நேற்று ஒரு கூட்டத்துக்குப் போனேன்.உலகக் கலாச்சாரங்களைப் பற்றியவொன்று. அறைக்குள் நுழைந்த போது கரும்பலகையில் இப்படியொரு படத்தை வரைந்து கொண்டிருந்தார் ஒருவர்.
அவர் புகழ் பெற்ற நாடக ஆராய்ச்சியாளர் (Performance Studies, நிகழ்வியல் என்று சொல்லலாமா?) ராபர்ட் ஷெக்னர் (Robert Schechner). அவர்தான் முதலில் பேச வந்தார். இராமாயணம் என்னையும் உங்களையும் இன்னொரு முறை பிடித்துக் கொள்கிறது! அவரது உரையின் தலைப்பு:'Ramlila of Ramnagar: Religion and Politics and Performance'. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் காசிக்கருகிலுள்ள ராம்நகரில் நடக்கும் ராம்லீலா எனும் நாடகத்தினைப் பற்றியும் அது சார்ந்த அரசியலைப் பற்றியும் பேசினார். பேச்சின் சாரம் உங்களுக்கு:
"ராம்லீலா என்றால் என்ன?
ராம்லீலா என்பது காசிக்கருகிலிருக்கும் ராம்நகரில் 31 நாட்கள் நடக்கும் இராமாயண நாடகம். ராம்நகரின் ஓரிடம் அயோத்தியாக இருக்கும், ஓரிடம் வனமாக இருக்கும், ஓரிடம் இலங்கையாக இருக்கும். இப்படி ராம்நகரின் ஒவ்வொரு இடமும் நாடகமும் நிகழுமிடம். மக்கள் திரள் பலவிடங்களிலும் இருந்து வந்து குவியும். பக்தி கொண்ட திரள் ராமரையும் சீதையையும் நடிகர்களென நினைப்பதில்லை. அவர்கள் தெய்வங்கள். பாதபூஜை செய்வார்கள், கும்பிடுவார்கள், அவர்களின் கை தம்மீது படாதா என்று ஏங்குவார்கள். தொலைக்காட்சியில் ராமர் வரும்போதும் கூடத் தொலைக்காட்சிக்கு மாலை போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். போரின் முடிவில் கும்பகர்ணன், இராவணனின் சொக்கப் பனைகள் கொளுத்தப்படும். பட்டாபிஷேகத்தில் சுகமாக முடியும். ராம்லீலா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபரில் நடக்கிறது.
ராம்லீலாவின் வரலாறு
1800களில் காசியை ஆண்ட ஒரு மன்னரால் இது தொடங்கப்பட்டது. 1600களில் துளசிதாசர் எழுதிய ஹிந்தி இராமாயணமான ராம்சரிதமானஸே மூலப் பிரதியாகக் கொள்ளப் படுகிறது. அதிலிருந்து உருவாக்கப் பட்ட எளிய பாடல்களையும் வசனங்களையும் கொண்டது ராம்லீலா. இந்நிகழ்வின்போது ராம்சரிதமானஸ் ஓதப் படுகிறது. காசி மன்னரே முன்னின்று நாடக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பார், ஜூன் - ஜூலை வாக்கில். ராமன், லெட்சுமணன் போன்ற பாத்திரங்களுக்குப் பிராமண சாதிப் பிள்ளைகளும், குரங்கு, கரடி போன்ற பாத்திரங்களுக்குக் கீழ்ச்சாதிப் பிள்ளைகளும். இப்பாத்திரங்கள் குரல் உடையாத சிறார்களும் பதின்ம வயதுப் பிள்ளைகளுமே. இளையவர்களின் குரலும் தோற்றமும் குற்றமற்றதாக இருப்பதால் பெரியவர்களை விட இவர்களது நடிப்பே மனசைத் தொடும். இதே உத்திதான் ஜப்பானிய நாடகக் கலைகள் சிலவற்றிலும் பயன்படுத்தப் படுகிறது. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தது. இதில் காசி மன்னர் ஆங்கிலேயரின் பக்கம் இருந்தார். இதனால் அவரது ஆட்சிக்கும் ராம்லீலாவுக்கும் பின்னாளில் எந்தக் குந்தகமும் இல்லை. சொல்லப் போனால் ராம்லீலா கொண்டாட்டத்தின் முடிவினை அறிவிக்க பீரங்கிக் குண்டுகள் முழங்குவது சம்பிரதாயமாக்கப் பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த போது காசியும் இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப் பட்டது. ஆனாலும் ராம்லீலா நடத்த மன்னர் அவசியம். மன்னரின் இருப்புக்கு ராம்லீலா அவசியம். எனவே காசியில் மன்னர் என்பவர் எப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். 1938லிருந்து 2000 வரைக்கும் இருந்த மன்னர் விபூதி நாராயண் சிங். இவரோடு எனக்கு நெருங்கிய பழக்கமுண்டு. ராம்லீலா ஊர்வலங்களின் போது என்னையும் ஒரு யானையில் அமரச் செய்து சுற்றிவரச் செய்வார். 2000ல் இந்த மன்னர் இறந்ததன் பின்பு அவரது மகன் அனந்த நாராயண் சிங் மன்னராக இருக்கிறார்.
