இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles

வெளிநாடுகளில் வசிக்கும் நம்மில் பலரிடம் frequent flyer miles இருக்கும். Northwest Airlines (NWA) மற்றும் Continental Airlinesன் மைல்கள் உங்களிடம் இருந்தால் Americares அதைப் பெற்றுக் கொள்கிறது. இதைச் செய்வது சுலபம். உங்கள் கணக்கு எண்ணுடன் NWA/Continental ஐத் தொடர்பு கொண்டு Americaresக்கு என் மைல்களைக் கொடுங்கள் என்றால் போதும். Americaresஇடம் இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. 5 நிமிட வேலை.

இப்போது பார்க்கிறேன் செஞ்சிலுவைச் சங்கம் பல விமான நிறுவனங்களின் மைல்களையும் (including the famous Delta Skymiles) வாங்கிக் கொள்கிறதாம். நீங்கள் கொடுக்கும்போது "சுனாமிக்காக" என்று குறிப்பிடவும்.

ஒரு மதியம்

உண்டியல் குலுக்கக் காலையிலிருந்து ஆட்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருத்தரையும் காணலை. மதியம் நான் மட்டும் கிளம்பி எங்கே போவதென்று முடிவின்றி, கார் போன போக்கில் போய் Lowe's வாசலில் நின்றேன். அச்சடித்த துண்டுக் காகிதங்களும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவுடனும். ரெண்டு மணி நேரம் நின்றிருப்பேன். கேள்வி கேட்காது கொடுத்தவர்கள், கேள்வி கேட்டுக் கொடுத்தவர்கள், ஏற்கெனவே கொடுத்துட்டேன், இல்ல சாரின்னு போனவர்கள்,சுனாமியா, எங்கே? என்று எல்லா விதமாயும் இருந்தார்கள். நிறைய பேர் நின்று விசாரித்தார்கள். உன் வீட்டில் எல்லோரும் பத்திரமா என்றார்கள். ஒரு அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினார். இன்னொருத்தர் நமக்காக இறைவனைத் தொழுதார். வீட்டுக்கு வந்து எண்ணிப் பார்த்தபோது 125 டாலர்களும் 82 காசுகளுமிருந்தன. இன்னும் என் தோழரெல்லோரும் வந்திருந்தால், ஒரு பத்து இடங்களில் சேர்த்திருந்தால் என்று மனக்கணக்கோடியது. TROவுக்கு அனுப்புகிறேன். நன்றி மனிதமே.

புது சுனாமி எச்சரிக்கை காலாவதி

தற்போது நிலவும் புதிய எச்சரிக்கை இன்னும் சில மணிகளில் காலாவதியாகிறது. அதாவது இந்திய நேரப்படி 30ந்தேதி காலை ஆறிலிருந்து மாலை 6 வரை மட்டுமே இந்த எச்சரிக்கை. அரசும் ஊடகங்களும் இந்த எச்சரிக்கைக் கால வரையறையை இன்னும் உரத்துச் சொல்லி வீண்பயத்தைக் குறைக்க வேண்டும்.

உண்டியல் குலுக்குவோமா?

அமெரிக்காவிலிருப்போர் உண்டியல் குலுக்கலாமா?
பலமுறை நாம் பார்த்திருக்கிறோம், தீயணைப்புத்துறை, ஆப்பிரிக்க நிவாரணம், இது மாதிரி உண்டியல்கள் சாலைச் சந்திகளில், பாதையோரங்களில், கடைகண்ணிகளில் குலுங்கும். இது விடுமுறைக்காலம். கூட்டம் கூடும். இப்போது செய்திகள் கொஞ்சம் பரவியிருக்கின்றன. புஷ்ஷ¤ம் ஆதரவைக் காட்டியிருக்கிறார். இப்போது உண்டியல் குலுக்கினால் கொஞ்சம் காசு தேறும்.

எப்படிச் செய்வது?

