பள்ளிகொள்ளும் பிள்ளைகள்

என் அப்பா ஒரு பள்ளித் தலைமையாசிரியர். பணி ஓய்விலிருக்கிறார். அவரிடம் சில புகைப்படங்களிருக்கின்றன. கறுப்பு வெள்ளையில். எங்கள் சித்தப்பா எப்போதோ கொடுத்த எக்ஸ்ரே பிலிம் டப்பாவொன்றில் அந்தப் படங்களிருக்கும். அவ்வப்போது எடுப்பார். சுற்றியமர்ந்து பார்ப்போம். அதிலொன்றில் அவரும் சக ஆசிரியர்களும் "குருளையர் பயிற்சிப் பள்ளி"யில். டவுசரும் சட்டையுமாய், கழுத்தில் அழகாய் ஒரு துணி தொங்கும். நான் விபரந்தெரிந்து கேட்டபோது அதெல்லாம் இப்போ இல்லன்னுட்டார். சில குருளையர் புத்தகங்களைப் பார்த்த ஞாபகம் மங்கலாயிருக்கிறது. குருளையர் இயக்கம் மாணவர்களுக்குச் சமூக ஒழுக்கத்தைச் சொல்லித்தரும், அவர்களைப் பொதுப் பணிகளுக்காகப் பயிற்றுவிக்கும்.

நான் 5வது படிக்கும்போது எங்கள் பள்ளி சாரணர் இயக்கத்தில் அப்பா என்னைச் சேர்த்து விட்டார். புதுக்கோட்டைக்குப் போய் கேன்வாஸ் ஷ¥ ஒன்று வாங்கிக் கொடுத்து, காக்கியில் டவுசரும் சட்டையும் தைத்துக் கொடுத்தார். மூன்று விரல்களால் வணக்கம் செலுத்துவதையும், பொய் சொல்லக் கூடாது, உதவி செய்ய வேண்டும் என்ற உறுதி மொழிகளை மனப்பாடம் செய்ததையும் தவிரப் பெரிதாய் ஒன்றும் நினைவில்லை.
நான் 12வது வகுப்பிலிருந்த போதுதான் எங்கள் பள்ளிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme, NSS) வந்தது. ஒவ்வொரு மாணவரும் இரண்டு வருடங்கள் இருக்க வேண்டும் என்பதால் 12வது வகுப்பாருக்கு அனுமதியில்லை. பிறகு கல்லூரியில் சேர்ந்த போது NSSல் சேரலாம் என்று நினைத்தபோதுதான் தங்கமணி இது நல்லாருக்கும்டான்னு சொல்ல தேசிய மாணவர் படையில (National Cadet Corps, NCC) சேர்ந்தேன். அணிவகுத்து, துப்பாக்கி சுட்டு, இளைக்க இளைக்க ஓடி, முகாம்களுக்கும், மிதிவண்டிப் பயணங்களுக்கும் சென்று, மூன்று வருடங்களில் அது ஒரு மிகச் சிறந்த அனுபவம்.

கும்பகோணத்தீச் சதி (இதை விபத்தென்று சொல்லக் கூடாது) நடந்து முடிந்திருந்த நாளன்றில் என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். "எங்கட ஊர்ல (இலங்கையில்) எல்லா வேலையையும் ஊர்க்காரங்களும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் செய்வோம். குளம் வெட்டுறதுக்கு ஊரே திரண்டு போவோம், கோயிலுக்குக் கூரை மாத்துறதைப் பள்ளிக் கூடப் பசங்களே செஞ்சிடுவோம்", அப்படின்னார்.
நம் ஊரில் ஊர் திரண்டு குளம் வெட்டுமா என்று தெரியாது. வீட்டுக்கொருவராய்ச் சென்று அணைபோட்ட கதையைத் திருவிளையாடல் என்றொரு படத்தில் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர எங்களூரில் ஊர் கூடிக் கோயில் திருவிழா நடத்துமே தவிர குளம் வெட்டுவதற்கெல்லாம் பொதுப்பணித்துறைதான்.

நம்மூர்ப் பள்ளி, கல்லூரிகளில் NSS இருக்கிறது. தமிழகத்திலிருக்கும் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் சுமார் 2700 இடங்களில் மட்டுமே NSS இருக்கிறது. மற்ற இடங்களிலெல்லாம் மாணவர்கள் என்ன செய்வார்களென்று தெரியாது. டியூஷன் போகலாம், கூடிச் சினிமாக் கதை பேசலாம், கிரிக்கெட்டோ வேறெதோ விளையாடலாம், ஏனென்றால் 6-12 வகுப்பில் நானும் என் தோழர்களும் இதைத்தான் செய்தோம். இந்த மாணவர் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இருக்கும் லட்சோப லட்சம் பிள்ளைகள் ஒரு பெரிய படை. இவர்களைக் கொண்டு நிறைய சாதிக்கலாம். தேவையெல்லாம் பள்ளிக்கு ஓரிரு நல்ல ஆசிரியர்கள், கொஞ்சம் கடப்பாறை, மண்வெட்டிகள், சாந்து சட்டிகள், விளக்குமாறுகள், வேண்டுமெனில் அன்றைய வேலை முடியும்போது கொடுக்கக் கொஞ்சம் தீனிப் பண்டங்கள். பள்ளிக்குக் கூரை போடுவது, பெஞ்சும், ஸ்டீல் பீரோவும் வாங்கிக் கொடுப்பதையெல்லாம் விடத் தன்னார்வ இயக்கங்கள் இதைப் பற்றி யோசிப்பது அவசியம். ஊருக்கு ஊரும் உருப்படும், பிள்ளைகளும் உருப்படுவார்கள். இப்படித் தொண்டுள்ளத்தோடு வளரும் பிள்ளைகள் நாளை நாட்டைச் சுரண்ட மாட்டார்கள், பாலம் கட்ட அரசாங்கம் கொடுக்கும் காசைப் பையில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எனவே பள்ளியிலே பிள்ளைகளை இப்படியான தொண்டுகளில் ஈடுபடுத்துமாறு செய்வதற்கு என்ன செய்வது? நிதி திரட்டி NSSக்குக் கொடுப்பதா, அல்லது ஏற்கெனவே ஏதேனும் அமைப்புகள் இதை, இதை மட்டுமே செய்கின்றனவா? நாம் என்ன செய்வது? எப்படிச் செய்வது? கேள்விகள் எழுகின்றன.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (திருக்குறள் 948).

என்ன செய்யப் போகிறேன்

1. போன பதிவில் இருக்கும் விபரங்களோடு மறுமொழிகளில் இருப்பவற்றை இணைத்து, சில மாற்றங்களைச் செய்து கீழ்க்கண்டது போலொரு கடிதத்தை அதில் குறிப்பிடப் பட்டிருப்பவர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பப் போகிறேன். இதை pdf கோப்பாக அனுப்ப இருப்பதால் எந்தக் கணினியில் வேண்டுமானாலும் திறக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களில் விரும்புபவர்களுக்கு Word/pdf கோப்புக்களை அனுப்புவேன். இத்தோடு அமெரிக்கப் பள்ளிகளில் கடைபிடிக்கப் படும் தீப் பாதுகாப்பு விதிமுறைகளைத் தமிழ்ப் படுத்தி அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். கடந்த இரண்டு நாட்களில் நம் அரசிடம் போதுமான விதிமுறைகள் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். மேலும் இந்த ஊர் விதிமுறைகள் இங்கிருக்கும் பள்ளி, சமூகச் சூழலுக்கேற்ப அமைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாகத் தீ மணியை எப்படி அடிப்பது என்பதை மணி இருத்தும் வரை சொல்லி என்ன பயன்? எனவே அதைச் செய்யவில்லை. (மனுநீதிச் சோழனின் காலத்திலாவது ஆராய்ச்சிமணி இருந்திருக்கிறது, அது போல் ஒரு மணி, ஆபத்துக்கு அடிக்கிற மாதிரி ஒரு வெண்கல மணியாவது எல்லாப் பள்ளிகளிலும் இருக்கக் கூடாதா?).
2. மரத்தடியின் அறக்கட்டளை முயற்சி முன்னெடுத்துச் செல்லப் பட வேண்டியது. தனியே ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி நிர்வகிப்பதைக் காட்டிலும், திரட்டப் படும் நிதியை இன்ன காரணத்துக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு குறிப்புடன் ஏற்கெனவே இயங்கும் நடுநிலைமையான சமூக அமைப்புக்களிடம் தரலாம். இதற்கு என் நிதி ஒத்துழைப்பை அளிப்பேன். நிதியுதவிகள் எந்தக் காரணத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதில் எனக்கிருக்கும் எண்ணங்கள்: முதலில் நானும் கூரை, தீ வாளி, தீயணைப்புக் கருவி என்றுதான் நினைத்தேன். ஆனால் நெடுங்கால நோக்கில் இவை நமத்துப் போகும் என்ற ஐயம் எனக்குண்டு. இதற்கு மாற்றாக இப்படிச் செய்யலாம். மக்களிடம் இருக்கும் பெரிய வசதிக் குறைவு தகவல் இல்லாமை. உதாரணமாக, ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு சொல்வது மக்களுக்குத் தெரியாது. ஒரு பள்ளி ஆய்வாளரின் பணி என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. இதை அடுக்கிக் கொண்டே எம்.எல்.ஏ, எம்.பிக்களின் வேலைகள் வரை கொண்டு செல்லலாம். நமக்கும் நம் பொதுமக்களுக்கும் சட்ட திட்டங்களைப் பற்றிப் பெரிதாய் ஒன்றும் தெரியாது. அரசாங்கத்தைப் பற்றியும், அரசு விதிமுறைகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்வார்கள். தமக்குச் சேர வேண்டியது கிடைக்காத இடங்களில் ஏன் என்று கேள்வி எழுப்புவார்கள். இதற்கு முதலில் தமக்கு இந்த அரசாங்கம் எதைக் கொடுக்கும்படி அரசியலமைப்புச் சட்டங்கள் பணித்திருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இத்தகைய விதிமுறைகளைத் தமிழில் சுருக்கமாக அச்சிட்டு எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும், இளைஞர் மன்றம், நடிக/நடிகையர் நற்பணி மன்றம் போன்றவற்றுக்கும் அனுப்பிப் பரப்பலாம். பதவியேற்கும் கட்சிகள் எந்தச் சட்டங்களை நிறைவேற்றப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தாலே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம். அரசும் இத்தகைய சட்டங்களை மக்களுக்கு அறியத் தர வேண்டும். நேற்று என் நண்பன் தங்கமணியோடு பேசிக்கொண்டிருந்த பின்னால் முழு உருப்பெற்றது இக்கருத்து.

தமிழகக் கல்வித் துறைத் தொடர்புக்கு நன்றி: ஷக்தியின் மடல்
(சீமாச்சுவின் மரத்தடி மடலின் தலைப்போடு பொருந்துவது தற்செயலாக நடந்தது!)

கடிதம்:
மதிப்பிற்குரிய கல்வித் துறை/தீயணைப்புத் துறை அதிகாரியவர்களுக்கு,

வணக்கம்.

