வசந்தன் ஒரு நட்சத்திரம்!

வசந்தன் ஒரு அமெரிக்கப் புள்ள. நா மொதல்ல பாத்தப்ப அவருக்கு வயசு ஒம்போதிருக்கும். இப்ப 15. நா அவரப் பாத்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. அவங்கப்பா அன்னக்கி ஒரு சேதி சொன்னாரு. மலைப்பா இருக்கு. சொல்றேன்.

வசந்த் வருசா வருசம் இந்தியாவுக்குப் போவார். கோடை விடுமுறைக்கு. கிருஷ்ணகிரி பக்கத்துல மகனூர்ப்பட்டி பள்ளிக் கூடத்துக்கும் போவார். அவங்கப்பா படிச்ச பள்ளிக்கூடம். மூணு வருசமா ஒவ்வொரு விடுமுறையிலயும் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றார். உங்க அப்பாம்மா மாதிரியே நீங்களும் பண்ணையடிக்கப் போவேண்டியதில்லை, படிச்சு உங்க கனவுப்படியுமாகலாம்னும் சொல்லிக் குடுக்குறார். தோழனாய்க் கூடி விளையாடி நம்பிக்கையூட்டுறார்.

மறுபடியும் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து அந்த அனுபவத்தையொரு கட்டுரையாய் எழுதப் போக, அங்கிருந்து ஆரம்பிக்கிறது அடுத்த கதை. நம்பிக்கையூட்டிக்கு இன்னொரு திரியைப் பற்ற வைக்கிறார் இந்தவூர் வாத்தியார். நீங்க ஏன் அந்தப் பள்ளியின் வசதிகளை மேம்படுத்தக் கூடாது? உண்டியல். பிள்ளைகளின் ஐந்து செண்ட், பத்து செண்ட், 50 ரூவா, கோடையில கார் கழுவி உழைச்சது. அந்தப் பள்ளி மட்டுமில்ல, ஊர்ல இருக்க நிறைய பள்ளிகள்ல. நிறைஞ்சுக்கிட்டிருக்கு. நேத்து பேசினேன். 5000 டாலர் சேந்திருக்கு. இன்னும் 25 நாள்ல ஊருக்குப் போகப் போறேன். அதுவரைக்கும் கிடைக்கிறதைக் கொண்டு போவேன். அந்த நூலகத்துக்குப் புத்தகம் வாங்கித் தருவேன், ஆய்வகத்தை மேம்படுத்த, மேசை நாற்காலி வாங்க, இப்படி எத்தனையோ செய்றதுக்கு இருக்குன்னார்.

நிஜம். இன்னொரு நம்பிக்கையாளனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் வசந்தன்!

இந்தவூர் செய்தித் தாளொன்றில் வசந்தனைப் பற்றி:
பக்கம் 1, பக்கம் 2.

12 comments:

said...

நல்லாயிருக்கு பதிவு.
பரவாயில்லயே, இந்தப் பெயரிற்கூட நல்லவர்களும் பயன்பாடானவர்களும் இருக்கிறார்களே!!!

said...

Very heartening news. Vasanthan needs to be appreciated.

said...

அட நம்மட வசந்தன் அமெரிக்கனா?
அது சரி எல்லாமே நல்லா இருக்கு. ஆனால் ஒண்டு மட்டும் எனக்கு உறுத்துது. யாராவது அறிவாளிகள் பதில் சொல்லுங்கள். அமெரிக்காவி;ல் இருக்கும் இளைஞன் மிகவும் சமூகப்பொறுப்போடு ஒவ்வொரு வருடமும் இந்தியா சென்று சிறுவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருகின்றார். பாராட்ட வேண்டிய விடையம். இருந்தும் அவர் கற்றுத் தரும் போது சிறுவர்களிடம் உன்னுடைய அப்பாவைப் போல் பண்ணையில் காலத்துக்கும் வேலை செய்யப்போகிறாயா? என்று விவசாயத்தைக் கேவலமாகவும் நல்லாப்படிச்சு அமெரிக்கா ஓடிப்போயிடு என்பது போலவும் எனக்குப் படுகின்றது. சொந்தமாக விவசாயம் செய்யவும் வியாபாரம் செய்யவும் கல்வி முக்கியம். அதற்காகக் கற்றுக்கொள் என்று சொல்லியிருக்கலாமோ என்று படுகின்றது.

said...

