அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களின் மீது தாக்குதல்


எண்ணிலாத போர்க்குற்றங்களைச் செய்துவரும் இலங்கை அரச படையினர், இதுவரை கணக்கிலடங்காத தொண்டுநிறுவனங்களின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதன் இன்னொரு சேர்க்கையாக நேற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மேல் எறிகணைகளை வீசியிருக்கிறார்கள். இவற்றை மனிதாபிமானமுள்ள எவரும் கண்டிப்பார்கள். 

செய்தி: 
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன.

இவற்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். 48 மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத்தான் இந்தியா சிறிலங்காவின் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று கூறிவருகின்றது.

இதேவேளை, படையினரின் இந்தத் தாக்குதலில் கியூடெக், கரித்தாஸ் நிறுவனங்களின் ஆவணங்கள், வன்னிமறைக்கோட்ட ஆவணங்கள் யாவும் முற்றாக அழிந்துள்ளதுடன் அங்கிருந்த சகல கட்டடங்களும் ஊர்திகளும் அழிந்துள்ளன.

மேலும் சிறிலங்கா படையினரின் தாக்குதலால் கியூடெக் நிறுவனம், வன்னிமறைக் கோட்டம் என்பன இயங்கிய தூய யூதா கோவிலும் சேதங்களுக்குள்ளாகியது. கியூடெக், கரித்தாஸ், வன்னிமறைக் கோட்டத்தின் சகல ஆவணங்கள் உடமைகளும் இதில் எரிந்து அழிந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்னர் இதன் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று இதனை அழிக்கும் தாக்குதல் தீவிரமாக சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா என் தாய்நாடு !


ஈழத்தில் இத்தனை உயிர்களைக் கொன்று குவிக்கும் ஒரு இனப்படுகொலையைச் செய்யும் சிங்கள் அரசுக்கு நான் பிறந்த இந்தியத் திருநாடு பின்னிருந்து உதவி செய்கிறது. இந்தியச் சார்பு ஊடகங்கள் இதனை ஒரு இனப்படுகொலையாகப் பார்க்காமல், ஒரு இராணுவச் சண்டையாகப் பார்த்துக்கொண்டே வருவதன் பின்னணி, இந்தப் போரை இயக்குவது இந்தியா என்பதால் விளைந்த ஆதரவுதான். பின்னாலிருந்து ரணிலையும், மகிந்தவையும் இயக்குவது இந்தியாதான். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய இராணுவ வீரர்கள் அடிபடுவது, இலங்கைக்கு ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் அனுப்புவது எல்லாம் இந்தியா இப்போரில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. தமிழர்களின் போராட்டம் இனி சிங்கள அரசை எதிர்த்து மகிந்தவின் கொடும்பாவியை எரிப்பதோ, அல்லது அரசியலடிமை கருணாநிதியிடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்பதோ அல்ல. இந்திய அரசின் இந்த நியாயமற்ற நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதுதான். இந்தியாவை மீறி வேறெந்த நாட்டுக்கும் இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஆர்வமோ, தேவையோ, துணிச்சலோ கிடையாது. மனிதவுரிமை மீறலை இந்தியா நிகழ்த்தும்போது அதனைக் கண்டும் காணாமலும் சர்வதேசம் இருப்பதுபோல, சக மனிதன் இருக்கலாகாது. இந்தியா தன்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். 

தமிழகத் தலைவர் கருணாநிதி என்ன காரணத்தாலோ காங்கிரசாரிடம் கட்டுண்டு கிடக்கிறார். இன்னும் அவர் காங்கிரசிடம் அடிமைப்பட்டு எதனைக் காத்துக் கொள்ளவேண்டும்? அய்யா, இனி நீங்கள் பதவியில் இருப்பதே உங்களுக்கு அவமானம்! புஷ் எப்படி அமெரிக்க மக்களின் மனங்களிலிருந்து வீசி எறியப்பட்டாரோ அவ்வாறே நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் பிள்ளைகளும் மக்கள் மனங்களிலிருந்து வீசி எறியப்பட்டுவிட்டீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் காங்கிரசுக்கு அடிமைப்பட்டு சொத்தைக் காத்துக் கொள்ளும் அவசியம் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு உங்களிடம் அடிமைப்பட்டு சுயமரியாதையையும், உயிரையும் விட்டுவிடும் அவசியம் இல்லை. எந்த மாணவர்களையும், தமிழுணர்வையும் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலும், ஒரு திராவிடக் கட்சியின் தலைமைப் பதவியிலும் அமர்ந்திருக்கின்றீர்களோ அவர்களையும் அவர்தம் உணர்வுகளையும் நசுக்கும் கொடும்பாதகச் செயலுக்கு நீங்கள்  உடந்தையாக இருப்பது தகுமா? உடனே ஏதேனும் செய்யுங்கள் அல்லது...

