சிலையொன்று காண்கிறேன்

வேலைக்குச் செல்லும் வழியில் நான் அநேகமாய் தினமும் கண்டுவிடும் காட்சிகளில் இச்சிலையுமொன்று. அழகான சிலையென்பதையும், இதனடியில் "An American Dream" என்றெழுதி ஒரு பெயரெழுதியிருப்பதையும் தவிர இச்சிலையைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. இந்தக் கூட்டு விளையாட்டு, துள்ளும் இளமை, ஒரு கால் மட்டுமே ஒட்டியபடி அந்தரத்தில் நிற்கும் அந்தப் பெண், ஒட்டுமொத்தச் சிலையையும் தாங்கும் அவன் பாத நுனிகள். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது. எத்தனையோ சேதிகளைச் சொல்வதுபோல் எனக்குப் படுகிறது. இனி சிலையை உங்களிடம் விட்டுவிடுகிறேன்!

வீரப்ப சம்ஹாரம்

காடுகளை அழிப்பது தவறு. சந்தனம், தேக்கு போன்ற மரங்களைக் கடத்துதல் குற்றம். மனிதர்களைத் துன்புறுத்துவதும் கொல்வதும் நியாயமன்று. இவற்றில் எனக்கு மறுப்பில்லை. வீரப்பன் ஒரு குற்றவாளி. மக்களாட்சியின் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டு நியாயமாகத் தண்டிக்கப் படவேண்டியவர். அவர் மட்டுமில்லாது அவரை யாரெல்லாம் தவறிழைக்கத் தூண்டினரோ அவர்களனைவருமே தண்டிக்கப் படவேண்டியவர்கள். இக்குற்றவாளியைத் தேட உடலை வருத்திக் காட்டில் கிடந்து பாடுபட்ட காவல்துறையினரின் உழைப்புக்கு என் வணக்கங்கள். ஆனால் நீதியின்பாற்பட்ட அணுகுமுறைக்கு ஒரு குற்றவாளியைக் கொண்டுவராததன் மூலம் அரசு பிழை செய்து விட்டதாகக் கருதுகிறேன். வீரப்பன் கொலை முன்வைக்கும் கேள்விகள் எத்தனையோ. இதற்கான பதில்கள் எல்லாம் ஒவ்வொருவரின் அனுமானம், நம்பிக்கை, எதிர்பார்ப்பே. உண்மையில் நடந்தது என்ன என்பது நடத்தியவர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக எத்தனையோ முரண்பாடுகளைக் காண்கிறேன். உங்களுக்கு இதற்கு மேலும் தோன்றியிருக்கலாம்.
1. வீரப்பனை இவ்வளவு தூரம் அழைத்து வந்த ஓட்டுனரால் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றிருக்க முடியாதா?
2. முதலில் சுட்டது போலீஸ்தான் என்கிறது கர்நாடகப் போலீஸ். இல்லை வீரப்பன் கூட்டம்தான் என்கிறது தமிழக போலீஸ்.
3. சடலத்தைக் குடும்ப வழக்கப்படி புதைப்போம் என்று குடும்பத்தினர் சொல்ல, போலீஸ் வீரப்பனின் சடலத்தை எரிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறது, இதற்காக எரிபொருட்களையும் போலீஸே தயாராக வைத்திருந்திருக்கிறது. எரிக்கச் சொல்லி அவசரப் படுத்தியிருக்கிறது. வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒருவழியாய்ப் போலீஸ் புதைக்க ஒப்பியிருக்கிறது.
4. சடலத்தை முழுமையாகப் பார்க்க மனைவியைக் கூட அனுமதிக்கவில்லை. முகம் மட்டுமே காட்டப் பட்டது.
5. வீரப்பனின் இடது கண் காணாமல் போயிருப்பது இந்த என்கவுண்டரின் பேரில் பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

