கூட்டல்நோக்கு+கழித்தல்நோக்கு

நிறமிலித் தண்ணீர்
நிறத்தைப் பெற்றது.

சுற்றிச்சுற்றிச்
சாயமிழந்து
அடியில் படிந்தது
தேயிலை வண்டலாய்.

எப்படிக் கூட்டிக் கழித்தாலும்
முக்கால் கோப்பைத் தேநீர்
மூன்று ரூபாய்.

கம்ப சேவை

சோழவள நாட்டில் மன்னார்குடி. மன்னார்குடிக்குப் பக்கத்துல தலையாமங்கலம். அங்க ரெண்டு வீடுகள். ரெண்டு தாத்தாக்கள். ஒரு பெரிய தாத்தா. ஒரு சின்ன தாத்தா. தாத்தாக்களுக்குப் பிள்ளைகள். பெரிய வளவு. வளவுன்னா காம்பவுன்டு. வளவுக்குள்ள ஒரு கோயில். கோயிலில பெருமாளு. பெருமாளுகிட்ட சீதையும் லெச்சுமணனும். காலுகிட்ட குந்தியிருக்கும் அனுமாரு. எல்லாருக்குமா சேர்த்து வருசம் ஒருதரம் கம்ப சேவை. அப்படின்னா என்னன்னு தெரியலயா? ஒரு திருவிழான்னு வச்சுக்கங்க. தீப்பந்தமெடுத்துகிட்டு தாத்தா ஊர்வலமா போவாரு. யானையும் போவும். வாலு மொளச்சு, மேலெல்லாம் ஊதாச் சாயம் பூசி ஆடிக்கிட்டு, வாழைப் பழத்தத் தூக்கி வானத்துல வீசி லபக்குன்னு வாயில புடிக்கிற அனுமாரும் போவாரு. நாங்க பின்னாடியே போவோம். ஊர்வலம் முடிஞ்சு சாப்பாடு. ராத்திரி நாடகம் லவகுசா இல்லன்னா வேறொன்னு. வருசா வருசம் அம்மாவும் நானும் போயிருவோம். இப்படியா கம்ப சேவை சின்னப்புள்ளயில கண்ட அழகுக் கதை.

மன்னார்குடிலேருந்து வடக்கே போனா கும்பகோணம். கும்பகோணத்துல ஒரு குளம். பன்னென்டு வருசத்துக்கொருதரம் அதுல குளிச்சா புண்ணியம். மேலே சொன்னதுல ஒரு தாத்தாவுக்குப் பிள்ளை ஒருத்தர். மாமா. மாமா கம்ப சேவை அன்றைக்கு எனக்குப் பணம் கொடுப்பார். பணத்துக்கு நுங்கு, பொரிஉருண்டை, ஊதல், கட்டையுருட்டு. அந்த மாமாவுக்கொரு பிள்ளை. மச்சான். கும்பகோணத்துக்குக் குளிக்கப் போனாங்க. அம்மாவும் தோழியும் குளிக்கப் போனாங்க. குளிக்க வந்தவுங்களப் பாக்க சனங்க போனாங்க. சனங்க காலுக்குள்ள மாட்டி மாமனும் மச்சானும் போனாங்க.

மேயப் போன மாடு

அப்பாடி... வந்துட்டேன். ஒன்னுமில்ல. இல்ல, ஒன்னு. ஒரு மீட்டிங். பேசனும். பேசினேன். அதுக்கும் முன்னாடி என்ன பேசுறதுன்னு தெரியனுமில்ல. அதுக்குப் படிக்கனுமில்ல. அதானாலயும் இத்தன நாளா எழுதாம திரிஞ்சேன். முடிஞ்சவுடனே இங்கதான் ஓடியாறேன்.

நீங்க மாடு மேய்ச்சிருக்கீங்களா? நானும் மேய்ச்சதில்ல. ஆனா எங்கப்பா நா சின்னப் புள்ளயா இருந்தப்ப அடிக்கடி கேப்பார், என்னடா மாடு மேய்ச்சுட்டு வர்றியா?ன்னு. ஒழுங்கா அதைச் செய்திருக்கலாமோன்னு இப்ப அடிக்கடி அசை போடுறதுண்டு. எங்க வீட்டு மாடெல்லாம் தெருவுல இருக்க நிறைய மாடுகளோட மேயப் போவும். அதாப் போவாது. ஒருத்தரு ஓட்டிக்கிட்டுப் போவார். அவருக்கு மாசம் அஞ்சு ரூவாயும் பொங்கலுக்கு ஒரு வேட்டி துண்டும். மாட்டுக்குப் புல்லும், குளத்துத்தண்ணியும். காலையில ஓட்டிக்கிட்டு போய்ட்டு சாயங்காலம் திரும்பி ஓட்டிக்கிட்டு வந்து விடுவார். மாடெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து சின்ன ரோடுகளில் வர வரப் பிரிந்து தத்தம் வீடுகளுக்கு (அதாவது மாட்டின் சொந்தக்காரர் வீடுகளுக்கு) ஓடி வரும்.