நான் அமெரிக்காவில் ஏல் (Yale) பல்கலைக் கழகத்திலொரு ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன். தமிழில் இணையத்தின் (internet) மூலம் எழுத்து முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் என்ற முறையில், ஒரு சமூகக் கடமையாகக் கருதி இக்கடிதத்தை எழுதுகிறேன். கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு அரசு எடுத்து வரும் துரித நடவடிக்கைகளுக்கு என் நன்றி. பள்ளிகளில் இத்தகைய விபத்துக்கள் நடப்பதைத் தவிர்க்க நம் அரசும், பொறுப்பான துறைகளும் நீண்ட கால நோக்குடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், எனையொத்த நண்பர்களின் குரலாய்க் கீழ்க்கண்ட கருத்துக்களை முன் வைக்கிறேன். இவற்றை நிறைவேற்றுவதில் உங்கள் துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்:

இவ்விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிற்குமானவை.

1. மக்களிடம் இருக்கும் பெரிய வசதிக் குறைவு தகவல் இல்லாமை. உதாரணமாக, ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று அரசு சொல்வது மக்களுக்குத் தெரியாது. ஒரு பள்ளி ஆய்வாளரின் பணி என்ன என்பது மக்களுக்குத் தெரியாது. இத்தகைய அரசு விதிமுறைகளை மக்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்வார்கள். தமக்குச் சேர வேண்டியது கிடைக்காத இடங்களில் ஏன் என்று கேள்வி எழுப்புவார்கள். இதற்கு, முதலாவதாகத் தமக்கு இந்த அரசாங்கம் எதைக் கொடுக்கும்படி அரசியலமைப்புச் சட்டங்கள் பணித்திருக்கின்றன என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். இத்தகைய விதிமுறைகளைத் தமிழில் சுருக்கமாக அச்சிட்டு எல்லா ஊர்களிலும் இருக்கும் நூலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும், இளைஞர் மன்றம், நடிக/நடிகையர் நற்பணி மன்றம் போன்றவற்றுக்கும் அனுப்பிப் பரப்ப வேண்டும். பதவியேற்கும் கட்சிகள் எந்தச் சட்டங்களை நிறைவேற்றப் பதவிக்கு வந்திருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இருந்தாலே இது போன்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம். அரசும், தன்னார்வ அமைப்புகளும் இத்தகைய சட்டங்களை/விதிமுறைகளை மக்களுக்கு அறியத் தர வேண்டும்.

2. பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையில் படும்படியான இடங்களில் கட்ட வேண்டும்.

3. ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழை வாயில்கள் இருக்க வேண்டும்.

4. அந்தப் பகுதியின் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு எந்திரங்கள் சென்றடையக் கூடிய பாதை வசதி ஒவ்வொரு வகுப்பறைக்கும் இருக்க வேண்டும்.

5. அந்தப் பகுதித் தீயணைப்புத் துறையினரின் அனுமதியைப் பெற்ற பிறகே ஒரு பள்ளி ஆரம்பிக்கப் பட வேண்டும். புதுக் கட்டிடம் கட்டப் படும் பட்சத்தில் அந்தக் கட்டிடமும் நெறிமுறைகளுக்கு ஒத்து இருக்கிறதா என்பதைத் தீயணைப்புத் துறை சான்றளிக்க வேண்டும்.

6. ஒவ்வொரு வகுப்பறையிலும் போதுமான அளவு வாளிகளும், அவற்றில் மணல், தண்ணீர் போன்றவை எப்போதும் நிரப்பப் பட்டிருக்க வேண்டும்.

7. ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று "மாதிரிச் சோதனை" நடத்த வேண்டும். இத்தகைய சோதனைகளில் எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த வாயிலின் வழியே வெளியேற வேண்டும் என்று கற்பிக்கப் பட வேண்டும்.

8. அந்தந்த வட்டாரத் தீயணைப்புத் துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்ட வேண்டும், தீயணைப்புக் கருவிகளைப் பற்றிச் சொல்லித் தர வேண்டும், தீ விபத்துக்களைப் பற்றிய சிறிய திரைப் படங்களைத் திரையிட வேண்டும்.

9. மழலைப் பள்ளிகளை அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அமைக்கக் கூடாது.

10. தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆசிரியர்களுக்குப் போதிக்கப் பட வேண்டும். அவர்கள் மாணவர்களைப் பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்த பின்னரே தாம் வெளியேறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

11. உயர் வகுப்பு மாணவர்கள் மழலை வகுப்பு மற்றும் ஊனமுற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி சொல்ல வேண்டும்.

12. பதின்மூன்று வயதுக்குக் குறைந்த மாணவர்கள் இருக்கும் வகுப்புக்கள் ஆசிரியரின் துணையின்றி இருக்கக் கூடாது.

13. காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்பட வேண்டும்.

14. மதிய உணவு சமையற்கூடங்களை வகுப்பறைகளை ஒட்டி அமைக்கக் கூடாது. இத்தகைய சமையற்கூடங்களிலும் தீயணைப்பு வாளிகளும் அவற்றில் தண்ணீர், மணல் போன்றவையும் நிரப்பபட்டுமிருக்க வேண்டும்.

15. ஓலை, மரம் போன்றவற்றையோ அல்லது எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களையோ பள்ளி வளாகத்தினுள் கிடத்தக் கூடாது.

16. ஒவ்வொரு மாதமும் வருவாய்/பொதுப்பணித்துறை ஆய்வாளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்கிருக்கும் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும்.

17. தீ விபத்து தடுப்பு மட்டுமின்றி ஒட்டு மொத்தமாகக் குழந்தைகளின் நலம் பள்ளிகளில் பேணப்பட வேண்டும். பல பள்ளிகள் கழிப்பறை வசதியின்றி சுகாதாரக் கேடான சூழலில் நடக்கின்றன. சாப்பாட்டுக்குப் பிறகு கை கழுவக் கூடப் பல பள்ளிகளில் குழந்தைகள் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டியுள்ளது. சத்துணவுக் கூடங்களில் உணவு தூய்மையாகத் தயாரிக்கப் படுவதில்லை. பல்லிகளும் பூச்சிகளும் விழுந்து குழந்தைகள் மயக்கமடைவது தொடர்கதை. சுற்றுலா செல்வதும் அதில் தவறுகள் ஏற்பட்டுக் குழந்தைகள் பாதிப்படைவதும் அவ்வப்போது நடைபெறும் செய்தி. கண்மூடித் தனமான பணிவை மட்டுமே நம் குழந்தைகளிடம் வளர்க்கிறோமோ என்ற அச்சம் நிலவுகிறது. பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளித்து அவை மாதம் ஒருமுறை கூடிப் பிரச்சினைகளை தீர்வு காண்பதை கட்டாயமாக்க வேண்டும். இந்த சங்கங்களில் ஊர்ப் பெரிய மனிதர்களும் படித்த பழைய மாணவர்களும் உறுப்பினராக வேண்டும். இந்தக் கூட்டங்களில் கல்வி அதிகாரிகளையும் கட்டாயமாகக் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

18. பள்ளிகள் (குறிப்பாக தனியார்) வியாபார நோக்கில் செயல்படுவதாலும், அதிக கட்டணங்களை வசூலிப்பதனாலும் அவற்றை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவருதல் இயலுமா என்று பரிசீலிக்க வேண்டும்.

19. நடைமுறையில் இருக்கும் பள்ளி மற்றும் பொது இடப் பாதுகாப்புக்கான சட்டங்களை முறைப் படுத்தப் படவும், பின்பற்றப் படவும் வேண்டும். விதிமுறைகளில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களைப் பொதுமக்களுக்கு அறியத் தர வேண்டும்.

கடந்த இரண்டு மூன்று தினங்களில், மேலே தெரிவிக்கப்பட்ட யோசனைகளில் சில தமிழக அரசினால் அறிவிக்கப் பட்டும், செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இவற்றைச் செம்மைப்படுத்தி/முறையே செயல்படுத்தி மாணவர்களையும், பொதுமக்களையும் காக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
பா. சுந்தரவடிவேல், PhDநகல்கள்:
திரு. இந்தியக் குடியரசுத் தலைவர் presidentofindia@rb.nic.in

தமிழகக் கல்வித் துறை
திரு K. ஞானதேசிகன், செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
schsec@tn.gov.in
திரு R. கண்ணன், இயக்குனர், ஆரம்பக் கல்வி dee@tn.nic.in
திரு S. சந்திரசேகரன், மாநிலத் திட்ட இயக்குனர், மாவட்ட ஆரம்பக் கல்வித்
திட்டம் dpep@tn.nic.in
திரு R. பரமசிவம், இயக்குனர், பள்ளிக் கல்வி dse@tn.nic.in
திரு R. நாராயணசாமி, இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் dse@tn.nic.in
திரு P. சௌந்தரராஜன், இயக்குனர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி
dtert@tn.nic.in
திரு C. பழனிவேல், இயக்குனர், அரசுத் தேர்வு dge@tn.nic.in
திரு பீர் மொஹிதீன், இயக்குனர், முறைசாரா மற்றும் முதியோர் கல்வி
dnfae@tn.nic.in
திருமதி தங்கம் சங்கர நாராயணன், தலைவர், ஆசிரியர் பணியமர்த்து வாரியம்
trb@tn.nic.in
திரு R.K. கண்ணா, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
tbc@tn.nic.in
திருமதி S. லக்ஷ்மி, இயக்குனர், பொது நூலகம் dpl@tn.nic.in

தமிழகத் தீயணைப்புத் துறை
திரு S.K. டோக்ரா, இயக்குனர், தீ மற்றும் காப்பாற்றும் சேவைகள்
dir_tnfrs@hotmail.com
அலுவலகம் fireserv@tn.nic.in

வலைப்பதிவாளர்களின் குரலாய்


தயவுசெய்து இம்முறையும் இதைக்
கண்ணீரால் அணைக்கப் பார்க்காதீர்கள்.


இந்தச் சூடு ஆறுவதற்குள்
கூரைகளைத் தூக்கியெறிந்து
செங்கல் அடுக்குவோம்.


பள்ளிப் பாதுகாப்புக்கான சட்டங்கள்/விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கின்றன. அவை சரிவரக் கடைபிடிக்கப் படாமையாலேயே இவ்விபத்து நிகழ்ந்திருக்கின்றது. இருந்தாலும் நாம் அறிந்த வரையில் நமக்குத் தோன்றும் பாதுகாப்பு முறைகளை நம் அரசுக்குத் தெரிவிக்கலாம் என்ற வகையில் இங்கே கருத்துக்களைச் சேகரிப்போம். உங்களுக்குத் தோன்றும், நீங்கள் அறிந்த பள்ளிகளில் பின்பற்றப்படும், விதிமுறைகளை மறுமொழிப்பெட்டியில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அவற்றைத் தொகுப்போம், குறைநிவர்த்தி செய்வோம், தமிழ் வலைப்பதிவாளர்களின் குரலாக இதை அரசுக்கு/பள்ளி நிர்வாகிகளுக்கு அனுப்புவோம்.  இவை இப்போதைக்கு எனக்குத் தோன்றுபவை.
 
இவ்விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிற்குமானவை:
 
1. ஓலைக் கூரையுடன் கூடிய பள்ளிக்கூட அறைகளுக்கு அங்கீகாரம் உடனடியாக மறுக்கப் பட வேண்டும். இத்தகைய வகுப்பறைகளை உடனடியாக வருவாய்த்துறை மூடி முத்திரையிட வேண்டும்.
 
2. பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையில் படும்படியான இடங்களில் கட்ட வேண்டும்.
 
3. ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழை வாயில்கள் இருக்க வேண்டும்.
 
4. அந்தப் பகுதியின் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு எந்திரங்கள் சென்றடையக் கூடிய பாதை வசதி ஒவ்வொரு வகுப்பறைக்கும் இருக்க வேண்டும்.
 
