ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே!

நமக்கு அரிச்சுவடியிலிருந்தே கற்பிக்கப்படுவது என்னவென்றால் ஸ்ரீ என்பது வடமொழி எழுத்தென்றுதான். ஆனால் ஒருநாள் திருமந்திரத்தின் சக்கரம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஸ்ரீ என்ற எழுத்து சி மற்றும் றீ என்ற எழுத்துக்களின் கூட்டுவடிவமே என்று புலப்பட்டது. இது ச என்ற எழுத்தின் ஒரு பகுதியையும், றீ என்ற எழுத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தைப் பாருங்கள். இவ்வடிவம் காலம் செல்லச் செல்லச் சிறிது சிறிதாக


உருமாறித் தற்போதைய ஸ்ரீ என்ற வடிவை அடைந்திருக்கிறது. இதுகுறித்து யாரேனும் முன்னமே எழுதியிருக்கிறார்களா என்று தெரியாது. தகவலிருந்தால் குறிப்பிடவும். இன்றும் ஈழத்தமிழர்கள் சிறீதரன், சிறீநிவாசன் என்று எழுதுவதைக் காண்கிறோம். ஆக, ஸ்ரீ என்பது தமிழ் எழுத்தே, அது வடமொழி எழுத்தல்ல என்றே தோன்றுகிறது. எக்காரணங்களால் ஸ்ரீ வடமொழி எழுத்து என்று பெயர்பெற்றது என்பதையறிய ஆவலுண்டாகிறது. மேலும் திருமந்திரத்தில் ம் என்ற உச்சரிப்பைக் குறிக்கச் சிறிய வட்டத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். உதாரணமாக ரீம் என்பதை "ரீ"க்குப் பக்கத்தில் ஒரு சிறிய வட்டத்தைப் போடுகிறார். இது ஐரோப்பிய எழுத்துக்களில் உதாரணமாக ஆங்க்ஸ்ட்ராம் என்பதன் குறியீடாக A என்ற எழுத்துக்கு மேலே போடுவோமே ஒரு வட்டம் அதனைப் போன்றதே. ஆனால் "ரீம்" இல் இவ்வட்டம் "ரீ"க்கு வலது பக்கத்தில் போடப்பட்டிருக்கும். இத்தகைய குறியீடுகளும் தற்காலத் தமிழில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்வியை மொழியறிஞர்களிடமே விட்டுவிடுவோம்!

மாத்திருவோம்ல!

ஏய் மாத்திப்புடுவேன்
அன்னக்கி வாங்குன மாத்து பத்தாதா?
மாத்துடா அவனை...

இவையெல்லாம் மதுரைப் பக்கத்தில் 'அடி' என்பதற்கு 'மாத்து' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதைக் காட்டும் சில சொற்றொடர்கள். உங்களுக்கே தெரியும், மாத்து என்ற வார்த்தையின் தூய வடிவம் 'மாற்று'. எப்படி 'காத்து' என்பது 'காற்று' என்பதைக் குறிக்கிறதோ அதைப்போலத்தான் இதுவும் மாத்து=மாற்று. இந்த மாற்று என்ற வார்த்தை மாறு என்ற வார்த்தையிலிருந்து பிறந்திருக்கக் கூடும். மாறு என்பதற்கு பிறம்பு, மிலாறு என்ற பொருட்கள் உண்டு. இவை நாணல் வகை. தடித்தவற்றைத் தடியாகக் கொள்ளலாம். பிறம்புத் தடி. மெலிந்த நாணலை ஒன்று சேர்த்துக் கட்டுவது விளக்கு-மாறு. மிலாறு என்றும் சொல்லப்படுவதுண்டு. அடிப்பதற்குப் பயன்படுவது பிறம்பு. மேய்ப்பர்கள், காவலர்கள், வேட்டைக்காரர்களிடமிருந்தது பிறம்பு. அதையே அடிப்பதற்கும் பயன்படுத்தினார்கள். "மாற்றை"க் கொண்டு அடிப்பதனால் அது மாற்று என்றாகிப் பிறகு மாத்து என்று திரிந்தது. (இந்தியில் அடிப்பதற்கு "மார்" என்றுதான் சொல்லப்படுகிறது. இந்த வார்த்தை தமிழிலிருந்து போயிற்றா என்பதை ஆராய்வதல்ல என் நோக்கம். மாறாக, மாறு என்பதைச் சுற்றியமைந்திருக்கும் வேறு சில தமிழ்ச் சொற்கள் எப்படித் தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன என்ற வியப்பே இவ்விடுகையின் நோக்கம்!).