அட சொல்ல வந்ததை வுட்டுட்டு எங்கயோ போறேன். என்ன சொல்ல வந்தேன்னா, அந்த மாடெல்லாம் மேஞ்சுட்டு வீட்டுக்கு ஒரு ஓட்டமா வரும் பாருங்க அது மாதிரி என்னோட வேலை முடிஞ்சதுக்கப்புறம் நம்ம வலைப்பதிவ நோக்கி ஓட்டமா ஓடியாந்தேன். எல்லாத்தையும் அலசனும். சில நேரம் படிக்கிறதா எழுதுறதான்னே புரியாது. எழுதலாம்னு நெனச்சு வர்றப்ப படிக்க ஆரம்பிச்சா எழுத நேரமிருக்காது இல்லன்னா படிச்சதுகளோட பாதிப்புல நம்ம எழுத்தின் வடிவம் மாறிப்போயிரும். வலைப்பூவில Nameகாரர் சொல்லுறதும் நல்லதாத்தான் படுது. மொத படிங்க. அப்புறமா எழுதுங்க. படிக்கலாந்தான். முடிஞ்சாத்தானே. அன்னிக்கு அப்படித்தான் ரெண்டு புத்தகங்களை எடுத்துக்கிட்டு வந்தேன், நூலகத்திலிருந்து. நாலு பக்கம் படிச்சதோட இருக்கு. வள்ளுவன் சொன்ன மாதிரி சின்ன சின்னதா இருந்தாலும் மொத்தமா பாரத்த ஏத்துனா அச்சு முறிஞ்சுடுமோன்னு பயம். இந்த பயத்துலதான் மரத்தடி டீக்கட பக்கமெல்லாம் போறதில்ல. பாப்போம். மனுசனுக்கு நேரமே கிடைக்காமயா போயிறப் போவுது.

அன்றைக்கு அப்படித்தான் என் நண்பன் கேட்டான், என்னடா மூனு நாளா எழுதாம இருக்கியே, சரக்கெல்லாம் சேர்ந்திருக்குமே, நாளைக்கு நிறைய எழுதுவியா அப்படின்னு. நாஞ்சொன்னேன், இல்லடா, அது நேத்தைய வெயில், நீ காயலன்னா மறுபடியும் வராது. போனது போனதுதான். இன்னிக்குப் புது வெயில். ஆனாலும் பாருங்க சில கருக்கள் சூல் கொண்டுவிட்டால் பிள்ளை பெக்குற மாதிரிதான், கொஞ்ச கொஞ்சமா வளந்துகிட்டே இருக்கும். அதை என்னைக்காச்சும் பிரசவிக்கிற வரைக்கும் உள்ளதான் இருக்கும், வளரும், உருமாறும். சிலநேரங்களில் காலம் அடுக்கடுக்காய் வீசும் மண்ணில் புதைந்து காணாமலேயும் போகும். எப்புடியோ நாம எழுதணும். என்ன சொல்றீங்க?
இப்படியாக நான் திரும்பி வந்திருக்கிறேன்.

வளர்சிதை

கிடக்கும் குச்சியைக் கல்லை
துணி சுத்திய மரத்துண்டை
விரி வானைக்
கேள்வி கேட்க, அவை
கேளாக்(?) கேள்விக்கு
விடையிறுக்க
யாரும் துரத்தாமல் ஓட
காரணமின்றிக் குதித்துச் சிரிக்க...
முடிகிறதா இப்போது?
வளர்வெனும் மயக்கில்
ஓட்ட வெறியில்
உதிர்ந்த சிறகுகள்
உதிர்ந்தவைதானா?


தாய்மொழி

இன்றைக்கு என்ன தினம்? போன வாரம் நம்மகிட்ட இதே கேள்வியைக் கேட்டிருந்தால் கண்ணு படபடத்திருக்கும், இதயம் தடதடன்னு ஓடிருக்கும். ஆனா இன்றைக்கு என்ன தினம்னு செய்தி பார்க்கும் வரை எனக்கும் தெரியாது. பிப்ரவரி 21 சர்வதேச தாய்மொழிகள் தினமாம். UNESCO 1999ல அறிவிச்சதாம். உலகத்துல 6000க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்காம். இதுல 95% மொழிகளைப் பேசுறது 4% க்குக் குறைவான மக்களாம். செத்துக்கிட்டு இருக்க மொழிகள் அனேகம்ங்கறது தெரிஞ்ச கதை. இந்த எடத்துலதான் UNESCO சொல்லுது, புள்ளைகளுக்கு உங்க தாய்மொழில சொல்லிக்குடுங்க. கூடுதலாயும் மொழிகளைக் கற்றுக் கொடுங்கள், பிராந்திய அல்லது சர்வதேச மொழிகளை. இதன் மூலம் நாம மொழியப் பாதுகாக்கலாம், குழந்தைகளை மொழித்தடங்கலில்லாமல் அறிவுலகுக்குள் அழைத்துச் செல்லலாம்.
இதைப் பற்றி மேலும் படித்து எழுத ஆசைதான். இப்போதைக்கு முடியவில்லை. மேலதிக விபரங்களுக்கு இங்கே சுட்டுங்கள்:

http://portal.unesco.org/en/ev.php@URL_ID=18626&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html

பட்டறி

கடந்தகடலில் உன்காதல் கரையவேண்டும்
காத்துவைத்த நூலெல்லாம் கருகவேண்டும்
அரிவாளும் கத்தியுமாய் ஐம்பதுபேர்
அர்த்தராவில் உன்கதவை யுடைக்கவேண்டும்
நாளாறு கழிந்து கிணற்றிலுன்
நங்கியின் பிணம் நாறவேண்டும்
குத்துப்பட்டுக் குடல்சரிய உன்
கணவன் உன்முன்னே வீழவேண்டும்
உள்ளேயோ வெளியேயோ நீயிருக்க
உன் தொழிற்கூடம் எரியவேண்டும்
வெளியேபோன தம்பியு மப்பனும்
வரக்கூடாது வரவே கூடாது
செறுப்புங் காசுமிழந்து நீ
தெருத் தெருவாய்த் திரியவேண்டும்
திருட னென்றும் வேசியென்றும்
பொய்யேச்சு வாங்க வேண்டும்...