ராம்லீலாவின் அரசியல்
ஆரம்பத்தில் சமய வழிபாடு என்று ஆரம்பித்த ராம்லீலாவும் அதனைச் சார்ந்த ராம பக்தியும் பின்னாளில் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. 1920களின் பின் வலுப்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி இந்த ராம பக்தியைக் கொண்டு மக்களைச் சுதந்திரப் போராட்டத்தை நோக்கித் திருப்பினார். ராமசரித மானஸின் 'ரகுபதி ராகவ ராஜாராமி'ன் இந்து உணர்ச்சியையும், அதில் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று சேர்த்த போது வந்த இந்திய உணர்ச்சியையும் திறமையாகப் பயன்படுத்தி மக்களை ஒன்றிணைத்தார். சுதந்திரம் அடைந்து சுமார் 25 வருடங்களின் பின்பு இந்த உணர்ச்சி மறுபடியும் தூசு தட்டி எடுக்கப் படுகிறது. இப்போது எடுத்திருப்பது பாரதீய ஜனதா கட்சி. இது ராமன் நம் நாயகன், ராமனைப் போற்றுதல் இந்தியாவைப் போற்றுவதற்குச் சமம் என்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. ராமனை வைத்து முன்னிருத்தப் படும் நடை முறைக் கோட்பாடுகள், ஒழுக்க சூத்திரங்கள் இந்தியாவிற்குப் பொதுவானதென்ற கருத்து உருவாக்கப் படுகிறது. இதன் விளைவாக ராம்லீலாவின் போது சமீப காலங்களில் ஊர்வலம் செல்லும் பாதைகளிலிருக்கும் முஸ்லிம் பகுதிகளில் கல்லெறிதல் போன்றவை நடக்கின்றன. இதில் மன்னருக்கு வருத்தந்தான். பா.ஜ.கவால் கிளப்பப் பட்ட இதே இந்துத்வ உணர்வுதான் 150 மைல் தள்ளியிருக்கும் அயோத்தியில் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. இவ்வாறாக ராமர் ஒரு இந்து/இந்திய அடையாளமாக்கப் பட்டிருக்கிறார். இது பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாக ஆட்சியைப் பிடிப்பது போன்ற பலன்களைத் தரக்கூடும்".
இவ்வாறாக முடிந்தது பேராசிரியர் ஷெக்னரின் பேச்சு. இதன் பின்னணியில் ராமன் எனும் கதாபாத்திரம் முன்னிறுத்தும் குணாதிசயங்களை நெஞ்சிலெடுத்துக் கொண்டு போகும் அம்மக்களை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களால் கற்பினைக் காரணம் காட்டி சதிமாதாக்களை உண்டாக்க முடியும். மதத்தைக் காரணம் காட்டி மசூதிகளை உடைக்க முடியும். மாற்று மதத்துக்காரன் வீட்டில் கல்லெறிய முடியும். இச்செயல்களை இவர்களது லட்சிய புருஷன் செய்யச் சொன்னதாக இவர்களால் நம்ப முடியும். இவர்கள் ஒரு பெரும் படை. இந்தப் படை அரசியலுக்கு முக்கியம். தந்திரம் தெரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு ராம தூண்டுதலைப் பெருமளவில் ஏற்படுத்த முடியாமலிருக்கின்ற இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பிள்ளையார் கோயில்கள் முளைக்கின்றன. ராம்லீலா செய்வதைப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் செய்கின்றன. பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.
