மதியம் வெள்ளி, ஜூன் 10, 2005

புத்தகங்களை விட்டுத் தப்பியோடி

நானும் என் வாசிப்பை எழுதியே தீருவது என்று முடிவெடுத்து விட்டேன். இனி உங்கள் பாடு, கேட்ட தங்கமணி, பிரதீபா பாடு!

அது ஒரு சின்ன பீரோ. அப்பாவுடையது. இதில் நான் எப்போது புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன் என்று தெரியாது. நினைவுக்கு வருவதெல்லாம் தாகூரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சின்னப் புத்தகம். அவரே எழுதியிருப்பதைப் போன்றது. அகமது எனும் ஓடக்காரனோடு ஆற்றுக்குப் போய் முதலையிடமிருந்து தப்பியதிலிருந்து, பூக்களைப் பிழிந்து அந்தச் சாற்றில் கவிதை எழுதும் பரிசோதனை, குத்தகைக்குக் காணி கேட்டு வரும் ஆளின் கதை வரை அருமையான சம்பவங்கள் அடக்கம். சில வரிகள் இன்னும் நினைவிலிருக்கின்றன, "பூக்கள்தாம் குழைந்து கூழாயினவே தவிர" ரசம் வரவில்லை என்பதாய். அந்தப் புத்தகத்திலேயே என்றுதான் நினைக்கிறேன், அவரது சிறுகதைகளும் இருக்கும். தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் கல்லினைத் தொலைத்துவிட்டு ஆற்றங்கரைக் கூழாங்கற்களையெல்லாம் பொறுக்கியபடி திரியும் ஒரு பைத்தியக்காரன், காஞ்சி மன்னனுக்கும் காசி மன்னனுக்கும் சண்டையென்று தோப்பில் விளையாடும் சிறுபிள்ளைகள் இப்படியாக. பிறகு அதே பீரோவுக்குள்ளிருந்த "அன்பின் வடிவம் டாக்டர் ஐடா" எனும் ஒரு புத்தகம். இது டாக்டர் ஐடா ஸ்கடர் எனும் மருத்துவரைப் பற்றியது. வேலூர் சி.எம்.சியை நிறுவியவர் என்று பின்னால் தெரிந்து கொண்டபோது வியப்பாயிருந்தது. நெ.து.சுந்தரவடிவேலின் (இவர் பெயரைத்தான் அப்பா எனக்கு வைத்தாராம்!) நஞ்சுண்ட நாயகர்கள். யாரோ ஒருவர் விஷக் கோப்பையோடு இருப்பது மாதிரி ஒரு படம். இவற்றைத் தவிர அழ.வள்ளியப்பாவின் கவிதைகளும், பள்ளிக்கூடத்து நூலகத்தில் (அப்படியொன்று இருப்பதே ரொம்ப நாட்களுக்குத் தெரியாது) எப்போதாவது கிடைக்கும் 'வரப்புத் தகராறு' போன்றவையும்.

ஆறோ ஏழோ படிக்கும்போது பக்கத்து வீட்டுக்கு இன்னொரு ஆசிரியர் குடும்பம் வந்தது. அந்தப் பிள்ளைகளிடம் ரத்னபாலா (அதில் வந்த துப்பறியும் சுந்தர் நானென்றுதான் நினைப்பு!). அப்போதிலிருந்துதான் பொது நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். அப்பா தன்னுடைய நூலக எண்ணான 51ல் புத்தகம் எடுக்கும் உரிமையை எனக்களித்தார். சில காலம் கழித்து எண் 621க்கு எனக்கொரு 5 அல்லது 10 ரூபாய் கட்டினார். காட்டுச் சிறுவன் கந்தன், கமலாவும் கருப்பனும், ராஜா மகள், ராட்சத சிலந்தி, பொம்மக்கா மற்றும் சிறுவர்களுக்கான நல்லொழுக்கக் கதைகளாகப் படித்து அந்நாயகர்களின் உலகில் சஞ்சரித்தபடியே வீட்டுக்கு வருவேன். இவற்றிலே பல கதைகளின் சம்பவங்கள் இப்போதும் திடீரென்று ஒரு கணத்தில் தலை தூக்குவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வேன். மறந்து போயிருக்கும் கதைகளினூடே இழையும் சோகம் கும்மென வந்து கவியும். இந்தக் காலகட்டத்தில்தான் அப்பாவின் பாரதியார் கவிதைகளைக் கையகப் படுத்தி என் பெயரைப் பச்சை நிற ஸ்கெட்ச் பேனாவால் கோணலாக எழுதி வைத்துக் கொண்டேன். நல்லதோர் வீணை செய்தேயில் ஆரம்பித்தது இன்றும் தொடர்ந்து வருகிறது.