இத்தனையையும் நீ பார்க்கவேண்டும்
அப்புறமாய் நீபேனா எடுக்கவேண்டும்
அப்போது போடுவாயா விட்டைச்சட்டம்?
அப்போதெழுதுமா உன்கைப் பொய்ச்சாத்திரம்?
என்தோலும் உன்தோலும் வெவ்வேறுதான்
என்தோலை யணிந்துபார் அப்போதேனும்
சூட்டின் வலி தெரியலாம்
சிறிது சுரணையும் வரலாம்

நாயாய்ப் புழுவாய்ப்பன்றியாய்ப் பிறக்காமல்
மனிதருள் மனிதராய்ப் பிறந்து
நலிந்துகெட்ட கொடுவாழ்வு நெடிதுவாழ
முனியாயிருந்தா லுன்னைச் சபித்திருப்பேன்
ஒன்றுமிலாத் தமிழன்நான்
கவிதைமட்டு மெழுதிவிட்டேன்.ஒரு கொலைக் குறிப்பு

கொஞ்சம் இளகின மனசுக்காரர்கள் இதைப் படிக்க வேண்டாம். இல்ல, படிங்க. கொஞ்சம் கெட்டிப் படவும் வேணுந்தான்.

எனக்குக் கொலை செய்வதில் பெரும் விருப்பம் ஏதுமில்லை. சின்னப் பிள்ளையில் கரட்டான்களை அவ்வப்போது அடித்தது உண்மைதான். அதுல கூட 18 வயசுல ஒரு கரட்டான அடிக்கப் போயி அது என் கண்ணுக்கு ரொம்ப முன்னாடி துள்ளிவந்து துடிச்சுச் சாக, அந்தக் கலிங்கத்துல யாரோ ஒரு துறவி புத்தம் சரணம் கச்சாமின்னுகிட்டே நடக்க நானும் இனி கரட்டான்களை அடிக்கிறது இல்லன்னு முடிவு பண்ணினேன். யாருக்குத் தெரியும் விதி இன்னும் சில வருடங்களில் வேறு விதமாக என்னைக் கொலைகாரனாக மாற்றப்போவது பற்றி.

முதன் முதலாக நான் பயிற்றுவிக்கப் பட்டேன். எங்க கூட்டத்துல ஒரு ஆள். இப்போ பெரிய ஆள். கூட்டிக்கிட்டு போனார். தோ அதான் அப்படின்னார். புடிச்சுக்கிட்டு வந்தாங்ய. பெரிய சிரிஞ்சோட ஊசிய எடுத்து நெஞ்சுல பாச்சி, கிட்டத்தட்ட 50 மிலி ரெத்தம் வந்ததும் அது தலையச் சரித்தது. ராமுளுக்க அந்த வெள்ளை முயல் நினைப்புத்தான். இப்படியாகத் தொடங்கின ஆராய்ச்சிக் கொலைகள் முயல், எலி, சுண்டெலின்னு ரெக்கை விரிச்சு கடைசியில கோழி ரெக்கையில போயி நின்னுச்சு. கோழிகளைக் கொல்றது இல்லை. முட்டைகளைத்தான். அப்புறமா ஒரு நாலு வருசம் கொல்லாமை என் மேல் திணிக்கப் பட்டது. கொன்னு செல்லெடுத்துக் குடுக்க ஆளு இருந்துச்சு. அதுனால.

இப்போ இடமும், வேலையும் மாறிப் போச்சு. மறுபடியும் கொலை. முயல். சுண்டெலிகள். கொடுமை என்னன்னா சில நேரம் உடம்பெல்லாம் பச்சை நரம்பு தெரியும் குட்டிகள் மேலயும் கை வைக்கனும். கொல்லுறதுலயும் கொஞ்சம் இரக்கத்தோட கொல்லனுமாம். எப்படி வலிக்காம கொல்லுறது. இதோ இந்த halothane அறையில கொஞ்ச நேரம் விட்டா தூங்கிரும். தூங்கயில கழுத்தறுக்கனும். இப்படி ட்ரெயினிங் வேறு.

இப்போதைய உயிரியல் ஆராய்ச்சிகள்ல முடிஞ்ச வரைக்கும் வளர்த்த செல்களைத்தான் பயன் படுத்துறாங்க. ஆனாலும் அதுகளைக் கொண்டு மட்டுமே எல்லா விடைகளையும் பெற்றுவிட முடியாது என்கிற காரணத்தைக் காட்டி இந்தக் கொலைகளை நியாயப்படுத்த முனைகின்றன மனசும் ஆராய்ச்சிக் கட்டமைப்பும். நானில்லை என்றாலும் யாரேனும் கொன்று கொண்டேதானிருப்பார்கள். இவர்களுக்கு (என்னையும் சேர்த்துத்தான்) நிறைய வாழ்க்கைக் குறிக்கோள்கள். அவற்றுக்கு இத்தனை பலிகளும் அவசியம். காசுக்காக ஒரு வேலை என்கிற மனக்கிலேசம், மனம் இரண்டுபடுதல் ஆகியன இத்தகைய தருணங்களில்தான் மேலோங்கி நிற்கும். சித்தர்கள் எப்படி அத்தனையும் கண்டு பிடித்தார்கள். ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியன் அப்படீங்கறத யாரோ அது பேரை இல்லடா வேரை அப்படீன்னாங்க. பேரோ வேரோ, அந்த அறிவே தனி. தற்போதைய ஆராய்ச்சி முறைகள் அதுமாதிரியான மெய்யறிவைப் புறக்கணித்துவிட்டதா அல்லது சித்தர்களுக்குத் தெரியாத சங்கதிகளை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறதா? புரியலயே.

எல்லாம் சரி மாதிரியும் இருக்கு. அதுகளே தப்பு மாதிரியும் இருக்கு. நல்லது தீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக தீமையை ஓட்டுகன்னு பாட்டு வருது. பாட்டுக்குப் பின்னாடியே, டோய் அன்னை நீதான்டா, நாட்டுறதும் ஓட்டுறதும் நீதான்டான்னு ஒரு வசனமும் வருது. என்னமோ என் பொழுது இப்படிச் சாகுது. பாக்கலாம்.

ஒரு பயணக் குறிப்பு

காருல போயி
ப்ரூஊ...
பஸ்ஸுல போயி
அங்க
ச்சூச்சூ ரயில் இருந்துச்சு
அதுக்கு எஞ்சின் இருந்துச்சு
குதிரை வண்டி போனுச்சு
ரெண்டு கருப்புக் குதிரை
அங்க ஒரு ஆத்துல
வாத்தெல்லாம் நீச்சலடிச்சுச்சு
அப்புறமா
மஞ்ச பஸ்ஸுல ஏறி வந்தோம்ல...

