வெங்கட்டுக்கு பதில்

பொழுது விலக்கமும், பாத் திரித்தவன் பொறுப்பும்

நானும் கம்பராமாயணத்தைப் பெருசா படிச்சதில்லை. பள்ளிக்கூடத்துல மனப்பாடப் பாட்டு, கல்லூரியில கொஞ்சம். இப்போ இந்தத் தாடகை வதம் மட்டும் படிச்சுக்கிட்டிருக்கேன். இதனால் நான் கம்பனை விமர்சிக்கும் அருகதையற்றவன் என்று யாரும் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.

கம்பன் ஒரு தெசாரஸை வச்சுக்கிட்டு எழுதியிருக்கார். ஒரு கதையைச் சொல்லியிருக்கார். வார்த்தைகளுக்குள்ள போட்டுக் கதையை மூடி வச்சிருக்கார். மனுசனுக்கு உடைச்சுப் பிரிச்சுச் சாப்பிடும்போது சுவை கூடுதலா இருக்கும்கற எளிய உத்தியைப் பயன்படுத்தி, சொல்ல வந்த கதையை வார்த்தைகளுக்குள் வைத்துத் தைத்திருக்கிறார். பல்லுங்காம எயிறுன்னு சொல்லியிருக்கார். தேனா ஒழுகுற ஒரு ஓட்டத்தோட கதையைச் சொல்லியிருக்கார்.

இதுதான் அவர் செஞ்சிருக்காரே தவிர புது தத்துவம் எதையும் சொல்லிடலை. ("ராமன் விட்ட அம்பானதூ படிக்காத மடையன்கிட்ட படிச்ச நல்லவர் சொன்ன வாசகம் போனது மாதிரியாகத் தாடகையைத் துளைத்துக் கொண்டு போனதே" மாதிரியான "தத்துவங்கள்" வேண்டுமானால் நிறையக் கிடைக்கும்). இது ஒரு கதை, அவ்வளவுதான். என்ன ஒரு சிறப்பம்சம், ஒரு ராசாவோட கதை. எழுதச் சொன்ன வள்ளலுக்கு ராமனைத் தூக்கிப் பிடிக்கணும். அதுக்குத்தான் காசு குடுத்துக் கம்பனைக் கூப்பிட்டிருக்கார். அவருகிட்ட சம்பளம் வாங்கி இராவண காவியமா எழுத முடியும்? ஜெயலலிதா மேடையில இருக்கப்ப "சோழ நாட்டுக்குக் கரிகாலனால் வந்தது சாதனை, கருணாநிதியால் வந்தது சோதனை"ன்னுதான் ஒருத்தன் பாட முடியும்.

கம்பனை இப்படியொரு கலைஞனாக, கொடுத்த காசுக்குக் காசு கொடுத்தவன் கேட்டமாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப் போடும் ஒரு பத்திரிகையாளனாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பாரதியும் சீட்டுக்கவி எழுதியே இருந்திருக்கிறான். எவ்வளவு நாள் எவ்வளவு தூரம் இணங்கிப் போகிறான் என்பதிலிருந்துதான் ஒரு கவிஞன்/கலைஞன் தன்னை விற்றுக் கொள்ளாமலிருக்க முடியும். சரி, இப்படி வைத்துக் கொள்வோம், கம்பனுக்கு உண்மையிலேயே ராமபக்தி விஞ்சி அதனால் இராமாயணத்தைப் பாடியிருப்பானேயானால், அதில் எவ்வாறு ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க/வர்ணிக்க முடிகிறது? உயர்ந்த நோக்குள்ள ஒரு புலவனுக்கு, இராமனின் கருணையாலும் தெய்வாம்சத்தாலும் உந்தப்பட்ட ஒரு கவிஞனுக்கு (இவ்விடத்தில் கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது) எப்படி ஒரு பெண்ணை இவ்வளவு கோரமாகவும் வர்ணிக்க முடியும்? (எவ்வளவு கோரமாக என்று தாடகை வதைப் படலத்தைப் பார்த்தால் தெரியும், அதைப் பற்றி விரிவாய் எழுதும் எண்ணமிருக்கிறது). அது அந்தக் காலம், அது அப்படித்தானிருந்தது என்பீர்களேயானால், அதனினும் காலத்துக்கு முந்திய சிலப்பதிகாரம் நினைவுக்கு வருகிறது. இதில் எங்காவது இப்படியான அருவருக்கத்தக்க பாத்திரப் படைப்பை இளங்கோ செய்திருக்கிறானா? எனக்குத் தெரியாது? ஒரு இளங்கோவிடம், வள்ளுவனிடம் இல்லாத இந்த வார்த்தை வன்முறை ஏன் கம்பனிடம் தெறிக்கிறது என்றால், ஒன்று அது ராமவெறி அல்லது வாங்கிய காசுக்கு ரொம்பவும் கண்ணியமாக நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேங்கன்னு எழுதிக் கொடுத்த நாணயம்.