நாளாக ஆக சிறுவர் கதைகள் ரொம்பவும் சிறிய பிள்ளைகளுக்கானதோ எனுமொரு தோற்றம். இருந்தாலும் "பெரியவர்களுக்கான" புத்தகங்களை எடுப்பதில் ஒரு தயக்கம். ஒரு நாள் ஏதோ ஒரு கதையின் முதல் வரியைப் படித்துவிட்டுக் கிடந்து சிரித்தேன் "துங்காநாயருக்குக் கோவம் வந்தது, கேவலம் ஒரு குண்டி வேட்டிக்குக் கூட" வழியில்லையே என்பதாக ஆரம்பிக்கும் கதை. இதன் மூலம் என்னைப் பெரியவர்களின் புத்தகங்களுக்கு அறிமுகம் செய்து கொண்டேன். இன்னொரு பட்டாம்பூச்சி, பாபி போன்றவற்றை மாமா வீட்டில் வாசித்தேன், அவர் குமுதம், விகடன் தொடர் கதைகளைக் கட்டித் தைத்து 'ஜெகதா படிப்பகம்' என்ற பெயரில் கேட்பவர்களுக்குக் கொடுப்பார். புரியாத கதைகளும் ஓவியங்களும் கவிதைகளும் அறிமுகமாயின. மருது எப்போதும் எனக்குப் பிடித்த ஓவியர். பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த தாத்தா ஒருவர் போகும்போது சத்தியசோதனையைக் கொடுத்துவிட்டுப் போனார். அதிலும் கொஞ்சம் படித்துவிட்டு ஜோகான்னஸ்பர்க் என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன், அயலகத்திற்கு வந்தபோது சீமான்கள் சீமாட்டிகளின் தொப்பிகளைப் பார்க்கும்போது அடுத்தாரின் தொப்பியைத் தொட்டுப் பார்த்து அவமானப்பட்ட இளங்காந்தியை நினைத்துக் கொள்வேன். அது பதின்மங்களின் கோளாற்றுக் காலம். கழுதைக்குக் 'காதலும்' அதற்கு ஒரு 'சோகமும்' வேறு சேர்ந்து கொண்டன! பிறகென்ன, கவிதைதான். அப்போதும் அதிகம் படிக்கவில்லை. ஒரு நாள் நண்பனொருவன் கொடுத்த "கருவண்டுக் கண்ணழகி"யைச் சாதாரணப் புத்தகம் என்று வீட்டுக்குக் கொண்டு வந்து படித்துப் பார்த்தேன். அது நான் முதன்முதலாகப் படித்த 'வயது வந்தோருக்கான இலக்கியம்'! பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள், பிள்ளைகளுக்கு, குறிப்பாய் வாத்தியார் பிள்ளைகளுக்கு, ஒரு ஊழ்வினையென்றுதான் சொல்ல வேண்டும். இக்காலத்தில் மற்ற புத்தகங்களை யார் கண்டது!

கல்லூரிக் காலத்திலும் அதற்குப் பின் இன்று வரையிலும் என் வாசிப்புக்கு முக்கியக் காரணம் தங்கமணி. தான் படிப்பவற்றையெல்லாம் எனக்கும் சொல்வான், படிக்கக் கொடுப்பான். அவனோடிருப்பதே போதுமென்ற அனுபவம். பல புத்தகங்கள் தரும் ஒரு உணர்வு. கல்லூரிக் காலங்களில் பாடந்தான் முதன்மையென்றாலும் நடுநடுவே விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த காலங்களிலும் கல்லூரியிலேயும் படித்த புத்தகங்களில் சிலவற்றை என் நாட்குறிப்பில் குறித்திருக்கிறேன். இப்போது படித்தால் வேடிக்கையாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும், சில நேரம் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதைப் பெயர்த்து இங்கு:

29.5.1989 திங்கள். I dont know why I want to have friendship with younger boys and girls. I love them. அவர்களைப் போல் நாமும் இருக்க முடியாதா என்றொரு ஏக்கம். ஆகாச வீடுகளில் (வாஸந்தி) அந்த மீனு ராஜுவின் கையைப் பிடித்துக் கொண்டு வயல்வெளிகளில் நாரைகளைப் பிடிக்க ஓடுவது போல் ஓடமுடியாதா என்றொரு ஊமைக் கனவு. வயது? வீட்டில் விளையாடுவதற்கே முணுமுணுப்புகள். சின்ன வயதில் பெரியமனிதத் தனம், இப்போது சிறுபிள்ளையாக ஏக்கம். இக்கரைக்கு அக்கரைப் பச்சையா?

4.6.1989 ஞாயிறு. இன்று காலையில் விழிக்கும்போதே ஒரு கற்பனை, ஏதோ பெரிய எழுத்தாளன் போல "இரு முழங்கால்களுக்கிடையே அகப்பட்ட ஈயை உயிருடன் பிடிக்கப் பிரயத்தனப் படுபவன் கூனிக் குறுகுவதைப் போல அவன் கூனிக் குறுகினான்" - எப்படி இருக்கிறது. தெரியவில்லை. சிரிப்பு வந்தது. படுத்துக் கொண்டே ஏதேதோ யோசித்தேன். தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்'ஐப் படித்தேன். அதில் வருகின்ற அப்புவை நினைத்தேன். பாவம் அவன். என் தாய் தூயவள் என்று நினைத்துக் கொண்டேன். அலங்காரம் தன் மகனின் தேஜஸ் தீயின் மூலம் தன் பாவத்தைக் கழுவிக் கொள்ளலாம் என்று பாவம் செய்திருப்பாளோ என்று நினைக்கிறேன்.

5.6.1989 எண்டமூரி வீரேந்திரநாத்தின் 'பணம்' படித்துக் கொண்டிருக்கிறேன். எண்ண அலைகள் கொஞ்சம் லேசாக அடித்துக் கொண்டிருக்கின்றன. நிறைய யோசிப்பதில்லை. படிக்கிறேன். பேசுகிறேன். எழுதுகிறேன்(?).

16.6.1989 சுபா படித்தேன். Not bad. But I hardly like crimes. I want to read effective ending or tragic ending stories. இப்போது வீட்டில் நகை பேச்சு. 'பணத்'தில் படித்த ஒரு சில வரிகள்:
Money can buy books - not wisdom
Money can buy medicines - not health
Money can buy wealth - not happiness
Money can buy clothes - not beauty.
அவ்வரிகளின் நிஜம் எனக்குப் புரிந்தது. பணத்தின் தேவையும் புரிந்தது, But I totally dislike the people who are wandering for money only. Do they have any mind with affection? They can do anything for money. They are uselsss. Money is after all nothing. It is needed for living but money only is not life.

