கவிதைகளைப் பற்றி...

என்ன செய்யலாம்

பூவாய்க் கொய்யலாம்
தறியில் நெய்யலாம்
கதிராய் அறுக்கலாம்
தூண்டிலிட்டும் பிடிக்கலாம்...

அல்லது
பருவுடம்பின்றித் திரியும் இவற்றை
உள்ளின் அகண்ட பெருவெளியில்
வார்த்தை வடிவேதும் தராமல்
அப்படியே பறக்கவிட்டு விடலாம்.

(எங்கேனும் படித்தேனோ, எழுதப்படாத கவிதைகள் அழகானவை என்று?)
இதை எழுதியபோது தங்கமணியின் 'நான் நடந்து கொண்டிருக்கிறேன்' இலிருக்கும் 'வார்த்தை'களைப் பற்றிய ஒரு துண்டின் ராகத்தை இது புனைந்திருந்ததைக் கண்டேன். கீழே இருக்கும் வரிகள் அவனுக்கு, நன்றிகளுடன்.

====================================================================

அவனுக்கு

நான்
தனியே நடப்பதில்லை
தனியே படிப்பதில்லை
எனவே
என் கவிதைகளும்
உன்னுடையவையே.

====================================================================

மாற்றம்

விடிந்தெழும்பி
பப்பாளிக்கன்று வளர்ந்திருக்கிறதா போய்
பனி விழுந்திருக்கிறதா போய்
கட்டிலில் புரண்டு
கவிதை முளைகளை
எண்ணிக் கிடக்கிறேன்.

====================================================================

நிலை

நேற்றுப் பணியிடத்திலிருந்தேன்
எட்டிப் பார்த்துப்
புன்னகைத்துப் போக வந்தவனை
புரத மூலக்கூறுகளிரண்டு,
முதலாளியின் செல்லப் பிள்ளைகளாம்,
ஏதோ பேசி விரட்ட
வெளியே தேம்பி நின்றவனை
மாலையில் வரும்போது
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அங்கு
உடைகள்தாம் கூர்ந்து கவனிக்கப்படும்
நாளைக்கு
விஞ்ஞானியின் உடையில் வா.

ஒரு நண்பரின் குதிரைகள்

நேற்று எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு நண்பர் இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்தார். குதிரை ரகங்களைப் பற்றிய அறிவு இல்லாமையால் அவற்றை வெள்ளைக் குதிரைகள் என்று மட்டும் அடையாளம் கண்டு கொண்டேன். ஒன்றுக்குப் பச்சையாலும் மற்றொன்றுக்குச் சிவப்பாலும் இடுப்புக்குக் கீழே (அதாவது கால்களை மறைப்பது போல்) சுருக்கம் வைத்த பாவாடை கட்டியிருந்தது. ஒன்றின் மேலே ஒரு ஆணின் மேல் பாதி உடம்பும், தலையும். உடம்பும் தலையும் தனித்தனியே ஆடும். அந்த ஆளுக்கு ஒரு அழகான மீசையும் உண்டு. இதேமாதிரி இன்னொரு குதிரையின் மேல் ஒரு பெண். அவருக்குப் பச்சை நிறச்சேலை. இருவருக்கும் தலையில் கிரீடம். அபினயம் பிடிக்கும் கைகள். குதிரைகள் இரண்டும் கூம்பு போன்றதொரு பீடத்தின் மேல். லேசாய்க் குதிரையை ஆட்டினால் குதிரை, குதிரைமேலிருக்கும் ஆளின் உடம்பு, தலை மூன்றும் தனித்தனியே ஆடும். பொய்க்கால் குதிரை என்று பையனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பொய்க்கா வரைதான் அவனுக்குச் சொல்ல வருகிறது. எங்கள் வீட்டிலொரு சின்ன மேளமும் இருக்கிறது (banjos) அதை அடித்துக்கொண்டே அந்த ஆணை வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் பெண்ணை ஜக்கம்மாவாகவும் (அவர் மனைவி பெயர் மறந்து போனது, இன்னும் நினைப்புக்கு வரவில்லை), மற்றுமொருமுறை ஆணை பாரதியாகவும் பெண்ணை செல்லம்மாகவும் ஆக்கி, அல்லது சும்மாகவேனும், பாட்டுக்கள் பாடி, கதை சொல்லி, மேளமடித்து...பையன் ரசிக்கிறான். அந்தக் குதிரைகளை இந்தப் பையனுக்காகவே தமிழ்நாட்டிலிருந்து வரவழைத்துத் தந்திருக்கிறார். நன்றி நண்பரே.

சூடு

தொண்டை வலியும் காய்ச்சலும் தலைவலியும், வந்தால்தான் தெரிகிறது. நாலு பேர் சேந்து அடிச்சுப் போட்டது மாதிரி கிடந்தேனாம், மனைவி சொன்னார். பிணியும் காதலும் பீடிக்கும் வரை எல்லோரும் தம்மைக் கல் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள்! ஈழத்து அவியல் மருந்தும் (கசாயம்), கோழிக்கால் சூப்பும், எலுமிச்சம்பழத்தில் மிளகுத்தூளும் உப்பும் கலந்து வாயில் பிழிந்து விட்டுக் கொண்டதுவும், சில டைலினால் மாத்திரைகளும் வேலை செய்ய எழுந்துவிட்டேன்.