இந்த மாதிரி கொடுக்கல் வாங்கல், வென்றவன் தோற்றவன் விழுமியங்களெல்லாம் காலத்தால் மாறாதது, பண்பாடுகளால் மாறாதது, ஓடுற நாயக் கண்டா குலைக்கிற நாய்க்குக் கொண்டாட்டம் மாதிரிப் பதிஞ்ச பரிணாமப் பண்பு. அந்தக் காலத்து டெரிட்டரி, மேப்பு யாருக்குத் தெரியும், ஆனா மனுசனோட மனசு தெரியும். அது இயங்கும் விதம் புரியும். இப்படித்தான் இருந்தான்னு ஆதார பூர்வமா நிரூபிக்க முடியாது. சில புள்ளிகளை வச்சுக்கிட்டு நீங்க ஒரு கோலம் போட்டுக்கறீங்க, இன்னொரு கூட்டமான புள்ளிகளைக் கூட்டி நா ஒரு கோலம் போடுறேன். இதுல எந்தக் கோலம் யாருக்குப் பூச்சாண்டி காட்டுதுன்னுதான் சிக்கலே. கம்பன் எழுதின பாட்டை அது ஏற்படுத்தின சமுதாயத் தாக்கத்தை ஒதுக்கி வச்சுட்டு என்னால பாக்க முடியாது. இப்போது இருப்பது மாதிரியான ஒரு சீர்கேட்டை அது ஏற்படுத்தியிருக்குன்னா, அது எந்தக் கோலம் காட்டுன பூச்சாண்டின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த இடத்துல ராம காதைக்குக் கிடைச்ச "ராஜ" மரியாதை மத்த இலக்கியங்களுக்குக் கிடைச்சுதான்னு ஒரு கேள்வி வருது. கூடவே அக்னிதேவர் சாப்பிட்ட ஓலைச் சுவடியெல்லாம் கட்டுக் கட்டாத் தெரியுது. அதை விசிறி விட்டதுல ராமாயண விசிறிக்கும் பங்கு இருக்குங்கறது என்னோட கருத்து, அதையேதான் வேற வார்த்தைகள்ல நீங்களும் சொல்லியிருக்கீங்கன்னு நெனக்கிறேன்.

செவ்வியல் இலக்கியங்களோடு எப்படி உறவு கொள்ளலாம் என்பது குறித்து என் பதில்களை எழுத இப்போது இயலவில்லை. ஒன்றே ஒன்று மட்டும், ஏழாவது பாயிண்டுக்கு,
//ஐந்து பத்து நூற்றாண்டுக்கு முன்னால் கதையெழுதிப் போனவனைக் காவுகொடுக்காமால் இருக்கலாம்.//
செய்யலாம், எப்போதென்றால் அவனைப் போன்றவர்களால் எழுதப்பட்ட கதைகள் இன்று காவு கேட்காமல் இருந்தால்.

21 comments:

said...

ஏதோ என்னாலானவை, உங்களுக்கும் ஐந்து நட்சத்திரங்கள் போட்டேன்; வெங்கட்டுக்கும் ஐந்து நட்சத்திரங்கள் போட்டேன்; திரும்ப உங்களுக்கும் ஐந்து நட்சத்திரங்கள் போட்டேன்.

said...

:))

said...

ஆனா 1/5ன்னு காட்டுதே அப்படின்னா 4 ஓட்டு மைனஸ்ல குத்தினீங்களா?:( :))

said...

தாரும் தாரும் தாமிடை மயங்கத்
தோளும் தலையும் துணிந்துவே றாகிய
சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக்கு ஆடப்
பிணஞ்சுமந்து ஒழுகிய பிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்புஇகுத்து ஆட. -சிலம்பு 205|-210





அடுந்தேர்த் தானை ஆரிய அரசர்
கடும்படை மாக்களைக் கொன்று களங்குவித்து,
நெடுந்தேர்க் கொடுஞ்சியும்,கடுங்களிற்று எருத்தமும்,
எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த் தொகை
ஒருபகல் எல்லையில், உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்களத்து அறிய,
நூழலி லாட்டிய சூழ்கழல் வேந்தன்,
போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை
ஓங்கிருஞ் சென்னி மேம்பட மலைய -சிலம்பு 215-220



கம்பனிடம் ஆரியதரப்பு நியாயமும், இளங்கோவடிகளாரிடம் தமிழ்தரப்பு நியாயமும் ஓங்கிநிற்பது எதனால்? வரலாற்றைப் புரிந்துகொள்ளும்போது, வர்கங்களினது பகுப்புக்குள்ளான முறைமைகளிலிருந்து வரலாறு பூராகவும் தமிழர்கள் மாற்றினத்தால் அழிக்கப் படும்போது,கம்பனென்ற வம்பன் வேறுதிசையில் பாடுகிறான்.இளங்கோவோ தனது மக்களோடு சேர்ந்து வருகிறார்.வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையலானது.

said...

//கொடுத்த காசுக்குக் காசு கொடுத்தவன் கேட்டமாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப் போடும் ஒரு பத்திரிகையாளனாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.//

குலேத்துங்கனுடன் விரோதம் ஏற்பட்டு, கம்பன் இராமயணத்தை சோழ சபையில் அரங்கேற்றாமல், கோவிலில் அரங்கேற்றினான்.
கம்பன் இராமயணத்தை எழுதியதற்கு காரணம் தமிழ்ப்புலமையும், இராம பக்தியும்தான் காரணம்.

தோள் கண்டார், தோளே கண்டார். உங்களைப்போல் வேலையாளாக கண்டார், வேலையாளாகவே காண்பார்!.

said...

சுந்தரவடிவேல்,

இது தொடர்பான மூன்று பதிவுகளையும் படித்தேன். நீங்க கோச்சுக்கிட்டாலும் பரவாயில்லேன்னு, எனக்குத் தோன்றியதை, ஒளிக்காமல் மறைக்காமல் சொல்லட்டுமா?

'எல்லாத்திலேயும்' 'எதை'யாச்சும் தேடிக்கிட்டே இருந்தா கடைசியிலே ' எதுவுமே' கிடைக்காது.

அன்புடன்
பிரகாஷ்

said...

//பிரகாஷ்:'எல்லாத்திலேயும்' 'எதை'யாச்சும் தேடிக்கிட்டே இருந்தா கடைசியிலே ' எதுவுமே' கிடைக்காது.//

:-))

said...