ஒரு பயணத்தைப் பற்றிக்
குழந்தையிடம் பேசுவது எளிது.

Caution! இன்னொரு பெயர்க்குழப்பம்

பாலாஜி, பரி, பாரி மாதிரி இன்னொரு பெயர்க்குழப்பம் வந்துடக்கூடாதுங்கற ஒரு எண்ணத்துலயும், ஒரு நல்ல கவிஞர், கதையெழுத்தாளருக்குச் சேரவேண்டிய மாலையைப் பொன்னாடையைப் பெயர் மயக்கத்துல யாரும் தப்பா எனக்குப் போட்டுடக் கூடாதுங்கற இன்னொரு எண்ணத்தாலயும் சொல்லுறேன்,

மரத்தடியில சுந்தர் அப்படிங்கற பேருல எழுதுறது நான் இல்லை. இல்லை. இல்லவே இல்லை. நான் வலைப்பூக்கள்ல எங்கயாச்சும் கருத்துப் பெட்டியில சுருக்கம் கருதி சுந்தர்னு என் பெயரை எழுதிக்கிறது உண்டு. நண்பர்களும் அதே காரணத்துக்காக சுந்தர் என்று விளிப்பதுண்டு. இனிமேல் நான் சுந்தரவடிவேல்னு நீளமாவே இருக்கேன். தேவை ஏற்பட்டால் கரம்பக்குடி சுந்தரவடிவேல் பாலசுப்ரமணியன் அப்படின்னும் ரயில் விடுறேன்.

அப்புறமா, மரத்தடி சுந்தர் அழகா எழுதுறார். நல்ல கவிதைகள். அப்பாவின் சைக்கிள் என்றொரு கதை. இவருடைய பார்வை ரொம்பக் கூர்மை எனத் தெரிகிறது. எனவே நண்பர்களே, நான் எழுதி வரும் கடந்த சில மாதங்களில் மரத்தடி சுந்தர்தான் இவர் என்று யாரேனும் என்னைத் தப்பா பாராட்டியிருந்தா, மாலை போட்டிருந்தா, தயவுபண்ணி வந்து சொல்லி எடுத்துக்கிட்டு போயி அவருக்குப் போட்றுங்க. கோச்சுக்க மாட்டேன். சரியா?! :)

ஒரு பழைய தேர்வுத்தாள்

பாகம் ஆ
சுருக்கமான விடையளி
(3 x 2 = 6)

1. கற்பனையின் விளைவுகள் யாவை?
2. ஆராய்ச்சி என்பது கற்பனையிலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை என்பதற்கு விளக்கம் கூறுக.
3. உண்மை என்றால் என்ன? அதன் குணங்கள் யாவை?

விடைத்தாள்

பெயர்: ப. பொட்டியாண்டி
வகுப்பு: 7 ஆம் வகுப்பு ஆ பிரிவு

விடைகள்
1. காசிக்குப் போகலாம்
கவிதை வாங்கலாம்
ஒண்ணுமில்லாமலே
ஒலகம் சுத்தலாம்
பிரியாணி வாங்கலாம்
பசிய மறக்கலாம்
சுரண்டச் சுரண்டச்
சுரணையில்லாமக் கெடக்கலாம்
காசக் கேக்கக்
கடங்காரன் வரமாட்டான்
நெனக்க மாளல
நிம்மதியா இருக்கலாம்.

இப்படி எழுதின விடையை அழித்துவிட்டு, இப்படி எழுதுகிறான் பொட்டியாண்டி

1. ஒரு பொட்டி இருக்கும். கேக்குறது எல்லாம் அதுக்குள்ள இருக்கும்.

2. மூடுன பொட்டிக்குள்ள என்ன இருக்கும்னு யோசிக்கிறது, தொறந்து பாக்குறது ஆராய்ச்சி. மூடுன பொட்டிக்குள்ள இது இருந்தா, அது இருந்தான்னு நெனச்சுக்கிறது கற்பனை. இது ரெண்டையும் தாண்டி ஒன்னு இருக்கு. பொட்டி மூடிக்கிடந்தா என்ன, தொறந்து கெடந்தா என்ன, அல்லது பொட்டி இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன அப்படின்னு போறது. அதுக்குப் பேரு சவம். அல்லது ஞானப்பழம்.

3. உண்மை என்பது, அதான் அந்த மூடுன பெட்டிக்குள்ள இருக்கது. நீ பாத்துட்டுப் போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டேதான் இருக்கும்.


பி.கு: இது ரெண்டு வருசத்துக்கு முந்திய பாடத்திட்டத்துல இருந்த பதில்கள். அப்ப பையன் இப்படித்தான் எழுதியிருந்தான்.அப்போதைய பாடத்திட்டத்துல கவிதைக் கற்பனையின் விளைவு என்றுதான் இருந்திருக்கிறது. அது ஆராய்ச்சியின் வெளிப்பாடு என்று கருதவும் இடமுண்டு. இப்போதைய பாடத்திட்டத்துல வேற பதில்கள் இருக்கான்னு யாராச்சும் சொல்ல முடியுமா?

உள்ளது

பாதையிட வகிர்ந்தெறியப்
பாறையின் நெடுக்குவெட்டில்
வெளித்தெரியா வரலாறு
வரிகளாய் இறுகி.

வரிவரியாய் இறங்கி
மண்ணைப் புல்லை
செத்ததைப் புதைந்ததை
உளுத்ததை உரத்தை
விரல்தடவி இனங்காண
வேரின் ஈரத்தில்
நனைந்த மார் ஓரடுக்கில்.

