குத்தாமல் வலிக்காமல் சர்க்கரையளவு

விரலில் நறுக்கென்று ஒரு குத்து குத்தி, துளியூண்டு ரத்தத்தை எடுத்து, சர்க்கரை நோய்க்காரங்க பரிசோதிக்கிறதைப் பார்த்திருப்போம். அவங்களுக்கு நோய் ஒரு பிரச்சினையென்றால் அந்த ஊசிக்குத்து வலி இன்னொரு பெரிய பிரச்சினை. வலியே இல்லாம ரத்தத்துல சர்க்கரை அளவைக் கண்டுபிடிக்க இப்போ ஒரு புது முறை வரப் போகுதாம். அதாவது பேப்பர் மாதிரி மெல்லிசா, நம்மூரு 25காசு/அமெரிக்கப் பத்துக்காசு அளவுல ஒரு தகடு. அதை நம்ம கையின் உள்ளே தோலுக்கடியில் வச்சிடுவாங்களாம். நம்ம கையை ஒரு சர்க்கரைமானிக்குப் பக்கத்துல ஆட்டினாப் போதுமாம், உடம்புக்குள்ள இருக்க சர்க்கரை அளவு தெரிஞ்சுடுமாம். ஆச்சரியமா இருக்கில்ல. இது எப்படின்னு பார்ப்போமா?

இப்போ இருக்க சர்க்கரைமானிகள்ல (glucometer) ஒரு பட்டை இருக்கு. பொதுவா அதுல இரண்டு நொதிகள் (enzyme) இருக்கும். ஒன்னு குளுக்கோஸ் மீது வினைபுரிவது. பேரு குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் (glucose oxidase). குளுக்கோஸை இது குளுக்கோனிக் அமிலமாகவும், ஹைட்ரஜன் பெராக்ஸைடாகவும் மாற்றுது. அந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை இன்னொரு நொதி, பேரு பெராக்ஸிடேஸ், உடைக்குது, அப்போ பக்கத்துல இருக்க ஒரு சாயம் நிறம் மாறுது. அந்த மாறும் நிறத்தோட அடர்த்தியைக் கொண்டு ரத்தச் சர்க்கரையளவைச் சர்க்கரைமானி கணக்கிட்டுக் காட்டுது. இதுக்கு ரத்தம் வேணும், குத்த வேணும். ஆனா புது நுட்பம் என்ன சொல்லுதுன்னா, அதே குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் நொதியை நம்ம நாலணாத் தகடு மேல தடவிடணும். ஆனா அந்த மற்ற நொதிக்குப் பதிலா குளுக்கோனிக் அமிலத்தோட அமிலத் தன்மையின் அளவைப் பொறுத்து சுருங்கி நீளக் கூடிய (elastic) ஒரு பலபடிச் சேர்மத்தைத் (polymer) தடவணும். அந்தத் தகடு காந்தப் புலத்தில் அதிரக் கூடியது. மேலே படர்ந்திருக்கும் பலபடிச் சேர்மத்தின் சுருங்கிய அல்லது நீண்ட நிலைக்கு ஏற்ப அந்தத் தகட்டின் அதிர்வுகள் மாறுபடும். இதுக்கு ஒரு உதாரணம் சொல்லலாம், ஒரு மணியை அடிக்கிறோம், ஒரு விதமா சத்தம் கேட்குது. அதே மணியின் நாக்கைத் துணியால சுத்திட்டு அடிக்கிறோம். இப்போ சத்தம் வித்தியாசமாக் கேட்குது. அதே மாதிரிதான் இந்தத் தகடும் வேலை செய்யப் போகுதாம். அதாவது அந்தத் தகட்டின் அதிர்வானது அதன் மேல் படிந்திருக்கும் பலபடிச் சேர்மத்தின் சுருங்கல்/நீட்சிப் பொறுத்தது. சேர்மத்தின் சுருங்கல்/நீட்சி அதைச் சுற்றியிருக்கும் அமிலத் தன்மையைப் பொறுத்தது. அமிலத் தன்மை குளுக்கோனிக் அமிலத்தின் அளவைப் பொறுத்தது. குளுக்கோனிக் அமிலத்தின் அளவு குளுக்கோஸின் அளவைப் பொறுத்தது. இப்படியாக அந்தத் தகட்டின் அதிர்வின் அளவைக் கொண்டு அங்கே எவ்வளவு குளுக்கோஸ் இருக்கிறது என்று கண்டு கொள்ளலாமாம். இவ்வகையான தகட்டை காந்த மீள்தகு (magnetoelastic) தகடு என்று சொல்லலாமா?

இதைத் தயாரிக்க அதிகமாச் செலவாகாதுன்னு சொல்றார் இதைக் கண்டுபிடிச்ச பென்சில்வேனிய மாநிலப் பல்கலைக்கழக விஞ்ஞானி க்ரிம்ஸ். இதே கொள்கையில குளுக்கோஸை மட்டுமில்லாம, நுண்ணுயிரிகள் மற்றும் பயங்கரவாதத்தில் அஞ்சப்படும் ரிசின் (ricin) போன்ற வேதிப் பொருட்களோட அளவையும் கண்டுபிடிக்கலாம்கறார். இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கும் இது, தயாரிப்பு நிலைக்கும், அதைத் தாண்டிக் கடைகளுக்கும் வந்தால் வரவேற்கப்படுமென நினைக்கிறேன்.

ஆதாரம்: அறிவியல் வலைப்பூ (ஆங்கிலம்).

கலைச் சொற்கள்:
நொதி, நொதியம் - enzyme
சர்க்கரைமானி - glucometer
காந்த மீள்தகு - magnetoelastic
பலபடிச் சேர்மம், பல்பகுதியம் - polymer

அங்கே கொட்டிக் கிடக்குது!

ஒரு கூட்டுப் பதிவு பார்த்தேன். அடேங்கப்பா, தினமும் எவ்வளவு சங்கதிகள் வந்து கொட்டுகின்றன! எல்லாத் துறைகளுக்கும். இன்றைய தேதியில் நிகழும் நிகழ்வுகள். அத்தனையும் முக்கியமான செய்திகள். ஒரே பரபரப்பாயிருக்கிறது. எனக்குக் கவலை வந்துடுச்சு. இதே வடிவில் நம்மகிட்டயும் ஒன்னு இருக்கு. "வருசப் பொறப்புக்குள்ள செஞ்சுத் தர்றேங்க" அப்படின்னு ஒருத்தர் சொல்லி வச்சுக் கட்டிக் குடுத்தது. அது பேரு சங்கம். அந்தப் பக்கம் ஆள் நடமாட்டம் ரொம்பக் காணோம். நம்ம எல்லாருக்கும் நேரம் ஒரு பிரச்சினைதான். ஆனாலும் ஆளுக்கு ஒன்னா, குறைந்தது வாரத்துக்கொன்னா நம்ம துறை சார்ந்த ஏதாவதொரு விசயத்தைத் தமிழாக்கிப் போட்டோம்னா நாமளும் எவ்வளவோ தெரிஞ்சுக்கலாம், இல்லையா? ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் எழுதும் என்னை மாதிரி ஆட்களும் அடிக்கடி எழுதுவார்கள், ஒழுங்காய் எழுதுபவர்களுக்கும் ஊக்கம் பிறக்கும். இப்படிக் கூட நாம வச்சிக்கலாம், நம்மோட வலைப்பூவில மூனு பதிவு போட்டா, சங்கத்துல ஒரு பதிவாச்சும் போடணும்.செய்வோமா?!
இதுதான் நான் சொன்ன அந்தக் கூட்டுப் பதிவு.
இது நம்மளோட சங்கம்.

சந்தனாட்டம்

வெயிலடிக்குதுன்னு அன்றைக்கே சொன்னேனில்ல, நல்லாவே அடிக்குது. அன்றைக்கு வேலையிலேருந்து வந்ததுக்கப்புறம் ஒரு கிண்ணத்த எடுத்தேன். சந்தனத்தூளக் கொட்டுனேன். குழப்புனேன். சந்தனம் குளுமை, வெயில்ல உடம்புக்கு நல்லது. மேலெல்லாம் பூசிக்கிட்டேன். பக்கத்துல மாசிலன் நின்னான். அவனுக்கும் மேலெல்லாம். காவடிச் சிந்துல "வில்லினையொத்தபு ருவம்வ ளைத்தனை வேலவாவடி வேலஅவா" பாட்டு பாடுறப்போ சும்மாவா சந்தனம் பூசிக்கிறது, ஆட்டம் போட்டுப் போட்டுப் பூசிக்கிட்டோம். பக்கத்துல ஒரு சின்ன மோளம் கெடந்துச்சு. நான் அடிச்சேன். இன்னொரு டிங்டிங் கருவி கெடந்துச்சு, மாசிலன் எடுத்துக்கிட்டு அடிச்சான். சுத்தினோம். சிரிச்சு சிரிச்சு மோளத்துக்கொரு அடி. ஒரு துள்ளல் ஒரு சுத்தல். தம்பியளா, யாருப்பாது குறுக்க வந்தது!

