ஆப்பிள் தோப்புக்குள்ளே

அமெரிக்காவுல நெறைய தோட்டமெல்லாம் இருக்கு. காலத்துக்குத் தகுந்த மாதிரி பூக்கும் காய்க்கும் பழுக்கும். அன்னெக்கி நாங்க போனது ஒரு ஆப்பிள் தோப்பு. சின்னப் புள்ளையில நான் பொதுவாக ஆப்பிள் சாப்புட்டுத்தான் வளந்தேன். அதாவது ஒரு ஆப்பிள் வீட்டுக்கே பொது. ஆளுக்கொரு துண்டு.


இப்புடி சடை சடையாக் காய்ச்சுப் பழுத்துக் கெடந்ததை, கீழே கொட்டிக் கெடந்ததை என்னன்னு சொல்ல. காலையிலேருந்து சாய்ங்காலம் வரைக்கும் சனம். நூத்துக் கணக்குல. வர்றவங்களையெல்லாம் டிராக்டர் வச்சுக் கூட்டிக்கிட்டுப் போயி தோட்டத்துக்குள்ள உடுறான். சனம் போவுது, திங்கிது. ஓடி ஓடிப் பறிக்கிது. போறப்பவே பையும் குடுத்துர்றான். சின்னதோ பெருசோ. தேவையான அளவுக்குப் பறிச்சு ரொப்பிக்க. ஆனா ஒன்னு, பாத்துப் பறி. பூச்சியாருந்தா பறிக்காம மரத்துலேயே வுட்ரு. உலுக்காதே. மரத்துல ஏறாதே. வருசமெல்லாம் புள்ள மாதிரிப் பாத்துப் பாத்து வளத்து வச்சிருக்கேன், அதப் பாத்து நாம் பெருமப் படுற மாதிரி நீயும் பெருமப் படு, சின்னப் புள்ளைகள் கண்டபடி பறிச்சுத் தள்ளிரும் கொஞ்சம் பாத்துக்க, அப்படின்னு எழுதிப் போட்டிருக்கான். போறப்ப பறிச்ச எடைக்கித் தக்கன காசு குடுத்துரணும். ஒரு பவுண்டு 75 காசு.

உள்ள போற சனங்கள் பொதுவா ஆளுக்கு ஒன்னோ ரெண்டோ திங்காம இருக்கதில்லை. திங்காதேன்னு அவனும் சொல்லுறதில்லை. என் நேர்மக்கி நாலு மார்க்கு கொறஞ்சாலுஞ்சரி, கூடுனாலுஞ்சரி, சரியா தப்பா நீதியா தர்மமான்னு வெகு குழப்பத்துக்கப்புறம், நானும் ஒன்னு + மாசிலன் கடிச்ச பாதி தின்னேன். (தோப்புக்குள்ள நொழஞ்சதுக்கும் தின்னதுக்கும் நடுவுல நடந்த போராட்டத்த இன்னொரு தனிப்பதிவா எழுதலாம்!) எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கடையில கெடைக்கிற ஒரு நாலஞ்சு ரகந்தான். அந்தத் தோட்டத்துல என்னென்னமோ ரகமெல்லாம் வச்சிருக்கான்.

இந்த மாதிரி நம்ம ஊரு மாந்தோப்புக்கும், கொய்யாத் தோப்புக்கும் மக்கள் போற காலம் வரணும்!

இதான் நாங்க போன தோப்பு.

சம்பந்தமில்லாத பின் குறிப்பு: பணியின் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பக்கம் வர முடியாது.

ஈயடிச்சான்!

பாதிப்பு: வலைப்பூ-The Dullest Blog in the World

நேற்று வீட்டுக்கு வரும்போது என் ஜீன்ஸ் பாண்ட் மழையில் நனைந்து விட்டது. அதைக் கழற்றித் துணி அலமாரிக்குள் தொங்க விடாமல், அலமாரிக் கதவிலேயே வெளிப் பக்கம் தொங்க விட்டுவிட்டேன்.

ஒரு சந்திப்பு

முன்பொரு பதிவில் ஏல் பல்கலையில் ஒரு ஆராய்ச்சிக் குழு எயிட்ஸ் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சியொன்றை மேற்கொள்வதாக எழுதியிருந்தேன். அதன் முதன்மை ஆராய்ச்சியாளரான கிம் ப்ளாங்கென்ஷிப்பை நேற்று சந்தித்தேன். உங்க வலைப்பதிவைப் படிக்க மொழி தெரியவில்லையே என்று புன்னகைத்தார். அவர் தனது திட்டத்தைப் பற்றிச் சொன்னதைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.

"ஜூன் மாசந்தான் ஆரம்பிச்சிருக்கோம். இந்தத் திட்டத்துல ரெண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்னு கேர் செய்யுற வேலைகளுக்கு ஆதரவு குடுக்குறோம். கேர்தான் களமிறங்கி வேலை செய்யும். இன்னொன்னு கேர்லேருந்து வர்ற தகவல்களை ஆராயப் போறோம். இதுக்காக ஆவாஹன் அப்படிங்கற ஒரு அமைப்புல இணைந்திருக்கோம். இது கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்குறது. ஒரு பத்து, பதினைந்து அவஹன் குழுக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைப்புக் குறுக்கீட்டு (structural intervention) முறையினை ஆராய்ச்சி செய்பவை.

அமைப்புக் குறுக்கீட்டு முறையானது தனியாட்களுக்குக் கற்பிப்பதை முக்கியமான நோக்காகக் கொள்வதில்லை. அது, இருக்கின்ற அமைப்பைச் சரி செய்ய முற்படுகிறது. உதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தனும்னு எல்லா விலைமாதுக்கும் தெரியும். இதைச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனா ஆணுறையைப் பயன்படுத்த விடாம தடுக்குற அமைப்பை நாங்க ஆராயுறோம். அதாவது ஆணுறையை அணியச் சொன்னால் மறுக்கும்/அச்சுறுத்தும்/வேறிடத்துக்குச் சென்றுவிடும் வாடிக்கையாளர்கள், ஆணுறை வைத்திருப்பதாலேயே சிறைபிடிக்கப்படும் விலைமாதர்கள், இவர்களிடையே அமைப்புக் குறுக்கீட்டு முறை மூலம் எல்லா விலைமாதர்களையும் திரட்டி ஆணுறையில்லையென்றால் கலவியில்லை என்று தீர்மானிக்கலாம். காவல்துறையினரோடு கலந்து பேசி இத்தகைய கைதுகளை/பின் தொடரும் சித்திரவதைகளைக் குறைக்கலாம். இம்முறை ஏற்கெனவே கல்கத்தாவில் கேரினால் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனைச் சமுதாய அமைப்புக்கேற்ற சிறிய மாற்றங்களுடன் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் செயல்படுத்த உள்ளோம்.

இத்திட்டத்தில் குழுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் நிகழும். அமெரிக்கக் குழுக்கள் இந்தியாவுக்கும், இந்தியக் குழுக்கள் அமெரிக்காவுக்கும் வந்து கற்கும். இதற்காக கேர், சிரா முதலியவற்றில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம்.

ஆப்பிரிக்காவில் சில ஆராய்ச்சி முடிவுகளின்படி பெண்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்த பின்னர் அங்கு விபச்சாரத்தின் அளவு குறைந்துவிட்டது. கல்கத்தாவில் விலைமாதர்கள் வங்கிக் கடன் கேட்டபோது அங்கே ஒழுக்கமில்லாதவர்களுக்கு (low morale) கடன் கொடுப்பதில்லையென்றொரு சட்டமிருந்ததாம். அதனைத் திருத்திய பின்னரே அவர்களுக்குக் கடன் கிடைத்ததாம். கேரளத்தில் எப்படி எயிட்ஸ் கட்டுக்குள் இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே விபச்சாரம் இருந்தாலும் எயிட்ஸ் பரவும் வீதம் குறைவு. கல்விக்கும் இதற்கும் சம்பந்தமிருக்கலாம், தெரியவில்லை.

விபச்சாரம் என்பதை சட்டபூர்வமாக்குவதா (legalization) அல்லது அதற்கான விதிகளைத் தளர்த்துவதா (deregulation) என்ற குழப்பந்தான் நிறைய நாடுகளில் நிலவுகிறது. சட்டம், சமயம் போன்றவை எந்தளவுக்கு இதனை அமுக்கி வைத்திருக்கின்றனவோ அந்தளவுக்கு இவை வேறு வழிகளில் விரிவடையவும், குடிமக்களுக்கு ஆபத்தானதாகவும் மாற சாத்தியங்கள் அதிகம். நோய் பரவலுக்கான முக்கிய காரணம் இவ்விலைமாதருக்குப் போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் தாக்குதலுக்குள்ளாவதற்குக் காரணம் இவர்களிடம் போதிய வலிமை (மனோ, குழு, சட்டரீதியான) இல்லாமையே. பெண்களை மேலும் வலிமை படைத்தோராக்குவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகச் செயல்படவும், தமக்கான ஒழுக்க விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப் படவேண்டும்.

தேவை இருக்கும் வரை இத்தொழில் இருக்கவே செய்யும். சமயங்களோ அல்லது சட்டமோ இதனை ஒழிக்க முடியாது. ஆனால் மக்களிடையே நோய் பரவாமல் காக்கப் படவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் திட்டம் உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு முடிந்தது அவருடனான சந்திப்பு. மக்களின் பங்களிப்பு நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறார். தற்போதைக்குத் தமிழ்நாட்டில் ஏதும் செய்வதாகத் திட்டமில்லையாம். முதல் கட்டமாக ராஜமுந்திரியில் தொடங்கப்படும் திட்டந்தான் இதுவரைக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அவரது துறையில் இது சம்பந்தமான கூட்டங்களில் வந்து கலந்து கொள்ள வரவேற்றார். நன்றியுடன் விடை பெற்றேன்.

உனக்கு

வானந் தெளிந்து வீசும் வளர்மதி
சுடரைத் தெறிக்குங் கடலின் மெல்லலை
இரவுக் காற்றிலே யேறுங் குளுமை
மணலிலே யிட்ட அடியெலாஞ் சிப்பிகள்
இரையைக் கொண்டு காற்தடம் விட்டுப்போய்
எங்கோ வுறங்கலாம் வெண்கடற் பருந்துகள்
துணையொரு மாது கைப்பிடி மதலை
தொலைவிற் தெரியும் விளக்க வெளிச்சம்

நெஞ்சில் லமைதி நிறைந்த வோரிரவு
எனக்கிருந் தாற்போல் உனக்கும் வேண்டும்.

