பாதரசம் சேர்ந்த மருந்துகள் - 2

மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் கட்டுரையின் மீதிப்பகுதி:

இரச மருந்துகளைப் பற்றிய எனது சில அனுபவங்கள்

இன்றைக்குச் சித்த மருத்துவத்துறையில் பரவலாக, மிக அதிகமாகக் கையாளப் படுகின்ற இரசக் கலப்புள்ள மருந்துகளில் மிக முக்கியமான ஒன்று இரசகந்தி மெழுகு. இந்த மருந்தை ஒரு வேளைக்கு 1 கிராம் வீதம் ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து கொடுத்தாலும், அதன் பின் சோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளியின் இரத்தத்தில் அல்லது சிறுநீரில் பாதகமான குறிகள் எதையும் காண முடிவதில்லை.

ஏனைய மருந்துகளோடு கலப்புறுகின்ற போது இரச மருந்துகளின் உலோக நச்சுத்தன்மை இழப்பதோடு மட்டுமல்லாமல் மருந்துத் தன்மையிலும் பாதுகாப்பான தன்மையோடு செயல்படுவதை நமது பட்டறிவு காட்டுகின்றது. நாட்பட்ட கீல்வாத நோய் (rheumatoid arthritis), தொழுநோய் (leprosy) போன்ற நோய்களுக்காக ஒரு மாதத்திற்கு ஒரு வாரம் இடைவெளிவிட்டுத் தொடர்ச்சியாக ரசகந்தி மெழுகு உண்டு வருகிறவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை serum creatinine, blood urea மற்றும் சிறுநீரில் புரதம், சீழ் அணுக்கள், சிவப்பு அணுக்கள் இருக்கின்றனவா என்று கவனித்துக் கொள்கிறேன். ஆனால் இரச மருந்துகள் பிருக்கம், ஈரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் மீது கடுமையான நச்சுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்ற நவீன அறிஞர்களின் கணிப்பை எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

அத்தகைய மதிப்பீடு மகா வீர மெழுகு, வான் மெழுகு போன்ற இரச சம்பந்தமான பச்சைவெட்டு மருந்துகளை வழங்குகின்றபோது நமது அனுபவத்திலும் ஒத்து வருவதாகவே உள்ளது. அம்மெழுகுகளை அம்மருந்தின் குறைந்த அளவாகிய 50 மில்லி கிராம் அளவில் நாளுக்கு இரண்டு முறை என்ற கணக்கில் கொடுத்த மூன்று நான்கு தினங்களிலேயே வாயில் உலோகச் சுவை, முகம் வீங்குதல், தோலில் அரிப்பு போன்ற நச்சுக் குறிகுணங்களைக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட நோயாளிகளில் பலரின் சிறுநீர் பரிசோதனையின்போது புரதத்தின் தடயம் (traces of albumin) இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

ஆனால் சண்டமாருதம், அயவீரம் ஆகிய மருந்துகளில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இவற்றைத் தேனில் குழப்பிக் கொடுப்பதால் இம்மருந்துகள் பெரும்பாலும் வாய்ப்புண், அல்லது ஈறு அழற்சியை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் மகாவீர மெழுகைப் போலவோ வான் மெழுகைப் போலவோ வழங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே நச்சுத் தன்மையைத் தோற்றுவிப்பதில்லை. சிலரில் 20 முதல் 30 நாட்கள் வழங்கிய பின்னரே நச்சுக் குறிகுணங்கள் நோயாளிகளால் மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

நன்றாக முடிக்கப் பெறாத நிலையில் இரண்டாம் நாளிலேயே சண்ட மாருதத்தின் நச்சுத்தன்மையால் வாய் வீங்கியவர்கள் உண்டு.

என்னுடைய நோயாளிகளில் நீண்ட கால இரச மருந்து சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்குச் சண்டமாருதத்தை 10 முதல் 20 மில்லி கிராம் அளவிற்கு மிகாமல் 500 மில்லி கிராம் அமுக்கிராச் சூரணத்தில் கலந்து ஒரு நாளைக்கு 2 முறை கேப்சூல்களில் போட்டு விழுங்கச் செய்து அரைத் தேக்கரண்டி தேனைக் குடிக்கச் சொல்வேன். இவர்களில் ஒரு மாத காலம் விழுங்கினாலும் எந்த வித நச்சுத் தன்மையும் தோன்றுவதில்லையென்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த நோயாளிகளின் நீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகளும் பாதகமான அறிவிப்புகளை ஏதும் தரவில்லை.

ஏனைய மருத்துவத் துறைகளில் மருத்துவம் பெற்றும் வலியின் காரணம் கண்டறியப்படவில்லை, வலியும் குணமாகவில்லை (pain of unknown origin) என வந்த மூன்று நோயாளிகளில் சண்ட மாருதத்தை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறேன்.

இந்த மூன்று நோயாளிகளில் இருவர் sciatica வகை ஒத்தைக்கால் வலியினாலும் ஒருவர் brachial neuralgia வகை ஒத்தைக் கால் வலியினாலும் பல மாதங்களாகச் சிரமப் பட்டவர்கள்.

சண்டமாருதத்தை மிகக் குறைந்த அளவில் அமுக்கிராச் சூரணத்துடன் வழங்குகின்ற போது அதன் கூட்டுச் செயல்பாடு சண்ட மாருதத்தின் நச்சுத் தன்மையைக் குறைத்து மருத்துவத் தன்மையை மேம்படுத்துவதாகத் தெரிகிறது. இரசக் கலப்பினால் திசுக்கள் சேதமடையாமல் அமுக்கிரா காப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் போபாலில் நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோன்றிய புண்களைப் பரிகரித்து லட்சுமணபுரி கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர சிங் இரசாயனங்களால் திசுக்களில் ஏற்படுகின்ற சேதத்தை அமுக்கிரா தடுப்பதாக அவரது ஆய்வின் முடிவை அறிவித்திருக்கிறார்.

பூரம் (mercurous chloride) சேர்ந்த மலமிளக்கி மருந்துகள் முந்தைய நாட்களில் நவீன மருத்துவத் துறையில் வழக்கில் இருந்து வந்ததாகவும், அதன் நச்சுத் தன்மை பிருக்கத்தைப் பாதிக்கும் அறிகுறிகள் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டதால் மருத்துவ வழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அறிகின்றோம்.

ஆனால் சித்த மருத்துவத் துறையில் சிற்றாமணக்கெண்ணெய், ஏலரிசி, சுக்கு இவை சேர்த்துச் செய்யப் படுகின்ற வெள்ளை எண்ணெய் மிகச் சிறப்பான மலமிளக்கியாகப் பயன்பட்டு வருகிறது. சிற்றாமணக்கெண்ணெய் குடித்தவர்களுக்குக் கழிச்சலைத் தொடர்ந்து ஏற்படுகின்றன மலச்சிக்கல் வெள்ளை எண்ணெய் வழங்கப்படும்போது காணப்படுவதில்லை. இப்படி வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவர்களில் பூரத்தினால் பிருக்க நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்காணிக்கும் வகையில் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்ட மறுநாள் இத்தகைய இருபது நோயாளிகளின் சிறுநீர் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் கவனிக்க இயலவில்லை.

