எவ்வழி வந்தோம்?

உங்களுக்குக் கற்பனை செய்யத் தெரியுமா? அப்படின்னா என்னோடு வாங்க. ஒரு 150,000 வருசத்துக்கு முந்தி போவோம். இது ஆப்பிரிக்கா. நாமதான் இந்தப் பூமியோட புது மனுசங்க. இப்ப நாம கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர ஆரம்பிக்கிறோம். இதோ இந்தக் கிழக்காப்பிரிக்கக் கடற்கரையோரமாவே வடக்கே போறோம். ஆயிரமாயிரமா வருடங்கள் கடக்குது. நம்ம புள்ளை, அதுக்குப் புள்ளை எல்லாம் நம்மள மாதிரியே நடந்துகிட்டே இருக்கு. செங்கடல் வருது. மேற்கே போக முடியாது, பாலை. செங்கடல் சின்னதாத்தான் தெரியுது. நமக்கு ஓடம் கட்டத் தெரியும். நாம் ஓடம் கட்டி அந்தக் கடலைக் கடக்குறோம். அரேபியப் பிரதேசம் வருது. இங்கேயும் வடக்கேயோ மேற்கேயோ போக முடியலை. வெப்பம். மெல்லக் கடற்கரையோரமாவே போய்க்கிட்டு இருக்கோம். பாதையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் தலைமுறைகளையும் ஒழித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறோம். வழியெங்கும் நம் தடங்களை விட்டுக் கொண்டே வருகிறோம். இந்தியாவையும் மெல்லத் தாண்டி அந்தமான் நிகோபார், மலேசியா, ஆஸ்திரேலியா வரை நாம் வந்து விட்டோம்.

ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........

இப்படித்தான் இருந்திருக்குமாம் மனித இனத்தின் பயணம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளப் பட்டதும் தெரிஞ்சதும்தான். ஆனா சரியாத் தெரியாதது என்னன்னா, ஆப்பிரிக்காவுலேருந்து வடக்கு முகமாகக் கிளம்பின கூட்டம் வடக்கே நைல் நதி, ஐரோப்பான்னு போயிட்டு இந்தியா பக்கம் வந்துச்சா (கீழேயிருக்க படத்துல பாருங்க) அல்லது செங்கடலைக் குறுக்கே தாண்டி இந்தியா பக்கம் போச்சான்னு தெரியாம இருந்துச்சு. ஐரோப்பாவில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் வெறும் 45,000ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. மேலும் இந்த இடம்பெயர்வின் போது அங்கு பாலையின் வெப்பநிலையிருந்ததால் கூட்டம் தெற்கே நகரத்தான் அதிகம் வாய்ப்பிருந்திருக்க வேண்டும். இப்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு இந்த செங்கடல்-இந்தியப் பாதை ஊகத்தை மேலும் நிச்சயப்படுத்துகிறது.

சுமார் 65,000-70,000 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்குள் இந்த மனித இனம் வந்திருக்கலாம். இங்கிருந்து கிளம்பி அந்தமானுக்குச் சென்ற கூட்டங்களில் ஒன்று அங்கேயே மாட்டிக் கொண்டு இத்தனைக் காலமும் அங்கேயே இருந்திருக்கிறது. நிக்கோபார் தீவிலிருப்பவர்கள் சீனர்களைப் போலிருக்க, அந்தமானில் இருக்கும் இந்த இனம் (அந்தமானீஸ், ஒங்கே, கிரேட் அந்தமானீஸ் குடிகள்) எப்படி ஆப்பிரிக்கர்களை மாதிரி இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. யாருக்கு? ஐதராபாத் தங்கராஜுக்கும்(Centre for Cellular and Molecular Biology) கூட்டாளிகளுக்கும். அந்த இனக்குழுக்களின் இரத்த செல்களிலிருந்து மைட்டோகாண்டிரியா எனும் அறைக்குள் இருந்த மரபணுவைப் (mitochondrial DNA, சுருக்கமாக mtDNA) பரிசோதித்தார்கள்.