வசந்தனுக்கு என் பாராட்டுக்கள்.

said...

வசந்தன்: நிலவே, உங்க உந்துதல்லதான் தலைப்பே வச்சேன்:)
பத்ரி, தேன்துளி: நன்றி.
கறுப்பி:
//அறிவாளிகள் பதில் சொல்லுங்கள்.//
நான் சொல்றேனேன்னு கோச்சுக்கப்படாது:))
உங்க கேள்வில ஞாயம் இருக்கு.
பண்ணையடிப்பது என்று நான் சொன்னது படிப்பு "வராததால்" கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றவர்களை. எல்லோரும் படித்து விட்டு அமெரிக்காவுக்கு வாருங்கள் என்ற கருத்தாக்கத்தை, பின்னாளில் தமிழகத்தில் ஒரு பள்ளியை நிறுவக் கனவு காணும் விவசாயக் குடும்பத்து வசந்தன், ஏற்படுத்த மாட்டார் என்றே நம்புகிறேன். வசந்தன் பிள்ளைகளிடம் ஏற்படுத்த முனைவது தம்மாலும் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை. பெரும்பாலும் வறிய நிலையிலிருக்கும் அம்மாணவர்களிடம் கல்வியினால் தம் பெற்றோரை விட நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் என்பதே என் எண்ணம். இன்னொன்றையும் ஒத்துக் கொள்ள வேண்டும், தமிழகத்தில் பலரையும் ஆட்டுவிக்கும் அமெரிக்கக் கனவு அந்தப் பிள்ளைகளையும் ஆட்டுவிக்கக் கூடும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இவர்கள் பெரியவர்களாகும்போது படித்தவர்களெல்லாம் சொந்த நாட்டிலேயே இருக்கும் நன்னிலை வரட்டும் என நம்புவோம்!

//சொந்தமாக விவசாயம் செய்யவும் வியாபாரம் செய்யவும் கல்வி முக்கியம்.//
நிச்சயமாய் நன்றாகப் படித்தவர்கள் விவசாயம், வியாபாரம் செய்வதால் நிறைய நன்மைகளே.

said...

வசந்தன் மூலம் அக்கிராமத்தின் பள்ளி பயனடைவது ஒருபுறம். இன்னும் மாணவர்களுக்கு உற்சாகம் தரும் ஒரு முன்னுதாரணம் கிடைத்திருப்பது உண்மையிலே இன்றைய நிலையில் மகத்தானது.

said...

A positive news. thanks sundar.

Sundar,

Could you please mail me the two images? i am not able to read them. would like to share it with some youngsters.

-Mathy

said...

நன்றி சாரா, தங்கமணி.
மதி, அந்த pdf ஐ உள்ளிட முடியாமல் அப்படிப் போட்டு வைத்தேன். உங்களுக்கு அனுப்பிவிட்டேன்.

said...

சும்மா கலர் காட்டும் நிலவுகளுக்கு மத்தியிலை அமெரிக்க வசந்தன் உண்மையிலை ஒரு நட்சத்திரம்தான். (ஒரு கல்லிலை 2 மாங்காய் எண்டெல்லாம் நினைக்காதையுங்கோ)

said...

சுந்தர், நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. "இன்னொரு நம்பிக்கையாளனைப் பார்க்கிறேன்" என்று நீங்கள் சொல்வதன் பொதிவுக் கருத்து எனக்குப் பிடித்திருக்கிறது.

said...

மிகவும் முக்கியமான செய்தியாக இதைப் பார்க்கிறேன். நம்பிக்கை தான் வாழ்க்கை. நல்ல பதிவு. நன்றி.

said...

சிறந்த பணியைத்தான் மேற்கொண்டுள்ளார். பதிவிற்கு நன்றி!