தாடகை. இவளொரு அரக்கி. அப்படித்தான் நம் புத்தகங்கள் சொல்கின்றன. கம்பராமாயணத்திலிருந்து ராமானந்த சாகரின் பெட்டிப்படம் வரைக்கும் அப்படித்தான் காட்டியிருக்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இவளுடைய கருத்தாக்கத்திலிருக்கும் அரசியல் புரியும். நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.
விசுவாமித்திரன் எனும் அந்தணர் வந்து "கரிய" செம்மல் ராமனையும் கூடவே இலக்குவணனையும் அழைத்துப் போகிறார். எதுக்கு? அவரோட வேள்வியை அரக்கர் கெடுக்குறாராம், அதைக் காப்பாத்த. போகும் வழியில் பாலை நிலமொன்று. இது என்ன இந்த இடம் மட்டும் இப்படிப் பாலையாயிருக்கிறதென ராமன் கேட்க, இதுதானப்பா அந்த அரக்கி தாடகை இருக்குமிடம். ஆயிரம் மதயானை பலசாலி, அவ இடையும், அவ பல்லும், கேடு கெட்டவ, அவளக் கண்டாலே எல்லாருக்கும் நடுங்கும், இலங்கை அரசனோட ஆணைப்படி நம்ம எதிரிகளையெல்லாம் கூட்டி வச்சுக்கிட்டு நம்ம வேள்வியைத் தடுக்குறா. அப்படின்னு சொல்றாரு.
சொல்லிக்கிட்டு இருக்கப்பவே தாடகை வர்றா. அங்கின கம்பர் அவளை யானைத் தும்பிக்கையால புடிக்க முடியாத இடையழகு, எரியும் கண்ணழகு, பிறை போன்ற பல்லழகு, கறுப்பி அப்படின்னெல்லாம் "அழகா" வர்ணிச்சிருப்பார். தாடகை வந்து கேப்பா: "இது என்னோட எடமப்பா, இங்க ஒங்களுக்கு நல்ல எறைச்சி இருக்குன்னு வந்தீகளா இல்ல வேற என்ன வேணும்னு வந்தீக? மரியாதையாப் போறீங்களா, இல்ல வகுந்து எறியவா?" ஒடனே ராமரு யோசிக்கிறாரு அய்யோ பொண்ணாச்சேன்னு. அந்தணர் சொல்லிக் குடுக்குறாரு. தம்பீ அது பொண்ணு இல்ல, நாணம் இருக்கவதான் பொண்ணு, இவகிட்ட ஆம்பளையெல்லாம் தோத்துப் போவான், இவளா பொண்ணு, இந்திரனெல்லாம் இவகிட்ட தோத்தான், அசுரர் தேவரெல்லாம் ஓடுனாங்ய, இவளா பொண்ணு, தாக்கு தம்பீ. சண்டை வருது. அவ கண்ணிமைக்கும் நேரத்துல கடலைத் தூர்க்குற அளவு கல்லெடுத்து எறியுறா. தெரியுந்தானே ராமர் திறம்? தட்டிவுடுறார். அப்புறமா ஒரு அம்பெடுத்து வைரக்குன்றக் கல் மாதிரி இருந்த தாடகையின் நெஞ்சுல பாய்ச்சுறாராம். தாடகை விழுந்தாள். கம்பர் இந்த எடத்துல மறுபடியும் "அழகா" சொல்லுவார். அதாவது மார்புலேருந்து வழிஞ்ச ரத்தம் அந்தக் காட்டைக் கடலாக்கி அந்திவானத்துச் சிவப்போட கலந்துச்சாம். அரக்கர் குலத்துக்கு அன்றைக்குச் சாவு மணி அடிக்க ஆரம்பிச்சுச்சாம்.
எப்படிக் கதை? இதை வாயப் பொளந்து நாம கேட்டுக்கிட்டு இருக்கோம். கம்பனுக்கு விழா எடுக்குறோம். ராமருக்குக் கோயில் கட்டுறோம். அதோட சேர்த்து எதைப் புதைக்கறோம்? ஒரு பூர்வ குடிப் போராளியை. ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போரை. அவளையும் கொன்னு, அவளையே அரக்கியுமா ஆக்கிக்கிட்டோம். வெக்கமா இருக்கு.