இந்த மரபணுவின் சிறப்பு என்னன்னா, இது அம்மாகிட்டேருந்து மட்டுந்தான் பிள்ளைகளுக்குப் போகும். அப்பாகிட்டேருந்து போவாது. அதனால இதிலிருக்கும் மரபு மூலக்கூறு வரிசையை வச்சு அம்மம்........ம்மாவுக்கு அம்மாச்சிக்கு அம்மாயி யாருன்னு சொல்லலாமாம். கிட்டத்தட்ட 150,000 வருசத்து அம்மா வழிக் கதையெல்லாம் தெரிய வாய்ப்பு இருக்காம். இந்த வகையில பாத்தா அந்தமான் காரங்களோட பூர்வீகம் ஆப்பிரிக்கான்னு தெரிஞ்சது. இத வச்சு தலைமுறைக் கணக்குப் போட்டுப் பாத்தாரு தங்கராஜ். கிட்டத்தட்ட 50,000-70,000 வருசத்துக்கு முந்தி இந்த ஆளுக அந்தமானுக்கு வந்திருக்கனும்னு கணிச்சாரு. அப்படின்னா 45,000-50,000 ஆண்டுகளே பழமையான ஐரோப்பிய இனத்திலிருந்து இந்த இந்திய-அந்தமான் இனம் வந்திருக்காது என்பதாகத்தானே அர்த்தம்?

இதே மாதிரிதான் மெக்காலேன்னு ஒருத்தரு (ஸ்காட்லாந்து, க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்) மலேசியாவுல இருக்க ஓரங் அஸ்லி (Orang Asli) பழங்குடி மக்கள்கிட்ட இதே மாதிரி ஆராய்ச்சி பண்ணி அவங்க 64,000 வருடங்களுக்கு முந்தி மலேசியாவுக்கு வந்திருக்கலாம்னு கணிச்சாரு. இதுவும் வடக்கு நோக்கிய இடம் பெயர்தலை சாத்தியப் படுத்தாமல் செங்கடல்-இந்தியப் பாதைக்கே வலுச் சேர்க்கிறது. இவங்களோட வழித் தோன்றல்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கும் சுமார் 63,000 வருசங்களுக்கு முந்தி போயிருக்காங்களாம். இந்த மக்கள் ஒரு வருசத்துக்கு 4 கிலோமீட்டர் இடம் பெயர்ந்திருக்காங்கன்னு சொல்றார் மெக்காலே. அப்போ ஆப்பிரிக்காவுலேருந்து மனுசப் புள்ள கிளம்பிப் போன பாதையைக் கோடு போட்டம்னா இப்புடி வருதாம்.

Image hosted by Photobucket.com

இதுல Sinai வழியாப் போகாம செங்கடலைத் தாண்டிய வழித்தடம் இருக்கு பாருங்க, அது வழியாத்தான் நாமெல்லாம் வந்தோம்னு இந்த ஆராய்ச்சி சொல்லுது. இப்பதிவை நாராயணனின் "மனித இனத்தின் வரலாறு" பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். இனி வரும் ஆராய்ச்சிகளில் இந்திய இனக் குழுக்களையும் அவர்களின் குடியேறுதல் பற்றியும் மென்மேலும் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்கக் கூடும். இதிலிருக்கும் தங்கராஜ் மற்றும் மெக்காலேயின் கட்டுரைகள் மே 13ம் தேதியிட்ட Science பத்திரிகையில் (படம் நன்றி). முழுக்கட்டுரை வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும்! இக்கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்: National Geographic.

பிற்சேர்க்கை: ரோசாவசந்த் சுட்டிக்காட்டியதன் பேரில் இப்பதிவோடு தொடர்புடைய இன்னும் இரண்டு பதிவுகள்:
1. அனாதை ஆனந்தன்
2. மாண்ட்ரீஸர் எழுதிய "மொட்டை பிளேடு"

19 comments:

said...

சுந்தர்

இது நான் ஆங்கிலத்தில் படித்திருந்தாலும், எப்பொழுதும் போல நீ சொல்வது ஒரு நல்ல கதையின் சுவாரசியத்தோடு கூடிய அறிவியலாகவே இப்பொழுதும் இருக்கிறது

உனக்கு எனது நன்றி

சாரா

said...

நன்றி சாரா, வழமை போல் உனது ஊக்கத்துக்கும் அன்புக்கும் :))

said...

சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.

said...

சுந்தர், உங்கள் கடந்த மூன்று பதிவுகளையும் படித்தேன். வழக்கம் போல் நன்றாக இருக்கின்றன. அறிவியற்கட்டுரைகளை எழுத உங்களின் இது போன்ற பதிவுகள் ஒவ்வொன்றும் என்னை ஒரு மி.மீ ஆவது நகர்த்துகின்றன:-)

said...

சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு சுந்தரவடிவேல்...

said...

அப்போ இந்தியாவிலே ஒட்டுமொத்தமா எல்லாருமே 'வந்தேறிகள்' தானா?

said...

நன்றி வசந்தன், செல்வராஜ், மாண்டி!
நான் தான்: நீங்கள்தானென்று தெரிகிறதே:)
//எல்லாருமே 'வந்தேறிகள்' தானா?//
அதிலென்ன சந்தேகம்?!

said...

வல்காவிலிருந்து கங்கை வரை படிக்கும் போது எழுந்த உணர்வு போல் உள்ளது. நல்ல பதிவு.

said...

//அதிலென்ன சந்தேகம்?!// பூமிக்குத்தானே? :-)

said...

சுந்தரவடிவேல்,
எனக்கென்னவோ இந்தியாவுக்குக் கீழேயிருந்த லெமூரியாக் கண்டம் இதில் ஒரு விடுபட்ட இணைப்பாய் இருக்குமோ என்று சந்தேகம்.

said...

நல்ல பதிவு. நான் இப்பத்தான் பார்த்தேன்.
அப்ப அமெரிக்க பழங்குடியினர் எங்கிருந்து வந்தார்கள்?

said...

முத்து, இருக்கலாம். கடலுக்கடியில் முங்கிப் பார்த்து வந்தால் தெரியலாம் :)) உண்மையில், நமக்கு உயிரியல் தடயங்கள் வேண்டுமல்லவா? அகழ்வாராய்ச்சி ஒன்றே லெமூரியாவுக்கு வழி. மாமல்லபுரத்துக்கருகில் அண்மையில் வெளித் தெரிந்ததாகச் சொல்லப் படும் கடல் கொண்ட நகரம் குறித்த ஆராய்ச்சிப் பணிகள் எந்தளவில் இருக்கின்றன என்று தெரியவில்லை.

தங்கமணி, கூகுளடிச்சுப் பாத்தேன், அது சொல்லுது இந்த அமெரிக்கப் பழங்குடியினர் ஆசியாவிலிருந்து மேல மேல போயி சைபீரியா வழியா அலாஸ்காவுக்குள்ள வந்து அங்கேருந்து வட, தென் அமெரிக்கா முழுக்கப் பரவியிருக்காங்க. இது நடந்து சுமார் 10,000 முதல் 30,000 வருடங்களுக்குள்ளாகத்தான் இருக்குமாம்!

said...

ரவி ஸ்ரீனிவாஸ் நாராயணன் மற்றும் அனாதையின் பதிவில் எழுதியதை பார்க்கவும். அவர் எழுதியது முக்கியமானது என்று நினைக்கிறேன். அவர் இங்கே எழுதுவார என்று தெரியாது.

said...

சொல்ல விடுபட்டது. ரவியின் (நா..மற்றும் அனாதை பதிவில் வெளீப்பட்ட )உடன்பாடானதல்ல என்பதை சொல்லதேவையில்லை. ஆனால் சுவ எழுதியுள்ளதை போல் விஷயம் எல்லாம் எளிமையானது அல்ல. அவர் அமேரிக்க பழங்குடியினர் பற்றி ஒரு கூகுள் தேடலில் சொல்வது பொறுப்பற்ரது. குறைந்தபட்சம் ரவியின் பின்னூட்டத்தை பார்த்தபின் அதை கணக்கில் கொண்டு பேசியிருக்கலாம்.

நான் முடிவாய் எதையும் சொல்லவரவில்லை. ஆனால் ஒரு சிக்கலான விஷயத்தை இத்தனை எளிமையான பார்வையினூடே ஒரு முடிவுதன்மையுடன் சொல்வது சரியல்ல. என்னைவிட தெளிவாக விபரபூர்வமாய் ரவியால் எழுதமுடியும். மேலும் நான் இத்துடன் வலைப்பதிவிலிருந்து என்னை கட்டாயபடுத்தி விலக்கிகொள்ள இருப்பதால் மேலே எதுவும் எழுத முடியாது.

said...

//ரவியின் (நா..மற்றும் அனாதை பதிவில் வெளீப்பட்ட )உடன்பாடானதல்ல என்பதை //

ரவியின் தொனி உடன்பாடானதல்ல என்று இருக்க வேண்டும்.

said...