5. அந்தப் பகுதித் தீயணைப்புத் துறையினரின் அனுமதியைப் பெற்ற பிறகே ஒரு பள்ளி ஆரம்பிக்கப் பட வேண்டும். புதுக் கட்டிடம் கட்டப் படும் பட்சத்தில் அந்தக் கட்டிடமும் நெறிமுறைகளுக்கு ஒத்து இருக்கிறதா என்பதைத் தீயணைப்புத் துறை சான்றளிக்க வேண்டும்.
 
6. ஒவ்வொரு வகுப்பறையிலும் போதுமான அளவு வாளிகளும், அவற்றில் மணல், தண்ணீர் போன்றவை எப்போதும் நிரப்பப் பட்டிருக்க வேண்டும்.
 
7. ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று "மாதிரிச் சோதனை" நடத்த வேண்டும். இத்தகைய சோதனைகளில் எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த வாயிலின் வழியே வெளியேற வேண்டும் என்று கற்பிக்கப் பட வேண்டும்.
 
8. அந்தந்த வட்டாரத் தீயணைப்புத் துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்ட வேண்டும், தீயணைப்புக் கருவிகளைப் பற்றிச் சொல்லித் தர வேண்டும், தீ விபத்துக்களைப் பற்றிய சிறிய திரைப் படங்களைத் திரையிட வேண்டும்.
 
9. மழலைப் பள்ளிகளை அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அமைக்கக் கூடாது.
 
10. தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆசிரியர்களுக்குப் போதிக்கப் பட வேண்டும். அவர்கள் மாணவர்களைப் பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்த பின்னரே தாம் வெளியேறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
 
11. உயர் வகுப்பு மாணவர்கள் மழலை வகுப்பு மற்றும் ஊனமுற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி சொல்ல வேண்டும்.
 
12. பதின்மூன்று வயதுக்குக் குறைந்த மாணவர்கள் இருக்கும் வகுப்புக்கள் ஆசிரியரின் துணையின்றி இருக்கக் கூடாது.
 
13. காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்பட வேண்டும்.
 
14. மதிய உணவு சமையற்கூடங்களை வகுப்பறைகளை ஒட்டி அமைக்கக் கூடாது. இத்தகைய சமையற்கூடங்களிலும் தீயணைப்பு வாளிகளும் அவற்றில் தண்ணீர், மணல் போன்றவையும் நிரப்பபட்டுமிருக்க வேண்டும்.
 
15. ஓலை, மரம் போன்றவற்றையோ அல்லது எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களையோ பள்ளி வளாகத்தினுள் கிடத்தக் கூடாது.
 
16. ஒவ்வொரு மாதமும் வருவாய்/பொதுப்பணித்துறை ஆய்வாளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்கிருக்கும் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும்.  
 
அமெரிக்கப் பள்ளிகளின் தீப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டு தமிழாக்கி இத்துடன் இணைக்கலாம் என்று பத்ரி சொல்லியிருக்கிறார். அதைச் செய்கிறேன்.வெங்கட் தீப்பிடிக்காத கூரைகளைப் பற்றித் தன் பதிவில் எழுதியுள்ளார்.பாஸ்டன் பாலாஜி 'வலைப்பூ'வில் NGOக்களை இதில் ஈடுபடுத்துவது பற்றியும், ஊடகங்களைக் கொண்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வரச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். ஈழநாதன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவிகளைச் செய்ய இயலுமா என்று கேட்டிருக்கிறார்.உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும், நன்றி.

நாமெல்லாம்...

கையிற் தெறிக்கும் வார்த்தைகளை அப்படியே உதறி எழுந்து குடந்தைக்கு ஓடுவோம். கரிக் குவியல்களையும் அவற்றைக் கிண்டித் தன் பிள்ளை அல்லது அவளின் அடையாளம் ஏதோவொன்றைத் தேடும் மக்களையும் பார்ப்போம். தீய்ந்த இடமெல்லாம் சுற்றிச் சுற்றி வருவோம், உற்றுப் பார்ப்போம். கதவு சிறிது, திறக்காத் தாழ்ப்பாள், பூட்டியா வைத்திருந்தார், ஓலைக் கூரையா, யாருடைய பள்ளி, எந்த மதத்துக்காரர், எந்தக் கட்சி, அங்கீகாரம் கிடைத்ததெப்படி, தீ வாளி இல்லையா, தண்ணீரில்லையா, மணலில்லையா, கண்டனக் கடிதங்கள் அனுப்புவோம், மூலைக்கு மூலை அமைப்பைத் திட்டுவோம், உலக நடுவிருந்து அமைச்சர்களைத் திட்டுவோம், மதங்களைத் திட்டுவோம், திட்டும்போது கிளையாய்ப் பிரிந்து சண்டைகளிட்டுக் கொள்வோம், உடையும் மூக்கில் குடந்தை மறந்து மீண்டு வரும் பழசையெல்லாம் வாரி எதிராளி மேல் வீசுவோம்,  தத்தம் வார்த்தைகளை விசைப் பலகையில் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து நம்மைச் சுற்றி நாலு பேர், உங்கள் பக்கமோ, என் பக்கமோ அல்லது அவரின் பக்கமேயோ. அங்கே உயிர் பிழைத்தோரும், பள்ளியும் அதிர்ந்து, கிடந்து, திரிந்து, புகையாய்க் கரியாய்க் கனவு கண்டு, பின்னொரு நாள் ஆனது ஆயிப்போச்சு என்ன செய்றது விதி என்று அடுத்த பள்ளிக்கோ அடுத்த நாளுக்கோ ஆயத்தமாவார்கள். நகராட்சி வண்டிகள் கரியைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றன. மக்கள் இன்றோ நாளையோ கிடைத்ததைப் புதைக்கக் கிளம்புவார்கள். மணிக்கட்டு வலிக்கக் கண் சுருக்கித் திரைக்குள் விரிந்து நாமெல்லாம் எழுதிக் கொண்டு மட்டுந்தான் இருப்போமா?

செய்தி:கும்பகோணம் பள்ளியில் தீ, 70 குழந்தைகளுக்கும் மேல் மரணம்.

பூவினால் பூத்தது

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே மாதிரி மறுமொழிகள் வந்ததுக்கப்புறம் மெதுவா இந்தப் பதிவு வருது!

ஒன்னுமில்ல, போன சனி, ஞாயிறு ஒரு கூத்து. புது அப்பா மெய்யப்பன், கீழக்கரைக்குப் புதுசா வந்த இரமணீதரன், பதிவுப் புயல் (காசா பணமா ஒரு பட்டத்தை நீங்களும் வச்சுக்கங்க பாலா) பாஸ்டன் பாலாஜி, வம்புணி சித்தர் கார்த்திக்ராமாஸ், அப்புறம் அமைதியான நான் எல்லாரும் சந்திச்சோம் (இன்ப அதிர்ச்சியா இன்னொருத்தரும் வந்தார், படிச்சுக்கிட்டே போங்க).

கார்த்திக்ராமாஸ் இருக்கது பால்டிமோர் (Baltimore). அங்கேருந்து எங்க வீடு (New Haven) ஒரு 4 மணி நேரக் கார்ப் பயணம். எங்க வீட்லேருந்து மெய்யப்பன் வீட்டுக்கு (Nashua) 2 மணி நேரம். கார்த்திக் எங்க வீட்ல வந்து வெள்ளி ராவைக் கழிச்சுட்டு, சனிக் கிழமை காலை மெய் வீட்டுக்குப் போவதாக ஏற்பாடு. மாசிலனுக்கு (என் மகன்) "வெள்ளிக்கிழமை நம்ம வீட்டுக்குக் கார்த்திக் மாமா வருவாங்க"ன்னு சொல்லிக் குடுத்துட்டேன். அவர் "வெள்ளிக்கெமென்னிக்கி" அப்படின்னு ரெண்டு மூனு நாளாப் பாட்டுப் பாடினார். வெள்ளி வந்தது. பொழுதும் போனது. கிளம்பிட்டேனய்யான்னு ஒரு போன் வந்தது. போன் வந்து 3 மணி நேரங்கழித்து இன்னொரு போன். அய்யா நான் பாதை தவறிய ஆட்டுக் குட்டியானேன் என்று. என்னவென்றால், வழிகாட்றவன் சொல்றதைக் கேக்காம கொழுப்பு சொல்றதைக் கேட்டதால வந்த வினையாம். சுத்து. 10 மணிக்கு வர வேண்டிய வண்டி. 1 மணிக்கு ஒரு போன். ஏங்க, நான் எல்ம் தெருவில நிக்கிறேன் அப்படிங்கறார். விழுந்த எடத்துல தூங்கும் பாக்கியவானான நான் விழுந்தடித்து எழுந்து எந்த எல்ம் தெருன்னு கேட்டேன். அட உங்க தெருதாங்க. ஓ! வந்து ஒரு வழியாத் தூங்கி எழுந்து காலைப் பயணத்துக்குத் தயார்.

சொல்லாடலில் 2 மணி நேரப் பயணம் போனது தெரியலை, ஆனால் என் வலக்காது கேக்காதா ஆனது வேறு விஷயம் :). மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றோம். இளங்கதிரைச் சந்தித்தோம். தூக்கமும் விழிப்புமாய் அவர் உலகத்தில் இருந்தார். மெய்யப்பன் சிம்பாலிக்காகக் கஞ்சி கொடுத்து அசத்தினார். கொஞ்சநேரம் (!) கழித்து ரமணியும், பாஸ்டன் பாலாஜியும் வந்தார்கள். நாஷ்வாக் காரர் சாப்பாட்டு விஷயத்தில் கை தேர்ந்தவர் என்று வலைப்பூவில் மதி சொல்லியிருந்தார். அதை நேரில் பார்க்கும்/சுவைக்கும் வாய்ப்புக் கிட்டியது. குரங்கை விழுங்கிய மலைப்பாம்புகளைப் போல் பக்கத்திலிருந்த மலையை நோக்கி நகர்ந்தோம்.மலையடிவாரத்துக்குச் சென்றபோதுதான் மெய்யப்பன் 'பெட்ரோல் குறைச்சலா இருக்கு'ங்கற மெய்யைச் சொன்னார். காரை அங்கேயே நிறுத்திவிட்டு நடையால் ஏறத் துவங்கினோம். பாறைகளாலான பாதை. பாறைக்குப் பாறைத் தாவியேறினோம். அரை மைலுக்குள் நடுவில் இரண்டிடங்களில் தங்கல். கார்ல போறப்ப திங்கலாமேன்னு மூனு வாழைப்பழங்களைக் கொண்டு போயிருந்தேன். கார்த்திக் வாணான்னுட்டார், சரின்னு ஒன்றைத் தின்றுவிட்டு மீதி ரெண்டு. ரமணி அதைப் பார்த்துட்டு, அந்த இன்னொரு பழம் எங்கேன்னு கேக்க ஆரம்பிச்சவருதான், இன்னும் நிறுத்தலை. கார்ச் சூட்டில் சுட்ட அந்த இரண்டு வாழைப்பழங்களும், சில திராட்சை, ஆரஞ்சுகளையும் விழுங்கியபடி அந்தப் பச்சைமலையில் தமிழ் இலக்கிய உலகின் நடப்புகளை, வலையுலகின் வீச்சுக்களை, முழு அளவில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்த்துவதற்கான யோசனைகளை, ஒருவர் இன்னொருவரது பழம் பதிவுகளை, உள்ளுரை நகைச்சுவைகளை, புதுக் கதைகளைப் பேசித் தீர்த்தோம். ராப்போசனத்துக்கு நேரமாயிடுங்கறதால ஒரு 6.30 போல இறங்க ஆரம்பிச்சோம்.