பழம்பாண்டி மண்டலத்தில் மாறை என்றொரு நாடு இருந்திருக்கிறது (மண்டலம் என்பது பெரும்பகுதி, நாடுகள் என்பவை மண்டலத்தின் உட்பகுதிகள்). அக்காலத்தில் நிலத்தின் பண்புகளைக் கொண்டே பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாறு நிறைய வளர்ந்திருந்த இடம் மாறை என்பதாக இருந்திருக்கலாம். மாறோகம், மாறோக்கம் என்பனவும் கொற்கையைச் சூழ்ந்த பகுதிகள் (பழம்பாண்டி நாடு). இப்பகுதியை ஆண்டவர்கள் (ஆண்ட மன்னர்கள்) பாண்டியர்கள். இவர்களில் பலருக்கு மாறன் என்ற பெயர் உண்டு. நெடுமாறன், இளமாறன் போன்றவை. பிறம்பு என்பது தடி மட்டும் அல்ல. அதுவே கோலும் கூட. கோலைக்கொண்டு நல்லது செய்பவன் செங்கோலன். அல்லது செய்தவன் வெங்கோலன். கோலைக்கொண்டு (மாறைக் கொண்டு) ஆட்சி செய்தவன் என்பதால் அவன் மாறன் என்றும் அறியப்பட்டிருக்கலாம்.

வார்த்தைகளின் பின்னே சுழன்று சுழன்று ஓடுவது ஒருவித மயக்கத்தையும் கிளுகிளுப்பையும் தருகிறது. எதையோ கண்டுகொண்டது மாதிரியான நிறைவையும் தருகிறது. அறிதோறும் அறியாமை காண்பது அறிவு என்ற விழிப்பையும் தருகிறது. விழித்துத் தோண்டத் தோண்டச் சுரந்து தருவதற்கு எந்தாய்த் தமிழிருக்கிறது!

உசாத்துணை: செந்தமிழ் அகராதி, தொகுப்பாசிரியர் - ந.சி.கந்தையா, 1987. EVS Enterprises, Singapore.

சங்கத் தமிழ் மூன்றும் தா!

இது எந்தப் பாடலின் கடைசி அடியென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

பலரும் இதன் பொருளைப் புரிந்துகொண்டதாக நான் நினைப்பது - இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் எனக்குத் தா என்பதாகவே. ஆனால், சங்க காலத் தமிழ் நூல்களில், முக்கியமாக, முதல் மற்றும் இடைச்சங்க நூல்கள் பெரும் கடற்கோள்களினால் அழிந்துபட்டன என்பதைப் பல இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. முக்கியமாகப் பலரால் கையாளப்படுவது "பஃறுளி ஆற்றோடு பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்பது சிலப்பதிகாரம். இத்தகைய கடற்கோள்களினால் முதலிரு சங்கத்து நூல்களுள் பெரும்பாலானவையும், தமிழர்களின் சொற்களும், வாழ்வும், கலையும் பெருவாரியான அழிவுக்குள்ளாயின. முதல் இரு சங்கங்கள் முறையே மதுரை, கபாடபுரம் ஆகிய இடங்களில் இருந்ததாக ஆய்வர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையிலேயே மூன்றாவது சங்கம் வடமதுரையில் (தற்போதைய மதுரையில்) அமைக்கப்பட்டது. கடற்கோள்களில் தப்பிப் பிழைத்த பலநூல்களும் சரி, கடைச்சங்க காலத்து நூல்களும் சரி, பிற்காலத்தில் மூண்ட அரசியல், சமூகப் பிணக்குகளின்போது அழிக்கப்பட்டமையும் நிகழ்ந்திருக்கிறது. இந்த மூன்று சங்கத்து நூல்களும் தமிழர்களின் வரலாற்றைப் பெரிதும் புரிந்துகொள்ள உதவக்கூடியன. பெரும் அறிவுக் களஞ்சியங்களாவன. ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் மாளாத மாண்புடையன. இவற்றைக் கற்பதற்கான நெடுவாழ்வு சாதாரண மாந்தர்க்கில்லை. கல்வி கரையில, கற்பவர் நாள்சில என்றதனை இங்கு நினைவுகூர்க. எனவேதான் மெய்யறிவினாலே, ஓதாக்கல்வியாலே இம்முச்சங்கங்களின் தமிழையும், இலக்கியங்களையும் உணர்ந்து சுவைத்து இன்புற ஏங்கித் தவித்த மனதாக, "பாலும் தெளிதேனும்" என்ற பாடலைப் பாடிய இந்த ஔவையார் (பல ஔவையார்களில் இவர் பிற்காலத்தியவராக இருக்கக்கூடும்) "சங்கத் தமிழ் மூன்றும் தா", அதாவது இந்த மூன்று சங்கத்துள் வளர்ந்த தமிழையும் எனக்குத் தா என்று இறைஞ்சுகிறார் என்பதாகவும் பொருள் கொள்ளத் தோன்றுகிறது.