என்னிசை

எனக்கு இசையைப் பத்தி ரொம்பத் தெரியாது. சின்னப் பிள்ளையா இருந்தப்ப அப்பா ஒரு வால்வு ரேடியோ வாங்கிட்டு வந்தார். போட்டு ரெண்டு நிமிசம் கழிச்சு பச்ச லைட்டு எரிஞ்சு அப்புறமா பாடும். ஓட்டுல ஏரியல்னு ஒரு கம்பி வலை கட்டிருக்கும். அதுல பல்லி ஓடுனா ரேடியோ கர்ர்ர்ன்னு கத்தும். அப்பா எப்போதும் ரேடியோ போட மாட்டார். செய்திக்கு மட்டும். அக்காக்களும் நானும் சினிமாப்பாட்டுக்கு அலைவோம். பக்கத்து வீட்டில் விவிதபாரதி பாடும். எங்க ரேடியோவுக்கு அந்த எடுப்பு ஞானம் இல்ல. ஓசிப்பாட்டு கேக்குறதோட சரி. ஆனா ஞாயிறு முழுக்க மணிமலர், சூரிய காந்தி, நீங்கள் கேட்டவை, நாடகம்னு விடாம கேப்போம். பழசு.

தேர்ந்தெடுக்கும் வசதி வந்ததுக்கப்புறமும் நான் எதையும் பெருசா தேர்ந்தெடுத்துக் கேக்குறதில்ல. காதுல விழறது எல்லாத்தையும் கேக்குறதுதான். சும்மா காட்டுக்கத்தல்னு பேசிக்கிற மேலைச் சங்கீதத்துல இருக்க உண்மையும், தெய்வீகம்னு சபாக்கள்ல நாறுற சங்கீதத்துல இருக்க போலியும், எல்லாம் இந்தக் காதுக்குச் செல்லும். போற ஊர்ல எல்லாம் எதாச்சும் வாங்குறதுதான். ஆனாலும் நாட்டுப்புறப் பாட்டுகள் மேல எப்போதும் ஒரு மயக்கம். நடவு காலத்துல வயல் பக்கம் போனா ஒவ்வொரு வயலுலயும் ஒரு பெரிய கச்சேரி நடக்கும். அந்த ஈரக்காத்துலயும், சேத்து மணத்துலயும் கேக்குற பாட்டு வேற சாதி. சின்ன வயசுல கேட்ட கொல்லங்குடி கருப்பாயி பாட்டுக்கள் பிடிக்கும். ஒரு தரம் எங்க கல்லூரிக்கு விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் ரெண்டுபேரும் வந்தாங்க. ஆடிப் பாடிக் காமிச்சாங்க. அப்புறம் ஒரு விடுதிக் கொண்டாட்டத்துக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி "தமிழ்ல பாடுனா குத்தம்கிறான். நீ என்ன இங்கிலீசுக் காரனுக்கா பொறந்தே?"ன்னு பேசிட்டுப் போனார். இவரோட கச்சேரி ஒன்னைத் திருவான்மியூரில ராப்பட்டினியோட பாத்துக்கிட்டு இருந்தப்ப அய்யனாரு பாட்டுக்கு ரெண்டு பொம்பளங்களுக்குச் சாமி வந்து ஆட. நிற்க.

நாட்டுப்புறப் பாட்டுக்களின் மேலிருந்த ஆசை போன வருசம் ராம்ஜி நாட்டுப்புற ஆராய்ச்சி மையத்திலிருந்து (51/23 பாண்டிய வேளாளர் தெரு, மதுரை-625 001, தொலைபேசி 233 3535, மாறியிருக்கலாம்) கொஞ்சம் பேழைகளை வரவழைத்தது. தெரிந்தவர்களின் பாடல்களோடு 'மக்கள் பாடகர்' மதுரை சந்திரன், கோட்டைச்சாமி ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர ராஜன், கிடாக்குழி மாரியம்மா என்று நிறைய புதுக் குரல்களைக் கேட்டேன். இது என் குரல். என் மக்களின் குரல். இதுல ஜிகினா சுத்தி செண்டு தெளிக்கல. என் மண்ணு. ஏமாந்த ஆதங்கத்தை, புறக்கணிப்பின் வலியை, போராடுவோம்கற வெறியை அப்புடியே அள்ளி மூஞ்சியில அடிக்கும் பாட்டுக்கள் நிறைய. இதைக் கேக்கணும். தோல் காது இருக்கும் தேசத்துல (பாரதி) இதையும் கேக்கணும். இதுக்கு மேலயும் பாட வக்யனும். அதுதான் நம்மோட, நமதே நமதான இசையக் கண்டு பிடிக்க உதவி செய்யும்.
இதை எழுதத் தூண்டிய பெயரிலிக்கு நன்றி!

கே.வி சார்

காலையில் எழுந்ததும் உட்கார்ந்து எழுதுவது சுகம். எதையும் படித்து எந்தக் கருத்தையும், செய்தியையும், வடிவையும் ஏற்றிக் கொள்ளாமல் மனசை இறக்கி வைப்பது மாதிரி இருக்கும். இலகுவாயும் இருக்கும்.

எனக்கு இவரப்பத்தி எழுதனும்னு ரொம்ப நாளாவே தோணிச்சு. ஆனா நேத்து ஒரு பொறி அதைத் தூண்டிருச்சு. எங்க ஆய்வகத்துல ஒரு பிரெஞ்சுக் காரன் இருக்கான். நல்ல நண்பன். நேத்து காபி குடிக்கும்போது பக்கத்திலிருந்த உலக வரைபடத்தைப் பாத்துட்டு (செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் எல்லாச் சுவர்களிலும் இது ஒட்டிக் கொண்டது), ஏனோ உலகின் சின்ன நாடுகளப் பத்திப் பேச்சை ஆரம்பிச்சேன். ஒரு நகரம்-ஒரு நாடான மொனாக்கோ (Monaco) வப் பத்திச் சொன்னான். என்னமோ உள்ள ஒரு பொறி, Monte Carlo, a French gambling centre... அப்படின்னு 11 அல்லது 12 வது வகுப்பில படிச்ச கதையொன்னுல (சிந்துபாத் என நினைக்கிறேன்) வரும். அ...அதான் மொனாக்கோவோட பழைய பேருன்னான். இந்த வார்த்தைகளை மனதில் பதித்தவரைப் பத்திச் சொல்லனும்னு ஆசையா இருக்கு.


