பேரறிவாளனின் கடிதம்

ராஜீவ் காந்தி படுகொலையில் கைதுசெய்யப் பட்டு மரண தண்டனைக் கைதியாக வேலூர் தனிமைச் சிறையில் இருக்கும் பேரறி வாளன், சில கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழக முதல்வருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவில் பிள்ளையாரைக் கரைக்க முடியுமா?


"சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட..."
நான் மனப்பாடம் செய்த முதல் பெரிய பாடல் என்றால் அது ஒளவையார் எழுதியதாகச் சொல்லப்படும் இந்த விநாயகர் அகவலாகத்தான் இருக்கவேண்டும். எனக்குப் பிடித்த பாடல். ஊரில் ஒரு குளம் உண்டு. பங்களா குளம், வங்களா குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படும். பஸ்டாண்டு பக்கத்துக்கு வரும் அத்தனை பேருக்கும் பலதுக்கும் உதவும். அக்குளத்தின் மேலக்கரையில் எழுந்தருளியிருந்தார் எங்களூர் பிள்ளையார். சித்தப்பாவுடன் வெள்ளிக்கிழமை மாலைகளில் பாடிய அந்தப் பாடலில் ஆன்மீகத்தோடு மருத்துவக் குறிப்புகளும் கலந்து கிடப்பதாக எனக்குத் தோன்றும். (மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து, என்பதை stem cellஉடன் ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன்!)  தனியே திரியும் பொழுதுகளில் மனதின் மூலையிலிருந்து பலவாண்டுகளுக்கு முன்னே புதைத்துப் போட்டிருந்த வரிகள் மெல்ல மேலெழுந்து வந்து புதிய அர்த்தங்களைச் சொல்லும். இந்த அழகுக்காகவே சில பாடல்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வது நல்லது. இளமையில் கல். திருமந்திரத்தின் பாடல்களை இப்படி அசை போடுவது இன்பம் தருவது. (நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை என்று திருமூலர் சொல்லும் நந்தி, சிவபெருமானா, இவரும் மருத்துவப் பாடல்களில் சொல்லப்படும் நந்தி என்பவரும் ஒருவரா, சிவபெருமானுக்கு சித்த வைத்தியம் தெரியுமா என்பதுபோன்ற என் கேள்விகளைச் சிவத்திடமே கேட்டுக் கொண்டிருக்கிறேன்!). 

பிள்ளையாருக்கு ஓங்கார வடிவம் என்பார்கள். ஓம் என்ற ஒலியை உச்சரிப்பதன் பின்னேயுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி யோசித்து வருகிறேன். மூச்சினை இழுத்து ஓமை நீட்டி ஒலித்து மூச்சினை விட்டு நிற்கும்போது உடலின் பலவிடங்களில் காற்றுக் குறைவாகிறது (hypoxia என்று சொல்லப்படும்). பிறகு மூச்சினை இழுக்கும்போது ஆக்சிஜன் மீண்டும் உடலின் செல்களுக்குச் செல்கிறது (reoxygenation). இதனைத் தொடர்ந்து செய்யும்போது செல்களுக்கு தகைவுகளைத் தாங்கும் வன்மை அதிகரிக்கிறது. எனவே ஓம் என்பதைச் சுற்றிய பயிற்சி, முதன்மையாக ஒரு மருத்துவ அறிவு. மூச்சின் இருப்புக்கும் இல்லாமைக்கும் மனதை ஊசலாட வைக்கும் ஒரு ஆன்மீக அனுபவம். அது இந்து மதத்தின் ஏகபோக சொத்து கிடையாது. சித்த வைத்தியர்களின் அனுபவம் பொதுமக்களுக்காகக் கற்றெடுத்த பாடம். அதனை மதமாக்கி வியாபாரம் செய்வது சரியா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆன்மீகம் ஒரு சொந்த அனுபவம். எனது அனுபவம் இன்னொருவருக்கு ஏற்புடையதாகாது. ஆனால் ஆன்மீகத்துக்கான வாசலாகச் சொல்லப்படும் மதம் பொதுவான முகத்தைக் கொண்டது. சமூகத்தின் ஒரு ஒட்டுமொத்த அனுபவமாக மதத்தன்மை பார்க்கப்படுகிறது. அந்த மதம் சடங்குகளின் குப்பைக் கிடங்காகத் துர்நாற்றமடிக்கிறது. துர்நாற்றம் மதங்களுக்குள்ளாக மட்டுமே நின்றுகொண்டால் தேவலாம். ஆனால் அவற்றின் எல்லைகளையும் தாண்டி தனிமனிதர்களின் மூக்கைத் துளைக்கும்போதுதான் துயரமாக இருக்கிறது அல்லது கோபமாக வருகிறது. 