21.6.1989 இன்றுதான் கடைசி முழுநாள். நாளைக்குக் கல்லூரி. இப்ராம்சாவுக்கு லெட்டர் போட்டேன். ஒரு 60க்கு மேல் உள்ள கிழவருக்கும் (நார்த்தாமலை பூசாரி) ஒரு 25க்கும் திருமணம். பாவம் பெண். பரிதாபப் பட்டேன். தாலி கட்டிய விரல்களில் தடுமாற்றம். தளர்நடை. ஹ¥ம் சொத்துக்காக இருக்கும். தூங்கினேன். ஜானகிராமனின் 'அமிர்தம்' படித்தேன். மனதில் நாளை காலேஜ் என்ற உணர்வு மேலோங்கி இருந்ததாலும் தலை வலித்ததாலும் அக்கதையின் முடிவு என்னை மிகவும் பாதிக்கவில்லை. only to a slight extent.

26.6. 1989. Ananda vayal is a very effective novel. In moonstone I very much like the character Rosanna. அவளுடைய காதல் on Franklin is divine one.

17.8.1989, வியாழன். கன்யாலால் முன்ஷி எழுதிய ஜெய்சோம்நாத் எனும் நாவல் படிக்கிறேன். அப்பா! படிக்கும்போதே மயிர்க்கூச்செறிகிறது. சஜ்ஜன், பத்மடியுடன் ஒரு பிரிவு கஜினியின் படையைப் பாலைவனத்தின் கோரப் புயலில் மாட்டிவிட்டுத் தன் வாளைச் சுழற்றியபடி "ஜெய் சோம்நாத்" என்று கத்தும் போதும், கோகா ராணா கோட்டையில் இருந்து இறங்கி வந்து கஜினியின் படையினும் புகுந்து போரிட்டு வீழும்போதும் மெய் சிலிர்க்கிறது. இந்துக்கள் அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

6.11.1989. நேற்று அகல்யா by Balakumaranல் இருந்து கொஞ்சம் படித்தேன். அதில் அவன் (சிவசு) சொல்வது போல் நான் இயல்பாய் இருக்கின்றேனா அல்லது ஒவ்வொருவரிடமும் நான் எனது வேஷத்தை மாற்றுகின்றேனா என்பது தெரியவில்லை. எனது நண்பர்களுக்கு நானொரு joker. வீட்டில் படு அமைதி. என்னியல்பு எது? கூடித்திரிகையில் கும்மாளமிடுவதா? தனியேயிருக்கையில் மனஞ்சுருங்கி அல்லது மிக விரிந்து, ஆடி அல்லது ஒடுங்கி, காமுற்றுத் திரிவதா? எல்லாவற்றையும் easyயாக எடுத்துக் கொள்வதா? கோபப் படுவதா? எல்லாவற்ருக்கும் சிரிப்பதா? வீண்வம்பு செய்வதா அல்லது சண்டை வந்தாலும் விலகிச் செல்வதா? எது என் இயல்பு எனக்கே தெரியவில்லை. இவை அனைத்தையும் நான் செய்கிறேன். ஆனால் அதிகம் செய்வது அதிகமாக ஆடுவதுதான். துருதுரு.

11.5.1991. பாலகுமாரனோட முன்கதைச் சுருக்கம் படிச்சேன். எனக்குள் ஒரு நெருப்பு. தங்கமணி சொல்வது போல். கொட்டாங்கச்சியாய்ப் பரபரவென்று திகுதிகுவென எரிகிறது. நீறு பூத்தது போலும் கனன்று கொண்டிருந்தது. கதை. எழுத வேண்டும். பக்கம் பக்கமாய். புத்தகம் புத்தகமாய். மொழி மொழியாய். இல்லை வேணாம். தமிழ்ல மட்டும். ஒவ்வொரு வார்த்தையும் கதையாய் வர வேண்டும். அப்படி யோசிக்கணும். மண்டை வெடிக்கணும். கண்னு முழியெல்லாம் பிதுங்கி ரிசல்ட் கொண்டு வந்து, பெருமூச்சு விடணும். வெறி. அனல் பறக்கும் மூச்சை இழுத்துக் கொண்டு பாலைவனத்தில் உத்வேகத்துடன் பறக்கும் வெள்ளைக் குதிரை மாதிரி, பிடறி சிலிர்க்க அப்படி ஒரு வெறி. எழுத வேண்டும். பணத்துக்காக அல்ல. புகழுக்காகவா? அதற்காக இருக்கலாம். இல்லாமலிருக்கலாம். என் மனதைக் கொட்ட வேண்டும். டன் கணக்கில் ஏற்றி வைத்துக் கொண்ட சுமைகளைக் கொட்ட வேண்டும். கொட்டியே ஆக வேண்டும். நான் பச்சை வயல் மனது ரெண்டாவது கதைல வர்ற புனிதாவாம். தங்கமணி சொல்றான். நெஜமா? இருக்குமா? நான் innocentஆ? நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. எனக்கு peak life வேணும். excitement வேணும். கீழே வர வேணாம். what i mean is mentally. இ.ரா மாதிரி. ஆனா அப்படி ஒரு பதட்டம் வேணாம். ஒரு அப்பாவித்தனமோ, மழுங்கலோ வேணாம். தீர்க்கமாய், நச்சென்று, வெண்ணெயை செவத்துல அடிக்கிற மாதிரி, சிட்டுக்குருவி தலையைத் திருப்புற மாதிரி வாலாட்டற மாதிரி, சப் சப்பென்று மூஞ்சியில அடிக்கிற மாதிரி அப்படி ஒரு புத்தியோட, தெளிவோட, pointஆ ஒரு excitement வேணும். அப்ப உக்காந்து எழுதனும். நான் எழுத முடியுமா? பாலகுமாரன் கன்னியா ராசி உத்திர நட்சத்திரமாம். நானும் தங்கமணியும் அதே. எனக்கு எழுத வருமா? எழுதுவேன், at least இது மாதிரி டைரியாவது. தினம் ஒரு நாலு பக்கம். போதுமே. வாழ்க்கைல retire ஆனதுக்கப்புறம் படிக்க ஒரு புக் கிடைக்குமே. ஒவ்வொரு secondஐயும் எழுதணும். எழுதணும். யோசிக்கணும். என்ன பண்ணலாம். தங்கமணி, யப்பா. என்ன அறிவு என்ன பேச்சு, தீர்க்கமென்ன, சுத்தி சுத்தி யோசிச்சு, நொறுக்கித் தள்ளி, அமுக்கி அப்படியே அந்தக் கருத்தைக் கழுத்தோட புடிச்சு நிர்வாணமா நமக்குக் காட்டுற தெளிவு என்ன தீவிரம் என்ன! (கட் கட்!). எழுதுவேன். ஒவ்வொன்று பற்றியும் தீர்க்கமாய், ஆணி அறைந்தாற்போல் எழுதுவேன். நிச்சயம் எழுதுவேன். பாலகுமாரா! Thanks. நானும் எழுதுவேன். உன்னை விட அதிகமாய். வீறு கொண்டு பரிணாம வளர்ச்சியோடு, துள்ளலாய், இளமையாய் இன்னும் எப்படியெல்லாமோ எழுதுவேன் at least இந்த டைரியையாவது.