ராம்லீலா
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
சுந்தர்
முன்பே உங்களுக்கு மறுமொழி அளிக்க எண்ணியிருந்தேன். மதத்தைக்காட்டி அறியாமை வளர்ப்பதும், தீண்டாமை ஆணாதிக்கம் ஆகியவை வளர்ப்பதும் அரசியல் ஆதாயத்திற்கே. இடையில் தமிழகத்தில் பரவலாக இல்லாத பழக்கங்கள் இப்போது மீண்டும் முன்பைவிட அதிகமாக போய்விட்டது. ராமனின் பெயரால் சிலர் செய்யும் அநியாயங்களுக்கு அளவே இல்லை.
"ராமன், லெட்சுமணன் போன்ற பாத்திரங்களுக்குப் பிராமண சாதிப் பிள்ளைகளும், குரங்கு, கரடி போன்ற பாத்திரங்களுக்குக் கீழ்ச்சாதிப் பிள்ளைகளும்"
மிகவும் கொடுமையான தேர்வு,
ஏன் கீழ்ச்சாதிப் பிள்ளைகள் ராமன், லெட்சுமணன் பாத்திரங்களை நன்றாக நடிக்கமாட்டார்களா?
அதுசரி, அந்த மன்னர் தனது போர்படையில் கீழ்ச்சாதிக்காரர்களை எந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார் என்று தெரியுமா?
Good Post aiya
>>>இவர்களால் கற்பினைக் காரணம் காட்டி சதிமாதாக்களை உண்டாக்க முடியும். மதத்தைக் காரணம் காட்டி மசூதிகளை உடைக்க முடியும். மாற்று மதத்துக்காரன் வீட்டில் கல்லெறிய முடியும். இச்செயல்களை இவர்களது லட்சிய புருஷன் செய்யச் சொன்னதாக இவர்களால் நம்ப முடியும். இவர்கள் ஒரு பெரும் படை. இந்தப் படை அரசியலுக்கு முக்கியம். தந்திரம் தெரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு ராம தூண்டுதலைப் பெருமளவில் ஏற்படுத்த முடியாமலிருக்கின்ற இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பிள்ளையார் கோயில்கள் முளைக்கின்றன. ராம்லீலா செய்வதைப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் செய்கின்றன. பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.<<<
நியாயமான சிந்தனைதாம்!
தமிழகம் பெரியாரால் புடம்போடப்பட்ட பூமி.அவ்வளவு சீக்கரமாக பா.ஜ.க வின் காலில் வீழ்ந்துவிடாது.என்றபோதும் கருத்தியற் பலத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.தமிழகத்தை வேட்டையாடும் சினிமாவும்,சின்னத்திரை நாடகங்களும் பா.ஜ.கவின் ஒழுங்குகளை மெல்லக் காவிவரும் ஊடகம்.மக்களோ நாளொன்றுக்கு பல மணிநேரம் தொ.கா. வுக்கு முன் கிடக்கிறார்கள்.எனவே தொலைக்காட்சியுத்தம் மக்களை வேறுமாதிரியாக்கிவிடும்.அதுவும் மதம் சார்ந்த பா.ஜ.கவின் முன்னெடுப்புகள் மக்களை மிக விரைவாக காவுகொள்வதற்குமுன், மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள்- மக்கள் மன்றங்களையமைத்து மக்களை விழிப்புணர்வடைய வைக்கணும்.இது காலத்தின் தேவை.
//இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பிள்ளையார் கோயில்கள் முளைக்கின்றன. ராம்லீலா செய்வதைப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் செய்கின்றன. பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.//
தமிழகத்தில் முடியாது. காரணம், கடந்த 3 ஆண்டுகளாக, பிள்ளையார் ஊர்வலங்களுக்குள்ளேயே பிளவுகள் வந்துவிட்டன. இந்து முண்ணணி தனியாக ஊர்வலம் போகிறது. இந்து முண்ணணியில் சேராதவர்கள் தனியாக போகிறார்கள். போன முறை, கடல் வரைத்தான் ஊர்வலத்திற்கு அனுமதி. உள்ளே போக போலிஸ் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் போட்டில் ஏறி தான் உள்ளே சென்று கரைக்க வேண்டும். எல்லோரும் போக முடியாது. தமிழ்நாட்டில் பிள்ளையார்கள் மட்டுமல்ல, தூய மேரிமாதாவும், அம்மன்களும், லேட்டஸ்ட்டாக சாமியார் மதக் கூடங்களும் (உதா. கல்கி தியான பீடம், ஆதிபராசக்தி அருட் கோயில்) வளர்ந்து கொண்டே இருந்தாலும், அவ்வளவு சீக்கிரம் சென்னை மும்பையாகாது என்கிற நம்பிக்கையிருக்கிறது.
அடப்பாவமே, இராமர் இப்படியே யேல் வரைக்கும் வந்துட்டாரா?
ஆனந்த் பட்வர்த்தனின் இந்த In the name of God (http://www.frif.com/cat97/f-j/innamego.html)படமும் Father, Son and Holy War (http://www.frif.com/cat97/f-j/father__.html) படமும் இராமர் அரசியலையும் அதில் பாமர மக்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதையும், மதங்கள் பொதுவாக எவ்வளவுதூரம் ஆணாதிக்க, ஆதிக்க வெறிகொண்ட முற்றாக பெண்களுக்கு எதிரான தன்மை கொண்டவை என்பதையும் சொல்லக்கூடியவை.
நன்றி தம்பி!
தேன் துளி, நன்றி.
குமரேஸ்-அந்த மன்னர் போர் செய்தாரா என்று தெரியவில்லை. மற்றபடிக்கு விபரம் தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.
நன்றி கா.ரா, ஸ்ரீரங்கன்.
நாராயண், நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.
தங்கமணி, சுட்டிகளுக்கு நன்றி. ஆமாம் அவரை நான் விட்டாலும் என்னை விடேன் என்று சுற்றுகிறார்:)
சுந்தர் - கோவையில் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதலைப் பின்னால் இருந்து நடத்தியவர்கள் மார்வாடிகள் (பிஜேபி என்று வாசிக்கவும்).
எனக்குத் தெரிந்து திருவல்லிக்கேணியில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக இயைந்துதானிருந்தார்கள். இடையில் வந்த ஆயில் பெயிண்ட் பிள்ளையார்தான் துப்பாக்கிச் சூட்டைத் துவக்கினார். இதே ஆயில்பெயிண்ட் பிள்ளையாரை முன்னிருத்தி பெங்களூரில் தமிழர்கள் மீதான வன்முறை தாண்டவமாடுவதையும் பார்த்திருக்கிறேன்.
வேலைக்காக ஒன்றரை வருடங்கள் இந்தோரில் (ம.பி) இருந்தபொழுது எனக்குத் தமிழகத்திற்கும் அந்த மாநிலத்திற்கும் இடையே இருந்த வித்தியாசம் புரிந்தது. (ராஜ்மாதா சிந்தியாவிடம் இருந்த ராஜவிசுவாசத்தை என்னால் தமிழகத்தில் கனவிலும் காணமுடியாது). அந்த வகையில் தமிழகத்தில் பெரிய அபத்தங்கள் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையிருக்கிறது.
வன்முறையைத் தூண்டும் எந்தப் பிரச்சாரத்தையும் முறியடிக்க நாம் விழிப்புடனிருக்க வேண்டும்.
நன்றி வெங்கட்!
ரொம்ப நல்லது. இப்படியே யோசித்துக்கொண்டே இருங்கள்... இஸ்லாமோ பாஸிஸ்டுகளுக்கு ரொம்ப நல்லது...
ennamopo
ஆரோக்கியம், நன்றி. உங்களுக்கு அங்கேயே வந்து பதில் சொல்லிவிட்டேன்.
//பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.// இருக்கற சகதியில இதுவும் நடந்துருச்சுன்னு (நடக்காது, இருந்தாலும்...) வச்சுக்குங்க, கத கந்தல்தான்.
நல்லதொரு பதிவு. நன்றி
Post a Comment