அரசு முறையைக் காத்தால், முறையே அரசைக் காக்கும் என்பது வள்ளுவம். என் இந்தியத் தாய்த் திருநாடு முறையைக் காக்கின்றதா? மனிதவுரிமையைக் காக்கின்றதா? அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம், அதில் தலையிட மாட்டோம், பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணுங்கள், என்று வெளியில் சொல்லிக்கொண்டே இருந்த, உள்ளுக்குள்ளே நயவஞ்சகமாக அற முறைகளைக் கைகழுவிவிட்டு தமிழ் உயிர்களைப் பலியெடுக்கிறது. இந்தியா ஏன் இந்தத் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்த உதவி செய்ய வேண்டும்? நானறிந்த காரணங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்:

1. இந்திய அமைதிப்படையைப் புலிகள் தோற்கடித்தது இந்தியாவுக்கு மாறாத வடு. அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்கிறது. தன் பிராந்தியத்தில் தானே பெரும்பலசாலி என்பதை நிலைநாட்ட முயல்கிறது. (ஏனய்யா, அதற்கு அப்பாவி மக்களின் உயிரை எடுத்துதான் உங்களது வீரத்தை நிலைநாட்ட வேண்டுமா? மனிதவுரிமையை அழிப்பதன் மூலம்தான் புலிகளின் மீதான உங்களது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா? புலிகளின் மீது பிரச்சினை என்றால் புலிகளோடு மட்டும் பொருதுங்கள். ஏன் மக்களை அழிக்கின்றீர்கள்? முதலில், நீங்கள் ஊதி வளர்த்துவிட்டதுதானே இலங்கையின் ஆயுதப் போராட்டம்? பேச்சு வார்த்தையையும், அகிம்சையையும் போதிக்கும் நீங்கள் ஏன் அன்றே உங்களது நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கக் கூடாது? புலிகளுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் ஆயுதப் பயிற்சி கொடுப்பதற்கு முன்னமேயே அவர்களுக்கு உங்களது அகிம்சை ஞானத்தைப் போதித்து நல்வழிப்படுத்தியிருக்கக் கூடாதா? அல்லது, ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று சண்டை போடுகிறீர்களா? அவரது கொலைக்குப் பின் அவிழாத பல புதிர்கள் இருக்கின்றனவே, அவற்றை அவிழ்த்து உங்களது நீதியை நிலைநாட்டிக் கொள்ளலாமே. சர்வதேச சட்ட முறைகள் இப்படித்தான் ஒரு கொலைவழக்கை விசாரிக்கச் சொல்கின்றனவா? சுப்ரமணிய சுவாமிக்கும், சந்திரா சாமிக்கும், காங்கிரஸ், அ.தி.மு.க தலைவர்களுக்கும் இந்தக் கொலையிலிருக்கும் தொடர்புகளை ஆராயலாமே? அதை விடுத்து ஒரு உயிர் போனதற்காக, இத்தனை அப்பாவி உயிர்களைப் பலியெடுக்கிறீர்களே இதுதான் அரசியல் அறமா? இதைத்தான் அசோகரின் தர்மச் சக்கரம் உங்களுக்குச் சொல்லித் தருகிறதா?)