பாலாஜி வீடு. அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமேன்னு பாடிக்கிட்டிருந்தாரு பாலாஜி. பக்கத்துல பட்டுப்பாவாடை சட்டையோடு சஞ்சிதான்னு ஒரு குட்டிப் பெண்! அங்கே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கப்புறம் என் கல்லூரி நண்பன் மாதவனைச் சந்திப்பேன் என நினைக்கவில்லை. அடிதடியாயிருந்த நட்பு! சந்தோஷமாயிருந்தது. பழங்கதைகள், வலையுலகம், பாட்டுக்கள், நல்ல அரட்டை, வயிற்றுக்கும் நன்றாகவே! மூனு கரும் பியருக்கப்புறம் பாலாஜி "இந்தாளுக்கு இதுக்கு மேல தாங்காது"ன்னு நெனச்சாரோ என்னமோ "இந்தாங்க லைட்" அப்படின்னு குடுத்தார். நல்லதுக்குத்தான். காலையில் மெய்யப்பன் வீட்டில் எழுந்தேன். என் தொண்டை கரகரவென்றிருந்தது. கத்திப் பேசிச் சிரித்தால் எனக்கு அப்படித்தானாகும். அந்தத் தொண்டையோடு பாடப் பிடிக்கும். அந்த அதிகாலையில மெய்யப்பனுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னு விட்டுட்டேன். நானும் கார்த்திக்கும் அங்கேயே காலைக் கொட்டு கொட்டிக்கிட்டுக் கிளம்பினோம். வரும் வழியில் கார்த்திக்கின் நண்பரொருவர் வீட்டில், க்வின்ஸி, ஒரு சிறிய நிறுத்தம் நிறுத்திவிட்டு வீடு நோக்கிப் பயணித்த வழியிலொரு கடற்கரை எங்களை வாவென்றது.சில நிமிடங்கள் அதற்குக் காட்சி கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். வீட்டுக்கு வந்த பின் தன் பயணத்தைக் கார்த்திக் தொடர்ந்தார். அவர் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விட்டதாகக் கடைசியாகக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

மெய்யப்பனின் புத்தகங்கள், இரமணியின் நகைச்சுவை, பாலாஜியின் அமைதி, மீண்டும் சந்தித்த மாதவன், கார்த்திக்கின்...என்ன சொல்லலாம்...குசும்பு, வம்பு, அதன் பின்னாலிருக்கும் சமூக அக்கறை, எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று சில திட்டங்கள் இப்படியாய் ஒரு இனிய அனுபவத்தைத் தந்தது இந்தச் சந்திப்பு. நன்றி நண்பர்களே!

கத கேளு, கத கேளேய்!

நானொரு கதைக்காரன்; முதலும் முடிவுமாக நானொரு கதைக்காரன் என்று FETNA திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகளில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். அவர் படிச்சு, சொல்லி, நான் கேட்டு, அதை எழுதும் வரைக்குமான நெடும் பயணத்தில் அந்தக் கதைகள் நிறையவற்றை இழந்திருக்கும். ஆனாலும் பகிர்கிறேன். உண்மைத் தலைப்புகளெல்லாம் தெரியாது.

1. தாத்தா
இது உண்மைச் சம்பவம்.
தமிழ்த்தாத்தா உவேசா சுவடிகளைத் தேடிப் போனார். ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரர் ஒன்றும் படித்தவரில்லை. ஆனால் அவர் வீட்டுப் பரணில் நிறைய பழைய ஓலைச் சுவடிகள் இருந்தன. உவேசா சுவடிகளையெல்லாம் பார்த்து எடுத்துக் கொண்ட பிறகு பரணிலிருந்து கீழே வந்தார். ஒரு படம் மாட்டியிருந்தது, அதில் அந்த வீட்டுக்காரர், படிக்காத அவரேதான், ஆனால் கையில் பெரிய புத்தகம் ஒன்றோடு. அது எப்படி என்று உவேசா வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்டார். நான் படிக்காதது உண்மைதாங்க, ஆனா இந்தப் படத்தைப் பார்த்த பிறகு என் சந்ததிகள், ஆகா நம்ம தாத்தா பெரிய படிப்பாளி போலிருக்கே நாம அவரை விட நிறைய படிக்கணும்னு நல்லா படிப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையில இப்படிப் படம் பிடிச்சு வச்சிருக்கேன்.

2. சிலுவை
இது ஒரு அமெரிக்கக் கதையென்று சொன்னார்.
ஒரு கருப்பன். உறையும் குளிர், இரவு. கண்ணில் பட்டது ஒரு கோயில். கதவைத் தட்டினான். பாதிரி வந்தார். விறைத்துப் போகிறேன் தங்கிக் கொள்ளட்டுமா என்றான். இல்லை, கருப்பர்களுக்கான கோயில் இன்னும் கொஞ்சம் தூரத்திலிருக்கிறது போ. இல்லை, அங்கு போவதற்குள் குளிரில் செத்துப் போய் விடுவேன். இல்லை, முடியாது போய்விடு. கதவை இவன் தள்ள, பாதிரி இவனைத் தள்ள. இவனொரு தூணைப் பற்றுகிறான். பாதிரி தள்ளுகிறார். தள்ளத் தள்ளத் தூண் அசைகிறது. இன்னும் தள்ளியதில் தூண் விழுந்து கோயிலும் விழுகிறது. அவன் நடந்து போனான். கொஞ்ச தூரம் போன பின், பின்னாலே காலடியோசை. திரும்பிப் பார்த்தான். ஒரு ஆள் 35 வயசிருக்கும். அருகில் வந்து என் பெயர் ஏசு கிறிஸ்து, இவ்வளவு காலமாக என்னைச் சிலுவையில் அறைந்து வைத்திருந்தார்கள், விடுவித்தமைக்கு நன்றி என்றார். இருவரும் எங்கே போகலாம் என்று பேசிக் கொண்டே ரயில் நிலையம் நோக்கி நடக்கலானார்கள்.

3. கடல் மீன்கள்
இது உலகின் மிகச் சிறிய கதையாம். (இதை விடச் சிறியது ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட சரியாம்!)
ஒரு கடலில் ஒரு சின்ன மீன். ஒரு நாள் அதன் முன் ஒரு பெரிய மீன் வந்து விழுங்குவதற்காக வாயைத் திறந்தது. சின்ன மீன் கேட்டது, இது அநியாயமில்லையா? பெரிய மீனின் பதில்: அநியாயந்தான், வேண்டுமானால் நீ என்னை விழுங்கேன்.

4. தலை
ஒரு அம்மாவுக்குத் தலையேயில்லாத ஆண் பிள்ளையொன்று பிறந்தது. வாலிப வயசு வரை அந்தப் பயலுக்கு இது ஒரு குறையாயில்லை. ஒரு நாள் ராஜாவின் மகளைப் பார்த்து மையலுறுகிறான். அவளருகில் சென்றாலோ, சீச்சீ இவன் யார் இவனை விரட்டுங்கள் என்று சொல்கிறாள். அப்போதுதான் முதன்முறையாய்க் கவலைப்பட்டு அம்மாவிடம் முறையிடுகிறான். அம்மா ஒரு முனிவரிடம் கேட்கிறாள். சரி, இந்த மந்திரத்தைச் சொல்லிவிட்டு அவன் வெளியில் கிளம்பட்டும், முதலில் எதைப் பார்க்கிறானோ அதன் தலை இவனுக்குக் கிடைக்கும். இவன் பன்றியைக் காணப் பன்றித் தலையனாகிறான். இப்போதும் இளவரசி விரட்டியடிக்கிறாள். பின்னர் கழுதைத் தலை. விரட்டல். மறுபடியும் அம்மா, புலம்பல், முனிவர். இப்போது முனிவர் சொன்னார், ஒரு மனுசத் தலை இருக்கிறது, ஆனால் உள்ளே மூளையிருக்காது. பரவாயில்லையென்று பெற்றுக் கொள்கிறார்கள். இப்போது அவனொரு அழகிய முகங்கொண்ட வாலிபன். அரசனொருநாள் இவன் அழகு கண்டு அவன் அம்மாவிடம் இவனை என் மருமகனாக்கிக் கொண்டு அரசனாக்கவா என்கிறான். அம்மா சொன்னாள், இவனுக்கு மூளையில்லையே. ராஜா கேட்டார்: இவனுக்குமா? சரி சரி, இப்படிப் பட்டவனே நாட்டை ஆள வேண்டும்.

5. தும்மல்
ஒரு அரங்கத்தில் க்ரிகோவிச் நாடகம் பார்க்கிறான். தும்மல் வருகிறது. தும்முகிறான். முன்னிருக்கைக் காரர் திரும்பிப் பார்த்துவிட்டு, நாடகம் பார்ப்பதைத் தொடருகிறார். க்ரிகோவிச்சுக்கு அப்போதுதான் தெரிந்தது அவர் அவனுடைய முதலாளி. ஆகா, தப்பு செய்துவிட்டோமோ, வேணும்னு செஞ்சுட்டோம்னு நினைப்பாரோ என்றவாறு குமைந்து, மெல்ல அவரது தோளைத் தட்டி "அய்யா, தும்மல்ங்கறது ஒரு இயற்கையான விசயம், அது எப்ப வேணாலும் வரும்" என்று ஆரம்பிக்கிறான். அவர் "இருக்கட்டுமப்பா நாடகத்தைப் பார்". இவனால் அதன் பின் நாடகத்தைப் பார்க்க முடியவில்லை, அவர் கோபித்துக் கொண்டதால்தான் தன்னைப் பேசவிடவில்லையென நினைத்தபடியே துடித்துச் சற்று நேரம் பொறுத்து அவரது தோளைத் தட்டி "தும்மல்ங்கறது"ன்னு ஆரம்பிச்சான். நீ இப்போ நாடகத்தைப் பார்க்க(விட)ப் போறியா இல்லையா என்றார். இவனால் அதற்கு மேல் நாடகத்தைப் பார்க்க முடியலை. நாடகம் முடிந்து முதலாளி தன் குதிரை வண்டிக்குத் திரும்பியபோது க்ரிகோவிச் அங்கே நின்றான். "அய்யா தும்மல்ங்கறது", "ஏன்யா இப்படிக் கழுத்தறுக்கறே" என்றவாறு அவர் கிளம்பிப் போக, இவன் வீட்டுக்குப் போனான். மனைவியிடம் சொன்னான். மனைவி இவன் வேலை போய்விடப் போவதாகவும், குடும்பம் நடுத்தெருவுக்கு வரப் போவதாகவும் பயந்தாள். இவனால் இரவு உறங்க முடியவில்லை. கடைசியில் கிளம்பி நேரே முதலாளி வீட்டுக்குச் சென்றான். மணியை இழுத்து அழைத்தான். பிரதமருக்கு மட்டுமே இந்த நேரத்திலே தன்னை அழைக்கும் அனுமதி, என்ன அவசரமோ என்று அந்த அதிகாலை மூன்று மணிக்கு ஓடி வந்து கதவைத் திறக்கிறார். "அய்யா தும்மல்ங்கறது..." ஆரம்பிக்கிறான், "இனி இந்தப் பேச்சை எங்கே எடுத்தாலும் என் துப்பாக்கிதான் உனக்குப் பதில் சொல்லும்". போய்விடுகிறார். இவன் வீட்டுக்கு வந்து படுத்து அப்படியே செத்துப் போகிறான்.
இது ரஷ்யப் புரட்சிக்குக் காரணமானதென்று சொல்லப் படும் 12 சிறுகதைகளுள் ஒன்றாம். அன்டண் செக்காவ் எழுதியதாம்.