சிறியதும் பெரியதுமாகச் சுமார் 1500 பிள்ளையார், மன்னிக்க கணேஷா, சிலைகளைக் கொண்டு போய்க் கடலிலே கொட்டுகிறார்கள். இதற்கு ஆயிரமாயிரம் போலீஸ், கடற்கரையிலே பாதுகாப்பு, அடித்துத் திரும்பி வரும் குப்பையை அள்ள மாநகரத் துப்புரவு ஊழியர்கள், இத்தனையையும் தாண்டி தெரிந்தே கடலுக்குள் கொட்டப்படும் இரசாயனக் கழிவுகள். பிள்ளையார் என்று ஒருவர் அந்தக் கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு இதனைப் பார்ப்பாரேயானால் அந்தத் தும்பிக்கையாலேயே ஒவ்வொரு பயலையும் சுழற்றி அடித்துப் போடுவார். இந்தச் செய்தியைப் பாருங்கள். இதிலே வருகின்ற பெயர்களைப் பார்த்தால் கரைத்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தினரல்லாத அல்லது வடநாட்டினரான சென்னைவாசிகள் என்பதை உணர முடியும். சென்னையில் நானிருந்த காலத்தில் ஒரு முறை இந்தக் காலாகோலத்தைக் காண நேர்ந்தது. அப்போது வட இந்தியர்கள் ஒரு லாரி நிறைய வந்திருந்து கடற்கரையில் சிலையை வைத்து ஆடியது நினைவிருக்கிறது. இன்று தமிழ்நாட்டுக்கு அந்நியமான ஒரு மதக் கலாச்சாரம் வலிந்து புகுத்தப்படுகிறது. ஊரில் பிடித்து வைக்கும் சாணப் பிள்ளையார், களிமண் பிள்ளையாரைப் பற்றிப் பலரும் பேசியாயிற்று. இதுதான் தமிழ்நாட்டுப் பிள்ளையார். இதனைச் சொல்லிக் கொடுத்தபடி நம்புவதும்,  அல்லது இந்தச் சாணி உருண்டையின் மூலமென்ன, பொருளென்ன, அல்லது இந்தக் களிமண்ணுக்குள் என்ன இருக்கிறது என்று தேடுவதும், பிள்ளையாரை வைத்துப் பிழைப்பு நடத்தும் மதவாதிகளைச் சாடும் பெரியாரின் பின்னே செல்வதும் அவரவரது தேர்வினைப் பொறுத்தது. சொந்த அலுவல்களுக்குள் மூக்கை நுழைத்து இது சரி இது தவறு என்று சொல்வதற்கான அதிகாரம் எனக்கில்லை. ஆனால் எனது சமுதாயத்துக்குள், என் சுற்றுப் புறத்தில் ஒரு கேடு வலிந்து திணிக்கப்படுகிறதென்றால் அதனைக் கண்டு பொறுக்கவில்லை. 

எனக்கொரு கேள்வி இருக்கிறது. தமிழகத்தின் நீரில்லா நீர் நிலைகளை இப்படிப் பாழடிக்கிறார்களே இந்த இந்து அபிமானிகள், இவர்களில் ஆயிரமாயிரமானோர் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள். இங்கும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறார்கள் (என் நல்ல நண்பர்களும் அடக்கம்). இத்தகைய கொண்டாட்டங்களுக்கோ, ஆன்மீக அனுபவத்துக்கோ, வழிபாட்டு ஆறுதலுக்கோ, சுண்டல் கொழுக்கட்டைக்கோ நான் எதிரியல்லன். என் கேள்வி இவர்கள் ஏன் கணேஷா சிலைகளை அமெரிக்காவின் எந்தக் குளம், ஏரி, கடலிலும் கரைப்பதில்லை? எங்கே பார்ப்போம், இந்தியர்கள் பெருமளவு வசிக்கும் நகரங்களில் சென்னையைப் போல வீதிக்கு வீதி பெரும்பெரும் கெமிக்கல் சிலைகளை வைத்து, வண்ண வண்ணமாகக் கெமிக்கல் சாயம் பூசி, அவற்றை ஒரு நாள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். அமெரிக்க போலீஸ் ஆப்படிக்கும்! இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் இந்த சில நூறு ஆண்டுகளில் இப்படியொரு கணேஷா சிலை கரைப்பு அமெரிக்காவில் அல்லது வேறு மேலை நாடுகளில் அரங்கேறியிருக்கிறது என்று ஆதாரமிருந்தால் காட்டுங்கள் தெரிந்துகொள்கிறேன். 

நீதி: எங்கு சுரணையும், பொதுப் புத்தியும், விழிப்புணர்ச்சியும் மழுங்கியிருக்கிறதோ அங்குதான் மதங்கள் தம் கொடிய கால்களை வலிய ஊன்றுகின்றன.