இன்னைக்கும் தாடகை மலை இருக்காம். மிஸ்டர் நாரதர்ன்னு ஒரு சத்யராஜ் படம் புடிச்சாங்களாம். அதுதான் இதுவா, இங்கதான் "அங்க நாடு" இருந்துச்சா அப்படின்னெல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு தெரியுது, தாடகை வணக்கத்துக்குரிய ஒரு போராளி. வரலாற்றால் சொந்த நில மக்களாலேயே அரக்கியாகச் சித்தரிக்கப் படும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டாள். சித்தரித்தவன் ஆழ்வானாகவும், கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள்.
அவமதிக்கப்படும் ஒரு போராளி
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அண்ணே நல்ல பதிவு. அதுக்காச்சும் யாருகிட்டயாச்சும் வாங்கிக்கட்டுவீங்க.
ஆனா, "விசுவாமித்திரன் எனும் அந்தணர் வந்து" கொஞ்சம் பிழையோ?
விசுவாமித்திரன் ஸத்ரியன் இல்லையா? (புலத்திய இராவணனே ப்ராமணன் என்கிற மாதிரியும் வாசிச்சிருக்கோமே?)
மகாபாரதத்தை மறுவாசிப்பு, மாற்றுப்பார்வை எல்லாம் செய்துவிட்டார்கள்; ஆனால், இராமாயணத்தை நவீனத்துவர் எவருமே திரும்பிப்பார்க்கவில்லையோ? (அண்ணாத்துரையின் கம்பரசம், பாரதியாரின் குதிரைக்கொம்பு எல்லாம் இந்த வகைக்குள்ளே அடங்காது என்று நினைக்கிறேன்)
ஆக, அகலிகை கதையும் உறங்காவிலி இலக்குமணன் மனைவி தொடர்ந்து தூங்கிய ஊர்மிளை கதையும் சீதை தீக்குளித்த கதையும் மட்டுமே துண்டாகப் பிய்த்தெடுக்கப்பட்டுப் பெண்ணியற்பார்வையிலே பார்க்கப்பட்டிருக்கின்றன. முழுமையாக, முழுக்கதையுமே திரும்பிப் பார்க்கப்படவில்லையே :-(
Hello பெயரிலி!
புலவர் குலைந்தைங்கிறவர் இராம காதையை மறுத்து "இராவண காவியம்"னு காவியமே எழுதியிருக்கிறார்.
மரம் சொல்வது மெய்தான்; மறந்துவிட்டேன். மன்னிக்கவேண்டுகிறேன்
பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு குன்றை தாடகை **நாச்சியார்** மலை என்று அழைத்ததைக் (25 வருடம் முன்) கேட்டதாக என் அரைகுறை நினைவு. அர்த்தநாரிபாளையம் பக்கம்; (இன்றைய) பொள்ளாச்சிக்காரர்களிடம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கலாம். என் நினைவு தவறாக இருந்தாலும் இருக்கலாம்.
சுந்தரவடிவேல்,
நல்லதொரு பதிவு.
...
Peyarili, Kasi is back :-).
இராமயணம், மகாபாரதம் இவைகளில் பல கதைகள், பல வடிவங்கள் பழக்குடி மக்களாலும், நாட்டுப்புறங்களிலும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் தங்கள் வழியின் அம்மக்களின் வரலாற்றின் ஒரு கூறைச் சொல்லியே வந்திருகின்றன. அவைகளின் அரசியல் வேருவகையானது. பெளராணிகர்களின் இராமயணமும் ஒரு நோக்கத்தை, அரசியலை, ஒரு அழகைச் சொல்லிவருகின்றன. மரத்தை மறைத்தது மாமத யானை என்பதுபோல, அரசியலைக் காணும் போது அழகும், சில அலங்காரங்களும் மறைந்துபோகும்; அப்படியே அலங்காரத்தை விதந்தோதும் போது அரசியல் கண்ணுக்குத் தெரிவதில்லை. யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்கிறார்கள்.
நல்ல பதிவு.
நல்ல பதிவு சுந்தர்.
சுவாரசியமான பதிவு சுந்தரண்ணா.
//ஆனா, "விசுவாமித்திரன் எனும் அந்தணர் வந்து" கொஞ்சம் பிழையோ?
விசுவாமித்திரன் ஸத்ரியன் இல்லையா?//
எனக்குத் தெரியாதண்ணே. ஆனா தாடகை வதைப் படலத்துல அந்தணருன்னுதான் இருக்கு. தந்தை பெரியாரின் "இராமாயணப் பாத்திரங்கள்" படிச்சிருக்கீங்களா? அதில் பல்வேறு பல்வேறு பாத்திரங்களையும் அலசியிருப்பார்.
காசி, **நாச்சியார்** சுவாரசியமான சேதி. விசாரிச்சுப் பாருங்களேன்.
