கருப்பன்

அம்மா சொல்லும் வரை உணராமலிருந்தேன், இப்போது ஊரில் கோடை விடுமுறையென்பதை. திருவிழாக்களின் காலம். ஒன்னு போன வாரம் முடிஞ்சு போச்சு. கருப்பையா கோயில். சுட்டுத் தகிக்கும் வெய்யில். சுற்றியாடும் காவடிகள். கூட்டங் கூட்டமாய்ப் போகும் மக்களின் சத்தம். கொட்டும் பறையும் மேளமும். காவடி, பால்குடம், கரும்புத்தொட்டி எல்லாருக்கும் தண்ணி கொண்டுபோய் ஊத்தனும். தார் ரோடு, ஆடும் சாமிக்குச் சுடும். வற்றாத பொய்கை வளநாடு கண்டு மயில்மேலிருந்த குமரா... யாரோ உச்சக் குரலில் பாடுவார்கள். அரோகரா என்கும் கூட்டம். கூட்டத்தில் நானுமிருந்தேன். உற்றாரெனக்கு ஒருபேருமில்லை உமையாள்தனக்கு மகனே...அரோகரா. சித்தப்பாவுக்கு சாமி ஒடனே வந்துரும். சில பேருக்கு நிறைய பாடணும். விரதம் ஒழுங்கா இருந்திருக்கனும். புள்ளையார் கோயில்ல கிளம்புற காவடி கருப்பையா கோயிலுக்கு வரும். வரும் வழியில் சில தண்ணீர்ப்பந்தல்கள். தங்கமணி வீட்லயும் ஒன்னு இருக்கும். பானகம், தாளிச்ச நீர்மோர். எத்தனைக் காவடிகளின் பின்னாலோ யார் கண்டது. எங்க இந்தப் பய, அடேய் சாப்புட்டாச்சும் போடா. ம்ஹ¥ம். காவடிக்கு ஊத்துற தண்ணியில் கால் நனைத்துக் கொண்டு ஓடிக் கொண்டேதானிருந்தேன். தினமும் குளித்துவிட்டுக் கிட்ட நின்று பார்க்கும் சாமிதானென்றாலும் இன்றைக்குக் கல்யாண மாப்பிள்ளை மவுசு கருப்பருக்கு. அண்ட முடியாக் கூட்டமாயிருக்கும். நாளின் முடிவில் வள்ளித் திருமணமோ, பவளக் கொடியோ. முடிந்தது. திருவிழாக் கடைகளையெல்லாம் யாரோ பிரித்து கொண்டு போகிறார்கள்.

நான் ஊருக்குப் போயிருந்தபோது விசாரித்து வரப் போயிருந்தேன். சுகந்தான் என்று முறுக்கிய மீசையும் அரிவாளுமாய் அதே பார்வை பார்த்தார். அவர் குதிரைகளுக்கெல்லாம் புது வண்ணமடித்திருக்கிறார்களாம். சொன்னார். எனக்குப் புது மணி, மோளமெல்லாம் வாங்கிருக்காங்கய்யா, ஆமா, ஐயர் தீவாராதன காட்றப்ப சுச்சு போடுவார், கரண்டுலயே அடிக்கும். பார்த்தேன்.

Image hosted by Photobucket.com

சுருட்டு வாங்கியாறவான்னேன். இல்ல இப்பல்லாம் வாழப்பழமும் தேங்காயுந்தான். கொம்புக்காரனுக்கும் ஒரு ரூமு கட்டிக் குடுத்திருக்குன்னார், ந்தா அங்கெ. கிளம்பினேன். அடுத்து எப்ப வருவன்னார். தெரியாது கருப்பா. என் கருப்பன் ஒரு வெகுளி, அப்படியேதானிருக்கிறான்.

கருப்பனைப் பற்றித் தங்கமணியின் முந்தைய பதிவொன்று.

10 comments:

said...

சாமிக்கு ரெங்கநாதன் விளம்பரம் முக்கியம் ;)

said...

போகிற போக்கிலே, அடுத்த முறை நீங்கள் போகும்போது, கருப்பையா இன்னும் ஸ்ரீகருப்பைய ஸ்வாமி ஆகிவிடுவார் போலத் தோன்றுகிறதே! :-(

said...