ரோசாவசந்த், நீங்கள் சுட்டியிருக்கும் பதிவுகளை மறுபடியும் படித்துப் பின்னூட்டமிடுகிறேன். அவர்களது கருத்துக்களைப் புறக்கணிப்பதான ஒரு தோற்றத்தை இப்பதிவு/அமெரிக்கக் குடி பற்றிய மறுமொழி ஏற்படுத்தியிருக்கிறதா என்று தெரியவில்லை. முக்கியமாய் தங்கமணிக்கான மறுமொழியில் கூகுளில் தேடியதைக் குறிப்பிட்டதே இது விதயத்தில் என் அறியாமையை வெளிப்படுத்தும் பொருட்டே. இங்கும் சில வேலைகள். மாலையில் வந்து விரிவான பின்னூட்டமிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி.

said...

ரோசாவசந்த்,
தாமதமாகி விட்டது! என் கருத்துக்களைச் சொல்கிறேன்:
1. இந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருக்கும் முக்கியக் கட்டுரைகள் இரண்டும் கேட்ட கேள்வி ஒன்றே. அது "ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் சைனாய்/ஐரோப்பிய வழியில் வந்தார்களா அல்லது செங்கடலைக் கடந்து வந்தார்களா?" இதற்கான விடையை அறிய அவர்கள் பயன்படுத்தியது மிகவும் தனித்து விடப்பட்டிருக்கும் (relict) இரு பழங்குடியினரை. அவ்வினங்களில் அவர்கள் சோதித்தது மைட்டோகாண்டிரியாவின் முழுமையான மரபணு வரிசையை. இந்த இரண்டு உத்திகளாலும் அவர்களுக்குக் கிடைத்த விடை, ஆப்பிரிக்காவிலிருந்து பெயர்ந்தவர்கள் செங்கடலைக் கடந்திருக்கும் சாத்தியமே அதிகம் என்பது. இது குப்பையைக் கிளறுவதுதான் என்றாலும் மானுடவியலில் முக்கியமான கேள்வி. ரவிஸ்ரீனிவாஸ் சொல்வது இத்தகைய ஆராய்ச்சிகள் 'தவறான' கைகளுக்குச் செல்வதால் வரும் குழப்பங்கள், சில வகையான ஆராய்ச்சி முறைகளில் இருக்கும் குறைபாடுகள். இவற்றின் முடிவை எதற்குப் பயன்படுத்தலாம் எதற்குக் கூடாது என்பதில் கூடுதல் கண்காணிப்பு செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மக்களை மரபியல் ரீதியாக அறிய (பிரிக்க அல்ல) வேண்டுவது மிகவும் அவசியம். ஏனென்றால் உதாரணமாக, pharmacogenomics துறையில் நிகழும் சமீப கால ஆராய்ச்சிகள் எப்படி ஒவ்வொரு மருந்தையும் ஒரு குறிப்பிட்ட மரபுக் குறிப்பான்களுக்குத் தகுந்த மாதிரி மேம்படுத்தலாம் என்று ஆராய்கின்றன. ஒரு மருந்து சிலருக்கு ஒவ்வாததாகவும், வேறு சிலருக்கு நல்ல பலனளிப்பதாகவும் இருப்பது எப்படி என்பது போன்ற புரிதல்கள் இத்தகைய மரபியல் ஆராய்ச்சிகளால் சாத்தியப் பட்டு வருகின்றன. ஒரு கிராம அலுவலர் வந்து "இன்ன மரபுக் குறிப்பான் இருக்க ஆளுகளுக்கு மட்டுந்தான் ரேஷன்ல அரிசி, மீதிக்கெல்லாம் கிடையாது" என்று சொல்ல வைக்காமல் ஒரு மருத்துவர் "உங்களுக்கு இன்ன குறிப்பான் இருக்கதால இந்த மருந்தைச் சாப்பிட்டாத் தேவலாம்" என்று சொல்ல வைப்பதுதான் தேவை. இதை அரசாங்கம்தான் செய்ய முடியும், பத்மா எங்கோ சொல்லியிருக்கும் இங்கிலாந்து உதாரணம் போல், அதாவது காப்பீட்டு நிறுவனங்கள் மரபணுத் தகவல்களைப் பயன்படுத்தலாகாது (2011 வரை?).

