ஆச்சி, அம்மாச்சி, அப்பச்சி, அப்பாச்சி, அண்ணாச்சி, தங்கச்சி, அக்காச்சி, அத்தாச்சி, மச்சினிச்சி... இந்த உறவுப்பெயர்களிலெல்லாம் ஒட்டியிருப்பது ச்சி என்ற பின்னொட்டு. இது பாசத்தையும், மரியாதையையும் குறிப்பதற்காக நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கப்படுவது. இந்த ச்சி பின்னொட்டுதான் வடக்கே ஜி ஆனதோ என்று எண்ணுகிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் ச்சி தோன்றுகிறதா? மச்சி என்ன ரகமென்று தெரியாது!
ஆமைக்குட்டி, திருக்கை, சுத்தியல் சுறா...இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? எங்களூர்ப் பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு வகுப்புக்குமான பெயர்கள். மழலை வகுப்புப் பிள்ளைகளை ஆமைக்குட்டிகள் (Laggerheads) என்று அழைக்கிறார்கள். இந்த ஊரின் இயற்கை வளங்களுக்கு ஏற்றாற்போல் பலவிதப் பெயர்களைக் கல்வி முறையில் புகுத்துவது பிடித்திருக்கிறது.
திருச்சி வேலுச்சாமியிடம் இருக்கும் செய்திகளைப் பரப்பவேண்டும். கார்த்திகேயனையும், சு.சாமியையும், ச.சாமியையும் விசாரிக்காமல் விடமாட்டார் என்று தோன்றுகிறது. நீதி வெல்லட்டும். முழுமையாகப் பாருங்கள்:
பேரவை நன்றியறிவித்தல் கூட்டம் அடுத்த வாரம். ஒரு அழகான பூங்காவில். கூட்டம் முடிந்த பின் நண்பர்கள் சிலர் கூடாரமடித்துத் தங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். பேரவைத் திருவிழாவுக்கு உழைத்தோரே வருக! வருக!
வேலுச்சாமி அண்ணாச்சி, கார்த்திகேயன் ஜி!
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: பத்மஸ்ரீ கார்த்திகேயன், வேலுச்சாமி
தோழர் செங்கொடி
செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா.
ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும்.
எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா.
செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.
கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு.
புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.
பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா.
- படங்கள், குறிப்புகள்: வினவு.
"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்.
இப்படிக்கு
தோழர் செங்கொடி"
Posted by சுந்தரவடிவேல் at 2 comments
Labels: செங்கொடி
தூக்குத் தண்டனைக்கு முன் பத்மஸ்ரீ கார்த்திகேயன், கே.பி ஆகியோர் விசாரிக்கப்படவேண்டும்
"ஆமாம், அரசியல் தலையீடு இருந்தது, ஆனால் அதையெல்லாம் சொல்லமுடியாது!" - பத்மஸ்ரீ கார்த்திகேயன்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறப்புப் புலனாய்வுத்துறையின் இயக்குனராக அன்று இருந்த பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் மேற்கண்டவாறு கூறினார். பேரறிவாளன், சாந்தன், முருகன் இன்று எதிர்நோக்கும் மரண தண்டனையை வழங்கியது இவருடைய விசாரணையின் அடிப்படையிலேயே. பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் சென்ற மாதம் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். பயணத்தின் நடுவே எங்கள் ஊரில் ஒரு மாலை தங்கி இருந்தார். அப்போது அவரோடு உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அப்போது இந்த மரண தண்டனையைக் குறித்த கேள்வியை எழுப்பினோம். முதலில் தன்னுடைய புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதியிருப்பதாகக் கூறினார். பிறகு எங்களுடைய தொடர்ச்சியான கேள்விகளின் பின், புத்தகத்தில் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது என்றார். சுப்ரமணிய சுவாமியைக் குறித்து திருச்சி வேலுச்சாமி கூறிய குற்றச்சாட்டுக்களைக் குறித்துக் கேட்டபோது யார் வேண்டுமானாலும் யார்மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம் ஆனால் எல்லோரையும் நாங்கள் விசாரிக்க முடியாதே என்றார். பிறகு, இந்த விசாரணையில் உங்களுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி தரப்பட்டதா என்று கேட்கப்பட்டது. அதற்குக் கூறிய பதில்தான் இது, "ஆமாம், இவ்வளவு பெரிய கேசில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா? இருந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்ல முடியாது" என்றார்.
ஒரு விசாரணைக் குழுவின் தலைவரே அரசியல் தலையீடு இருந்தது என ஒப்புக் கொள்கிறார். அதுவும் அவரால் வெளியே சொல்லமுடியாத வகையில் அந்த அழுத்தம் இருந்திருக்கிறது. அப்படியென்றால் அது என்ன? யாரால் தரப்பட்டது? மூவரின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் பத்மஸ்ரீ கார்த்திகேயன் அவர்களிடம் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். இண்டர்போல் போன்ற அமைப்புகள் மூலம் ராஜீவ் காந்தி கொலை விசாரிக்கப்பட்டு உண்மை வெளியே வரும் வரை இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது.
கே.பி. விசாரிக்கப்பட்டாரா? இந்திய அரசினால் ராஜீவ் காந்தி கொலையின் காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு, இண்டர்போல் அமைப்பால் தேடப்பட்டு வந்த கே.பி (குமரன் பத்மநாபன்) இன்று இலங்கை அரசிடம்தானே இருக்கிறார். அவரை இந்திய அரசு விசாரணை செய்ததா? அவரை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? இந்தியாவும் இலங்கையும் சேர்ந்துதானே கே.பியைப் பாதுகாக்கின்றன. அவருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கும் தொடர்பு இருக்கிறதா? இவையெல்லாம் ஆராயப்படும்வரை இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
Labels: கே.பி, சுப்ரமணிய சுவாமி, பத்மஸ்ரீ கார்த்திகேயன், பேரறிவாளன், ராஜீவ் காந்தி