//சுருட்டு வாங்கியாறவான்னேன். இல்ல இப்பல்லாம் வாழப்பழமும் தேங்காயுந்தான்// சாராயம் போன போதே அவருக்கு என்னத்துக்குன்னு ஆயிடுச்சி, அப்புறம் சுருட்டும் போனதுக்கப்புறம் அவர் மீசை வச்சிருந்து என்ன புண்ணியம்னு இருந்தார். அப்புறம் புள்ளி ஆட்டை நிறுத்துனப்ப சீவனத்துப் போச்சி. அத்தோடு விடாம இருந்த காஞ்சிரங்காய் (எட்டி) மரத்தையெல்லாம் வெட்டிட்டு இப்ப நல்ல மரங்களையெல்லாம் வைத்து, அய்யரைப்போட்டு மந்திரம் போட்டு போடாப்போட்டாங்களா அப்ப போட்டார் அருவாளை கீழ.

தண்ணிர்ப்பந்தலுக்கு வாற சனங்கள் சாதி வித்தியாசம் பார்க்காம எல்லாம் நீர் மோரா குடிக்கும். பானகமும் உண்டு. வாங்கிக் குடித்துவிட்டு சனம் காவடியைத்துரத்திக்கொண்டு ஓடும். தண்ணீர் கொடுத்து கையெல்லாம் மாலையில் சளைத்துப்போகும். ஆனால் அந்த வெயிலுக்கு தண்ணீரும் சாதியும் கருப்பன் புண்ணியத்தில் காணாமல் போகும்...

நல்ல பதிவு.

said...

// அம்மா சொல்லும் வரை உணராமலிருந்தேன், இப்போது ஊரில் கோடை விடுமுறையென்பதை. திருவிழாக்களின் காலம். // அட ஆமாங்க, எங்க ஊர்லிருந்தும் இதுமாதிரி செய்தியத்தான் கேட்டேன். உடுமலைப்பேட்டையில் மாரியம்மன் திருவிழா முடிந்து உள்ளூரில் முத்தலாம்மன் நோம்பி சாட்டியிருக்கிறார்களாம்.

//சாமிக்கு ரெங்கநாதன் விளம்பரம் முக்கியம் ;)// சுத்தியும் செவுரு கட்டி விளம்பரம் போடா வுட்டாங்களேன்னு சந்தோஷப்படுங்க ;-) அப்புறம், கிராமத்துல தமிளு எப்படி வளருதுன்னு பாத்தீகளா?!

said...

பெயரிலி: சாமிக்கு ரெங்கநாதனும், ரெங்கநாதனுக்கு சாமியும் ரொம்ப முக்கியமாக்கும்! அவருக்கு ஏற்கெனவே "ஸ்ரீமுத்துக்கருப்பையா ஸ்வாமி நாமதேஸ்ய, வீர்ய, விஜய"ன்னுதான் அர்ச்சனை நடக்குது.

தங்கமணி: எட்டிதான் காஞ்சிராங்காயா? பார்க்கிறேன்.

இராதா: //கிராமத்துல தமிளு // எங்க ஊர்ல அந்தக் காலத்துலேருந்தே இப்புடித்தான், ரைஸ்மில், ப்ளவர் மில் அப்படின்னு இருக்கும். புழக்கத்துல நெல்லு மிசினு, மாவு மிசினுன்னு தமிழ்ல சொல்லிக்குவோம். இப்ப இந்த டால் மில்லும் வே ப்ரிட்ஜும் புது ஐய்ட்டங்கள் போலத் தெரியுது!

said...

சுந்தரவடிவேல் - என்னுடைய சிறுவயது கண்ணத்தங்குடி மலையேறியம்மன் திருவிழாவை நினைவுபடுத்திவிட்டீர்கள். :)

காவடியெல்லாம் ஆடும்பொழுது செருப்பில்லா காலுடன், அரையில் நிற்காது விழும் டவுசரை இழுத்துப் பிடித்துக்கொண்டு, தண்ணீர் ஊற்றப்பட்ட கப்பித்தெருவில் காவடிகள் பின்னால் ஓடியிருக்கிறேன். சில வீட்டில் கொஞ்சம்தான் தண்ணீர் ஊற்றியிருப்பார்கள். அது வெக்கையைக் கிளப்பிவிடும்.

