பாதரசம் சேர்ந்த மருந்துகள்-1

நேற்றைய பதிவு/பின்னூட்டங்களைத் தொடர்ந்து இக்கட்டுரையை இங்கு தட்டச்சி இடுவது பயனளிக்கும் என நினைக்கிறேன்.

பாதரசம் சேர்ந்த மருந்துகள் - சில அனுபவங்கள், சில கருத்துக்கள்.
புது.ஜெயப்பிரகாஷ் நாராயணன், எம். டி (சித்தா)
இணைப்பேராசிரியர், மருத்துவம்
அரசினர் சித்த வைத்தியக் கல்லூரி, பாளையங்கோட்டை.


முன்னுரை

"சூதகந்தி தாதுபற்பம் சொன்னநாட்டார் சிகிச்சை
ஓதரியமூலி இம்மண்ணூர் சிகிச்சை - வேதடரும்
சத்திரசாராக்கினி நிசாசரச் சிகிச்சையென்றே
முத்தரத்தது ஆகும் மொழி"

-பதார்த்த குண சிந்தாமணி

தாதுப் பொருட்களைக் கொண்டும் பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்படுகின்ற மருத்துவமே சிறந்த மருத்துவம் என அனுபவ அறிவினால் உறுதிப்படுத்தியவர்கள் சித்தர்கள். இன்று அரசினரால் நடத்தப்படுகின்ற சித்த மருத்துவ மனைகளில் பல வகையான பாதரச மருந்துகள் (mercurial preparations) உள்ளுக்கு வழங்கப்படும் மருந்துகளாகவும், புறப்பூச்சு மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் பயன்கள் கண்கூடாகக் கண்டவை. இன்றைய அறிவியலில் உன்னதமான அளவிற்கு உயர்ந்திருக்கின்ற நவீன மருந்தியல் துறையில் அவர்கள் பயன்படுத்திய பாதரசம் சேர்ந்த மருந்துகள் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்டுப் பாதரசம் சேர்ந்த மருந்துகள் பெரும்பாலானவை அவர்களுடைய பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றப் பட்டுவிட்டன.

சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படுகின்ற பாதரசம் சேர்ந்த பச்சை வெட்டு மருந்துகளைப் பொறுத்த வரை மேற்கண்ட நவீன அறிஞர்களின் கருத்துகள் பெருமளவுக்குப் பொருத்தமுடையனவாக இருக்கலாம். முறையாகத் தூய்மைப் படுத்தப்பட்டு இரசாயனச் சமையலுக்கு உட்படுத்தப் படுகின்ற பாதரச மருந்துகளுக்கு இந்த மதிப்பீடு பொருந்தாது. பாதரசத்தோடு சேர்கின்ற ஏனைய மருந்துப் பொருட்கள், துணை மருந்துகள், பத்திய முறைகள் இவைகளெல்லாம் பாதரச மருந்துகள் உடலில் செயற்படும் முறையை (pharmacodynamics) சீர்படுத்துகின்றன எனக் கருத இடமிருக்கிறது.

நடைமுறையிலுள்ள இரசக் கலப்புள்ள மருந்துகள்:

உள் மருந்துகள்

1. அயவீரம் (mercuric chloride)
2. ஆறுமுகச் செந்தூரம் (mercury)
3. இலிங்கச் செந்தூரம் (red sulphide of mercury)
4. கௌரி சிந்தாமணி (mercury)
5. சண்டமாருதச் செந்தூரம் (mercuric chloride, mercurous chloride, red sulphide of mercury)
6. சிவனார் அமிர்தம் (mercury)
7. இரசகந்தி மெழுகு (mercury, mercurous chloride)
8. படிகலிங்கத்துவர் (red sulphide of mercury)
9. பூரணச் சந்திரோதயம் (mercury)
10. வெள்ளை எண்ணெய் (calomel)
11. பரங்கிப் பட்டைப் பதங்கம் (mercury, cinnabar)
12. பட்டுக் கரும்(ப்?)பு (mercury, cinnabar, mercuric chloride, mercurous chloride)
13. கஸ்தூரிக் கரும்(ப்?)பு (mercury, calomerl, cinnabar, red sulphide of mercury)
14. இடி வல்லாதி (calomel)
15. மேகநாதக் குளிகை (cinnabar, red sulphide of mercury)
16. அகத்தியர் குழம்பு (mercury)
17. சாந்தச் சந்திரோதயம் (calomel)
18. வசந்த குசுமாகரம் (cinnabar)
19. பிரமானந்த பயிரவம் (cinnabar)

புறமருந்துகள்

1. அமிர்த வெண்ணெய் (mercuric chloride)
2. மேகவிரணக் களிம்பு (mercury, calomel, mercuric chloride, cinnabar)
3. வங்கவிரணக் களிம்பு (calomel, red sulphide of mercury)

இன்னும் பல இரசக் கலப்புள்ள மருந்துகள் பரம்பரை மருத்துவர்களால் கையாளப் படுகின்றன. விரிவு கருதி இங்கே குறிப்பிடப் படவில்லை.