"நானும் கம்பராமாயணத்தைப் பெருசா படிச்சதில்லை. பள்ளிக்கூடத்துல மனப்பாடப் பாட்டு, கல்லூரியில கொஞ்சம். இப்போ இந்தத் தாடகை வதம் மட்டும் படிச்சுக்கிட்டிருக்கேன். இதனால் நான் கம்பனை விமர்சிக்கும் அருகதையற்றவன் என்று யாரும் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்."
கம்ப ராமாயணத்தின் அத்தனைப் படல்ங்களையும் நன்கு படித்துணர்ந்தப் பிறகே அருகதை வரும் என்று நான் நினைப்பது பைத்தியக்காரத்தனம்தான் போலும்.
சரி, தாடகையிடமே வருவோம். கிளி கொஞ்சும் இஅடமாக இருந்த நிலப் பகுதியில் தாடகை வந்ததும் எங்கும் அந்தகாரம் சூழ்ந்தது. ராமபிரான் அவளைக் கொன்றதும் அந்தப் பிரதேசமே மறுபடியும் எழில் நிரம்பியதாக மாறியது என்றுதான் படித்திருக்கிறேன். ராமாயணக் கதையின்படி தாடகை ஆக்கிரமிப்பு செய்தவள். ராமர் அந்த ஆக்கிரமிப்பை விலக்கினார் அவ்வளவே. தாடகை போராளி என்று கூறுவது ரொம்பவே ஓவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...
This comment has been removed by a blog administrator.
said...

நம்மிருவருக்கும் இருக்கும் அடிப்படை மனப்போக்குதான் இந்தப் பார்வைகளைத் தருகிறது.

சுந்தர் - உங்களைப் போல எனக்கு இப்படியெல்லாம் தீர்ப்பு சொல்ல மனதுவராது. அதிலும் நான் படிக்கவில்லை ஆனாலும் அவன் அவ்வளவுதான் என்று சொல்ல மனமொப்பாது. "தாடகையைப் பற்றி முழுதாகத் தெரியாது அந்தப் பகுதியை நான் படிக்கவில்லை, ஆனால் தாடகை அரக்கி" என்று கம்பனைத் தொழும் ஒருவர் சொன்னால் என்ன நினைப்பேனோ அதையே நினைக்கத் தோன்றுகிறது.

>அதுக்குத்தான் காசு குடுத்துக் கம்பனைக் கூப்பிட்டிருக்கார்.

மன்னராட்சி காலத்துல மானியத்தை வேறுயார் தருவாங்க எதிர்பார்க்கிறீங்க? இந்தக் காலத்துலகூட NASA, NIH, மானியம் வாங்கி நாம ஆராய்ச்சி செய்யலயா? இப்பொழுதே V.C , start-up என்று சொல்லிக் கொண்டு வேறுவழியில் பணம் வாங்கும் எங்கள் பேராசிரியர் ஒருவருக்கு 'வக்கில்லாதவர்கள்தான் அரசாங்க நிறுவனத்திடம் கையேந்துவார்கள்' என்று சொல்ல முடிகிறது. நாளை இதுவே வழக்கமானால், இன்றைக்கு நான் வாங்கும் மானியத்தைக் கூட யாராவது பிச்சை என்பார்கள்.

உங்களைப் பொருத்தவரை காசு வாங்கியதெல்லாம் பிரச்சனையில்லை என்று தெரியும். ஏனென்றால், காசெல்லாம் வாங்காமக் கால் நடையா நடந்து, போட்ட பிடியரிசியை உண்டு "தெலிய லேது ராமா" என்று மூழ்கிக் கிடந்த தியாகராஜருக்குத்தான் நல்லபடியா சொல்ல உங்களிடம் வார்த்தையிருக்குமா?

>இவ்விடத்தில் கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

இது உங்கள் இன்றைய கவிதை வரையறையை வைத்து எல்லாவற்றையும் எடைபோடும் விதம். இது இன்றைக்கு ஓரளவுக்கு நமக்கு மேற்கு சொல்லிக் கொடுத்த வரையறை. நம்மூரில் பேச்சே எகன மொகனையா இருக்கும்பொழுது பாட்டும் அப்படித்தான் காலம் காலமாக இருந்து வந்திருக்கிற்து. இப்படி காலமுரணான வரையறையைகளை வைத்துக்கொண்டு ஏன் எடைபோடுகிறீர்கள். இப்படிதான் உங்கள் மறுவாசிப்புத் தீர்ப்பு முழுவதும் காலமுரணாக இருக்கிறது.

>ஆனா மனுசனோட மனசு தெரியும். அது இயங்கும் விதம் புரியும். இப்படித்தான் இருந்தான்னு ஆதார பூர்வமா நிரூபிக்க முடியாது.

அப்படீன்னல்லாம் அடித்து நியாயம் சொல்லவும் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் வளர்க்கும் என்னுடைய மூனு வயது மகனின் மனசையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியிருக்க இன்றைய பார்வையில் அன்றைய சமூகத்தையும், படைப்பாளியையும் எடைபோட்டு "அவர் கல்லால ஒக்காந்து கணக்குதான் எழுதினாரு, கவிதையா பாடினாரு" என்று சொல்ல மனமொப்பாது. ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே சீட்டுக்கவி எழுதிய பாரதியையும் நமக்குத் தெரியும். சீட்டுக்கவி எளுதினாரு, எதுக போட்டாரு என்று பாரதியையின் கவித்துவத்தையும் வரையறுப்பீர்களா என்று தெரியாது.

இந்த 'மனசு தெரிவது' உங்களுக்கு இன்றைக்கு வாய்க்கப்பெற்றிருக்கும் பெரியவர்களின் தோளேறி நின்று பார்க்கும் வசதி, இது கம்பனுக்கு இல்லாததைக் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் என்றுதான் எழுதினேன். கம்பரை எப்படி ஆழ்வாராக்குவது அபத்தமோ அதே அளவுக்கு காசு வாங்கிக் கொண்டு காரியத்தை முடிக்கும் அடியாளாகத் தீர்ப்புகூறுவதும் அபத்தம்தான்.

>செய்யலாம், எப்போதென்றால் அவனைப் போன்றவர்களால் எழுதப்பட்ட கதைகள் இன்று காவு கேட்காமல் இருந்தால்.

நீங்கள் உயர்வாகக் கருதும் சில கருத்தாங்களை நானும் மதிக்கிறேன். ஆனால் அதை மாத்திரமே வைத்துக் கொண்டு அகலக் கண்விரித்துப் பார்க்கவேண்டிய நிலப்பரப்பை ஒற்றைப்படையாக நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்தால் பலவற்றைத் தவற்விடுவீர்கள். இதையே இங்கே இன்னும் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

said...