அட. எழுதுறதுக்கு என்ன தெரியுமா வேணும். ஒன்னுமே இல்ல. எழுதுறதுக்கு முக்கியமானது வெற்றிடம். அங்க யாரும் இருக்கப் படாது. நாமளும் நம்ம எழுத்தும் மட்டுந்தான் இருக்கணும். அது ரெண்டையும் தனியா விட்றணும். ஒரு பய புள்ள இருக்கப்புடாது. இருந்தாலும் தள்ளி ஒரு ஓரமா நிக்கனும். ஏன்னா சாமி ஓடும், ஆடும், பாடும், துள்ளும், பாயும். யாராச்சும் குறுக்க வந்தா சாமிக்குப் புடிக்காது. புடிக்காதுன்னா என்ன, சாமி ஆட முடியாது. அததுக்குண்டான எடம் வேணுமில்லையா? சாமி சில நேரம் கொள்ளிக்கட்டயத் தூக்கிட்டு ஓடும், வெட்டுன கிடா இழுபட்டுப் போவும். யாரும் குறுக்க வரப்புடாது. அப்புடி உக்காந்து எழுதனும். இதோ நான் எழுதுறேன். உங்களுக்காக எழுதுறேன்னு என் கை சொல்லுது. மனசு சொல்லுது. அதனால உங்களையெல்லாம் அந்தக் குளத்துல பாசிய அரிச்சு எடுத்து வீசுற மாதிரி வீசணும். நீங்களும் இப்படித்தான் என்னையும் வீசணும். அப்புறம் ஒவ்வொன்னாதான் வரணும் அப்படின்னு நெனப்புக் கூட்டத்துக்குச் சொல்லணும். சும்மா எல்லாரும் ஒட்டு மொத்தமா வந்து குதிக்கப் புடாது. எதன்னு கண்டுக்கறது? என்னோட ஒருத்தரு படிச்சாரு. பாண்டியன். அண்ணாச்சின்னு சொல்லுவோம். திருநெல்வேலிக்காரரு. நல்லாத் தமாசாப் பேசுவாரு. யாராச்சும் பேசுறப்போ எல்லா வார்த்தையும் ஒன்னா வந்து குமிஞ்சுகிட்டு என்னத்தப் பேசுறதுன்னு தெரியாம திக்குறப்போ "ஏமுல சிக்குன டைப் மிசினு மாதிரி நிக்கான்?"னு கேப்பாரு. டைப் மிஷின்ல சில நேரம் அடிக்கிறப்போ நாலஞ்சு கீ ஒன்னா வந்து சிக்கிக்கும் தெரியுமா, அப்போ எந்த எழுத்தும் பதியாது. புடிச்சு இழுத்துப் பிச்சு விடணும். அந்த மாதிரி சிக்கப்புடாது நம்ம கதை. இதெல்லாம் எழுத எழுத சாத்தியப்படும். ஹ... எழுத்தே, அதுக்கு வலை விரித்து வைத்திருக்கும் வலை நண்பர்களே! நீங்களெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க?! பெருமூச்சுடன்.

விளம்பர இடைஞ்சலுக்குப் பின் ஆட்டம் தொடர்கிறது...

சந்தன ஆட்டம். ஆமாம் அது உற்சாகமானது. நீங்களும் ஒரு நாள் ஆடிப்பாருங்கள். கூச்சமாயிருந்தால் தனியாகவும் ஆடலாம். ஒரு காலைத் தூக்கிக் கொண்டு மற்றக் காலால் சுற்ற வேண்டும். நாட்டியமெல்லாம் கற்றிருக்க வேண்டியதில்லை. கைகளைத் தூக்கி, விரித்து மனம் போல், லயம் போல் வீச வேண்டும். லேசாய்ச் சிரிப்பு வரும். அப்போது நன்றாய்ச் சிரிக்க வேண்டும். அதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் சிரிக்க வேண்டும். அதைப் பார்த்து உங்களோடு இருப்பவரும் விபரம் புரிந்தோ புரியாமலோ சிரிப்பார். ஆட்டத்திற் களியேறும். வேகம் கூடும். நல்ல பாட்டுக்கள் பின்புலத்தில் இருப்பது நன்று. எனக்குக் காவடிச் சிந்து, நாட்டுப்புறப் பாட்டாயிருந்தால் குதியாட்டம் வரும். இந்த மாதிரிக் கூத்துக்களைத் திருவிழாக்களிலும், வீட்டு விசேடங்களிலும் அதிகம் பார்க்க முடிவதில்லை. எல்லோரும் உட்கார்ந்து கச்சேரி பார்க்கிறோம். சாப்பிடுகிறோம். வருகிறோம். மதச் சடங்குகள் சுவீகரித்துக் கொண்டதிலிருந்தே கூத்தும் ஆட்டமும் தங்களது ஆனந்தத்தையும், உடம்பு தன் பெருமையையும் இழந்துவிட்டன என்று தோன்றுகிறது. உடம்பை மறந்து விட்டோம். உடம்பைப் போற்றுவதில்லை. உடம்பைக் கொண்டே மனசைக் கடக்கலாம்கறதையும் விட்டுட்டோம். மூளை, ஆம், அதை மட்டுமே அறிவென்றும் வலிமையென்றும் நினைத்துக் கொள்கிறோம். எங்கு போய் நிற்போமோ! என்ன செய்யலாம்? நாமெல்லாம் நன்றாய் ஆட வேண்டும். துள்ளிக் குதிக்க வேண்டும். உடம்பை வைத்து ஆனந்தங்கொள்ள, வீறு கொள்ள ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

பழைய பறை

"22, நவம்பர், 1998
ராவ ஒரு மணி.

ட்டணா டன்ட்டனா ட்டணா டன்ட்டனா
அடிச்சு மொளக்கேய், ஹோய்
டோய் இன்னொரு காவடி வருதுடோய்
உடியா உடியா;

டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கடி டன்டனக்கா
என்னாத்தா கோயிலுக்குக் கெளம்பிட்டாகலா?
ஏ தம்பி, இங்கெர்றா செத்த ஓடிப் போயி
தேங்காயும், ஊதுவத்தியும் வாங்கியாடா.
ந்தாடா, பாத்தியலா இந்தப் பய பரிஞ்சு ஓடுறத;

டனக்டனக்டனக் டன்டன்டன்டன்டன்
எட்டிக்கங்கடா, தும்பத் தறிச்சதுக்கப்பறந்தான்
மாலையில கைய வக்யனும்,
டாய் எர்றா கவட்டய, மாடு புடிக்கிற ஆளப் பாரு
தம்பி, சீக்கெரமா சரத்தக் கொலுத்து
யோவ், இன்னொரு மொளக்கு போடுங்கய்யா செத்த;

டன் டன்டன் டன் டன்டன் டன் டன்டன்
ஞ்சரே வடக்கி வூட்டக்கா போறத்த, கேளு,
ஏக்கா, எப்பவாங்க்கா?
அது ராத்திரியே முடிஞ்சிருக்கும்போலருக்கு
அவுகல்லாம் காலயிலதாம் பாத்துருக்காக.
ஆயாயே, முந்தாநாலுதாங்குறேன்
இப்புடியே போனாரு, நாம் புளி குத்திக்கிட்டுருந்தேன்.
எப்ப தூக்குறாகலாம்?

-அட நா யாரா வேண்ணாலும் இருக்கட்டுமுய்யா. எங்க வேண்ணாலும் இருக்கட்டுமுய்யா. எந்தப் பாட்டு வேண்ணாலும் கேக்கட்டுமுய்யா ஆனா அந்த சத்தம், அந்த இலுத்துக் கட்டுன மாட்டுத் தோலு சத்தந்தாய்யா என் சத்தம், எங்கவூரு சத்தம், உசுரோட சத்தம்.
இதுக்கு மூலம்: இன்னிக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்துல நடந்த கலைவிழா. தப்பாட்டம். அங்க அடிச்ச தப்பு இங்க வந்து விளுந்திருக்கு".

-------------------------------------------------------------------------

23/11/98

"இன்னொரு தப்புக் கதை

அப்பவெல்லாம் கண்ணாடி போட்ட ராமனும், வெளிச்சியனும் எப்பவும் வேட்டி துண்டுதான். முந்தி ஒருக்க ஊருக்குப் போயிருந்தப்ப, எப்ப ஆறேழு வருசத்துக்கு முந்தி, அப்பதாம் பாத்தேன், எங்க ஊரு ஆலுக கொலாய் போட்டுக்கிட்டு தப்பு கொட்றதை. காவடிக்கு முன்னாடி தாளத்தோட அடியெடுத்து வச்சி தப்பு கொட்டிக்கிட்டு போனாக. அதுக்கப்புறம் நேத்துதான் மறுதிரியும் பாத்தேன். நம்ம சனமென்ன, டெல்லி சனமென்ன எல்லாம் வாயப் பொளந்துகிட்டு பாத்துச்சுவ. தப்பு சத்தங் கேக்கயிலதான் டெல்லி தெருவுல நடந்த ஆளுக்கெல்லாம் உசுரு வந்த மாதிரி இருந்துச்சு எனக்கு. மனசுக்குள்ள எந்திரிச்சு நின்னு கத்துனேன், "அப்புடித்தான் அப்புடித்தான் அடிங்க அடிங்க நல்லா அடிங்க"ன்னு. எங்க ஊருக்காரங்ய குடுத்து வச்சவங்ய, போவயிலகூட இந்த சத்தத்தோடதான் போவாங்ய".

--------------------------------------------------------------------------

ஆப்பிரிக்காவுக்கு இந்தியத் தடுப்பூசி!

போன வருடத்தில் எய்ட்ஸ் நோய்க்குக் குறைந்த செலவில் மருந்து தயாரித்துத் தர சிப்லா ஒப்புக் கொண்டது நினைவிருக்கலாம். இப்போது இன்னொரு இந்திய நிறுவனம் உறையழல்/மூளை உறையழற்சிக்குத் (meningitis) தடுப்பூசி செய்து தர முன் வந்திருக்கிறது.

