ஈழப்போரை ஒரு கணினி விளையாட்டாக ஆக விடலாமா?!

அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.

பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் 21 நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் யுபிசாஃப்ட் (UbiSoft) என்ற நிறுவனம், வரும் 2010 நவம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தவிருக்கும் Ghost Recon 4 / "Ghost Recon: Predator" என்ற ஒரு கணினி விளையாட்டில் ஈழத்தைப் போர்க்களமாகக் காட்டி, அதில் ஸ்ரீலங்கா ராணுவத்தைக் கதாநாயகர்களாகவும், தமிழ்ப் போராளிகளைத் தீவிரவாதிகளாகவும் காட்டுகிறது (பார்க்க!). இந்த நிறுவனம், அங்கு நடந்த இனவழிப்போ அல்லது தொடரும் மனிதவுரிமை மீறலோ குறித்து அறியாமலும் இதைச் செய்திருக்கலாம். அல்லது அறிந்தே இதனைச் செய்யலாம். எப்படி இருந்தாலும், இவ்விளையாட்டை வெளியிட வேண்டாம் என்று அந்த நிறுவனத்துக்கு நாம் ஒவ்வொருவரும் தெரிவிப்பது அவசியம். அவர்களுக்குத் தொலைநகல் அனுப்பலாம், தொலைபேசியில் அழைத்துப் பேசலாம். மின்னஞ்சலைக் காணவில்லை (கண்டுபிடிப்பவர்கள் சொல்லலாம்!). சிங்களப் பேரினவாதிகள் ஏற்கெனவே இந்த விளையாட்டுக்காகத் தங்கள் ஏகபோக ஆதரவை ஆரவாரமாக காட்டத் தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் நாம் செயல்படவேண்டியது அவசியம். இவ்விளையாட்டினைக் குறித்த இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ Youtube இணைப்பில் போர்க்குற்ற ஆதாரங்களின் சுட்டிகளோடு உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள். அவர்களது கருத்துக் களத்திலும் சென்று நமது கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

இதற்கு முன் இஸ்ரேல்-பாலஸ்தீனம் அல்லது இங்கிலாந்து-வடக்கு அயர்லாந்து குறித்த கணினி விளையாட்டுக்கள் வெளிவரும் முன் எழுந்த சர்ச்சைகளால் அவ்விளையாட்டு நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன. அவற்றைப் போலவே இந்த விளையாட்டும் வெளியிடப்படக் கூடாது. ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மாறக்கூடாது. இச்செய்தியை அனைத்து நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்கள் நாட்டில் இருக்கும் UbiSoft நிறுவனத்தின் கிளைக்கோ அல்லது பிரான்சில் இருக்கும் தலைமையகத்துக்கோ உங்கள் கண்டனங்களை அனுப்புங்கள். இலங்கை அரசு ஒரு இனவழிப்பு அரசு என்றும், இவ்விளையாட்டு இனவழிப்பை நியாயப்படுத்தும் அநாகரிகச்செயல் என்றும், இவ்வகையான விளையாட்டுக்கள் இனங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்போம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகப்போகும் இந்த விளையாட்டை வெளிவராமல் முடக்குவோம்! விரைந்து செயல்படுவோம்!

உலகின் பலநாடுகளிலும் கிளைவிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கான முகவரியை இந்த இணைப்பில் சென்று தேடிக்கொள்ளலாம். அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளுக்கு உங்கள் கடிதங்களை அனுப்பலாம். இந்தியாவில் புனேயிலும், சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி முதலான 21 நாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. அனைத்துலகப் பதிவர்கள் உடனடியாகச் செயல்படவேண்டும்!

கீழேயிருப்பது அமெரிக்காவுக்கான முகவரி:

UbiSoft Business office
625 Third Street
San Francisco - CA 94107
Tel: +1 (415) 547 4000
Fax: +1 (415) 547 4001


Ubisoft Red Storm Entertainment
2000 Centre Green Way
Suite 300
Cary, NC 27513
Tel: +1 (919) 460 1776

ஈழம் என்ற ஒற்றைச் சொல்லின் பின்

இப்போதெல்லாம் ஒரு வெள்ளைத் தாளையோ அல்லது கணினித் திரையில் வெண்மையாய்ப் பரந்து திறக்கும் ஒரு புதிய கோப்பினையோ கண்டால் என்னுள் எதுவும் பீறிட்டெழுவதில்லை. பொறுக்கியெடுத்துக் கோர்த்துக் கவிதையெனக் காட்டுவதற்கும் பாதைவழிகளில் எதனையும் சேகரித்துக் கொள்ளும் உற்சாகமில்லை. அவ்வப்போது திரளும் வார்த்தைகள் வெண்புகையாய்க் கலைந்து பறந்து போகின்றன. தந்தையைப் பறிகொடுத்த நண்பனுக்காகவோ, பத்தாண்டுகளாய்க் கூடிவாழ்ந்தவளுக்காகவோ எதையும் எழுதவில்லை. சிற்சில நாட்களில் சிற்சிலவற்றின் பின் ஓடிப் பார்க்கிறேன். ஒரு குறுகியகாலப் பரபரப்பின் பிறகு அவை என்னை முன்னிலும் தனிமையில் விட்டுப் போய்விடுகின்றன. எப்போதாவது எழுந்துவிடலாம் என்றுதான் வறண்ட கிணற்றிலிருந்து வெளியே பார்க்கிறேன். கிணற்றின் சுவர்களைக் கெள்ளிக் கெள்ளி மறுபுறத்திலே படிகளை அமைக்கத்தான் உள்ளுகின்றேன். அல்லது என்றேனும் மழைவந்து கிணறு நிரம்ப மேலேறிவிடத்தான் வானை நோக்கியிருக்கிறேன். செய்வதறியேன். சுடுபட்டவர்களைக் காக்கவியலாத, புறங்கைகள் கட்டப்பட்டுச் சுடுகொட்டடியில் நாட்களை எண்ணி நிற்பவர்களை விடுவிக்கவியலாத சொற்களால் வேறு எப்பயனுமில்லை என்று நினைக்கும்போது சொல்ல எதுவுமிருப்பதில்லை. அழுது பொறுக்காது அயர்ந்து கிடந்தாரை அப்புறப்படுத்தி இல்லையேல் அவர்களின் மேலாகவே ஊர்வலத்துக்காகப் பாதையமைக்கப்படுகிறது. அசோகனின் சக்கரங்கள் நிணச் சேற்றில் உருள வெற்றித் தேர் நகர்கிறது. நம்பிக்கை என்று காதில் விழும் வார்த்தை என்னுள் அச்சத்தைத் தோற்றுவிப்பதைப் பார்க்கிறேன். இருப்பினும் இது இப்படியே இருந்துவிடப் போவதில்லை.