நாம் எதையும் விற்கப் போனால்தான் பெரும் விண்ணப்பப் படிவங்கள், அனுமதிகள் என்று அலைய நேரும். விற்காமலிருக்கும் வரை நாம் உள்ளூர்ப் போலீசாரிடம் பேசி அந்தப் பகுதியில் நிதி கோரலாமா (zoning regulations) என்று கேட்டுக் கொண்டால் மட்டும் போதும் எனத் தெரிகிறது. நீங்கள் உங்களூர் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து இதைச் செய்வது நலம். ஒரு நாலைந்து பேர், நாலைந்து இடங்களில செய்யமுடிந்தால் போதும்். இதைத்தான் நாளை செய்வதாகத் திட்டமிட்டு வருகிறோம். விடுமுறைக் காலத்திலேயே இதைச் செய்து முடிப்பது நல்லது என நினைக்கிறேன். எவ்வளவோ பேருக்குக் கொடுக்க மனமிருக்கும், எப்படி எங்கேயென்று தெரியாது. கையிலிருப்பதைப் போட்டுவிட்டுப் போவது அவர்களுக்குச் சுலபம். அவர்களது ஒவ்வொரு டாலரும் நமக்கு முக்கியம். எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.

மறந்து விட்டது, ஒரு அரைப் பக்கத்தில், ஏன் இந்த வசூல், என்ன நடந்தது, நீங்கள் யார் (எந்த சங்கம்), விருப்பமானோர் வேறு எங்கெல்லாம் நிதியளிக்கலாம் அல்லது விபரம் பெறலாம் போன்ற விபரங்களை மக்களிடம் கையளித்தல் நல்லது.

அமெரிக்கத் தமிழர்களுக்கு

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் நிதியினை பெட்னாவுக்கு (FETNA) அனுப்பலாம் என அறிகிறேன். சமீபத்தில் கும்பகோணம் விபத்துக்காக பெட்னா நிதியனுப்பியதைப் பற்றி வாசன் சொல்லியிருந்தார். இலங்கைத் தமிழருக்கு நிதியளிக்க விரும்புவோர் இலங்கை அரசின் இப்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது தமிழர் புனர்வாழ்வு அமைப்பிடம் (TRO) கொடுப்பதே சிறந்ததெனத் தோன்றுகிறது. அமெரிக்காவிலிருப்போருக்கான TROவின் தொடர்பு எண்கள் இங்கே. விருப்பமுள்ள அன்பர்கள் பெட்னாவை/TROவைத் தொடர்பு கொள்ளலாம்.

என்னாலான நிதியுதவியைச் செய்வதைத் தவிர வேறேதாவது செய்யலாமா என முயன்று வருகிறேன். Americares என் ஊரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் இருக்கிறது. அழைத்து ஏதேனும் தன்னார்வலர்கள் தேவையா என்றேன். இன்றைக்குத் தேவையில்லை, இனிவரும் நாட்களில் வேண்டுமானால் அழைக்கிறோம் என்றார். கனெக்டிகட் தமிழ்ச்சங்கத்தோடு தொடர்பிலிருக்கிறேன்.

கொந்தளிப்பு - சிறு குறிப்பு

சுனாமி (tsunami, ஜப்பானிய மொழியில்) என்றழைக்கப்படும் கடல் கொந்தளிப்பு கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களாலும், கடலடி எரிமலைகளாலும், விண்கற்கள் கடலில் விழுவதாலும் ஏற்படுகிறது. கடலில் ஒரு இடத்தில் ஏற்படும் இத்தகைய அதிர்வு மற்ற இடங்களுக்குக் கடல் கொந்தளிப்பாகப் பரவுகிறது. இக்கொந்தளிப்புப் பரவும் நேர அளவைக் கணக்கிட இயலும். 1960களின் ஆரம்பத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அலாஸ்காவையும், சிலியையும் பாதித்த பிறகு 1965ல் யுனெஸ்கோ உதவியுடன் 1965ல் International Tsunami Information Center ஹவாய்யில் ஹோனலுலுவில் நிறுவப்பட்டது. இது பசிபிக் கடற்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்கிறது. ரிச்டர் அளவு, நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இவற்றைக் கொண்டு கொந்தளிப்பு எவ்வளவு நேரத்தில் எந்தெந்த நாடுகளுக்குப் பரவும் என்ற எச்சரிக்கையை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த எச்சரிக்கையின் படி கடலோர மக்கள் இடம் பெயர்க்கப் படுகிறார்கள். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.