மூளையையும் தண்டுவடத்தையும் சுத்தி ஒரு திரவம் இருக்கு. மூளை-தண்டுவட திரவம் (cerebro spinal fluid) அப்படிங்கற இதைச் சுத்தி ஒரு உறை (meninga எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து) இருக்கு. இந்த உறையைக் கிருமிகள் தாக்கினா வர்ற நோய்க்குப் பேரு, உறையழற்சி. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை எல்லாம் இதைத் தாக்கும். தாக்கப்படறவங்க பெரும்பாலும் குழந்தைகள். கவனிக்காம விட்டா இறப்போ அல்லது மூளைப் பாதிப்பால் காது கேளாமை மாதிரி பிரச்சினைகளோ ஏற்படும். தடுப்பூசி இருக்கு. வைரஸ்களால வர்ற உறையழற்சி பெரும்பாலும் தானாகவே சரியாப் போயிடும். ஆனா இந்த பாக்டீரியாக்களால் வர்றது ஆபத்தானது, ஏறக்குறைய 10% பேர் இறக்க வாய்ப்புண்டு. அதுக்காகத்தான் தடுப்பு மருந்துகளை பாக்டீரியாவுக்கு எதிராத் தயாரிச்சிருக்காங்க. இந்தியாவுல உறையழற்சியோட பாதிப்பு எந்த அளவுன்னு எனக்குச் சரியாத் தெரியாது. ஆனா ஒரு 1992 புள்ளி விபரப்படி 12305 பேருக்கு வந்திருக்கு, அதுல 2009 பேரு இறந்திருக்காங்க. இது இன்னும் கூடியிருக்கலாம். ஆப்பிரிக்காவுல நிலைமை ரொம்ப மோசம். கீழக்கரை எத்தியோப்பியாவுலேருந்து மேலக்கரை செனெகல் வரைக்கும் பட்டையடிச்ச மாதிரி உறையழற்சி பரவியிருக்கு. பத்து வருஷத்துல 100,000 பேர் செத்திருக்காங்க. இதுக்குத் தடுப்பூசி போட்டா தவிர்க்கலாம். பெரிய பெரிய மருந்துக் கம்பெனிங்க தடுப்பூசி தயாரிக்குது. ஆனா ஒரு ஆளுக்கு ஒரு தரம் ஊசி போட ஆகும் செலவு US $ 2. ஆப்பிரிக்காவுக்குத் தாங்குமா? ஆனா எதாச்சும் செஞ்சாகணுமே. இங்கதான் இந்திய மருந்து நிறுவனம் ஒன்னு வருது. Serum Institute of India (SII) அப்படின்னு பேரு. இவங்க 40 அமெரிக்கக் காசுகளுக்கு இந்தத் தடுப்பூசியைத் தயாரிச்சுத் தர்றதா சொல்லியிருக்காங்க. Meningitis Vaccine Project இந்த விலைக் குறைப்பு அநேக மக்களுக்குப் பயனளிக்கும்னு சொல்லுது.

மேலும் விபரங்களுக்கு:
1. செய்திக்கு ஆதாரம்
2. உறையழற்சியைப் பற்றிய Center for Disease Controlன் இணையப் பக்கம்.

கோளாட்டம்!

கோளாட்டம் அப்படிங்கற பேருல நேத்தைய ஆட்டம். எல்லா வயசுக் குழந்தைகளுக்குமானது.நுழையும் போது ஈயப் பாத்திரக் கடை மாதிரி ஒரே சத்தம். அங்க ஒரு எடத்துல ஒருத்தரு அடுப்படில இருக்க எல்லாப் பாத்திரங்களையும் தூக்கிக்கிட்டு வந்து போட்டிருக்காரு. அடிக்கிறதுக்கு குச்சியும். குஞ்சு குளுவானெல்லாம் குச்சியால சட்டி முட்டியையெல்லாம் அடிச்சுக் கிளப்பினதுகள். தரையில பரப்பி வச்சு, கம்பியில கட்டி வச்சு. பேரு junk yard orchestra.ஒருவர் புத்தகப் படமொன்றைக் காட்டி, இதான் நெருப்புக் கோழின்னார். இதோ பாருங்க அதோட முட்டை, நிஜ முட்டை (உள்ளீடற்றது!). இன்னும் சில பறவை முட்டைகள், மரத்தால் செய்யப்பட்டவை. ஒரு குவியலா குச்சியெல்லாம் போட்டிருந்தாங்க. பிள்ளைகள் எடுத்து வட்டமா அடுக்கிக் கூடு செய்யலாம். உள்ளேயும் உக்காந்துக்கலாம். கண்ணுக்குக் கண்ணாடி, கைக்கு உறை. பாதுகாப்புக்கு. பிள்ளைகள் பறவைகளைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.கொஞ்சம் தள்ளி அங்கேயொரு மேசையருகில் மின்காந்தம் செய்து பழகிக் கொண்டிருந்தனர்.அப்புறம் பாருங்க இவரு, நீல மனுஷன். நல்ல தெளிவான குரல். என் பேரு சீகோ. எனக்கு வயசு 2.6 வருஷம். நியூயார்க்கில பொறந்தேன். ஒடம்பொறந்தார் அறுவர். வாங்க வாங்க, நல்லாருக்கியளா, எந்தூரு, அடடே குட்டிப் பெண்ணே உன் சட்டை நல்லாருக்கே, என்னோடு படம் எடுத்துக்கறியா, ஏ நங்கையே எனக்குக் கை குலுக்கு, என்னோடு ஆட விருப்பமா? இப்படியெல்லாம் பேசியபடி நின்றது ஒரு ரோபாட். காலில் சக்கரத்தைக் கட்டி நகர்ந்தது. அழைத்தால் திரும்பியது, கேள்விக்குப் பதில் சொன்னது. யாரிடமோ ஸ்பானியத்தில் பேசியது. உனக்கு எத்தனை மொழி தெரியுமென்றேன். நான் நிறைய மொழிகளைப் பேசுவதற்குப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கேன், உனக்கு எத்தனை தெரியுமென்றது. தமிழ், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி. உனக்குத் தமிழ் தெரியுமா? தெரியாது நண்பரே, உங்கள் மொழியில் ஹலோ எப்படிச் சொல்வீர்கள்? வணக்கம். Same to you my friend என்று நடையைக் கட்டியது! வாங்கலாம், வாடகைக்கும் எடுக்கலாம். விபரம் வேண்டுமானால் இங்கே பார்க்கலாம், நாங்கள் பார்த்த 'ஆளின்' பெயர் SICO.ஒரு அகலமான மரத் தொட்டி. அதுக்குள்ள மணல். மணலுக்குள்ள புதைஞ்ச கிளிஞ்சல்கள், சங்குகள், சிப்பிகள். அளைந்து கிடந்த பிள்ளைகள். பிள்ளைகளா, நீங்க ரெண்டு சங்குகளை வீட்டுக்குக் கொண்டு போகலாம்னார் அருகிருந்தவர். அருங்காட்சியகத்துக்காரர். இதெல்லாம் எங்கேருந்து பொறுக்குனீங்கன்னேன். இந்தியப் பெருங்கடலோரத்துலேருந்து. ரொம்ப காலத்துக்கு முந்தி, நீ இந்தியனா, ஓ அப்ப நீ பாத்திருப்பே. ஆமாம். அப்புறம் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆமா நீ நம்ம அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கியா? இன்னும் இல்லையே. நீ வரணும், இந்தா ரெண்டு சீட்டுன்னு குடுத்தார். நன்றின்னு வாங்கிட்டேன். மாசிலனுக்கு ரெண்டு சங்குகள்.அப்புறமா திடீர் வித்தைகள். அதாவது பார்க்க வந்திருக்கும் குழந்தைகளுக்குக் குட்டிக் கரணம் போட, பிரமிடு மாதிரி ஒருவர் மேலொருவராய் ஏறி நிற்கச் சொல்லித் தந்தார்கள். சின்ன மேடையில் பிள்ளைகள் செய்து காட்டுகிறார்கள். ஒரு குட்டியூண்டு திடீர் நாடகமும். இதுவும் உடனடிக் கலைஞர்களால்.

பார்க்க முடியாது போனது சிறு கோளரங்கம். அதற்கான முன்பதிவு முடிஞ்சிருச்சாம். வருகைக்கு நன்றி, வணக்கம்!

ஈசனின் விதி

தினத்தந்தியில் ஒரு செய்தி. புதுக்கோட்டை மாவட்டம், திருவிடையார்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில். போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்திருக்கிறது. சுத்துப்பட்டி 19 கிராமத்து மக்களும் சேர்ந்து ரூ.40 லட்சம் திரட்டிச் சீர் செய்வோம்னு கிளம்புறாங்க. சரி நல்லதுதான்.

என்னைச் சங்கடப் படுத்திய முரண் என்னன்னா, இந்த இடிபட்டக் கோயிலைப் புதுப்பிக்கிறதை ஆரம்பிக்க ஒரு விழா நடக்குதாம். அந்த விழாவுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் வர்றாராம். அவர் காமதேனு பீடாதிபதியாக முடி சூட்டிக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆயிருச்சாம். இந்த இடிபாட்டுப் புதுப்பிப்பு ஆரம்பிப்பு விழாவின்போது இவரின் 50வது ஆண்டுக்காகச் சிறப்பைச் செய்யப் போகிறார்களாம். எப்படியாம், ஒரு கோடி வண்ண மலர்களாலும், வாச மலர்களாலும் பாத பூசை செய்து.