இதற்கு முந்தையப் பதிவின் நோக்கம் தாடகை என்றொரு பெண்ணின் அரக்கத்தனம் ஒரு கடைந்தெடுத்த ஆளும் வர்க்கப் புனைவு என்பதைப் பற்றியது. அவளை அரக்கியென நிறுவியதன் பின் விளைவுகளைப் பற்றியது. இதைத் தொடர்ந்து கம்பன் என்றொரு கவிஞனைப் பற்றி மட்டுமே என்று சொல்லிக் கேள்விகளை எழுப்பினார் வெங்கட். என் நோக்கம் தாடகையின் சித்தரிப்பு என்ற போதிலும் கம்பனை எது அவ்வாறு எழுதத் தூண்டியது என்பதற்கான என் ஊகத்தைக் கொடுத்திருக்கிறேன். NIH, NASA காசு எந்த நாட்டுக்கான ஆராய்ச்சிப் பணிக்காக? இந்தியாவுக்கா, இலங்கைக்கா? அதே மாதிரிதான் ஒரு ஆளும் வர்க்கத்தின் சொந்த நலனுக்காக நெய்யப்பட்ட ஒரு புனைசுருட்டுக்கு ஆயிரம் தெய்வக் கதைகளும், அதைச் சுற்றிய சடங்குகளும், கொலு பொம்மைகளும், கட்டிக் காத்த அரசுகளும் இருக்கின்றனவென்றால் சில கேள்விகள் மட்டும் இருக்கக் கூடாதாம். இக்கற்பிதங்களைச் சுற்றி மாண்ட உயிர்களைப் பற்றி, நசித்த கலாச்சாரத்தைப் பற்றிக் கேள்வி இருக்கக் கூடாதென்றில்லை. அல்லது இந்தக் கேள்விகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த வைதீகம் சகிப்பின்மையைக் கற்றுத் தந்திருக்கிறதா? விவேகானந்தரின் கூற்றொன்று நினைவுக்கு வருகிறது: "தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்". தம்மையே குரங்கென்று ஏற்று, குரங்கையே கும்பிட்டு, குரங்காக்கியவனையும் கும்பிட்டு இவை எதையும் கேள்வி கேட்கக் கூடாதென்றால் அது என்னத்துக்கு என்று ஒரு கேள்வி எழுகிறது. இன்னும் என்னத்தைக் கட்டிக் காக்க? இத்தகைய கேள்விகளேதுமின்றி அந்தச் சட்டகங்களுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கும் வரை அந்தப் புராணங்கள் காப்பாற்றப்படும். அது மட்டுமே நீங்கள் விரும்புவதென்றால் அந்தச் சட்டகங்களுக்குள் (சுதந்திர)மனிதன் அடைபட்டுக் கிடப்பதில்லை. அவன் துருப்பிடித்துச் சாவதைவிடத் தேய்ந்து சாவதையே விரும்புவான்.

said...

என்னைக் கேட்டால், இந்தக் கேள்விகள் கேட்கப் படவேண்டும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு கம்பர் என்ற கவிஞரை மிகவும் பிடிக்கும். எனது தமிழாசிரியர்கள் கம்பரின் பாக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து ஆராய்ந்து சொல்லிக் கொடுத்தது பிடிக்கும். ஹரியண்ணா எழுதும் கட்டுரைகளும் தொடர்களும் பிடிக்கும்.

பிடித்துப் போனதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. 'தமிழ்'!

ஆனால், ராமாயணத்தை, அந்தக் கதையைப் வேறு கலாசாரத்தைச் சேர்ந்தவருக்குச் சொல்லும்போதும், சிறுவர்களுக்குச் சொல்லும்போதும்தான் சிக்கல்களை உணர முடிகிறது.

என்னளவில் கதை என்று உணரப் பட்ட விஷயம், 'Ramayana' என்று ஆர்.கே.நாராயண் எழுத்தில் கல்லூரிப் பாடமாக அமைந்தவருக்கு இந்திய/தமிழ் கலாசாரத்தின் கண்ணாடியாகத் தெரிந்தது. அந்த நோர்வேஜிய/நேபாள கலப்புப் பெண் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திணறிய அந்தக் கணத்தில் இருந்து வெவ்வேறு கோணத்தில் ராமாயணத்தைச் சிந்திக்க வைத்தது. அதுவும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் ஆராதனை செய்யும் ஒரு விஷயமாக இருந்ததில் என்னை நானே கேள்வி கேட்பது அவசியம் என்று கருதினேன்/கருதுகிறேன்.

இந்த வாழ்க்கையில் எதுவுமே/யாருமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை(என்று நினைக்கிறேன்).

குறைந்த பட்சம், அப்படி வெவ்வேறு கோணங்களில் சிந்தித்தனால் கதை சொல்கிறேன் பேர்வழி என்று ராமாயணக் கதையைச் சொல்லும்போது கேட்கும் கேள்விகளுக்கு முழி பிதுங்காமல், கேட்கும் சிறுவர்கள் ஒப்புக் கொள்ளும்வகையில் பதில் அளிக்க முடிகிறது. நான் சொன்ன பதில்கள் திருப்திகரமாக இருக்கின்றனவா இல்லையா என்பதை அவர்களிடந்தான் நீங்கள் கேட்க வேண்டும். ;) ஆனால், என்னை நானே கேள்வி கேட்காமலிருந்திருந்தால், பதில் சொல்லச் சிரமப்பட்டிருப்பேன்.

நல்ல வேளை, இன்னமும் சீதை வரைக்கும் வரவில்லை!