கரைந்து கரைந்து

புதுக்கோட்டை என்னோட மாவட்டம். குளத்தைக் காணோம், ஆத்தைக் காணோம், ஏரி இருந்த எடத்துல வீடு இந்த மாதிரி 'சாதாரண' பிரச்சினைகள் எங்க மாவட்டத்துலயும் உண்டு. தப்பிப் பிழைச்ச குளம் குட்டைகளும் உண்டு. மழை வந்தால் சில மாதங்களுக்கு இதுகளிலே தண்ணீரைப் பார்க்கலாம். தலையில் சுமந்தும், சைக்கிளில் குடத்தைக் கட்டியும் தண்ணியடித்த அனுபவம் நிறைய எனக்குண்டு. காவிரிப்பாசனக்காரியான எங்கம்மா, தாங்க முடியாதப்ப "இந்தக் காஞ்ச பய ஊர்ல"ன்னு திட்டும். எங்க மாவட்டத்தை வறட்சி மாவட்டம்னு அரசாங்கம் சொல்லுதோ இல்லையோ நாங்க அப்படித்தான் நெனக்கிறோம்.

தப்பித் தவறிப் பெய்யுற மழையில சேர்ந்து கெடக்குற கொஞ்சந் தண்ணியக் கூடப் பயன்படுத்தவிடாம அடிக்கனுமா? நாங்கூட இந்தக் கடல் இருக்கப் பெரிய ஊர்கள்ல இருக்கவங்கதான் இப்படின்னு நெனச்சேன். இப்ப வறண்டு போன எங்க மாவட்டத்துக் காரங்களுக்குக் கூடத் தண்ணியோட அருமை தெரியாமப் போச்சேன்னு நெனக்கிறப்ப...ங்கொப்புறான...நாம எங்க போறோம்?

புரியலயா? எனக்குந்தான். அந்தச் சேதியப் படிச்சதுக்கப்புறம் ஒன்னுமே புரியல. புத்து நோய் மாதிரிப் புரையோடுற இந்த வெறி எனக்குப் புரியல. போபால் நச்சுக் காத்தா ஊர் ஊராப் பரவுற இந்த மதிகெட்டதனம் எனக்குப் புரியல. இதுக்கு வழியென்ன இருக்குன்னும் புரியல. ஊர்ல ஒருத்தருமே ஏன்னு கேக்க மாட்டாங்களா? ஊர்த்தலைவனுங்க/கவுன்சிலனுங்க எல்லாருமாக் கூடி நின்னு செஞ்சா யாருகிட்ட போயி சொல்றது?

உழவாரத் திருப்பணின்னு ஊர் ஊரா அலைஞ்ச அப்பருக்கு இருந்தது சமூக அக்கறை. நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீருன்னு இருந்த தாயுமானவனுக்கு இருந்தது அறிவு. அறிவியல் பூர்வமான மதமென்று தம்பட்டங்கொட்டி ஊர்களைச் சாக்கடையாக்கும் இந்த மத நம்பிக்கை அவசியமா?

தண்ணிய நாசமாக்குற இந்தப் புது வழக்கம் நாசமாப் போவனும்!

செய்தி

ரத்தச் சோகைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

வனிலா ஐஸ்கிரீமுக்கும், ஒரு வகையான ரத்தச் சோகைக்கும் சம்பந்தம் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசையா? அறிவியல் கூட்டுப்பதிவுல ஒன்னு எழுதிருக்கேன், பாருங்களேன்!

இளநீரும் நானும்!



உயரத்தில் இருக்கும்
அறுபட்டால் கீழ்விழும்
உவர்ப்போ இனிப்போ உள்ளேயாடும்
எங்கோ விளைந்து எங்கோ வெட்டுப்படும்
வழுக்கை எட்டிப் பார்க்கும்
முற்றினால் பருப்பாகும்
காய்ந்த மட்டை எரிக்கவாகும்!

(எல்லாம், நேற்று ஒரு அமெரிக்கக் கடையில் முதன்முறையாக இளநீரைக் கண்ட ஆனந்தம்தான்!)

பாதை மாறிப் போனோமா?

நேற்று படித்த இரு பதிவுகள் நாளை நிரப்பி விட்டன. ஒன்று எஸ்.ராவின் பூம்புகார்-கொடுங்கலூர்ப் பாதை. இன்னொன்று மதுரபாரதியின் ஆணழகனின் அலங்காரம். இவை இரண்டுமே என்னை ஒரு பழைய காலத்துக்குத் தூக்கிச் சென்றன.

அத்தனை செழுமையாய் ஒரு இனம் வாழ்ந்திருந்திருப்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். நாட்டுக்கு நாடு புராதனங்களைத் தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்தும், கண்டம் விட்டுக் கண்டம் சென்று மனிதர்கள் தம் வேரினைத் தேடியும் வரும் இக்காலத்தில் நாம் என்ன செய்கிறோம்? பழையன என்று நாம் நினைப்பவை எவ்வளவு தூரம் பழையன? மேற்புறத்திலே எஞ்சியிருக்கும் கற்கோயில்களும், கிணற்றாழத்தில் கிடைக்கும் தேவியர் சிலைகள் மட்டிலுந்தான் நம் வரலாறா? இதையும் தாண்டிப் பின்னே போனால் என்னென்ன இருக்கும்?

பள்ளிக்கூடத்தில் படித்து "அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டேங்கி, மல்லல் மதுரையார் எல்லாருந் தாமயங்கி" என்று நெட்டுருப் போட்ட வரிகளோடு சிலப்பதிகாரம் நின்று போனது. அதனை முழுதும் படிக்கும் தாகம் எழுகிறது. மதுரபாரதி வருணிக்கும் ஆடவனும் பின்புலத்தில் நம் மனக்கண்ணில் காட்சியாய் விரியும் நிலமும் பெருமூச்சைத்தான் வர வைக்கின்றன. கபிலன் வாழ்ந்த காலத்தின் இயற்கை அழகை முன்பொருமுறை ஒரு ஆங்கில மாது சொன்னது நினைவுக்கு வந்தது.

தொழில்மயமாக்கலில் சிதைந்து போன இயற்கை வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், அட இப்போதிருக்கும் இச்சமூகத்திலாவது மக்கள் ஒவ்வொருவரும் நிறைவான, மரியாதையான, அறிவான வாழ்வினை வாழமுடியாதா என்ற ஏக்கம் படருகிறது. நமக்குத் தெரியாத விசயம் நாம் யார் என்பதும், நம் முன்னோரின் வாழ்வு என்னவென்பதும்தான். நாமறிந்த பெருங்கட்டிடங்களெல்லாம் கோயில்கள். நாமறிந்த சிற்பங்களெல்லாம் தெய்வங்கள். நாமறிந்த பாட்டுக்களெல்லாம் சாமிகளைப் பற்றியவை. இல்லை. இது நிச்சயமாகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக அண்மையில் நிகழ்ந்தவொரு மாற்றம். நம் கண்ணுக்கு முன்னாலேயே கணேஷா வந்து கடலில் கரைகிறாரென்றால், பல நூறாண்டுகளுக்கு முன்னிலிருந்து என்னென்னவெல்லாம் செருகப் பட்டிருக்கும்? செருகினதெல்லாம் பொய்யென்று சொல்லவில்லை, அவை சொல்வதையெல்லாம் புரட்டென்று சொல்லவில்லை. அவ்விதமான கருத்துக்கள் மானுடத்தில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தின? அத்தகைய மதங்களால் மனிதப் பெரும்பான்மைக்கு முன்னேற்றம், ஆன்மாவிலோ, பொருளியலிலோ, கிடைத்ததா? கிடைக்காத பட்சத்தில் அவற்றை உயர்ந்தவையென்று நாம் ஏன் போற்ற வேண்டும்? கடைபிடிக்க வேண்டும்? வைத்திருக்க வேண்டும்?

ஒன்று "பழையன கழிந்து" வேகமாய் முன்னோக்கிப் போக வேண்டும், அல்லது பின்னோக்கிப் பார்த்து நம்மைச் சரி செய்து கொள்ள வேண்டும். இரண்டுங்கெட்டானாய்க் கிடந்து குழம்புவதில் இழப்புதான் மிஞ்சும். இத்தகைய குழப்பச் சமுதாயத்தில் பிறப்போரெல்லாம் "தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு" இன்னொரு தாழ்வான சந்ததியை உண்டாக்கித் தாழ்வான சாவினைத் தழுவ வேண்டியதுதான். நாம் திரும்பிப் பார்க்க வேண்டும், ஒவ்வொன்றையும். நாம் பார்க்கின்றவற்றுக்கு இன்னும் முந்தைய காலத்துக்கு. ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் மட்டுமே பழமையென்று சொல்லாமல் அதனினும் பழமையான சிலப்பதிகாரத்துக்குச் செல்ல வேண்டும். அதனினும் பழமையாய் ஏதேனும் கிடைத்தால் அதற்கும். நாம் யாரென்பதும், எந்த மொழிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியென்பதையும் தெரியவரும். கபடமில்லா அந்த ஆராய்ச்சியில் நாம் இன்று களைய வேண்டியவை எவையென்பதும் தெரிந்து போகும்.

நிச்சயமாய் மயில்கள் விளையாடும் வீட்டுக் கொல்லைப்புறத்தை நீங்களும் நானும் காணப் போவதில்லை. ஆனால் மனிதர்களாவது நிம்மதியாகவும், பெருமையாகவும், அறிவோடும் வாழலாம். பின்னுக்குப் போய்த் தோண்டிப் பார்த்து நீயெல்லாம் இது நானெல்லாம் இது என்று வேற்றுமையை வளர்ப்பதில்லை நம் நோக்கம், நாமெல்லாம் ஒரு மொழிக்குடும்பத்தினர், நம் மொழியைப் பேசிய இனம் இப்படியிருந்திருக்கிறது, இதிலே இன்னின்ன மாற்றங்கள் வந்து கெடுத்திருக்கின்றன, இவற்றைக் களைவோம், ஒன்றாய் வாழ்வோம். சொல்லச் சுலபந்தான், எத்தனையாயிரம் சிக்கல்களிருக்கின்றன? ஆனாலும் ஒரு நியாயமான தமிழ்ச் சமுதாயத்துக்கான வேட்கையையும், நம்பிக்கையையும் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 4

அருந்ததி ராய் அடுக்கிய பிரச்சினைகளோடு முடிக்க விருப்பமில்லை. கடைசியில் இதற்கெல்லாம் ஏதாவது தீர்வு வைத்திருக்கிறாரா அல்லது முடிவாக என்ன சொல்லுகிறார் என்று பார்க்கத்தான் இந்தப் பதிவு.