கண்ணெரிச்சலோடு நடுநடுவில வந்து வலைப்பூங்காவைப் பாத்துட்டுப் போனேன். பெயரிலி சொன்ன சித்தார்த்த செ குவேராவின் கவிதை காய்ச்சலோடு சேர்ந்து சுட்டெரித்தது:

மணற்றிடர் மாந்தருக்காய்....#
=====================

இங்கே,
படகுகளை இழந்துவிட்ட
மணற்றிட்டு மனிதருக்காக
எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
*****

எதைப் பற்றியும் எவரும்
அவரவர் சைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

******
என்னை விடு எனக்கென்ன குறை?
எழுதிக்கொண்டிருக்கின்றேனே
எலியைப் பற்றியாவது,
எவரையாவது பற்றியேதாவது;
என்னவரை, மண்ணவரை,
எங்கேனும் ழிமணற்றிட்டில்
திக்கற்றுத் தனி நின்றவரை,
படகை, கடலை, மீனை, தமிழை,
நிலத்தை, நெருப்பை, பனையை, முனியை,
நினைவை, கனவை, சனியை, பனியை,
சளியை, வளியை, வலியை, கலியை,
இரவே கவிந்த இருளின் செறிவை,
குனிந்த புருவத்தை, கொன்ற நற்காலத்தை,
பனித்த சடையை, பாவக்கரங்களை,
மதர்த்த கொங்கையை, மடிந்த பெண்டிரை,
உடைத்த பொற்பாதத்தை, உடையா நன்நம்பிக்கையை,
முனித்த சேனையை, முடியாத் துயரத்தை,
வனைத்த பானையை, வள்ளியை, மலைக்குறமாதை,
சினைத்த கர்ப்பத்தை, சிதிலித்த பிண்டத்தை,
நரிப்படு மனிதரை, நாய்ப்படு நம்வாழ்க்கையை,
தமிழ்ப்படு பெருந்தாயகத்தை, தவறிய எம் கட்குறிவீச்சை,
குறைப்படு நோக்கினை, கொல்குற்றப் பெருஞ்சாட்டினை,
எதைப்படவோ இருக்காமல் எழுதுவேன், எழுதுவேன்
இங்கே எங்கோ என் உயிரிரந்த பூமியில்,
தங்காவோட்டங்காண், தமிழ் எழுத்தாணி இற்றல்வரை.

இதில் வயப்படா நண்ப, எம் திசை கிளைப்படு மிங்கே.
புறப்படு நீ போ, போய் புக்குன் உடற்சிறைக்குள்.
மாது அணைப்பினுட் சேரு; நம்மூழ் மறந்துறவாடு.
சினைப்படப் பெருக்கு; சிக்கிக்கொள் உன்னுள்ளே செய்சித்தம்;
வசித்திரு வுலகு தானே வழிப்படச் சிறக்குமென் றன்றோவுன்னிருப்பு?

நினைவிற் கடற்பரப்பில் வாழ்வேன்; என் கைக்களைப்பினைக் காண்பேன்.
அந்தோ!
மணற்றிடர் மாந்தர் மீண்டும் கடல் புறப்பட்டார் கண்டேன் யானே.
செல் திசைக்குறிப்பறியா மூடர், மீண்டும் வலிந்து
சென்றார் வடக்கினை வழியென் றெண்ணி.
உன்னில் வடக்கிருந் திறந்தால் வாழ்வி
லெமக்கு வழி பிறக்குமோ,
சொல்
- கடல் மணற்றிட்டே?

******
இதிலேதென்றாலும்,
என்னையிங்கு விட்டுவிடு;
எனக்கென்ன குறை இனி?

படகுகளை இழந்துவிட்ட
கடல் மணற்றிட்டு மாந்தருக்காய்
கவி பாடிக்கொண்டிருப்பேன்,
ஒரு பனிப்பசுமைத்தேசத்து,
குளிர்பதன அறையிருந்து.

/-
17 ஜூன், 2000
From: "Siddhartha 'Che' Guevara"

# "A group of Tamil refugees has been refused entry to India and
handed over to the Sri Lankan navy on a remote uninhabited island off
India's southern coast." - BBC, Saturday, 17 June, 2000, 15:56 GMT
16:56 UK
http://news.bbc.co.uk/hi/english/world/south_asia/newsid_795000/795230
.stm

ஊளைகள்

இட்டுப் போர்த்தி நானிறங்க
சுற்றுச் சுவர்ப் பனித் துருவலைப்
பறக்கடித் தோடியது
அணிலொன்று அம்மணமாய்.

பனியூதலில் உம்
குளிரூளைகள்-
ஜட வானரங்கள்
தெளிந்தும் பிறப்பதில்லை
பிறந்தும் தெளிவதில்லை,
எங்கள் ராமனின்
சொல்லுக்கு அலையடங்கும்
அவன் வரைந்த
கோட்டுக்குக் குளிரடங்கும்.