கீல்வாத நோய்க்கு மருத்துவம் பெறுகின்றவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளை எண்ணெயை 15மிலி வழங்கி வருகிறோம். அவர்களில் எந்த வித பாதகமான நச்சுக் குறிகுணங்களையும் காண இயலவில்லை.

இரசக் கற்பூரத்தோடு சிற்றாமணக்கெண்ணெயும் அவற்றின் நச்சுத் தன்மையை இழந்து அவற்றின் மருத்துவப் பயனை மட்டுமே காட்டுகின்ற வகையில் வெள்ளையெண்ணெயின் மருத்துவக் கட்டு அமைந்திருக்கிறது. மேலும் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவருக்குக் கழிச்சலை நிறுத்தும் பொருட்டு after purgative வழங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது கிடையாது.

பாதரச வெளிப்பூச்சு மருந்துகள் (Topical applications)

நவீன மருத்துவத் துறையில் வெளிப்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகின்ற களிம்புகளில் பாதரசத்தைச் சேர்ப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குச் சொல்லப் படுகின்ற காரணம் இத்தகைய களிம்புகளில் சேர்கின்ற இரசம் உடல் குருதிச் சுற்றோட்டத்தினுள் ஈர்க்கப்பட்டுப் பொதுவான நச்சுக் குணங்களைக் காட்டலாம் என்பதே. சுரம், தோல் அரிப்பு முதலிய நச்சுக் குறிகுணங்களைக் கவனித்திருப்பதாகப் பதிவும் செய்திருக்கின்றனர். ஆனால் நடை முறையில் சித்த மருத்துவர்கள் அமிர்த வெண்ணெய், மேகவிரணக் களிம்பு, ஆகியவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் பயன்படுத்தி வருகிறோம். இவை நச்சுக் குணங்களைத் தோற்றுவிப்பதை எனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செயல் படுமாறு அதனுடைய இரசாயனக் கலவையை எவ்வாறு அமைத்துள்ளனர் என்பதை இரசாயன அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்தால் இத்தகைய மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்ய வசதியாக அமையும்.

ஆனால் இத்தகைய தரக்கட்டுப்பாடுகளைச் செய்வதற்கு மிக நுட்பமான தொழில் நுட்ப வசதிகள் தேவைப் படுவதாக அறிகிறோம். எடுத்துக்காட்டாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் அதனுடைய பொறுப்பு இயக்குநர் டாக்டர் ஜி. வேலுச்சாமியின் வழிக்காட்டுதலில், இலிங்கச் செந்தூரத்தில் சுரத்தைக் குறைக்கும் ஆற்றலை மதிப்பீடு செய்திருக்கின்றனர். இலிங்கச் செந்தூரத்தை 200 முதல் 300 மிகி வரை பாதுகாப்பாக வழங்கலாம். ஆனால் இலிங்கச் செந்தூரம் வழங்கப்பட்ட நோயாளிகளில் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்ததில் அதில் பாதரசத்தின் தடயமே கிடைக்கவில்லை. சிறுநீரிலும் அதற்குரிய அறிகுறிகள் காணப்படவில்லை என்கின்றனர்.

அண்மையில் சென்னை மைய சித்த மருத்துவ ஆராய்ச்சி மாளிகையின் மருந்தியல் நிபுணர் திரு கோஷ் அவர்கள் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த போது இது பற்றிக் கலந்துரையாடினேன். அவர்களுடைய கருத்துப்படி கொஞ்சமாவது பாதரசம் இரத்தத்தில் கலந்திருக்கக்கூடும். ஆனால் அதை அறுதியிட்டு ஆராயக் கூடிய வசதி இந்தியாவில் மிகச் சில அணுசக்தி நிலையங்களிலேயே இருக்கக் கூடும் என்றார்.

பாதரசத்தை சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தாத பிரிவுகளே கிடையாது எனலாம். ஆகவே அத்தகைய பாதரச மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்வதற்கு நுட்பமான கருவிகளோடு கூடிய மருந்துத் தரக்கட்டுப்பாடு நிலையம் ஒன்றினை நிறுவிட வேண்டும்.

முடிவுரை

சித்த மருத்துவத்தின் சிறப்பிற்குக் காரணமாக இருப்பவை அதனுடைய பாதரசக் கலப்புள்ள மருந்துகளே. பாதரச மருந்துகள் முக்கிய உறுப்புகளுக்குக் கேடு செய்யலாம் என்ற எச்சரிக்கையை நவீன மருந்தியல் அறிஞர்கள் தந்துள்ளனர். ஆனால் நடைமுறையில் இத்தகைய அச்சம் எல்லாப் பாதரச மருந்துகளுக்கும் பொருந்துவதில்லை என்பதைக் கண்டிருக்கிறோம். நன்றாக முடிக்கப் பெறாத, முறைகேடாக வாங்கப்படும் இரச மருந்துகளால் தீங்குகள் ஏற்படும் என்பதிலே நமக்கும் உடன்பாடுதான். ஆகவே பாதரச மருந்துகளை நீண்ட கால நோய்களுக்கு வழங்குகின்ற காலத்தில் முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது பாதரச் அம்மருந்துகளைச் சிறந்த முறையிலும் ஆபத்து இல்லாமலும் வழங்குவதற்கு உதவியாக இருக்கும். நவீன வேதியியல் அறிஞர்களும், உயிர் வேதியியல் அறிஞர்களும், மருந்தியல் அறிஞர்களும், மருத்துவ அறிஞர்களும் அவர்களுக்குள்ள வாய்ப்பிற்கு ஏற்பச் சித்த மருத்துவத்திலுள்ள இரச மருந்துகளை ஆய்வு செய்ய முன் வர வேண்டும். அப்படி முன் வந்தால் உலக மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இன்னும் சிறந்த முறையில் பாதரச மருந்துகளைப் பயன்படுத்தலாம்.


---------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை கீழ்க்கண்ட புத்தகத்திலிருந்து தட்டச்சு செய்யப்பட்டது:

சித்த மருத்துவ ஆய்வுக் கோவை. தொகுதி -1, பக்கம் 9-19
தொகுத்தவர் பேராசிரியர் மு. சதாசிவம், இயக்குனர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
முதற்பதிப்பு 1990. இரண்டாம் பதிப்பு 2000. விலை ரூ 125.

இப்புத்தகம் 1990ல் நடந்த சித்த மருத்துவக் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட 75 கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பல அரிய செய்திகளும், வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

பாதரசம் சேர்ந்த மருந்துகள்-1

நேற்றைய பதிவு/பின்னூட்டங்களைத் தொடர்ந்து இக்கட்டுரையை இங்கு தட்டச்சி இடுவது பயனளிக்கும் என நினைக்கிறேன்.

பாதரசம் சேர்ந்த மருந்துகள் - சில அனுபவங்கள், சில கருத்துக்கள்.
புது.ஜெயப்பிரகாஷ் நாராயணன், எம். டி (சித்தா)
இணைப்பேராசிரியர், மருத்துவம்
அரசினர் சித்த வைத்தியக் கல்லூரி, பாளையங்கோட்டை.