இதன் முந்தைய பதிவுகள் (பாகம் 1, பாகம் 2, பாகம் 3).

இனி அவரது உரையிலிருந்து:
எதிர்ப்புகளுக்கான உத்திகளை வடிவமைத்துக் கொள்ளுவதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் இன்றைய உலகில் நடைபெறவில்லை. எதிர்ப்புகளைக் எப்படிக் காட்டுவது என்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் மட்டுமில்லை. இது அரசாங்கத்தின் கையிலும் இருக்கிறது. எக்கச்சக்கமான ராணுவ பலத்துடன் அமெரிக்கா, ஈராக்கை ஊடுருவி ஆக்கிரமித்து வைத்திருக்கும்போது, அதற்கான எதிர்ப்பை ஒரு முறையான ராணுவத்திடமிருந்தா எதிர்பார்க்க முடியும்? அப்படியே முறையான ராணுவ எதிர்ப்பாகவே இருந்தாலும் அதுவும் தீவிரவாதம் என்றே அழைக்கப்படும். விந்தை என்னவென்றால், அமெரிக்காவின் ஆயுதங்களும், நிகரில்லா வான்படை மற்றும் சுடுதிறன் ஆகியவையும், பயங்கரவாதத்தை நிர்ப்பந்திக்கின்றன. செல்வமும் வலிமையுமில்லா மக்கள், தம் உத்திகளாலும் திருட்டுத்தனத்தாலும் நிரவுகிறார்கள்.

நம்பிக்கையிழந்தும், முரட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் வன்முறையற்ற போராட்டங்களை மதிக்கவில்லையென்றால் அது வன்முறைக்கான உரிமையத்தான் வழங்குவதாகும். வன்முறையற்ற வகையில் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களின்பேரில் மாற்றங்களைக் கொண்டு வராத எந்த அரசும் பயங்கரவாதத்தைக் கண்டிப்பது நம்புதற்குரியதன்று. ஆனால் இத்தகைய வன்முறையற்ற எதிர்ப்பியக்கங்கள் நசுக்கப் படுகின்றன. மக்களை ஒன்று திரட்டுதலோ அல்லது ஒரு நிறுவனமோ எதாயிருந்தாலும் சரி, அவை விலைக்கு வாங்கப்படுகின்றன, உடைக்கப் படுகின்றன அல்லது அலட்சியப்படுத்தப் படுகின்றன. இதே நேரத்தில் அரசுகளும், கூட்டுத்தாபன ஊடகங்களும், திரைப்படங்களும், நேரம், அவர்கள் மேல் குவியும் கவனம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயங்கரவாதத்துக்கெதிரான போரின் மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் பகட்டாகச் செலவிடுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து வன்முறையைத் தெய்வீகமாக்கிவிடுகின்றன.

இது நமக்குச் சொல்லும் சேதி நிலைகுலையச் செய்வதும் ஆபத்தானதும் ஆகும். இச்சேதி என்னவென்றால்: நீ பொதுமக்களின் துன்பத்தை வெளியே கொண்டு வர விரும்பினால் வன்முறையே வன்முறையற்ற வழியை விட ஆற்றல் மிக்கது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான பிளவு மேலும் வளரும் இவ்வேளையில், இருக்கின்ற வளங்களைக் கைப்பற்றுவதும் ஆளுவதுமே பெரும் மூலதனக்காரர்களுக்கு மிக முக்கியமானதாகிவிடுகிறது. இது அமைதியின்மையைத்தான் வளர்க்கும்.

பேரரசின் மாற்றுப் பக்கத்திலே இருப்பவர்களுக்கு இந்தச் சிறுமைப்படுத்தப் படுதல் பொறுக்க முடியாததாயிருக்கிறது. அமெரிக்காவால் ஈராக்கில் கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தையும் நம் குழந்தை. அபு க்ரெய்பிலே சித்ரவதை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நம் தோழர். அவர்களுடைய அலறல் நம்முடையது. அவர்கள் சிறுமைப்படுத்தப் பட்டபோது நாமும் சிறுமையடைந்தோம். ஈராக்கிலே போராடும் அமெரிக்கச் சிப்பாய்கள் இருக்கிறார்களே, பெரும்பாலும் ஏழ்மையிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் வந்த தன்னார்வலர்கள், அவர்களும் ஈராக்கியர்களைப் போலவே இக்கொடு நிகழ்வுக்குப் பலியாடுகளே. இப்போர்வீரர்கள் தமக்கென்றில்லாத ஒரு வெற்றிக்காக சாகச் சொல்லப் படுகிறார்கள்.

CEOக்கள், வங்கியாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், தளபதிகள் போன்ற பெரியோர்கள் மேலிருந்தபடி கீழே நம்மைப் பார்த்துத் தலையை முடியாதென ஆட்டுகிறார்கள், "வேறு வழியில்லை" என்கிறார்கள். போர் நாயை அவிழ்த்து ஏவிவிடுகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது, ஆப்கானிஸ்தானின் அழிவுகளிலிருந்தும், ஈராக், செச்னிய இடிபாடுகளிலிருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன, காஷ்மீர வீதிகளிலிருந்தும், கொலம்பியாவின் மலை, வெளிகளிலிருந்தும், ஆந்திரா, அஸ்ஸாம் காடுகளிலிருந்தும், சிலீரிடும் இந்தப் பதில்தான் வருகிறது, "பயங்கரவாதத்தைத் தவிர வேறு வழியில்லை".

பயங்கரவாதம், கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது ஆபத்தானது, அசிங்கமானது, கடைபிடிப்போரையும் பலியாடுகளையும் மனிதத்தன்மையற்றவராக்கக் கூடியது. ஆனால் போரும் அப்படித்தான். நீங்கள் பயங்கரவாதம் என்பது தனியாரின் வசப்படுத்தப்பட்ட போர் என்று சொல்லலாம். பயங்கரவாதிகள் போரின் சில்லரை வியாபாரிகள். சட்டபூர்வமான முறையில் வன்முறைகளை நிகழ்த்த அரசாங்கத்துக்கு மட்டுந்தான் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதைத் தீவிரவாதிகள் நம்புவதில்லை.

மனித சமுதாயம் ஒரு பயங்கரமான இடத்துக்குப் பயணிக்கிறது. நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு மாற்று உண்டு. அதன் பெயர் நீதி. அணு ஆயுதங்களாலோ, பரந்த மேலாதிக்கத்தாலோ, டெய்சி கட்டர் குண்டுகளாலோ மோசடித்தனமான ஆட்சிக் குழுக்களினாலோ, லோயா ஜிர்காக்களினாலோ நீதியை விலையாகக் கொடுத்து அமைதியை வாங்க முடியாது. ஒரு சிலரின் மேலாதிக்கத்துக்கும் பெரும்பான்மைக்குமான ஆசைக்கு, சுயமரியாதைக்கும் நீதிக்கும் ஏங்குவோரின் விஞ்சும் வலிவினால் பதிலடி கொடுக்கப்படும். அது அழகானதா அல்லது ரத்தம் தோய்ந்ததா, என்ன மாதிரியான போராட்டம் அது என்பதெல்லாம் நம்மைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
(நிறைவு)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 3

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1
போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து:

3. அடக்குமுறைகள்
மக்களின் உரிமைப் போராட்டங்கள் சந்திக்கும் மூன்றாவது சவாலைப் பற்றி இப்போது பார்ப்போம். அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் போராட்டக்குழுக்களுக்கும் ஏற்படும் நேரடி மோதல்கள். இவை மக்கள் சக்திக்கும் பேரரசின் சக்திக்குமிடையேயான மோதல்கள். குடிமக்களின் எதிர்ப்புகள் ஒருவேளை (பேரரசுக்கு)ஆபத்தாகலாம் என்ற ஒரு சிறு அறிகுறி தென்பட்டாலும் போதும், அந்தப் போராட்டத்தின் மீதான அடக்குமுறை இரக்கமற்றதாயிருக்கும். சியாட்டில், மயாமி, கோதென்பர்க், ஜெனோவா ஆகிய இடங்களில் நடந்த ஊர்வலங்களிலெல்லாம் இத்தகைய ஒடுக்குமுறையை நாம் கண்டோம். அமெரிக்காவில் நீங்கள் வைத்திருக்கும் அமெரிக்க நாட்டுப்பற்றாளர் சட்டமானது உலக நாடுகளுக்கெல்லாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான ஒரு முன்னோடியாக இருக்கிறது. சுதந்திரத்தைக் காக்கின்ற பெயரிலே சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. நாம் ஒரு முறை சுதந்திரத்தை ஒப்புவித்துவிட்டால் அதை மீளப் பெறுவதற்கு ஒரு புரட்சி செய்ய வேண்டியிருக்கும்.

சில அரசாங்கங்களுக்குச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் பெரும் அனுபவங்கள் இருக்கும், இருப்பினும் அவ்வரசுகள் நறுமணத்துடனேயே திகழும். இந்த ஆட்டத்திலே பழங்கையான இந்தியா இவ்வழிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் அது எக்கச்சக்கமான சட்டங்களை உண்டாக்கி அவற்றின் மூலம் எந்தவொரு ஆளையும் பயங்கரவாதி, கிளர்ச்சிக்காரர், போராளி என்று அழைத்துக்கொள்ள முடியும். இப்போது எங்களிடம் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், சிறப்புப் பகுதிகள் பாதுகாப்புச் சட்டம், குழுப்போராளிகள் சட்டம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைப் பகுதிகள் சட்டம் (இது ஏற்கெனவே காலாவதியான சட்டமாக இருந்தாலும் இதன்கீழ் மக்கள் இன்னும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள்), மற்றும் தற்போது வந்திருக்கும் பொடா சட்டம், ஆகியவை இருக்கின்றன. இவை மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களுக்கான பல்திற உயிர்க்கொல்லி மருந்துகளைப் போன்றவை.