என் கதையும், சுரைக்காயும்

வள்ளுவர் திடல், சின்னதுக்கும் பெருசுக்கும் இடைப்பட்டுக் கிடக்கும் எங்க ஊரில் இருக்கும் ஒரு பன்னோக்குத் திடல். என் பிள்ளைப் பிராயத்தில் நான் காணக்கிடைத்த ஒரே திடல். வள்ளுவர் திடல்ல நிறைய நடக்கும். புதன் கிழமைகள்ல வாரச்சந்தை. சில சாயங்கால வேளைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டம். ஏ ராஜீவ் காந்தியே, இதற்கு பதில் கூற முடியுமா உன்னால் என்று ஒரு தோழர் முழங்கிக் கொண்டிருப்பார். ராஜீவ் காந்தி யார், அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார் என்ற கவலை ஏதுமின்றிப் பக்கத்திலிருக்கும் கடைவீதியிலிருந்து தன்பாட்டுக்குச் சாமான் வாங்கிக்கொண்டு போகும் கூட்டம். அங்குதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் ஒரு சர்க்கஸும் நடந்தது. ஒருத்தி காலால் கிண்ணங்களைத் தூக்கிப் போட்டுத் தலையில் அடுக்கினது நினைப்பிலிருக்கிறது. கோயில் திருவிழாக்களின்போதும் தமிழ்ப் புத்தாண்டின்போதும் அங்குதான் இரவிரவாக நாடகங்கள் புழுதி கிளப்பும். "13ம் தேதி இரவு சரியாக 10 மணியளவில் வள்ளுவர் திடலில் அமைந்திருக்கும் மின்னொளி கலையரங்கில் காரைக்குடி தங்கசாமி வேலன் வேடன் விருத்தனாகத் தோன்றி நடிக்கும் வள்ளித்திருமணம்" என்று போஸ்டர்கள் சொல்லும். அப்பா இரண்டு மணிக்கு எழுப்பிக் கூட்டிக் கொண்டு போய் முருகனை மட்டும் காட்டிவிட்டு பபூன் (நகைச்சுவைக் கலைஞர்களுக்கு நாடக உலகில் இப்படி ஒரு பெயர்) வந்தவுடன் அவர் சொல்லும் ஏ ஜோக்குகளிலிருந்து காப்பாற்ற என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார். பிற்காலங்களில் இதே நாடகங்களை அந்த ஜோக்குகளுக்காகவே பார்த்ததும் வேலன் வந்தவுடன் எந்திரிங்கடா என்று கிளம்பியதும் வேறு கதை.

நான் சொல்ல நினைத்தது வள்ளுவர் திடலைப் பற்றித்தான். ஆனால் நான் சொல்லிக் கொண்டிருப்பது வள்ளுவர் திடலுக்கும் எனக்குமான சம்பந்தத்தை. கவனித்தால் இந்தப் பிறழ்வு தெரியும். இதுதான் அன்றைக்குத் தங்கமணி பாலாஜிக்குச் சொன்ன மனதின் குறுக்கீடா? எழுதும்போது ஒரு விஷயத்தை மட்டுமே ஒரு நேரத்தில் சொல்லவேண்டும். இது சரியா? சரி என்றால் நான் முதலில் வள்ளுவர் திடலைப் பற்றியும் அதன் பின்னர் 'நான்' எப்படி வள்ளுவர் திடலுக்குள் வருகிறது என்பது பற்றியும் எழுதுகிறேன்.

பங்களா குளம், புள்ளையார் கோயில், ஒரு அரச மரம் இவற்றைப் புறத்தே கொண்டும், ஆஸ்பத்திரி, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் இவற்றை கீழ்ப் புறத்திலும் காந்தி பூங்காவை மேற்புறத்திலும் கொண்டிருக்கும் அந்தத் தகரக் கூறை வேய்ந்த, கிட்டத்தட்ட ஆறடி உயர மேடைதான் வள்ளுவர் திடல். இதன் பிறப்பு எப்போதென்று பலருக்கும் தெரியாது. மேடைக்கு முன்னால் இருபதடி தள்ளி ஒரு பத்து கொடிக்கம்பங்கள் இருக்கும். அவற்றில் அந்த நாளைய கட்சிகள் பலவற்றின் கொடிகள், காற்றடிக்கும்போது பறக்கும், அரசமரத்தடிகூடப் புழுங்கும் மதியங்களில் அசையாமல் கிடக்கும். இவற்றில் பல கொடிகள் கிழிந்தும், மங்கியும் கிடந்தாலும் இவையும் காற்றுக்குக் கட்டுப்பட்டே இருந்தன. அந்தத் திடல் பல நிகழ்வுகளின் களமாயிருந்திருக்கிறது. சுற்றியிருக்கும் சிற்றூர்களிலேயே சற்றுப் பெரியது என்பதால் புதன் கிழமை வாரச்சந்தை கூடும். வைக்கோல் வண்டிகள், மாடு ஆடுகள், பானைச் சட்டிகள், மண் அடுப்புகள், பொறி உருண்டை, போண்டா, புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியம், விதைகள் இதெல்லாம் மனுசத் தலைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு சந்தையைப் பார்க்கும். அவற்றின் பயணத்தில் கரம்பக்குடி வள்ளுவர் திடல் ஒரு புது வாழ்க்கைக்கான துவக்கக் கோடு. சந்தையின் கைமாற்றுப் படலத்தில் வள்ளுவர்திடல் ஒரு சாட்சி. அது காலகாலமாய் நடந்த கொடுக்கல் வாங்கல்களையும் வாய்த் தகராறுகளையும் மெளனமாய் நின்று பார்த்துக் கொண்டிருக்கும். வள்ளுவர் திடல் அந்த புதன் கிழமையைத் தவிர பெரும்பாலான பகற்பொழுதுகளில் மெளனமாய்த்தானிருக்கும். விடுபட்ட சில ஆத்மாக்களுக்குப் பகல்நேரப் புகலிடமாய்த் துண்டை விரித்துத் தூங்கவோ அல்லது தாயம் உருட்டவோ ஒரு நிழலாயிருக்கும். இந்த மேடையில் புகழ் பெற்றவர்கள், பெறாதவர்கள், பெறத்துடித்தவர்கள் எனப் பலரும் தோன்றியிருக்கிறார்கள். வள்ளித்திருமணத்திலிருந்து, போன திருவிழாவுக்குத் திரையிட்ட சினிமாப்படம் வரைக்கும் தன்னிடம் எத்தனையோ கதைகளிருந்தும், தன் அஸ்திவாரம் அரிக்கப் படுவதும், செங்கற்பல் தெரிவதைப் பற்றிய உணர்வு ஏதுமின்றியும் அப்படியே நின்று கொண்டிருக்கிறது.

