நாட்டு வைத்தியம் - சசிக்கு ஒரு பதில்

இது சசியின் பதிவிற்கான மறுமொழி.

விரிவாய் அலசியிருக்கிறீர்கள். எல்லா மூலிகை வைத்தியர்களும் வெத்து வேட்டுக்கள் என்பதான ஒரு மனநிலையைப் படிப்பவர்களுக்கு இது ஊட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்விளக்கத்தை எழுதுகிறேன்.

RIMP என்பது Registered Indian Medical Practioner என்பதைக் குறிக்கும். இதற்குள் நிறைய குளறுபடிகள் நடக்கின்றனவென்றாலும் நாம் இங்கு சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் இந்த டாக்டர்கள்தான் தலைவலிக்கும் சுரத்துக்கும் அடிபட்டதற்குக் கட்டுக் கட்டவும், விஷம் குடித்தவர்க்கு வாந்தி எடுக்க வைத்துப் பக்கத்தூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்புவதும். எல்லா குக்கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்புலன்ஸ் அல்லது எல்லாக் குடிகளுக்கும் சாரிடான், மெட்டாசின் தெரியும் வரைக்கும் இந்த டாக்டர்கள்தான் இவர்களது குறுகிய கால வைத்தியர்கள். இவர்கள் வாங்கும் ஊதியம் 5 அல்லது 10 ரூபாய்கள், அல்லது அவர்களது உண்டியலில் ஒரு காணிக்கை. இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதில்லை. இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது, ஊசி போடக் கூடாது. ஆனால் மக்களின் உடனடித் தேவைக்காக இவர்கள் இதைச் செய்யத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு நிறைய ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமலிருக்கலாம். ஆனால் இத்தகைய தவறுகள் "நவீன" மருத்துவர்களாலும் செய்யப் படுகின்றன. வயாக்ஸ் விசயத்தில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்த ஆங்கில மருந்தும் பக்க விளைவுக்கு அப்பாற்பட்டதில்லை. எம்.டி அதைத் தெரிந்தோ (தெரியாமலோ) கொடுக்கிறார். ஆர்.ஐ.எம்.பி யும் அதைத் தெரிந்தோ தெரியாமலோ கொடுக்கிறார். அதற்காக அவர்கள் எல்லோரும் செய்வதை நான் நியாயப் படுத்துவதாக நினைக்க் வேண்டாம். பணத்துக்காக மக்களின் நலத்தோடு விளையாடுவதென்பது கோயில்களில் நடக்கும் கொள்ளையைப் போன்றதே.