இதற்கு அப்பாலும் சில முறைகள் இருக்கின்றன. அவை நீதிமன்றங்களிலிருந்து தீர்ப்பாகக் கிடைக்கும். அவையாவன, பேச்சுச் சுதந்திரத்தை, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை, வாழ்க்கையைப் பிழைப்பை நடத்தும் உரிமையை நறுக்குதலாகும். நீதிமன்றங்கள் எங்கள் வாழ்வை குறுமேலாண்மை செய்துவருகின்றன, அத்தகைய நீதிமன்றங்களை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.

திரும்பவும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு வருவோம். போன பத்தாண்டுகளில் மட்டும் காவல் துறையினராலும், பாதுகாப்புப் படையினராலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில். ஆந்திர மாநிலத்தில் (இம்மாநிலம் இந்தியாவில் உலகமயமாக்கலின் கவர்ச்சிக்கன்னி) ஒவ்வோராண்டும் "திடீர்த்தாக்குதல்களில்" சராசரியாக 200 "தீவிரவாதிகள்" கொல்லப் படுகிறார்கள். பம்பாய்க் காவல் துறை "துப்பாக்கிச்சூட்டில்" எத்தனை "குழுப்போராளிகளைக்" கொன்றோம் என்று பெருமை பேசுகிறது. கிட்டத்தட்ட போர்ச்சூழல் நிலவும் காஷ்மீரில் 1989ம் வருடத்திலிருந்து 80,000 பேர் கொல்லப் பட்டிருப்பதாகக் கணக்கு. ஆயிரக்கணக்கில் சும்மா "காணாமல்" போய்விட்டார்கள். வடகிழக்குப் பகுதியிலும் சூழ்நிலை இப்படித்தான். அண்மையக் காலங்களில் இந்தியக் காவல்துறை ஆயுதமேந்தாத பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இம்மக்களில் பெரும்பாலானோர் தலித்துகளும், பழங்குடியினருமாவர். காவலர்களுக்குப் பிடித்தமான முறை என்னவென்றால் முதலில் அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது.

இந்தியா மட்டுந்தான் இப்படியென்றில்லை. பொலிவியா, சிலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது நடப்பதைக் காண்கின்றோம். தாராளமய காலத்தில் ஏழ்மை என்பது ஒரு குற்றம். ஏழ்மையை எதிர்த்துப் போராடுவது பயங்கரவாதம் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தியாவில் பொடா, சமயங்களில் Production of Terrorism Act என்றுதான் அழைக்கப்படுகிறது. அந்தச் சட்டமானது ஒரு அல் கெய்தா செயலாளியிலிருந்து ஒரு சிடுமூஞ்சி பஸ் கண்டக்டர் வரை அனைவரையும் பிடித்துப் போடுவதற்கான சட்டம். எல்லா பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையும் போலவே, பொடாவின் மேதைமை என்னவென்றால் இதை அரசாங்கம் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 2002ல் குஜராத்தில் மாநில அரசின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட திட்டங்களைத் (இத்திட்டத்தின் வாயிலாக இந்துக் காலிகளால் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், 150,000 பேர் இல்லங்களைத் துறந்ததும் நிகழ்ந்தது.) தொடர்ந்து 287 பேர் பொடாவின் மூலம் கைது செய்யப் பட்டார்கள். இதில் 286 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சீக்கியர். பொடாவில் காவல் நிலையத்தில் கறக்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியங்களாகக் கொள்ளப்படும். இதன் விளைவாக விசாரணையைச் சித்திரவதை இடப்பெயர்ச்சி செய்தது. இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான சித்திரவதையும் சிறைச் சாவுகளும் நிகழ்கின்றன என்று தெற்காசிய மனித உரிமைப் பதிவு மையம் சொல்கிறது. அரசாங்க ஆவணங்கள் 2002ல் மட்டும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தோரில் 1307 மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் பொடா தீர்ப்பாயத்தில் நானொரு உறுப்பினராக இருந்தேன். எங்களது அருமையான மக்களாட்சியில் என்ன நடக்கிறதென்பதை அந்த இரண்டு நாட்களில் கிடைத்த கிளுகிளுப்பூட்டும் வாக்குமூலங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அதில் எல்லாமே அடக்கம். அதாவது, சிறுநீரைக் குடிக்கச் சொல்வது, ஆடை களைவது, தாழ்மையடையச் செய்வது, மின்னதிர்ச்சி கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, ஆசனவாய்க்குள் இரும்புக்கழிகளை விடுவது, அடித்து உதைத்துக் கொல்வது ஆகியவை அடங்கும். பொடா இல்லையென்றால் மொடா அல்லது இதுமாதிரி ஏதாவது ஒன்று இருக்கும்.

வன்முறையற்ற முறையில் காட்டப்படும் எதிர்ப்புகளுக்கான வாசல் மூடப்பட்டு, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தீவிரவாதியென அழைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் யாராவது நாட்டின் பெரும்பகுதியில் ஆயுதந்தாங்கிய போராளிகளின்வசம் இருப்பதையும், நிலைமை அந்தந்த மாநிலங்களின் (காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதி, சத்திஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம்) கையை விட்டுப் போனதையும் குறித்து ஆச்சரியப்படுவார்களா? காஷ்மீரில் எந்தவொரு நிமிடத்திலும் 3000 முதல் 4000 போராளிகள் இயங்குவதாக இந்திய ராணுவம் கணக்கிடுகிறது. இவர்களை அடக்க இந்திய அரசு 500,000 படைவீரர்களை அனுப்புகிறது. தெளிவாக இது எதைச் சொல்கிறதென்றால், தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே இந்தப் படை செல்லவில்லை. அங்கிருக்கும் தாழ்வுபடுத்தப்பட்ட மக்களை, இந்தியப் படையை ஒரு அந்நியப் படையாக நினைக்கும் மகிழ்ச்சியற்ற மக்களையும் சேர்த்து ஒடுக்கவே செல்கிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது அதிகாரிகளுக்கு மட்டுமின்றி குறைந்த அதிகாரம் கொண்ட ராணுவத்தினருக்கும், பொது விதிகளை மீறுவோரை, தாக்கவும் கொல்லவும் அதிகாரம் கொடுக்கிறது. 1958ல் மணிப்பூரின் சில மாவட்டங்களில் மட்டுமே இருந்த அந்தச் சட்டம் இப்போது மாநில முழுமைக்கும், காஷ்மீருக்கும் செல்லுபடியாகும். சித்திரவதை, காணாமல் போதல், நீதிமன்றக் காவலில் சாதல், வன்புணர்ச்சி மற்றும் கடைசியில் தீர்த்துக்கட்டுதல் ஆகியவை குறித்த பதிவுகள் உங்கள் குடலைப் புரட்டவைக்கப் போதும்.

இந்தியாவின் இதயமான ஆந்திரப் பிரதேசத்தில், வாரங்கலில் ஜூலை 28, 2004ம் தேதி, பல்லாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் (ஆந்திரக் காவல்துறையின் குறியான) மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்க் குழு ஒரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பொடாவின் கீழ் இந்த மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான். இவர்களனைவரும் குவாண்டனாமோ சிறையினை ஒத்ததொரு இந்தியச் சிறையிலே அடைக்கப்படுவார்களா? மொத்த வடகிழக்கும், காஷ்மீரும் நொதிக்கின்றன. அரசாங்கம் இத்தனை லட்சம் மக்களை என்ன செய்யப் போகிறது?

(இதன் இறுதிப் பகுதி நாளை)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து...

2. NGO-ஆக்கல்
போராட்ட இயக்கங்கள் எதிர்கொள்ளும் இன்னொரு நச்சு என்னவென்றால், எதிர்ப்பியக்கங்களை NGO(அரசு சாரா நிறுவனங்கள்)-ஆக்குதல். நான் இப்போது சொல்லப் போவதை NGOக்களின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகச் சுலபமாகத் திரித்து விடலாம். அது தவறு. மதிப்புமிக்க பணிகளைச் செய்யும் NGOக்கள் இருக்கிறார்கள், ஆனால் போலித்தனமான NGOக்கள், இருண்ட நீர்ப்பரப்புகளிலிருந்து (திட்டங்களுக்கான பணம், வரி ஏய்ப்புகள்) உறிஞ்சுவதற்காகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. பீகார் போன்ற மாநிலங்களில் இந்நிதிகள் வரதட்சிணை மாதிரிக் கொடுக்கப் படுகின்றன. இந்த NGO கொள்கையைச் சற்றே பரந்த அரசியல் நோக்கில் காணவேண்டும்.

இந்தியாவில் NGOக்களுக்கான நிதியுதவி 1980, 1990களிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. இது இந்தியா தாராளமயமாக்கலுக்குத் (neoliberalism) தன் கதவுகளைத் திறந்துவிட்டபோது நிகழ்ந்தது. இந்த நேரத்தில், இந்தியா, புதிய மாற்றங்களுக்குத் தன்னைச் சரிசெய்துகொள்ளும் வகையில், கிராமப்புற முன்னேற்றம், விவசாயம், சக்தி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டது. வழக்கமாக அரசு செய்யவேண்டிய, ஆனால் புறக்கணித்துவிட்ட, இத்துறைகளில் NGOக்கள் வேலை செய்ய முன்வந்தனர். அரசுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால், NGOக்களிடம் மொத்த தேவைக்கான பணத்தில் ஒரு சிறு அளவே இருந்தது. பெருவாரியான பணம் கொழிக்கும் NGOக்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால், உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள். இந்நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால் மேற்கத்திய அரசுகள், உலக வங்கி, ஐநா மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களெல்லோரும் ஒன்று போலத்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும், இவர்கள் எல்லோருமே இளக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகத்தின் பகுதிகளே. இவர்களது பணி என்னவென்றால் தாரளமயமாக்கலை மேற்பார்வை செய்வதும், அரசுகள் இத்துறைகளில் செலவு செய்வதைக் குறைக்கச் சொல்வதுமாகும்.