இப்படியும் எழுதலாம். அல்லது நடையைக் கொஞ்சம் மாத்தி இப்படியும் எழுதலாம்.

பொதங் கெளம பொளுது விடிஞ்சாலே சத்தம் தொடங்கிரும். புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியக் காரரின் மைக் செட்டு சத்தம். வள்ளுவர் தெடல்ல இருக்க வாதாமடக்கி மரத்துல குழாய் ஸ்பீக்கரக் கட்டிருவாரு. ஒரு கட்டிலப் போட்டு அதுல நாலு டப்பாவும் இன்னம் என்னென்னமோவும் வச்சுக்கிட்டு, ஒரு நாக்காலி போட்டு உக்காந்துகிட்டு மைக்குல பேசுவாரு "சந்தக்கி வந்தீங்களா, சாமான வாங்குனீங்களா அதோட சேத்து வாங்கிட்டுப் போங்கன்னே வல்லார லேகியம். டப்பா ரெண்டுரூவா, பாக்கெட்டு ஒர்ரூவா. கைகால் வலி, மேலுகால் வலிக்கு சாப்புடலாம். மூட்டுக்கு மூட்டு வலி இருக்கா, மூட்டு ஜாயிண்ட்ல வலி இருக்கா, கைகாலெல்லாம் சள்ளக் கடுப்பா கடுக்குதா சாப்புட்டுப் பாருங்கண்ணே வல்லார லேகியம். நாப்பத்தெட்டு மூலிகைகளப் போட்டுத் தயாரிச்சதுங்க. வாய்வுக்கு சாப்புடலாம், வெட்டச் சூடு, வெட்ட வாய்வு, மலச்சிக்கல், நீர்ச்சிக்கலுக்குச் சாப்பிடலாம். புதுக்கோட்டை வல்லார சஞ்சீவி லேகியம்...", நாளு முளுக்கப் பேசுவார். இந்த ஊரு மட்டுமில்ல, எத்தினியோ சந்தக்கிப் போவாரு. அத்தினி சந்தையிலயும் இந்தக் கூப்பாடு...

இப்படியாக எழுதிக்கொண்டே போகலாம். அல்லது 'நான்' வள்ளுவர்திடலில் எப்படிக் கூத்தாடியது என்பது பற்றி எழுதலாம். ஆனாலும் கழிந்ததைப் போற்றி உப்புக்காகுமா, சுரைக்காய்க்காகுமா? இந்த அதிகாலையில் வெளியே வெண்பனியோடு கவிதை கொட்டிக் கிடக்கிறது. வண்டிக்காரன் வந்து குப்பை மாதிரி ஓரத்துக்குத் தள்ளிவிடுமுன் நான் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன். நாளைக்கு வாருங்கள் ஏதேனும் கிடந்தால் எடுத்து வைக்கிறேன்.

இன்னொரு முரண்

சனிமூலை கறுத்திருக்குன்னு ஊரே பேசும்
மேயப் போன மாடாடு சீக்கிரமாய் வீடு வரும்
குஞ்சு குளுவான்கள் மேகமூட்டக் களியிலாடும்
ரோட்டில் காயும் அவித்த நெல் வீட்டுக்குள் விரையும்
தூரு நனஞ்சாக்கூடப் போதுமேன்னு கதிர் காத்திருக்கும்
எல்லா நெஞ்சும் பெய் பெய்யெனத் துடிக்கும்

நாலு தூறல் விழக்
கவிந்திருந்த மேகத்தைக் காற்றள்ளிப் போகும்

நேற்று வெட்டிப்போட்ட விறகு
நனையாத திருப்தியில்
நம்மில் கொஞ்சம்.

தேடலின் துவக்கம்

ஓட்டவெறியூட்டு வேலை
வீசுண்டகை நழுவவிட்டு
இரவின் பனியிற்புதைந்த
வளையத்து ஒற்றைச்சாவியின்
இறுதிச் சமிக்ஞை
ட்லீங் க்ர்ச்.

ஒரு இரவும், சில நினைவுகளும்

மாட்டுப் பொங்கல். காலயில எந்திருச்சு வீட்ல இருக்க எல்லா மாடு கண்ணுகளயும் குளிப்பாட்டுவோம். பெத்தாரின்னு ஒரு குளம் இருக்கு. அந்தக் குளத்துல தண்ணி கிடந்தா அங்க போயி, இல்லன்னா வீட்டிலேயே. அப்புறம் அதுகளுக்கு சாம்புறானி போட்டு, கொம்புக்குக் காவி அடிச்சு (அப்பா பெயிண்ட்டெல்லாம் அடிக்க மாட்டார், ஆனா எங்க தெரு முத்து மாமா அவரோட வண்டி மாட்டுக்கு பெயிண்ட் அடிப்பார்), அப்புறம் கொட்டாங்கச்சியில காவியைத் தொட்டு வட்ட வட்டமா மாட்டு முதுகுல 'டிசைன்' போடுவோம். இப்படியாகப் பகல் பொழுது போயிரும்.