கேவி சாரை உங்கள்ல நிறைய பேருக்குத் தெரியாது. கே. வெங்கடாசலம். செங்கோட்டைக் காரர். ஒரு புதுக்கோட்டை மாவட்ட கிராமத்துப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் திருநெல்வேலித் தமிழைக் கேட்டது அவரால்தான் சாத்தியமானது. அந்தப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குக் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்ததும் அவரால்தான்.

எனக்கு ஒன்பதாவது வகுப்பிலிருந்து பன்னிரண்டாவது வரை ஆங்கிலம் கற்பித்தவர். அழகான இந்தக் காலத்திற்கு அவரது இருப்பு ஒரு முழுமையைச் சேர்த்ததாக இப்போது எண்ணுகிறேன். நன்றாகப் பாடம் நடத்துவார். கண்டிப்புக் காரர். பாடம் முடிந்தவுடன் அதற்கான கேள்வி பதில்களைத் தாமே கைப்படக் கரும்பலகையில் எழுதிப் போடுவார். அழகான கையெழுத்து. சிலரைப் பார்த்தவுடன் அவரை மாதிரி எழுதவேண்டும் எனத் தோன்றுமல்லவா. அதுபோலத்தான் எழுத்து வடிவமின்றிக் கிறுக்கித் திரிந்துகொண்டிருந்த எனக்கு அவரது கையெழுத்து ஒரு முன்மாதிரி. அவரை மாதிரி எழுத ஆசைப் பட்டேன். எழுதவும் செய்தேன். உன் கையெழுத்து அழகாயிருக்கிறது என்று யாரேனும் சொன்னால் அந்தப் பாராட்டெல்லாம் இவருக்கே. (தமிழ் எழுத்து வடிவமும், பாராட்டுக்களும் மலையாண்டி ஐயாவுக்கு. அதுவும் இதே காலத்தில்தான் உருப்பெற்றது). அவர் அதிகமாய் யாரையும் அடிக்க மாட்டார். செத்த பயக்கா என்று திட்டுவதோடு சரி. ஒரு நாள் வகுப்பின் நடுவில் இவர் எங்கேயோ போக, நான் போய் அவர் நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ அட்டகாசம் செய்ய, திரும்பி வந்தவர் தலையைப் பிடித்து வளைத்து முதுகில் ஒரு அடி விட்டார். அது மட்டும்தான். பாராட்டும் வெளிப்படையாய் வராது. ஒரு நாள் இடம் மாறி உட்கார ஐம்பது பேருக்கு நடுவில் அங்குமிங்கும் தேடிவிட்டு, எங்கல அவன சுந்தரவடிவேல, ன்னதுதான் எனக்குக் கிடைச்ச பெரிய பாராட்டு.

என் வகுப்புப் பிள்ளையொருத்தியின் கண்வீச்சும், என் குறிப்பேட்டில் சிவப்பு மையால் இவர் சரி என்று போடும் 'டிக்'கும் ஒன்றையொன்று சார்ந்தே அந்நாட்களில் உள்ளிறங்கின மாதிரி ஒரு பிரமை. நான் ஆங்கிலத்தில் எழுதும் காலம் வரை அவர் நன்றியுடன் நினைவு கூரப்படுவார்.

சமாதானம்

மனைவிக்கு:
நேற்று
உள்ளே விழுந்து
நம் பையனுக்கு
நல்ல அடி.

நிரவலாமா
உனக்கும் எனக்கும்
நடுவே கிடக்கும்
பள்ளத்தை?

கிரிக்கெட்டே, பாழாய்ப் போ!

விளையாட்டு. எது விளையாட்டு? பளிங்குக் குண்டுகளை உருட்டி, கிட்டியை அடித்து, நொண்டியடித்தோடி, கண்ணாமூச்சி ஆடி, கால்பந்தாடி, ஓட்டப்பந்தயம் வைத்து...இப்படித்தான் நான் விளையாடினேன். அது என் குழந்தைப் பருவம். டேய் கிட்டிப்புள்ளுதான் கிரிக்கெட்டுன்னு விளயாடுறானுக அப்படின்னு எட்டாங்கிளாஸ்ல மூனு குச்சிய வச்சு ஆடுற வரைக்கும் இவைகள்தாம் எம் விளையாட்டு. இப்படித்தான் என்னோடு சேர்ந்த எல்லாப் பயல்களும் பொண்ணுகளும் ஆடினார்கள். இதுல பால் வித்தியாசமில்ல. இதுகள்ல சந்தோசம் இருந்துச்சு. கிரிக்கெட் நெய்வேலிக் காட்டாமனிச் செடியும், கருவேலமுள்ளும் மாதிரி எங்க ஊர்லயும் பரவ, கிரிக்கெட் பயித்தியம் எங்களுக்கும் புடிச்சிருச்சு.