முன்னுரை

"சூதகந்தி தாதுபற்பம் சொன்னநாட்டார் சிகிச்சை
ஓதரியமூலி இம்மண்ணூர் சிகிச்சை - வேதடரும்
சத்திரசாராக்கினி நிசாசரச் சிகிச்சையென்றே
முத்தரத்தது ஆகும் மொழி"

-பதார்த்த குண சிந்தாமணி

தாதுப் பொருட்களைக் கொண்டும் பாதரசத்தை அடிப்படையாகக் கொண்டும் செய்யப்படுகின்ற மருத்துவமே சிறந்த மருத்துவம் என அனுபவ அறிவினால் உறுதிப்படுத்தியவர்கள் சித்தர்கள். இன்று அரசினரால் நடத்தப்படுகின்ற சித்த மருத்துவ மனைகளில் பல வகையான பாதரச மருந்துகள் (mercurial preparations) உள்ளுக்கு வழங்கப்படும் மருந்துகளாகவும், புறப்பூச்சு மருந்துகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றின் பயன்கள் கண்கூடாகக் கண்டவை. இன்றைய அறிவியலில் உன்னதமான அளவிற்கு உயர்ந்திருக்கின்ற நவீன மருந்தியல் துறையில் அவர்கள் பயன்படுத்திய பாதரசம் சேர்ந்த மருந்துகள் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்டுப் பாதரசம் சேர்ந்த மருந்துகள் பெரும்பாலானவை அவர்களுடைய பாடப் புத்தகங்களிலிருந்து அகற்றப் பட்டுவிட்டன.

சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தப் படுகின்ற பாதரசம் சேர்ந்த பச்சை வெட்டு மருந்துகளைப் பொறுத்த வரை மேற்கண்ட நவீன அறிஞர்களின் கருத்துகள் பெருமளவுக்குப் பொருத்தமுடையனவாக இருக்கலாம். முறையாகத் தூய்மைப் படுத்தப்பட்டு இரசாயனச் சமையலுக்கு உட்படுத்தப் படுகின்ற பாதரச மருந்துகளுக்கு இந்த மதிப்பீடு பொருந்தாது. பாதரசத்தோடு சேர்கின்ற ஏனைய மருந்துப் பொருட்கள், துணை மருந்துகள், பத்திய முறைகள் இவைகளெல்லாம் பாதரச மருந்துகள் உடலில் செயற்படும் முறையை (pharmacodynamics) சீர்படுத்துகின்றன எனக் கருத இடமிருக்கிறது.

நடைமுறையிலுள்ள இரசக் கலப்புள்ள மருந்துகள்:

உள் மருந்துகள்

1. அயவீரம் (mercuric chloride)
2. ஆறுமுகச் செந்தூரம் (mercury)
3. இலிங்கச் செந்தூரம் (red sulphide of mercury)
4. கௌரி சிந்தாமணி (mercury)
5. சண்டமாருதச் செந்தூரம் (mercuric chloride, mercurous chloride, red sulphide of mercury)
6. சிவனார் அமிர்தம் (mercury)
7. இரசகந்தி மெழுகு (mercury, mercurous chloride)
8. படிகலிங்கத்துவர் (red sulphide of mercury)
9. பூரணச் சந்திரோதயம் (mercury)
10. வெள்ளை எண்ணெய் (calomel)
11. பரங்கிப் பட்டைப் பதங்கம் (mercury, cinnabar)
12. பட்டுக் கரும்(ப்?)பு (mercury, cinnabar, mercuric chloride, mercurous chloride)
13. கஸ்தூரிக் கரும்(ப்?)பு (mercury, calomerl, cinnabar, red sulphide of mercury)
14. இடி வல்லாதி (calomel)
15. மேகநாதக் குளிகை (cinnabar, red sulphide of mercury)
16. அகத்தியர் குழம்பு (mercury)
17. சாந்தச் சந்திரோதயம் (calomel)
18. வசந்த குசுமாகரம் (cinnabar)
19. பிரமானந்த பயிரவம் (cinnabar)

புறமருந்துகள்

1. அமிர்த வெண்ணெய் (mercuric chloride)
2. மேகவிரணக் களிம்பு (mercury, calomel, mercuric chloride, cinnabar)
3. வங்கவிரணக் களிம்பு (calomel, red sulphide of mercury)

இன்னும் பல இரசக் கலப்புள்ள மருந்துகள் பரம்பரை மருத்துவர்களால் கையாளப் படுகின்றன. விரிவு கருதி இங்கே குறிப்பிடப் படவில்லை.

நுட்ப மருத்துவம்

பாதரசத்தையும் பாதரசக் கலப்புள்ள மருந்துகளையும் கையாளுவதில் தற்கால மருத்துவ விஞ்ஞானிகளை விடச் சித்தர்கள் மிக விரிவான அனுபவ அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்குப் போதுமான நூலாதாரங்கள் உண்டு. இலிங்கத்திலிருந்து இரசத்தைப் பிரித்தெடுத்தல் (destructive distillation of mercury from cinnabar by sublimation), தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றில் இரசத்தைச் சேர்த்து இரசக் கலவையை (amalgam) உண்டாக்கி லோகமாரணம் செய்து மருந்தாக்கிப் பயன்படுத்தியது சித்தர்களுடைய மருந்தியல் அறிவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

நவீன மருத்துவத்தில் பாதரசக் கலப்புள்ள மருந்துகள் சிறுநீர் பெருக்கிகளாகவும் (diuretics), மேகப்பிணி விலக்கியாகவும் (anti-syphilitic), மலமிளக்கியாகவும் (laxative), அழுகலகற்றியாகவும் (anti-septic) சில தோல் நோய்களில் வெளிப் பிரயோகமாகவும் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சித்தர்கள் மேற்குறித்த நிலைகளில் மட்டுமல்லாமல் சுரப்பிணி, குன்மம், கழிச்சல் நோய்கள், கீல்வாத நோய்கள், புற்று நோய்கள் ஆகியவற்றில் தேவைக்கேற்ப உள் மருந்தாகவும், புற மருந்தாகவும் பயன்படுத்தி வந்திருப்பது இரச மருந்தியலில் அவர்களின் ஆழ்ந்த நுட்பத்தையும் அனுபவத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் வயிற்றுப் புண், கீல்களில் ஏற்படும் அழற்சி, புற்று நோய் போன்ற நோய்களில் சித்த மருத்துவத் துறையில் வழங்குவதைப் போல் வழங்குவதில்லை. நவீன மருத்துவ அறிஞர்களைக் கேட்டால் மேற்குறித்த மருந்துகளை விடச் சிறந்த மருந்துகளைக் கண்டறிந்திருக்கின்றோம் எனச் சொல்வார்கள். எது சிறந்தது என்பதை ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால்தானே கண்டறிய முடியும். ஒப்பு நோக்கும் ஆய்வு நடத்த வேண்டும் என்றால் நம்மால் அது முடியாது. சித்த மருத்துவத் துறையோடு தொடர்புடைய நவீன மருந்தியல் அறிஞர்களும் (non-clinical pharmacologists) மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை அணுகும் கல்வி அறிவில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களே சித்த இரச மருந்துகள் மேற்கண்ட நோய்களைத் தீர்க்கும் தன்மையுடையவை என்று சொன்னாலும் மருத்துவமனையில் வழங்கிய அனுபவத்தை வைத்துச் சொல்கிறார்களா என்ற கேள்வி எழத்தான் போகிறது.