கோயிலைப் புதுப்பிக்க மக்களிடம் வசூலித்த பணத்தில், இடிபாடுகளுக்கிடையில், தனக்கு ஒரு விழா நடத்த அனுமதிக்க, அதை ஏற்றுக் கொள்ள எப்படி அந்தப் பீடாதிபதிக்கு மனம் வருகிறதோ? ஊர்ப்'பெரியவர்' ஒருவர் துக்க வீட்டில் உட்கார்ந்து இலை போட்டு விருந்து சாப்பிடுவதைப் பார்க்கிறாற் போலிருக்கிறது.

நம்ம ஊர்க்காரங்களுக்கு இந்த முரணெல்லாம் தெரியாது. அவங்களுக்கு அடடா இந்த நாயேன்களையும் மதிச்சு ஒரு பெரிய மகான் நம்ம ஊருக்கு வர்றாரே, நம்ம குடுக்குற மருவாதிய வாங்கிக்கிட்டு நம்மளுக்கு வரம் குடுத்துட்டுப் போறாரேன்னு புல்லரிச்சுப் போயிருக்கும். முற்றுந் துறந்த சாமியும் பூர்ண கும்ப மரியாதையைப் பிச்சையாக வாங்கிக்கிட்டுப் போகும்.

மக்கள் உழைத்துச் சேர்த்த காசு இப்படி அழிய வேண்டுமென்பது ஈசனின் விதி போலும்!

பல நிற நாளொன்றில்!

மாடு சண்டித்தனம் பண்ணுகிறது. வண்டிமாடு சண்டித்தனம் பண்ணினால் தார்க்குச்சி போடுவதும், யாரோட பொடிமட்டையில இருந்தாச்சும் ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை மாட்டு மூக்கில் வைப்பதும் உண்டு. விஷயங்கள் என்னைச் சுற்றி உட்கார்ந்திருக்கின்றன. ஆளுக்கொன்றாய்க் கதை சொல்கின்றன. எதை எழுதுவது என்று கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டு இந்தப் படத்தை இடுகிறேன்.

மாசிலனின் கைவண்ணம். எல்லா வண்ண மாத்திரைகளிலும் தலா ஒரு சொட்டுத் தண்ணீர், கையிலொரு தூரிகை, கொடுத்துவிட்டால் போதும். நோட்டுப் புத்தகம் மட்டுமில்லை, தரை, கால், வயிறு என்று வண்ணப்படும். ரொம்ப நாட்களுக்கப்புறம் அந்த வண்ணப் பெட்டியைப் பார்ப்பது போலிருக்கிறது. நிவேதிதாவின் நினைப்பும் வந்தது!
படக் குறிப்பு: இரண்டு எதிரெதிர்ப் பக்கங்களில் மாசிலன் வரைந்த படங்களை Photoshop மூலம் ஒன்றாய் இட்டிருக்கிறேன்!


எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்*

சனியன்று முகத்திற் கருஞ்சாந்தும் வெண்கோடும்
யாரென்று கேட்டேன் பேரொன்று சொன்னது.
பிறிதொரு நாள் நிறமடித்த கொம்பிரண்டு
இன்னொரு பெயரில் யாரோ வைத்தாராம்.
இப்படித் தினமும் வடிவுகொண்டு வருவதும்
குழாயும் விழியும் வழிநீர்க் கொட்டி நானும்
கழுவிக் களைந்து வெளியில் விடுவதும்
மண்ணில் ஈரப் பந்தாய் உருண்டதுவும்
மீண்டுங் கால்மேல் புரட்டிவந்து நிற்பதுவும்.
சொல்லியுங் கெஞ்சியுங் குச்சியை யாட்டியும்
நானுஞ் சொல்வேன் அவனுஞ் சொல்வான்
மெளனகுரு சாமியொருத்தி வருநாளெல்லாம்
விழிமலர்த்திப் புன்னகைத்து உள்ளே போயென்பாள்.
ஈதன்றோ பிள்ளையென்று யாவரும் நோக்கக்
கேட்டுவிழி நீர்சொரிய நிற்கும், வீடு வந்து
உனக்கும் பெப்பே ங்கொப்பனுக்கும் பெப்பேயெனக்
கூரைத் தலையிடிக்கக் குதியாட்டம் போடும்.

ஏ பொல்லாக் குரங்கே, உன்னோடு வாழ்தல் அரிது!

*பின் குறிப்பு:
...முறையாய் நடப்பாய் முழுமூட நெஞ்சே
மேவி மேவித் துயரினில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்...
என்ற வாக்கில் பாரதியார் ஒரு விநாயகர் பாடலில் தன் மனத்தைப் பார்த்துப் பாடியதிலிருந்து, இத்தலைப்புக்கான வரி எடுக்கப் பட்டிருக்கிறது.

மனசே மனசேராபர்ட் சின்னப் பிள்ளையாயிருந்த போது ஒரு படம் வரைந்தான். அவன் வாத்தியார் இது என்ன படம் என்று பரிகசித்தார். ராபர்ட் மூன்றாம் வகுப்புத் தேர்வில் கடையனாகத் தேறினான். ஆசிரியர் மோசம் என்றார். அடுத்தடுத்த வருடங்களில் படு மோசமானான் ராபர்ட். நுண்ணறிவுச் சோதனைகளில் (IQ test) தடுமாறுகிறான்.

ஆறாவது வகுப்பிலொரு ஆசிரியர் இவனிடம் என்னத்தையோ கண்டுவிட்டு நன்றாகத்தான் படிக்கிறாய் என ஊக்குவித்தார். ராபர்ட் நன்றாகப் படித்தான். தனக்கு நுண்ணறிவுச் சோதனைகளில் ஏன் தடுமாற்றம் என்று சோதனை முறைகளையே சந்தேகிக்கிறான். நடைமுறை வாழ்க்கைக்கும் புத்தக அறிவுக்கும் வித்தியாசமிருப்பதாக எண்ணி இதனைத் தன் வகுப்புத் தோழரிடமே ஆய்வு செய்கிறான். கல்வி நுண்ணறிவும் (intelligence), நடைமுறை நுண்ணறிவும் வெவ்வேறே என்ற அவனது எண்ணம் வலுப்படுகிறது. பிறகு ராபர்ட் பல்கலைக் கழகத்தில் மனோவியலில் சேருகிறான். அறிமுகப் பாடத்தில் தட்டி முட்டித் தேறிய அவனிடம் வாத்தியார், ம்ஹ¥ம், நீ வேறு பாடம் படிப்பதே புத்திசாலித்தனம் என்க, இவனும் கணக்குக்கு ஓடுகிறான். அங்கோ இதை விட மோசம். மீண்டும் உளவியலுக்கே வந்து படித்தான். பிறகு ராபர்ட் வளர்ந்து பெரிய்ய்ய பிள்ளையாகி ராபர்ட் ஸ்டெர்ன்பர்க் என்ற உளவியல் நிபுணனாகி நேற்றைக்கு நம்ம திருவிழாவுல நடந்த ஒரு கூட்டத்துக்கு வந்து நுண்ணறிவைப் பத்திப் பேசினார். இவரோடு இன்னும் இருவரும் பேசினார்கள். என்ன தெரியும்கறத விட எவ்வளவு தெரியாது அப்படிங்கறதுதான் தெரிஞ்சது!

பேச்சின் மொத்த விஷயம்/கேள்விகள்! தன் இனத்தையே போரினாலும் வெறுப்பினாலும் அழித்துக் கொள்ளும் மனித இனத்தை விண்வெளியிலிருந்து பார்க்கும் யாருமே ஆச்சரியப்படுவர். விலங்கிலிருந்து பிறந்த இந்த விலங்கின் மனம் எப்படிப் பரிணமிக்கிறது? மூளையைப் பார்க்கலாம். பொருள். அது ஏற்படுத்தும் மனசைப் பார்க்க முடியாது. புலன்கள் மனசைக் கட்டமைக்கின்றன. கற்றுக் கொள்ளுதல் பிறந்ததிலிருந்தே நிகழ்கிறது. தேவையை உணர்தல், தேடுதல், அடையாளங் காணுதல், எளிமைப் படுத்தல் இதெல்லாம் மனசின் கூறுகள். இக்கூறுகளெல்லாம் புறக் காரணிகளால் பாதிக்கப் படுபவை. மாற்றப் படும் சாத்தியமுள்ளவை. மனசின் கட்டமைப்பில் கலாச்சாரத்துக்கும் முக்கியப் பங்குண்டு. இந்தியனுக்கும் அமெரிக்கனுக்கும் ஒரே மாதிரியான சோதனை செல்லாது. வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுத்ததன் மூலமே வெற்றி பெற்றவர்களாயிருக்கிறார்கள். எனவே உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ஸ்டெர்ன்பெர்க் ஒரு நுண்ணறிவுச் சோதனையைச் செய்து வருகிறார். அதில் ஏற்கெனவே சொன்னது மாதிரி கல்வி நுண்ணறிவு, நடைமுறை நுண்ணறிவு இவற்றோடு பகுப்பாய்வு நுண்ணறிவு (analytical intelligence) இதையும் சேர்த்து ஆராய வேண்டும் என்கிறார். இப்போதைய பள்ளிகள் வெறும் கல்வி நுண்ணறிவை மட்டுமே சோதித்து விட்டு மாணவர்களை மதிப்பிடுகின்றன. இது உண்மையான மதிப்பீடு அல்ல. இவர்களது பலவிதமான திறன்களையும் சோதித்தே மதிப்பிட வேண்டும். இதன் மூலம் வெறும் ஏட்டறிவே அறிவு என்ற நிலை மாறும்.