இதில் ஒவ்வொரு பட்டையும் கொந்தளிப்புப் பரவ ஒரு மணி நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. இதன்படி ஹவாயில் ஏற்படும் நிலநடுக்கம் அலாஸ்காவில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்த சுமார் 6 மணி நேரங்களாகும்.

கொடுமை என்னவென்றால் இந்தத் தகவல் மையம் பசிபிக் கடற்பகுதிக்கு மட்டுமே எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய நாடுகளையொட்டிய பசிபிக் பகுதிகளுக்கும் இத்தகைய மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. எது எப்படியோ...இன்னொரு விபத்து தவிர்க்க முடியாமல் போனது.

தொடர்புடைய சுட்டிகள்: http://www.drgeorgepc.com/TsunamiFAQ.html
http://wcatwc.arh.noaa.gov/ttt/ttt.htm

கூகுள் படிப்பாளி

புதுசு புதுசா எதையாச்சும் சொல்லி அசத்தும் கூகுளின் (பரிக்கு 'குள்'ளு, காசிக்கு 'கிள்'ளு!) இன்னொரு அசத்தல் கூகுள் ஸ்காலர் (படிப்பாளி?!).

ஆராய்ச்சியில் விடை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது கேள்வியும், விடைக்கான வழியைத் தேடுதலும். ஒரு பரிசோதனையை யாராச்சும் முன்னாடியே செஞ்சிருக்காங்களா, எப்படிச் செஞ்சாங்க, அந்த விடையை எப்படி விளக்கினாங்க அப்படின்னெல்லாம் தெரிஞ்சுக்கறது முக்கியம். இல்லன்னா சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிக்கிற மாதிரி (re-inventing the wheel) விரயந்தான். நான் உயிரியல் துறையிலிருப்பதால் இதில் நானறிந்த வகையில் தேடல் எப்படி இருந்திருக்கிறது, இப்போது எப்படிப் பரிணமிக்கிறது என்று சின்னதாய் ஒரு அலசல்.

ஒரு 10-15 வருடங்களுக்கு முன்னர் ஒரு சராசரி சென்னை ஆராய்ச்சி மாணவனுக்குக் கிடைத்ததெல்லாம் Chemical Abstracts, Biological Abstracts போன்ற தலையணை மாதிரிப் புத்தகங்கள். இவற்றில் நமக்குத் தேவையான கலைச் சொற்களைத் தேட வேண்டும். பிறகு அது குறித்த சுருக்கங்களைத் தேடியெடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கான முழுக் கட்டுரை வேண்டுமெனில் அந்த நூலகத்திலிருந்தால் எடுத்துப் பிரதியெடுக்கலாம், இல்லையென்றால் அக்கம்பக்கத்து நூலகங்கள், இல்லையென்றால் அந்தக் கட்டுரையெழுதியவருக்கு ஒரு கால்கடுதாசி. இந்த முறையில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானதிலிருந்து அதைச் சென்னையில் முழுமையாகப் படிப்பதற்கு ஆகும் காலம் சுமார் 2 மாதங்கள்.