சித்த மருத்துவத் துறையில் வழக்கத்தில் உள்ள பாதரச மருந்துகள் எந்த அளவிற்கு மருத்துவப் பயன் உடையவை, தீய குணங்கள் இல்லாமல் எந்த அளவிற்குப் பயன்படுத்தத் தக்கவை என்பதை நவீன மருத்துவ அறிஞர்களோடு இணைந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். இத்தகைய ஆய்வுகள் நடத்தப் பட்டாலும் நடத்தப் படாவிட்டாலும் பாதரச மருந்துகள் சித்த மருத்துவத் துறையிலிருந்து வழக்கொழிந்து போய்விடப் போவதில்லை. ஒப்பு நோக்கிய ஆய்வுகள் நடத்தினால் இன்னும் அதிகமான மக்கள் இதன் பயனைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படலாம்.

குடற்பகுதியில் மட்டுமே அதிகமாக, குறிப்பாக செயல்படக் கூடியதாகவும் அதே நேரத்தில் உடலில் அதிகமாக ஈர்க்கப் படாமல் செயல்படக்கூடிய இரச மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்று கழிச்சல் நோய்களுக்கான மருந்துகளில் இலிங்கத்தைச் சேர்த்தது வியக்கத் தக்க சித்தர்களுடைய பட்டறிவிற்கு எடுத்துக்காட்டு.

இரச நஞ்சு பற்றிய அறிவு

நன்றாக முடிக்கப் பெறாத அல்லது பொருத்தமான முறையில் வழங்கப்படாத இரச மருந்துகள் எத்தகைய கேட்டினை விளைவிக்குமென்பதைக் குறி குணங்கள் வாயிலாகச் சித்தர்கள் விளக்கியிருப்பது இன்றைய நவீன மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்ற இரச நஞ்சுக் குறி குண இயலுக்குப் பொருந்துவனவாகவே உள்ளன. பிருக்கப் (kidney) பாதிப்பை ஏற்படுத்தி உடலை வீங்கச் செய்வது, செரிமான மண்டலத்தில் தீவிர அழற்சியை ஏற்படுத்தல், நரம்பு மண்டலத்தைத் தாக்கி மனநோய்க் குறிகுணங்களை ஏற்படுத்தல் இவற்றையெல்லாம் சித்தர்கள் நன்கு கவனித்துப் பதிவு செய்திருக்கின்றனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்டிருக்கிற இரச நஞ்சு முறிவுகளும் நல்ல பயனை அளிக்கின்றன. உயிர் வேதியியல் அடிப்படையிலும், வேதியியல் அடிப்படையிலும் இவை எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் கண்டறிந்தால் இரச மருந்துகளை மிகச் சிறப்பான முறையில் கையாளலாம்.

இக்கட்டுரையின் மீதி அடுத்த பதிவில்.

நாட்டு வைத்தியம் - சசிக்கு ஒரு பதில்

இது சசியின் பதிவிற்கான மறுமொழி.

விரிவாய் அலசியிருக்கிறீர்கள். எல்லா மூலிகை வைத்தியர்களும் வெத்து வேட்டுக்கள் என்பதான ஒரு மனநிலையைப் படிப்பவர்களுக்கு இது ஊட்டிவிடுமோ என்ற அச்சத்திலேயே இவ்விளக்கத்தை எழுதுகிறேன்.

RIMP என்பது Registered Indian Medical Practioner என்பதைக் குறிக்கும். இதற்குள் நிறைய குளறுபடிகள் நடக்கின்றனவென்றாலும் நாம் இங்கு சில விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

பேருந்து வசதி கூட இல்லாத கிராமங்களில் இந்த டாக்டர்கள்தான் தலைவலிக்கும் சுரத்துக்கும் அடிபட்டதற்குக் கட்டுக் கட்டவும், விஷம் குடித்தவர்க்கு வாந்தி எடுக்க வைத்துப் பக்கத்தூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்புவதும். எல்லா குக்கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்புலன்ஸ் அல்லது எல்லாக் குடிகளுக்கும் சாரிடான், மெட்டாசின் தெரியும் வரைக்கும் இந்த டாக்டர்கள்தான் இவர்களது குறுகிய கால வைத்தியர்கள். இவர்கள் வாங்கும் ஊதியம் 5 அல்லது 10 ரூபாய்கள், அல்லது அவர்களது உண்டியலில் ஒரு காணிக்கை. இவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதில்லை. இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது, ஊசி போடக் கூடாது. ஆனால் மக்களின் உடனடித் தேவைக்காக இவர்கள் இதைச் செய்யத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு நிறைய ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமலிருக்கலாம். ஆனால் இத்தகைய தவறுகள் "நவீன" மருத்துவர்களாலும் செய்யப் படுகின்றன. வயாக்ஸ் விசயத்தில் இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். எந்த ஆங்கில மருந்தும் பக்க விளைவுக்கு அப்பாற்பட்டதில்லை. எம்.டி அதைத் தெரிந்தோ (தெரியாமலோ) கொடுக்கிறார். ஆர்.ஐ.எம்.பி யும் அதைத் தெரிந்தோ தெரியாமலோ கொடுக்கிறார். அதற்காக அவர்கள் எல்லோரும் செய்வதை நான் நியாயப் படுத்துவதாக நினைக்க் வேண்டாம். பணத்துக்காக மக்களின் நலத்தோடு விளையாடுவதென்பது கோயில்களில் நடக்கும் கொள்ளையைப் போன்றதே.