இப்பாடலை இன்னும் சிறிது நோக்கினால், "கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே" என்பது யாரை அல்லது எதனைக் குறித்தென்று ஒரு கேள்வி எழுகிறது. இதன் பரவலான விளக்கம் பிள்ளையார் என்பது. ஆனால் மணி என்பதைப் பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கின்றனர். மணி என்பதை நம் உள்ளத்தே உறைகின்ற ஞானத்தின் குவிய இடத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஞான மணியே, நன்மணியே, பொன்மணியே, நடராஜ மணியே என்பார் வள்ளலார். இந்த ஞானத்தையே "தூமணி" என்பதாகக் கொள்ள இடமிருக்கிறது. துங்கக் கரிமுகம், கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியைப் பார்த்தால் தோன்றும் கோலம். தோன்றி மறைந்து விளையாடும் ஒரு காட்சி. ஒளியும் இருளுமாய்க் கலந்து காட்டும் கோலம். அதுவே ஞானத்தின் இருப்பிடமாகப் பலராலும் காட்டப்படுவது. திருமூலரிலிருந்து பல சித்தர்களும் சிந்தையைச் செலுத்துவது இவ்விடத்துக்கே. இக்காலத்து யோகாசன வியாபாரிகளுக்கும், மத வியாபாரிகளுக்கும்கூடப் புரிந்தோ புரியாமலோ இவ்விடத்தின்மீது ஒரு மயக்கமுண்டு. ஆக, அங்கே இருக்கின்ற ஞானத்தால் பலவற்றையும் உணர முடியும். மெய்யுணர்தல். மெய்யறிவு. மெய்ஞானம். இது ஓதாமலேயே வாய்க்கக்கூடியது என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தூமணியிடமே ஔவையார் முச்சங்கத் தமிழையும் தரச்சொல்லி வேண்டுகிறார். சரி, முதல் வரியில் வரும் சாப்பாட்டுச் சரக்குகள் என்னத்துக்கு? "பால், தெளிதேன், பாகு, பருப்பு" என்ற நான்கும் மனிதர்கள் உயிரைக் கட்டிக் காத்துக்கொள்ளப் போதுமான அத்தனைச் சத்துக்களையும் கொண்டுள்ளன. இவற்றை மட்டுமே உண்டுகொண்டு வேறு உண்டியைத் தேடாது உயிர்வாழ்ந்துவிட முடியும். சாதகருக்கும் உண்டி தேவை. காற்றைக் குடித்து உயிர்வாழ எல்லோருக்கும் முடிந்துவிடுவதில்லை. அதே நேரத்தில் ஆடம்பரமான பெருவுணவுக்கும் நேரம் கூடுவதில்லை. எனவேதான் இந்த அடிப்படை உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு உன்னைப் பேணிக்கொண்டிருக்கிறேன், எனக்கு வேண்டியதைக் கொடு என்கிறார்.