ஏன் இந்நிறுவனங்கள் NGOக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்? வெறுமனே பழங்காலத்திய சமயச் சங்கங்கள் மாதிரியா? குற்றமனப்பான்மையா? இது அதற்கும் கொஞ்சம் மேல். NGOக்கள் அரசின் பின்வாங்குதலால் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்புவது போன்ற ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துகின்றன. இவை வேலை செய்கின்றன, ஆனால் பொருள்ரீதியாக ஒரு தேவையற்ற/மடத்தனமான வகையில். இவற்றின் பங்களிப்பெல்லாம் அரசின் மேல் மக்களுக்கிருக்கும் கோபத்தைத் தணிப்பதும், மக்களுக்கு நியாயமான உரிமைகளாகக் கிடைக்க வேண்டியதை இலவசமாகவும், கொடையாகவும் கொடுக்கிறதும்தான். இவர்கள் மக்களின் மனதை நிலைமாற்றுகிறார்கள். இவர்கள் மக்களை ஒரு சார்ந்து நிற்கும் பலிகளாக்கி, அவர்களது அரசியல் எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள். NGOக்கள் அரசுக்கும் மக்களுக்குமிடையேயான ஒரு தாங்கி/தடுப்பாக இருக்கிறார்கள். பேரரசுகளுக்கும் குடிகளுக்குமிடையே இவர்கள்தான் நடுவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதுவர்கள்.

நெடுநோக்கில், இந்த NGOக்கள் இவர்களுக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்களேயன்றி, இவர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அம்மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. இவர்களைத்தான் தாவரவியலாளர்கள் 'காட்டி' (indicator) என்கிறார்கள். தாராளமயமாக்கலினால் விளைந்த சீரழிவுகளை விட NGOக்களினால் விளையும் சீரழிவு அதிகமானதாக இருக்கும் போலத் தோன்றுகிறது. இந்த NGO விவகாரத்தைச் சுரீரென்று சொல்வதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தவுடன், பின்னாலேயே NGOக்களை அனுப்பி அந்தச் சீரழிவுகளைச் சுத்தம் செய்யச் சொன்னது. இந்த NGOக்களுக்குப் பணம் சரியானபடி கிடைக்கவும், இவை அந்தந்த நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படவும், இவை மேம்போக்கான ஒரு அரசியல் அல்லது வரலாற்றுக் காரணத்தைக் வடிவமைத்துக் கொள்கின்றன. எப்படியாயினும், ஒரு சங்கடமான வரலாற்று அல்லது அரசியல் காரணம், ஏழை நாடுகளிலிருந்து வரும் அரசியலல்லாத (அப்படியென்றால் மிகவும் அரசியலானது என அர்த்தம்) துயரச் செய்திகள் இவையெல்லாம் அந்த (இருளடைந்த) நாடுகளிலிருக்கும் (இருளடைந்த) மக்களைப் பாதிக்கப் பட்டோராய்க் காட்டுகின்றன. இன்னொரு ஊட்டச்சத்து குறைந்த இந்தியன், இன்னொரு பசியான எத்தியோப்பியன், இன்னொரு ஆப்கன் அகதி முகாம், இன்னொரு சிதைக்கப்பட்ட சூடானியன்...இவர்களுக்கெல்லாம் ஒரு வெள்ளைக் காரனின் உதவி அவசியப்படுகிறது. இவ்வகையில் (NGOக்கள்) அறியாமலேயே மாறாத நிறவெறியையும், மேற்கத்திய நாகரீகத்தின் கருணையையும் (கடுமையான அன்பு) மறுவுறுதி செய்கிறார்கள். அவர்கள்தான் இந்நவீனவுலகின் மதச்சார்பற்ற சமயச் சங்கத்தார்கள்.

கடைசியில், சிறிய அளவில், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, NGOக்களுக்குக் கிடைக்கும் பொருளானது, ஏழை நாட்டுப் பொருளாதாரத்தில் நிகழும் நிழலான அரசியல் கொடுக்கல் வாங்கலைப் போலவே ஆகிவிடும். இது இன்னதைச் செய் என்று கட்டளையிட ஆரம்பிக்கும். இது மோதலைப் பேச்சுவார்த்தையாக்கும். இது எதிர்ப்பை அரசியலற்றதாக்கிவிடும். உள்ளூர்க் குடிகளின் தன்னம்பிக்கை மிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் குறுக்கிடும். NGOக்களிடம் பணமிருக்கிறது, இந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு போராட்டக்காரனுக்கு வேலை கொடுக்க முடியும், இதன் மூலம் அவர்களை அந்த நேரத்துக்கு ஏதோ நல்லது செய்வதாக (பொருளீட்டுவதாக) நினைக்க வைக்க முடியும். உண்மையான அரசியல் எதிர்ப்புகள் இந்தக் குறுக்குப் பாதைகளையெல்லாம் காட்டாது. அரசியலை NGO-ஆக்கம் செய்வது போராட்டங்களை ஒரு நற்பாங்கான, அறிவார்ந்த, சம்பாத்தியத்துடனான, 9 மணியிலிருந்து 5 மணிவரைக்குமான ஒரு வேலையாக மாற்றுகின்ற ஆபத்தாகிறது. அத்தனையையும் ஒரு சில நாணயங்களை விட்டெறிந்து. உண்மையான எதிர்ப்புக்கு உண்மையான விளைவுகளிருக்கும். சம்பளமிருக்காது.

(இன்னும் ஒன்னு இருக்கு)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

சென்ற மாதம் சான்பிரான்சிஸ்கோவில் அருந்ததி ராய் உரையாற்றியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை தமிழில் தர முயன்றிருக்கிறேன். மொழி மாற்றத்தில் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

ஆதிக்கங்களை எதிர்த்து, தம் உரிமைகளுக்காக மக்கள் தம் அரசுடனோ அல்லது ஒரு மாற்று நாட்டு அரசுடனோ போராடிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் சந்திக்கும் முக்கியமான மூன்று சவால்கள் என்ன?

1. போராட்ட இயக்கங்களும் ஊடகங்களும்
போராட்டக்காரர்களும், ஊடகங்களும் சந்தித்துக் கொள்வது ஒரு சிக்கலான இடம். ஒரே இடத்தில் காலத்தைச் செலவிட செய்தித்தாகம் கொண்ட ஊடகங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதை அரசு கற்றிருக்கிறது. வியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ்செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள். சோவியத் தன் படைகளை ஆப்கானிஸ்தானத்திலிருந்து மீளப்பெற்றபோது இதுதான் நடந்தது. இப்போது சி.ஐ.ஏவின் ஹமீத் கர்ஸாயை உட்கார வைத்து மீண்டுமொருமுறை ஆப்கானிஸ்தானைப் போரில் தள்ளியிருக்கிறது. இதே மாதிரித்தான் இன்னொரு சி.ஐ.ஏ இயத் அல்லாவியை ஈராக்கிலே நிறுத்தி, இப்போது கிட்டத்தட்ட ஊடகங்கள் இங்கிருந்தும் கிளம்பிவிடும்.

அரசுகள் "பொறுத்திருந்து பார்க்கும்" உத்தி மூலம் போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதில் தேர்ச்சியடைந்து வருகின்றன. அதே நேரத்தில் போராட்ட இயக்கங்கள் கண்ணைக் கவரும் விதத்திலும், சுலபமாய்க் கொள்ளப் படும் விதத்திலும் புதுப் புதுப் பிரச்சினைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு சுய மரியாதையான மக்களின் இயக்கமும், ஒவ்வொரு பிரச்சினையும் தனக்கென ஒரு விளம்பர பலூனை வானிலே பறக்க விட்டிருக்கின்றன. இதே காரணத்தினால்தான் ஊட்டச்சத்து குறைவுப் பிரச்சினையை விட பட்டினிச் சாவு பிரச்சினை/விளம்பரம் அதிகக் கவனத்தைப் பெறுகிறது. தொலைக்காட்சிக்கு உகந்த வகையில், உடைந்து சீரழிக்கும் காட்சி தெரியும் வரை அணைகள் பெருஞ்செய்தியாவதில்லை. ஆனால் அப்போது செயலுக்குக் காலம் கடந்துவிட்டிருக்கும். மேலேறும் தண்ணீருக்குள் நின்று உன் வீடும் உடைமைகளும் மூழ்குவதைப் பார்த்துப் போராடுவது பழைய உத்தி. தொலைக்காட்சிகளுக்கு அது சலித்துவிட்டது. எனவே அணைகளால் இடம் பெயர்க்கப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் புது மாயங்களைக் காட்டிப் போராட வேண்டியிருக்கிறது அல்லது போராட்டத்தை விட்டுவிட வேண்டியிருக்கிறது.

வண்ணமயமான ஆர்ப்பாட்டங்களும், வாரக்கடைசி ஊர்வலங்களும் முக்கியமானவைதான், ஆனால் போர்களை நிறுத்துவதற்கு அவை வலிமையற்றவை. போர்வீரர்கள் சண்டையிடுவதையும், ஆயுதங்களைக் கப்பல்,விமானங்களில் ஏற்றுவதையும், ஆதிக்கங்கள் உலகெங்கும் திறந்திருக்கும் பொருளாதாரக் கதவுகளைப் புறக்கணிப்பதையும் செய்யும்போதே போர்கள் நிற்கும். குடிகளின் கீழ்ப்படியாமை மூலம் நாம் ஒரு சேதியைச் சொல்ல விரும்பினால், முதலில் இந்த ஊடகங்களின் பிரச்சினை சார்ந்த தனம், சாதாரணமானவற்றை விலக்கும் தனம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். இயல்பு என்று அரசுகள் அழைப்பதை (உண்மையில் கொடூரம், அநீதி, ஒத்துக்கொள்ளப் படமுடியாதது) விசாரணை செய்ய நாம் நம் அனுபவத்திலிருந்தும், கற்பனையிலிருந்தும் புதிய உத்திகளை உண்டாக்க வேண்டும். உணவு, தண்ணீர், இருப்பிடம், சுயமரியாதை போன்ற சாதாரணத் தேவைகளைக்கூட ஒரு தொலைதூரக் கனவாக்கி விட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் நிலையை நாம் தோலுரிக்க வேண்டும். உண்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது, போர் என்றால் பிழையான/ நீதியற்ற அமைதியின் விளைவே என்று உணர்தலாகும். போராட்ட இயக்கங்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய மக்கள் கூட்டத்துக்கு இணையாக வேறெந்தப் பலமும் கிடையாது. பலமான இந்தக் கூட்டத்துக்கு எந்த (அரசுகளிடம்) மாற்றும் கிடையாது.