அடுத்ததாக மூலிகைகளைப் பற்றிக் கொஞ்சம். நமது தமிழ் மூலிகை மருத்துவம் எவ்வளவு செறிவானது என்பதை நாம் படிக்க வில்லையென்றாலும் கேள்வியாவது பட்டிருப்போம். அகத்தியரில் தொடங்கி 18 சித்தர்கள் வளர்த்தெடுத்த மருத்துவ முறைகள். கண் நோய் 96 என்று அவர்களுக்குத் தெரியும். சிறுநீரின் நிறம், மணம், குணம் கொண்டு இந்தாளுக்கு இன்னதென்று கணிக்கத் தெரியும். வாத, பித்த, கப நாடிகளின் பிறழ்வாலேயே (முக்குண தோசம்) பிணிகள் வருகின்றனவென்பதும், எந்தெந்த மூலிகைக்கு வாத/பித்த/கப குணம் என்றும் எதனை எப்படிக் கையாள்வதென்றும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். இயற்கையாய்க் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு அவர்கள் மருத்துவம் செய்தார்கள். அது பலனளிக்காத போது உப்புக்களைப் பயன்படுத்தினார்கள். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் மட்டுமே கனிமங்களைச் சுத்திகரித்துப் பயன்படுத்தினார்கள். கனிமங்கள் அவர்களது கடைசி ஆயுதம். அவற்றின் பக்க விளைவுகளையும், மாற்றுக்களையும் தெளிவாகவே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வாளால் அறுத்துச் சுடுதலும் தெரியும். நம் தவறு என்னவென்றால் இவ்வறிவைப் பேணாமல் மேற்கத்திய மருந்துகளுக்கும், அறிவியல் முறைகளுக்கும் கேள்வியின்றி நம்மைப் பலியாக்கிக் கொண்டு விட்டோம். அமெரிக்காவில் இயற்கை மருத்துவம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதைப் பணக்காரர்கள்தான் செய்து கொள்ள முடியும். நாலு வல்லாரை மாத்திரைகளைப் போட்ட குப்பியை 20 டாலருக்கு அவர்கள்தான் வாங்கிக் கொண்டு போகிறார்கள். நம்மிடம் அது இருந்தும் அதை வளர்த்தெடுக்காமல் இருக்கிறோம். இன்றும் புற்று நோய் தொடக்கம் கல்லீரல் நோய் என்று பல வகையான நோய்களுக்கும் மருந்துகளைத் தாவரங்களிலிருந்தே பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மருந்துத் தாவரங்களை எப்படி வளர்ப்பது, பாகங்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு எப்படி அனுப்புவது என்பதற்கு நம்மூரில் வகுப்பு நடத்துகிறார்கள். கத்தாழையும், அமுக்குராவும் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. நாம் இவர்களது ஸ்டீராய்டுகளை அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். BSMS என்றொரு சித்த மருத்துவப் பட்டம் உண்டு. ஏதோ ஒன்றிரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும். பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளில் இவர்களில் ஒருத்தர் உட்கார்ந்து மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். இம்ப்காப்ஸ் (Indian Medical Practioners Cooperative Pharmacy and Stores) என்றொரு நிறுவனம் இம்மருந்துகளைத் தயாரித்து விற்கிறது. மத்திய அரசு பேருக்கு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை வைத்திருக்கிறது. இம்மருத்துவமும் ஒரு வரலாறு, அறிவியல், சமூகவியல். தமிழரின் சொத்து. இதைப் பேணுதலும் போற்றுதலும் நம் கடமையே.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது அதிலிருக்கும் குறைகளைக் களைவதும், இன்னும் நமக்குத் தெரியாதவற்றை அறிவதுமே. அல்லது நாட்டு வைத்தியர்களெல்லாம் மட்டம், அவர்களிடம் மருந்து சாப்பிடாதீர்கள், மூலிகைகளெல்லாம் சும்மா என்று "அறிவுறுத்தாமலிருத்தல்" கூடப் பயன் தருவதே! இது ஒரு விரிவான அலசுதலுக்கான விசயம். சித்த வைத்தியம் vs "modern"வைத்தியம் என்று இன்னும் எழுத நிறைய இருக்கிறது, நம்மில் பலருக்கும்!

9 comments:

said...

என் கட்டுரை நான் எழுத நினைத்த போக்கில் இருந்து மாறி விட்டதோ என்று எண்ணும் படியாக இருக்கிறது உங்களின் பின்னூட்டம்.

நான் தமிழ் மருத்துவத்தைப் பற்றியோ, மூலிகை மருத்துவத்தை பற்றியோ இங்கு அலச முயலவில்லை. அது போல அலோபதியை விட மூலிகை மருத்துவம் தாழ்வானது என்றும் விளக்கவில்லை.

அலோபதி மருத்துவத்தில் டெஸ்ட் டியூப் பேபியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நான் என் கட்டுரையில் எழுதியுள்ளதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அதற்கு அலோபதி, சித்தா என எந்த மருத்துவத்திலும் மருந்தில்லாத நிலையையுமே சுட்டிக் காட்ட
முயன்றுள்ளேன்.

இது தவிர மருத்துவர்கள் எந்த வகையில் தங்கள் வெற்றியை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறேன்.