அப்புறமாய்க் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப் பட்டது. சொந்த விஷயங்களைக் கூடக் கூச்சமில்லாமல் மக்கள் பேசுகிறார்கள், உதாரணமாய் ஒருவர், எனக்கு இருமுனைக் கோளாறு (bipolar disorderக்கு இப்படிச் சொல்லலாமா?) இருக்கிறது, இதற்கு வைத்தியம் செய்து கொள்கிறேன், இதை நான் எப்படிச் சீக்கிரம் குணப்படுத்திக் கொள்வது? இது மாதிரியாக. நான் கேள்வி பதில்களின் போது கவனச் சிதறலில் சிக்குண்டேன். ஏனெனில் நானும் என் கேள்விகளை யோசித்தபடி எழுந்து வரிசையில் நின்றேன். எனக்கு முன் ஒரேயொரு ஆள் இருக்கும்போது நேரம் முடிந்ததையா என்றுவிட்டார்கள். எனவே என் கேள்விகளுக்கு நீங்கள் விடை(?) சொல்லுங்கள்! குழந்தைகளுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் கொடுப்பதன் மூலம் அவர்களது நுண்ணறிவுத் திறனை மட்டுப் படுத்துகிறோமா, உதாரணமாக எனக்குச் சிறு பிள்ளையில் ஒரு மரக்கட்டையே பொம்மை, வீடு, பஸ், கிணற்றில் தண்ணீர் இறைக்கும் வாளி எல்லாம். இப்போது என் மகனுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பொம்மைகள். இது அவனது நுண்ணறிவு வளர்ச்சியை எப்படி மாறுபடுத்தும்?

வீடு திரும்பும்போது இந்த மனோ பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? இப்போதைய உலகியல் சார்ந்த புரிதல்களோடு நாம் நின்றுவிடுமா அல்லது அதையும் தாண்டி மெய்யறிவு என்கிறார்களே அது மாதிரி எதையேனும் கண்டு கொள்வோமா? திருவிழா என்றால் கூத்துப் பாட்டுக்களோடு நில்லாமல் பல்விதமான நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்களே, நம்ம நல்லநிலம் முத்துராமன் இங்கிருந்திருந்தால் உங்களுக்கு இன்னும் நிறையக் கிடைத்திருக்கலாம் என்றவாறு மனம் இயங்கிக் கொண்டு வந்தது!

பின் குறிப்புகள்:
1. ஸ்டெர்ன்பெர்க்கின் இணைய பக்கம்.
2. மேலே இருக்கும் படத்தை நான் எடுக்க வில்லை, நிகழ்ச்சி நிரலிலிருந்து உருவியது.

திருவிழா

ஆடித்திருவிழா மாதிரி இங்க, நியூ ஹேவன்லயும் ஆட்டமும் பாட்டமுமா இந்தக் கோடையில ஒரு திருவிழா நடக்குது. இம்மாதம் 11லேருந்து 26 வரைக்கும். விபரங்கள் இங்கே.

அன்றைக்கு அந்தச் சிகையலங்காரங்களைப் பார்த்தோமல்லவா? அதுக்கப்புறம் ராத்திரி இந்த ஒளிச் சிற்பம். வானவில்லைத் துரத்துதல் என்று பெயராம். நிறைய டியூப் லைட்டை வரிசையா வச்சு, இசைக்குத் தகுந்த மாதிரி அதில் நிறங்களும் வடிவங்களும் தோன்றும்படி செய்திருக்கிறார் ஒரு கணிஞர்/கலைஞர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் இந்தச் சுட்டியைப் பார்க்கலாம். எங்க ஊர்ல சக்கரம் சுத்தும் சீரியல் லைட்டைப் பாக்குறப்போ, அது என்னவோ குழாய் ஸ்பீக்கர் பாட்டோட சேர்ந்து சுத்துற மாதிரி இருக்கும், நெனப்புதான். இங்க நெசத்துலயே ஒளியும் ஒலியும் ஒத்திசைந்திருக்கின்றன.அப்புறம் நேத்து நகர் மன்றத்துக்கிட்ட இருக்க புல் வெளியில நிறைய நிகழ்ச்சிகள். ஊர்வலம் பார்க்க முடியலை. உள்ளே போகும் போதே ஆப்பிரிக்க மேளச் சத்தம், பந்தலுக்குள் எட்டிப் பார்த்தோம். பார்வையாளர்களைக் கொண்டே அங்கு ஒரு கச்சேரி நடந்தது. நாங்களும் உட்கார்ந்து கொட்டினோம். சத்தமெழுப்ப எத்தனையோ சின்னச் சின்னக் கருவிகள், ஒவ்வொன்றும் தம் போக்கில் தனித்தனியாய், பிசிறலுடனும் நளினத்துடனும். ஆனால் மொத்தமாய் வெளிக்கிளம்பிய அந்தக் கூட்டிசை துடிப்பானது. இதுதான் மக்களிசையோ?மாசிலன் ஆடியாடி நன்றாய் அனுபவித்தான். படப்பெட்டிக்குச் சக்தி பிரச்சினையால் நினைத்தபடியெல்லாம் எடுக்க முடியவில்லை. அதனால் கோப்பிலிருந்து தோழர் மாசிலனின் படமொன்று! நாங்கள் வெகுநேரம் இங்குதான் செலவிட்டோம்.இந்த முரசு சீனத்துக் காரர்களுடையது. ஊர்வலம் முடிந்ததும் வைத்துக் காட்டுகிறார்கள். அடிக்க விரும்புபவர்கள் அடித்துப் பார்க்கலாம்.மாசிலன் போன பக்கமெல்லாம் பின்னாடியே திரிஞ்சோம். திருவிழாவுக்கு வண்டி கட்டிக்கிட்டு வந்த மாதிரி மக்கள் ஆங்காங்கே புற்றரையில் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நடுவிலொரு செயற்கை நீரூற்று, சுற்றிச் சுற்றி வந்தான். பலூன் கேட்டான். மேடையில் ஒரு ஸ்பானியக் குழுவின் பாட்டுக் கச்சேரி. இப்படியாய் ஒரு மூன்று மணி நேரம் சுற்றியிருந்து விட்டுத் திரும்பினோம். ஒவ்வொரு நிகழ்ச்சி/கலைஞரையும் பற்றி ஆழமாய்த் தெரிந்து எழுதலாந்தான், ஆனால் போனோமா, கூத்துப் பார்த்தோமா வந்தோமான்னுதான் இது வரைக்கும் இருக்கேன். பார்க்கலாம்!

வேடங்கள்!நேற்று தெருவிலே. வெள்ளுடை வேடதாரிகள் இருவர். ஸ்பானிய வேடமாம். அதோ கண்ணாடியில இருக்கு பாருங்க, அந்த அலங்காரக் கம்பெனிக் காரங்க (மன்னிக்கவும், இவர்கள் அலங்காரக் கம்பெனி இல்லையாம், சிகையலங்காரக் கலைக் குழுவாம்!). கூட்டத்திலிருந்து ஆட்களைப் பிடித்து இப்படி வண்ணமடித்து அலங்கரித்து(?) விட்டார்கள். புது வேடத்துடன் நேற்று தெருக்களில் கொஞ்சம் பேர் அலைந்து திரிந்தார்கள்!

ககர முதல மெய்!


குழந்தைகளோடு இருக்கும் போது மறந்து போன சிலவற்றைத் திரும்பவும் பார்க்கலாம். உதாரணமாய்ப் பால் புட்டியில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியில் வானவில்லின் நிறங்கள். அப்புறம் காலகாலமாக நமக்குப் பழக்கப் பட்ட விஷயங்களை மீள் பார்வை செய்து இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது நம் இன்றைய கதை. கொஞ்சம் பாமரத்தனமாக இருக்கும், சிரிக்க வேண்டாம்.

உடல் உறுப்புக்களை ஒரு நாள் என் மகனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இது சில மாதங்களுக்கு முன், அப்போது அவனுக்கு ஒன்னரை அல்லது ஒன்னே முக்கால் வயசிருக்கலாம். கண், காது, கை, கால்...தொட்டுக் காண்பித்துச் சொன்னேன். மாசிலனும் சொன்னான். திடீரென்று எனக்குள் தூங்கிய ஒரு மொழியாராய்ச்சியாளன் ஒரு சிலுப்பு சிலுப்பி எழுந்தான். நிறுத்து சுந்தரா, அது என்ன இந்த உறுப்புக்களெல்லாம் ககர வரிசையிலேயே ஆரம்பிக்கின்றன என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் (ககர வரிசை என்பதற்கு 'க'விலிருந்து 'கெள' வரைக்கும் என்று அர்த்தப் படுத்திக் கொள்கிறேன்). உடம்பு, மெய், மெய்யெழுத்து, மெய்யெழுத்தின் முதலெழுத்து க. சொக்கா! (யுரேகாவை இப்படியும் சொல்லலாமாக்கும்).