என்னிடம் கேட்ட கேள்வியை இங்கே வைக்கிறேன். என்ன பதில் சொல்வீர்கள் என்று அறிந்தவர்/தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வாலி வதம் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தேன். குரங்கு பேசுமா என்றெல்லாம் கேள்வி எழுப்பவில்லை அவர்கள். அந்தளவிற்கு தப்பி விட்டேன் என்று சொல்ல வேண்டும். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் வந்த பிரச்சினையைக் கொஞ்சம் பூசி மெழுகிச் சொல்லிவிட்டு சுக்ரீவன் ராமனைச் சந்தித்ததைச் சொன்னேன். வாலியை ராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றதை விவரித்தது பிடித்திருந்தது அவர்களுக்கு. அவர்கள் கேட்ட கேள்வி எல்லோரும் கேட்பதுதான். ஆனால், இவர்களுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. வாலி கெட்டவன் என்று முத்திரை குத்தவும் எனக்கு விருப்பமில்லை. கெட்டவன் என்றாலும், அந்த ஒரே காரணத்துக்காக எப்படி வேண்டுமென்றாலும் கொல்லலாமா என்ற கேள்வியும் இருக்கில்லியா? geneva convention என்றெல்லாம் இருக்கும் இந்நாளில்...

எதுக்கு மறைந்திருந்து தாக்கணும்?

கொரில்லா கொம்பாட் செய்தாரா? ஏன் என்னதற்கு என்ற கேள்வியோடு முடிந்திருக்கிறது. இது போன வாரக்கதை! இன்னமும் தொடரவில்லை.

====

ஏன் இந்தக் கதை தொடங்கியது என்பதையும் சொல்லிவிடுகிறேன். பெரிய கயிறு போலக் கிடந்ததை அண்ணன் மகள்(3 வயது) தூக்கப் பார்த்தாள். முடியவில்லை. 'அனுமான் வால் மாதிரி இருக்கா' என்று விட்டேன். 'who is anuman?' 'Why does he have a tail'? என்ற வந்தவளுக்கும் அண்ணா பையன், அக்கா பொண்ணு + பையன் என்று நாலு பேருக்கு 3 வயது - 11 வயது கதை சொல்லத் தொடங்கினேன். அனுமன் கதையில் வந்த இடத்தில் இருந்து தொடங்கியதுதான்.

இன்றைக்குத் தொடக்கத்தில் இருந்து சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். [அக்கா பெண்ணிற்காக 'ராமாயணா'வையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.]

யாராவது உதவி செய்யுங்கப்பா!!!

(sorry for the lengthy feedback sundar. this is what happens if one happens to wake up at 3.30A.M.) ;)

said...

மீள் வாசிப்பும், மீள வாசிப்பும்

தாடகை வதம் ஒரு மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லா படைப்புகளும் முதல் வாசிப்புக்கு ஆட்படுத்தப்படுகிறபோதே அது வாசிப்பவரின் மனதைப்பொருத்து ஒவ்வொரு அனுவத்தைத் தருகின்றன. பெரும்பாலும் மீள்வாசிப்பதென்பதே பெரும்பான்மையாக புரிந்துகொள்ளப்பட்ட, நிறுவப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட வாசிப்பனுவம் கடந்து, ஒரு படைப்பு பேசும் வர்க்கநலன், அதன் பின்னுள்ள அரசியல், அது காப்பாற்ற முயலும் விழுமியங்கள், அதன் பயனாளிகள் இவற்றை முன்வைத்து நிகழ்த்தப்படுகிற ஒன்றுதான். ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் எழுதிய இராமயண பாத்திரங்கள் பற்றிய கட்டுரைகளை (வால்மீகியை இராமாயணத்தை முன்வைத்து) படித்த போது அது சாஸ்திரிகளின் ஆழ்ந்த கவியுள்ளத்தையும், கூர்ந்த மதியையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை ஒரு மீள்வாசிப்பெனக் கொள்ளமுடியாது. வால்மீகியின் இராமயணத்தை இன்னும் பக்தி மயமாக எழுதிய துளசிதாசரின் வாசிப்பனுபவம் வேறு. அதையும் மீள்வாசிப்பெனச் சொல்லமுடியாது. கம்பராமாயணத்தையும் கூட ஒரு மீள்வாசிப்பாகக் கொள்ளமுடியாது. ஏனெனில் இவைகள் அனைத்தும் இலக்கிய மதிப்பீடுகள், போற்றப்பட்ட விழுமியங்கள் இவைகளைச் சார்ந்தும், அவைகளை மேலும் உயர்த்தியும் காட்டும் வகையிலேயே எழுதப்பட்டவை. ஆனால் மீள்வாசிப்பு என்பது பொதுவாக அதன் அடிப்படையில் இருக்கும் அரசியல் சார்ந்த பார்வையை கொள்வது.

இராமயணத்தினை மீள்வாசிப்பது என்பது நானறிந்த வரையில் பலமுறை தமிழில் நிகழ்ந்திருக்கிறது. புதுமைப்பித்தன் அகலிகையை மீள்வாசிப்பு செய்திருந்தார். அண்ணாவும், புலவர் குழந்தையும் அப்படியே. பிரபஞ்சனும், இராஜம் கிருஷ்ணனும் கூட சில பாத்திரங்களுக்குச் செய்திருக்கிறார்கள். இந்த தாடகை கதையை சுந்தரவடிவேல் பார்த்த இதே பார்வையில் பிரபஞ்சனும் எழுதியிருப்பதாக நினைவு. அதாவது நிலவுடமைச் சமுதாயத்தைச் சேர்ந்த இராமன் தனது விழுமியங்களின் படியே ஒரு வனவாசியான தாடகையைப் பார்ப்பதாகவும், நிலவுடமை- வேளாண்மைச் சமுதாயம் தங்களது ஆக்கிரமிப்பை வனவாசிகளின் மீது செலுத்த முனையும் போது அதை தங்களது சூழலினைக் காப்பாற்ற விரும்பும் ஒரு பெண் வனவாசிப்பெண் எதிர்ப்பதாக பிரபஞ்சன் மீள்வாசிப்புக்குள்ளாக்குகிறார். இது இராமாயணப்பாத்திரங்களின் நிறுவப்பட்ட வடிவங்களின் அடியில் இருக்கும் அரசியலை உருவி எடுக்கிறது. இப்படிச் செய்வது கம்பரை அல்லது வால்மீகீயை இழிவு செய்வதாகாது. அன்றைய விழுமியங்களின் இருக்கும் அரசியலை இன்றைய விழிப்புணர்வின், தேவையின் அடிப்படையில் உரித்துப்பார்ப்பதே மீள்வாசிப்பதாகும்.

