அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்

அவமானச் சுவரைப் பற்றிய இந்தக் கட்டுரையை ( thamuyesa (தமுஎச): அவமானச் சுவர்) வாசித்தபின் எனக்குத் தோன்றியவை:

ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு அவமதிக்கப்படும் தலித்துகளுக்கு ஆதரவு எது? பெரும்பான்மையாக இருக்கிற சாதி இந்துக்களின் மனங்களிலே 'தாம் உயர்குடிகள்' என்ற நினைப்பு ஒழிந்து, அனைவரும் மக்கள்தாம் என்ற புரிதல் வந்தாலொழிய அங்கே அமைதி நிலவாது. இவ்விடத்தில் வலுத்தவர்கள் இரண்டு விதங்களில் செயற்படலாம். ஒன்று தங்களது அதிகாரங்களைத் தட்டியெழுப்பலாம். அல்லது தங்களிடம் இருக்கும் ஆன்மாவைத் தட்டியெழுப்பலாம். ஆன்மாவைத் தட்டியெழுப்புவது கடினம். அதற்கு இத்தனைக் காலங்களாக, பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்திருந்த சாதிய 'உயர்வை'த் தொலைக்க வேண்டியிருக்கும். எல்லோரும் ஒன்றுதான் என்ற சமத்துவத்தின் தாங்கமுடியாத அவமானத்தை, தலித்துகளும் தாமும் ஒரே பிறவிதான் என்ற உண்மையின் வலியைத் தாங்க வேண்டியிருக்கும். தாம் மட்டுமே துய்த்து வந்த ஊர் வசதிகளான குளம், கிணறு, பள்ளி, கடை, கோயில் எல்லாவற்றிலும் சம உரிமையை தலித்துகளோடு பகிர்ந்துகொள்ளவேண்டிய கீழ்நிலையை அடைய நேரும். ஆனால் மற்ற தேர்வான அதிகாரத்தைக் கையிலெடுப்பது சுலபம். கூப்பிடு தூரத்தில் தம் சாதியைச் சேர்ந்த செல்வாக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு, இப்படிப்பட்ட ஒரு போராட்டத்துக்கு என்னவிதமான தீர்வினை ஆதிக்க இந்துக்கள் எடுக்க முடியும்? சுலபமான தீர்வே. தம்மிடம் இருக்கும் எல்லா வளங்களையும் பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை அடக்கலாம், திரிக்கலாம், பூசி மெழுகலாம், ஒன்றுமே இல்லாமல் ஆக்கலாம்.

ஆக, இது ஆதிக்க சாதி மனிதருக்குள்ளே ஆன்மாவுக்கும் அதிகாரத்துக்கும் நடக்கின்ற போட்டி. எதைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். தலித்துகள் இன்றைக்கு 'தேசிய'த் தலைவர்களைக் கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்டப் பார்க்கலாம். ஆனால் எல்லாக் கூட்டமும் போனபிறகு, எல்லா ஆதரவுகளும் அகன்ற பிறகு அங்கேயிருக்கும் சிறுபான்மை தலித்துகளுக்கு எவரால் பாதுகாப்பு அளிக்க முடியும்? ஆதிக்கம் செலுத்தும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களது சாதிய வெறி அகன்று, எல்லா மனிதர்களும் சமம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால்தான் தலித்துகளுக்குப் பாதுகாப்பு. அப்போதுதான் தலித்துகளுக்கு சமவுரிமையை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.

ஆதிக்க சாதி இந்துக்களிடையே, உத்தப்புரமாகட்டும், இந்தியாவின் வேறு எப்பகுதியுமாகட்டும், 'தாம் உயர்ந்தவர்கள்' என்ற நிலையை உடைக்க, எல்லோரும் சமம் என்ற உணர்வைப் பரப்ப அரசும், சமூக அமைப்புகளான கோயில்கள், சங்கங்கள் முதலானவையும், ஊடகங்களும் என்ன செய்கின்றன? நம் சமூகச் சூழலில், சிறுமைக்கும், பெருமைக்குமான வேறுபாடு தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டே வருகிறது. உதாரணமாக இந்தத் தொழில் செய்வது அசிங்கம், இது உயர்ந்த தொழில் என்று இடைவிடாது சுட்டப்படுதல். சுபவீ அவர்களின் கட்டுரை ஒன்றில் படித்தபோதுதான் திருக்குறளின் ஒரு வரி சுள்ளென்று உறைத்தது, "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்." அதாவது செய்கின்ற தொழிலால் சிறப்பு வந்து சேர்வதில்லை. எல்லாத் தொழிலும் ஒன்றுதான். ஆனால் வருணாசிரமத்தின்படி கட்டமைக்கப்பட்ட நம் சமூகத்தில் இது பெரிது, இது சிறிது என்ற தொடர்ச்சியான புகட்டுதல் நடந்தபடியே இருக்கிறது. இது நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. அதனால்தான் டெல்லியில் இடவொதுக்கீட்டை எதிர்த்த மருத்துவ மாணவர்கள் இனி நாங்கள் சிரைக்கவும், சாலை கூட்டவும் போகலாம் என்று வேடம் போட்டு, அத்தொழில்களை அவமதிக்க முடிகிறது. இது மேன்மை, இது பெரிது, இதுதான் உயர்ந்தது, புனிதமானது என்று தொடர்ச்சியாக ஒரு கற்பிதம் இந்தியக் காற்றில் செறிந்து அடர்ந்து மிதக்கிறது. மேகக்கூட்டத்தைப் போல அது இந்தியப் பெருநிலமெங்கும், ஏன் கடல்களைக் கடந்து வாழும் இந்தியர்களிடையேயும் அது கவிந்துகொள்கிறது. சாதிய இந்துக்கள் அந்த உயர்ந்த கற்பிதத்தைத்தான் சுவாசிக்கிறார்கள். அந்த உயர்ந்த நிலையினை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், தாழ்ந்தவர்களிடமிருந்து தம்மைத் தெளிவாக, நன்றாகப் பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த அமைப்பை இந்து மதமும், அதன் ஆணி வேரான வருணாசிரமும் நன்கு காப்பாற்றி வைத்திருக்கின்றன. பிறப்புவாரியாக உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் ஒரு மதமும், அதனைக் குறை களையாது அப்படியே பின்பற்றுவோரும், அதற்காகப் பெருமை கொள்வோரும் இருக்கின்றவரை இந்தியர்களிடையே ஒற்றுமை இருக்காது. சமூக மாற்றத்தை, தனிமனிதருக்குள்ளே மாற்றத்தை ஏற்படுத்தாமல் வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்வது பயன் தராது.