அப்படியென்றால் இந்த 'க'னாதான் மெய்யெழுத்துக்களிலேயே முதலாவதாகத் தோன்றியிருக்க வேண்டும். அதைத்தான் ஆதிமனிதன் முதலில் உச்சரித்திருந்திருக்க வேண்டும். அதனால்தான் முக்கியமான உறுப்புகளின் பெயர் ககரத்தில் இருக்கிறது. கண், காது, கை, கால். இதை ஒருக்கால் நீங்கள் நீட்டிக் கொண்டு போகுங்கால், கல், கடல், காற்று, காதல், கல்வி, கலவி என்று வாழ்வின் சகலத்துக்கும் போய்ப்பார்க்கலாம். சரி, இதுதான் முதலில் தோன்றியதென்றால் இதன் பயன்பாடும் அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால் ககரத்தைப் பயன்படுத்தும் சொற்கள் அதிகமானவையா? சொற்களுக்கு நடுவே ககரம் வருவதைக் கணக்கிடப் போனால் என் மூளை காணாது. ககரத்தில் ஆரம்பிக்கும் சொற்களை வேண்டுமானால் கணக்கிடலாம்.

ந.சி.கந்தையா அவர்கள் தொகுத்து சிங்கப்பூர் EVS Enterprises வெளியிடும் தமிழ் அகராதியை எடுத்தேன். ககரத்தில் ஆரம்பிக்கும் சொற்களை எண்ண ஆரம்பித்தேன். ஒரு சோம்பேறிப் பயல் உள்ளேயிருந்து டேய் என்னத்துக்குடா எல்லாத்தையும் எண்ணுற, மொதல்ல பக்க எண்ணிக்கை கூடுதா கொறையுதான்னு பாரு, அப்புறம் வேணும்னா எண்ணிக்கலாம்னு சொல்லிட்டுப் படுத்துக்கிட்டான். நான் பக்கங்களை எண்ணினேன். இந்த இடத்திலே சராசரியாக ஒரு பக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் எல்லா எழுத்துக்களுக்கும் சமம் என்ற ஒரு உத்தேசத்தைக் கொள்கிறேன். ககரத்துக்கு 120 பக்கங்கள். இதுதான் அதிகமான பக்க எண்ணிக்கை. இதற்கு அடுத்தாற்போல் வருபவர் பகரம். இதற்கு 114. இரண்டும் வல்லினங்கள். சொற்களை எண்ணிப் பார்க்கலாம். இது வேறு ஏதேனும் வழியில் (மின் அகராதிகளின் மூலம்) சுலபமாயிருக்கலாம். இதைப் பின்னொரு நாள் செய்வேன். மாசிலனுக்கும் ககர வரிசைச் சொற்களை உச்சரிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. ஆக, குழந்தையின் மொழி வளர்ச்சியிலும் ககரம் முன்பாகவே வந்து விடுகிறது. இன்னும் மாசிலனால் சொல்ல முடியாத எழுத்துக்கள் ங, ஞ, ர, ற. மற்றபடி ல, ள, ழ எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி சத்தம்தான் எழுப்புவான். ஆக, ககரம் இப்படியாக முக்கியமானதாக எனக்குப் படுகிறது.

இதையெல்லாம் ஏற்கெனவே விற்பன்னர்கள் ஆழமாய் ஆராய்ந்திருப்பார்கள், நான் இங்கு உட்கார்ந்து கொண்டு என் மகனைப் படுத்துகிறேன். உனக்கு மகனாகப் பிறந்து இன்னும் எதையெல்லாம் அனுபவிக்கப் போகிறானோ என்று சிலர் காலை வாருவதுண்டு! ஞாயந்தான் :)

பிரபலங்களைத் தாக்குவோம்! 1. பாரா

இன்னும் ஆறு நாட்களுக்கு ஆறு பிரபலங்கள் இங்கு தாக்கப் படுவார்கள் என்ற கட்டியத்துடன் தாக்குவதற்குக் கைவசம் ஆறு பிரபலங்கள் இல்லாத காரணத்தால் இன்றைக்குப் பாராவை மட்டும். 1 போட்டிருப்பது வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு. மற்றபடிக்கு இந்தத் தாக்குதல் பாடுபொருள் சம்பந்தமானது மட்டுமே (நபர் எதிர்ப்பு, வயிற்றெரிச்சல், இதன் மூலம் புகழடைய நினைத்தல் போன்ற இழிபண்புகளால் இல்லை).

பாரா சொல்கிறார், பிரபலங்களைத் தாக்க வலைப்பூக்களைப் பயன் படுத்தாதீர்கள் என்று. நான் சொல்கிறேன், எப்போதுமே நாம் புகழ் பெற்றவர்களைத்தான் தாக்க வேண்டும். ஏன் தாக்க வேண்டும்? ஏனென்றால் புகழ் பெற்றவர்கள் சொல்வதுதான் நிறைய பேரால் கவனிக்கப் படும், அவர்கள் சொல்வதற்கே இளையர்களால் பின்பற்றப் படக்கூடிய சாத்தியங்கள் அதிகம். எனவே இவர்கள் எதையும் தவறாகச் சொல்லிவிடக் கூடாது. இவர்கள் வாயிலிருந்து வருவது நம் பார்வைக்கு ஒழுங்காக இல்லாத பட்சத்தில் இவர்களது புகழைக் கண்டு சும்மா இல்லாமல், நாம் உண்மையென்று நினைப்பவற்றின் துணை கொண்டு இவர்களை நாம் தாக்க வேண்டும். ஒருவர் புகழ் பெற்றவர் என்பதற்காக மட்டுமே அவர் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமா போட்டுக் கொண்டு நாம் இருக்கக் கூடாது.

இப்போது பாரா "இட்டிருக்கும் கட்டளைகள்" வெட்டி, மழுங்கடித்து ஒரே மாதிரியான தொட்டிச் செடிகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள். வலைப்பூக்கள் காட்டுப் பூக்கள். இந்த ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற தன்மையே எழுத்தின்/வலைப்பூக்களின் வலிமை. இதை நேர் செய்கிறேன் என்ற போக்கில் குலைப்பது ஒரு எழுத்தாளருக்கு அழகில்லை. அவர் தனக்குத் தெரிந்ததை எழுத்து என்று நினைத்து எழுதிக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஒவ்வொரு வலைப்பதிவாளருக்கும் தான் எழுதுவது முக்கியம். அது கடவுள் ஒழிகவோ, ஸ்ரீ ராமஜெயமோ. எனக்குப் பாராவின் எழுத்தை விட என் எழுத்துத்தான் பிடிக்கும். சத்தியமாக. நான் சோர்வடையும்போது பாராவையோ அல்லது வேறு எவரையுமோ படிப்பதில்லை. என்னையும், என் எழுத்துக்களையுமே படித்துக் கொள்கிறேன். என்னைப் பார்க்க எனக்குள்தான் இறங்க வேண்டும். சுந்தர ராமசாமிக்குள் இறங்கி என்னைத் தேட முடியாது. என் எழுத்தையும் நான் சுந்தர ராமசாமியின் எழுத்து மாதிரியே ஆக்கிவிட்டேனென்றால் நான் என்னத்தைப் படிக்க? நம்மை நாம் கண்டறிய உதவுவது நமது எழுத்துக்களே. எழுதுபவது எந்தக் கொம்பன்/கொம்பியாக இருந்தாலும் அவரை நாம் ஓரளவுக்குத்தான் உணர முடியுமே தவிர, நாம் நம்மை உணர்வதற்கு நம் எழுத்துக்களே முதன்மை. எனவே எப்படியாயினும் எழுதுவோம். எல்லா ஆறுகளும் சின்னதாய்த்தான் ஆரம்பிக்கின்றன. வலைப்பூக்கள் பத்திரிகைகளைப் போலக் கட்டமைப்புகளுக்குள் இயங்குவதில்லை. எனவே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளாமல் பிடித்ததை எழுதுவோம். மன ஆற்றின் போக்குக்கு விடுவோம். அது தன் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். பாரா கொடுக்கும் மண்வெட்டிகளை வாங்கிக் கொண்டு வந்து நம் வலைப்பூவை வெட்டிக் கொத்திக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

பாரா போன்ற பிரபலங்களுக்கு/வழிகாட்டிகளுக்கொரு வேண்டுகோள், எந்த வலைப்பூவையும் உங்களுக்கு வேண்டுமென்றால் படியுங்கள். இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்ததைப் படித்துக் கொள்ளுங்கள், படித்ததைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை யாரும் வந்து ஐயா என்னுடையதைப் படித்துவிட்டு ஒரு ஐந்து மார்க்கு போட்டுவிட்டுப் போங்கள் என்று கெஞ்சப் போவதில்லை. அறிவுரை என்ற பெயரிலே ஒரே வடிவான ரொட்டிகளை அச்சில் வார்க்கும் ரொட்டிக் கம்பெனியாக வலைப்பூவுலகை ஆக்காதீர்கள்.

கடைசியாய் ஒன்று, நமக்கு ஒவ்வாதவொன்றைச் சொல்வது பிரபலமானவர் என்றால் அதை இன்னும் கொஞ்சம் வலிவாகவே தாக்க வேண்டும். பாராவின் மறுமொழிப் பெட்டியிலும், தத்தம் வலைப்பதிவுகளிலும் பாராவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு 139வது வட்டத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

துண்டு துண்டாய்

இதையா, அதையா, துண்டு துண்டாய்க் கிடக்கும் எதையாச்சும் எடுத்துக் குடைந்து, கடைந்து, பெருசாக்கிக், கூராக்கி, ஆஹா பாருங்களென்று காட்ட ஆசைதான். அதற்குப் பதிலாய். இல்லை அதற்குப் பதிலாய் இல்லை இது. அது இன்று முடியாது அதனால். கருமம் இந்த இடத்தில் ஒரு சுழலுக்குள் நான் மாட்டிக் கொண்டேன், நீங்கள் இந்த வான வில்லை, அதுவும் துண்டுதான், பார்த்துவிட்டுப் போங்கள். பெரும்/சிறு பொழுது - ஸத் ஸ்ரீ அகால் ஜி; தோன்றிய இடம் - வானம்.