என்னைப் பாதித்த சில:
1. தினமலர் வெளியிட்ட முதல்வரின் பஞ்சமுகமலர்ச்சி (ஐந்து விதமாகச் சிரித்திருந்தார்). ஐயாயிரம் குர்தியர்களைக் கொன்றதாக, இன்னும் பல சர்வதேசக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சதாம் உசேனைப் பிடித்துவிட்டதாக (கவனிக்க: உயிருடன்) என்று புஷ் சொன்னபோதுகூட அவர் முகத்தில் இத்தனை முகமலர்ச்சியை நான் பார்க்கவில்லை.
2. போலீஸாரின் வீதிவழிக் கொண்டாட்டங்கள், இனிப்பு, விழா, அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட உடனடிச் சலுகைகள், தீபாவளி-நரகாசுரன் கதைகள்.
3. தேவாரம் அவர்களின் பிபிசி செவ்வியில் "இந்த மனித உரிமைக்காரங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தா வேலை பாக்க முடியாது" என்ற வாசகங்கள். இது ஒரு தலைமைப் போலீஸின் மனித உரிமை மீதான கருத்து. இதுவே இப்படியிருந்தால் மற்ற அனைத்து மட்டங்களிலும் மனித உரிமை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறி.
4. அபத்தத்தின் உச்சமாக, ஒரிஸாக் கடற்கரையில் துர்கா தேவி வதம் செய்வதற்கு இந்த வருடம் மகிஷாசுரனை விட்டுவிட்டு வீரப்பனின் உருவத்தைச் செய்திருக்கிறார்களாம். வீரப்பனின் குடும்பத்திலிருப்பவர்களும், முக்கியமாய் அவரது குழந்தைகள், இன்னுமொருமுறை வீரப்ப சம்ஹாரத்தைப் பார்த்துக் கொள்ளலாமல்லவா. இதனைத் தொடர்ந்து தமிழர்களும் இன்னொரு தீபாவளிப் பண்டிகையை ஏற்படுத்திக் கொண்டாடலாம். அல்லது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரத்தில் வீரப்பனை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மரணத்துக்கு, அதுவும் சந்தேகத்துக்குரிய மரணத்துக்குப் பின் இப்படியான எதிர்வினைகளைப் பார்ப்பது வேதனையாயிருக்கிறது, அந்த ஆள் குற்றவாளியாகவே இருந்தாலும். இதற்கு மாறாக, மதத்தின் பெயரால் எத்தனையோ கொலைகளை நிகழ்த்திய நிகழ்த்தும் மதவாதிகள் பாதுகாப்பையும், உயர்மரியாதையையும் பெறுவதை இன்னொரு புறத்தில் நாம் கண்டபடியேதானிருக்கிறோம். எல்லோருக்கும் உரிமை என்பதை, மனித உரிமை என்பதை வெறுங்கனவென்று புறந்தள்ளி, ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியபடி தாழ்ந்தோரை இன்னும் தாழ்த்தும் மனநிலை என்று ஒழியும்? வீரப்பன் குறித்து நம் வலைப்பூவுலகில் கிளம்பிய வினைகளைப் பற்றி நான் எதுவும் எழுதுவதாயில்லை. மூக்கு சுந்தர் சொல்றது மாதிரி அவரவர் மூக்கு அவரவர்க்கு, வைத்துக் கொள்வோம்.

நிறம் மாறும் இலைகள்


சில வாரங்களாக இலைகள் உதிர்கின்றன. சாலைகளெங்கும் பழுத்த இலைகள். மரங்களில் வண்ணப் பூச்சு. பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்றன. காற்று பழுத்த இலைகளைக் கீழே தள்ளுகின்றது. மழை அவற்றை நனைக்கிறது. சீக்கிரம் மக்கிப் போக வைக்கவா இந்த மழை? சில்லென்று கார்காலம் கவிகின்றது.