பிறகு 1995 வாக்கில் நிலைமை சற்றே மேம்பாடடைந்தது. Current contents on disk போன்ற குறுந்தகடுகளால் அந்தத் தலையணைப் புத்தகங்கள் மாற்றப்பட்டன. அதாவது அதே ஆராய்ச்சிச் சுருக்கங்களைக் குறுந்தகடுகளிலிருந்து பிரதியெடுத்துக் கொள்ளலாம். முழுக்கட்டுரை வேண்டுமெனில் மேலே கூறப்பட்ட விதங்களில்தான் முயல வேண்டும். கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் முன்னேறிய ஆய்வகங்களில் இணையம் மூலமாகத் தேடுதல் தொடங்கியிருந்தது. பின்னர் இணையப் பரவலாக்கத்தால் பெரும்பாலானோர் இவ்வகைத் தேடுதல் முறையையே கையாள்கின்றனர். தற்போது பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு தளம் National Library of Medicineன் PubMed. இத்தளம் தரமான முறையில் வெளியிடப்படும் 20,000க்கும் மேற்பட்ட அறிவியல் பத்திரிகைகளிலிருந்து ஆராய்ச்சிச் சுருக்கங்களை வெளியிடுகிறது. இதில் ஒரு சில நொடிகளில் உங்கள் கலைச் சொற்களுக்கான சுருக்கங்கள் வந்து நிற்கும். இலவசமாகக் கிடைக்கும் முழுக் கட்டுரைகளுமுண்டு. அல்லது அந்தந்த நூலகங்களின் மூலமாக வெளியீட்டாளரின் இடத்துக்குச் சென்று முழுக்கட்டுரைக்கான pdf கோப்பையும் எடுத்துக் கொண்டுவிடலாம். இத்தனையும் ஐந்து நிமிடங்களில். அதே போல இந்தக் கலைச்சொல் சம்பந்தமாக இன்றைக்கு என்ன ஆராய்ச்சிக் கட்டுரை வெளி வந்திருக்கிறது என்பதையும் Cubby என்ற வசதியின் மூலம் அறிந்து கொள்ளலாம். PubMedல் நாம் ஒரு வார்த்தையைக் கொண்டு தேடுதல் நடத்தினால் தேதி வாரியாக எல்லாவற்றையும் கொண்டு வந்து போடும். வேண்டுமென்பதை நாம்தான் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கூகுள் ஸ்காலர் சோதனை முறையில் வெளிவந்திருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதுவும் கிட்டத்தட்ட ஒரு கலைச்சொல்லுக்கு அத்தனை விடைகளையும் தரும். ஆனால் எது முக்கியமாகக் கருதப் படுகிறதோ, அதிகம் பேரால் மேற்கோளிடப்பட்டதோ அதுவே முதலில் வரும், மற்ற கூகுள் தேடுபொறிகளைப் போலவே. இது ஒரு ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயனுள்ளது, முக்கியமாய் ஆரம்பநிலையில் இருப்பவருக்கு. ஏனெனில் எவையெல்லாம் அந்தத் துறையில் முக்கியமான கட்டுரைகள் என்பதை அவர் கண்டு கொள்கிறார். கூகுள் செய்திகளில் இருக்கும் Sort by Date போன்ற வசதி எதிர்காலத்தில் வருமானால் நாளாந்த வெளியீடுகளைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். முழுக்கட்டுரைக்கான காப்புரிமை போன்ற விஷயங்களால் எல்லாக் கட்டுரைகளும் முழுவதாகக் கிடைத்து விடுவதில்லை. இந்தக் காப்புரிமை விஷயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் (அதாவது, மக்கள் ஏற்கெனவே இந்த ஆராய்ச்சிக்கான பங்கை வரிகளின் மூலம் அளித்துவிட்டார்கள், எனவே அரசு நிதியுதவியில் நடக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் ஏன் பணம் கொடுத்து ஒரு கட்டுரையை/பத்திரிகையை வாங்க வேண்டும்?) கூகுள் ஸ்காலரை ஆராய்ச்சியாளர்கள் அதிகமாகப் பயன்படுத்த வைக்கும் என நினைக்கிறேன். மேலும் கூகுள் National Center for Biological Information, European Molecular Biology Laboratory போன்றவற்றின் ஏனைய புள்ளி விபரங்களையும் (மரபகராதி, புரத மூலக்கூறு வடிவங்கள் போன்றவை) பயன்படுத்திக் கொண்டு அவற்றைத் தன் பாணியில் வெளியிடலாம் என நம்புகிறேன். நன்றி கூகுள்!

மாவு பிசைந்த கதை

ராத்திரி வீட்ல சப்பாத்தி செஞ்சோம். ஒரு சின்ன மாவுருண்டையை அம்மா மகனிடம் கொடுத்தார். அவன் அதை உருட்டினான். பிறகு தரையில் வைத்துத் தட்டினான். இரண்டு விரல்களை அதில் பதித்துவிட்டுக் கண் என்றான். பிறகு பெயரிலி முகம்னான் (பெயரிலியின் இந்த முகங்களை அவன் பார்த்திருக்கிறான்!). இப்படியே உருட்டித் தட்டி நீட்டி பூ, மீசை, மேளம், நாதசுரம், பிட்ஸா, புக்காமணி (லிங்கம், ஆண்குறி) எல்லாம் செஞ்சான். பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அவனுக்கும் மாவுக்கும் வித்தியாசமில்லை. அவனுக்குள்ள எல்லா உருவங்களும் இருக்கு. எல்லாத்துக்குமான விதையிருக்கு. அந்த சுயம் தன்னை எப்படியெல்லாம் பிசைந்து பிசைந்து உருக்கொடுத்துக்குதோ அப்படியெல்லாம் கொடுத்துக்கட்டும். அம்மாப்பா ஒரு துணையா இருந்தாப் போதும்னு தோணுது. அவனே அவனைப் பிசைந்து கொள்ளட்டும். என் கைகளையும் போட்டுப் பிரட்டி அந்த மாவை அழுக்காக்காம இருந்தாப் போதும்னு நெனச்சுக்கிட்டேன்.