நண்பர்களுக்கு நன்றி. தாடகை வதைப் படலத்தை மட்டும் தனியே எடுத்து ஒவ்வொரு பாட்டாய்ப் பிரித்துப் போட்டால் நன்றாக இருக்கும்.
விசுவாமித்திரன் சத்திரியன் தான். 'அந்தணர்' என்பதை நல்ல ஒழுக்கமுடையவன் என்ற பொருளிலும் தமிழில் வழங்கலாம். அதற்கு 'பிராமணன்' என்ற ஒரு பொருள் மட்டுமே தமிழில் இல்லை அல்லவா. ராமாயணத்தின் பிற வாசிப்புகளும் உண்டு. அரவிந்தனின் 'காஞ்சன சீதா' படம் பார்த்திருப்பீர்கள் தானே. கம்பனைப் படித்து நிச்சயம் வேறு கோணங்களில் பதிக்கவேண்டும். நன்றி
அருள்
நல்ல பதிவு! தாடகை நாச்சி மலை இது என்று கோவை மாவட்டம் திருமூர்த்திமலை பக்கத்தில் ஒரு மலையைக் காட்டிச் சொல்லக் கேட்டுள்ளேன். இம்மலையின் அடுத்த பக்கத்தில்தான் அர்த்தநாரிபாளையம் உள்ளதா என்று தெரியாது.
அர்த்தநாரிபாளையத்திற்குப் பக்கத்தில் ராவணாபுரம் என்றொரு கிராமம் உள்ளது. இவ்வூர்ப்பெயருக்கும் தாடகை மலைப் பெயருக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதும் கேள்விக்குரியது.
ம்ம்...சுந்தர் சரி...சரி....
ஞானபீடைய சொல்லிட்டு, கம்பர்-வதமா....நடத்துங்க...நடத்துங்க....;) :))
ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி உள்ளூர் நண்பர் ஒருவர் சொன்னது யோசிக்க வச்சுது -
ராமாயணத்துல வர்ற வானரர் படை என்பது உண்மையில் தென்னிந்தியாவில் இருந்த திராவிடர்களைக் குறிக்கிறது. தங்களில் இருந்து வித்தியாசமாய், பார்க்கக் கறுப்பாய் இருக்கிறவர்களை இப்படி உருவகப் படுத்தி வால்மீகி எழுதிட்டார்னு சொன்னார். வானரப் படை வந்து கடற்பாலம் அமைச்சதுங்கறத விட, இது நம்பமுடிவதாய் இருக்கிறது.
ஹ்ம்ம்... நீங்க எழுதியிருப்பதப் போல யோசிக்க வேண்டிய விஷயம். ஆனா எனக்கு அதிகம் தெரியாது.
மிக நல்ல பதிவு, எனக்கென்னமோ இந்த இராமாயணத்துமேலய நம்பிக்கை இல்லை. இரண்டு அரசர்களுக்குள்ள நடந்த போரை கடவுள் அரக்கன்னு திரிச்சிருப்பாங்களோனு தோனுது. இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர் ஒரு கடவுள்னும் வீரப்பன் ஒரு அரக்கன்னும் திரிக்கப்படலாம், இப்பவே காமராஜரும்,அண்ணாவும் பாதிகடவுள் மாதிரி ஆக்கப்பட்டுவிட்டார்கள் அப்படித்தான் இதையும் திரிச்சிருப்பாங்களோனு ஒரு சந்தேகம்.
சுந்தர் உங்கள் மறுவாசிப்பு சுவாரசியானது. ஆனால் அதையே படைப்பாளியின் மீது தீர்ப்பாக்குவதில் எனக்கு மாறுகருத்து உண்டு. எழுதப்போய் நீண்டுபோனதால் என்னுடைய பதிவில் போட்டிருக்கிறேன்.
http://www.domesticatedonion.net/blog/?item=478
Ottu pOtten aiya!
//ஆனா ஒன்னு தெரியுது, தாடகை வணக்கத்துக்குரிய ஒரு போராளி.//
என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. முதலில் அதை சொல்லிவிட்டு பின்னர் உங்கள் பார்வையை சொல்லி இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வெறும் காழ்ப்புணர்சிதான் தெரிகிறது.
ராமாயணமே ஒரு நிகழ்வா அல்லது சுவாரசியமான புனைவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இந்த நிலையில் போராளின்னுல்லாம் சொல்லி ஏம்ப்பா ஒரே காமெடி பண்றீங்க?
- suresh kannan
Post a Comment