அமெரிக்க வேகப்பெருஞ்சாலைகளைத் தவிர்த்துச் சிறு சாலைகளில் மெல்லப் பயணிக்கலாம். பன்னிற மரங்களை இருபுறமுங் கண்டபடி போகலாம். சிலவிடங்களில் ஏதோ பூக்களினால் செய்யப்பட்ட தோரணவாயிலினூடே நடப்பது மாதிரியான தோற்றம். தலையைச் சுற்றி அத்தனைத் திக்கிலும் வண்ணங்கள். எந்தப் புகைப்படக்காரனும் எடுத்துவிட முடியாதெனுமொரு சூழல். நானெடுத்த சிலவற்றை இங்கே இடுகிறேன். இனிவரும் வார இறுதிகளிலும் பயணிக்கவும், புகைப்படமெடுத்துக் காட்டவும் ஆவல். இலைகள் எனக்காகக் காத்திருக்குமாவெனத் தெரியாது. ஒரு கனத்த மழையிலும் காற்றிலும் சீக்கிரமாகவே உதிர்ந்து போகலாம்.


கொசுறு: இந்த இலைகளின் நிற மாற்றத்துக்கு, பச்சையம் குறைகின்ற காலத்தில், கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள் என்ற நிறமிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் காரணமாம். அத்தோடு இலையின் நிறமாற்றம் அந்த மரத்தின் வயது, வெளிச்சம், காற்று, மண், ஈரம், தகைவு(stress), சுரப்பு(hormone) எல்லாம் காரணமாம். இதனால்தான் பாருங்கள் ஒவ்வொரு மரமும் நிறமாறும் விகிதத்தில் மாறுபடுவதை. ஏன், ஒரே மரத்தில் அடியில் ஒரு நிறமும் உச்சியில் ஒரு நிறமும் இருப்பதைப் பாருங்கள். ரொம்ப எல்லாத்துலயும் அடிபடுறது சீக்கிரமே பழுக்குது, உதிருது!என் மேலேறிய பாஸ்பேட்!

வயலுக்குப் போட்டோமோ என்னமோ ஞாபகமில்லை, ஆனாலும் பாஸ்பேட்டுன்னதும் வயல்களுக்கு நடுவில அஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட மஞ்சள் நிற விவசாயக் கட்டிடமும் அதோட செவத்துல மீசையும் முண்டாசுமா நிக்கிற ஆளோட விளம்பரப் படமும் நினைவுக்கு வருது. நான் சொல்ல வர்ற பாஸ்பேட் வயலுக்கில்ல. நமக்கு. நம்மை ஆட்டுவிப்பது. நம்ம ஒடம்புல நடக்குற முக்கியமான வேதிவினையான பாஸ்போ ஏற்றத்தைப் பத்திச் சுருக்கமா இங்கே எழுதியிருக்கேன்.

உண்மை நின்றிட வேண்டும்!

மூடுன ஓட்டுக்குள்ள இருக்கது கதகதப்பாத்தான் இருக்கு. வெளியில நடக்குறது தெரியாம வேலை வேலைன்னு திரியறதும் ஒரு ஓடுதான். அப்புடித்தான் ஓடுது ஓட்டு வாழ்க்கை.

அப்படியிருந்தப்பதான் நேத்து மேடத்தோட செவ்வியை பிபிசில பாத்தேன்.

அம்மா, அய்யா, இத்யாதிகள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு. ஒலகம்ங்கறது உங்ககிட்ட வேட்டியும் சேலையும் இலவசமா வாங்கிக்கறவங்க மட்டுமில்ல. ஒங்ககிட்ட அரிசிக்குக் கையேந்திக்கிட்டும், ஒங்க தப்பால எரிஞ்சு சாம்பலாப் போன உயிர்களுக்கு நீங்க எறியற தயவுப் பண நன்றிக்குக் கட்டுப்பட்டு அமைதியாப் போற மானஸ்தனுங்க மட்டுமில்ல. ஓட்டு அவங்ககிட்ட இருந்தாலும் ஒலகம் வெளியிலயும் இருக்கு. வீட்டுக் கூரை மேல இருந்த மல்லாத்தி வச்ச கொடை வழியா வந்த 48 சேனல் காட்சி ஒங்களுக்கு மட்டுமிருந்தது அந்தக் காலம். திரைகடலோடுவது மேட்டுக்குடி என்பதும் அந்தக் காலம். இன்றைக்கு எங்களுக்கும் தெரியும். கேக்குறதுக்கெல்லாம் not at all அப்படின்னு யாரு சொல்லுவா, you must remember, you did not read அப்படின்னு எப்படியாபட்ட மனசுலேருந்து வருமின்னு எங்களுக்கும் தெரியும்.