தாடகை என்னுடைய இடம் இது என்கிறாள். இராமன் ஒரு நாட்டை, நகரத்தைச் சேர்ந்தவன். விஸ்வாமித்திரரும் நகரையே தனது அடையாளமாகக் கொண்டவர். அவர் நகரைத் துறந்து, வனத்தில் வாழ்பவர். ஆனால் அதன் விழுமியங்களை துறந்தவர் அல்ல. வனவாசி மக்களின் உருவ அமைப்பு, நிறம், உணவுப் பழக்கங்கள் இவைகளை இகழ்ந்தும் தூற்றியும் சொல்வது நகர விழுமியங்களில் பழகியவர்களுக்கு எளிதான ஒன்று. பெண்ணென்பதால் கொல்லத்தயங்கும் இராமனை, அவளைத் தூற்றியும், நாணம் பயிலும் பெண்கள் போன்றவள் அல்ல, இந்திரனையும் மற்றவர்களையும் போரிடத்தயங்காதவள் என்பன போன்ற காரணங்களைச் சொல்லி கொல்லத்தூண்டுகிறார். இதில் கம்பர் தனது கவித்திறமையை, மொழியாளுமையை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் மீள்வாசிப்பைச் செய்யும் ஒருவர் அதில் செய்யப்பட்டிருக்கும் அரசியலை, அதில் பேணப்படும் விழுமியங்களை அதன் பயனாளர்களை இன்றைய அறிவின் ஒளியில் பார்க்கத்தலைப்படுகிறார்.

அப்படி செய்யதல் அவசியமா என்று நல்லதையே எப்போதும் நினைக்கும், கவியுள்ளம் கொண்டவர்கள் நினைக்கலாம். அப்படிச்செய்வதால் கல்வியிற்சிறந்த கம்பனை இகழ்வதாகாதா என்று கம்பரடிப்பொடிகள் நினைக்கலாம். இராமனை தங்கள் தெய்வமென நினைக்கிறவர்கள் இதை கேட்கவும் வெறுக்கலாம். அவர்கள் எப்போதும் பாராயணம் செய்ய புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு புராணக்கதையின் அடிப்படையில் அதன் விழுமியங்களை கொண்டு பெண்களை அடிமைப்படுத்தவும், மடமையில் வைக்கவும், கற்புக்கதைகள் சொல்லி பெண்களை இழிவு செய்யவும் இப்புனைவுகள் இன்றும் பயன்படும் போது அதைக்குறித்த கவலைகள் கொள்ளும் எவரும் இத்தகைய மீள்வாசிப்பை செய்யவே வேண்டும். அந்த விழுமியங்களின் அடிப்படையில் ஒரு அரசை மீளுருவாக்கம் செய்ய ஒரு அமைப்பும், ஒரு வர்க்கமும் இன்னும் பாரிய அளவில் உழைக்கும் மக்களைத் தூண்டி நாடெங்கும் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முனையும் போது அதைக்கண்டு அதிர்ச்சியுறும் எவரும், அதை எதிர்க்கவிரும்பும் எவரும் இத்தகைய மீள்வாசிப்பைச் செய்யவேண்டியது அவசியம். அவர்களே அதைக் காலந்தோறும் செய்கிறார்கள். கேள்விகளுக்கு அப்பாற்பட்டு இந்த விழுமியங்களை நிறுவமுயலும் எவரும் இத்தகைய முயற்சிகளை எதிர்க்கவிரும்புவது இயல்பானது; ஆனால் இத்தகைய மீள்வாசிப்பை எதிர்ப்பவர்கள், கட்டுடைப்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் இத்தகைய விழுமியங்களை நிறுவவிழைகிறவர்கள் என்பது பொருளல்ல. பலர் காலம் காலமாக இருக்கும் நம்பிக்கைகளை, வடிவங்களை உடைப்பதில் இருக்கும் தயக்கம் காரணமாகவே இதைச் செய்யத்தயங்கலாம்.

இப்படி மீள்வாசிப்பைச் செய்வதனால் ஏற்படும் தலையாய பயன் எதுவென்றால் அது இப்புராணங்கள், இலக்கியங்கள் கட்டுடைக்கப்படும்போது, அவைகளில் இருக்கும் உரிமை மீறலும், வர்க்க நலன்களும் வெளிப்படுத்தப்படுவதுதான். இது காலங்காலமாக பெளராணிகர்களும், நிறுவன அமைப்புகளும், கதா காலட்சேபத்தினாலும், பஜனைகளாலும், மற்ற ஊடகங்கள் கலைகள் வழியாகவும் கடவுளாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக, வழிபாட்டுக்குரியதாக ஏற்றிவைத்திருக்கும் நம்பிக்கைகளை உடைக்கிறது. அந்நம்பிக்கைகளின் பீடங்களாக இருக்கும் தெய்வங்கள், உதாரண புருசர்கள், கற்பின் கனலிகள், சொல்லின் செல்வர்கள் தங்களுக்குரிய சரியான இடத்தை அடைகின்றார்கள். ஒரு இலக்கிய பிரதியில் இருக்கும் கதாபாத்திரங்களாக அவைகள் தங்களது இயல்பான வடிவங்களைப் பெறுவார்கள். அதுவரை அவர்கள் மக்களின் மேல் இந்த விழுமியங்களை நிறுவவும், அதன் மூலமும் அவர்களை கட்டுப்படுத்தவும் சுரண்டவும் விரும்பும் சமகால சக்திகளுக்கு பயன்பட்டே வருவார்கள்.