மதங்கள் எதனை வேண்டுமானாலும் மக்களிடமிருந்தும், அவர்தம் மூதாதையரிடமிருந்தும் எடுத்துக் கொள்ளலாம். அவற்றையே இன்னொருவிதமாக மக்களிடம் பரப்பலாம். மக்களிடம் தம் ஆளுமையைத் தக்கவைத்துக் கொள்ள எத்தனைக் கோலங்களையும் புனையலாம். ஆனால் மெய்தேடும் மக்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் மெய்யென்று எண்ணலாகாது. தீர விசாரிப்பதைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும். மெய்யை அடையும் வரை தேட வேண்டும். தேடினால் கண்டடையலாம்.

தமிழர்கள் ஓம் என்று சொல்லலாமா?


வயலிலே இருக்கின்ற பயிர்களிலே ஒவ்வொன்றுக்கும் நீர் தேவை. வாய்க்காலில் ஓடி வரும் தண்ணீர் வாய்மடையை அடைந்து வயலுக்குள் நுழைகிறது. பயிர் ஒவ்வொன்றையும் நனைக்கிறது. தண்ணீரைக் காணாத பயிர் வாடும். அதனைப் போலத்தான் நம்முடலின் செல்களும். ஒவ்வொன்றுக்கும் உயிர்வாயு (ஆக்சிஜன்) தேவையாயிருக்கிறது. காற்றில்லாத இடம் மரணிக்கிறது. ஒவ்வொரு செல்லுக்கும் காற்றைக் கொண்டுபோகத்தான் நாளங்களும், நுண்குழல்களுமிருக்கின்றன. அவை காற்றைச் சரிவர ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டுபோகும் வழிமுறைகள்தான் யோகாசனங்களும், மூச்சுப் பயிற்சிகளும். சில யோகாசனங்களைச் செய்யும்போது, வளையாத இடங்களை வளைத்துப் பிடிக்கும்போது அங்கே இரத்தம் பாய்வதை உணரமுடியும். இரத்தம் பாய்வது புதிய காற்றைத் தரவும், பழைய கசடுகளை அடித்துக் கொண்டுபோய் வெளியேற்றவும். உடலை வளைக்காது ஒரே வேலையை வருடம் முழுக்கச் செய்யும் இன்றைய சாமானியர் ஒவ்வொருவருக்கும் தேவையானது இத்தகைய இரத்த ஓட்டம். இதனைச் செய்யும் ஒரு முறைதான் ஓம் என்ற உச்சரிப்பு. மூச்சை நன்றாய் இழுத்து ஓ.....ம்........என்று சொல்லிப் பாருங்கள். ம்....என்று குறைந்துகொண்டே போய்க் கடைசியில் ஓசையும் வராத ஓரிடம் வரை செல்லுங்கள். அப்போது உங்கள் செல்கள் காற்றைக் கேட்டுக் கெஞ்சுவதைக் காணலாம். பசிக்கின்ற வயிற்றைப் போல் அது ஏங்கும். காற்றுக் குறைந்த இந்நிலையை hypoxia என்பார்கள். இந்நிலையில் செல்கள் தமது பாதுகாப்புச் செயற்பாட்டை முடுக்கிவிடுகிறன்றன. சாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளைக் கையாளுகின்றன. இதுவரை சாவென்றால் என்னவென்றே அறியாத, கஷ்டமென்றால் என்னவென்றே அறியாத செல்கள் ஏதோ ஆபத்து என்று தம்முடைய வாழும் திறத்தையெல்லாம் உசுப்பிவிடுகின்றன. இப்போது மீண்டும் காற்றை இழுத்துக் கொள்ளுங்கள். Reoxygenation என்பது இந்நிலை. அது எல்லா செல்களுக்கும் மீண்டும் காற்றை அனுப்புகிறது. இதைப் போலத் திருப்பித் திருப்பிச் செய்வது செல்களின் உயிர்ப்புத்தன்மையைக் கூட்டும். இது செல்களைப் பெரும் ஆபத்துக்களிலிருந்து (severe hypoxia) தப்பிக்க வைக்குமளவுக்கு முன்கூட்டியே தயார்நிலையில் வைத்திருக்கிறது (preconditioning).