அப்படியான ஒரு காலம். அதில் புத்தகங்களை விட மனிதர்களையும், என்னையும் அதிகமாக நேசித்தேன், உற்றுப் பார்த்தேன். என் சின்ன உலகில் நிகழ்வுகளையெல்லாம் நானே சென்று சேகரித்துக் கொண்டேன். மனிதர்களோடேயே இருந்ததாலோ என்னவோ புத்தகங்களை அதிகமாய்ப் படிக்காதது போன்றதொரு உணர்வு. சென்னைக்கு வந்து தங்கமணியின்றி இருந்த முதல் நாலைந்து வருடங்கள் வாசிப்பின் களப்பிரர் காலம் போலத்தான். அவன் வந்த பிறகு உயிரும் வந்தாற்போல். நிறைய வாசிப்பான். அறை முழுக்கப் புத்தகங்களாக இருக்கும். தாய், கன்னிநிலம், மக்ஸீம் கார்க்கியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டு, மூன்று தொகுதிகள்), தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள் என்று பலதையும் படிக்க வாய்த்தது. விக்ரமாதித்யனின் உயிர்த்தெழுதலைப் படித்துவிட்டு கோவளம் தர்ஹாவுக்குக் கிளம்பிப் போனேன். பாவாவைப் பாக்கணுமென்றேன். பாவா இறந்துவிட்டிருந்தார். அவர் மகனைப் பார்த்துவிட்டு வந்தேன். அதே சூட்டோடுதான் ருத்ரனையும் பார்த்தேன். பாரதியார், தாயுமானவர் கவிதைகளையெல்லாம் வரிவரியாய்ப் படித்துப் பேசிக் கொண்டிருப்போம்.

பிறகு புதுடில்லியில் ஒரு வருடம். டில்லித் தமிழ்ச்சங்க நூலகம் மிகப் பிடித்தவொன்று. தி.ஜாவின் மரப்பசு, பிறகு செம்மீன், காண்டேகாரின் புத்தகங்கள் சில, ஜெயகாந்தனின் நாவல்களில் விட்டுப் போயிருந்தவை என்று. பெயர்ந்தகத்திற்கு வரும்போது சொற்பமான புத்தகங்களுடனேயே வந்தேன், சிந்தனையாளர் நியெட்ஸே (மலர்மன்னனின் மொழிபெயர்ப்பு), இராமாயணப் பாத்திரங்கள் (தந்தை பெரியார்) இப்படியாக விரல் விட்டு எண்ணி விடலாம். பின்பு மதுரையிலிருந்து கலீல் கிப்ரானின் ஞானிகளின் தோட்டம், தீர்க்கதரிசி, கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தனின் கடிதங்கள்) இன்ன பிறவும் வரவழைத்துக் கொண்டேன். டொராண்டோவில் உறவேற்பட்ட பின்னர் (!) புத்தகங்களின் வரவு அதிகம். தலித்திய விமர்சனக் கட்டுரைகள், எட்வர்ட் செய்து, மகாராஜாவின் ரயில்வண்டி, இரவில் நான் உன் குதிரை இந்த வகையில். ஊருக்குப் போயிருந்த போது தங்கமணி எனக்காக ஒரு பெட்டியில் சில புத்தகங்களைப் போட்டு வைத்திருந்தான். டோட்டோசான் மட்டும் படித்திருக்கிறேன். உபபாண்டவம் இன்னுமில்லை. நிறைய புத்தகங்களை வாங்கியிருந்தாலும் கணிசமானவை அன்பளிப்பாகக் கிடைத்தவையே! இப்படியாக இப்போதைய டொராண்டோ சந்திப்பில் அன்பளிக்கப் பட்டவை ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், கொரில்லா என்று ஒரு தொகை. பாதி படித்ததும் தொடாததுமாய் ஏகப்பட்டவை இருக்கின்றன. எப்போதாவது படித்து ஞானியாகிவிடுவேனாக்கும்!