குழந்தைக்காக ஏங்கும் தம்பதியரை சித்தா/அலோபதி மருத்துவர்கள் Exploit செய்வதாகவே நான் நினைக்கிறேன். நான் பார்த்தவரையில் அலோபதி மருத்துவத்தை நாடுவதை விட சித்தா மருத்துவத்தை நாடும் போக்கு தான் நிறைய பேரிடன்
காணப்படுகிறது. காரணம் அலோபதியில் ஒட்டு மொத்தமாக கேட்கப்படும் நிறையத்
தொகைக்கு பயந்து போய் சித்தா மருத்துவரிடன் சிறுக சிறுக பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒருவர் இரு முறை டெஸ்ட் டியூப் பேபிக்கு முயன்று முதல் முறை தோல்வியடைந்து இரண்டாம் முறை பெற்றுள்ளார். இதற்கு செலவிடப்பட்ட தொகை மட்டும் சுமார் 4 லட்சங்கள். ஒரு நடுத்தர வர்க்க இந்தியனுக்கு இது பெரும் தொகை.

இது போல ஆண்டுக்கணக்கில் சித்தா முறையில் முயற்சி செய்து ஒரு பலனும் இல்லாதவர்களே அதிகம். அதற்கும் சில லட்சங்கள் செலவாகிறது.

நீங்கள் கூறுவது போல மூலிகை மருத்துவம் நம் பாரம்பரிய வழியில் வந்த சிறந்த மருத்துவம் என்றாலும் குழந்தைப் பேறு போன்ற பிரச்சனைகளுக்கு இதில் சரியான
நிவாரணம் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே சித்த மருத்துவத்தில் நிவாரணம்
இருந்தாலும் அதற்கு சரியான மருத்துவர்கள் ஒருவர் கூட, I Repeat ஒருவர் கூட
தற்பொழுது இல்லை என்பது தான் உண்மை.

அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும்படி யாருக்கும் என்னால் அறிவுரை கூற முடியாது.

உங்கள் கருத்து நம் பராம்பரிய மருத்துவ முறை என்ற உணர்ச்சி பெருக்கில் இருந்தாலும் யதார்த்த நிலையைச் சார்ந்து இல்லை

உங்கள் கருத்துகளுக்கு நன்றி

said...

இது விவாதத்துக்குரிய விஷயம். என் கருத்துக்களை தனிபதிவாக இடுகிறேன். நமது பாரம்பரிய மருத்துவமுறைகளில் எல்லா பிரச்சனைகளுக்கும் மருந்துகள் இருக்கின்றன. ஒரு முறை திருவண்ணாமலை போகும்போது ஒரு ஆஸ்ரமத்தில் பேச்சுக் கொடுத்து, கற்றுக்கொண்டது. பிரச்சனை, நமது சித்த/ஆயுர்வேத மருத்துவர்கள், சரியாக பயில்கிறார்களா என்பதுதான். மருத்துவனை குறை சொல்லுங்கள், சித்த/அலோபதி மற்றும் பிற வழி ஆட்கள். மருத்துவமுறையை குறை சொல்லாதீர்கள். இது உணர்ச்சி பெருக்கால் எழுதுவது இல்லை. அமெரிக்க அரசும், நிபுணர்களும், மஞ்சளுக்கும், மிளகுக்கும் காப்புரிமை பெற துடித்தது எதற்காக. சுந்தரவடிவேல், இதற்கு சம்பந்தமில்லாத கேள்வி, வூடு ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? ஆப்ரிக்க மந்திரவாதிகள் / மருத்துவர்கள் பற்றிய சமாச்சாரம்; ஒரு வகையில் அதுவும் நாட்டு வைத்தியம்தான்.

said...

சுந்தர், நம்மூர் மூலிகைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகள் பிரமாதம். அதே நேரத்தில், குறிப்பிட்ட மூலிகைகளை எந்தெந்த உபாதைகளுக்கு உபயோகிக்கவேண்டும் என்பதுதான் பிரச்சனை. பெரும்பாலும், நம்மூர் நாட்டு வைத்தியர்கள் மூலிகைகளை பொதுப்படையாகவே உபயோகிக்கிறார்கள். உதாரணத்துக்கு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒரு வியாதிக்கு, பொதுப்படையாக மருந்தளிப்பது தவறு. இன்னும் முக்கியமான விஷயம், நம் நாட்டு மருந்துகள்/ஆயுர்வேத/சித்த மருந்துகளின் பக்கவிலைவுகளைப்பற்றி தெரியாமலேயே நாட்டு வைத்தியர்கள் உபயோகிக்கிறார்கள். உதாரணத்திற்கு பல நாட்டு மருந்துகளில் heavy metals கலந்துள்ளன. இதனால், சாதாரண வியாதி, உயிர்கொல்லும் வியாதியாகிறது.