அடுத்ததாக மூலிகைகளைப் பற்றிக் கொஞ்சம். நமது தமிழ் மூலிகை மருத்துவம் எவ்வளவு செறிவானது என்பதை நாம் படிக்க வில்லையென்றாலும் கேள்வியாவது பட்டிருப்போம். அகத்தியரில் தொடங்கி 18 சித்தர்கள் வளர்த்தெடுத்த மருத்துவ முறைகள். கண் நோய் 96 என்று அவர்களுக்குத் தெரியும். சிறுநீரின் நிறம், மணம், குணம் கொண்டு இந்தாளுக்கு இன்னதென்று கணிக்கத் தெரியும். வாத, பித்த, கப நாடிகளின் பிறழ்வாலேயே (முக்குண தோசம்) பிணிகள் வருகின்றனவென்பதும், எந்தெந்த மூலிகைக்கு வாத/பித்த/கப குணம் என்றும் எதனை எப்படிக் கையாள்வதென்றும் அவர்கள் அறிந்தேயிருந்தார்கள். இயற்கையாய்க் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு அவர்கள் மருத்துவம் செய்தார்கள். அது பலனளிக்காத போது உப்புக்களைப் பயன்படுத்தினார்கள். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் மட்டுமே கனிமங்களைச் சுத்திகரித்துப் பயன்படுத்தினார்கள். கனிமங்கள் அவர்களது கடைசி ஆயுதம். அவற்றின் பக்க விளைவுகளையும், மாற்றுக்களையும் தெளிவாகவே அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு வாளால் அறுத்துச் சுடுதலும் தெரியும். நம் தவறு என்னவென்றால் இவ்வறிவைப் பேணாமல் மேற்கத்திய மருந்துகளுக்கும், அறிவியல் முறைகளுக்கும் கேள்வியின்றி நம்மைப் பலியாக்கிக் கொண்டு விட்டோம். அமெரிக்காவில் இயற்கை மருத்துவம் இப்போது பிரபலமடைந்து வருகிறது. இதைப் பணக்காரர்கள்தான் செய்து கொள்ள முடியும். நாலு வல்லாரை மாத்திரைகளைப் போட்ட குப்பியை 20 டாலருக்கு அவர்கள்தான் வாங்கிக் கொண்டு போகிறார்கள். நம்மிடம் அது இருந்தும் அதை வளர்த்தெடுக்காமல் இருக்கிறோம். இன்றும் புற்று நோய் தொடக்கம் கல்லீரல் நோய் என்று பல வகையான நோய்களுக்கும் மருந்துகளைத் தாவரங்களிலிருந்தே பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மருந்துத் தாவரங்களை எப்படி வளர்ப்பது, பாகங்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு எப்படி அனுப்புவது என்பதற்கு நம்மூரில் வகுப்பு நடத்துகிறார்கள். கத்தாழையும், அமுக்குராவும் அமெரிக்காவுக்குப் பறக்கிறது. நாம் இவர்களது ஸ்டீராய்டுகளை அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். BSMS என்றொரு சித்த மருத்துவப் பட்டம் உண்டு. ஏதோ ஒன்றிரண்டு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும். பெரிய பெரிய அரசு மருத்துவமனைகளில் இவர்களில் ஒருத்தர் உட்கார்ந்து மருந்து கொடுத்துக் கொண்டிருப்பார். இம்ப்காப்ஸ் (Indian Medical Practioners Cooperative Pharmacy and Stores) என்றொரு நிறுவனம் இம்மருந்துகளைத் தயாரித்து விற்கிறது. மத்திய அரசு பேருக்கு ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தை வைத்திருக்கிறது. இம்மருத்துவமும் ஒரு வரலாறு, அறிவியல், சமூகவியல். தமிழரின் சொத்து. இதைப் பேணுதலும் போற்றுதலும் நம் கடமையே.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது அதிலிருக்கும் குறைகளைக் களைவதும், இன்னும் நமக்குத் தெரியாதவற்றை அறிவதுமே. அல்லது நாட்டு வைத்தியர்களெல்லாம் மட்டம், அவர்களிடம் மருந்து சாப்பிடாதீர்கள், மூலிகைகளெல்லாம் சும்மா என்று "அறிவுறுத்தாமலிருத்தல்" கூடப் பயன் தருவதே! இது ஒரு விரிவான அலசுதலுக்கான விசயம். சித்த வைத்தியம் vs "modern"வைத்தியம் என்று இன்னும் எழுத நிறைய இருக்கிறது, நம்மில் பலருக்கும்!

St Patrick's Day Parade

உடைகள், தொப்பி, தலை முடி, தாடி, மீசை எங்க பாத்தாலும் பச்சை. யாரப் பாத்தாலும். என்னன்னு கேக்குறீங்களா? புனித பேட்ரிக் தினமாம். அப்புடின்னா. அவரு அயர்லாந்துல கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புனாராம். கி. பி. 400 வாக்கில். பதின்ம வயதில் ஏதோ ஒரு சண்டையில் பிடிபட்டு அடிமையாய் விற்கப்பட்டு, ஞானமடைந்து தப்பியோடி, கிறிஸ்தவ போதனையை அயர்லாந்து முழுக்கப் பரப்பியிருக்கார். ஐரிஷ் குடிகளைக் கிறிஸ்தவக் குடிகளாக்கியிருக்கார். அயர்லாந்து முழுக்கப் பாம்புகளே கிடையாதாம். இவருதான் ஓடிப் போன்னுட்டாருன்னு ஒரு கதை. என்னென்னமோ கதையையெல்லாம் நம்புறீங்கள்ல இதையும் நம்புங்க.

உலகமெங்கும் சுமார் 70 மில்லியன் ஐரிஷ் குடிகளாம். அயர்லாந்தின் வரலாறு எல்லா வரலாறுகளையும் போலவே ஆக்கிரமிப்பும், 'அரசங்கீகாரம்' பெற்றக் குடியமர்வுகளும், பின் தோன்றிய மதங்களும், மதங்களுக்கிடையேயான பூசல்களும், பூனைகளின் ஆப்பத்தைப் பங்கு பிரித்த நாட்டாமைக் குரங்குகளும், இத்தனைக்கும் நடுவிலே குடியும், இசையும், கூத்துமாய் அந்தப் பசும் நிலத்தில் மக்களைப் புரட்டியெடுத்திருக்கிறது.

மார்ச் 17, இந்த நாள் உலகெங்குமிருக்கும் அத்தனை ஐரிஷ் காரர்களுக்கும் மண்ணை நினைத்துக் கொள்ளும் ஒரு நாள். புனித பேட்ரிக்கை நினைக்கிறார்களோ இல்லையோ, தாயகத்தை நினைத்துக் கொள்கிறார்கள். கோயிலுக்கும் போகலாம், குடிக்கடைக்கும் போகலாம். சந்தோஷமாயிரு.

Image hosted by Photobucket.com

அமெரிக்காவிலும் பல நகரங்களில் இந்நாள் ஒரு கொண்டாட்டந்தான். 17ந்தேதி வார நாளில் வருவதால் முன்னதாகவே முந்தாநாள் ஊர்வலத்தை நடத்திவிட்டார்கள். போனோம். ஸ்கர்ட்டு போட்ட ஆண் பாண்டு வாத்தியக் காரர்கள், பெரிய பெரிய தலைப்பாகைகள், மீசைகள், பழங்கால இக்கால உடைகள், வாத்தியங்கள், வாகனங்கள். ஐரிஷ் மட்டுமில்லை, அமெரிக்க-ஐரிஷ், அமெரிக்கக் கலாச்சாரமும் ஒட்டிக் கொண்டே வருகிறது. அமெரிக்கத் தீயணைப்பு, காவல், ஆமி, நேவி, போரில் ஊனமுற்றோர். இப்படித்தான் எங்காவது கூட்டம் திரண்டுவிட்டால் அமெரிக்கா நாட்டுப் பற்றை ஊடே சொருகி விடும்.