6. முகம்
முகம்தான் உண்மையான தலைப்பு. இதுவும் ஒரு ரஷ்யக் கதை. அலெக்ஸேய் டால்ஸ்டாய் எழுதியது என்று சொன்னதாக ஞாபகம்.
நர்ஸ் வந்து அவன் முகத்தின் முன்னே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினாள். இராணுவச் சிப்பாய். போரில் பெரும் காயம். உயிர் பிழைத்ததே பெரும்பாடு. முகம் சிதைந்து போயிருந்தது. அவனது அழகிய பழைய முகமாயில்லாமல் கோரமாகியிருந்தது. அவன் சொந்த ஊருக்குப் போய் அவன் வீட்டில் அனைவரிடமும் தான் அவர்கள் மகனின் நண்பன் என்று சொல்கிறான். தான் காதலித்த பெண்ணையும் காண்கிறான். யாரிடமும் தான் யாரென்பதைச் சொல்லாமலேயே கிளம்புகிறான். இராணுவத்துக்கு வந்த பின்பு ஒரு வாரங்கழித்து அவனுக்கொரு கடிதம். அம்மாவிடமிருந்து. போன வாரம் உன் நண்பனென்று ஒருவன் வந்தான், வந்தது நீதானோ என்று எனக்குச் சந்தேகம், ஏனென்றால் அந்தக் காலுறையில் உன் வாசமடித்தது. வந்தது யார்? இப்போது அவன் அம்மாவிடம் உண்மையைச் சொல்கிறான். சில நாட்கள் கழித்து அவனைப் பார்க்க அம்மாவும் காதலியும் வருகிறார்கள். இந்த முகத்தை உனக்குப் பிடித்திருக்கிறதா என்றான், இப்போதுதான் ரொம்பப் பிடிக்கிறது என்றாள் காதலி.

அம்புட்டுதான். மூலக் கதைகளைக் கொத்திக் குதறி மெக்டொனால்ட்ஸ் காகிதத்திலே சுருட்டிக் கொடுத்ததற்குக் கதாசிரியர்களின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்!

பொங்கும் பால்டிமோர்-2

இரண்டாவது நாளான ஞாயிறு. அமெரிக்காவின் சுதந்திர தினம். அன்று பல அமர்வுகள். ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல இடங்களில் வைத்திருந்தார்கள். ஒரு புறம் முதன்மை அரங்கில் அருண் சிதம்பரத்தின் "தமிழ், தமிழர் முன்னேற்றம்" உரை நிகழ்ந்த போது மறுபுறம் சிவகாமி பெண்ணுரிமையைப் பற்றிய கருத்தாடலில் இருந்தார், இன்னொரு பெரும் அறையில் வித்தைக்காரரொருவர் சின்னப் பிள்ளைகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். பெரும் அறிவியல் மாநாடுகளில் இத்தகைய இணை அரங்குகள் நிகழ்வதை அறிந்திருப்பீர்கள். இது ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான இடத்தில் சென்று கண்டு மகிழ நல்லதொரு ஏற்பாடு.

இன்றைய முதல் நிகழ்வாக நான் சென்றது, "Internationally recognized short-films" என்ற குறும்படத் திரையீடு. சில வாரங்களுக்கு முன்னர் அருண் வைத்தியநாதன், பி.கே. சிவகுமார் ஆகியோர் நியூஜெர்சி சிந்தனை வட்டம் நடத்திய குறும்பட விழாவைப் பற்றி எழுதியிருந்தார்கள் அல்லவா? அதே இடத்திலிருந்துதான் பெட்டி வந்திருக்கிறது. மூன்று படங்களை மட்டுமே திரையிடப் போவதாகச் சொன்னார்கள். நியூஜெர்சிக்குச் செல்ல இயலவில்லையே என்ற ஆதங்கம் ஓரளவுக்குத் தணிந்ததாக நினைத்தேன்.

இதில் முதற்படம் ஆர்.புவனா அவர்களின் "தேடல்". நகரத்தில் வாழும் வேலைக்குச் செல்லும் தம்பதியினரும் அவர்களது இரண்டு புதல்வர்களையும் மையப் படுத்திய கதை. வேலை வேலை என்று ஒரே பரபரப்பாய் அலைவதில் குழந்தைகளின் குரல்களை, கேள்விகளைக் கண்டு கொள்ளாத எரிந்து விழும் பெற்றோர், ஒன்றுக்குப் பத்தாகக் கோள் மூட்டும் வேலைக்காரப் பெண், பள்ளியில் மதிப்பெண் ரீதியாகச் சந்திக்கும் சரிவுகள், இத்தனைக்கும் நடுவில் பரிணமித்திருக்கும் அண்ண்ன், தம்பி பாசம். அப்பாம்மாவின் எரிந்து விழல் சராசரிக்கும் சற்றே மிகையாகச் சித்தரிக்கப் பட்டாலும் இது போன்ற குடும்பங்கள் இருப்பது சாத்தியமே என்று தோன்றியது. ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வராமல் ஓடிப் போகும் பிள்ளைகள். இந்த இடத்தில் அவர்கள் பார்க்கும் கழைக்கூத்தாடிகளின் வித்தைகள் நெஞ்சைத் தொட்டன. கயிற்றின் மேல் நடக்கும் ஒரு பெண். ஒருவனின் மோவாயில் தாங்கிய நீண்ட மூங்கில் தடியின் உச்சியில் அந்தக் கழியைக் கெட்டியாய்ப் பிடித்தபடியிருக்கும் ஒரு சின்னஞ்சிறு குழந்தை. பாரமான காட்சி. அப்புறம் பயல்களைக் கண்டு விசாரித்து அழைத்துச் சென்று அவர்களைப் பத்திரமாய் அன்றிரவு காத்து, அம்மாப்பாவுக்குச் சொல்லி அவர்களுக்கும் அறிவுரை சொல்லி அனுப்பும் ஒரு அனாதை ஆசிரமத்துக் காரர். வாழ்க்கையில் பரபரப்பாய்த் தேடித் தேடி ஒரு நாள் திரும்பிப் பார்த்தோம் என்றால் எல்லாம் இருக்கும், நிம்மதி ஒன்றைத் தவிர என்ற முத்திரையுடன் இருந்தது படம்.

அடுத்து வந்தது "The Untouchable Country". சாதீயம் - இந்தியாவின் ஊரறிந்த ரகசியம்; அனுதினமும் தாழ்த்தப் பட்டோரில் இருவர் கொல்லப் படுகிறார்கள், மூன்று பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள், நால்வர் தாக்கப் படுகிறார்கள், இரண்டு வீடுகள் எரிகின்றன, என்ற அதிகாரபூர்வமான செய்திக் கட்டியத்துடன் ஆரம்பிக்கிறது படம். கீழ்ச்சாதிக் காரன் தொட்டால் நகராத கண்டதேவிக் கோயில் ரதம், ஆங்கிலேய அரசால் கொடுக்கப்பட்ட 11 ஏக்கர் பஞ்சமி நிலத்தைத் திருப்பிக் கேட்டதால் போலீஸின் துப்பாக்கிக் குடித்த உயிரிரண்டு, தாமிரபரணி ஆற்றினுள் விரட்டியடிக்கப் பட்டுத் தடியாலும், கற்களாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும், போலீஸ் கொன்று குவித்த பதினேழு தாழ்த்தப் பட்டோர், "நீ படித்திருந்தால் என்னடா, உன் அம்மா ஒரு பீ வாரும் தொழிலாளிதானே நீயும் அதையே செய்" எனும் ஊராட்சி அலுவலகங்கள். ஒவ்வொரு ஊரிடமும் ஆவுரித்துத் தின்னும் புலையனைப் பற்றிய கதையொன்றிருந்தது; அந்தக் கதைகளுக்குக் காரணமான மதத்தின் ஆழமான அடித்தளமும், தாங்குவதற்கு அதனோடு ஒன்றிணைந்த அதிகாரத் தூண்களும் இருந்தன. அடித்தளம் நெற்றியிலிருந்து பிறந்த மனுதர்மமாக இருந்தாலும் நெஞ்சிலிருந்து வந்தவனும் தொடையைப் பிளந்து வந்தவனும் காலிலிருந்து வந்தவனைத் துவைப்பதில் சற்றும் குறை வைப்பதில்லை. "எங்களுக்குன்னு என்ன இருக்கு இங்கே, நாங்கள்லாம் என்னத்துக்கு இந்த நாட்டில் இருக்கணும்?" - நெஞ்சுகளில் பொருத்தப் பட்டிருந்த காலர் மைக் அவர்களது குமுறும் இதயத்தை தெளிவாய்ப் பதிந்திருக்கின்றன. மதம் மாறுவதனால் தங்கள் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவர்களையும் பார்த்தேன். கூட்டமாய் நின்று "நாங்கள் இந்துக்கள் இல்லை" என்று முழங்கும் போது அவர்களோடு நானும் நின்றேன். கண்ணீரை வரவழைப்பதோடு மட்டுமில்லாமல் சாதீய ஒடுக்கு முறைகளைச் சர்வதேச சமூகத்துக்குச் சொல்லும் பொறுப்பை உணர்த்தும் ஒரு படமாக உணர்ந்தேன்.

அடுத்த படம் என்னவென்றேன், "சென்னைப் பட்டணம்" என்ற சிரிப்புப் படம் என்றார்கள். இல்லை, நான் இந்த மனப்பாரத்துடனேயே வெளிச் செல்ல விரும்புவேன் என்று நினைத்துக் கிளம்பி விட்டேன். நேரே சிவகாமி இ.ஆ.ப அவர்களின் கலந்துரையாடலுக்குச் சென்றேன். பெண்ணுரிமைதான் தலைப்பு என்றாலும் வந்திருந்த கூட்டம் அவரைத் தலித்தியத்துக்கே இழுத்துச் சென்றது. இது வந்திருந்தோரின் சாதீய உடைப்பின் மேலிருந்த அக்கறையைக் காட்டுவதாயிருந்தது. கேள்விகளைக் கேட்டு எழுதிக் கொண்டு ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தார்களா, சாதிகளை ஒழித்தால் இட ஒதுக்கீடும் ஒழிந்து விடுமா, தலித்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்கிறார்கள், அரசாங்கம் ஆதி திராவிடக் கல்விக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது, உங்கள் வீட்டில் உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறதா என்பன போன்ற கேள்விகள். அவரது பதில்களின் சாரம்: இட ஒதுக்கீட்டில் 18% தாழ்த்தப் பட்டோருக்கும் 1% பழங்குடியினருக்கும். இது அரசுத்துறையில் மட்டும். இது வரை C என்ற அடித்தளத்திலும் (அதாவது அலுவலகத் துப்புரவாளர் போன்ற பணிகள்), B என்ற சற்றே உயர்ந்த தளத்திலுமே பதவிகள் நிரப்பப் பட்டுள்ளன. A பிரிவு உயர் பதவிகள் பெரும்பாலும் நிரப்பப் படாமலேயே இருக்கின்றன. ஆதி திராவிட நலத்துறை கல்விக்காக ஆண்டுக்கு 1600 கோடி பெற வேண்டும். இதில் 200 கோடிக்கூடக் கிடைப்பதில்லை. எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. உயரதிகாரிகளாக, ஊர்த்தலைவராக இருந்தாலும் சாதியின் அடிப்படையில் சிறுமைப் படுத்தப் படும் போக்கு. தனியார் நிறுவனங்கள் சாதீய நிறுவனங்களாக மாறிய அவலம் (உதாரணமாக தி இந்து பத்திரிகையிலோ, அல்லது தினத்தந்தி போன்ற பத்திரிகை அலுவலகங்களிலோ பெரும்பாலான பதவிகள் அந்தந்த சாதிக் காரர்களுக்கே!). இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை, உரிமை. அவர்களுக்கு இத்தனைக் காலம் இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கான ஈடு. ஒரே நிலையிலிருந்து நாம் மேலும் பயணிக்க ஒரு ஏற்பாடு. இதைத் தவிர சாதிச் சான்றிதழுக்கு எந்தப் பயன்பாடும் இருக்கலாகாது. தலித்தியத் தலைவர்கள் முக்கியமான பிரச்சினைகளை விடுத்துத் தனித் தமிழ்நாடு போன்ற முழக்கங்களை முன் வைத்துப் போராட்டத்தை திசை திருப்புவது வேதனைக்குரியது. தேவையெனில் தாழ்த்தப் பட்டோர் தாம் தமிழர் என்ற அடையாளத்தைக் கூட இழக்கத் தயாராகி விடுவர். கல்விக்கு முன்னுரிமையும், கற்றுக் கொடுக்கப் படும் பாடங்களில் உண்மையும் இருக்க வேண்டும். பாடத்திட்டங்களில் மறு சீரமைப்பு வேண்டும். இவ்வாறு பலவற்றையும் நெஞ்சிலே சுமத்தி விட்டார்.