இப்படியே போன மாவுக்கதை மனுசங்ககிட்டயும் போச்சு. நாமளும் இப்படித்தான் மாவா இருக்கோம். எல்லோருக்கும் வேணும்கற ஒரே விஷயம் சுகம். நித்யானந்தம். எங்கேன்னு தெரியல. அல்லது அப்படி ஒன்னு இல்ல. நான் காட்றேன் வான்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குடுக்குது மடமெல்லாம். மதமெல்லாம். சாமியார்க் கூட்டமெல்லாம். கோயிலெல்லாம். மாவை உருட்டுது. நீட்டுது. பிசையுது. மதவாதியாக்குது. தனக்கான காரியத்தைச் சாதிச்சுக்குது. குலப் படையைக் கொண்டே குலத்தையழித்த ராமகாதை இன்னும் தொடருது. மதவெறிக் கும்பல்களின் இன்றைய நோக்கமென்ன, உங்களையும் என்னையும் பேரானந்தப் பெருவாழ்வுக்குக் கொண்டு போறதா? அப்படியொன்னு இல்லாத போது, அல்லது இருக்கது அதுக்கே தெரியாத போது அது நம்மள எங்க கூட்டிக்கிட்டுப் போகப் போவுது. சும்மா இங்கயும் அங்கயும் இழுத்தடிச்சுப் பம்மாத்துப் பண்ணி, அது நாலு காசையும், பேரையும், அதிகாரத்தையும் சேத்துக்கும். நாம இப்புடியே பரதேசியாத்தான் சாவோம்.

நாத்திகம் பயில்னு பாக்கும் போதும், சங்கர மடத்து வண்டவாளங்களைத் தட்டிக் கேட்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோட பணிகளைப் பாக்கும் போதும், பெரியார் வேணும்கற ஆதங்கத்தைப் பாக்கும்போதும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு.

தங்கமணியின் கடிதங்கள் - 2



காதலைப் பற்றி ஏன் விவாதம் செய்யப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்? தமிழர்களுக்கு ஒரு காதல், ஐரோப்பியர்களுக்கு ஒரு காதல், அமெரிக்க, நீக்ரோ காதல் உண்டா? எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது சொல்லப் பயமாயிருக்கிறது. ஏனெனில் அது மட்டுமாக காதல் இருக்காது. இன்னும் விளிம்பு தாண்டி வழிவது போல இருக்கும். காதலைப் பற்றிய எல்லா விளக்கங்களும் மனதின் கற்பிதங்களை, சமூக ஏற்பாடுகளை, ஆதிக்க விதைகளையே சுமந்து கொண்டிருக்கின்றன.

காதல் என்பது என்ன? இந்தக் கேள்வி எண்ணிலடங்கா முறைகள் கேட்கப்பட்டது. குறைந்தது ஒவ்வொரு உயிரும், ஒரு முறையேனும் நெஞ்சு முழுக்க வலியோடும், துயரோடும், தோள்களை மீறி எழும் மகிழ்வோடும் இந்தக் கேள்வியைக் கேட்காமலிருந்திருக்காது. எத்தனையோ பதில்கள், கவிதையாக, பாடலாக, மூச்சாக, கண்ணீர்த்துளிகளாக, விசும்பல்களாக, நெஞ்சுத் துடிப்புகளாக, ஓவியங்களாக, நெருப்புப் புகைகளாக, சாம்பலாக, சாவுகளாக, சிரிப்பாக உதிர்ந்திருக்கின்றன. நான் இந்தக் கடிதத்தில், என் அளவிலான அனுபவத்தில் இருந்து - காதல் ஹார்மோன்களின் கவிதை, போன்ற மூளையின் அனுமானங்களை அடியோடு நிராகரிக்கிறேன். காதலைப் பற்றிய கேள்விகளின் நோக்கம் என்ன என்பது ரொம்பவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொருவரும், தங்களுக்கான பதில்களைக் கையில் வைத்துக் கொண்டே, கேள்விகளைச் செதுக்குகின்றனர். இது எல்லாக் கேள்விகளுக்கும் பொருந்தும்.