ஓம் என்பது ஒரு உச்சரிப்பு. ஒற்றைச்சொல் மறை. மறையென்பது மந்திரம். இவ்வுச்சரிப்பிலிருந்தே அண்டம் பிறந்ததென்பர், மந்திரங்கள் பிறந்ததென்பர், யாவும் இதனுள்ளே அடக்கமென்பர். இவ்வோசையின் பிறப்பையோ, இதிலிருந்து பிறக்கின்றவற்றையோ குறித்து எழுதும் கல்வி எனக்குக் கிடையாது. ஆனால் இவ்வுச்சரிப்பையே பண்டைய தமிழர்கள் தம் உடலை வலிமையாக வைத்திருப்பதற்குப் பயன்படுத்தினர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் பலவிடங்களில் இந்த ஒற்றைச் சொல்லின் மகிமையைப் பேசுகிறார். வளியெங்கும் நிறைந்திருக்கும் காற்றை மட்டும் அள்ளிப் பருகியே உயிர் வாழலாமென்கிறார். இன்றைய ஆராய்ச்சிகளில் மூலச்செல் (stem cell) பற்றிய அறிவு வளர்ந்துகொண்டே வருகிறது. மனிதவுடலில் எல்லா வயதிலும் இந்த மூலச் செல்கள் இருப்பதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. கருவிலே குழந்தையாயிருந்தபோது இருந்த செல்களின் ஒரு தொகுதி இன்னமும் அழியாமல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருந்துதான் உடலின் மற்ற இடங்களுக்கு மூலச்செல்கள் நகர்ந்து சென்று மாறுபாடடைந்து வெவ்வேறு வகையான வேலைகளைச் செய்யக்கூடும் என்கிறது இன்றைய அறிவியல். இந்த மூலச்செல் டெப்போவைத்தான் திருமூலர் "மூலாதாரம்" என்கிறாரா? "மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து" என்கிறது விநாயகர் அகவல். கால் என்பதற்கு காற்று என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த மூலாதாரத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழிமுறைகள்தான் ஓம் என்ற உச்சரிப்பின் வழியான மூச்சுப் பயிற்சியும், மற்றபிற யோகாசனங்களும் என்று தோன்றுகிறது. இதனைக் குறித்த முறையான அறிவியல் ஆய்வுகள் பெரிதும் இல்லை. பண்டைத் தமிழர்கள் கைக்கொண்டிருந்தவைதாம் இந்த முறைகளெல்லாம். சித்தர்களும், மொழியறிஞர்களும் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்தவைதாம். ஆனால் இன்றைய நிலையில் இப்பயிற்சிகள் மதங்களுக்குள் சென்று பிணைந்துகொண்டதால், மதம்சாரா தமிழர்கள் விலகியே நிற்கிறார்கள். நாம் நம்மைக் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்குட்பட்ட, அரசியல் நிலைகளால் திசைதிருப்பப்படுகின்ற சமூகமாக உணராமல், அதற்கும் முற்பட்ட செல்வ, இலக்கிய, வாழ்வியல் செழிப்புற்ற சமூகமாக உணரவேண்டும். யோகாசனம், மூச்சுப் பயிற்சி முதலான இத்தகைய பயிற்சிகளை நம்முடையன என்ற உரிமையோடு மீண்டும் கைக்கொள்ள வேண்டும். வலிமையான வாழ்வினை நாமும் வாழ வேண்டும். அழகிய, வலிய உடலை நாமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். பதினெட்டுச் சித்தர்களும் நம்முடையவர்கள் என்ற உரிமை நமக்கு வேண்டும். அவர்கள் போதித்த மருத்துவமும், ஆன்மீகமும் தமிழரதுதான் என்ற விழிப்பு வேண்டும்.

ஐ.நா.வின் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா!

