யேலும் யாழும்

Image hosted by Photobucket.com

வணக்கம்!
நானொரு நூலகம். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கல்வி நூலகம். ஸ்டெர்லிங் மரணிக்கும் முன்னர் எனக்காக விட்டுச் சென்ற பெருந்தனத்துக்காக அவர் பெயரையே நான் சூடியிருக்கிறேன். 1930ல் நான் கட்டப் பெற்றேன். என் மாடங்கள், சாளரங்கள், கதவுகளெங்கும் சிற்பங்களும், ஓவியங்களும். என்னை உருவாக்கப் புத்தகம் சுமந்து வந்த மாட்டு வண்டியிலிருந்து, என் நாட்டின் வரலாறு உட்பட உலகத்துக் கலாச்சாரங்களை இவ்வேலைப்பாடுகள் பேசும். இவை என் நாட்டு வரலாற்றின் பதிவுகள். கலாச்சாரத்தின் கடைசல்கள். நான் இந்த மக்களின் பெருமை. என்னை இவர்கள் பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறார்கள். பாட்டரைக் காணும் பேரக்குழந்தைகளைப் போல் இவர்கள் வந்து தொட்டுப் பார்க்கிறார்கள். ஒட்டி நின்று புன்னகைக்கிறார்கள். தூணின் விளிம்பில் சின்னச் சிதிலமென்றாலும் பக்குவமாய் மீட்டுருக் கொடுக்கிறார்கள். இவர்கள் என் பிள்ளைகள். இவர்களது காவல் என் பெருமை. வந்தமரும் பறவைகள் பழங்களை உண்டபடி விதைகள் எங்கெங்கோ முளைக்கின்றனவென்று பேசிக் கொள்கின்றன. சூழ்வெண்பனிக் காற்றிலும், வசந்த காலத்தின் வெம்மையிதத்திலும் அவர்கள் என்னைச் சுற்றிப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இசையில் நான் மோனத்திலிருக்கிறேன்.
_______________________________________________

Image hosted by Photobucket.com

வணக்கம்.
நானொரு நூலகம். 1930களில்தான் நானும் செல்லப்பாவின் சிந்தையிலும் யாழ்ப்பாணத்திலொரு சிறு வீட்டறையிலும் உருப் பெற்றேன். தாகம் கொண்டோர் பெருகப் பெருக என் குடியிருப்பைப் பெரிய வீடுகளுக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கும் பிள்ளைகளுண்டு. அவர்களுக்கும் என்னைப் பற்றிய பெருமையுண்டு. பொருளும் திறனும் திரட்டி என்னை இங்கே இருத்தினர். என் தூண்கள் அழகியன. என் கோபுரம் தமிழின் இருப்பை ஓங்கிச் சொன்னது. என் பெட்டகங்களில் எத்தனையோ குரல்களிருந்தன. 97,000 புத்தகங்களென்று யாரோ கணக்கெழுதினார்கள். 1981, மே 31/ஜூன்1ல் சிங்களக் காவல் துறை வந்தது. அந்த இருளில் பெட்ரோல் வெளிச்சத்தில் தமிழ் படிக்க ஆசைப் பட்டது போலும். அந்த இரவின் முடிவில் என்னில் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. கல்லும் தூணுமாய் நான் இன்னும் இருக்கிறேன், என் தீக்காயங்களோடும், என்னைச் சுற்றிலும் தமக்குள்ளேயே சண்டையிட்டு மடியும் என் பிள்ளைகளோடும்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஸ்டெர்லிங் நினைவு நூலகம், யேல் பல்கலைக் கழகம்.
யாழ் பொது நூலகம் நினைவாக (படம் நன்றி).

10 comments:

said...

1930 ல் உருவான இரண்டு நூலகங்களின் கதையும் மக்களுக்கு இருக்கவேண்டிய அரசியல், சமூக உணர்வுகளை மட்டும் காட்டவில்லை; அதை அடைவதற்கு அரசியல் விடுதலையும், சுதந்திரமும் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்கின்றன. நன்றிகள் சுந்தர்.

said...

தங்கமணி சொல்வது சரியானது.எனது கருத்தும் அஃதே!
நன்றி,தங்கள் பதிவுக்கு.
ஸ்ரீரங்கன்

said...

நன்றிகள் சுந்தர்.

said...

யாழ் நூலகக் கட்டிடக் குழுவில் இருந்த தாவீது அடிகள் இந்நூலகம் எரிந்து அணையும் முன்னே மாரடைப்பினால் இறந்து போனார் என்பதுவும், அரசு பின்பு மீள்கட்டுமானம் எனும் கண்துடைப்பு நாடகம் நடத்தித் தன் அக்கிரமத்தைப் பூசி மெழுகி நூலகத்தை மறுதிறப்பு செய்ய விழைந்த போது மக்கள் இதை வன்மையாக மறுத்திருப்பதுவும் நான் சொல்ல நினைத்த கூடுதல் செய்திகள்.

இப்பதிவை யாழ் நூலகம் எரியூட்டப் பட்ட நாளான மே 31ல்தான் இடுவதாக இருந்தேன். நேற்று தேதியைப் பற்றிய நினைவே இல்லை! இன்றும் நாளையும் மக்கள் இதைப் பற்றி மேலும் விரிவாகவும் எழுதக் கூடும். நன்றி நண்பர்களே.

said...

மிக்க நன்றி.சுந்தரவடிவேல்

said...

பதிவுக்கு நன்றி சுந்தரவடிவேல்,
கூடவே தாவீது அடிகள் பற்றியும் சொல்லியதற்கு. அந்நூல் நிலையம் எரிந்ததை அண்மையிலிருந்த பத்திரிசியார் கல்லூரி மாடியில் நின்று பார்த்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இன்று அக்கட்டிடம் மேற்பூச்சுக்கள் பூசப்பட்டுள்ளது. அதைவைத்து நடக்கும அரிசியலும் பெரியது. அதற்குப் புத்தகங்களைத் தானம் செய்யும் நல்ல உள்ளங்களுக்கிடையிலும் சில அரசியல்கள்.

said...

Some additional info:

http://www.tamilnation.org/indictment/indict016.htm
http://www.tamilnation.org/indictment/indict019a.htm

said...

http://eelanatham.yarl.net/archives/Cat_70.html

said...

நான் அறிந்திடாத இந்தக் கொடூரத்தைப் பற்றி அறியச் செய்ததற்கு நன்றி.

said...

யாழ்நூல்நிலையம் குறித்து இங்கு பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

01.06.1981: இனவெறியர்களால் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது.
14.02.2003: சாதி வெறியர்களால் யாழ் பொது நூலகம் மூடப்பட்டது.

"இந்த நூலகம் திறக்கப்படுவதால் புலிகளுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் நூலகம் திறக்கப்படுவதைத் தடுத்ததற்குப் பின்னால் வேறொரு காரணம் உள்ளது என்பதே என் கருத்து நான் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகத்துள் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவன். யாழ் நூலகத் திறப்புவிழாக் கல்வெட்டில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியச் சேர்ந்தவனின் பெயர் பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆம், புலிகள் முற்று முழுதாகச் சாதிய அடிப்படையிலேயே இப் பிரச்சினையை அணுகினார்கள் என்றே நான் நினைக்கின்றேன் "- யாழ் மாநகரசபை முன்னாள் முதல்வர் செல்லன் கந்தையா

(NoN என்ற அமைப்பினரால் பிரான்சில் வெளியிடப்பட்ட பிரசுரத்திலிருந்து)