2. இந்திய முதலாளிகளின் முதலீடுகள் இலங்கை முழுவதும் இருக்கின்றன. அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து முதலாளிகள் இந்தப் போரை நடத்துகிறார்கள். (தொழிலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமது நாட்டின் செல்வந்தர்களின் பணத்தைப் பெருக்குவதற்காக, இன்னொரு நாட்டினுள் புகுந்து, அந்த நாட்டின் சொந்த மக்களைக் கொலை செய்து...இதுதான் நீதியா? இன்றைக்கு நீங்கள் உங்களைவிடச் சிறிய நாட்டின் இனத்தை அழிக்கும்போது, உங்களை விடப் பெரிய நாடு ஒன்று உங்கள் நாட்டையும், இனத்தையும் அழிக்கும் என்பது உலக நியதி. இந்தியப் பேரினம் அழியாது காக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் எந்த இனத்தையும் அழியாதிருங்கள். செல்வத்தின் பொருட்டு இந்த அநீதியை நிகழ்த்துபவர்களுக்கு அந்தச் செல்வத்தால் எந்தவொரு நலனும் இராது. அதற்கு நீங்கள் துணை போகாதீர்கள். எப்போதும் உழைப்பின் பக்கம் நில்லுங்கள். சுரண்டல்காரர்களோடு நில்லாதீர்கள்.) 


3. இலங்கையில் எவ்வாறு பௌத்த தீவிரவாதம், தமிழர்களோடு வரலாற்று ரீதியாக மோதுகின்றதோ, அதே ரீதியில் இந்தியாவில் ஆரிய-திராவிட வரலாற்று மோதல் இருந்து வருகிறது. அதிகார வர்க்கத்துக்குள் நிலவிவரும் இந்த வர்க்க மோதல் மனப்பான்மை, திராவிட இனத்தை அழிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி இயக்கி வருகிறது. (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் சென்று வைத்தால் இதுவொரு இனவாதம். தண்டனைக்குரிய குற்றம். யூதர்களைக் கொன்று ஹிட்லர் தேடிக் கொண்டது இந்தப் பழியைத்தான். இனப்படுகொலையைச் செய்யாதீர்கள். இந்தியா ஒரு பல்லின நாடு. அனைத்து இனங்களுக்கும் சொந்தமான மொழியும், கலையும் இருக்கின்றன. அவற்றை எந்த மொழியையும், இனத்தையும், கலையையும் கொண்டு அழிக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் இனமும், மொழியும் எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே ஒவ்வொரு இனத்தாருக்கும் அவரது மொழியும், கலையும் முக்கியம். திராவிட-ஆரிய வேறுபாடுகள் வெறும் கற்பிதம் என்று கதையளக்கும் நாகரீகக் கோமான்கள், இன்று ஒரு இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருப்பது இந்த ஆரிய-திராவிட மோதல்தான் என்பதை உணர்ந்துகொள்ளட்டும். நாகரீகமடைந்த சமூகத்தில் பிறப்பினால் இன்னொரு பிறவியின் மீது வேற்றுமை பாராட்டுவதும், இனவழிப்புக் குரோதம் கொள்வதும் அநாகரீகம் மட்டுமல்ல, தண்டனைக்குரிய சர்வதேசக் குற்றம். இதனை நாம் செய்யலாமா, என் இந்தியத் தாய்நாடே?)