//நம் தவறு என்னவென்றால் இவ்வறிவைப் பேணாமல் மேற்கத்திய மருந்துகளுக்கும், அறிவியல் முறைகளுக்கும் கேள்வியின்றி நம்மைப் பலியாக்கிக் கொண்டு விட்டோம்.//

இதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. மேற்கத்திய மருத்துவமுறை உருவானதே கேள்விகேட்டுத்தான். ஒரு உபாதைக்கு பல மருந்துகள் இருப்பின், இரண்டையும் ஒப்பிட்டு , எது மற்றதைவிட நன்கு செயல்படுகிறதோ, அதை பயன்படுத்துகிறர்கள். அல்லோபதியைவிட குறிப்பிட்ட வியாதிக்கு மூலிகையே சிறந்தது என நிரூபிக்கும் சோதனைகள் இல்லாத நிலையில், அல்லோபதியை நிராகரிப்பது தவறு.

நீங்கள் கூறியபடி இன்னும் நிறைய அலச வேண்டும். நம் மூலிகைகளின் உண்மையான அருமை பெருமைகளை நாம் அறியாமலிருப்பது வேதனை தருகிறது. இதற்கு காரணம், சரியான ஆய்வுகளின் உதவியோடோ சோதனை முறைகளோ இல்லாததுதான். இதைச் செய்தால் நம் மூலிகைகளை அருமை பெருமைகளை நாம் சரிவர புரிந்துகொள்ள வாய்ப்புண்டு.

said...

சுந்தர்,

நல்ல பதிவு. இது வெங்கட்டின் பதிவில் இட்ட பின்னூட்டத்தின் பகுதி.

//நமது கல்வியமைப்பு முறை தன்னை, தன்னை மட்டுமே எதையும் பயன்படுத்தி ஒருவனை முன்னேற தூண்டுவதாக இருக்கிறது. இது ஒரு நாட்டின் மக்கள், அவர்கள் பேசும் மொழி, அவர்களது மருத்துவ முறை, விவசாயமுறை, வளங்கள், பாரம்பரிய செல்வங்கள் இவை பற்றிய எந்த அறிவையும் அந்நாட்டில் பயிலும் மாணவன் ஒருவனுக்கு வழங்காததைப்போலவே அந்நாட்டின் இருண்டகாலங்கள், அதன் சமூக வாழ்வில் இருந்த, இருக்கிற கொடுங்கோண்மைகள், அநீதிகள், அது மதத்தின் பெயராலும், சமூகத்தின் பெயராலும் இழைத்திருக்கிற அநீதிகள் பற்றிய அறிவையும், புரிதல் எதையும் வழங்கவில்லை.//