இத்தனைப் புத்தகங்களும் சொல்லாத கதைகளையும் கவிதைகளையும் என் நட்புகளும் உறவுகளும் என் நாட்களில் எழுதுவதாக ஒரு நினைப்பு. அதனாலேயே என்னை அதிகம் பாதிப்பதும் இவர்கள்தான். அப்படித்தான் நேற்று மாசிலன், அப்பா நானும் உங்களோடு குளிக்கிறேன் என்றார். சரியென்றேன். குளிக்கும்போது, அப்பா பாடிக்கிட்டே குளிங்கன்னார். விடுவேனா கிடைத்தவொரு ரசிகனை. என்ன பாடலாமென்று யோசித்தபோது முந்திக் கொண்டு வந்தது பாரதியின் 'மோகத்தைக் கொன்றுவிடு'. பாடினேன். 'பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர் பாரத்தைப் போக்கிவிடு' என்று பாடிப் போனவனை இடைமறித்துக் கேட்டார் பிள்ளை "எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வரிகள் கொடுக்கும் அதிர்வை, சிரிப்பை அவன் கேள்வி கொடுத்தது. இந்த மாதிரிப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்னத்துக்குப் புத்தகம் படிக்கணும்னேன்?!

தங்கமணிக்கும், தம் பொழுதுகளையும் புத்தகங்களையும் பகிர்ந்த, பகிரும் நெஞ்சங்களுக்கும் நன்றி!

29 comments:

-/பெயரிலி. said...

நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்கங்களையும் போட்டால் என்னவாம்? வாசிக்க மாட்டோமென்றா சொல்கிறோம்?

;-)

சுந்தரவடிவேல் said...

இது புத்தகங்களுக்கானது மட்டும். இனி காதல், கவிதையென்றெல்லாம் வரும்போது எடுத்து விடுவோமாக்கும், ஜாக்கிரதை:))

Balaji-Paari said...

சுந்தர், அருமையான பதிவு. கலக்கீட்டீங்க. மாசிலா, enjoy..

SnackDragon said...

என்ன நீங்களும், தங்கமணியும் சேர்ந்துகிட்டு ஆள நிம்மதியா வேலை செய்ய விட மாட்டீங்க போல இருக்கே? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இது டீ சே கவிதை வேற... மெதுவா வரேன்.

மு. சுந்தரமூர்த்தி said...

பெயரிலி சொன்னது:
//நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்கங்களையும் போட்டால் என்னவாம்?//

சாரா சொல்வது:
//எப்படி தட்டச்சு செய்ய? நேரம்?//

எப்படி தட்டச்சு செய்வதென்றால் "நாட்குறிப்பின் மீதியான தனிப்பக்கங்கள்" என்று தலைப்பு எழுதிவிட்டு space bar ஐ கொஞ்ச நேரம் அழுத்திப் பிடித்து பிறகு 'Publish Post' பொத்தானை சொடுக்கினால் முடிந்தது.

பெயரிலி, நாட்குறிப்பின் எழுதாமல் மீதியான தனிப்பக்கங்களைத் தானே போடச்சொல்லி கேட்கிறீர்கள்?

SnackDragon said...

சுமூ ரத்தம் வருது...

சுந்தரவடிவேல் said...

//1989 லயும் இதே கேள்வி.....................2005 இப்ப...//
நீ பாத்துக்கிட்டே இரு 2050லயும் இதே கேள்வியாத்தான் இருக்கும்:)) நன்றி சாரா, பாலாஜி.
கதிர்காமஸ், நான் அடுத்து உங்களைத்தான் மாட்டிவிடணும்னு நெனச்சேன்!
சு.மூ: அப்படின்னா தினம் நாலு என்ன நாப்பது பதிவு போடுவேனே:))

லதா said...

உங்கள் ஊரில் ஒளிஉணரி (இல்லை ஒளி வருடியா? scanner-க்குத் தமிழில் என்னங்க ? ) சகாயமான விலையில் கிடைக்கிறதாமே. அதை உபயோகித்து, நாங்கள் எதெல்லாம் படிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப் பதிவீர்களா சுந்தரவடிவேல் ?

enRenRum-anbudan.BALA said...

சு.வ,

சுவாரசியமான பதிவு !

//பாலகுமாரன் கன்னியா ராசி உத்திர நட்சத்திரமாம். நானும் தங்கமணியும் அதே. எனக்கு எழுத வருமா? எழுதுவேன், //

நானும் அதே ! ஆனால், உங்களை, தங்கமணியை போல் எழுத வராது :-(

முயற்சி செய்து வருகிறேன்.

கறுப்பி said...

சுந்தரவடிவேல் சௌகியமா? மாசிலன் சௌகியமா? டையரிக் குறி(கடி)ப்புகள் நன்றாக இருந்தன. தாங்களும் தங்கமணியும் அந்தளவுக்கு குளோசா? தெரியாமல் போச்சே.

SnackDragon said...

//நானும் அதே ! ஆனால், உங்களை, தங்கமணியை போல் எழுத வராது :-(//
பாலா, நீங்கள் தங்கமணி,சு.வ மாதிரி எழுதினால்தான் எனக்கு ஆச்சரியமாயிருக்கும்.

பாலா பகிடிதான் ;-)

//கதிர்காமஸ், நான் அடுத்து உங்களைத்தான் மாட்டிவிடணும்னு நெனச்சேன்! //
கதிர்காமஸ் சூரசம்காரத்துக்கு போயிருக்கார். அதனால பிசி.

சுந்தரவடிவேல் said...