நிறுவனங்களை உலகமயப்படுத்தலினால், முடிவு செய்வோருக்கும் அந்த முடிவுகளினால் பாதிக்கப் படுவோருக்குமான தூரம் பெருகிவிட்டது. World Social Forum போன்ற மன்றங்களால் இத் தொலைவு குறைக்கப் பட்டிருக்கிறது. பல நாட்டு மன்றங்களுக்கிடையேயான தொடர்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டு முக்கியமானதும் பாதுகாப்பானதுமாகும். உதாரணமாக, இந்தியாவின் முதல் தனியார் அணை, மகேஷ்வர் அணை, கட்டப்பட்ட போது நர்மதா பச்சாவொ அண்டோலன் (NBA), ஜெர்மானி, சுவிட்சர்லாந்து இயக்கங்களும், பெர்க்லியின் பன்னாட்டு நதிகளின் கூட்டமைப்பு ஆகியவையும் இணைந்து செயலாற்றி அத்திட்டத்திலிருந்து பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களை விலகிக் கொள்ளச் செய்தது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமலிருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. இந்த உள்ளூர் இயக்கங்களின் போராட்டமே வெளியுலகில் இருக்கும் ஆதரவாளர்களால் உலகளவில் பெரிதொலிக்கப் பட்டு அந்த அணைத்திட்ட முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்தது. குறிப்பிட்ட திட்டங்கள், குறிப்பிட்ட நிறுவனங்களைக் குறிவைத்த எண்ணிலடங்கா இத்தகைய கூட்டு முயற்சிகள், இன்னொரு உலகைப் படைக்க உதவும். முதலில் நாம் ஆரம்பிக்க வேண்டிய நிறுவனங்கள் யாரெல்லாம் சதாம் உசேனுடன் கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்தார்களோ அவர்களும், இப்போதைய ஈராக்கிய சீரழிவால் யாரெல்லாம் லாபம் அடைகிறார்களோ அவர்களும்.

(தொடரலாம்)

Old MacDonald-ன் பண்ணை!



சின்னப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வேண்டும். நிறைய. கண்ணைக் கவரும் ஆங்கிலப் புத்தகங்களைக் கண்டால் ஏழையேக்கம் வந்து கவ்வுகிறது. இதோ இது ஒரு அழகான ஆங்கிலப் பாடல். எங்கள் மகனுக்கு இதை இப்படித் தமிழில் சொல்லிக் கொடுக்கிறோம். அவனுக்கும் பிடித்துப் போயிற்று. எங்களுக்கும்.

இதற்கான சுலபமான மெட்டு இங்கே. அதே மெட்டில் பாடினால் நன்றாயிருக்கும். கற்பனை மற்றும் தொண்டை வளத்துக்கேற்ற மாதிரி ஒலிகளை எழுப்பலாம்! :)

தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ
அங்கு கோழிக்குஞ்சுகள் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு சிக்சிக்
அங்கொரு சிக்சிக்
எங்கபாத்தாலும் சிக்சிக்-சிக்சிக்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு குதிரைகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ந்நேய்ய்
அங்கொரு ந்நேய்ய்
எங்கபாத்தாலும் ந்நேய்-ந்நேய்ய்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு வான்கோ ழிகளும் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு க்காப்ல்
அங்கொரு க்காப்ல்
எங்கபாத்தாலும் க்காப்ல்-க்காப்ல்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு பன்றிகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ஒய்ங்க்
அங்கொரு ஒய்ங்க்
எங்கபாத்தாலும் ஒய்ங்க்-ஒய்ங்க்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு மாடுகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு மூ
அங்கொரு மூ
எங்கபாத்தாலும் மூ-மூ
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!


அங்கு கழுதைகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ஹீ
அங்கொரு ஹா
எங்கபாத்தாலும் ஹீ-ஹா
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு செம்மறி ஆடுகள் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு பே
அங்கொரு பே
எங்கபாத்தாலும் பே-பே!

இங்கொரு ஹீ-ஹா
அங்கொரு ஹீ-ஹா
இங்கே ஹீ - அங்கே ஹா
எங்கபாத்தாலும் ஹீ-ஹா

இங்கொரு மூ-மூ
அங்கொரு மூ-மூ
இங்கே மூ, அங்கே மூ
எங்கபாத்தாலும் மூ-மூ

இங்கொரு ஒய்ங்க்
அங்கொரு ஒய்ங்க்
இங்கே ஒய்ங்க், அங்கே ஒய்ங்க்
எங்கபாத்தாலும் ஒய்ங்க்-ஒய்ங்க்

இங்கொரு க்காப்ல்
அங்கொரு க்காப்ல்
இங்கே க்காப்ல், அங்கே க்காப்ல்
எங்கபாத்தாலும் க்காப்ல்-க்காப்ல்

இங்கொரு ந்நேய்ய்
அங்கொரு ந்நேய்ய்
இங்கே ந்நேய்ய், அங்கே ந்நேய்ய்
எங்கபாத்தாலும் ந்நேய்-ந்நேய்

இங்கொரு சிக்சிக்
அங்கொரு சிக்சிக்
இங்கே சிக், அங்கே சிக்
எங்கபாத்தாலும் சிக்சிக்-சிக்சிக்

தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

பீபாடி அருங்காட்சியகம்

இப்போ அப்போ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்து நேற்று ஒருவழியாய்ப் போனோம். இது ஏல் பல்கலையினால் அமைத்துப் பராமரிக்கப் படுகிறது. வரலாறு மற்ற தகவல்களை இங்கே காணலாம்.

3 தளங்கள். தரைத்தளம்: ஆப்பிரிக்கக் குட்டி யானையின் எலும்புக்கூடு வரவேற்றது. பல்லின் கடி/வெட்டுப் பரப்பு ஆப்பிரிக்க யானைக்கும் நம்ம ஊர் யானைக்கும் வேறமாதிரி இருக்குமாம். உள்ளே டைனோசர்களின் மாதிரிகள், புதைபடிவங்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புக்கூடுகள். அதில் ட்ரைசெரடாப்ஸ் என்ற முக்கொம்பரின் மண்டையோட்டைத்தான் பார்க்கிறீர்கள்.



ஓ.சி. மார்ஷ் என்பாரின் பங்களிப்பு 1800ன் பிற்பகுதியில் அறிவியல், இக்காட்சியகம், இப்பல்கலை ஆகியவற்றுக்கு மதிப்புக்குரியது. வயோமிங் மாநிலத்தில் யாரோ தோண்டியெடுத்து இன்னாதுன்னு இவர்கிட்ட அனுப்ப, அதை ஆராய்ந்து டொரொசாரஸ் எனக் கண்டது இவரே. டொரொசாரஸின் பெருஞ்சிலையை (கவனிக்க, மார்ஷின் சிலை அல்ல) அருங்காட்சியக வாசலில் நிறுவ ஏற்பாடு நடக்கிறது. ஒவ்வொரு டினோசர் வகைக்கும் வாழ்ந்த காலம், சாப்பாட்டுப் பழக்கம் இதெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது. பக்கச் சுவற்றின் மேற்பகுதியில் 110/16 அடி என்ற அளவில் ஒரு ஓவியம். இது 1942ல் வரையப்பட்டது. 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னான ஒரு வனக்காட்சி, டினோசர்கள் மேய்கின்றன. அப்புறம் புதைபடிவமான மரங்கள், இலைகள் ஆகியவற்றை வெட்டியெடுத்து வைத்திருக்கிறார்கள். புதைபடிவத்துக்குள் உட்சென்ற மண்ணும் உப்புக்களும் கலந்து வண்ணம் காட்டுவது பிரமிப்பு.



சற்றுத் தள்ளி ஊர்வன, பாலூட்டிகளின் பல்வேறு வகைகள், பரிணாம வளர்ச்சிகள். நிறைய பொருட்களை அமெரிக்காவிலேயே பெற்றிருக்கிறார்கள். மிகுதி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்கல்/வாங்கல் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் தளம்: விண்கற்கள் (மேலே கருப்பு, உள்ளே வெளுப்பு!). ஒரு கண்டுபிடிப்புக் கூடம். அதிலே பல்வகைத் தாதுக்கள், கடல்வாழ்/செத்த உயிரிகள். சிலதைத் தொட்டு அறியலாம். சிலது ஷ்ஷ்! அப்புறம் பீபாடி, ஓ.சி. மார்ஷ் ஆகியோரின் வாழ்க்கை/பணிகளைப் பற்றிக் கொஞ்சம்.

மூன்றாம் தளம்: கனெக்டிகட்டின் உயிரியல் வளம். பறவைகள், விலங்குகள், நிலப் பரப்பு. தாதுக்கள், உப்புக்களின் வண்ணக் கோலம் கொஞ்சம் தள்ளி. இங்கே பாருங்கள், இந்தக் குருவிகளின் நிறங்களை, கலப்பில் பிறந்தவை. இதெல்லாம் இயற்கையில் சகஜமாம்!



பெரும் வெள்ளை அன்னப் பறவைகள். இவற்றை நீங்கள் இன்றும் காணலாம். அப்புறம் செவ்விந்தியர்களின் வாழ்வைப் பற்றிய சேகரிப்புகள். எகிப்தியரின் பழம்பொருட்கள், இரண்டு மம்மிகளும் அடக்கம்.

எப்போதும் இருக்கும் (தத்துவார்த்தமாகப் படிக்கக் கூடாது) காட்சிப் பொருட்களும், வேறு அருங்காட்சியகங்களிலிருந்து வந்து போகும் காட்சிப் பொருட்களுமாக சுறுசுறுப்பாக இயங்குகிறது இக்காட்சியகம். இந்தப் பக்கம் வருபவர்கள் அவசியம் பார்க்கவும்!

கற்றுக் கொண்ட இன்னொன்று: எல்லாவற்றையும் ஆற அமரப் பார்த்துக் குறிப்பெடுத்து வந்து ஒழுங்காய் எழுதத் தனியாய்ப் போனால் ஆகும், இரண்டு வயதுப் பிள்ளையின் அப்பனாகப் போனால் ஆகாது!