நாட்டுவைத்தியம் (சித்த வைத்தியம்) நமது வளமிக்க பகுதிகளில் ஒன்று. அது மிக அழகாக அறிவியற்பூர்வமாக ஆரோக்கியத்தை அணுகுகிறது. ஆரோக்கியமாக இருப்பதை அணுகுவதும், நோயை முன்வைத்து ஆரோக்கியத்தை அணுகுவதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. முன்னது உடலுக்குள் இருக்கும் சமநிலை, மற்றும் உடலுக்கும் இயற்கைச்சுழலுக்கும் இடையே சமநிலை இவற்றை பேணுவதால் உடலை உறுதியோடு, தொற்றை எதிர்ப்பதற்கு வலிவுள்ளதாக ஆக்குவதும், அப்படி சமநிலை பேண மூலிகைகளை உபயோகிப்பதும் வழக்கமாகக் கொண்டது. அதையும் தாண்டி நோயுறும்போதே அது நவபாஷாணங்கள், உலோகங்கள் இவற்றை மருந்தாக பயன்படுத்துகிறது. இதிலும் சமீப காலத்தில் இப்படி உலோகங்களைக் கொண்ட மருந்தினால் உடல் (சிறுநீரகம்) பாதிக்கப்படுகிறதாய் ஒரு குற்றச்சாட்டு ஆங்கில மருத்துவர்களால் வைக்கப்பட்டது; அதுகூட எம்ஜியாரின் நலக்குறைவின் பின்னேயே பிரபல்யமடைந்தது. இதற்கு முறையான ஆய்வு ஆதாரங்கள் உண்டா எனத் தெரியவில்லை.
தங்க, வெள்ளி, தாமிர, நாக பஸ்பங்களும், பாதரசத்தைக் கட்டி செய்யப்படும் சில மருந்துகளும் சித்த மருத்துவத்தில் உண்டு. இவைகள் செய்யப்படுவதற்கு மிகத்தெளிவான முறைகள் உண்டு. இவைகள் குணப்படுத்தும் நோய்கள், மருந்தளிக்கும் விதம் இவை மிகத்தெளிவாக இவைகளை ஒழுக்குகான தரக்கட்டுப்பாட்டு முறையில் தயாரிப்பதும் அவற்றின் தரத்தை உறுதி செய்வதும் மட்டுமே அரசு செய்யவேண்டியது.

மேலை நாட்டு மருந்து கம்பெனிகள் இப்படி மருத்துவத்தை தங்கள் வயப்படுத்தி வருகையிலும், மேலும் மூலிகை மருந்துகளை பழங்குடியினர், நாட்டு வைத்தியர்கள் மூலம் அறிந்து அதை தங்கள் பரிசோதனை சாலையில் செய்து உறுதி செய்தபின் அதை காப்புறுதி செய்துவிடுகின்றனர். பின் அதை நாம் வாங்க வேண்டியுள்ளது.

மாறாக நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை நாம் வளர்த்தெடுத்தால் அது இந்தியாவின் மிகப்பெரிய வருவாய் வழியாக இருக்கும்.

போன நூற்றாண்டு வரை மேற்குலகம் பால்வினை நோய்களைக் கண்டு அஞ்சி நடுஙிக்கொண்டிருந்தபோது நமது சித்தவைத்திய முறைகளில் அந்த நோய்களைத் தீர்க்கும் வழியிருப்பதும், அதைத் தீர்த்துவந்ததும், இந்த பாதரசம் கொண்ட மருந்துக்களால்தான்.

தேன் துளி ஆங்கில மருந்துகம்பெனிகள் தங்களது ஆய்வுக்காக இந்திய மக்களை அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுத்து பயன்படுத்துவதைப்பற்றி எழுதியிருந்தார். எததனை ஆங்கில மருத்துவர்களுக்கு இது போன்ற ஆங்கில மருத்துவங்களின் தீமைகள், அதற்கு நாமளிக்கும் விலை பற்றி தெரியும். சித்த வைத்திய முறைகளைப் பற்றி குறைபேச மட்டுமே தெரிந்த ஆங்கில மருந்துக்கம்பெனிகளின் ஏஜெண்டுகளாய்த் தான் அவர்கள் செயல்படுகிறார்கள்.

இந்தியாவுக்கு நமது மருத்துவமுறை ஒரு பெருஞ்செல்வம் தரும் கற்பகமரம். அதை பயன்படுத்துவதும், மாற்றனிடம் தாரை வார்த்துவிட்டு, பின் அவனை கெஞ்சிக்கொண்டிருப்பதும் நமது அணுகுமுறையில்தான் இருக்கிறது.

said...

Link to the Theen thuli's aricle: http://padmaarvind.blogspot.com/2005/03/blog-post_17.html

said...

thangamani,

There is ample evidence that heavy metal contamination is rampant in indian/chinese herbal treatment. There have been quite extensive studies.