இப்ப யோசிக்கிறேன். இந்த மூனு குச்சி ஆட்டம் எந்த வகையில் என்னோட ஊர் விளையாட்டுகளை விட உசத்தி? அதுகள்ல இல்லாத சந்தோசம் இதுல இருக்கா, உடற்பயிற்சி இருக்கா, மூளைக்கும், உடம்புக்கும் ஒவ்வொரு செல்லாப் பாத்து வேலை குடுக்குற திறன் இருக்கா? அது எல்லாத்துலயும் இல்லாத பரிணாம வளர்ச்சி பெற்ற புதுச்சிறப்பு என்ன இருக்கு இந்த கிரிக்கெட்டுல? பயலுக எல்லா விளையாட்டையும் கொன்னு புதைச்ச சவப்பெட்டியான டிவிக்கு முன்னால பழியா கிடக்குறானுக. இந்த கிரிக்கெட்டை விளையாடுறது ஒரு மணி நேரம்னா அதைப் பாக்குறதுக்கு இவன் செலவு பண்ணுறது ஒரு நாள். இது என்ன 'எகானமி'ன்னு தெரியல. கல்லூரில எங்க பாத்தாலும் இதே பேச்சு, பாதிப் பேர் வகுப்புல இருக்க மாட்டான். ஆபீஸ்ல இதே பேச்சு, எவனப் பாத்தாலும் என்ன ஸ்கோரும்பான். இதுக்கு நல்ல பதில் கேள்வி கேட்டது தீப்பொறி ஆறுமுகந்தான் (அவரு கை ரேடியோவில செய்தி கேட்டபடி போக ஒருத்தன் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்க, "எந்த ஸ்கோரைடா கேக்குற, ங்கொப்பன் ங்கோ...போட்ட ஸ்கோரையா?"). அங்கே பதினோரு முட்டாள்கள் ஆட இங்கே பதினோரு லட்சம் முட்டாள்கள் சூதாடுகிறார்கள். அதுக்கு ஆட்டக்காரனும் உடந்தை.

இத்தனை இகழ்ச்சிகளுக்குமுரிய கிரிக்கெட் கண்றாவியை வளத்தெடுக்க பத்ரி மாதிரி ஆக்க சக்திகள் விரயம். எங்க போய் முட்டிக்க, பத்ரி சார்? அதுவும் பிஞ்சுலேயே கிரிக்கெட் நஞ்சை ஊட்டனும்னு நீங்க குடுக்கற ஐடியாவுக்கும், சங்கர் (சுவடுகள்) சொன்ன தொலைக்காட்சி விளம்பரத்துக்கும் என்ன வித்தியாசம்னு தெரியல. என்னென்னமோ உருப்படியா எழுதுற நீங்க, இப்படி ஒரு முள்ளுச் செடிக்குப் பால் ஊத்தி வளக்குறதப் பார்த்து மனசு பொங்குது. வேதனையா இருக்கு. உங்கள மாதிரியானவர்களோட நல்ல முயற்சிகளையெல்லாம் ஏன் கிராமப்புற விளையாட்டுக்களையும் (அதுகளை மட்டும்னு சொல்லல), ஆதரிப்பதா இருக்கக் கூடாது? கபடி, கால்பந்து, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், இதுகளுக்கெல்லாம் இங்கிலாந்துலேருந்து மரமும் மட்டையும் வேணாமே. காசே வேணாம், அல்லது ஆளுக்கு ஒரு ரூவா போட்டா நல்ல பந்து வாங்கலாமே. எல்லாரும் அழகா விவேகானந்தர் சொன்ன மாதிரி கால்பந்து விளையாண்டு உள்ளிலும் வெளியிலும் ஆரோக்கியமா இருக்கலாமே. ஒலிம்பிக்குலயும் ஒரு பில்லியனுக்கு ஒரு வெண்கலமுன்னு நாக்கப் புடுங்கிக்காம இருக்கலாமே.

பிள்ளைகள் எல்லா விளையாட்டுக்களையும் விளையாடப் பள்ளிகளிலும், வீடுகளிலும் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிரிக்கெட்டுக்குப் பள்ளிகளிலும், பெற்றோரிடத்திலும், அறிவு ஜீவிகளிடத்திலும் இருக்கும் ஆதரவும், மரியாதையும் ஒழிக்கப்பட அல்லது குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் வலிமையான குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும்.

மீட்சி

சரக்கென்று செருகிக்கொள்ள
உதைத்தழுத்திப் பிடித்திழுத்தும்
பெயராப் புதைவில்
புதையும் பொழுதுகள்.

என்னவென்றால்?
பனிச் சகதியில் சிக்கிய
காரென்றும் சொல்லலாம்
மண்டைப் புதிரில் மாட்டிய
மனசென்றும் சொல்லலாம்...

எதுவாயினும்,
தாள் இருத்திக்* குமிழ்களுக்குள்
அடைபட்ட காற்றுக்கும்
மறுப்பதற்கில்லை விடுதலையை.

=========================
*தாள் இருத்தி - paper weight

நியூட்டன் வளையங்கள்புரியா வயதில் புரியா விடயத்தைப் புரியா மொழியில் படித்தது. நினைவிலா இருக்கும்? அன்றைக்கு ஏதோ படித்துக்கொண்டிருந்த போது கண்ணில் பட்டது "இந்தக் கண்ணாடி மேல் அந்தக் கண்ணாடிச்சில்லை வைத்தால் வளையங்கள் தோன்றும்" என்று. பாக்கனும்னு நெனச்சேன். பின் அந்த நினைப்பையும் மறந்துபோயிருந்தேன். முந்தாநாள் வேலையிடத்தில் இரண்டு x-ray filmகள். ஒன்றன் மேல் ஒன்றாகக் கிடந்தன. எதேச்சையாய் அழுத்தின விரல்கள். இரண்டு பிலிம்களுக்கும் நடுவில் விரல் பட்டழுத்திய இடங்களிலெல்லாம் குழுக்குழுவாய் வளையங்கள். சின்னதும் பெருசுமாய், விளிம்புகள் நீண்டும் சுருங்கியும். ஒரு கூட்டத்துக்குள் சின்னதில் தொடங்கி பெருசு வரைக்கும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டு ஒரே வடிவில் ஒருமைய வளையங்கள். வானவில்லின் நிறங்களைக் கொண்டு. ஊர்ச் சாலையில் மழைத்தண்ணீரில் கொட்டிக் கிடக்கும் எண்ணெய்த்துளிகளின் நிறங்கள் மனசுக்குள் மெல்லப் படர்ந்தோடின. இயற்பியல் அதிசயந்தான். வழக்கம்போல...இன்னும் கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கலாம்.
பி.கு. இந்தப் படம் யாரோ எடுத்து இணையத்துல எங்கயோ கிடந்து பொறுக்கினது.