தலித் மூட்டிய அடுப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி. 'சிவபுரி' மாவட்டத்துல. 150 பிள்ளைகளில் 115 பேர் "மேல்சாதி". மதிய உணவு சமைக்கும் ஒரு சமையற்காரம்மா. அவரொரு தலித். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மேல்சாதிக் குஞ்சுகள் அந்தம்மா சமைத்ததைச் சாப்பிட மறுத்து விட்டனராம். பிள்ளைகளுக்கு வீட்டில் அப்படிச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தலைமையாசிரியர் மாணவர்களைத் திருத்துவதற்குப் பதில் சாதீயாதிக்கத்துக்கு அடிபணிந்து இன்னொரு மேல்சாதிச் சமையற்காரரைப் பணியமர்த்தினாராம். இப்போ ரெண்டு பேருக்கும் பாதிப்பாதிச் சம்பளம், சமைப்பது மேல்சாதி ஆயா. பிள்ளைகள் தலித்துகளோடு உட்கார மாட்டார்களாம், ஒன்றாயிருந்து சாப்பிட மாட்டார்களாம். ஒரு அரசு அதிகாரி தனக்கு எதுவும் தெரியாது ஆனா தெரிஞ்சா நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாராம்.

இது மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் எங்கோ ஆயிரத்திலொன்றாக நடக்கிறதென்று நான் நினைக்கவில்லை. நாளைய நாட்டை உண்டாக்கும் பள்ளிக்கூடத்தில் இந்த நிலைமை. இந்தப் பிள்ளைகள் வளர்ந்து என்ன செய்யுமென்பதையும் அந்த மேல்சாதீய மனப்பான்மை எப்படிப் பல்கிப் பெருகும் என்பதையும் ஊகிப்பது கடினமில்லை. ஒரு சமையற்காரரின் சுயமரியாதையை அழித்து, அவரது பாதி வயிற்றில் அடித்து இந்தச் சாதீயம் காக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு ஆச்சாரம் பார்க்கிற மேல்சாதியெல்லாம் தலித் சாகுபடி செய்கிற நெல்லை, காய்கறியை, வளர்க்கிற ஆட்டை, கோழியைச் சாப்பிட மாட்டோம், அவன் மேய்க்கிற மாட்டுப் பாலைக் குடிக்க மாட்டோம் என்று சொல்லிவிடுமா?

செய்தி

காற்றென வந்தது கூற்றமிங்கே



வெஸ்ட் ஹேவன் கடல், கரையில் இந்த அமைதி நேற்று. முந்தாநாள் இப்படியில்லை. பெருங்காற்று. பேரலைகள். கன்னியாகுமரி பாறையில் மோதித் தெறிக்குமே அப்படியாபட்டவை. கலங்கிய தண்ணீர். கருமை. கடற்பருந்துகள் கடலை விட்டு வெகுதூரப் புல்வெளியில் கூட்டமிட்டுத் திரிந்தன. அந்தக் காற்று Frances புயலின் மிச்ச சொச்சமாயிருந்திருக்கக் கூடும்.

அமெரிக்கத் தென்கிழக்குக் கடற்கரையோரம் புயலுக்குப் பிரபலம். ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட ஜூலையிலிருந்து அக்டோபர் வரைக்கும் புயற்காலம். அப்போது கிளம்பும் புயல்கள் ஒவ்வொன்றுக்கும் அகர வரிசையில் பெயர்கள் இருக்கும். வானிலை முன்னறிவிப்புகள் ஓரளவுக்குத் துல்லியமாகவே கிடைக்கும். இங்க, இப்ப, இந்த வேகத்துல வந்து அடிக்கும்னு தெரியும். இந்த அனுமானம் தப்பிப் போகிறதும் உண்டு.

1999ல நான் தென்கரோலினாவில் இருந்தபோது Floyd அப்படின்னு ஒரு புயல் வந்தது. மிகப் பெரும்புயல் என்ற பீதி கிளம்பியது. எல்லோரும் ஊரைவிட்டுக் கிளம்பியோடுங்கள் என்று கண்டிப்பான உத்தரவைக் கொடுத்துவிட்டார்கள். நிறைய நிறுவனங்கள் மூடப் பட்டன. நான் என் பழைய மூத்த ஆய்வாளரோடு கிளம்பி ஒரு 250 மைல் தாண்டி அட்லாண்டா நகருக்குச் சென்றுவிட்டேன். சென்ற பயணம் நெடிது. ஏனெனில் மூன்று தென் மாநிலத்தவர்களை அன்றைக்குத் திடீரெனக் கிளப்பி விட்டு விட்டார்கள். நெடுஞ்சாலையில் நெருக்கடி. புயல் பீதி, சாலை எரிச்சல் எல்லாமாய்ச் சேர்ந்து அந்த இரவைத் தின்றன. எப்படியோ. புயல் வந்தது. நானிருந்த ஊரில் பெரும் அடியில்லை. மேலே போய் வடகரோலினாவைத் தாக்கி, அப்புறம் மேலே மேலே நகர்ந்து வட மாநிலங்களையும் பெருமழையால் குளிப்பாட்டிவிட்டுக் கரைந்து போனது.

பார்த்திருப்பீர்கள், இப்போது ஐவன், ஒரே மாத காலத்தில் மூன்றாவது புயல். க்ரினேடாவைக் கிட்டத்தட்டச் சின்னாபின்னமாக்கிவிட்டு ஜமேய்காவில் இப்போது ஆட்டம். நகர்ந்து புளோரிடாவுக்கு வருமென்று கணிப்பு. நிற்போரும், கிளம்புவோருமாய் அங்கே அமளி. உயிர்களையும் உடைமைகளையும் பெயர்த்தெறிந்துவிட்டு ஒருவாரம் கழித்து இந்தப் பக்கம் வந்து காற்றூதிக் கடல்கலக்கி ஓய்ந்து போகலாம் ஐவன்.
தலைப்பு உபயம்: பாரதியாரின் "புயற் காற்று" கவிதை.

உலகே மாயம், வாழ்வே மாயம்

நானும் தெனமும் குந்திப் பாக்குறேன். நாலு வரி எழுதுறதும், பின்னோக்கித் தட்டித்தட்டி, இல்லன்னா ஒன்னா சேத்து இழுத்து ஒரே அமுக்குல அழிச்சுத் தள்ளிப்புட்டு "ஹ போயி எதயாச்சும் படிக்கலாம்"னு தாவித்தாவி மணியக் கரைச்சு, வேலைக்கிப் போயி, ஆடிக் களைக்கிறதும். இதே சக்கரந்தான். இதுக்குக் காரணம் இல்லாம இல்ல.

ஊர்லயெல்லாம் நெடுஞ்சாலையில சில இடங்கள்ல விபத்துப் பகுதின்னு போட்டிருப்பாங்கள்ல, அந்தமாதிரி ஆகிப்போச்சு நம்ம வலைச்சாலை. வண்டியை எடுத்தாலே மோதல், அடிதடி, வெட்டுக் குத்து, நீயா நானா. சண்டை ஒரு வாரம், கிளைச் சண்டை மறு வாரம், கிளை மெயினாகி அதற்கடுத்து, போஸ்ட் ட்ரமாட்டிக் டிஸார்டர், சாம்பல், புகை, உள்நெருப்பு விவகாரம் தொடர்கதை. இத்தனைக்கும் சண்டைக்காரனாகவா பெத்துப் போட்டிருக்காங்க என் அப்பனாத்தா? "அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையேன்னும், அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிய வேண்டும் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்" அப்படின்னும் கருப்பையா கோயில் கொளத்துல குளிச்சுப்புட்டு காலையில காலையில அப்பாவோட சேர்ந்து பாடிப் பாடித்தான் வளர்ந்தேன். ஆனாலும் பாருங்க வலைப்பூக்கள்ல சண்டைன்னு வந்தா அதுல எங்கேயாச்சும் ஒரு எடத்துலயாவது எம்பூ பூத்திருக்கும் 'நல்ல' பாக்கியம். இப்படியொரு ஒருமைப்பாட்டுக் குழப்பியா இருக்கது தேவையான்னு ஒரு எண்ணம்.

அப்புறம் செய்தி சார்ந்து எழுத முடியாத ஒரு மனோநிலை. அதான் கூகிள்ல தட்டுனா போன நிமிஷத்துல யாரு முக்குனா மொதக்கொண்டு என்னத்தப் பத்தித் தெரியனுமோ அத்தனையும் வருது, இதுல என்னத்துக்கு நான் வேற தினசரி மாதிரி வேலை பாக்கனும். ஜெயலலிதாவும் வைக்கோவும் அடிச்சுக்கிட்டதை நான் எழுதி என்னாவப் போவுதுங்கறேன். செய்தி பாதிக்கிதாம், அந்தப் பாதிப்புதான் இன்றைய நானாம். என்ன, நியூஸ்பேப்பரே பாக்காதவங்க என்னோட வலைப்பூவுக்கு வாராங்களா என்ன? Xinhua, News Today, Reuters, தினமணி, தினமலர் (கடைசிச் செய்திகள்), தினத்தந்தி அல்லாரும் பாடுறதை நானும் ஒருக்கப் பாடணுமா? வேணுமின்னா அதுலயே யாரும் எழுதாமக் கெடக்குறதைப் புடிச்சாந்து போடலாம், இந்த வார தலித் கொடுமைகள், அருந்ததி ராயின் ஆகஸ்டு பேச்சு, ஆணுறை விநியோகிக்க விடாமத் தடுக்கும் தமிழகப் போலீஸ் இப்படியாக. ஆனா இதுலயும் சிக்கல். ஏன்னா இதெல்லாம் பெரச்சனை புடிச்சது. அதாவது தாய்நாட்டுல இருக்க பெரச்சனைகளைப் பேசக் கூடாதுங்கற ஒரு சங்கடமான நெலம. (பெரச்சனை மட்டுந்தான் கண்ணுல படுதா, நல்லதே படாதான்னு கேக்குறீங்களா? பஞ்சர் ஒட்றவரு முள்ளுக் குத்துன ஓட்டையத் தான் தேடுவாரு, அவரப் போயி நீங்க ஆப்டிமிஸ்டிக்கா இருக்கணும் இதோ பாருங்க இம்பூட்டு ட்யூபு நல்லாருக்கேன்னு கேக்க முடியாது). ஆனா இதையெல்லாம் எழுதப் போனா வம்பு வரும். இதையும் தாண்டி நடுநிலை யோக்கியர்களின் you peopleதனமான ஆதிக்கப் பேச்சுக்கள். இதெல்லாம் எனக்குத் தேவையா? மேலும் சண்டை போட்டுப் போட்டு அன்பு சுண்டி வத்தி எனக்கு மனுசத் தன்மை போயி சிடுமூஞ்சி ஆயிருவேனோன்னு உளவியல் பயம் வர ஆரம்பிச்சிடுச்சு.

