பாய்மரப் படகில்

அன்றைக்கு மாலை. நானும் மற்றும் இரு அலுவலக நண்பர்களும் கிளம்பினோம். பேராசிரியர் தன்னோடு பாய்மரப் படகுச் சவாரிக்கு அழைத்திருந்தார். பரிசல், விசைப்படகு, துடுப்புப் படகு எல்லாவற்றிலும் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று சுற்றுலாக் காரனின் பரவசத்தோடு தத்தளித்துச் சுற்றியதுண்டு. ஒரு முறை பாய்மரப் படகிலும் யாரோ செலுத்த 30 பேரோடு கும்பலாய் உட்கார்ந்திருந்துவிட்டு வந்ததும் உண்டு. ஆனால் இது வித்தியாசமான அனுபவம். ஒரு பத்து மீட்டர் நீளமுள்ள படகு. படகின் அடித்தளத்தில் சில அறைகள். அதில் இருவர் வசிப்பதற்கான படுக்கை, கழிவறை, சமையலறை வசதிகள். மேலே 15 மீட்டர் உயர இரும்புத் தண்டு. அதிலிருந்து கிளைக்கும் கம்பிகள்.

நிறுத்துமிடத்திலிருந்து விசைப் படகாகக் கிளப்பினார். கடலுக்குள் வந்ததும் மோட்டாரை அணைத்து விட்டுப் பாய்களை விரித்தோம். இரண்டு வெள்ளை முக்கோணங்களாய்ப் பாய்கள் உயர்ந்து விரிந்து கொண்டன. படகைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. கூட வந்த ஒருவனுக்குத் தெரியும், பேராசிரியருக்குத் தெரியும், அவர்தான் தலைமை மாலுமி, இந்தக் கயிற்றை இழு, இதை அவிழ்த்துவிடு, இறுக்கு, தளர்த்து, அதைப் பிடி என்பார் நாங்கள் ஓடி ஓடிச் செய்து கொண்டிருந்தோம். அன்றைக்குக் காற்று பலமில்லை. ஒரு நாட்டிகல் மைல் வேகத்தில் படகு செல்வதே பெரும்பாடாக இருந்தது, அத்தோடு கடைந்தெடுத்த மாலுமிகள் (நாங்கதான்!) வேறு. இந்த அழகோடு அங்கு நடந்து கொண்டிருந்த படகுப் போட்டியிலும் துணிந்து நுழைந்துவிட்டோம்.

ஒரு படகில் போட்டி நடத்துவோர் நங்கூரமிட்டிருந்தார்கள். படகின் பெயரைக் கேட்டுக் கொண்டார்கள். இன்னும் சில நேரங்களில் குழலூதுவோம், ஐந்து நிமிடங்களில் இந்த எல்லைக் கோட்டைக் கடந்து நீங்கள் படகைச் செலுத்தி அதோ அந்த என்னமோ பாறையைச் சுற்றிவிட்டு வர வேண்டும் என்பதாய்ப் போட்டி. காற்று இல்லை. படகுகளெல்லாம் அங்கேயே மிதந்து கொண்டிருந்தன.

நேரம் சென்றதேயொழியப் படகு செல்லவில்லை. மழை இருண்டு வந்தது. சட சட. நனைவது சுகம், குளிராதவரையில்! காற்றுமில்லை, மழை வேறு, இனி போட்டியில் இருப்பது அர்த்தமில்லையென்று போட்டியிலிருந்து விலகி, மோட்டாரை இயக்கிக் கரையை நோக்கி வர ஆரம்பித்தோம். பாதித் தொலைவு வந்ததும் காற்று வேகங்கூடி இருப்பதை உணர முடிந்தது. மறுபடியும் மோட்டாரை அணைத்துவிட்டுப் பாய்மரத்தால் செலுத்தினோம். மழைக் காற்று. இப்போது தள்ளியது. 4 நாட்டிகல் மைல் வேகத்தில் படகு சென்றது. மோட்டாரின் இறைச்சலில்லாமல், சடசடக்கும் மழையின் சத்தத்திலும் படகு கிழிக்கும் நீரின் சத்தத்திலும் அந்தப் பொழுது என்னவோ செய்தது. மழையின் முடிவில் கீழ்வானில் வானவில். இந்தக் கோடியில் கிளம்பி அந்தக் கோடி வரை முற்று முழுதாய் ஒரு வில். அதனருகிலேயே புரண்ட நிறங்களோடு இன்னொன்றும். இருட்டும் வரை படகைச் செலுத்திக் கொண்டிருந்துவிட்டுப் பின் திரும்பினோம்.

Image hosted by Photobucket.com

அந்த மாலை ஒரு புது அனுபவம். படகிலும், பயணத்தின் பின்னும் தமிழர்களின் திரைகடலோடிய திறனை நினைத்துப் போற்றாமலிருக்க முடியவில்லை. மெல்ல விரியும் அழகான அந்தப் பழங்கனவை, இப்போது தமிழர்களிடம் எத்தனைப் பாய்மரப் படகுகள் இருக்கின்றன, என்ற கேள்வி அடித்துக் கலைக்கிறது.