தமிழர்களுடைய காதல் என்று ஒன்றுமில்லை; சமூக வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். அதுவும் மாறுதலுக்கு உட்பட்டதே. தமிழர்களுடைய பண்பாடும், எல்லா நிலவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களைத் (values) தன்னகத்தே கொண்டதே. விவசாய நாகரீகங்கள் (agrarian civilizations) அனைத்தும் ஆணாதிக்க விழுமியங்களைக் கொண்டதே. விவசாய நாகரிகம் தோன்றுவதற்கு முன்பிருந்த சமுதாய அமைப்பு பெண்ணாதிக்க விழுமியங்களைக் கொண்டதாக இருந்தது. சொத்துடைமை என்பது நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் வலுப்பெறுகிறது. ஏனெனில் சொத்தின் மதிப்பு அதில் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்பாகும். நிலமே மனிதனின் மதிப்பு மிக்க சொத்தானது நிலவுடைமைச் சமுதாயத்தில்தான். ஏனெனில் நிலத்தின் மீதே மனிதன் அதிக உழைப்பை, அதைப் பண்படுத்த, பயிர் விளைவிக்க, பாதுகாக்க, செலுத்த வேண்டியிருந்தது. வாழ்வை முற்றிலுமாக அதைச் சார்ந்து முடக்க வேண்டியிருந்தது. எனவே நிலம் உடைமைப் பொருள் ஆனது. உடைமையின் மேல் அவனுக்கு அதிகாரம் வந்தது. அதிகாரத்தின் வரம்பை நீட்டிக்க ஆசை வந்தது. ஒருவன் சொத்தின் மேல்தான் அதிகாரம் செலுத்த முடியும். உயிரின் மீது செலுத்த முடியாது. எனவே அனைத்தையும் சொத்தாக மாற்ற வேண்டியிருந்தது. அதிகாரத்திற்கான ஆசை, சொத்தின் எல்லையை விரித்துக் கொண்டே போனது. சக ஆண், பெண், குழந்தைகள், கன்று காலிகள், வீடு, வாகனங்கள், அசைகின்ற அசையாத பொருட்கள், ஏன் கடவுளும் சொத்தின் எல்லைக்குள் வந்து விட்டார். சொத்தை விரித்து, அதிகாரத்தின் மதுவைக் குடிக்க தந்திரங்களும், உபாயங்களும், வழிமுறைகளும் வேண்டியிருந்தன. நீதி, அறக் கோட்பாடுகள், புராணக் கற்பிதங்கள் இவைகள் அதன் வழிமுறைகளாயின.

தமிழர்களுடைய வாழ்வில் அறம் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டும், கூடியவரை இயல்பாகவும் இருக்குமாறு இந்தச் சமூகத்தின் தொல்லறிவும், ஆன்மீக உணர்வும் அதை நெறிப்படுத்தின. பட்டிணத்தார், கண்ணதாசன், பத்ரகிரியார், தாயுமானவர் இவர்களெல்லோரும் ஆரிய ஆளுமைக்கு ஆட்பட்டவர்களே. அவர்கள் பழந்தமிழரின் பிரதிநிதிகளாக மாட்டார்கள். ஏறக்குறைய 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறையினைப் பற்றிய அறிவு வேண்டும். வரலாறு மட்டும் போதாது. வரலாறு என்பது வலுத்தவற்றின் நிழல். அதனடியில் மறைந்து போன சாமானியனின் அடையாளத்தைக் கண்டுணர வேண்டும். அதற்கு என்ன செய்வது? அந்தச் சாமானியன் எங்கும் போய்விடவில்லை. அவன் உனக்குள்ளும், எனக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கிறான்.