Image hosted by Photobucket.com

பார்க்கத் திகட்டாத ஊர்வலம் வந்து கொண்டேயிருந்தது. ரெண்டுமணி நேரந்தான் நிக்க முடியும். கிளம்பியாச்சு. பெருமூச்சு. திருமூலனுக்கு ஒரு விழாக் கொண்டாடலாமா இப்படி? உலகத் தமிழரெல்லாம் இப்படிச் சேருவமா?... இதுக்கு மேல நினைக்க முடியல அல்லது நெனக்கிறத எழுத முடியல. அயர்லாந்துக் குடியரசுப் படைக்காரன், ரெண்டு குண்டு போட்டு பன்னிரெண்டு வருஷம் சிறையிலிருந்தவனெல்லாம் ராஜ மரியாதையோடு ஊர்வலத்துல போவான், கேட்டா மண்ணும்பான், விடுதலைம்பான், மொழிம்பான். தமிழனின் ஒற்றுமை, இனவுணர்வு, விடுதலை மட்டும் தமிழனுக்கே கேலி, பயங்கரவாதம்!

Image hosted by Photobucket.com

இன்னொரு தரம், வலம்புரி ஜானுக்கு...

அமெரிக்க வலைப்பதிவு நண்பர்களுக்கு,
எனக்கு வலம்புரி ஜானைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது பேச்சாற்றலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய ஒரு முறையும் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஆனால் இலக்கியத்துக்காக என்னென்னவெல்லாமோ செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது விமர்சனங்கள், சொல்லாக்கங்கள் ஆங்காங்கே மேற்கோளிடப்படுகின்றன.

அவருடைய தற்போதைய உடல்நல மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளை முன்னிறுத்தி மன்னை மாதேவன் நேற்று ஒரு பதிவினை இட்டிருந்தார். சென்ற மாதத்தில் ஜோ (கணியம்) என்பவரும் ஒரு பதிவினை இட்டிருந்ததைக் கண்டேன். ம்யூசிக் இந்தியா.காம் இணையதளத்திலும் ஒரு செய்தி காணக்கிடைக்கிறது. நானறிந்திராத அவருடைய அரசியல் வாழ்வைத் தாண்டித் தமிழுக்காகத் தொண்டு செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு உதவ நமக்கொரு (வலைப்பதிவாளர்கள்) கடமை உண்டு என நினைக்கிறேன். அதிமுக்கா திமுக்கா தமுக்கா கட்சிகளெல்லாம் செய்யாது, அவர்களுக்கு இன்றைக்கு வாயடிக்க வண்ணையோ காலில் விழக் காளிமுத்தோ போதும், வலம்புரி ஜான் இனித் தேவையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது.

அமெரிக்காவில் இருக்கும் வலைப்பதிவர்கள் யாருக்கேனும் கொடுக்கும் ஆவல் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (sundarappaa@yahoo.com). நீங்கள் சொல்லும் பணத்தை மொத்தமாக அனுப்பி விடுகிறேன், நீங்கள் இன்றோ நாளையோ எவ்வளவு என்று சொல்லிவிட்டு வரும் வாரத்தில் அனுப்பினால் போதும். நம் 10 டாலர் கூட அவருக்கு உதவியாயிருக்கும் என நம்புகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்பவர் பிரமீளைப் (சிவராமுவை) பற்றிச் சொல்லும்போது //செத்தவுடனே சிலாக்கிக்குற தமிழ் ஈ-இளி-இலக்குயத்தப்பாத்தா இவளுக்கு வாந்தி வாந்தியா வருது. ஆனாலும் இணையத்துக்கு வர சிவராமுவுக்கு முடிஞ்சிருக்குமான்னும் தெரியல. அசோகமித்திரன் சாரு இலக்கியவாதியா இருந்து இங்க ஒன்னும் கிழிக்கமுடியாதுன்னு சொல்லிருந்ததும், பாரதி வெறுத்துப்போயி டோப்பு அடிச்சதும் சில நேரம் யோசிக்கத்தகுந்ததுன்னும் சொல்லிக்கிறா.// அப்படிங்கறார்.

நாம செய்ய வேண்டியது என்னன்னு உங்களுக்குத் தெரியும். உங்கள் மின்னஞ்சலை எதிர் நோக்குகின்றேன். நன்றி!

பின் குறிப்பு: இது எனது முந்தைய பதிவேதான். இன்னொரு முறை பதிந்தால் கவனம் கூடலாம் என்ற எதிர்பார்ப்பில்! இன்றைக்கு மதியம் அனுப்பப் போகிறேன், விரைந்து உங்கள் பதிலைத் தெரிவியுங்கள். நன்றி!

வலம்புரி ஜானுக்கு...

அமெரிக்க வலைப்பதிவு நண்பர்களுக்கு,
எனக்கு வலம்புரி ஜானைப் பற்றி அதிகம் தெரியாது. அவரது பேச்சாற்றலைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய ஒரு முறையும் கேட்டதில்லை, பார்த்ததில்லை. ஆனால் இலக்கியத்துக்காக என்னென்னவெல்லாமோ செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது விமர்சனங்கள், சொல்லாக்கங்கள் ஆங்காங்கே மேற்கோளிடப்படுகின்றன.

அவருடைய தற்போதைய உடல்நல மற்றும் பொருளாதாரச் சீர்கேடுகளை முன்னிறுத்தி மன்னை மாதேவன் நேற்று ஒரு பதிவினை இட்டிருந்தார். சென்ற மாதத்தில் ஜோ (கணியம்) என்பவரும் ஒரு பதிவினை இட்டிருந்ததைக் கண்டேன். ம்யூசிக் இந்தியா.காம் இணையதளத்திலும் ஒரு செய்தி காணக்கிடைக்கிறது. நானறிந்திராத அவருடைய அரசியல் வாழ்வைத் தாண்டித் தமிழுக்காகத் தொண்டு செய்தவர் என்ற ரீதியில் அவருக்கு உதவ நமக்கொரு (வலைப்பதிவாளர்கள்) கடமை உண்டு என நினைக்கிறேன். அதிமுக்கா திமுக்கா தமுக்கா கட்சிகளெல்லாம் செய்யாது, அவர்களுக்கு இன்றைக்கு வாயடிக்க வண்ணையோ காலில் விழக் காளிமுத்தோ போதும், வலம்புரி ஜான் இனித் தேவையில்லை. நாமும் அப்படி இருக்க முடியாது.

அமெரிக்காவில் இருக்கும் வலைப்பதிவர்கள் யாருக்கேனும் கொடுக்கும் ஆவல் இருந்தால் என்னிடம் தெரிவிக்கவும் (sundarappaa@yahoo.com). நீங்கள் சொல்லும் பணத்தை மொத்தமாக அனுப்பி விடுகிறேன், நீங்கள் இன்றோ நாளையோ எவ்வளவு என்று சொல்லிவிட்டு வரும் வாரத்தில் அனுப்பினால் போதும். நம் 10 டாலர் கூட அவருக்கு உதவியாயிருக்கும் என நம்புகிறேன்.