12 comments:

said...

மிகவும் பொருத்தமாக ஆழ்கடலைப் படமாகப் போட்டு அதற்குக் கீழே கேள்வியும் எழுப்பியிருக்கிறீர்கள் சுந்தரவடிவேல்.

திரும்பத் திரும்ப அந்தக் கடலைப்பார்த்து கேள்வியை எழுப்பிக்கொண்டேன். பத்தாம் நூற்றாண்டு தமிழனால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

-மதி

said...

தோழர் சு.வ கொடுத்துவைத்தவர், நேரில் இவற்றையெல்லாம் அனுபவித்திருக்கின்றார். நாம் கொடுத்துவைத்த அளவு இதை வாசித்து பெருமூச்சு விடுவது மட்டும் :-(.
....
ஈழத்திலும் முந்தி வல்வெட்டித்துறை போன்ற ஊர்களிலிருந்து சொந்தமாய் கப்பல்கள் கட்டி (அன்னபூரணி ?) அமெரிக்கா வரை போயிருக்கின்றனர் என்று கேள்விப்பட்டபோது அதிசயமாகத்தான் இருந்தது.

said...

canoe வில் சென்று ஒருமுறை ப்ளோரிடா ஏரியில் மிதந்து கொண்டி இருந்தது நினைவுக்கு வந்தது. இந்தியாவில் படகில் கங்கையில் செல்வது மற்றொருவகை. ஆரவாரமும் கூடியுள்ள மக்களின் கங்கா மயீக்கு ஜே என்ற கோஷமும் ஆற்றிலும் தூக்கி எறியப்படும் பூக்களும் என்று. நீங்கள் எழுதியதை படித்ததும் நினைவுக்கு வந்தது கடல் புறாவும், ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை என்ற பாடலும்.

said...

மதி, இங்கு பாரம்பரியத்தை யாரும் புகுந்து அழிப்பதில்லையென்பதால் பெரும்பாலானோர்க்குத் தம் முன்னோரின் அறிவையும் செல்வத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும் மேலும் வளர்க்கவும் முடிகிறது. பண்பாட்டொழிப்பை அதனோடு கூட தொல்லறிவு ஒழிப்பை நடத்தும்/அனுமதிக்கும் நம் சமூக நிலையே நம் இழப்புகளுக்குக் காரணம்!

டிசே, அன்னபூரணியென்றுதான் ஞாபகம்.
கவலைப்படாதீர்கள், நாமும் ஒரு படகு கட்டி வல்வெட்டித் துறைக்குப் போவோம் :))

பத்மா, நன்றி.

said...

/டிசே, அன்னபூரணியென்றுதான் ஞாபகம்./
தம்பீ, இங்கே அஃது எனது சின்னத்திட்டங்களிலே ஒன்று (டிஜே, போன கோடைக்குச் செய்யப்போகிறேன் என்று பதிவு_கருத்துக்களத்திலே சொன்னது இன்னும் நடக்கவில்லை. இந்த ஆடிக்கு விட்டிருக்கிறேன்)
VALVETTITHURAI's SEA FARERS

யூலை 4உடன் வரும் விடுமுறையோடு குடும்பத்தோடு வந்தீரென்றென்றால், ஐயரையும் கூட்டிக்கொண்டு GLOUCESTER போய் வரலாம்.

said...

சுந்தரவடிவேல், உங்கள் அனுபவங்களைக் கூறும் போதுதான் எனக்கும் என் அனுபவங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஓகஸ்மாதம் வரும் விடுமுறையில் ஒவ்வொரு வருடமும் குடும்பமா நண்பர்களுடன் சேர்ந்து காம்பிங் போவதுண்டு. கடந்த வருடம் சென்ற போது நானும் எனது நண்பர்கள் நால்வர் (ஆண்கள்) சில தீவுகளைச் சுற்றி க்கனுவில் போய் விட்டு வருவோம் என்று கிளம்பினோம். சில சிற்றுண்டிகளையும் எடுத்துக் கொண்டு மிகவும் றிலாக்ஸ்ஆக கதைத்துச் சிரித்துக் கொண்டு சுற்று வந்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் இருந்த இடத்திற்கு அண்மையில் வந்தவுடன் துடுப்பு போடுவதை நிறத்தி விட்டு அசையும் தண்ணீருக்குள் இருந்த படியே கதைத்துக் கொண்டிருந்தோம்.. ஒரு நண்பர் எதையோ எட்டி எடுத்தார். அடுத்த நிமிடம் நான் ஆழ் கடலுக்குள் (வாவிக்குள்) இருப்பது தெரிந்தது. மேலே வந்தபோது எனது நண்பர்கள் மரணபயத்தில் ஆளைஆள் பிடித்து அமுக்கி எதுவோ பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் நீச்சல் தெரியாது. நிலம் காணமுடியாத அளவு ஆழமானது அந்த வாவி. நான் "லைப் ஜக்கெட் போட்டிருக்கின்றீர்கள் பயப்படாதீர்கள்" என்று குரல் கொடுத்தும் அவர்கள் கேட்பதாய் இல்லை. துடுப்புக்கள் இரண்டும் தண்ணீருடன் அடித்துச் சென்று கொண்டிருந்தது. ஆண்கள் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் பிடித்த படி தமக்குத் தெரிந்தது போல் நீந்திக் கரை சேர்ந்தார்கள். நான் தான் துடுப்புக்களை எடுக்க வேண்டியதாயிற்று. என் நண்பரில் ஒருவருக்கு காச்சல் வந்து விட்டது.