ஆக, இவருக்கொரு மழை, அவருக்கொன்னு, ந்தோ அவருக்கொன்னுன்னு மாசம் மும்மாரிப் பொழியற கதை மாதிரி, நல்ல சேதி சொன்ன நண்பருக்கொரு முழுக்கு, நடுவுல நின்னு அமைதியாப் பாத்த அத்தனை பேருக்கும் ஒரு முழுக்கு, சண்டையிலே என்னோடு புரண்டோருக்கொரு முழுக்குன்னு முத்திருமுழுக்குப் போட்டுவிடலாமா என்றுகூட இருந்தது. சண்டை போட்டுப்புட்டு வீட்டுக்கு வந்தா ஏன் அங்க போறன்னுதான் அம்மாப்பா மொத கேள்வி. இந்த மாதிரி "தள்ளியிரு" அப்படின்னு சொல்லிச் சொல்லியே நம்மளை இப்புடி ஆக்கிட்டாங்கன்னு நெனக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியன் இருக்கான், மணிப்பூர்ல என்ன ஆனா எனக்கு என்ன மேன், என்னைப் பாதிக்காத வரைக்கும் நான் அதைப்பத்திக் கவலைப்படப் போறதில்ல, எனக்கு வேலைத் தலைக்கு மேலன்னு போறான். இந்த மாதிரி "யானை வாழ்ந்தா என்ன பூனை தாலிய அறுத்தா என்ன" வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் போயிட்டம். புளியமரத்துல போயி ஆடுனா வம்பு வருதேன்னு அங்க போவாம இருக்க முடியுதா, ஆடாம இருக்க முடியுதா? அந்தந்த நேரத்துல அததைச் செஞ்சுப்புடணும். அதான் வந்துட்டேன். நீங்க அணைச்சாலும் சரி, அடிதடிக்கு வந்தாலும் சரியே. தீர்மானம் பண்ணிக்கிட்டு எழுத முடியாது, காதலிக்க முடியாது. இன்றைக்கு இந்தப் பினாத்தல், நாளைக்கு என்னவோ.

சுத்திச் சுத்தி வந்தீக...


(படம்: யாரோ)
போன வாரமெல்லாம் கார் டயர்ல காத்து நிக்கல. இன்னக்கி அடிச்சா நாளக்கிம் அடிக்கணும். டயர மாத்தனும்னு ரொம்ப நாள் யோசன. பக்கத்தூட்டுக் காரரு சொன்ன கடக்கிப் போனேன். Town Fair Tires. கடக்காரரு வந்தாரு, டயரு டயராத் தடவுனாரு, "பின்னாடி ரெண்டும் தேவலாம். ஆனா மாத்துனா நல்லது. முன்னாடி ஒன்னு மொட்டை இன்னொன்னு முக்கா மொட்டை. ஒன்னு மாத்துறது நல்லதில்ல, ரெண்டையும் மாத்து"ன்னார். சரி ரெண்டுக்கும் என்ன வெலை? டயரு டன்லப்பு, ஒன்னு 59 டாலரு, அந்தக் கூலி, இந்தக் கூலி, பழய டயரத் தூக்கிப் போடக் கூலி, ஆகக் கூடி 208 டாலர். இன்னும் கொஞ்சம் விசாரிச்சுப் பாக்கணும்னு தோணுச்சு. இருங்க வர்றேன்னு கிளம்பினேன்.

அடுத்த கடை. Pepboys. அதுல நான் நாலையும் மாத்தனும் என்ன வெலன்னு கேட்டேன். கடைக்காரர் சொன்னது: "Hankook அருமையான டயரு, நாலும் 262 டாலரு, உனக்கு நூறு ரூவா தள்ளுபடி, 162 குடு, வேற எதுவுமில்ல பூட்டிக்கிட்டுப் போ." என்னமோ இடிக்கிதே, இந்த டயரு நல்லாருக்குமா, பேரு கேள்விப்பட்டதே இல்லியே? இந்தா வர்றேன்னு கிளம்பிட்டேன். நடுவுல எங்கம்மா சொல்ற "ஆளப் பாத்தான், கூலியப் போட்டான்" கதையா எதாச்சும் தலையில மொளகா அறைக்கிறானா?ன்னு யோசனை.

அடுத்த கடை. Costco. கடைக்காரர், "உன் காருக்குக் கம்பெனி சொல்றது இது. Hன்னு போட்டிருக்கனும். அது எங்கிட்ட இல்ல. ஆனா கொஞ்சம் அகலமானது H போட்டு இருக்கு. ஒரு டயர் 76 டாலர். இந்த அகல டயரு வேணும்னா நாலும் புதுசாத்தான் போடணும். H போடாம இருக்கதை நான் போடக் கூடாது, கம்பெனி அடிக்கும்." அது என்னாங்க H? அதான் speed ratingஆம். நான் புரிஞ்சுக்கிட்டது என்னன்னா H போட்டிருக்கது 130 மைல் வேகத்துல 10 மணி நேரம் தொடர்ந்து ஓட்றதத் தாங்குமாம். இங்க அவ்வளவு வேகமாப் போக முடியாதுன்னாலும் இப்படித்தான் இருக்கணும்னு அந்தக் கார்க் கம்பெனி சொல்லிருக்காம். நீ Sears கடையில பாருன்னார். பாத்தேன். அது இல்லீங்க, ஆனா நா ஒரு படி கொறச்சதைப் போடலாமுன்னு எங்கம்பெனி சொல்லுது, இதப் போடவான்னு ஒன்னைச் சொன்னார். வேண்டாம்னுட்டேன். இப்ப எனக்கு H ஒட்டிக்கிச்சு. முந்தி பாத்த கடையிலெல்லாம் இந்த Hஐப் பத்தி யாரும் மூச்சு விடல. ஏதோ ஒரு டயர்னு தேடிக்கிட்டுத் திரிஞ்ச எனக்கு H-இச்சை புடிச்சிடுச்சு. நீ வேணா அதோ அந்தக் கடையில கேளேன்னார்.

அது இன்னொரு Town Fair Tires. அங்க Hதான் வேணும்னு கறாரா சொல்லிப்புட்டேன். அவரு, இங்க பாரு டன்லப் (அதே பழைய கடை 59 டாலர் டன்லப்பு) இதுல S போட்டிருக்கேன்னேன். இதுக்கும் Hக்கும் ரொம்பவெல்லாம் வித்தியாசமில்ல, ஒரு பத்து மைல்தான் கொறச்சல், எல்லா காருக்கும் இதான் போடுறோம். இன்சூரன்ஸ¤ ஒத்துக்குமான்னேன் நான் (வெவரமாப் பேசுறதா நெனப்பு). அதெல்லாம் ஒத்துக்கும், இங்க பாரு உனக்கு ரெண்டு டயருக்கு இருநூத்தி இருவத்தி (எத்தனைக்கோ) பண்ணித் தர்றேன். எனக்கு திருப்தி இல்லாம இல்ல நாம் போறேன்னேன். இல்ல இங்க வா பொறுன்னு படபடன்னு கம்பியூட்டரத் தட்டிட்டு, 202க்குப் பண்ணிறலாம் என்ன சொல்ற? வேணாம் நா அப்புறம் வர்றேன். இல்ல, நில்லு. மறுபடியும் பட பட. சரி உனக்காக இதான் செய்ய முடிஞ்சது, என்னோட கமிஷனெல்லாம் வாணாம், இந்தா 174க்கு முடிச்சிருவோம். அசந்த ஒரு சின்ன இடைவெளியில பூந்து மண்டையாட்ட வச்சுட்டார். 45 நிமிசத்துல புது டயர் ரெண்டு. S போட்டது.

வீட்டுக்கு வந்து நெட்டுல பாத்தா Sக்கும் Hக்கும் 18 மைல் வித்தியாசம். மனசுக்குள்ள நமநமன்னு என்னமோ பண்ணுது. Costcoவுல மாட்டுற கூலி, சுத்துற கூலி, நிதானக் கூலி, அந்தக்கூலி, இந்தக்கூலியெல்லாம் இல்ல, டயரு தேஞ்சு குப்பக்கிப் போற வரைக்கும் வாரண்டி. ஆனா நாம் போட்ட கடையில எல்லாத்துக்கும் காசு. ஏமாந்துட்டேனோ? ஆமான்னு வீட்டுக்குள்ளேருந்து ஒரு குரல் வந்துச்சு. திருப்பிக் குடுத்துறலாம். குடுத்துட்டு? 76 டாலர் டயர் நாலு, அகல டயரா H போட்டதா Costcoவுல வாங்கி பூட்டிறலாம். Town Fairக்குப் போன் பண்ணி வேணாம்னேன். நீங்க வாங்க எதாருந்தாலும் பேசிக்குவோம்னாரு கடக்காரரு. Costco வெவரத்தோட போனேன். இங்க பாருங்க, எனக்கு Hதான் வேணும், Costcoவுல 304+வரியோட 322க்கு இத்தனை உத்தரவாதத்தோட போட்றான், எனக்கு நீங்க போட்ட S வேணாம், கயட்டிக்கங்கன்னேன். என்னா சார் இப்படிச் சொல்லிட்டீங்க, அதே H டயரு, அதே சர்வீஸ் அவன விட 5% குறைஞ்ச வெலயில நாம்போட்டுத் தாரேன். அதான் என் கம்பெனி பாலிஸி, ஒங்க சந்தோஷந்தான் முக்கியம், நீங்க செவ்வாக்கெழம கூப்புடுங்க, டயரு வந்துருச்சான்னு சொல்லுறேன், மாத்திப்புடுவோம்னு சொல்லக் கிளம்பினேன். இதான் நான் டயருகொண்ட/கொள்ளும் படலம்.

சர்புதீங்கடையில எங்கப்பாவோட சைக்கிளுக்குப் பஞ்சர் ஒட்டிக்கிட்டதையும் இதையும் என்னமோ தெரியல கோத்துப் பாக்குறேன்.