மாடர்ன் கேர்ள் என்பவர் பிரமீளைப் (சிவராமுவை) பற்றிச் சொல்லும்போது //செத்தவுடனே சிலாக்கிக்குற தமிழ் ஈ-இளி-இலக்குயத்தப்பாத்தா இவளுக்கு வாந்தி வாந்தியா வருது. ஆனாலும் இணையத்துக்கு வர சிவராமுவுக்கு முடிஞ்சிருக்குமான்னும் தெரியல. அசோகமித்திரன் சாரு இலக்கியவாதியா இருந்து இங்க ஒன்னும் கிழிக்கமுடியாதுன்னு சொல்லிருந்ததும், பாரதி வெறுத்துப்போயி டோப்பு அடிச்சதும் சில நேரம் யோசிக்கத்தகுந்ததுன்னும் சொல்லிக்கிறா.// அப்படிங்கறார்.

நாம செய்ய வேண்டியது என்னன்னு உங்களுக்குத் தெரியும். உங்கள் மின்னஞ்சலை எதிர் நோக்குகின்றேன். நன்றி!

உயரும் கோபுரங்களில் முறியும் சிறகுகள்

Image hosted by Photobucket.com

நேற்று வானொலியில் பறவைகளைப் பற்றிய செய்தியொன்றைக் கேட்டேன். இப்போது கொஞ்சம் இணையத்தை அலசிப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது:

வட அமெரிக்காவில் வானுயரக் கட்டிடங்களின் கண்ணாடிகளில் மோதி வருடத்துக்கு பில்லியன் பறவைகள் சாகின்றன. இது இங்கேயிருக்கும் மொத்தப் பறவைகளில் 5%. ஏற்கெனவே காடழிப்பால் அவற்றுக்கு இடம் காணாமல் போவதுடன் நாடாக்கலில் இப்படியொரு சிக்கல்.

இரவில் கண்ணாடியின் வழியே தெரியும் உள்ளேயெரிகின்ற விளக்குகளாலும், பகலில் கண்ணாடிகளின் பிரதிபலிப்பாலும் கண்ணாடி அவற்றுக்குத் தெரிவதில்லை.

கலங்கரை விளக்கம், பரப்பிக் கோபுரங்கள், காற்றாலைகள் என்று உயர்ந்த கட்டுமானங்கள் பலவற்றிலும் பறவைகள் மோதிக் கொள்கின்றன.

கால நிலைக்கு இடம் பெயரும் பறவைகளும், இரவில் பயணிக்கும் பறவைகளும் பெருமளவு இத்துயருக்கு உள்ளாகின்றன.

பறவைகள் வேகமாகப் பறக்கின்றதால் அடி (தலையில்) பலமாயிருக்கும். அடிபடுகின்றவைகளில் பாதிக்கு மேல் மரணிக்கின்றன (அப்படியென்றால் அடிபடுவது இன்னொரு பில்லியனா?).

இதற்கான தடுப்பு முறைகளாகத் தெரிகின்றவை: கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் இரவில் விளக்குகளைப் போடாமலிருத்தல், கண்ணாடிகளை பிரதிபலிப்பற்றதாக ஆக்குதல். கண்ணாடிக் கட்டிடங்களை மரங்களிடமிருந்து சற்றுத் தள்ளி வைத்தல்.

அ.முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையில் கட்டிடத்துக்குள் பறந்து வந்து மோதிச் செத்துப் போகும் ஒரு பறவையைப் பற்றி வரும். அவர் அதிலே அந்தப் பறவை தவறான திசையில் திரும்பியதால் இறந்ததாகச் சொல்லியிருப்பார். அதையே ஒரு பாடமாகக் காட்டி அவரது நிறுவனம் ஒரு தவறான திசைக்குத் திரும்புவதைத் தடுக்குமாறு உரையொன்று நிகழ்த்துவதாகக் கதை இருக்கும். படிப்பவருக்குப் பறவைதான் ஏதோ தெரியாமல் தப்பு செய்துவிட்டதாகத் தோன்றும். பாத்து வந்திருக்கக் கூடாதான்னு அடியில சத்தம் கேக்கும். ஆனா தப்பு செஞ்சது அந்தப் பறவை இல்ல. மனுசங்க.

செய்தி: NPR
படம்: சியாட்டிலில் எடுத்தது.

கல்யாணக் கோயிலும் விந்துப் புரதமும்

Image hosted by Photobucket.com

விந்தும் அண்டமும் சேர்ந்து கரு உண்டாவதை அறிவோம். இதில் முக்கியமான நிகழ்வு விந்து அண்டத்தின் மேலிருக்கும் செல்சவ்வின் மேல் ஒட்டுதல். ஒரு செல்லும் இன்னொரு செல்லும் ஒட்டிக் கொள்வதற்கு அந்தந்தச் செல்களின் மேலிருக்கும் புரதங்களின் தொடர்பு/இணக்கம் முக்கியமானது. ரெண்டு பேர் கை குடுக்குற மாதிரி, இல்லன்னா கட்டிப் புடிச்சுக்கற மாதிரித்தான் மூலக்கூறுகளும் ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கும்.

விந்தையும் அண்டத்தையும் ஒட்டுவிக்கும் புரதங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது முக்கியமான ஆராய்ச்சியாகக் கருதப்படுகிறது. அண்மையில் அண்டத்தின் மேலிருக்கும் CD9 என்ற புரத மூலக்கூறு இந்த ஒட்டுதலில் முக்கியமானதாகக் கண்டறியப்பட்டது. விந்தணுவின் மேல் என்ன புரதமிருக்கும் என்பது காணப்படாமலிருந்தது. ஜப்பானில் இருக்கும் ஒரு ஆராய்ச்சிக் குழு விந்தணுவின் மேலிருக்கும் அந்தப் புரதத்தைக் கண்டறிந்திருக்கிறது. அதற்கு இசூமோ (izumo) என்று ஜப்பானின் கல்யாணக் கோயிலின் பெயரை வைத்திருக்கிறது.

இந்த இசூமோ எனும் புரதம் விந்தணுவின் தலைப்பகுதியில் இருக்கிறது. இதை மரபணுச் சோதனை மூலம் கழற்றி விட்டால் விந்தணு அண்டத்துடன் ஒட்ட முடியாமற் போகிறது. அதனால் கரு உண்டாவதில்லை. இந்தச் சோதனைகளைச் சுண்டெலியில் செய்திருந்தாலும், மனித விந்தணுவிலும் இந்த இசூமோ இருக்கிறது, அதை எதிர்ப் புரதத்தின் (antibody) மூலம் செயலிழக்க வைத்தால் மனித விந்துவுக்கும் கருவுண்டாக்கும் ஆற்றல் இல்லாமற் போகிறது.

நம்மூர் மக்கள் தொகைக்கு ஜப்பான் கோயில் எதாச்சும் வழி வைத்திருக்குமா என்பது எதிர்காலக் கேள்வி!
செய்தி
படம்

வேறொரு பனி

Image hosted by Photobucket.com

பனியைப் பற்றி எழுதலாம். யார் வேண்டுமானாலும். இல்லையா? 4 இஞ்சுக்கு மேலே கொட்டிய ஊர்க்காரர்கள் அல்லது -20 டிகிரிக்குக் கீழான ஊர்க்காரர்கள் மட்டுந்தான் எழுத வேண்டுமென்பதெல்லாம் இல்லையல்லவா?!