நுட்ப மருத்துவம்

பாதரசத்தையும் பாதரசக் கலப்புள்ள மருந்துகளையும் கையாளுவதில் தற்கால மருத்துவ விஞ்ஞானிகளை விடச் சித்தர்கள் மிக விரிவான அனுபவ அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்குப் போதுமான நூலாதாரங்கள் உண்டு. இலிங்கத்திலிருந்து இரசத்தைப் பிரித்தெடுத்தல் (destructive distillation of mercury from cinnabar by sublimation), தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றில் இரசத்தைச் சேர்த்து இரசக் கலவையை (amalgam) உண்டாக்கி லோகமாரணம் செய்து மருந்தாக்கிப் பயன்படுத்தியது சித்தர்களுடைய மருந்தியல் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நவீன மருத்துவத்தில் பாதரசக் கலப்புள்ள மருந்துகள் சிறுநீர் பெருக்கிகளாகவும் (diuretics), மேகப்பிணி விலக்கியாகவும் (anti-syphilitic), மலமிளக்கியாகவும் (laxative), அழுகலகற்றியாகவும் (anti-septic) சில தோல் நோய்களில் வெளிப் பிரயோகமாகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சித்தர்கள் மேற்குறித்த நிலைகளில் மட்டுமல்லாமல் சுரப்பிணி, குன்மம், கழிச்சல் நோய்கள், கீல்வாத நோய்கள், புற்று நோய்கள் ஆகியவற்றில் தேவைக்கேற்ப உள் மருந்தாகவும், புற மருந்தாகவும் பயன்படுத்தி வந்திருப்பது இரச மருந்தியலில் அவர்களின் ஆழ்ந்த நுட்பத்தையும் அனுபவத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் வயிற்றுப் புண், கீல்களில் ஏற்படும் அழற்சி, புற்று நோய் போன்ற நோய்களில் சித்த மருத்துவத் துறையில் வழங்குவதைப் போல் வழங்குவதில்லை. நவீன மருத்துவ அறிஞர்களைக் கேட்டால் மேற்குறித்த மருந்துகளை விடச் சிறந்த மருந்துகளைக் கண்டறிந்திருக்கின்றோம் எனச் சொல்வார்கள். எது சிறந்தது என்பதை ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால்தானே கண்டறிய முடியும். ஒப்பு நோக்கும் ஆய்வு நடத்த வேண்டும் என்றால் நம்மால் அது முடியாது. சித்த மருத்துவத் துறையோடு தொடர்புடைய நவீன மருந்தியல் அறிஞர்களும் (non-clinical pharmacologists) மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை அணுகும் கல்வி அறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களே சித்த இரச மருந்துகள் மேற்கண்ட நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையவை என்று சொன்னாலும் மருத்துவமனையில் வழங்கிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறார்களா என்ற கேள்வி எழத்தான் போகிறது.

சித்த மருத்துவத் துறையில் வழக்கத்தில் உள்ள பாதரச மருந்துகள் எந்த அளவிற்கு மருத்துவப் பயன் உடையவை, தீய குணங்கள் இல்லாமல் எந்த அளவிற்குப் பயன்படுத்தத் தக்கவை என்பதை நவீன மருத்துவ அறிஞர்களோடு இணைந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். இத்தகைய ஆய்வுகள் நடத்தப் பட்டாலும் நடத்தப் படாவிட்டாலும் பாதரச மருந்துகள் சித்த மருத்துவத் துறையிலிருந்து வழக்கொழிந்து போய்விடப் போவதில்லை. ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால் இன்னும் அதிகமான மக்கள் இதன் பயனைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.

குடற்பகுதியில் மட்டுமே அதிகமாக, குறிப்பாக செயல்படக் கூடியதாகவும் அதே நேரத்தில் உடலில் அதிகமாக ஈர்க்கப் படாமல் செயல்படக்கூடிய இரச மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்று கழிச்சல் நோய்களுக்கான மருந்துகளில் இலிங்கத்தைச் சேர்த்தது வியக்கத் தக்க சித்தர்களுடைய பட்டறிவிற்கு எடுத்துக்காட்டு.

இரச நஞ்சு பற்றிய அறிவு

நன்றாக முடிக்கப் பெறாத அல்லது பொருத்தமான முறையில் வழங்கப்படாத இரச மருந்துகள் எத்தகைய கேட்டினை விளைவிக்குமென்பதைக் குறி குணங்கள் வாயிலாகச் சித்தர்கள் விளக்கியிருப்பது இன்றைய நவீன மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்ற இரச நஞ்சுக் குறி குண இயலுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன. பிருக்கப் (kidney) பாதிப்பை ஏற்படுத்தி உடலை வீங்கச் செய்வது, செரிமான மண்டலத்தில் தீவிர அழற்சியை ஏற்படுத்தல், நரம்பு மண்டலத்தைத் தாக்கி மனநோய்க் குறிகுணங்களை ஏற்படுத்தல் இவற்றையெல்லாம் சித்தர்கள் நன்கு கவனித்துப் பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்டிருக்கிற இரச நஞ்சு முறிவுகளும் நல்ல பயனை அளிக்கின்றன. உயிர் வேதியியல் அடிப்படையிலும், வேதியியல் அடிப்படையிலும் இவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் கண்டறிந்தால் இரச மருந்துகளை மிகச் சிறப்பான முறையில் கையாளலாம்.

