மதியம் திங்கள், மே 23, 2005

ஏலே ஏலேலே!

Image hosted by Photobucket.com

அப்பாம்மா, குடும்பம் குட்டிகளோடு கறுப்பு அங்கி, குஞ்சமாடும் குல்லாய்களோடு புதுப் பட்டதாரிகள். வெளியெங்கும் ஆரவாரமாய் மக்கள். இன்றைக்கு ஏல் பல்கலையில் பட்டமளிப்பு விழா. 304வது வருடம்! சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல் (இவரைப் பற்றித் தனியாக ஒரு நாள்) என்பவரின் நிதியுதவியால் ஒரு கல்லூரியாக 1700களின் ஆரம்பத்தில் தொடங்கப் பட்டது இப்பல்கலைக் கழகம். இன்றைக்குப் பல்வேறு துறைகளிலும் சுமார் 3000 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு புலத்திலும் தனித் தனியாக விழா.

நான் கண்டது மருத்துவப் பள்ளியில். பல்கலைக்கொரு கரவொலி, துணையாயிருந்த குடும்பத்தினருக்கு ஒரு கரவொலி, பாடம் நடத்திய ஆசிரியர்களில் யார் சிறந்தவர் என்று மாணவர்கள் மதிப்பிட்டு அந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்.

சிறப்புரைக்கு ஒரு விருந்தினர், ஜொய்ஸ்லின் எல்டர்ஸ் (Joycelyn Elders). இவர் அமெரிக்காவின் முன்னாள் பெருமருத்துவர் (Surgeon General of the USA). க்ளிண்டனால் நியமிக்கப் பட்டவர். இப்பதவிக்கு வந்த இரண்டாவது பெண்மணியும், முதல் கறுப்பரினத்தவரும். பருத்தியெடுக்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ நிறப் பாகுபாடுகளைச் சந்தித்துத் துணிச்சலுடன் ஏறி வந்திருப்பவர். ஏழைகள், குழந்தைகள் ஆகியோரின் சுகாதாரத்துக்காக ஓயாது குரலெழுப்பியவர். பதின்ம வயதுக் கர்ப்பம், பாலியல் தொற்று நோய்கள் போன்றவற்றைக் குறைக்கப் பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும், கருத்தடைச் சாதனங்களைப் பள்ளியில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று முழங்கி கன்சர்வேட்டிவ்களுக்குப் புளியைக் கரைத்தவர். இவ்விதமான தடாலடிப் பேச்சுக்களால் வற்புறுத்தலின் பேரில் பதினைந்தே மாதங்களில் பெருமருத்துவர் பதவியிலிருந்து விலகினார். இவரே தமக்குப் பட்டமளிக்கையில் பாராட்டுரை வழங்க வேண்டுமென்று மாணவர்கள் தேர்வு செய்திருந்தார்கள். ஆமாம், மாணவர்களின் விருப்பப் படியே இந்த விருந்தினர் அழைக்கப் படுவார்.

எல்டர்ஸின் உரையில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டது எல்லோருக்கும் நலத்தைப் போதியுங்கள், அவர்களுக்குச் சுகாதார அறிவு கிடைக்கச் செய்யுங்கள், எண்ணற்ற குழந்தைகள் அன்பும் அரவணைப்புமின்றி இருக்கிறார்கள், உணவின்றிப் பசியோடு உறங்கச் செல்கிறார்கள், அவர்களைக் காக்க முயலுங்கள். முழக்கமாயிருந்தது அவர் பேச்சு. கறுப்பு அங்கிகளும், இவரது ஆளுமையும் மனசில் மோதிக் கிடக்கின்றன. பட்டம் சூட்டிக் கொண்டோருக்கு நம் பாராட்டுக்கள். அப்படியே நம் வலை வெளியில் இருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்!
படம் நன்றி: Fred

16 comments:

சன்னாசி said...

//சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல்//

??? Chennai?

சுந்தரவடிவேல் said...