பன்மொழி மற்றும் பல்கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டாடும் நோக்கில் உலகெங்குமுள்ள ஐ.நா. அலுவலகங்களில், ஐ.நா.வின் ஆறு ஆட்சி மொழிகளுக்குமான விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்த ஆறு மொழிகளும் "வரலாற்று முக்கியத்துவமும், அடையாள முக்கியத்துவமும்" வாய்ந்தவை என்று ஐ.நா. தனது உலகத் தாய்மொழி தினத்தன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

இந்நாட்களாவன:

அரபு மொழி தினம் - டிசம்பர் 8. (ஏனென்றால் 1973 டிசம்பர் 8ஆம் நாளன்றுதான் ஐ.நா. அரபு மொழியைத் தனது ஆறாவது ஆட்சிமொழியாக அறிவித்தது)

ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23 (வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த நாள்; பிறந்தது 1564 வாக்கில்)

பிரெஞ்சு மொழி தினம் - மார்ச் 20 (1970, மார்ச் 20ல் ஆரம்பிக்கப்பட்ட, பிரெஞ்சு மொழியைப் பேசும் மக்களைக் கொண்ட நாடுகளுக்கான, ஒரு கூட்டமைப்பு).

ரஷிய மொழி தினம் - ஜூன் 6 (அலெக்ஸாண்டர் புஷ்கின் என்ற கவிஞர் 1799 ஜூன் 6 ஆம் தேதி பிறந்தார்)

ஸ்பானிஷ் மொழி தினம் - அக்டோபர் 12 (1492ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இந்நாள் உலகெங்கும் ஸ்பானிய மொழி பேசும் மக்களால் கலாச்சார நாளாகவும், கொலம்பஸ் நாள் என்றும் கொண்டாடப் படுகிறது)

சீன மொழி தினம் - இதற்கும் விழா உண்டு. ஆனால் இன்னமும் தேதி அறிவிக்கப்படவில்லை.

இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்:
1. உலகத் தாய்மொழிகள் தினம் என்ற ஒன்றை பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடும்போதே எல்லா மொழிகளையும் கொண்டாடுவதாக ஆகாதா? அல்லது அம்மையப்பனைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றியது போல, இந்த அறுபடை மொழிகளைக் கொண்டாடினால் உலக மொழிகளையெல்லாம் கொண்டாடியதாக அர்த்தம் என்று ஐ.நா. சொல்கிறதா?

2. "அடையாள மற்றும் வரலாற்று முக்கியத்துவம்" ("symbolic or historic significance") என்று சொல்லிவிட்டு இந்த ஆறு மொழிகளை முன்னிறுத்தும்போது மற்ற மொழிகளுக்கு இந்த முக்கியத்துவம் குறைவு என்று மறைமுக அர்த்தம் கற்பிக்கிறதா ஐ.நா.?

3. இவ்விழாக்களுக்காக நிச்சயமாக ஆண்டுதோறும் பணம் வாரி இறைக்கப்படும். இவ்விதம் இந்த ஆறு மொழிகளும் ஆடம்பர விழாக்களோடு கொண்டாடப்படும்போது மற்ற மொழிக்காரர்கள் ஏழைக் குழந்தைகளைப் போல விரல் சூப்பிக்கொண்டு தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது எல்லாமே நம் மொழிதான் என்று பரந்த மனதுடன் அள்ளி இறைக்கப்படும் பன்னாட்டு மிட்டாய்களைப் பொறுக்கிக் கொள்ள வேண்டுமா? இப்படிப் பொறுக்கித் தின்னும்போது "பார், உன் தாய்மொழியைப் படிப்பதை விட இந்த மாதிரி ஏதாவது படித்தாலாவது இப்படிப் பொறுக்கித் தின்னலாமே" என்று நாலு புத்திசாலிகள் யோசனை சொல்லும்போது அப்படித்தானோ என்ற எண்ணம் பிறக்குமா?

உங்களுக்குக் கண்டனம் இருந்தால் அல்லது பாராட்ட விரும்பினால் மேற்கண்ட செய்தியில் இருக்கும் தொடர்பு மின்னஞ்சலில் இருப்பவருக்குத் தெரிவியுங்கள்.