சுஜாதா இன்னும் இறக்கவில்லை!

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதங்களில் வினைபுரியத் தூண்டுகிறது. இதிலே ஒருவரைப் பற்றிய நிறுவப்பட்ட கதைகள் மற்றும் ஊடகங்களின் முன்னேற்பாடுகள் (பில்டப்புகள்) பெரும்பங்கு வகிக்கின்றன. பெருங்கூட்டத்தின் போக்கு சரியானதாகத் தோற்றம் பெறுகிறது. அதனால்தான் இராவண வதத்தையும், வீரப்ப சம்ஹாரத்தையும் கொண்டாடுகிறோம், நகுலனை அவரது எழுத்தழகையும் தாண்டி அனாதையாக அனுப்புகிறோம். தமிழ்ச்செல்வனுக்கு அழும்போது அழுகையைக் கண்டிக்கிறோம். சுஜாதாவின் மரணம் நிச்சயமாக எந்தவொரு மரணத்தையும் போலவே உற்றார், உறவினர், நண்பர்கள், விசிறிகள் என்பாருக்கு வருத்தத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் அவர் வாழ்ந்த காலத்தில் எந்தெந்த மக்களை எதிர்த்து எழுதினாரோ, செயல்பட்டாரோ, எந்த மனிதாபிமானமற்ற தன்மைகளுக்குக் கொடி பிடித்தாரோ, அத்தகைய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது இவ்வளவு அழுகை ஏன் என்று கேட்கிறார்கள். இன்னும் யாரும் இதைத் தீபாவளியாகக் கொண்டாடவில்லை, அல்லது அவர் ஒரு இந்துத் தீவிரவாதி அவருக்காக அழுவது சட்ட விரோதம் என்று யாரும் சொல்லவில்லை. எனவே மரணித்தவர் ஒவ்வொருவரையும் எப்படிப் பாதித்தாரோ அதே வகையிலேயே அவரது மரணத்தை எதிர்கொள்வதே நேர்மையாக இருக்க முடியும். அமைதியாக இருத்தல் போலி மனிதாபிமானத்தைக் காட்டுமே தவிர எழுத்து நேர்மையாக இராது. சுஜாதாவின் மரணத்தால் வருத்தமுற்றிருப்பவர்களுக்கு எனது உண்மையான ஆறுதல். அதே மாதிரி சுஜாதாவின் கருத்துக்களின் மீது விமரிசனங்களை இந்நேரத்தில் வைப்பதும் அவரவரது தேர்வு.

சுஜாதா இன்னும் இறக்கவில்லை. அவரது கதைகளிலும், கருத்துகளிலும், ஒவ்வொரு சொல்லிலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்!

காரால் அடித்துத் தூக்குவது எப்படி? விளக்கப் படம்!

பொதுவிடத்தில் அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த ஒரு கோயிலின் ஒரு பகுதியை நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பக்த கேடிக்குச் சாமி வந்து, அம்பாசடர் ரதத்தை எடுத்துக்கொண்டு வந்து பொறியாளர்களை அடித்துத் தூக்கியிருக்கிறார்.
கடவுள் மேல் கொண்ட காதல் கண்களை மறைக்கிறது.(இதற்குத்தான் சொன்னான், ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று!) அல்லது இது சாதாரண மதவெறி, சாதிவெறி, பணவெறி கேசா?
நடந்தது கன்னியாகுமரி மாவட்டத்தில். இது குறித்த பதிவெதுவும் என் கண்ணில் படவில்லை.

காரோடும் படத்தை ஓட்டிப் பார்க்க இதை அழுத்தவும்!

எனக்கு வாய்கண்ட மருந்து - திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிவற்றல் மூன்றும் சம அளவில் சேர்ந்தது திரிபலா. இது சூரணமாக இம்ப்காப்சில் (IMPCOPS, திருவான்மியூர் தலைமையகம் மற்றும் அடையாறு பார்மசி போன்ற மருந்துக் கடைகளில்) கிடைக்கிறது. திரிபலாவுக்குப் பல பயன்களைச் சொல்கிறார்கள். இப்போதைக்கு சொந்த அனுபவத்தில் நான் கண்ட இரண்டு:

தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேன்னா, கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிப்பேன். அம்புட்டுதான். சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.

பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்று நான் நினைக்கிறேன்.