See:
http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=pubmed&dopt=Abstract&list_uids=11936709

http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=pubmed&dopt=Abstract&list_uids=15598918

I will try and write in detail when possible.

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இது குறித்து அவ்வப்போதாவதேனும் பதிய ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.
சசி: ஆர். ஐ. எம். பி குறித்து உங்களுக்கான பதிலாக ஆரம்பித்து, சில நாட்களாகவே எழுத நினைத்த மற்றவற்றையும் எழுதிவிட்டேன். உங்களது எழுத்தையும் நோக்கத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளாத அதே நேரத்தில் உங்களது பதிவின் பின்னூட்டங்களின் தொனி என்னைத் தூண்டியது. நிறைய பேருக்கு நாட்டு மருந்து என்றாலே ஒரு பயம் அல்லது இளக்காரம் அல்லது இன்னும் முதிர்ச்சியடையாத "சயன்ஸ்" என்பது போன்றதொரு அணுகுமுறை இருக்கிறது என்ற எண்ணம் எனக்குண்டு. இது அவர்களது தவறில்லை. நம்மிடம் இருக்கும் பெருஞ்செல்வத்தை வெளியுலகிற்கு அறிவுறுத்தாமலிருப்பதுதான் தவறு. அரசின் அளவில் இது குறித்த பெரிய செயற்பாடுகள் இல்லாதவரை இம்மருத்துவம் அதிகத் தூரம் செல்லப் போவதில்லை.
இரவி: அந்த இரண்டாம் கட்டுரைச் சுருக்கத்தையும் அதற்குப் பதிலாக ஒரு மருந்துக் கம்பெனியின் பதிலையும் சில வாரங்களுக்கு முன் படித்தேன் (சுட்டி கிடைத்தால் தருகிறேன்). இதில் உண்மையிருந்தாலும், x-ray fluorescence spectroscopy என்ற முறை உலோகங்களையா அல்லது அதன் ஆக்ஸைடுகளையா கண்டுபிடித்து அளவிடும் என்பதையும், முறையாக சுத்தி செய்து புடம் போட்ட உலோக மூலக்கூறுகள் அவ்விதமான ஆக்ஸைடுகளாக இருந்தால் அவையும் உலோகமாகவே கணக்கிடப் படுகிறதா என்பதும் தெரிய வேண்டும். பற்பங்களில் இருக்கும் உலோகங்களின் நிலையென்ன என்பது குறித்தும் அது எவ்வாறு உடலால் கையாளப் படுகிறது/வெளியேற்றப் படுகிறது என்பதும் தெரிந்தால் மட்டுமே இது குறித்து நாம் எதையும் திடமாகச் சொல்ல முடியும்.
நாராயண்://மருத்துவனை குறை சொல்லுங்கள், சித்த/அலோபதி மற்றும் பிற வழி ஆட்கள். மருத்துவமுறையை குறை சொல்லாதீர்கள்.// உண்மை. வூடு என்று தெரியாது. இங்கு திடீரென முளைக்கும் வாரக்கடைசி வீதிக்கடைகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சின்னச் சின்னப் புட்டிகளில் வைத்து மரபு வைத்தியச் சாமான்கள் என்று விற்றுக் கொண்டிருப்பார்கள். வாங்கிப் பார்க்க வேண்டும்.
தங்கமணி: சித்த மருத்துவத்தின் பெயரைக்கூடச் சொல்லாமல் கீழாநெல்லியிலிருந்து மஞ்சட்காமாலைக்கு மருந்து நானே கண்டுபிடித்தேன் என்று சொல்லிக் கொண்டு பணம் பார்க்கும் தமிழ் விஞ்ஞானிகளை நினைத்துப் பார்க்கிறேன்!

said...

நெல்லிக்காய் thaenil ooravaithu saapittaal ena payan ???

said...

If we soak amla in honey and eat, what is the benefit ?
If slim persons eat it, is there any possibility to get fat ?
If so please tell me how to eat ?
please mail me about this to akbar.aero@gmail.com ....