சாயங்காலமாக எல்லா மாடுகளையும் எங்க அப்பாயி வீட்டுத் திடலுக்குக் கொண்டு போவோம். எங்க சித்தப்பா ஒன்னு இருக்கு. அதுதான் எங்க மாட்டுப் பொங்கலின் கெளரவ பூசாரி. இப்படி ஒவ்வொரு தெருவுலயும் அன்னக்கி ராத்திரி பல திடீர் பூசாரிகள் தோன்றுவார்கள். மாடுகள் மட்டுமில்லை. ஆடுகள்கூட வரும். எல்லாத்துக்கும் மாலை அல்லது கொஞ்சம் கதம்பப் பூ போட்டிருக்கும். எல்லா வீட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் சாமான்கள் வரும். பெண்டுகள் சேர்ந்து பொங்கல் வைக்க, ஆம்பிளைகள் பலா இலைகளைச் சீவாங்குச்சியால் கோர்த்து இலையும், தொன்னையும் (சின்ன கிண்ணம் மாதிரி இருக்கும், இலையால செய்றது) தைப்பதும், பூசாரியின் அவ்வப்போதைய கட்டளைகளான, மாவிலை ஒடிச்சுக்கிட்டு வாங்க, இந்த வெல்லத்தை நுணிக்கிட்டு வாங்க, சம்முவம் வரமுடியாதுன்னான் அவன் மாட்டப் புடிச்சுகிட்டு வாங்க, என்பன போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

வாண்டுகள் என்ன செய்வோம், தாம்பூலத் தட்டு, சாப்பாட்டுத் தட்டு இவைகளைத் தூக்கிக் கொண்டு கரும்பு அல்லது குச்சியை வச்சுத் தட்டிக்கிட்டே தெரு முழுக்க ஓடுவோம். எதுக்குன்னு கேக்காதீங்க. பொங்கலோ பொங்கல்னு அப்பப்ப சத்தம் வேற. இதே மாதிரி பல க்ரூப்புகள் அந்த அழகான இளம் ராத்திரியில ஓடித்திரியும். பறையடித்துக்கொண்டு நாலைந்து பேர் தெரு முழுக்கச் சுற்றுவார்கள்.

ஒரு வழியா பொங்கல் வச்சு முடிப்பாங்க. பூசாரி தையல் இலையில அதைக் கொட்டி, வாழைப்பழம், கரும்பு இன்னபிற சரக்குகளையெல்லாம் போட்டுப் பிசைந்து உருண்டை உருண்டயா உருட்டி வைப்பார். அப்புறம் எண்ணெய், அரப்புத்தூள், தண்ணி, பொங்கல் எல்லாத்தையும் ஒவ்வொருத்தர் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு மாடு ஆட்டுக்கிட்டயும் போவோம். முதல் ஆள் எண்ணெ எண்ணெ அப்படின்னு சொல்லிக்கிட்டே அதுகளுக்கு எண்ணெய் வைக்கும். இதே மாதிரி அடுத்த ஆள் அரப்புத்தூள். அப்புறம் தண்ணி, அப்புறம் பொங்கல். இந்த வைபோகத்தின்போது இந்த தாம்பூலம்/தட்டு கோஷ்டி வேகமாய் அடிச்சுக் கிளப்பும். சில மாடுக அடடா நம்மள என்னமோ பண்ணப் போறாங்யன்னு அத்துக்கிட்டு பறியுறதும் உண்டு. அதுகளைத் தேடி இழுத்துக்கிட்டு வர நாலு ஆளு போவும். இந்தக் கூத்து முடிஞ்சதுக்கப்புறம் மாடாடுகளுக்கு திருஷ்டி சுத்திப் போடுறதோ என்னமோ, 'கோயிந்தா கொட்டுறது'ன்னு சொல்லுவோம், ஒரு சட்டியில நெருப்பைத் தூக்கிக்கிட்டு சுத்தி சுத்தி ஓடித் தெரு முனையில கொண்டு கொட்டுறது. தாம்பூல வாண்டுகளும் உச்சவேகத்தில் அடித்துக்கொண்டே பின்னால் ஓடும். அப்புறம் வந்து எல்லாருக்கும் ஒரு உருண்டைப் பொங்கல். வீடு வர பத்து மணியாயிரும்.

இந்த நினைப்பெல்லாம் கனவுமாதிரி சுத்துது. அந்நினைவுகளின் மையத்தில் இருக்கதெல்லாம் அந்த மங்கிய ராவெளிச்சத்தில் தாம்பூலத் தட்டை அடித்துக் கொண்டு ஓடினதும், இந்த மாதிரி ஒரு மாட்டுப் பொங்கல் ராவில் ஓடும்போது கிணத்துக்குள் விழுந்து செத்த ஸ்டீபன் வாத்தியார் மகன் ஸ்டான்லியும்தான்.
அவனுக்கு என் வயது.

பொங்கலோ பொங்கல்!!

உழைத்து வாழும் மானுடர் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

காலம் வைக்கும் கூட்டு!





விண்ணில் வீடு வீடாகச் சென்று சோதனை நடக்கிறது. ஒரு பக்கம் செவ்வாயிலிருந்து படம் வருகிறது இன்னொரு பக்கம் வெள்ளியிலிருந்து புதுப்படம் வரப்போகிறதாம். வீட்ல யாருங்க, யாராச்சும் இருக்கீங்களான்னு அங்க நின்னு யாரோ கத்துற மாதிரி இருக்குல்ல?