பிரபஞ்சனை வழியில் கண்டு, புகைப்படமெடுத்து, பேசி, அவருடனே நடந்து அவருடைய கலந்துரையாடலுக்குச் சென்றேன். என்னைப் பற்றியும், வலைப்பூக்களைப் பற்றியும் சொன்னேன். அவரது அருகாமையில் ஏதோ ஒரு தெளிவு இருந்தாற் போலிருந்தது, பிரமையாகக் கூட இருக்கலாம்! தன்னைச் சுருக்கமாக அறிமுகப் படுத்திக் கொண்ட பின்னர் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொன்னார். அப்போது 20 பேர் இருந்திருப்பார்கள். பின்னாலும் ஒரு 20 பேர் வந்து கலந்தனர். கதைகளைப் பற்றித்தான் இவர் நிறைய பேசினார். கதையை எழுதுவதையும், படிப்பதையும் விடச் சொல்வதும் கேட்பதுமே நன்று என்றார். அப்படித்தானே கதைகள் தோன்றின என்றார். கதைக்கு வர்ணனை தேவையா, கதையிலே என் சொந்தக் கதையை எப்படி எழுதுவது, ஒரு நல்ல சிறுகதை என்றால் என்ன? கேள்வியும், பதிலும், பதிலில் ஒரு கதையுமாக இருந்தது அந்தக் கலந்துரையாடல். வர்ணிக்கலாம், சாண்டில்யனைப் போலிருக்கக் கூடாது. அந்த அறையில் ஒரு துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று எழுதினால், கதை முடியுமுன் அது வெடிக்க வேண்டும் என்று யாரோ சொன்னதைச் சொன்னார். 1000 சிறுகதைகளைப் படித்தால் 1001வது உன்னுடையதாக இருக்கும். அந்தளவுக்கு வாசிக்கணுமாம். ஒரு நல்ல சிறுகதையைப் படித்து முடிக்கும்போது நீ ஒரு இஞ்ச் உயர்ந்திருப்பாய். உங்கள் அந்தரங்கத்தையோ உங்களின் நண்பர்களின் அந்தரங்கத்தையோ தவிருங்கள். அல்லது அப்படியே எழுதினால் அந்தக் கதையில் நீங்களோ உங்கள் நண்பர்களோ இருக்கக் கூடாது. உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும் இடையில் இடைவெளி இல்லாமலிருப்பது எழுத்திற்கு நிலைத் தன்மையைக் கொடுக்கும். வந்திருந்தோரை வைத்து ஆளுக்கொரு வரியாய்ச் சொல்லி ஒரு கதையை எழுத ஆரம்பித்தார். நேரம் போதவில்லை, நாளை எழுதி வந்து தாருங்கள் என்றார்.

பின்னர் நான் முதன்மை அரங்கில் நுழைந்த போது நர்த்தகி நடராஜன் ஆடிக் கொண்டிருந்தார். அது முடிந்து ஒரு பட்டி மன்றம். முனைவர் சுந்தர ஆவுடையப்பன் நடுமையில். "தமிழ்ப் பண்பாடு அதிகம் தழைப்பது தாயகத்திலா, அயலகத்திலா?". அணிக்குத் தலா மூவர், அமெரிக்கவாசிகள். விருந்தோம்பும் பண்பு இங்கில்லை, பொது இடங்களிலெல்லாம் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள், கலாச்சாரம் சீரழிந்து கிடக்கிறது, ஊரிலே போய்ப் பாருங்கள் விருந்தோம்பலை, குணத்தை, பண்பாட்டை. ஆகவே தமிழ்ப் பண்பாடு அங்குதான் வாழ்கிறது என்றது தாயகத்திலே அணி. அட போங்கப்பா, நம்ம ஊரு சினிமாவிலே இல்லாத சீரழிவா, பெண்மையை இந்த ஊரிலாவது சற்றேனும் மதிக்கிறார்கள், இருக்கின்ற கொஞ்ச நஞ்ச வசதிகளையும் கொண்டு இத்தனைப் பண்பாட்டுச் சின்னங்களையும் காப்பாற்றி வருகிறோமே, இந்த அயலகத்திலேதானய்யா தமிழ்ப் பண்பாடு தழைக்கிறது என்றது அயலகத்திலே அணி. சிரிக்கச் சிரிக்கப் பேசிய ஆவுடையப்பனும் கடைசியில் அயலகத்துக்கே வெற்றியளித்தார்.

பெரும் ஆரவாரத்துக்கிடையே தோன்றி, இந்த ஊர் அமைப்பாளர்களைப் போலப் பேசிக் கடைசியில் தன்னுடைய படங்களிலிருந்து துண்டு துண்டாய் வெட்டியெடுத்து வந்து போட்டு, நடு நடுவில் மேடையில் தோன்றிச் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லி ரசிக்க வைத்தார் விவேக். how come you are so funny? என்றது ஒரு பொடிசு. I have to ask my papa and mama என்றார் விவேக். ஏன் ஆபாசமான இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுகிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு மழுப்பலாக, நானாவது இரட்டைதான், சில பேர் பல அர்த்தங்களோடு பேசுகிறார்கள், மேலும் அவன் பல கோடிகள் கொட்டிப் படமெடுக்கிறான், சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றுவிட்டுப் போனார். தமிழ் என் உயிர், ஆறு கோடித் தமிழர்களும் என் நெஞ்சில் என்று வசனித்தார். இது முடியும் வரை பலராலும் என்னாலும் இருக்க முடியவில்லை. சாப்பிட்டுக் காரைக் கிளப்பிக் கொண்டு திரும்பனுமே, கிளம்பினோம்.

இதற்கு அடுத்த நாள் திங்கட்கிழமையும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறையென்பதால் சில நிகழ்ச்சிகள் இருந்தனவென்றாலும், அதற்கோ அல்லது தொடக்க நாளான வெள்ளிக்கிழமையன்று நடந்த சில நிகழ்ச்சிகளுக்கோ என்னால் செல்ல இயலவில்லை. அதே போல் இணை அரங்குகளை நான் சரியாக ஒத்திசைத்துக் கொள்ளாததால் தவற விட்டதில் முக்கியமான ஒன்று சம்பந்தனின் கலந்துரையாடல். ச்சை! திரும்ப வேண்டி இருந்ததால் கேட்க முடியாமல் போனது ஜாஸ்பர் ராஜின் உரை.

கிட்டத்தட்ட 1500-2000 பேர் வந்திருக்கலாம். பெரும்பாலானோர் 20-40 வயதினர். ஈழம், தமிழகம் இரண்டிலுமிருந்து வந்திருந்தது கூட்டம். பல மதத்தினரும் இருந்தார்கள் ஏனெனில் நான் சில முஸ்லிம், கிறிஸ்தவர்களையும் கண்டேன். மொழியை முன்னிருத்தி ஒரு விழா எடுக்கும் போது மத சம்பந்தமான (அது பெரும்பான்மையானவருடையதாக இருந்தாலும் சரி) கலைகளை ஊக்குவிப்பது ஆரோக்கியமற்றது என்று தோன்றியது. இளையர்களும், பதின்ம வயதினரும் கணிசமானோர். சென்ற ஆண்டிலிருந்து ஒற்றையர் சந்திப்பும் மாநாட்டின் ஒரு அங்கம். இது வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர. விழா Morgan State Universityயில் நடைபெற்றது. அரங்கம், வாகன நிறுத்தம், கழிப்பறைகள், உணவருந்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் நன்றாக இருந்தன. பல்வேறு தொழில் நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கண்காட்சி நடத்தினர். புத்தகம், நகை, புடவை, பாத்திரம் விற்பனை அமோகமாக நடந்தது. நம் வலைப்பூவர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன்! வேறு யாரும் இது பற்றிப் பதிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.

பல நாள் பட்டினிக்காரன் பட்சணக் கடைக்குள் புகுந்தது மாதிரி இரண்டு நாட்களும் தேமதுரத் தமிழோசையைப் பருகிவிட்டுப் பல எண்ண அலைகளுடனும், பாரதியின் படம் போட்டு "மனதில் உறுதி வேண்டும்" வாசகம் பொறித்தவொரு சட்டையுடனும், சில புத்தகங்கள், குறுந்தகடுகளுடனும் பால்டிமோரை விட்டுக் கிளம்பினேன். உனக்கொரு நன்றி FETNA, அடுத்த வருடம் உன்னைச் சந்திக்கிறேன்!
(இத்துடன் பொங்கும் பால்டிமோர் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது, நன்றி, வணக்கம்!!)

பொங்கும் பால்டிமோர்-1

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (Federation of Tamil Sangams of North America, FETNA) 17வது ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். நிகழும்போதே வலைப்பதியும் ஆவலினால் என் மடிக்கணினியைக் கொண்டு சென்றிருந்தேன். கம்பியில்லா இணைய வசதி கட்டுமானத்தில் இல்லையென்பது அங்கு சென்ற பின்னர்தான் தெரிந்தது. "நம் டிவி"காரர் சொன்னதன் பேரில் அதற்கொரு அட்டையையும் வாங்கிச் செருகிப் பார்த்தேன். அது வேலை செய்தது, ஆனால் என்னவோ தெரியவில்லை என் வலை இணைப்புப் படுத்துக் கொண்டது. இரண்டு நாட்களும் இடையிடையே என் கணிணியுடன் போராடித் தோற்று, இப்போது ஊருக்கு மீண்டு வந்து அங்கு நடந்தவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தப் பதிவு முதல் நாளின் இறுதியில் எழுதியது.