இப்படிப்பட்ட கட்டுடைப்புகளை, மீள்வாசிப்புகளை இங்குள்ள சிந்தனையாளர்கள் செய்ததாலும், திராவிட இயக்கங்கள் பெரும் அளவில் இந்த இராமயணக் கட்டுடைப்புகளைச் செய்ததாலும் இங்கு வலதுசாரி இயக்கங்கள், சங்பரிவாரங்கள் கரசேவை செய்யவும், கட்சி வளர்க்கவும் முயன்ற போது அது அவர்களுக்கு எளிதாயிருக்கவில்லை. நாடெங்கும் தினக்கூலிகளாய், அன்றாடங்காச்சிகளாய் இருக்கும் அடித்தட்டு மக்கள் முதல் மாணவர்கள் வரை கரசேவை செய்ய கடப்பாரையோடு கிளம்பியபோது, தமிழ் நாட்டில் அத்தகைய பாரிய விளைவுகளும், விபத்துக்களும் நடக்கவில்லை. எந்த இலக்கிய மதிப்புமில்லாதாக இங்குள்ள இலக்கிய வியாதிகளால் கேலிசெய்யப்பட்ட திராவிட எழுத்தாளர்களின் படைப்புகளும், கட்டுடைப்புகளுமே அப்படி ஒரு நிலை இப்போது நிலவுவதற்கு ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இலக்கியமா அல்லது மக்களை அடிமைப்படுத்தும் விழுமியங்களில் இருந்து மீட்பதா என்ற நிலையில் மக்களை விரும்பும் எந்தக் கலைஞனும், இரண்டாவதையே விரும்புவான். அவனே மக்களின் கவிஞனாக, போராளியாக போற்றப்படுகிறான்.

கடலினைத் தாவும் குரங்கும்- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்ததாலே - தெற்கில்
வந்து சமன் செய்யும் குட்டை முனியும்
நதியினுள்ளே முழுகிப் போய் - அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமமணம் செய்த - திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்

என்கிறான் மகாகவி பாரதி. எனவே மீள்வாசிப்பென்பது மீளுவதற்கான வாசிப்பே ஆகும். ஏனெனில் மீளுமாறு உணர்ந்துகொள்ளுதல் விடுதலையை விரும்புகிற அனைவருக்கும் பொதுவானதில்லையா?

said...

சுந்தர் :) என்னுடைய பதிவு/கருத்துக்களின் ஆதார நோக்கத்தையே திசை திருப்பி விட்டிருக்கிறீர்கள். மீள்வாசிப்பு கூடாது, தேவையற்றது என்று நான் சொல்லியிருப்பதைப் போல நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறீர்கள். நான் ஆரம்பித்ததே இது சுவாரசியமானது, தேவையானது என்று சொல்லித்தான்.

உங்களின் இந்த திசைதிருப்பலே தங்கமணியையும் மதியையும் இதன் தேவையை நீளமாகச் சொல்லவைத்திருக்கிறது. என்னிடம் இப்படிக் கூவி விற்கவேண்டிய அவசியம் இல்லை. நான் நடப்புகளையும் விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்குபவந்தான். ஆனால் அதில் நான் எனக்குக் கிடைக்கும் புரிதலையே தீர்ப்பாகச் சொல்லமாட்டேன் - குறைந்தபட்சம் படைப்பாளியின் மீது.

பார்வையை முன்வைத்துவிட்டு தீர்ப்பை வாசிப்பவனிடம் விட்டிருந்தால் உங்கள் மறுவாசிப்பு அற்புதமாக இருந்திருக்கும். வாசிப்பனுவம் பிரச்சாரத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது.

>ல்லது இந்தக் கேள்விகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த வைதீகம் சகிப்பின்மையைக் கற்றுத் தந்திருக்கிறதா?

என்றெல்லாம் என் நோக்கம் திரிக்கப்பட்டு கேள்விகள் வரலாம் என்றுதான் என் பதிவில் முதலிலேயே மறுப்பு எழுதினேன். நான் படைப்பாளியின் மீதான தீர்ப்பை மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறேன்.

சுந்தர் - இதே கேள்வியை 'உங்கள் மறுவாசிப்பின் மீது கேள்வி கேட்பதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?' என்றெல்லாம் நான் கேட்ட்டால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படி கார்ப்பெட் பாமிங்க் செய்வது மிக எளிது.

கம்பனின் படைப்பை முழுமையாக வாசித்தவனல்லன் ஆனால் அவன் கவிஞன் அல்லன் என்று சொன்னது மாத்திரமே நான் கேட்டது.

மற்றபடி மறுவாசிப்பின் சுவாரசியத்தையும் கட்டுடைப்பின் அவசியத்தையும் நான் மறுத்தேனில்லை. திசை திரும்பிப் போயிருக்கிறது.

said...

"வாலியை ராமன் மறைந்திருந்து அம்பெய்ந்து கொன்றதை விவரித்தது பிடித்திருந்தது அவர்களுக்கு. அவர்கள் கேட்ட கேள்வி எல்லோரும் கேட்பதுதான். ஆனால், இவர்களுக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. வாலி கெட்டவன் என்று முத்திரை குத்தவும் எனக்கு விருப்பமில்லை. கெட்டவன் என்றாலும், அந்த ஒரே காரணத்துக்காக எப்படி வேண்டுமென்றாலும் கொல்லலாமா என்ற கேள்வியும் இருக்கில்லியா?"

வாலிவதம் சம்பந்தமாக ஐயப்பன் அவர்கள் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. உபயோகப்படுமா என்று பாருங்கள்.