2. தங்கமணிக்கான மறுமொழிக்காக கூகுளில் தேடி, கிடைத்த பதிவுகளில் ஓரளவுக்குச் சரியென்று படும் (முந்தைய கேள்விப்படுதல்களோடு ஒத்துப் போகின்ற) ஒரு கருத்தை எழுதினேன். இது பொறுப்பற்ற தனமாகக் கூட இருக்கலாம். இது குறித்து அதற்கு மேல் எந்தத் தேடுதலோ படிப்பையோ இதுவரை செய்யவில்லை. வட ஐரோப்பிய வைக்கிங்குகள்தான் இவர்கள் என்பதும் அதற்கான மறுப்பும் இன்னொரு செவிவழிச் செய்தி. இவற்றில் எது உண்மையென்று அறுதியிட்டுக் கூறப்படவில்லையென்றே நினைக்கிறேன். காலப் போக்கில் நான் இது பற்றித் தெரிந்து கொள்ள இயலும்.

இப்பதிவின் பிற்சேர்க்கயாக அனாதை மற்றும் மாண்ட்ரீஸரின் பதிவுகளைச் சுட்டுகிறேன். நன்றி.

said...

சுவ,இப்போதுதான் பார்த்தேன். விரிவான கருத்துக்கு நன்றி. ஒரு இனத்தின் வறலாற்றை கூகுளில் தேடி(அது குறித்து பல கருத்துக்கள் இருக்கும் போது) உடனடியாய் ஒர் விடையளித்ததையே பொறுப்பற்ரது என்றேன். தவறாக எடுக்காததற்கு நன்றி. (சிலநேரம் இப்படி ஏதாவது சொல்லிவிட்டு பிறகு யோசிக்க வேண்டியுள்ளது.) மற்றபடி இது மிக குழப்பமான விஷயம். இது தவிர்த்து ஆரிய படையெடுப்பு குறித்தும் ரோமிலா தாப்பர் தொடங்கி வைத்த விவாதம் குறித்தும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை தெளிவாய் கருத்துக்கள் கிடையாது. விவாதத்திற்கு பல இருக்கும் போது எளிமைபடுத்துவதை மட்டுமே எதிர்கிறேன். காலம் அனுமதித்தால் பிறகு பேசலாம்.

இந்த பதிவுடன், உங்கள் கருத்துடன் தொடர்பில்லையெனினும், முடிக்கும் முன் சும்மானாச்சுக்கும் சொல்லிவைக்கிறேன். சில விவாதங்கள் கேள்விகளை இந்துத்வா போன்ற சக்திகள் பயன்படுத்திகொள்ளலாம். அதனாலேயே அதை புறக்கணிக்க முடியாது. உதாரணமாய் ரோமிலா தாப்பரின் கட்டுரைகளை RSSஏ ஒரு காலத்தில் வினியோகித்தது. இன்று வசை பாடுகிறது. அதனால் இந்துத்வா பயன்படுத்திகொள்ளும் பயத்தை மீறி நாம் விவாதிக்க முடியும்.

முடிந்தால் விரிவாய் பிறகு வருகிறேன்.

said...

ஏன் இப்படி சிந்திக்கக்கூடாது? (சிந்தனைத்தானே?) உலக வரைப்படத்தை ஒரு முறைக் காணுங்கள்...!!!

இங்கு தனித்திருக்கும் கண்டங்களெல்லாம் ஒருங்கினைந்திருந்தால்???

இருந்தால் என்ன? இருந்தது இதுதான் உண்மை (இங்கு எது வேண்டுமென்றாலும் கூறலாம் ஆதாரம் காட்டவேண்டியது இல்லை தானே?)

இறைவனின் கோபத்திற்கு ஆட்பட்டு பெரும் மனிதக்கூட்டம் பலக்கட்டங்களில் அழிக்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது. அதிலிருந்து தப்பிய ஒரு சில மனிதக்கூட்டம் அவ்விடத்திலிருந்து நகர்ந்து அல்லது அங்கிருந்து அகற்றப்பட்டு மற்றொரு இடத்தில் குடிபுகுந்ததாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

சரி. இவ்வாறாக அழிவுகள் நடக்கும் பொழுது இந்த கண்டங்களும் நகர்ந்து பிரிந்து சென்றதாக வைத்துக் கொள்ளலாமே?