பால்டிமோரில் (Baltimore) இருக்கிறேன். இது மேரிலாண்ட் (Maryland) மாநிலத்தின் தலைநகர். நான் வசிக்கும் ஊரிலிருந்து சுமார் 260 மைல்கள். இங்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 17வது ஆண்டு விழா நடக்கிறது. இங்கிருக்கும் எல்லா மாநிலத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டம். கடல் கடந்து வந்த கலைஞர்களின் கூட்டம். கனேடியக் கூட்டம். அமெரிக்காவில் நான் இதுவரை கண்டிராத பெரும் தமிழ் மக்களின் சங்கம். பேரலையடிக்கும் நெஞ்சுடன் உள்ளே நுழைந்தேன். இந்த நெஞ்சத்தின் அசைவுகளை, அதிர்வுகளை உங்களோடு முடிந்த வரை பகிர்ந்து கொள்கிறேன். நிச்சயமாய்த் தெரியும், என்னால் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. முயல்கிறேன்.

அரங்கத்துக்குள் நுழையும்போது வாசற்கோலமும் வாழைமரங்களும். உள்ளே தவிலும் நாதஸ்வரமும். கல்யாண வீடு போலிருந்தது. ஆரவாரமாய் அலைந்த முகங்கள். இவரைத் தெரியுமா என்று ஒவ்வொருவரும் மற்றவர் முகத்தை உன்னிப்பாய்ப் பார்ப்பது போன்றதொரு பிரமை. பதிவெல்லாம் முடித்து உள்ளே சென்ற போது சரியாய் நீராருங்கடலுடுத்த ஆரம்பித்தது. அமெரிக்கர்களைப் போலவே நம்மவர்களும் இங்கே எழுந்து நிற்பதும், அசையாமல் ஆங்காங்கே அமைதியாய் நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ததைக் காண முடிந்தது.

முதலில் வந்தவர் சிவகாமி, இ.ஆ.ப. தலித்தியப் பெண்ணியத்தில் ஒரு முக்கிய எழுத்தாளர். எண்பதுகளில் ஆரம்பித்த தலித் இலக்கிய வீச்சில் முதல் வாளைத் தூக்கியவர்களில் இவரும் ஒருவர். இதுவரை நான்கு புதினங்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகளில் தலித் பெண்களை, அவர்களது பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதியுள்ளார். புதிய கோடாங்கி என்ற மாத இதழின் ஆசிரியர். இதனை ஒரு இயக்கமாகவும் நடத்துகிறார். இவர் இன்று பேசியது பெண்களின் உரிமைகளைப் பற்றி. ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கொடுத்தார். அதாவது சங்க இலக்கியமான குறுந்தொகையில் எப்படிப் பெண் பாடப்பட்டாள்: வினையே ஆடவர்க்கு உயிரே; பெண்டிர்க்கு? அந்த ஆண்கள்தாம் உயிராம். காந்தள் மெல்விரல் தயிரைப் பிசைந்ததும் புகை மண்டிய அடுப்பை ஊதியதும் "இனிது" என்ற அவனின் பாராட்டுக்காகவாம். பின்னர் சங்கத்திலிருந்து புறப்பட்டு சங்கம் மறுவிய காலத்தில் ஆதிக்கமுற்றிருந்த சமண, பெளத்தங்களின் நூல்களாகிய மணிமேகலை, சிலப்பதிகாரம் பெண்களை மையப்படுத்தின. அதன் பின் ஓங்கிய சைவ, வைணவ மதங்களிலும் பின்னால் வளர்ந்த இந்து மதத்திலும் பெண்ணடிமைக் கருத்துக்களும் பெண்களை வீழ்ச்சிக்குள்ளாக்கும் நூல்களும் சமூகப் பழக்கங்களுமே இருந்தன. நாயக்கர் காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில்லை. ஆங்கில ஆட்சியில் சதி ஒழிப்பு, பால்ய விவாகம் ஒழிப்பு போன்றவற்றின் மூலம் பெண்கள் இழந்திருந்த/மறந்திருந்த உரிமைகளை ஓரளவு பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு பெண்களின் நிலை என்ன? இன்னும் 50%க்கும் மேற்பட்ட பெண்கள் கல்வியறிவு பெறவில்லை, இவர்களில் 60%க்கும் மேற்பட்டவர்கள் தலித்துகள். கல்வி, பொருளாதார மேம்பாடு பெண்விடுதலையைக் கொண்டு வரும். போராடும் பெண்களிலேயே பிரிவினைகள், ஒரு புறம் மார்க்சிய, லெனினியத் தலித்துகள். மறுபுறம் இந்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் பெண்கள். இது சிதைந்து ஒலிக்கிறது. போதாமல் ஒலிக்கிறது. சாதீயப் பேச்சுக்கள், உரையாடல்கள், கருத்து வெளிப்பாடுகள் தயக்கமின்றி நடைபெற வேண்டும். அம்பேத்காரின் பெயர்க்காரணம் முதற்கொண்டு தவறாய்ப் புகட்டப் படும் கல்வியைச் சீர்திருத்த வேண்டும். தலித்துகளின் சமூகப் பங்களிப்புகளை அயோத்தி தாச பண்டிதருடையது புதைக்கப் பட்டது போல் புதைக்கப் படக்கூடாது. மனு தர்மம் பெண்களுக்கு இடும் எட்டு வயதில் கல்யாணம், ஆடவனோடு தனித்திருக்காதே போன்ற கட்டளைகளும், கீதையில் சொல்லப்படும் "போரிடாவிட்டால் கீழ்க்குலத்துக்காரர்கள் உங்கள் மனைவிகளைத் திருமணம் செய்வர்" போன்ற கருத்துக்களைத் தோலுரிக்க வேண்டும். மலைவாழ் பெண்களின் பிரச்சினைகள் இன்னும் சிக்கலானவை. இவையெல்லாம் பற்றிய விவாதம் நாளை நடைபெற இருப்பதாகக் கூறி முடித்தார்.

அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்தும், கனடாவிலிருந்தும் கலைக்குழுக்கள் வந்து மேடையில் ஜொலித்தார்கள். நிறைய சதிராட்டம் (இன்னொரு மாதிரி சொன்னால் பரதம்). சில நேரங்களில் கண்களில் நீர் திரள நெகிழ்ந்து போனேன். முக்கியமாய்ப் பிஞ்சுக் குழந்தைகள் அழகாய் ஆடிய போது. இவர்கள் நன்றாகவே தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். காலையிலும் மதியத்திலும் இந்த ஆட்டங்கள் நிகழ்ச்சி முழுவதிலும் ஆங்காங்கே விரவிக் கிடந்தன. இது கொஞ்சம் அதிகப்படியானதாகத் தெரிந்தாலும் மிகவும் ஆரோக்கியமான வளர்ச்சி. அதிலும் சிறார்களை மையப்படுத்துவது நம்பிக்கையைத் தருகிறது. இதில் எனக்கிருந்த ஒரு பெரும் குறைபாடு, அபரிமிதமான மத முத்திரை, கடவுள் துதி. அநேகமாய் எல்லாருடைய ஆட்டத்திலும் கண்ணன் வந்து வெண்ணெயைத் திருடினார், மார்கழியில் கோயிலுக்குப் போனார்கள், புதிதாய் ஐயப்பனும் களமிறங்கியிருக்கிறார், சில நேரம் குறத்தியோடு முருகன் வந்தார், உமையொருபாகன் காலைத் தூக்கியாடினார், ஆடுவோர் அருள் வேண்டினர். சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்திய குருதிப் பூ என்ற நாட்டிய நாடகம் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் இது மாதிரிதான். மதத்துக்கும் கலைக்கும் இருக்கும் இந்த முடிச்சை அவிழ்த்தெறிந்துவிட்டு, கலைகளை இழுத்து மக்களோடு பிணைக்க வேண்டும் என என் சிந்தை அரற்றிக் கொண்டிருந்தது. இதே ரீதியில் ஒரு செவுளறையைப் பிரபஞ்சன் கொடுத்தார், அதைப் பின்னர் சொல்கிறேன். அவ்வப்போது சில சினிமாப்பாட்டுக்களும் வரத்தான் செய்தன. மிஞ்சிப் போனால் ஐந்து இருக்கும். இது நான் பார்த்தது, எதிர்பார்த்ததை விட ரொம்பக் குறைவு. இதற்காக FETNAவுக்கொரு சபாஷ், பலே பலே.

பிறகு விழா மலரைப் பிரபஞ்சன் வெளியிட புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக் கொண்டார். அட்டையிலிருந்த உ.வே.சா மற்றும் ஈ.வெ.ரா ஆகியோரைப் பற்றிய சிறு கதைகளைப் பிரபஞ்சன் சொன்னார். அக்கதைகளை நேரப் பற்றாக்குறையால் நான் இப்போது எழுதவில்லை. இன்னொரு நூல் "திராவிட இயக்கங்கள்". இது பேராசிரியர் ஆண்டியினுடையது. நாற்பது ஆண்டுகள் திராவிட கழகங்களின் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த/கிடைக்காத உரிமைகளைப் பற்றிப் பேசும் நூல். இதைத் தந்தை ஜாஸ்பர் ராஜ் வெளியிட்டார்.

கடவுளையும், காதலையும் போற்றுவதைத் தவிர வேறு மாதிரியாகவும் கவிதையெழுதலாம் என்றபடி கவிதா நிகழ்விலே சேரன் மூன்று கவிதைகளைப் பாடினார். குரலா அது? ஆறாய் ஓட வேண்டிய இடத்தில் ஓடி, வீழ்ந்து, எழுந்து, இடியாய் இடித்து.
ஊரான ஊரிழந்தோம், ஒற்றைப்
பனைத் தோப்பிழந்தோம்
நாடான நாடிழந்தோம்
என்ற வரிகளைக் கொண்ட ஒரு கவிதை. நெஞ்சைத் தாக்கிய இன்னொரு நாளைப் பற்றிய இன்னொரு கவிதை, அதிலே பள்ளிப் பருவப் பயலொருவனின் இரவு நேரத்தையும், அவன் பலியாகிப் போன ஓரிரவின் இராணுவ அத்துமீறலையும் கேட்டு அரங்கம் உறைந்திருந்தது. அம்மாவிடம் அழாதே என்றொரு கவிதையில் தன் குழந்தையை விட்டுவிட்டு மரித்த ஒரு தந்தையின் குரல். அவனது அம்மாவுக்குச் சொல்கிறது, அழாதே அம்மா, கொடுமைகள் அழியப் போரிடச் சொல் என்று முழங்கியது. அப்புறம் ஒரு கவியரங்கம், காலம் என்ற தலைப்பிலே. நான்கு பேர் வாசித்தார்கள். உடனடிக் கவிதையென நினைக்கிறேன். நகைச்சுவையாகவும், அழகாகவும் இருந்தன. சில இடங்களில் அந்த விடலைப் பிள்ளைகளின் காதல் எட்டிப் பார்த்தது.