ஆமாம். Elihu Yale. இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னை மாகாண ஆளுனராயிருந்தார். இவரது உருவப்படம், திருமண ஒப்பந்தக் கையெழுத்து ஆகியன இன்றும் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருக்கும் அருங்காட்சியகத்திலிருப்பதாகப் படித்திருக்கிறேன். சென்னை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் பட முக்கிய முயற்சிகளை எடுத்திருப்பதும் இவரே. இவரைப் பற்றிய தகவல்களை முன்பு சேகரித்து வைத்திருந்தேன். மறுபடியும் தேடிப் பிடித்து ஒரு பதிவு எழுத எண்ணம்.

Badri Seshadri said...

மாண்ட்ரீசர், சுந்தரவடிவேல்: 'தி ஹிந்து'வில் அஜய் காந்தி என்பவரால் மிகச்சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் சுட்டி இதோ:

http://www.hindu.com/2005/05/04/stories/2005050400441000.htm

Badri Seshadri said...

அதன்பின் எனது விருப்பத்துக்குரிய Madras Miscellany பகுதியில் எஸ்.முத்தையா யேல் பற்றி எழுதிய கட்டுரை இங்கே:

http://www.hindu.com/thehindu/mp/2004/05/10/stories/2004051000220300.htm

முத்தையா எதையுமே தவறாகப் பார்ப்பதில்லை. GESOவின் அஜய் காந்தி அதற்கு மறுகோடி. இருவர் மூலமுமாக நமக்கு 'எலி' யேல் பற்றிய பல விஷயங்கள் கிடைக்கின்றன.

Badri Seshadri said...

ஹ்ம்ம்ம். ஹிந்துவில் கூகிள் வழியாகத் தேடியபோது இன்னமும் பல யேல்-சென்னை கனெக்ஷன் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவற்றில் பலவற்றை நான் முன்னர் கவனித்திருக்கவில்லை.

http://www.google.com/search?q=Elihu+Yale+site:hindu.com

என்று தேடிப்பார்க்கவும்.

சுந்தரவடிவேல் said...

பத்ரி, சுட்டிகளுக்கு நன்றி. அஜய் மற்றும் முத்தையாவின் குறிப்புகளைப் படித்தேன்.
ஒரு முதலாளித்துவ நிறுவனத்தின் அத்தனை குளறுபடிகள், தில்லுமுல்லுகள், நிறப் பாகுபாடுகள், நிர்வாகத்துக்கெதிரான போராட்டங்கள் (இவற்றின் போது லெவின் கீழ்த்தரமாக விமர்சிக்கப் பட்டார்), மூன்றாமுலக நாட்டுப் பணியாளர்களை உறிஞ்சுதல் ஆகிய சகலமும் இங்கும் இருக்கிறதென்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இத்தனைக்கு மத்தியிலும் கல்வி/ஆராய்ச்சியில் எவ்வளவோ பங்களிப்பை இது செய்தவண்ணம் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். சிப்லா போராடி உரிமத்தை வாங்கியதாகச் சொல்ல முடிகின்ற அஜய் அதை எப்படி சிப்லா தக்கவைத்துக் கொள்ளத் தவறி WHOவிடம் தலை குனிந்தது என்று சொல்ல மாட்டார். இன்றைக்கும் தமிழுக்கு ஒரு பார்னி பேட், மானிடவியலில் அர்ஜூன் அப்பாதுரை இவர்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறதையும் கணக்கில் கொள்ள வேண்டும். இன்று பேச வந்த எல்டர்ஸ் இதற்கு முன் பல முறை ஏல் கூட்டங்களில் கலந்து கொண்டு இனப் பாகுபாடற்ற சுகாதாரத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். என்னோடு பணிபுரியும் சில கறுப்பரின மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கம் அமைத்து ஊர் ஊராகச் சென்று பல்கலையில் சேரும் வழி முறைகளைத் தம்மினத்துக்குச் சொல்லி வருகிறார்கள். நானும் அவ்வப்போது நம்ம ஊர்ல கொள்ளையடிச்ச காசாச்சே என்று நினைத்து மறுகுவதுண்டு. இது ரகுபதியின் ஜெஜெ கல்லூரியிலோ அல்லது ராமச்சந்திரா கல்லூரியிலோ படிப்பது மாதிரியானவொரு இரண்டுங்கெட்டான் மனநிலை!
சரி இது எல்லாவற்றையும் தாண்டி, ஏலை இந்தளவுக்குப் பாய்ந்து குதறும் வண்ணம் இந்துவுக்கு இருக்கும் காரணமென்ன என்று யோசிக்கிறேன்!