அறுந்த வேர்

வாய்க்காலோடு தண்ணீரில் பறித்துப்போட்டு
வாமடை வரை ஓடிப்பார்த்த ஓனாம்பூ.
கையாற் களைபிடுங்கி வரப்பிலெறியும் அப்பாவிடம்
அப்பா அங்கின ஒரு பாம்பு கண்டேனென்றால்
சரி சரி அந்தப் பக்கம் போகாதேயென்பார்.
என்னசார் பூச்சிமருந்து போட்டாச்சா, கேட்ட
செல்லத்துரை மாமாவோடு பேச்சு சுழல
நான் மண்வெட்டியெடுத்து வாய்க்காலில்
ஆறு கொண்டுவந்து படர்த்த மணல்
வெட்டிப் பார்ப்பேன், நீரூறிச்
சரக்கென ஆற்றுமணல் வெட்டச் சுலபம்.
பச்சையெலாந் தாண்டித்தொலை ரோட்டிற்போகும் பஸ்.
பையனை நல்லா படிக்க வைங்க சார்,
யார்யாரோ சொல்லிப் போனதைக்
கேட்டு இப்படியுமப்படியுந் தலையசைத்த பச்சை.

போனவாரத் தொலைபேச்சில் அப்பா சொன்னார்:
ஊரில் ஆரிடமிருக்கு வண்டியும் மாடும் ஏரும்?
மழையில்லையென்று முத்தும் வித்தார்
கலியமூர்த்திப் போனமாசம் துபாய்க்குப் போனான்
குளமும் பாதிதான் ரொம்பிக்கிடக்கு
ஒடம்பும் ஓடலை, வாரத்துக்கு விடலாமென்றால்
என்னத்த நம்பி யாருதான் மெனக்கெடுவா?

பயிர்த்தொழில் சாக்காட்டில் இதோ என் கைகளும்.
முனுக்கென்றால் அமெரிக்காவைத் தூக்கியெறிந்து
அட்லாண்டிக்கில் குதித்து அக்கரைப் போகுமவன்
அன்றும் ஓடினான், கட்டித் தரிசுத்தரை வெட்டிக் கொத்த.
பாதியிற் திரும்பி வேலைக்குவந்து ஓய்ந்தவொரு மாலையில்
தண்ணீர்ப் படமெடுத்து இணையமிட்டான்.


அதுவும் நானும்

நம்ம பாலாஜி-பாரியின் நிலாக்கதையைப் படிச்சதுக்கப்புறம் அந்த நடை பிடிச்சுப் போயி எழுதினது இது:

நான்: ஊர் உறங்கும் வேளையில், வெளிறும் இந்த சனிக்கிழமையின் அதிகாலையில் ஆய்வகத்துக்குச் செல்ல என் காரை எடுக்கிறேன். சில மணிகளில் திரும்பி விடுவேன். தாளில் சுற்றிய இரண்டு துண்டு ரொட்டியும் ஒரு வாழைப்பழமும் போதும்.

அது: என்ன காரோட்டி நீ, முன்னாலிருப்பதை, அதுதான் என்னை, நீ என்னை இன்னும் பார்க்கவில்லையா?

நான்: நேற்று வாத்தியார் நன்றாயிருப்பதாய்ச் சொன்னாரல்லவா, அதை இன்னுங்கொஞ்சம் செம்மைப் படுத்துவேன், அவன் வந்துட்டான், அவர்கள் வந்துவிட்டார்கள், இன்றைக்கு எங்கேனும் செல்வேன். இங்கினதான் ஒரு நாள் ரெண்டு கார்கள் மோதிக்கிட்டது.

அது: அடேய் மெதுவா, என் கால்கள். என்ன மனுஷன் நீ? பார்த்துத் தொலையேன்.

நான்: சாலை விதிகளை வைத்துக் கொள்வது நல்லதுதான். முக்கியமாய் இந்த விளக்குகள். அ...இது என்ன, நீ என்ன செய்கிறாய் என் துடைப்பான் (wiper) மீது உட்கார்ந்து?!

அது: இப்போதாவது பார்த்துத் தொலைத்தாயே.

நான்: இங்கு என்ன செய்கிறாய், எழுந்து பறந்து போவேன், பெரிய ரோட்டுப் பக்கம் போனால் உன்னைச் சக்கரங்கள் நசுக்கிவிடும்.

அது: நீ எதுவுமே புரியாதவனாக இருக்கிறாய் என்று உன் பெண்டாட்டி சொல்வது சரிதான் போலிருக்கு.

நான்: சரி இதோ ஒரு சீமெண்ணெய்க் கடையில் நிறுத்துகிறேன், நீ அப்போதேனும் பறக்கிறாயா என்று பார்ப்போம்.

அது: இல்லையடா, மாட்டேன்.

நான்: ஏனாம், இறங்கி வந்து மெல்ல உன் மேல் ஊதுகிறேனே, அப்போது பறப்பாயல்லவா?

அது: முடியாதடா.

நான்: சொல்வதைக் கேள், அழிச்சாட்டியம் செய்யாதே. அந்த ரோடு உனக்கு ஆபத்து. சரி, உன்னை என் கைகளாற் பிடித்துக் கீழே விடுவேன்.

அது: ஆ, நாந்தான் சொல்கிறேனே, என்னை விடேன் சைத்தானே.

நான்: அடடா, என்ன நீ, பறக்க முடியாமலா இருக்கிறாய்? உனக்கு உடம்புக்கு ஏதாவது?

அது: பறக்கமுடிந்தால் பறந்திருக்க மாட்டேனா?

நான்: மன்னித்துக்கொள், இந்த இடத்தில் உன்னை விடுவதும் ஆபத்துதான், சீமெண்ணெய் ஊற்றிக் கொள்ள வண்டிகள் வரும், உன்மேல் சக்கரங்களை ஏற்றிப் போய்விடும். உன்னை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை உயிரே. இந்த ஊரில் உங்களுக்கு ஆஸ்பத்திரியோ டாக்டரோ இல்லை. ஆம்புலன்ஸும் இல்லை.

அது: நாய்களுக்கொன்று அன்றைக்குப் பார்த்தேனே.

நான்: எனக்கும் இது புரிவதில்லை, ஆம்புலன்ஸ் படுக்கையில் வைத்துக் கட்டும் வார் ரொம்பப் பெரிதாயிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது 911 மாதிரி உங்களுக்கு அவசர அழைப்புக்கொரு எண் இல்லாததாகவுமிருக்கலாம்.

அது: நான் என்ன செய்வது?

நான்: தெரியவில்லை. இப்போது என்னால் முடிந்தது, என்னுடன் காரில் வா. இதோ என்னருகில், காகிதம் சுற்றிய இந்த ரொட்டித் துண்டின் மேல் உட்கார்ந்து கொள். உன் மேல் வண்ணப் புள்ளிகளும் கோடுகளுமாய் இருக்கின்றன. ஆயிற்று இதோ வந்துவிட்டது, இறங்குவோமா?

அது: எங்கு செல்கிறோம்?

நான்: இல்லை, நீ மட்டுந்தான். உன்னை இந்த ஆற்றங்கரைப் புல்வெளியில் விடுவேன். ஒரு நாள் என்னை வந்து கொண்டு செல்லும் மரணம் உன்னையும் கொண்டு செல்லும். அதுவரை இங்கே இந்தப் புற்களுக்கிடையிலும் செடிகளுக்கிடையிலும் நீ இரு. தெரியாது, ஒரு வேளை உனக்குக் குணமாகலாம். அப்போது வண்ணத்துப்பூச்சியான நீ மறுபடியும் பறக்கலாம். இப்போது நான் கிளம்புகிறேன்.

செல்மாவிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது; எங்கோ படித்தாளாம் "வண்ணத்துப் பூச்சிகளைப் பார்ப்பது நல்ல சகுனம்" என்று.

ஜெய ஜெய தந்திர!

பழங்கதை. தெரிந்திருந்தால் ரெண்டாம் பத்திக்குத் தாவுக. ஒரு ஊரிலொரு தையற்காரன். தனியாள். மனசு சரியில்லாமல் சாமியாரிடம் போனான். கல்யாணம் பண்ணிக்கப்பா. பண்ணிக்கிட்டான். பொண்டாட்டி, பிள்ளைகள். மனச்சிக்கல் குறையவில்லை, கூடியது. சாமியாரிடம் மறுபடியும். பூனையொன்று வளர்த்து வா. வந்தான். அதனாலும் கூடுதற் தொல்லை. சாமியார் நாயும், கிளியும் வளர்க்கச் சொன்னார். பன்மடங்கானது நிம்மதியின்மை. பின் நாய், கிளி, பூனை மூன்றையும் ஒவ்வொன்றாய் விடச் சொன்னார். விட்டான். இப்போது எப்படியிருக்கிறாய்? ஒரு தொல்லையுமில்ல சாமி, குடும்பத்தோட சந்தோஷமா இருக்கேன்.