அடுத்த வாரமும் போக இருக்கின்றோம்.. நான் நீச்சல் பழகி வைத்திருக்கின்றேன். இந்த ஆண்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உதவும் பாருங்கள்.(*_*)

எங்கு சென்றாலும், எந்த நாட்டில் இருந்தாலம், எத்தனை வயதானாலும் தண்ணீர் என்றால் எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்

said...

நல்ல அநுபவம் சுந்தரவடிவேல்!தமிழர்கள் கட்டுமரத்துக்குப் பெயர்போனவர்கள்.தமிழ்க் கட்டுமரம் அப்படியே அனைத்து மொழிகளிலும் உள்வாங்கப் பட்டுள்ளது.தமிழகத்தின் வியாபாரத்தூதர்கள் இத்தாலி வரை கட்டு மரத்தில் வந்ததாகச் சொல்கிறார்கள்.வரலாற்றிலும் ஆங்காங்கே சிறு பதிவுகளுண்டு.கடலின் அழகே தனியழகுதாம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்

said...

பதிவு நன்றாக இருக்கிறது. எனக்கும் சில ஞாபகங்களை மீட்டித்தந்தது.
நன்றி.

அன்னபூரணி பற்றி அண்மையிற் காலமான செம்பியன் செல்வன் எழுதியதாக ஞாபகம். பத்திரிகையிற்கூடத் தொடராக வந்தது.

இன்னொரு செய்தி.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுழியோடி வைரப்பாவைத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? தண்ணீருக்குள் அரை மணிநேரம் இருப்பார் என்று சொல்வார்கள். மிகப்பிரபல்யமானவர். அண்மையில் காலமாகிவிட்டார். நாட்டுப்பற்றாளராக புலிகளால் அறிவிக்கப்ட்டுள்ளார்.

-வசந்தன்-

said...

பாய்மரப் படகுகில் நானும் இதுவரை போனதில்லை. மோகமுள் படித்தபோது canoe- வில் காவேரியில் போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். காவிரியில் தண்ணீரே வரவில்லை. இங்கும் canoe இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் Denali போனபோது நினானா என்ற ஆற்றில் rafting போனோம். தூக்கி எறியும் அலையிலும் ஓட்டத்திலும்.

பாய்மரக்கப்பலை காற்றையும் நமது கணிப்பையும் மட்டும் வைத்து செலுத்த வேண்டியிருப்பதால் நிச்சயம் பயங்கர சந்தோசம் தருவதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பழங்காலத்தில் வியாபரக்கப்பல்கள் தவிர போர்க்கப்பல்களை (பாய்மரக்கப்பல்களை) இயக்குவதில் தமிழர்கள் அதிக திறமைவாய்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும். இல்லாவிட்டால் கடாரம் வரை கலங்களில் தமது படைநடத்தி வென்றிருக்கமுடியாது. இல்லையா?

நல்ல பதிவு பையா. படமும் அருமையாகவே இருக்கிறது.

நீ சொன்ன மாதிரி சில பாய்மரப்போட்டிகளை நான் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கிறேன்.

said...

ஆமா ரெண்டு வானவில் கொஞ்சம் கூர்ந்து பார்த்தா தெரியுது!

said...

ரமணி உங்களுடைய பதிவில் நீங்கள் சுட்டியிருக்கும் வல்வெட்டித்துறையிலிருந்து வட அமெரிக்கா வரை என்ற நூலை நானும் வாசித்திருக்கிறேன்.தம்பிப்பிள்ளைத் தண்டையலும் இன்னொருவரும் எழுதியது என்று ஞாபகம்.

said...

நண்பர்களின் முன்னுகைகளுக்கு நன்றி.
அன்னபூரணி படகைக் குறித்து குமரேஸுக்கு (http://kumaraess.blogspot.com/) மேலதிக விபரங்கள் தெரிந்திருக்கக் கூடும் (அல்லது மேலதிக விபரங்கள் அவருக்கு உதவியாக இருக்கக் கூடும்).
பெயரிலி, க்ளுஸ்டெருக்கு வந்தா படகைக் காட்டுவீங்களா? :))