மாமா

அந்த மாமாவப்பத்தி எழுதனும். எழுதி என்னாகுதுன்னு யோசிச்சா எழுத்து வராது. வராத எழுத்து பதினெட்டு வயசுல துள்ளுன மாதிரி துள்ளாது. பாயாது. அதுனால எழுதனும். எழுதிக்கிட்டே இருக்கனும். வேலய என்ன செய்ய. செய்யனுந்தான். ஆனாலும் எழுதனும். நடுவில நிக்கக் கத்துக்கனும். தொம்பக்கூத்தாடி நிதானம் வேணும். வேலயிடத்துல போயி நிமிசத்துக்கொருதரம் ஓடிப்போயி யாரு என்ன எழுதிருக்கான்னு பாக்காம இருக்கனும். அங்க வேலயப் பாக்கனும். அதச் செய்யலன்னா நல்ல வேலக்காரனா இருக்கமுடியாது. நல்ல வேலக்காரனா இல்லாதவன் நல்லா எப்படி எழுத முடியும். ஏன்னா எழுத்து கொஞ்சம் திருப்தியோட சம்பந்தப்பட்டது. நல்லா அனுபவிச்சு வேல செய்யனும். அனுபவிச்சு துக்கப்படனும். அனுபவிச்சு சிரிக்கனும். அப்பப்ப அததுல இருக்கனும். இதுல இன்னொரு இடக்கு நுழையுது. அததுல இருக்கப்ப அததுல படாம இருக்கனும்னும் ஒரு பக்கம் குரல் கேக்குது. எதுவுமே தீண்டாத் தன்மையில இருக்கவனுக்கு அங்க சொல்றதுக்கு ஒன்னுமிருக்காது. அந்த அமைதியப் பத்திக் கூடச் சொல்லத் தோனாது.

இப்புடித்தான். போயி உளுந்தம்பருப்பு வாங்கிட்டு வாடான்னா மறந்துராம இருக்க போற வழியெல்லாம் உளுந்து உளுந்துன்னு சொல்லிக்கிட்டே கடை(சி)யில போயி து.பருப்ப வாங்கிட்டு வந்து நிக்கிறது. தெருத்தெருவா அலயுறது. மாமா கதை. வருது.

அவர் ரத்த மாம இல்ல. ஆனாலும் மாமா. தெரு மாமா. தெருவுக்கே மாமா. ஆபீஸ்ல பியூனு. குட்டை. கருப்பு. வெள்ளைத் தாடி. தாடின்னாலே மார்வரை நீண்டுன்னு ஒரு பழக்கப்பட்ட மொழி ஆயின்மெண்டு மாதிரி பிதுங்கி வருது. அதைக் காத்தை உள்ளே இழுத்து அமுக்கிப்புட்டேன். எல்லாத்தையும் பழக்கத்தால செய்யுறது. ஏன்டா நகத்தக் கடிக்கிற. பழகிருச்சு. மாமா. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. angka சீ சேமிக்கப் போயி திரும்பி வந்து F12 தட்ட மறந்து ஆங்கிலத்துல. தட்டி. தமிழ். அங்க அடையாளம் முக்கியமில்ல. அவர் வீட்டுல கோபால் பல்பொடி வச்சிருப்பார். வீட்டுப் பயோரியா உறைக்கும். அங்க அப்பப்ப போயி பல்பொடி ருசிக்கிறது. ஆபீஸ்லேருந்து அட்டை கொண்டு வருவார். புத்தகத்துக்குப் போட்டுத் தர. பள்ளி ஆரம்ப நாட்களில் மாமா அட்டை. அட்டை. அட்டை. எல்லாருக்கும். வரிசையா. சில பணக்காரதுகள் கடையில வாங்கிட்டு வந்து மாமாட்ட குடுத்து அட்டை. மாமாவுக்குப் பொண்டாட்டி இல்ல. தெரியாது. நாங்க பாத்தது இல்ல.

அவர் வீட்டிக்குள்ள புலித்தோலிருக்கும். சிவன் படத்தைத் தவிர நான் கண்ட ஒரே புலித்தோல். மாமா மூனு மணிக்கு எந்திருச்சு சாமி கும்புடுவாராம். சொல்லுவாங்க. பரீச்சை அன்றைக்கு அந்த சாமி ரூமுக்குள்ள போயி துண்ணூறு பூசிக்குவோம். ஓடு ஓடு. இன்னமும் ஓட்டம் வேறு கதை. துண்ணூறு இல்லை வேறு கதை. யாரது எட்டிப் பாக்குறது எழுதயில. சீ தள்ளு மனசே. மாமா காசிக்குப் போயிட்டு வந்து வெள்ளயா ஒரு முட்டாயி குடுப்பாரு. அப்புறம் மாமா ஒரு பானையில தண்ணி வச்சிருப்பாரு. விளையாட்டின் நடுவில் வந்து குடிச்சுட்டு ஓடுவோம். அண்ணாக்க. மாமா கதையெல்லாம் சொல்ல மாட்டார். பேசினதுகூட அதிகமில்ல. அட்டை போட்டுக் குடுப்பார். பிரெளன் அட்டை. ஆபீஸ்ல குப்பை. எங்களுக்குப் பெருசு. அப்புறம் நான் பரதேசியாக. ஒருதரம் போனப்ப மாமா ரிடையர் ஆகி சொந்த ஊருக்குப் போயிட்டாராம்.

மாமா - மூனு மணிக்கு எந்திரிச்சு புலித்தோல்ல உக்காந்து காசிக்குப் போயி அட்ட போட்டுக் குடுத்து தண்ணி வச்சு கோபால் பல்பொடி வச்சு...என்னத்தையோ தேடியிருக்கார். நன்றி மாமா.