திருவிழாவுக்காக சிங்கப்பூரில் வசிக்கும் முத்துசாமி மேல்கொண்டார், ராமசாமி வாண்டையார், எல்லாரும் ஊருக்கு வந்துவிடுவார்கள். இவர்கள் வீட்டுப் பந்தல்களில் நீர் குறைவாகவும் மோர் அதிகமாகவும் இருக்கும். மோரில் மாங்காய் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் போட்டிருப்பார்கள். மோர் குடிக்கும்பொழுது மாங்காயை கன்னத்துப்பகுதி பக்கம் தள்ளிவிட்டு அதக்கிக் கொண்டால் பந்தல் தாண்டி நீண்ட நேரத்திற்குச் சப்பிக் கொண்டிருக்கலாம்.

எல். கணேசன் (முன்னாள் திமுக, பின்னாள் மதிமுக எம்.பி) வீட்டில் சுடுசோற்றில் மோர்சோறு பிசைந்து போடுவார்கள். அந்தச் சோற்றில் வெங்காயம், மாங்காய், இஞ்சி எல்லாம் அரிந்து போட்டிருக்கும். கூடவே முருங்கைக்கீரை (வேகவைத்தது) தொன்னையில் வைத்துத் தருவார்கள். எல்லாவற்றையும் வாங்கித் தின்றுவிட்டு மலையேறியம்மன் கோவிலுக்குப் போய்ச் சேருவதற்குள் அம்மாவுக்கு தீவார்த்தி முடிந்துபோயிருக்கும். பரவாயில்லை... அடுத்த வருடம் தீவார்த்தி பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்குப் பல்லிடுக்கில் இருக்கும் மாங்காய் தோலை நிரடியெடுத்துத் திங்கலாம்.

said...

வாயூற வச்சுட்டீங்களே வெங்கட்:))
நீங்க சொல்றது ஒரத்தநாடு பக்கமா? பொதுவாகவே தஞ்சை மாவட்டத் திருவிழாக்கள் என் கண்ணுக்குச் செழிப்பாகத் தெரிந்தன, என் புதுக்கோட்டை மாவட்டத்தினதை விட! அதான் மோருல தெரியுது:))

said...

// பெயரிலி: சாமிக்கு ரெங்கநாதனும், ரெங்கநாதனுக்கு சாமியும் ரொம்ப முக்கியமாக்கும்! அவருக்கு ஏற்கெனவே "ஸ்ரீமுத்துக்கருப்பையா ஸ்வாமி நாமதேஸ்ய, வீர்ய, விஜய"ன்னுதான் அர்ச்சனை நடக்குது. //


யாருப்பா அது, மொதல்ல அந்தப் பேர அருள்மிகு கருப்பையா திருக்கோயில்னு மாத்துங்கப்பா :-))

said...

சுந்தரவடிவேல்,
தப்பாக நினைக்காதீர்கள். அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். நான் இதுவரை தமிழகம் சென்றதில்லை.

உங்கள் பதிவில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள பெயர்ப்பலகை மாதிரித்தானா தமிழகத்தில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது?

இப்படிப் பெயர்ப்பலகைகளிலே தமிங்கிலிசில் எழுதி வைத்தால் குழந்தைகள் இதையும் தமிழ் சொற்கள் என்றுதானே எண்ணுவார்கள். இப்படியான பெயர்ப்பலகைகளும் தமிழகத்தவர்கள் தமிங்லிசில் கதைக்க ஒரு காரணமாய் இருக்குமோ?!

40 வருடங்களாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டும் இதுதானா தமிழகத்தின் நிலை?

said...

வெற்றி,
இப்படித்தான். சென்னைப் பகுதிகளில் இன்னும் மோசமாக இருக்கும். சில்க்ஸ், டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட்ஸ், ஜூவல்லரி, பேங்கர்ஸ், சூப்பர் மார்க்கெட் இதெல்லாம் வெகு சாதாரணம். ஏதோ தமிழ் எழுத்தால் எழுதியிருக்கிறார்களே என்று மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
எந்தக் கட்சியாட்சியானாலும் சரி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் கடுமையான தாக்குதலினாலேயே பெருமளவு இந்த அறியாமை!