அரசியல்வாதி, முதல்வர், பிரதமர்...நீங்க எல்லாரும் எங்கள் எஜமானர்கள் இல்லை. எங்களுக்குத் தொண்டு செய்றவங்கன்னு தெரிஞ்சுக்கங்க. நாங்க கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லணும். புஷ்ஷும் கெர்ரியும் சொல்றாங்க, ப்ளேயர் சொல்றாரு. பொய்யா மெய்யான்னு ஒங்க அகத்தின் அழகை முகத்திலும், உங்க வெத்து வார்த்தையைத் தாண்டி உண்மையையும் எங்க அறிவைக் கொண்டு நாங்க கண்டுக்குவோம். நீங்க ஒவ்வொருத்தரா வந்து பதில் சொல்லணும். அமெரிக்கத் தேர்தல் ரெண்டாம் கட்ட விவாதத்துல மக்கள் உக்காந்து கேட்ட மாதிரி எல்லாக் கட்சி/கட்சியில்லாத மக்களெல்லாம் ஒக்காந்து, ஒங்கள நடுவுல நிக்க வச்சு கேள்வி கேக்கணும். இது அரசியல்வாதிங்க மட்டுமில்ல, மக்கள் பணம் எங்கெல்லாம் புரளுதோ டாக்டரு, ஆராச்சிக்காரரு, எஞ்சினியரு, போலீசு, கலெக்டராபீஸ் கிளார்க்கு, தனியாரு, கெவுர்மண்டு எல்லாருக்கும் பொருந்தணும். ஒவ்வொரு டிவிகாரங்களும் வாராவாரம் இந்த மாதிரி ஆட்களை, ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை மக்கள் கேள்வி கேக்குறதைக் காட்டணும். சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒதுக்குற நேரத்தை இதுக்கு ஒதுக்கணும். டிவி ஸ்டேஷனுக்குள்ள ஒரு ரூமுக்குள்ள ஒக்கார வச்சு ஒண்டிக்கு ஒண்டி கேக்கக் கூடாது, பொது எடத்துல பொது மக்களுக்கு முன்னாடி ஒக்கார வச்சுக் கேக்கணும். அப்பதான் ஒரு பொறுப்பான, வெளிப்படையான, நேர்மைக்குக் கட்டுப்பட்ட அமைப்பை மீட்டெடுக்க முடியும்.

இப்படிப்பட்ட வெளிப்படையான ஜனநாயக அமைப்பு புடிக்கலை, வசதியான இருட்டடிப்பு ஜனநாயகந்தான் புடிச்சிருக்கு அப்படிங்கறவங்கதான் இந்த மாதிரிப் பேட்டிகளுக்கெல்லாம் பயப்படணும், அய்யோ என்னமா கொடையுறான்னு பாவப் படணும். யாரும் மகானில்லை. மாசுள்ளவர்கள்தான். அதைப் பரிசீலிக்கறதுலயும் திருத்திக்கிறதுலயுந்தான் அகவளர்ச்சி இருக்கே தவிர, நான் இரும்புக்கழியை நட்டு வச்சிருக்கேன் அது வேர்விட்டு வளர்ந்து பூப்பூக்கும்னா, இதுக்கு மேலயும் நாங்க நம்பத் தயாரில்லை.

எங்கே போனேன்

நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்களா? அப்படின்னா இது உங்களுக்குப் பெரிய அதிசயமா இருக்காது. போகாதவங்களுக்கானது இந்தப் பதிவு.