ஈழநாதன்(Eelanathan) said...

சேரன் உங்குதானே படிப்பிக்கிறார்?

குமரேஸ் said...

ஏலே
நம்மலே,
சுந்தரவடிவ்+ஏலே,
ஏலே ஏலேலே
நல்லாழுதிலே
அன்பிலே
சீமைலே
நம்மலே
ஏதுலே
லிங்குலே?

வீ. எம் said...

==ஏலை இந்தளவுக்குப் பாய்ந்து குதறும் வண்ணம் இந்துவுக்கு இருக்கும் காரணமென்ன என்று யோசிக்கிறேன்.==

keep thinking and share with us once you get the answer ! :)

good article mr sundarvadivel !

V.M

சுந்தரவடிவேல் said...

ஈழநாதன், எனக்குத் தெரிந்த வரை சேரன் இங்கு ஆசிரியராயில்லை. ஏதேனும் வகுப்புக்கு வந்திருக்கலாம். எனக்குத் தெரியாது.
குமரேஸ் :)) இரண்டு சுட்டிகள், ஒன்று ஏல் பல்கலை செய்திக்கும் இன்னொன்று எல்டர்ஸைப் பற்றி.
நன்றி வி.எம்

http://www.galeschools.com/womens_history/bio/elders_j.htm
http://www.yale.edu/opa/newsr/05-05-23-01.all.html

Thangamani said...

நல்ல பதிவு பையா!

சிறப்பு விருந்தினர் பற்றிய குறிப்புகள் அருமை. நன்றி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ajay gandhis article appeared in epw also.yale responded in the hindu.i see this article as a part of the students and employees efforts to bring in changes in the university.there are eminent experts in yale benkler,t.n.srinivasan,james scott, for example. but the problem is with the system.for instance tenure of a faculty in anthropology was not renewed recently.and there is a campaign against this.sometimes those inside the university system may not be aware of the conflicts and crosscurrents.this applies to most institutions.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

மானிடவியலில் அர்ஜூன் அப்பாதுரை இவர்களையெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறதையும் கணக்கில் கொள்ள வேண்டும்
i think arjun is with new school at new york.in any case he was in yale for a short period only.

சுந்தரவடிவேல் said...

ரவி, உள்ளுக்குள்ளேயே இருந்தும் புலம் வேறாக இருப்பதாலோ என்னவோ நிறைய நடப்புகள் எனக்கு எட்டுவதில்லை. அர்ஜூனின் மாற்றம் குறித்துச் சமீபத்தில் அறிந்திருந்தேன். நன்றி!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

http://www.counterpunch.com/frank05132005.html

சுந்தரவடிவேல் said...

ரவி, டேவிட்டினைப் பற்றிய சுட்டிக்கு நன்றி. அது அறிந்து கொள்ளப் பட வேண்டியது. இவர்தான் ஜெசோவுடன் சேர்ந்து நியூயோர்க்கில் போராட்டத்தில் ஈடுபட்டாரா என்று தெரியவில்லை, அப்படியொரு செய்தியை வாசித்ததாக ஞாபகம். அவரைப் பற்றிய இன்னொரு விதமான கருத்தை இந்தச் சுட்டியில் கண்டேன்:
http://blog.zmag.org/index.php/weblog/entry/david_graeber/
ஒரு தகவலுக்காக.