அந்தக் கோள்கள்ல பூமியில இருக்க எந்த வகை உயிரி மாதிரியோ இல்லாம, வேற ஒன்னும் இருக்கலாம். ஆரம்பத்துல பூமியில இருந்த அணுக்கள் ஒவ்வொன்னா காலப்போக்கில் சேந்த கூட்டம்தானே நாம எல்லாரும். அதே மாதிரி அந்தந்தக் கோள்கள்ல இருக்க அணுக்களின் கூட்டமாய் அந்த உயிரிகளும் இருக்கலாம். எனக்கு என்ன சந்தேகம்னா (ரொம்ப முட்டாள்தனமா இருந்தா சிரிக்காதீங்க!), இந்தத் தனிம வரிசை அட்டவணையில இருக்க தனிமங்கள்ல அடங்குற தனிமங்கள்தான் அந்தக் கோள்கள்லயும் இருக்குமா அல்லது அதைத் தவிரவா? அவற்றோட விகிதாச்சாரமும் வேறயா இருக்கும்ல? அப்படின்னா அதோட கூட்டுப் பொருளோட தன்மையும் வேற மாதிரிதான் இருக்கும். சமையல்கட்டுக்குள்ல அன்னக்கி இருக்கத வச்சு ஒரு கூட்டு வக்கிறமில்ல அதான்.

கடலுக்கு அடியில சுடுதண்ணி ஊற்றுகள்ல வாழும் நுண்ணுயிரிகள் மாதிரி வெள்ளியின் அதிவெப்பத்தில் வாழும் உயிரிகள் இருந்தாலும் இருக்கலாம். எல்லாம் காலப்போக்கில் தனிமங்களும் அவற்றின் கூட்டும்தானே!

மழலைகளுக்கு

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - சின்னப் பிள்ளைகளுக்கு நல்லாருக்கும் போய்ப் பாருன்னு சாரா ஒரு நாள் சொன்னார். பார்த்தேன். அனைவருக்காகவும் பல தளங்களில் விரிந்து பரவும் அது ஒரு சிறந்த முயற்சி. அதில் மழலைக் கல்வி நம்ம வாண்டுவின் 'மிகப் பிடித்த' இணையப் பக்கமாயிருச்சு. நல்ல பாட்டுக்கள், கதைகள், தெளிவான படங்கள், பயிற்சிகள் அப்படி இப்படின்னு கலக்கியிருக்காங்க. எழுத்துக்களைப் பாக்க TAB எழுத்துரு தேவையா இருக்கு. ஆனா கதை, பாட்டு இருக்கும் பக்கங்களுக்கு அது தேவையில்லை. முடிஞ்சா போய்ப் பாருங்க. எனக்குப் பிடித்த சுட்டி வரிசையில் சேர்த்திருக்கிறேன்.

இந்த இணைய பக்கத்துல எனக்குப் பிடிச்ச இன்னொரு சங்கதி அகராதி. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் அர்த்தங்கள். முயற்சி செஞ்சு பாத்தேன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாத்துறது பிரச்சினை இல்லை. டப்பு டப்புன்னு வந்து விழும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொஞ்சம் சுத்தனும். நான் என்ன செஞ்சேன்னா முரசு எடிட்டரில் அடித்து அதை TAB ஆக மாற்றி, அதைக் கொண்டுபோய் அகராதியின் தேடும் பெட்டியில் ஒட்டினேன். இது வேலை செய்கிறது. வேறு ஏதேனும் சுலபமாயிருந்தால் சொல்லுங்கள்.

இன்னொரு அழகான செயலி, தங்கமணி சொன்னது, டக்ஸ் பெயிண்ட் என்பது. வண்ணத்தை அள்ளித் தெளிக்கிறது. வரையும்போது சத்தமும் கூடவே. சின்னது பெருசு எல்லாம் வாயைப் பிளந்தபடி பார்க்கும். என்னென்ன வடிவங்கள் தெரியுமா? போய்ப் பாருங்கள் தெரியும்!

இவற்றையெல்லாம் வடிவமைக்கும் விற்பன்னர்களுக்கு நம் நன்றிகளைச் சொல்லிக்கொள்வோம்.

அதற்கும் மேலாக அவற்றைப் பயன்படுத்தி, வரும் தலைமுறைப் பிள்ளைகளாவது 'டமில்' கிலோ/பவுண்டு என்னா விலைன்னு கேக்காம இருக்க மாதிரி பாத்துக்குவோம்.

நிலை மாறுபாடுகள்

ஓடையாய் ஓடிக்கொண்டிருந்தது உறைந்து கிடக்கிறது. வீசின அலைகள் 'கல்லாகப் போகக் கடவாய்' என்று சாபம் பெற்றது மாதிரி அகடும் முகடுமாய்ச் சமைந்து கிடக்கின்றன. குளிர் இண்டு இடுக்கு விடாமல் எல்லா இடங்களிலும் பரந்தாகி விட்டது. உடம்பில் மாட்டியிருக்கும் அங்கிகள் எல்லா அசைவுகளையும் தன் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றன. வெளியில் வருவதற்காகக் காத்திருந்ததுபோல் வா என்று கூவி ஓங்கி முகத்திலறையும். மூக்குச் சிவந்து முகம் சுருங்கித் தொய்ந்து போகும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் அடித்துத் துவைக்கும்.

ஒரே பொருள். திட, திரவ, வாயு வடிவங்கள்.

