டித்து இருக்கிறார்கள்.நன்றி

said...

எல்லோமே ரொம்ப சரிதான்.

ஒன்றே ஒன்று பிடிபடவில்லை.

எழவெடுத்தவன்கள் என்கிறார் திருவாளர் கார்த்திக்ராமாஸ்.

ஏனய்யா இந்த எழவெடுத்த நாட்டில்
குப்பை கொட்டணும்!! நாளைக்கே மூட்டையை கட்டிக் கொண்டு நீங்கள்
இந்தியாவோ இலங்கையோ போக
வேண்டியதுதானே..?

நாங்கள் எழவெடுக்கிறோம் அல்லது எழவாக போகிறோம்..நீங்கள் இடத்தை
காலி பண்ணுங்க :((

இந்த நாட்டின் வெள்ளி வேண்டும்.
படிப்பு வேண்டும்..வாய்ப்புகள் வேண்டும்,, பொருளாதார சுதந்திரம் நிச்சயம் வேண்டும்..

ஆனால் எழவு என்று வரும்போது
மட்டும்,மூக்கை பிடித்துக் கொண்டு
எல்லைக்கு அப்பால் போய்விடுவீர்கள்..


பெயரிலி: நீங்கள் சொல்லியுள்ள லுயிசியானா செய்தி பற்றி சுட்டிகள் இருந்தால் தரவும்.
==
வாசன்
அல்புகர்க்கி,நியு மெக்சிக்கொ
அமேரிக்கா

said...

வாசன் தங்கள் கருத்துத்துடன் ஒத்துப் போக முடியவில்லை. நாடு பிடித்திருக்கலாம். அங்கு வாழும் மக்களில் பலரைப் பிடித்திருக்கலாம். நாம் வேலை செய்யும் நிறுவனம் அதன் அதிபர்களைப் பிடித்திருக்கலாம். அதற்காக அரசாங்கத்தையும் அது செய்யும் அட்டூழியத்தையும் பிடிக்க வேணுமா என்ன. அமெரிக்காவைத் தூற்றும் வகையில் அதன் அரசியல் நடத்தை இருந்தால் அதனைத் தூற்றுவது தவறில்லை. அதைத்தான் கார்த்தியும் குறிப்பிட்டிருக்கின்றார். (கார்த்திக்கு எனது வக்காளத்து)

said...

வாசன்,
இணையத்திலே தேடுவேன். விரைவிலே இங்கே இணைக்கிறேன்.

said...

கறுப்பி நன்றி.
வாசன் பொதுவில் இந்த வார்த்தை எரிச்சலூட்டக்கூடியதுதான். தவறான தொனி இருந்தால் மன்னிக்கவும்.ராணுவம் என் கையில் இருந்தால் அநியாங்களுக்கு எதிராக நிச்சயம் ஏதாவது செய்வேன். இந்திய ராணுவமோ/அமெரிக்க ராணுவமோ / இலங்கையும் கூடத்தான். என் செய்ய. மனதில் பட்ட எரிச்சலைத்தான் எழுதினேன். உங்களைப்போலதான். :P
தேடியும் கிடைக்காத WMD க்காக ஒரு போரையே நடத்திய அமெரிக்கா -லேயே 'செம்மஞ்சள் சரக்கை" உபயோகித்தது என்று தெரிந்ததில் வந்த எரிச்சல்தான்.

said...

//அரசாங்கத்தையும் அது செய்யும் அட்டூழியத்தையும் பிடிக்க வேணுமா என்ன.//
அதேதான் கறுப்பி.

said...

கார்த்திக்கின் வாதம் சரியென்றால் அவரது ஒரு வார்த்தை சற்றுக் கடுமையாகிப் போய்விட்டது. (கார்த்திக்கின் குணத்தை அறிந்தவர்களுக்கு இதில் இருக்கும் 'தீமையிலாத சொலல்' புரியும்). அவர் வார்த்தைக்கு வாசனின் கோபம் சரியென்றால் வாசன் அமெரிக்காவிலிருப்பவர்கள் அமெரிக்காவை விமர்சிக்கவே கூடாது என்று சொல்கிறாரா என்று புரியவில்லை (அவர் அப்படிச் சொல்பவர் என்று நான் நினைக்கவில்லை). என்னைப் பொறுத்த வரை இது நேற்று வரை எனக்கு அதிகம் தெரியாத ஒரு செய்தி. இன்றைக்குத் தெரிந்து கொண்டிருக்கிறேன், அதை என்னைப் போன்றவர்களுக்காகப் பகிர்வது அவசியம் எனக் கருதினேன். அது அமெரிக்காவானாலென்ன, இந்தியாவானாலென்ன!

said...