"இதில் இன்னொரு போர்க்கால யுக்தியும் அடங்கியுள்ளது. வாலிக்கு இந்திரன் கொடுத்த மாலைதான் அதற்குக் காரணம். அதை அணிந்த வாலியுடன் போரிட வரும் எதிரியின் பலத்தில் பாதி வாலிக்கு வந்து விடும். பிறகு இருக்கவே இருக்கிறது வாலியின் சுய சக்தி. எடுத்த எடுப்பிலேயே கணித முறையில் எதிராளி பலவீனம் அடைந்து விடுகிறார். இது மனித அவதாரத்தில் இருக்கும் திருமாலுக்கும் பொருந்தும். இது ஒரு அழுகிணி வரம் அல்லவா? இதற்கு ஒரே மாற்று மறைந்திருந்துக் கொல்வதுதான்.

வாலி இறக்கும் தருவாயில் கூறுவான்: "ராமா, நீ முதலிலேயே நேரில் என்னிடம் வந்திருந்தால் உன் பிரச்சினையை மிகச் சுலபமாகத் தீர்த்திருப்பேனே! நான் ஒரு வார்த்தை கூறியிருந்தால் ராவணன் கதறிக் கொண்டு சீதையை உன்னிடம் ஒப்படைத்திருப்பானே".

ஆனால் இதிலும் ஒரு சிக்கல். ராமன் நேரடியாக வாலியைச் சந்தித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பிறன்மனைக் கவர்ந்த வாலி அதே குற்றம் செய்த ராவணனைக் கண்டித்திருக்க முடியுமா? அப்படியே நடந்திருந்தாலும் அதில் அவதாரக் காரியம் நடந்திருக்குமா?

இன்னொன்று. இப்போது இந்திரன் மாலைக்கே வருவோம். அதை பிற்காலத்தில் அணிந்துக் கொண்ட சுக்ரீவன் ராவணனுடன் துவந்த யுத்ததில் தோற்று ஓடவில்லையா? ஒரு வேளை இப்படியும் இருக்கலாம். அந்த மாலை வாலிக்கு மட்டும்தான் பயன் பட்டிருக்கும் போல.

எது எப்படியாயினும், வானரங்கள் தேவ அம்சம் உடையவர்கள். இந்திரன் அம்சம் வாலி, சூர்யன் அம்சம் சுக்ரீவன். ராமரின் அவதாரக் காரியத்துக்குத் துணை இருக்கவே அவர்கள் பூவுலகுக்கு வந்தனர்.
இதில் வாலி தான் வந்த நோக்கத்தை மறந்து விட்டான். கணினி மொழியில் கூறுவது போல இந்த கோப்பு கரப்ட் ஆகிவிட்டது. அதை அழித்தால்தான் கணினி பாதுகாப்பாக இருக்க முடியும்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு அவர்களே,

இரண்டு விஷயங்கள்.

1. நீங்கள் சொன்னதைக் குழந்தைகளிடம் சொல்ல முடியாது. ஏகப்பட்ட கேள்விகள் வரும். தர்க்கரீதியாகவோ, மனிதாபிமானத்துடன் கூடியதாகவோ பதில் சொல்ல முடியாது.

2. இரண்டாவது நீங்கள் சொல்லியிருப்பது என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாத கருத்து. இதை யார் எப்போது எங்கே சொன்னார்கள் என்றெல்லாம் கேட்டு, பிறகு திரிப்பாகத் திரித்து விதண்டா வாத திரியாகத் தொடர்வதில் விருப்பமில்லை.

உங்கள் கருத்தை 110% ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆனாலும் பதில் சொன்னதற்கு நன்றி!

-மதி

said...

இது மனித அவதாரத்தில் இருக்கும் திருமாலுக்கும் பொருந்தும். இது ஒரு அழுகிணி வரம் அல்லவா? இதற்கு ஒரே மாற்று மறைந்திருந்துக் கொல்வதுதான். :-)

said...

வெங்கட், ஒரு சிறு விளக்கம். உங்கள் எழுத்தின் மூலம் உங்களை நானறிந்த வரையில் நீங்கள் கேள்வி கேட்பதற்கு எதிரானவர் என்ற கருத்தை நான் நிச்சயம் கொண்டிருக்கவில்லை. அதனால் உங்களது கருத்தைத் திசை திருப்பும் நோக்குமில்லை. இங்கிருந்த சில மறுமொழிகளின் தொனியே அப் பொது எதிர்வினைக்குக் காரணம். உங்களது //பார்வையை முன்வைத்துவிட்டு தீர்ப்பை வாசிப்பவனிடம் விட்டிருந்தால்// இந்த உத்தியைத்தான் நான் கைக் கொண்டிருந்திருக்க வேண்டும். கம்பனையோ ராமனையோ வாசகரை வைத்துக் கேள்வி கேட்க விட்டிருக்க வேண்டும். சுட்டியமைக்கு நன்றி.

said...

ஒன்று மனிதாக்கிவிடு
இல்லை கடவுளாக்கிவிடு

மனிதனாக்கி என்னிடம் ஒப்படை
காலி போட்டு மிதித்துத் தேய்த்து அழித்து
புதுக் கடவுள் ஒன்றை தருகிறேன்.

கடவுளாக்கியாவது என்னிடம் கொடு
சுத்தப்படுத்தி திருப்பித்தருகிறேன்
உன் அசுத்தங்களிலிருந்து அவனை

உன் திண்ணைபேச்சு இழுப்புகெல்லாம்
அவன் எதற்கு

நீ ஆக்கலாம் என்றால்
நான் அழிக்கக் கூடாதா?

இந்தத் திண்ணைப் பேச்சு வீணரிடம்
ஒரு கண்ணாயிருக்கனும்
அண்ணாச்சி...

அச்சக்கு அச்சக்கு
அச்சக்கு அச்சக்கு

டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

said...

//இந்தத் திண்ணைப் பேச்சு வீணரிடம்
ஒரு கண்ணாயிருக்கனும்
அண்ணாச்சி...//


அடேங்கப்பா... தெரிஞ்சோ தெரியாமலோ சேம் சைடு கோல் போட்டிருக்காருப்பா!

said...

அது சேம் சைடு கோல் இல்லை
சைடு சேம் கோல்...
என்ன குழப்பம்டா இது. கார்த்தீ...