அரசு ஊழியர்களுக்குச் சேர வேண்டியவற்றை ஒவ்வொன்றாய்ப் பறித்தது, விவசாயிகளுக்கான சலுகைகளைப் பறித்தது, குடும்ப அட்டை உரிமைகளைப் (H) பறித்தது, இழந்தவற்றை மீட்டுக்கொள்ளப் போராடிய போது ஊழியர்களது வேலையைப் பறித்தது, இது மாதிரி ஒன்றன் மேல் ஒன்றாக அடி கொடுத்தது, இப்போது பறித்துக் கொண்டவற்றில் சிலதைத் திருப்பித் தருவது. உதாரணமாக இலவச மின்சாரம், இழந்த வேலை மீண்டும். இவற்றைச் செய்வதன் மூலம் நல்லவராகிவிட்டார் என்று பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இது ஒரு பெரிய தந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது தரைமட்டத்திலிருந்துகொண்டே மேலேறுவதாகக் காட்டும் உத்தி. செய்ய வேண்டியிருந்ததெல்லாம் இன்னும் ஒரு ஆறடிக்குக் கீழே போய்விட்டு மறுபடியும் மேலேறி வந்தால் போதும், ஏறுமுகம், நல்லவர், ஏழை பங்காளர், தயாபரி என்று சொல்ல வைத்து விடலாம். அட அம்மா இதையாச்சும் செஞ்சாங்களேன்னு வாழ்த்த வைத்து விடலாம். என்னே தந்திரமம்மே! ஆனா நம்ம மக்களுக்கு இந்தத் தந்திரமெல்லாம் தெரியாதென்றா நினைக்கிறீர்கள்?

Yaleல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுத் தனது 150வது வயதை நெருங்குகிறது சென்னைப் பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் இங்கு வந்திருக்கிறார். நேற்று அவரோடு இரவுணவுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு யேல் பல்கலையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செப்டம்பர் 2003ல் பதவியேற்றுத் துரிதகதியில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிகளுக்குத் திட்டமிடுவதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் ஊக்கம் காட்டும் இவரைப் பற்றிக் கொஞ்சம்: பட்டங்கள், பதவிகள் ஒரு புறம். மறுபுறத்தில் சித்த மருத்துவத்தில் மஞ்சட்காமாலைக்குப் பயன்படுத்தப் படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களை இக்காலத்து அறிவியல் அளவுகோல்களின்படிச் சோதித்துத் தரப்படுத்திப் பல்கலைக்கழகத்தின் மூலம் காப்புரிமை பெற்றுள்ளார். இது தவிரவும் பல்வேறு சித்த மருத்துவ மூலிகைகளைக் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பெரும் ஊக்கம் அளித்து வருகிறார்.

இவருடைய இந்த அமெரிக்கப் பயணத்தின் முக்கிய நோக்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகமாக்குதலுக்கான முயற்சிகளைச் செய்வது. இதன் மூலம் தேர்ந்தெடுத்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் பல்வேறு துறைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்துதல். இத் தொடர்பின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் குறுகிய காலக் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பரிமாறிக் கொள்ளப்படுவர். ஏற்கெனவே இது போன்ற சில தொடர்புகள் இருந்தாலும், அவற்றை மேலும் பல துறைகளுக்கும் விரிவாக்குதலில் இங்குள்ள துறை வல்லுனர்களோடு கலந்தாலோசிக்கிறார்.

சமீபத்தில் நடுவணரசின் பல்கலைக் கழக மானியக் குழுவினால் "தனிச்சிறப்புப் பெறுவதற்கான திறன்" இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் ஐந்து பல்கலைக் கழகங்களுள் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், பன்னிரெண்டு அம்சங்கள் அடங்கிய ஒரு திட்ட வரைவினை முன் வைத்து அதன்படிப் பணியாற்ற இருப்பதை விளக்கினார். உயர்கல்வியில் கிராமப் புறத் தொழில்களை/வளங்களை மையப்படுத்திப் பட்டப் படிப்புக்களை உருவாக்கும் முயற்சிகளையும் அதனால் வேலை வாய்ப்பின்மை குறையவும், கிராமத்து இளைஞர்கள் நகர்களுக்குக் குடிபெயர்வது குறையவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.

இவரிடம் நான் கேட்டவற்றில் ஒரு கேள்வி: தமிழ் செம்மொழியாவதால் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு என்ன நன்மை? அவரது பதில்: இது பல வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே என்று சந்தோஷப் படுவோம். இதன் மூலம் மொழி மட்டுமின்றி, கலை, அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளிலும் தமிழை மையப்படுத்திக் கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் நிறைய பொருளுதவி கிடைக்கும், இது வேண்டும் (பத்ரியும், மெய்யப்பனும் சொன்னதைப் போல்).

கடைசியாக ஒரு விஷயம், நீங்கள் சென்னைக் கடற்கரைச் சாலையில் செல்லும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாகக் கோபுரங்களுடன் பார்த்திருக்கிறீர்களா ஒரு சிவப்புக் கட்டிடம், 1873ல் கட்டிமுடிக்கப்பட்டது, பராமரிப்பின்றிப் பழுதடைந்துள்ளதாம், புதுப்பித்தலுக்கு நீங்கள் பொருளுதவ நினைத்தால் இங்கு சுட்டுங்கள்.

கனவொன்று

பகல்ல மட்டுமில்ல, ராத்திரியும் நா நிறையக் கனவு காணுவேன். கண்ணைக் கொண்டு செருகும் போதே கனவு துவங்கிவிடும். சில நேரங்களில், கடந்த ஒரு நிமிடத்தில் கண்ட கனவைத் தூங்கிக்கொண்டோ அல்லது பாதி விழித்துக்கொண்டோ அருகிலிருப்பவரிடம் சொல்லிவிட்டு, சிரிப்பானதென்றால் சிரித்துவிட்டு, மறுபடியும் தூக்கத்துக்குள் செல்வேன். இது கொஞ்சம் ரிஸ்க்கான சமாச்சாரந்தான். ஆனாலும் வீட்டம்மாவிடம் இன்னும் எதற்கும் மாட்டிக்கொண்டு முழித்ததில்லை. தங்கமணி சொல்வான், சினிமாக் கொட்டகையில லைட்ட நிறுத்துறதும் படம் போடுற மாதிரி இவனுக்குக் கண்ணை மூடுனவுடனே கனவுப்படம் ஓட ஆரம்பிச்சுரும்னு. சரி. ராத்திரி கண்ட கனவைச் சுருக்கச் சொல்லிட்டு வேலையைப் பாக்குறேன்.

அது எங்க வீட்டு மொட்டை மாடி. ஊர்ல. படுத்திருக்கேன். வானத்துல பால் வழித்திரள் தெரியுது. கதையிலேருந்து மீண்டு உங்ககிட்ட ஒரேயொரு சேதி, எனக்கு வானம், கோள், அது இதெல்லாம் அப்பப்ப வந்து சுத்திட்டு போகும். கனவு தொடருது. படுத்துக்கிட்டே உத்துப் பாக்குறேன். சில நட்சத்திரங்கள் தெரிகின்றன. அப்புறமா இன்னொரு பக்கம் பாத்தா ஒரு பை (vesicle), குமிழ் என்றுங்கூடச் சொல்லலாம், ஆனால் மிக மிகப் பெரிது, வானத்துல தெரியுதுன்னா பாத்துக்கங்க. அது மாதிரி ஒரு ரெண்டு மூனு. எல்லாக் குமிழும் கொஞ்ச கொஞ்சமா நகருது. அப்புறம் ஒன்னாச் சேருது. பெரூ...சா ஐஸ் கட்டி மாதிரி சேருது. உஷ்...கனவுல குமிழ் சேர்ந்தா ஐஸ் கட்டியென்ன, ஆனைக்குட்டியே வரும், பேசாம கதை கேளுங்க. அந்த ஐஸ் கட்டி மெல்ல இறங்குது. இறங்கி இறங்கி எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்க ஒரு திடலுகிட்ட விழுகுது. அது யாருக்கும் தெரியலை போலிருக்கு. விழுந்து கிட்டத்தட்ட புதைஞ்சு போகுதுன்னு நினைக்கிறேன். நான் ஓடிப் போய் அந்த இடத்தில் பார்க்கிறேன். ஒரு இளைஞன், செம்பட்டைச் சுருட்டை மயிர், சிவந்த நிறம். தலையில் இந்த டார்ஜானெல்லாம் என்னமோ கட்டிருப்பானே அது மாதிரி ஒரு பட்டி, அவன் அந்தக் கட்டிக்குள்ளேருந்து வெளியில வந்து வீதியில நடக்கிறான். அவனோடு என்னமோ பேசினேன். தெரியவில்லை. ஒரு கோவிலோ அல்லது சொற்பொழிவோ, அந்தப் பெரியவர் சொல்றார், இப்படித்தான் அந்தக் காலத்தில் எல்லாம் புஷ்பக விமானத்துல பறந்து போவாங்க. ராவணனும் இப்படித்தான் போனான், அவன் போகும்போதே மீனாய்க் குளத்துக்குள் குதித்து மீனுக்குள்ளும், இன்னும் எல்லா இனத்துக்குள்ளும் தன்னைக் கலந்தான். அதான் ராவணன் மாதிரியே நிறைய பேர் இருக்கிறார்கள். நான் நினைத்தபடியே போகிறேன், அப்போ ராமனும் இப்படிச் செய்திருப்பானா? அப்புறம் என்ன நடந்ததென்றோ அந்த இளைஞனை நான் காணவோ இல்லை. நீங்கள் அப்படியொரு ஆளை எங்காவது கண்டீர்களா?