வாசனுக்குப் போட்ட பின்னூட்டம் கரையேறமாட்டேன் என்று நின்றதால், அறைகுறையாகப் போட்டிருக்கிறேன்

said...

பெயரிலி, அறை?குறைக்கான சுட்டியிலே அடைப்பலகைதான் தெரிகிறது! தமிழ்மணத்திலிருந்து போனாலும் அப்படியே. அங்கு மறுமொழியும் இட வாய்க்கலை.

said...

சுந்தரவடிவேல், இப்போது பாருங்கள். வேலை செய்கிறதா என்று.
http://wandererwaves.blogspot.com/2005/05/3.html

said...

/அறைகுறையாகப் போட்டிருக்கிறேன் /
இப்போதுதான் வாசித்தேன். எனக்கு வேலை செய்கிறதே

said...

சுந்தரவடிவேல்:

கருத்து சுதந்திரம் அமேரிக்காவின் ஆணிவேர்களில் ஒன்றல்லவா...ஆகவே கா.ரா சொன்ன விதத்தில் மட்டும்தான் எனக்கு
குறை.பொதுவாக அமேரிக்கா என்றால் மட்டும் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.கா.ராமாஸ் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற மாதிரி
சொல்லிய ஒரு வரி கருத்து எனது கடைசி நரம்பை கிள்ளிவிட்டது.

எத்தனையோ அற்புதமான விடயங்கள் இங்கு உள்ளன.நேரம் கிடைக்கும் போது,தமிழில் மேலும் கோர்வையாக எழுதக் கற்றுக் கொண்டு என்றாவது அவை பற்றி எழுத பார்ப்பேன்.

said...

/எத்தனையோ அற்புதமான விடயங்கள் இங்கு உள்ளன/
வாசன், நிச்சயமாக நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அமெரிக்காவும் எல்லா நாடுகளையும்போல ஒருவருக்குப் பிடித்தமான விடயங்களையும் பிடியாத விடயங்களையும் கொண்டிருக்கின்றன. நான் உட்பட பலர் பிடிக்காததைச் (குறிப்பாக, அமெரிக்காவின் வெளிவிவகாரக்கொள்கையையும் அதனோடு தொடர்பான இரட்டைநிலைப்பாட்டினையும்) சுட்டும்போது, நல்லதைச் சிலாகிக்க மறந்துவிடுகின்றோம். அதுவும் ஓரளவிலே தவறுதான்.

said...

"If you are not with US, you are against US" - என்று சொன்ன அமெரிக்காவை தாக்கிப்பேசுவது அவ்வளவு சரியாக எடுத்துக் கொள்ளப்படுமோ?

said...

நல்ல சரக்கு (பதிவு) தம்பி!

said...

""இதே நச்சினால் தாமும் பாதிக்கப் பட்டிருப்பதாக வியட்நாமில் போர் புரிந்த முன்னாள் அமெரிக்கப் போர் வீரர்களும் அரசிடம் ஏற்கெனவே முறையிட்டிருக்கிறார்கள்""

இதற்காக அமெரிக்க அரசு மாதாமாதம் நஷ்டஈடு கொடுக்கின்றதாகவும், அதுவும் முன்னாள் அமெரிக்கப் போர் வீரர்களுக்கு, அதாவது மஞ்சள் சரக்கினை தெளித்தவர்களுக்கு கொடுப்பதில் 30 இல் 1 பங்கினை பாதிக்கப்பட்ட முன்னாள் வியட்நாமியப் போர் வீரர்களுக்கு கொடுத்துக் கொள்வதாகவும் படித்த ஞாபகம்.