இக்கட்டுரையின் மீதி அடுத்த பதிவில்.

5 comments:

said...

சுந்தரவடிவேல் - சுவாரசியமாக இருக்கிறது. அடுத்ததையும் படித்துவிட்டு சந்தேகங்களைக் கேட்கிறேன்.

pharmacodynamics - மருந்தியங்கியல் என்று சொல்லலாமா? - வெங்கட்

said...

பாதரசம் மற்றும் ஆர்சனிக் போன்ற விஷங்கள் கொண்டு செய்யப்பட்ட அரிய மருந்துகள் பற்றிய பரிச்சயம் எனக்குக் கொஞ்சம் உண்டு.

எது கொண்டும் தயாரிக்கப்பட்டாலும், முறையான வழியில் தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை, சரியான அளவில்/முறையில் உட்கொண்டால் தீங்கில்லை என்பதே எனது கருத்து/அனுபவம்.

said...

நல்ல பதிவு தொடருங்கள். இது குறித்த நல்ல புத்தகங்கள் இருந்தாலும் சொல்லுங்கள்

நன்றி

said...

சுந்தர் நல்ல பதிவு!

அந்த மருந்துகள்
பட்டுக் கருப்பு, கஸ்தூரிக் கருப்பு.
கருப்பு என்பது கருமை நிறமுடைய மருந்துகள். இவை புடமிடப்பட்டோ, அல்லது மற்ற மூலிகைகளுடன் அரைத்து உலர்த்தி எடுக்கப்பட்டோ தயாரிக்கப்படுவதாக நினைவு. குறிப்பாக அனைத்து மூலிகைகளும், உலோகளும், நஞ்சுகளும் மருந்துகள் தயாரிக்கும் முன் சுத்திகரிக்கப்படவேண்டும். இந்த சுத்தி முறைகள் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். பிறகு பொதுவாக புடமிடும் முறைகள் மிகக்கண்டிப்பாக முறையோடு செய்யப்படவேண்டும். இங்குதான் சரியாக புடமிடப்படாத மருந்துகள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. கட்டுரையாசிரியர் இதைப்பற்றி பேசியிருக்கிறார். சில புடமிடும் முறைகளிலும், இந்த உலோகங்களை மடியச்செய்வதற்கு சில மூலிகைகளை பயன்படுத்துவதும் சில குடும்பங்களுக்குள் இரகசியமாக வைக்கப்பட்டும் அழிந்து வருகின்றன.

தாமரை பதிப்பகம் (சென்னை) பல (நூற்றுக்கணக்கான) அரிய நூல்களை சுவடிகளில் இருந்தும், பழைய நூல்களில் இருந்தும் பதிப்பிக்கிறது. இப்படி தங்கள் கைப்பொருளை செலவு செய்து, அரசின் ஆதரவின்மையினாலும், மக்களின் அலட்சியத்தினாலும் பாதிக்கப்பட்டும் அதனால் மனமுடையாமல் (மனமுடைந்தும் பலர் இருக்கலாம்!) தொடர்ந்து உழைக்கும் ஆயிரக்கணக்கான தனி மனிதர்களின் ஆர்வமும், ஈடுபாடும், அர்பணிப்புமே இந்த மருத்துவமுறை இன்னும் சிறிதாவது காப்பாற்றப்பட்டுவருவதற்கு காரணம். இது இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்று எண்ணினால் அச்சமே ஏற்படுகிறது.

நன்றி. இதையும் விக்கிபீடியாவில் இணைக்க முடியுமா என்று பார். அடுத்த பகுதியையும் தொடர்ந்து எழுது, நேரமிருக்கும் போது.

நன்றி!

said...

மருந்து இயங்கியல் - நன்றாகத்தானிருக்கிறது!
சசி, இது தஞ்சை சரசுவதி மகாலில் வாங்கிய "சித்த மருத்துவ ஆய்வுக் கோவை, தொகுதி-1"லிருந்து எடுத்திருக்கிறேன். இந்நூலகத்தைப் பற்றி இன்னொரு தனிப்பதிவில் எழுதுகிறேன்.
தங்கமணி, முத்து: மேலதிக விபரங்களுக்கு நன்றி. "கருப்பு" திருத்திவிடுகிறேன். விக்கியில் இடக் காப்புரிமை, அனுமதி...விவகாரங்கள் தலை தூக்கலாம்!