சியாட்ல் (Seattle) நகரம் வாஷிங்டன் மாநிலத்துல இருக்கு (இந்த வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர் இல்ல!). அங்கெ ஒரு அஞ்சு நாள் இருந்தேன். எலும்பாராய்ச்சியாளர் மாநாடு (American Society for Bone and Mineral Research). அந்த அமைப்புல சுமார் அம்பது நாடுகளைச் சேர்ந்தவங்க இருக்காங்க. நிறைய அமெரிக்கக் கூட்டம். பல நாடுகள்லேர்ந்தும் மக்கள் வந்திருந்தாங்க. சில தமிழர்களையும் சந்தித்தேன்.

ஒரு பெரிய மாநாட்டரங்கில் நடந்தது. காலையில யாராச்சும் பெரிய ஆள் ஒருத்தர் பேசுவார். இவரோட பேச்சு எலும்புத் துறையில் எல்லோருக்கும் பொதுவான விஷயங்களைப் பத்தி இருக்கும். அப்புறமா சின்னச் சின்னக் கூட்டங்கள். சின்னச் சின்ன அரங்குகளில். ஆனாலும் அவங்கவங்க ஆராய்ச்சி அவங்கவங்களுக்குப் பெருசு. நம்ம வலைப்பூக்கள் மாதிரி. சுவரொட்டி/தட்டிகளிலும் தங்களோட ஆராய்ச்சி முடிவுகளை ஒட்டி வச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க. ஒரு பக்கம் பாத்தீங்கன்னா கடைக்காரங்க. நா மருந்து வச்சிருக்கேன், நா கண்டுபிடிக்க புது மிஷினு வச்சிருக்கேன்னு கண்காட்சி காட்டுவாங்க. திருவிழா மாதிரிதான். காலையிலெ எட்டுலேருந்து சாயங்காலம் ஒரு அஞ்சு மணி வரைக்கும் இப்படி. பயனுள்ள நாட்கள். புதுப் புதுப் பாதைகள். பெருஞ்சந்தையிலிருந்து சில அழகான மணிகளை வாங்கிக் கொண்டு வந்தது மாதிரியான ஒரு அனுபவம். இதுக்குத்தான், இந்தத் தெளிவுக்கும், தீர்மானத்துக்கும், ஒரு பரந்த புரிதலுக்காகவுந்தான் வருசத்துக்கு ஒன்னு ரெண்டு தரம் மாநாடுகளுக்குப் போறது.

சியாட்ல் மைய நகரம் அழகானது. அமெரிக்காவில் நிறைய ஊர்களில் சாலைகளில் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் இதுவோ மக்கள் கூட்டம் நடக்கும் உயிர்த் துடிப்பானது. பசிபிக் பெருங்கடல் பல மைல்கள் தள்ளியிருந்தாலும் (கடலைப் பார்க்க ரெண்டு மணி நேரம் கார்ல போகனும்னார் ஒரு நண்பர்) கடலின் தண்ணீர் வளைந்து வளைந்து சியாட்ல் வரை உள்ளே வந்திருக்கும். அதிலே படகுகள். மூடுபனி கவிந்திருந்தது ஒரு தரம். அந்தக் கரையிலே சாப்பாடு, வியாபாரம், கண்காட்சி, பூங்கா, மக்கள் கூட்டம். பைக் சந்தை (Pike place market) அழகானது. நண்பர் குழாமோடு ஓரிரவு உண்டு குடித்துக் கும்மாளமிட்டுத் தெருக்களில் நடந்து ஒரு நடனக் கூடத்துக்கு வந்தோம். அந்தோ விதிவசமே, திங்கக்கிழமை லீவுங்க!

எல்லாம் ஒவ்வொரு உலகங்கள். அந்த மாநாடு ஓருலகம், இந்த வலைப்பூ ஓருலகம், வீட்டிலொன்று, வேலையிலொன்று. உள்ளேயொன்று கிடந்து எல்லாத்தோடயும் கலந்துக்கத் துடிக்குது. இதுலயா, இதுலயா, எதுல நானிருக்கேன்னு ஒட்டி ஒட்டிப் பாக்குது. போவட்டும். அறிவியல்ல கொஞ்சம் பொழுதைப் போக்கணும்னு ஒரு எண்ணம். பாக்கலாம்!