லதா, அதை நா.கண்ணன் வருடி என்று சொல்வார். முதல் சில வார்த்தைகளைத் தவிர மீதியெல்லாம் கோழிக்கிறுக்கலாயிருக்கும்!
பாலா, அந்த நச்சத்திர பலனெல்லாம் அந்தக் காலத்தோட போச்சு! இப்ப எல்லாரும் ஒருநாள் இல்லன்னா ஒரு நாள் நச்சத்திரந்தான்!
கறுப்பி, நன்றி.
//சூரசம்காரத்துக்கு// பழைய படமாச்சே!

இளங்கோ-டிசே said...

சுந்தரவடிவேல் நல்ல பதிவு. எனக்கும் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட கால்கட்டம்வரை பிடித்த எழுத்தாளர். ஒரு கட்டத்தில் பால்குமாரன் கட்டமைத்த உலகத்தை விட்டு வெளியேற மிகவும் கஷ்டப்பட்டும் இருக்கின்றேன். இப்போது கூட அவரது ஆரம்பகாலப் புத்தகங்களை திரும்பி வாசிக்கமுடியும் என்றே நம்புகின்றேன். மெர்க்கூரிபூக்கள், அகல்யா, ப்ந்தயப்புறா, கைவீசம்மா கைவீசு, கனவுகள் விற்பவன், இனியெல்லாம் சுகமே என்று எனக்குப் பிடித்த புத்தகங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
....
அதுசரி கவிதைகளும் அடுத்த முறை பிரசுரிக்கப்போவதாய் கூறுகின்றீர்கள். எனக்காக தயவுசெய்து,உங்களது 'உதைபந்தாட்டடயரிக் குறிப்புக்கள்' கவிதையை பதிவில் போடவும். அவசரமாகத் தேவைப்படுகின்றது :-).

////சூரசம்காரத்துக்கு// பழைய படமாச்சே!//
என்ன செய்ய, அந்தப்படத்தில் நடித்த சரண்யா கூட திருமணஞ்செய்து குடும்பவாழ்வில் சங்கமாகிவிட்டார். ஆனால் அவரைத் தன் கனவுக்கன்னியாக அர்ச்சித்த 'கதிர்காமஸ்' (புதுப்பெயர் ந்ன்றாக இருக்கின்றது) மட்டும் இன்னும் Bachelor. எல்லாம் காலம் செய்த கொடுமை :-).

Balaji-Paari said...

சூரசம்ஹாரத்தில் நடித்தது நிரோஷா என்று நினைவு.

நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காமஸ் சூரசம்சாரம் என்பதற்கு பதில் தவறாக சூரசம்ஹாரம் என்று எழுதி இருப்பதாக தோன்றுகின்றது.

லதா said...

/என்ன செய்ய, அந்தப்படத்தில் நடித்த சரண்யா கூட திருமணஞ்செய்து குடும்பவாழ்வில் சங்கமாகிவிட்டார். /

அன்புள்ள டிசே,

சரண்யா அந்தப் படத்தில் நடித்தாரா என்ன?
எங்கள் கண்களுக்குச் சின்னச் சித்தி/செல்வி நிரோஷா மட்டும்தான் தெரிந்தார்கள் :-))

பத்மா அர்விந்த் said...

இன்னும் என்ன என்ன நட்சத்திரத்தில் பிறந்தால் என்ன செய்வார்கள் என்பது தெரிந்தால் பலருக்கு உபயோகமாக் இருக்கும்.

நன்றாக இருந்தது படிக்க. பாலகுமாரனின் எழுத்துக்கள் படித்தவர்கள் இத்தனை பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

இளங்கோ-டிசே said...

Oops! நான் நாயகன் பட நினைவில் எழுதிவிட்டேன். நிரோஷா தான் சரிபோல. பரவாயில்லை, பாலாஜி-பாரிக்கு நிரோஷா கனவுக்கன்னியாக இருந்திருக்கின்றார் என்ற உண்மை இதனால் தெரியவந்திருக்கின்றது. தவறால் கூட ஒரு இலாபம் :-)

SnackDragon said...

"நான் நாயகன் நினைவில்"
சரண்யா என்றதுமே எனக்குத் தெரியும், நீர் "நீர் நாயகனாக" நினைவில் எழுதுவீர் என்று. உமக்கு சரண்யாவை பிடிக்கும் என்று நேரடியாகச் சொன்னால் நாங்கள் ஒன்னும் சொல்லமாட்டோம்.

சுந்தரவடிவேல் said...

டிசே/பத்மா: பாலகுமாரன் ஆரம்பத்தில் ஒரு டி.ராஜேந்தருக்குரிய புதுமையோடும், புகழோடும் இருந்தார். அந்த ஓட்டத்திலிருந்த கவர்ச்சி பாதையோரக் கடைகளில் தொங்கும் புத்தகங்கள் எல்லாவற்றிலும் அவரது படமாயானதில் தொய்ந்து போனது. ஒருவேளை நாம் 'வளர்ந்து'விட்டதாலும் இருக்கலாம்:))

டிசே //அவசரமாகத் தேவைப்படுகின்றது :-)//கவிதை, இந்த அவசரம் எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாத்தா, என்னமோப்பா, நல்லாயிருங்க, ஆனா அங்க போயி பேரை மட்டும் மாத்திச் சொல்லி மாட்டிக்காதீங்க!

//சூரசம்சாரம்// :))

சுந்தரவடிவேல் said...
This comment has been removed by a blog administrator.
Thangamani said...