சுழற்சிகளின் மீது வைக்கும் நம்பிக்கையைத் தவிர இப்போதைக்கு வேறென்ன இருக்கிறது? ஆனால் இந்த நம்பிக்கை நிகழ்வடிவின் மறுதலிப்பு. அந்நம்பிக்கை இவ்வடிவினைப் புறக்கணித்ததாகி விடுமோ?

ஒரு பொருள், பல வடிவங்கள். எந்த வடிவை உண்மையென்று கொள்ள? எல்லா வடிவங்களுமே இயல்புதான், இவற்றில் எது 'இயல்பான' இயல்பு? அப்படி ஒன்று இருக்க முடியுமா?

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை...(திருவாசகம்)

என்ன சொல்வேன்?!

கன்னுக்குட்டி



செவலக் கன்னுக்குட்டியக் காணோம்.

எப்ப?

காலயில மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிக்கிட்டு போவயில, டவுன் பஸ்ஸைக் கண்டு அறுத்துக்கிட்டு ஓடிருச்சு.

நரியாத்துப் பாலத்துக்கிட்ட நிக்கின்னாக, பட்டுக்கோட்டாயி கொல்லைகிட்ட நிக்கின்னாக, ஒரு பக்கமுங் காணோம்.

தம்பி தேடிக்கிட்டு அலயுறான்.

சீத்தாப்பா வெத்தலக் குறிகாரர்கிட்ட மை போட்டுப் பாக்கலாமுங்குறார்.

நரங்கிப்பட்டுல போனவாரம் நாலு மாடு காணோமாம். நம்பரு போட்டு கேரளாவுக்கு ஏத்திருப்பாங்யன்னு பேசிக்கிட்டாக.

நல்ல கன்னுக்குட்டி யாரு ஓட்டிக்கிட்டு போனதோ.

சரி சரி சாப்புட்டுப்புட்டு படுங்க. கன்னுக்குட்டி வந்துரும்.

அஞ்ஞானச் சந்தையில்

தினமணியில் நேற்றொரு செய்தியைப் பார்த்தேன். சென்னையில் ஒரு வியாபாரியாம். 3 கோடி பெருமானமுள்ள கழுத்தணியை (2 கிலோ) திருப்பதி வெங்கடாசலபதி சிலைக்குக் கொடுத்தாராம். பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தது யார் தெரியுமா? மதச்சார்பற்ற இந்தியாவின் துணைப் பிரதமர். (இதை முடித்துவிட்டு புட்டபர்த்திக்குப் போய் சாயிபாபாவைத் 'தரிசிக்க' இருக்கிறது து. பிரதமர் என்ற மேலதிக விபரத்தையும் தருகிறேன்). 3 கோடிகள். கிட்டத்தட்ட 300 நல்ல மடிக்கணிணிகளை வாங்கலாம். எத்தனையோ பள்ளிக்கூடங்களுக்குப் புத்தகங்களாய் அள்ளித் தந்திருக்கலாம். அட அவர் யாரோ தெரியாதவர்க்குக் கொடுக்க வேண்டாமய்யா, அவரது சொந்த பந்தத்திலாவது நலிந்தவர்க்குக் கொடுத்திருக்கலாம். இந்த மடக்கூத்துகளைக் கண்டு நெஞ்சம் வேகிறது.

அமெரிக்கக் கோயில்களைக்கண்டால் இன்னும் பதைக்கும். டாலரில் கொட்டுகிறார்கள். இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, இங்குள்ள கிறிஸ்தவக் கோயில்களும்தான் நல்ல பணம் பார்க்கின்றன. செபக்கூட்டங்களில் பிரம்புக் கூடைகளைக் கொண்டு அள்ளிக்கொண்டு போவார்கள். வருமானத்தில் ஒரு தொகையைக் (10% என நினைக்கிறேன்) கோயிலுக்குக் கொடுக்கும் தர்மவான்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னத்துக்கு இப்படி கல்லில் கொண்டு போய்ப் பணத்தைக் கொட்ட?

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்று யாரோ சொன்னதெல்லாம் புதைந்து போயின. மெய்ஞானத்துக்கும், இறையியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத இந்தக் கோயில்களா நம் அகக்கண்களைத் திறக்கப்போகின்றன? உள்ளே வேதத்தை ஓதிவிட்டு வெளியே சாத்தானோடு சேர்ந்து ஆட்டம் போடும் மதங்களா நமக்கு விழிப்புணர்வைப் போதிக்கப் போகின்றன?

கோயிலுக்குச் சமூகக் கடமைகள் அனேகம் இருப்பதாகவும் அதனால் கோயில்களும் மதங்களும் அவசியம்தான் என்பது ஒரு சாரரின் வாதம். பழங்காலத்தில் ஆலயம் வெறும் வியாபாரத்தலமாக இல்லாதபோது, கல்விக்கும் கலைக்கும் இடமாயிருந்த போது வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படியா? ஒவ்வொரு கலைக்கும், கல்விக்கும், சமூகக் கற்பிதங்களுக்கும்தான் தனித்தனியே நிறுவனங்கள் இருக்கின்றனவே. இப்போது கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு வியாபார நிறுவனம். அதைச் சார்ந்து தொழில் நடத்துவோர் அனேகம். இவர்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் மட்டுமே இப்படிப்பட்ட நிறுவனங்களை வளர்த்தெடுப்பது ஒப்புக்கொள்ள முடியாதது.

"செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றெண்ணியிருப்பவர் சுத்த மூடரென்றிங்கூதேடா சங்கம்" என்ற பாரதியின் வரியாகட்டும், "ஊர்கூடிச் செம்பை வைத்திழுக்கிறீர்" என்ற திருமூலனின் சாடலாகட்டும், "பாலென்று அழும் பாலகனுக்குப் பால் கொடாமல் பாழாய்ப் போன கல்லுக்குப் பாலாபிஷேகம் ஏனடா" என்று முகத்திலறைந்த பெரியார் கட்சிக் கூப்பாடாகட்டும்...எதுவும் நம்மைத் திருத்தாதோ என்று பரிதவிப்பாய் இருக்கிறது.

பதிவின் எச்சம்

பள்ளியில் வெடித்தது
தனற்புகைத் திரையூடே
தோழியரின் அதிர்வதனம்
சோழிச் சிதறலில்
தொலையும் தங்கைமார்...

தொண்டைப்புண் மிடறாய்க்
காலம் விழுங்கியும்

விடியலின் வறண்ட குரலில்
தெறித்துச் சுடும்
மனைவியின் கனவில்

இன்னமும் வெடிக்கிறது
சிங்களக் குண்டு.

விருந்து


இன்னும் நாலு நாள்
மூனு
நாளன்னக்கி
நாளக்கி
மத்தியான பஸ்ல
பெட்டியோட வந்து எறங்குவாங்க
கவுத்துப் போட்டிருந்த கோழி அறுபடும்
நுங்கும் பலாப்பழமும் வெட்டுப்படும்
பெரியவர்களின் பழங்கதைகள்
எங்கோ தொலைவில் ஒலிக்க
நுங்கு மட்டை வண்டியும், பனவோலைக் காத்தாடியும்
புதியவர்களுக்குக் காட்டுபடும்
பட்டணத்துப் பொம்மையை விரல் தடவும்
நெஞ்சு துடிக்க நெடுநாட் சாகசங்கள் சொல்லுபடும்
லைட்ட நெறுத்திப்புட்டுப் படுங்கன்னு சொல்லச் சொல்லக்
தலவாணிச் சண்டையும் கும்மாளமும் காதடைக்கும்...
இன்னும் நாலு நாள்
மூனு
நாளன்னக்கி
நாளக்கி
காலையில மொத வண்டியில ஏத்திவிட்டுட்டு வரும்போது
வெறுமை கவிந்திருக்கும்.

கோடை விடுமுறை



துணிக்கடை மஞ்சள் பை புத்தகங்களோடு ஆணியில்,
தொடுவாரற்றுத் தொங்கும்.
காலையில் எழுப்பிவிடும் புளிய மரத்தடிப்
பாளையக்காட்டின் சத்தம்.
சூரியன் உச்சி வந்து காயும் வரை கோயில் குளம் ரெண்டுபடும்
புளியங்காயடித்துச் செங்காயாய்ப் பொறுக்கித் தின்னும்
தெருவில் விற்று வரும் ஈச்சம்பழத்துக்கும் முந்திரிப்பழத்துக்கும் வாயூறும்
ரோடுபோடக் கொட்டி வைத்திருக்கும் சூரியங்கல்லால்,
வேலிக் கரட்டான்கள் அவ்வப்போது வேட்டையாடப்படும்.
அய்யர் வீட்டுக் கொல்லையில் மாங்காய் பால் தெறிக்கப் புல்லில் விழும்
டோய் என்ற சத்தத்துக்குப் பஞ்சாய்ப் பறக்கும் கூட்டம்
அடங்கிக் கிடந்தாத்தானே என்று திட்டிக்கொண்டே,
சைக்கிள்ல விட்ட காலுக்கு மஞ்சப் பத்துப் போடும் அம்மா...

இங்கினதான் வச்சேன்
திரும்பிப் பாத்தாக் காணோம்.

மத்தாப்பு




ரொம்ப நாட்களாய் எழுதாமல் திரிந்து கொண்டிருந்தேன். விழித்துக்கொண்டிருப்பதால் உட்கார்ந்துவிட்டேன். எல்லாப் புது வருடங்களையும் போல நேற்றும் ஒரு புது வருடம் வந்தது. தேடிப்பிடித்து மத்தாப்பும் சங்கு சக்கரமும் வாங்கி வந்தோம். குளிரில் நடுங்கிக்கொண்டே கொளுத்தி முடித்தோம். இன்றைக்குக் கொஞ்சம் மீதி வைத்துக்கொண்டு. சின்னப்பிள்ளைகளுக்கு வம்பில்லாத பாடு. அவர்களுக்கு மத்தாப்பை யார் எங்கு செய்கிறார்கள் என்ற கவலை இல்லாமல் ஒளிர்ந்து தெறிக்கும் அந்தப் பொறியைப் பார்த்து ஆனந்திக்க முடியும். நமக்கு அப்படியா? முன்பொரு தரம் பதினான்காவது தடவையாய்க் காதல்வயப்பட்டிருந்த ஒரு தீபாவளி நேரத்தில் மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களைப் பார்த்து எழுதினேன்:

புது மத்தாப்பைக் கொளுத்துகிறது எரியும் மத்தாப்பு
எனக்குள் எரிவது உன்னைப் பற்றாதா?

காலம் எல்லாவற்றையும் எரித்துப் பொறியாக்கி, நெருப்புப் பழுத்துச் சிவந்து தணியும் கம்பிகளை வேலியோரத்தில் வீசிவிட்டுத் தன்பாட்டுக்குப் போகிறது. இதில் நானும், பதினான்காவது காதலும் எம்மாத்திரம்? புத்தாண்டு வாழ்த்துக்கள்!