4. இலங்கையில் ஈழம் பிறந்தால், அது இந்தியாவுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற கற்பிதம். (இது ஒன்றுக்கும் உதவாத வாதம். இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்தவொரு தமிழனும் தன்னை "நான் முதலில் இந்தியன், பிறகுதான் தமிழன்" என்று சொல்லிக் கொள்வதில் இறுமாந்து களிப்பெய்திக் கிடக்கிறான். அவனைப் புரட்டிப் போடுவது நடவாத காரியம். 1960களில் தனித்தமிழ்நாடு போராட்டத்தில் சிறைக்குப் போன மாணவர்கள் எல்லாம் கிழவராகிப் போய் அவர்தம் பேரப்பிள்ளைகளுக்கு இந்தியும், ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கும் காலத்தில் வாழ்கிறோம். அந்தப் பேரப் பிள்ளைகள் இந்தி படிப்போமா அல்லது ஆங்கிலம் படித்து அமெரிக்காவுக்குப் போவோமா என்றிருக்கின்றன. இந்த நிலையில் எங்களுக்குத் தனித் தமிழ்நாடு ஏன்? தனியாக ஒரு தமிழ்நாடு தந்தாலும் நாங்கள் ஒன்றாக இருந்துவிடத்தான் போகிறோமா, நாலே நாளில் எங்கள் அரசியல்வாதிகள் (கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னானே, அதே ஆட்கள்தான்) இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ, அல்லது சீனாவுக்கோ தமிழ்நாட்டைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, குடும்பமும் குட்டியுமாக அமெரிக்காவில் வந்து செட்டிலாகிவிடுவோம். அதனால் தனித்தமிழ்நாடெல்லாம் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் வாங்கும் நிலையிலில்லை. எங்களுக்கு உங்கள் ஆதங்கம் புரிகிறது, இந்தியாவிலேயே புத்திசாலியான கூட்டம், சொன்னால் சொன்ன வேலையைச் செய்யும் அடிமைக் கூட்டம், ஒருவனையொருவன் காட்டிக் கொடுக்கும் கூட்டம், எங்களைப்போல, ஒரு நாட்டுத் தலைமைக்குக் கிடைப்பது அரிதுதான். எங்களை விட்டுவிட உங்களுக்கு எப்படி மனம் வரும்? அப்படியே நீங்கள் விட்டாலும், நாங்கள் இந்தியாவை விடுவதாக இல்லை. ஆகவே நீங்கள் தயவு செய்து, எங்களை மாதிரி செம்மறியாடுகள் உங்களோடு நிரந்தரமாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில், ஈழத்திலிருக்கின்ற மக்களைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கு வேண்டியது தனி ஈழமோ, இலங்கையினுள்ளேயே தீர்வோ, அதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும், நீங்கள் உங்களது அதீத கற்பனையினாலும், எங்கள் மேல் கொண்ட காதலாலும் இன்னொரு நாட்டின் இனத்தை அழிக்காதீர்கள்.) 


அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்...என்பது சிலப்பதிகாரம். எழுதிவைத்தவன் ஒரு முனி. நாம் முனிகளை மதிக்கும் சமூகம். மெய்ஞானத்தைப் போற்றும் சமூகம். அறம் மட்டுமே நிலைக்கும் என்ற மாறாத நம்பிக்கையுடையவர்கள். பிறர்க்கின்னா செய்தால் தமக்கின்னா தானே வரும் என்று படிக்கிறவர்கள். அதற்குத்தான் தர்மச் சக்கரம், ஒன்வேயில் இல்லாமல் சக்கரமாக இருக்கிறது. இன்று அறத்தை நாம் கொன்றால், நாளை அறம் நம்மைக் கொல்லும். குடிமக்கள், அரசு இவை இரண்டையும் பார்த்தால், அரசுக்குத்தான் பொறுப்பு அதிகம். குடிகள் செய்யும் தவறுகளுக்கு அரசே பொறுப்பு. குடிகுணங்காக்க வேண்டியது அரசின் கடமை. அதனை ஒரு அரசு செய்யாது விட்டுவிட்டு, குடிகள் குணங்கெட்டுப் போனபிறகு அவர்களைத் தகாக வழிகளில் தண்டிப்பதன் மூலம் அரசே குணங்கெட்டுப் போகிறதென்றால்....ஒரே குணக்கேடும், பிணக்காடும்தான். தவறு நம் பக்கம் இருக்கிறது. இந்தியாவே, என் தாய்நாடே, நாம் தவறு செய்கிறோம். நிறுத்து. நிறுத்து. நிறுத்து. இனியும் தாமதமில்லை. தவறுக்கு மேல் தவறு செய்யாதே, அறம் உன்னைக் கொல்லும். உனக்கு என் NRI பணத்தைக் கொடுத்ததற்காக என்னையும் கொல்லும். அறம் நம்மைக் கொல்லும். எனவே என் இந்திய அரசே, முறையைக் காப்பாற்று. கொலை செய்யாதே, கொடுமை செய்யாதே!

தி இந்துவின் பத்திரிகா தர்மம்!

ஒரு பத்திரிகையாளனின் தற்கொலையைப் பற்றிய செய்தியை வெளியிடும் இந்தப் பத்திரிகை, அவனொரு பத்திரிகையாளன் என்பதை அடியோடு மறைத்து 


 என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது. அவன் மனிதன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் தி இந்துவுக்கு மனிதத்தன்மை இருக்கிறதா என்பதைத்தான் சந்தேகிக்கிறேன். 


இவர்கள்

இவர்கள் என் தாயையும் மகளையும் போலிருக்கிறார்கள்.