எல்லோரும் பனியைப் பார்க்கிறார்கள்; துகள் துகளாய்ப் பறக்கும் அந்த வெண்மையைப் பார்க்கிறார்கள்; வெள்ளைப் படுக்கையில் ஒற்றை பூட்ஸின் அச்சைப் பார்க்கிறார்கள்; என்னைப் போல் பேருந்துக்குக் காத்திருக்கிற வேளையிலேனும்!

சுழற்றியடிக்கும் காற்றில் கிளம்பும் பனிப் புழுதியை மூஞ்சியில் வாங்கிக் கொண்டு சிலர் சிரிக்கிறார்கள், சிலர் ஊவென்று கத்திக் கொண்டு போகிறார்கள். காற்றில் கம்பி வளைந்து தாமரையாய் மலரும் குடையைப் பிடித்துக் கொண்டு சிலர். தொப்பி வைக்காதோரும் நிற்கிறார்கள்.

மரக்கிளைகள் வரி வரியாய்ப் பனிப் பட்டைகள் துளிர்த்து நிற்கின்றன. இன்னொரு மழை அல்லது வெயிலொன்றில் கரைந்து போகும் வெண் பட்டைகள்.

தரையில் கொட்டிக் கிடக்கும் பனிப்பூவுக்குக் கீழே கட்டிப் பனி. பூவென்று காலை வைத்தால் வழுக்கியடிக்கும். ஒரு காலை அழுந்த ஊன்றிக் கொண்டு இன்னொரு காலால் வழுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இதோ என் பேருந்து. முதுகுப் பையின் மேல், மேற்சட்டையின் மேல் அரிசி மாதிரிக் கொட்டித் தேங்கியிருந்த பனித் துகள்களையெல்லாம் முடிந்த வரை தட்டிவிட்டுக் கொண்டு ஏறுகின்றேன். தாமதமாய் ஓடுகின்றன வண்டிகள். இன்றைக்குக் காலத்தை இழந்தாற்போலில்லை. சன்னல் வழியே பார்க்கிறேன், என்றைக்கும் போலவே நடைபாதையோரத்துச் சிறு சுவற்றின் மேல்தான் நடப்பேன் என்று ஏறி நாலடி எடுத்து வைத்துக் கீழே குதிக்கிறான் காப்பகத்திலிருந்து அம்மாவின் கையைப் பிடித்துப் போகும் சின்னப் பையனொருவன்.

படங்களைப் பரிமாறப் புதுவழி - photoleap

Image hosted by Photobucket.com

எடுத்த படத்தை யாருக்காச்சும் அனுப்பனும்னாலே பின்வாங்குற ஆளு நான். படத்தை எடுக்கனும், சைஸை குறைக்கனும், மின்னஞ்சல் கோப்புல இணைக்கனும், அது முக்கி முக்கி இணைச்சதுக்கப்புறம் அனுப்ப அது படுற பாடு, அப்புறமா போற எடத்துல எடம் இருக்குமோ இருக்காதோ...இதெல்லாம் காரணங்கள். ஆன்லைன் ஆல்பத்துல போடுறதுல பெரிய விருப்பமில்லை.

அன்றைக்கு கூகுள் photoleap தளத்தைக் காட்டுச்சு. பயன்படுத்திப் பாத்தேன். நல்லாவே இருக்கு. மின்னஞ்சல் மாதிரியேதான் வேலை செய்யுது. ஆனா இணைக்கும் தொல்லையோ, அனுப்ப/இறக்க முக்குவதெல்லாமோ இல்லை. இந்தப் பக்கம் படக்கோப்பைத் திறந்து வச்சுக்கங்க, வேணுங்கற படத்தை இழுத்து இழுத்து பொட்டில போடுங்க, அனுப்புங்க. வர்ற படத்தை சும்மாவும் பாக்கலாம், ஸ்லைடா ஓட்டிப் பாக்கலாம், சேமிச்சுக்கலாம் இத்யாதி. 100, 200 படங்களெல்லாம் சர்வ சாதாரணமாப் போகுது வருது.

அந்தச் செயலி படத்தைத் தரம் குறையாம சுருக்கி அனுப்புதாம். அதுக்கு மேல அந்தத் தொழில் நுட்பத்தைப் பத்தி எங்கிட்ட கேக்காதீங்க. முயன்று பாருங்களேன்!
(இதப் பத்தி யாராச்சும் எழுதிருக்காங்களான்னு தெரியல.)

அப்பாவின் பாட்டுக்கள்

ஊரிலிருந்தபோது ஒரு நாள் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அப்பாவின் நோட்டுப் புத்தகமொன்று கண்ணில் பட்டது. அவர் ஆசிரியப் பயிற்சி/பணிக் காலங்களின் போது சேர்த்து வைத்திருந்த பாட்டுக்கள். பிள்ளைகளுக்கான பாட்டுக்கள். அந்தக் காலத்து ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே மெட்டில் "கல்விச் செல்வம் போலொரு செல்வமேயில்லே" வகையிலிருந்து "நத்தையம்மா நத்தையம்மா எங்கே போகிறாய்" வகையான எளிமையான அழகான பாட்டுக்கள் வரை எல்லாமிருந்தன. அப்பா எழுதின பாட்டுக்களில்லை. அவர் திரட்டியவை. அக்காக்களின் அல்லது யார் யாரோ சின்னப் பிள்ளைகளின் பிஞ்சுக் கையெழுத்துக்களுமிருந்தன. அந்தப் பழைய குறிப்பேட்டிலிருந்த பாட்டுக்களை அப்படியே தட்டச்சிக் கொண்டுவிட்டேன். இவற்றை ஒரு நாள் புத்தகமாக்குவேன். இன்னொரு ஆச்சரியம், 1960-70களில் ஒரு கிராமத்து வாத்தியாருக்கு Here we go round the mulberry bush பாட்டின் தமிழ் வடிவம் தெரிந்திருக்கிறது! அந்தப் பாட்டின் ஒலி வடிவம் இங்கே, வரிகள் கீழே. நாங்கள் பாடினால் தலையைப் பக்கவாட்டில் ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறான் மகன்! நன்றி அப்பா!


மாமரத்தைச் சுற்றுவோம்
சுற்றுவோம் சுற்றுவோம்
மாமரத்தைச் சுற்றுவோம்
விடியற்காலையில்

இவ்விதம் பல்லைத் துலக்குவோம்
துலக்குவோம் துலக்குவோம்
இவ்விதம் பல்லைத் துலக்குவோம்
விடியற் காலையில்

இவ்விதம் முகத்தைக் கழுவுவோம்
கழுவுவோம் கழுவுவோம்
இவ்விதம் முகத்தைக் கழுவுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் தலையைச் சீவுவோம்
சீவுவோம் சீவுவோம்
இவ்விதம் தலையைச் சீவுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் உடையை மாற்றுவோம்
மாற்றுவோம் மாற்றுவோம்
இவ்விதம் உடையை மாற்றுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் பள்ளி செல்லுவோம்
செல்லுவோம் செல்லுவோம்
இவ்விதம் பள்ளி செல்லுவோம்
விடியற் காலையில்.

குழந்தைப் பாடல்களைப் பற்றிய என் முந்தைய பதிவொன்று - தாத்தா பண்ணை வச்சிருந்தார்.