//"எந்த பாரத்தை அப்பா?" நூறு ஜென் கதைகளின் கடைசி வரிகள் கொடுக்கும் அதிர்வை, சிரிப்பை அவன் கேள்வி கொடுத்தது. இந்த மாதிரிப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்னத்துக்குப் புத்தகம் படிக்கணும்னேன்?! //

முழிச்சுப்பார்த்த இந்தக் கொட்டம் நடக்குதா இங்க!

இப்படி ஒரு பிள்ளையை வைத்துகொண்டு என்னத்துக்குப்படிக்கனும். புத்தகத்ததப் படிக்கவேணாம் ஆனால் குழந்தைய படிக்கனும். எப்போதும் ஒரு குழந்தைதான் லேட்டஸ்ட் எடிசன்ன்னு நினைப்பேன். நம்மோட பழங்குப்பையெல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு கேட்டா அந்தக் குழந்தையின் கண்கள் காணுகிற உலகம் கடவுளின் உலகமாக இருக்கும் (தேவனின் இராஜ்யம்னு சொல்ல பயமாயிருக்கு)

நீதான் எனக்கு பாரதியின் அற்புதமான பாடல்களை, அவன் பாட்டின் இடையில் பதுக்கி வைத்திருந்த அனேக வைரமணிகளை காட்டித்தந்தாய். காலமாம் வனத்தினுள்ளேயை நீ பாடும் வரை நான் கவனித்துப்பார்த்ததில்லை.

இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன், கரம்பக்குடி நூலகத்தில் (அப்ப அது டைப்சார் வீட்டு காலணியின் கடைசியில் இருந்தது, என் சித்தப்பா நூலகராக இருந்தார்) துப்பறியும் சுந்தர் என்றொரு புத்தகத்தைப் படித்தேன். அப்ப நாம் சிறுவர்கள், ரொம்பப் பழக்கமில்லை. ஆனால் உன்னோட பேரில் அந்தப்புத்தகம் வந்தது என்று என் நினைவிலும் பதிந்து, அந்த அட்டைப்படம் கூட இப்போதும் நினைவில் இருக்கிறது. உன்னை மாதிரியே கொஞ்சம் (கொஞ்சம்) குண்டா ஒரு பையன்!! :))

//கதிர்காமஸ் சூரசம்காரத்துக்கு போயிருக்கார். அதனால பிசி.//

கார்த்திக் இது மாதிரி நீங்கள் அடிக்கிற ஒற்றை வரி ஜோக்குகள் பிரமாதம். சறுக்கிட்டா சிங்காரத்தை நினைத்து அவ்வப்போது சிரிப்பேன்.


//நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காமஸ் சூரசம்சாரம் என்பதற்கு பதில் தவறாக சூரசம்ஹாரம் என்று எழுதி இருப்பதாக தோன்றுகின்றது.//
பாலாஜிக்கு வந்த சந்தேகம் எனக்கும்.


நல்லது தம்பி, நன்றிகள் உனக்கு.
நண்பர்களுக்கும் நன்றிகள்!

மு. சுந்தரமூர்த்தி said...

karthikramas said...
சுமூ ரத்தம் வருது...

சூரசம்ஹாரம்னு போனா ரத்தம் வரத்தான் செய்யும். இதுக்கு பயப்படுற ஆளுக்கு எதுக்கு சூரசம்ஹாரமெல்லாம்?

எனக்கு நாட்குறிப்புன்னா ரெண்டுவிதமா தான் தெரியும் (1). முதல் நாள் எழுதிவிட்டு மீதி 364 நாளும் காலியாக விடுவது; (2) காலியாக விடப்பட்ட அப்பாக்களின் நாட்குறிப்புகளில் கல்லூரி காலத்தில் நண்பர்கள் நோட்ஸ் எழுதுவது.
சு.வ. தான் நாட்குறிப்பை புதுவிதமா பயன்படுத்திய மாதிரி தெரிகிறது.

Mookku Sundar said...

அடேயப்பா..சுந்தர்.

நீங்கள் எடுத்துக் கொட்டியிருக்கும் ஒவ்வொரு ஞாபகத்துணுக்கிலும் என் முகமும், நம்மையொத்த எண்ணமுள்ளவர்களின் முகமும் தெரிகிறது.ஒரே மாதிரி சிந்தனை ஓட்டம் கொண்டவர்களை சந்திப்பதும், தெரிந்துகொள்வதும் ரசமான அனுபவம்தான்.

1992 இலே கல்லூரி முடித்த கையோடு, ஒரு நாள் இரவு 51, அழகர் பெருமாள் கொயில் தெருவின் ஒரு குடியிருப்பில் ( விக்டன் நண்பர் ம.கா.சி யுடன் தங்கி இருக்கையில்), சமையல் ரூம் பித்த்ளை தண்ணீர் தவலை அருகே நின்று கொண்டே பரபரப்புடன் படித்த முன்கதை சுருக்கம் நினைவுக்கு வருகிறது. என்னுடைய அசட்டுத்தனங்களையும், அலைபாய்தலயும் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கையில் " அடேய் சுந்தா..நீ தனியனில்லை" என்று பாலா தோள்மேல் கை போட்டுக் கொண்டு பேசியது மாதிரி இரு வார்ப்பு.

என்னுடைய இன்றைய நிதானத்துக்கும் (?!!!!), தெளிவுக்கு (?!!!) பாலாவும் ஒரு காரணம்.

என்றாவது ஒரு நாள் உங்களை எல்லாம் சந்திக்க முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த கூட்டம் போட்டால் இந்த சப்பாணிக்கும் ஒரு தாக்கல் சொல்லி விடுங்கள்.