மாதங்கள் பன்னிரெண்டையும் பற்றிய ஒரு நாட்டியத்துக்குப் பிறகு பிரபஞ்சன் பேச வந்தார். பிரபஞ்சனின் பேச்சை முதன் முதலாகக் கேட்கிறேன். ஒரு தெளிந்த அமைதியான ஆழமான குரலும் செய்தியும். அந்த 12 மாத நாட்டியத்தில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சாமியைப் பற்றியும் அவரது பிரதாபங்களைப் பற்றியும் போற்றி ஆடினர். பேச வந்த பிரபஞ்சன் "உங்கள் மாதங்கள் ஆட்டம் மிக அருமை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு மார்கழியில்தான் நந்தன் என்ற கீழ்ச்சாதிக்காரன் கொல்லப் பட்டது நினைவுக்கு வந்தது, ஏகலைவனும், சம்போகனும் கொல்லப்பட்ட மாதம் எதுவென்று தெரியாது, காரைக்காலம்மையார் பேயுருக் கொள்ள நேர்ந்தது எந்த மாதம்... நீங்கள் போற்றும் பக்தியை மட்டுமின்றி இது மாதிரி மாதங்களையெல்லாம் உள்ளடக்கியதுதான் நம் வரலாறு" என்று ஆரம்பித்து சுமார் 1500 பேர்களையும் தன் கதைகளால் கட்டிப் போட்டார். இவர் சொன்ன கதைகளையெல்லாம் பின்னொரு நாள் சொல்லுவேன். அவர் சொன்ன முக்கியமான செய்தி, ஒரு ஊர்ல ஒரு நரி அத்தோட சரி என்ற உலகின் சின்னஞ்சிறு கதையை வைத்திருக்கும் நமக்குக் கதை சொல்லும் திறனுண்டு. ஆகவே கதைகளைச் சொல்லுங்கள், உங்கள் சமூகத்தின், வாழ்வின் கதைகளைச் சொல்லுங்கள், அவற்றை உம் சந்ததிகளுக்குச் சொல்லுங்கள், எழுதி வையுங்கள் என்பதுதான்.

பால்டிமோர் மேயரும், கவுன்சிலரும் வந்து பட்டாடை, சந்தன மாலை சார்த்தப்பட்டு, வாய்நிறைய புன்னகையும் வாழ்த்துமாய்ச் சென்றார்கள்.

பிறகு மாலை நிகழ்ச்சியின் இன்னொரு பேச்சாளராய் வந்திருந்தார், சம்பந்தன். திருக்கோணமலையின் பாராளுமன்ற உறுப்பினர். தமிழர் தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர். இலங்கையின் உரிமைப் போரைப் பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பைத் தந்தார். கண்டி, தமிழ், சிங்கள மன்னர்களின் துண்டு துண்டாய் ஆளப்பட்ட குறுநிலங்களில் ஆரம்பித்து, 1833ல் ஆங்கிலேயரால் ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை, 1947க்குப் பிறகு வல்லினவரசால் தகர்க்கப்பட்ட ஒருமைப்பாடு, குடியுரிமைச் சட்டங்களால் தமிழரின் உரிமை பறிப்பு, தமிழ்ப் பகுதிகளில் முயன்று நிகழ்த்தப்பட்டக் குடியமர்வுகள், பின்னர் தூண்டப்பட்ட இனவன்முறைகள், தொடர் இழப்புகளுக்குப் பின்னரேயே ஆயுதமேந்த வேண்டி வந்த நிர்ப்பந்தம் எல்லாவற்றையும் தன் முழங்கும் குரலால் சொன்னார். இன்று அமைதியான மக்களாட்சி வழியில் தம் உரிமைகளுக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களோடு ஒரு சமாதானத்துக்கு அரசு ஒத்துக் கொண்டதே புலிகளின் ஆயுத பலத்தாலேதான் என்ற போது கரவொலி அரங்கை நிறைத்தது. சமீபத்திய இந்திய அரசின் நிலைப்பாடுகளில் மாற்றம் இருப்பதாகவும், மேலும் ஆதரவு கிடைக்குமென்று நம்புவதாகவும் கரகோஷத்துக்கிடையே சொன்னார்.

இவரது உரை முடிந்து அடுத்து வந்த கச்சேரிக்குச் சில நிமிடங்கள் இருந்ததால், நிகழ்ச்சி அறிவிப்பாளர் வந்து "அப்படியே எல்லோரும் உங்க அருகருகே இருப்பவர்களோடு அறிமுகம் செஞ்சு நாலு வார்த்தை பேசுங்களேன்" என்ற போது என் முன்னால் ஒரு மதுரை அரசரடிக் காரருடனும், பின்னாலேயிருந்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவருடனும் கை குலுக்கிப் பேசினேன். அரங்கமே சளசளத்தது. என் இடப்பக்கம் ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு என்னவென்றால், ஒரு பாட்டியார் 80 வயதிருக்கலாம். அவரை அடுத்து இன்னொரு பெண்மணியார். தெற்கு புளோரிடாவிலிருந்து (சுமார் 800 மைல்கள் இருக்கலாமென நினைக்கிறேன்) இந்தப் பேரவைக்காகவே வந்தார்களாம். அந்தப் பெண்மணி என்னிடம் "நீங்க குறிப்பெடுக்கறதைப் பார்த்தா ஏதோ பத்திரிகையில எழுதுறவரு போலருக்கு, எங்களுக்குப் பெருமையா இருக்கு, எழுதுங்க, அப்படியே நாங்கள் எல்லாரும் எங்க ஊருக்குச் சீக்கிரமா போறத்துக்கு எதாச்சும் வழி செய்யச் சொல்லுங்க" அப்படின்னார். அந்த ஈழத்தின் வார்த்தைகளில் என் மனம் நொறுங்கி விழுந்தது. பிறந்த பொன்னாட்டைப் பற்றிய கனவுகளுடன் இங்கு பரிதவிக்கும் இவர்களுக்கு இந்த நிறையரங்கும், தமிழ் முழக்கங்களும் ஏதோவொரு வகையில் நம்பிக்கையைக் கொடுக்கும்.

மக்கள் இசைக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி, குடும்பத்தோடு வந்து தமிழ் என் அன்னை என்று ஆரம்பித்த கச்சேரியைச் சிரிப்பும், பாட்டும், கூத்துமாய்க் கொண்டு போனார். அவர் பாட்டுக்களும் இடையிடையே சிரிக்க வைத்துச் சொல்லிச் சென்ற தமிழிசை பற்றிய உண்மைகளும், இவர் தமிழிசையை மக்களுக்கு மீட்டுத் தருவதில் துடிப்பாயிருப்பதைக் காண முடிந்தது. கரகரப் பிரியாவோ அல்லது குறிஞ்சியோ அவற்றின் மூலத்தைச் சேற்று வயல்களிலிருந்தும், குடியானவர்களின் வாசல்களிலிருந்தும் தோண்டியெடுத்துக் காட்டினார். ஒவ்வொரு தமிழனும் பெருமிதம் கொள்ள வேண்டிய கலைஞர் இவர். தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்காகத் தனது குறுந்தகடு விற்பனையிலிருந்து வரும் தொகையை அளிக்கவிருப்பதாக அறிவித்தார். அதை வாங்கக் கூட்டத்தைப் பார்க்க வேண்டுமே! அய்யா எல்லாரும் வீட்டுக்கு கெளம்பனும்னு சொன்னதுக்கப்புறந்தான் கச்சேரி முடிஞ்சது. அப்போது மணி இரவு 11.30 இருக்கும்.

தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கு என்னை அறிமுகப் படுத்திய இவ் விழாவின் மிகுதி அடுத்த பதிவில்!

லிட்மசும், அந்தி மந்தாரையும்

பழைய நாட்குறிப்பைச் சில வருடங்கள் கழித்துப் படித்துப் பார்ப்பது ஒரு நல்ல(!) அனுபவம். இன்றைப் போலவே அன்றும் ஒவ்வொரு கணத்திலும் துடித்துக் கிடந்திருக்கிறோம். நிகழ்வுகளால் தூண்டப்படும், வீழ்த்தப்படும் ஏதோ ஒன்று நம்மை விட்டு நீங்காமல் கூடவே வருகிறது. இடம், குணம் கொஞ்சம் மாறுபட்டிருந்தாலும் பசி/சாப்பாடு மாதிரி அதுவும் தினசரிக் கூத்துதான். அமிலத்துக்கும் காரத்துக்கும் நிறம் மாறும் லிட்மஸ் (litmus) காகிதம் மாதிரி அது நிகழ்வுக்குத் தகுந்த மாதிரி நிறம் மாறுது. அன்றைய சுகமோ துக்கமோ இன்றைக்கு இல்லை, இன்றைக்கு வெவ்வேறு, ஆனாலும் அதே லிட்மஸ் காகிதம். இதைத்தான் உணர்வென்பதா? உணர்ச்சியென்பதா? வினைபடுதல் எனலாமா?

வேதியியலில் வினைபடுதலை யோசிக்கிறேன். ஒரு வேதிப் பொருள் வேகமாக வினைபுரிந்தால் நிலைக்காது. மாறிக் கொண்டேயிருக்கும். சுற்றியிருக்கும் காற்று, வெப்பம், ஈரப்பதம் இவற்றுக்கேற்ப இன்னொன்றாய், மற்றொன்றாய். எங்கு முடியலாமென்றால், எப்போது அது நிலைத் தன்மையை அடைகிறதோ அப்போது. அப்போது அதன் வினைபடுதலும் குறைகிறது. தங்கம், பிளாட்டினம் போன்றவையெல்லாம் இந்தக் காற்றில் அதிகம் வினைபுரிவதில்லை, மாறுவதுமில்லை. அதான் உயர்வாகக் கருதப் படுகின்றனவோ? (உயர்வு என்பது பொருள் மதிப்பைக் கொண்டா என்றொரு கிளைக்கதை ஆரம்பிக்குது. அதை அப்படியே விட்டுட்டு மேலே போறேன்.) அதனாலதான் பாரதியார் "ஏது நிகழினும் நமக்கென் என்றிரு" அப்படின்னாரோ? ஆனா கொஞ்சம் அசந்தாலும் ஆளை முழுங்குறதுக்குத் தயாரா அலையுறாங்களே அதுக்கு என்ன செய்வியாம்? அதுக்கும் பதில் அவரே வச்சிருக்கார் "யாதும் சக்தி இயல்பெனக் கண்டோம் இணையதுய்ப்பம் இதய மகிழ்ந்தே". வினைபடுதலும், படாதிருத்தலும் ஒரே இயல்புதான். இணையதுன்னா புடிச்சது. இன்றைக்குப் போரிட விரும்பினால் "நையப்புடை"ப்போம், அமைதி கவிந்தால் "மோனம் போற்று"வோம்!

சரி வந்ததுக்குப் பழைய பக்கமொன்றையும் பார்த்துட்டுப் போறீங்களா?
மார்ச் 2, 1998
ஒரு கட்டுரை படித்தேன். உடலினுள் ஒரு புலப்படாக் கடிகாரம். உயிர்ச் செயல்பாட்டைத் தன் கட்டில் வைத்திருக்கும். ஒளியால் இயங்குதாம் அம் மாயக் கடிகாரம். உதாரணமென்று சொன்னார், ஏதோவொரு தாவரம், ஒரு பூச்சி... எனக்குள்ளே அந்தி மந்தாரை பூத்தது. அம்மாச்சி வீட்டிலிருந்தது. மிளகு மாதிரிக் கரும் விதைகள். அம்மாவும் நானும் ஒருதரம் எடுத்து வந்தோம். துவைகல்லினோரம் ஊன்றினேன். ரோசாப்பூவின் வண்ணத்தையெல்லாம் முட்ட முட்டக் குடித்தது மாதிரி அபரிமித வண்ணத்தோடு ஒரு மாலை நேரத்தில் பூத்தது. பக்கத்து வீடு, தெருவெல்லாம் பின்னர் விதை வாங்கிப் போனது. go-go விளையாட்டு மாதிரி ஒரு சிந்தனை இன்னொன்றை, அது இன்னொன்றை, இப்படியே கிளப்பிக் கிளப்பி, ஓடி ஓடித் துரத்தித் துரத்திக் கடைசியில் எதனைப் பிடிக்க இத்தனை ஓட்டம்?