என்றென்றும் அன்புடன்

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுந்தர், இனியெதற்கு அமைதி என்று புத்தகப் பதிவுகளில் தலை காட்டி விடுகிறேன். பத்தாவது முதல் பன்னிரண்டாவது வரையான காலம் பொதுவாகவே வாசிப்பிற்கு ஊழ்வினையான காலம் தான் போலிருக்கிறது - எல்லோருக்குமே.

ஆரம்ப கால பாலகுமாரனின் எழுத்துக்களைப் படித்து வெகுவாக யோசித்திருக்கிறேன். உங்களைப் போல எழுதமுடியவில்லை, எண்ணங்களைச் சேர்த்து வைக்கவில்லை. இருந்தாலும், தேர்வுக்கு முன் படிக்க இருக்கும் விடுமுறைக் காலத்தில் எல்லோரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் கையில் எடுத்த பாலகுமாரன் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தான் மறுவேலை என்று தேர்வுக்குப் படிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்திருக்கிறேன். என்ன கதையென்றெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் அந்த அனுபவம் மறக்க முடியாதது.

நல்ல பதிவு.

சுந்தரவடிவேல் said...

தங்கமணி, //அது டைப்சார் வீட்டு காலணியின் கடைசியில் இருந்தது// ஆமாம், பள்ளி விட்டு வரும்போது நுழைந்து கொள்ள வாகாயிருந்தது. இப்போதிருக்கும் செட்டித்தெருவில் அப்போது இருந்திருந்தால் அவ்வளவு தூரம் போயிருப்பேனோ என்னவோ? அங்கு சூரியமூர்த்தி என்றொருவர் இருப்பாரே நினைவிருக்கிறதா? எந்நேரம் பார்த்தாலும் சித்தப்பா படித்துக் கொண்டிருப்பார். அவர்களெல்லாம் எழுத வர வேண்டும்!

சு.மூ: //அப்பாக்களின் நாட்குறிப்புகளில்// அப்பாவின் பழைய நாட்குறிப்பின் மீந்த பக்கங்களில்தான் ஆரம்பித்தேன். பிறகு நாட்குறிப்புகளின் கோடுகளும் நாளுக்கு நாளான வரையறைகளும் எனக்குப் பிடிக்காததாலும், ஒவ்வொரு வருடமும் எனக்குப் புதிய ஓசி டைரி கிடைக்காததாலும் என் குறிப்புகளையெல்லாம் சாதாரண நோட்டுப் புத்தகங்களிலேயே எழுதியிருக்கிறேன், இவை சுதந்திரம் தருபவையென்று கருதுகிறேன்!

அன்பு மூக்கன், நன்றி. நானும் கலிபோர்னியாவுக்கு வருவது போலவும் நாம் சந்தித்துக் கொள்வது போலவும் நினைத்துப் பார்த்திருக்கிறேன்! பாலா ஒரு மறுக்க முடியாத உந்து சக்தியாக அப்போது இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

செல்வராஜ், ஒன்னு எழுதிப் போடுங்க! நன்றி.

லதா said...

தங்கமணி எழுதியது
//நல்லா கேட்டு பாருங்கள். கதிர்காமஸ் சூரசம்சாரம் என்பதற்கு பதில் தவறாக சூரசம்ஹாரம் என்று எழுதி இருப்பதாக தோன்றுகின்றது.//
பாலாஜிக்கு வந்த சந்தேகம் எனக்கும்.

தங்கமணி,

சூரசம்ஹாரம்தான் சரி

Balaji-Paari said...

லதா,
நான் கதிர்காமஸ்-ஐ பகிடி பண்ணுவதற்குதான் அப்படி எழுதினேன்.
தங்கமணியும் அதைதான் குறிக்கின்றார் என நினைக்கின்றேன்.
:)

Chandravathanaa said...

சுந்தரவடிவேல்
இன்றுதான் ஆறுதலாக வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இவற்றிலே பல கதைகளின் சம்பவங்கள் இப்போதும் திடீரென்று ஒரு கணத்தில் தலை தூக்குவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வேன். மறந்து போயிருக்கும் கதைகளினூடே இழையும் சோகம் கும்மென வந்து கவியும்.
நானும் இப்படித்தான்.

இன்னும் உங்களைப் போல முன்னர் நானும் எல்லாவற்றையும் எழுதி எழுதி வைப்பேன். வாசித்தவை பார்த்தவை கதைத்தவை... என்று எல்லாமே. புலப்பெயர்வோடு அவையெல்லாம் எங்கோ போய் விட்டன.

Thekkikattan|தெகா said...

சுந்தரா,

எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது, உன்னை முதன் முதலாக உன் நண்பர்கள் சகிதமாய் நம் பள்ளியின் மேடைத்திடலில் நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்த காட்சியை. அப்பொழுது அங்கிருப்பவர்களிலேயே நீதான் சற்று அதிகமாக பேசிக் கொண்டிருந்தாய்.

அந்தப் பேச்சில் நீ ஒரு வளர்ச்சிப் phaseயே தாண்டிச் சென்று விட்டதாக இன்றும் நெஞ்சில் எனக்கு பசுமையாக இருக்கிறது.

அப்ப எனக்கு தெரியாது நீ இம்புட்டு புத்தகங்களை படிச்சி பசியாறிக் கொண்டிருக்கிறாய் என்று. நம்ம அதே காலத்தில் கழுதை தேடித் திரிந்ததும், புதுப்பட்டிக்கு மிதி வண்டி அழுத்தி முந்திரி பழம் திருடப் போனதும்தான் ஞாபகத்தில் இருக்கிறது, :-)

மாசிலன், நீ கூறுவது போலவே பல அதிர்வுகளை கொடுக்கக் கூடும், அவன் போக்கிலே அவனை இருக்க விடுவதின் மூலம்... எஞ்சாய்...