காதல் என்பது சமூகவியல் ஒழுக்கமா, வாழ்வியல் ஒழுக்கமா? சமூகவியல் ஒழுக்கமெனின், அப்போது சமூகத்தின் சட்டகங்களுக்குள் அது வந்துவிடும்போது, தனிமனிதனின் திறமை, அந்தஸ்து, வசதி, தேவை, இவைகளால் உருக்கொடுக்கப்படும். அப்பொழுது, பெண் முற்றாக மாறிப்போன சொத்தாகிவிடுவாள். பிற சொத்தின் மீது உள்ள வரையறைகள், நியாயங்கள் இவைகள் போன்று அவள் மீதும் விழுகின்ற விதியின் கோடுகள் உன்னுடைய தேர்வையும், உரிமையையும் கூட லேசாக பாதிக்கவே செய்யும். எனினும், இது ஆணாதிக்க சமூகமாகையால் ஆண்களுக்குப் பெரிய பாதிப்பெதுவும் இருக்காது.

ஆனால், காதலை ஒரு வாழ்வியல் ஒழுக்கமென்று கருதினால், எல்லாக் கற்பிதங்களையும், சமூக நிலைப்பாடுகளையும் உதற வேண்டி வரும். வாழ்வு தனிமனிதனிடமிருந்து தொடங்குகிறது. தன்னுடைய விரிவடைதலை, எல்லையற்ற பிரக்ஞையின் கடலில் நீர்த்துப் போய்விடுவதற்கான விரிவடைதலை, ஒரு நதியைப் போல, ஒவ்வொரு வாழ்வும் தனக்கேயுரிய வழிகளில் செய்கிறது. பிரவாகமெடுக்கும் இந்த வாழ்வின் போக்கைக் காதல் தீர்மானிக்கிறது.

காதல் என்பது மதித்தல், பரஸ்பரம் உதவிக் கொள்ளுதல், உண்மையாய் இருத்தல் இப்படி எத்தனையோ அடங்கிப் போன ஆயிரமாண்டுப் பெட்டகம் எனலாம். ஆனால் இதையெல்லாம் மட்டும் வைத்துக் கொண்டு அதைத் தீர்மானமாகச் சொல்ல முடியுமா? அதைப்பற்றி எழுதுவது என்பது அதாகாது. நீ சொல்வாயே, நெஞ்சு இருக்கிற இடமே தெரியாத மாதிரியா இருக்கிறது என்று, அதுகூட ஒரு அழகான காதலுக்கான உரைதான்.

பூ உதிர்ந்து விட்டது
நதி கலந்து விட்டது
நட்சத்திரம் கரைந்து விட்டது
என் தலைச் சுமைக்கு
இன்னும் சில வார்த்தைகளைப் பொறுக்கிக் கொள்ளுதல்
என்ன நியாயம்?
____________________________________

பின் குறிப்பு:
இந்தக் கடிதம் மார்ச் 3, 1999 தேதியிட்ட கடித உறைக்குள்ளிருந்து. அந்தப் படம் நான் கிளிக்கிய கிறிஸ்துமஸ் மர உச்சாணிக்கொம்புத் தேவதை. ஸ்பெஷல் எபெக்ட் உபயம் மாசிலன் (அப்பாவை உலுக்கி விட்டார்)!

ஒளிர்தலும் குமட்டலும்

ஒரு வெளி. பரந்த வெளி. இருட்டு. ஒளிப்பொட்டுக்கள். என்னமோ ராத்திரி வானம்போல. தொலைவாயில்லை, இதோ கிட்டத்துல, ஒரு முப்பரிமாண விண்வெளிப் படம் மாதிரி. அதிலொரு நீள்வட்டம். நிற்கிறது. அது எப்படி நிற்கும், இல்லன்னா படுக்கும்? இருக்கு. நானாயிருக்கலாம். அதிலிருந்து ஒரு சின்னக் கோள் கிளம்பி வருகிறது. சுற்றுகிறது. ஆடுகிறது. திரும்பி வந்து நீள்வட்டத்துக்குள் அடங்குகிறது. இன்னொன்று, தொப்பி வைத்த கோள். வேறு நிறம். இது மேலும் கீழுமாய்த் துள்ளுகிறது. இன்னொன்று, இன்னுமொன்று. இப்படியே நிறைய கோள்கள். அல்லது பொட்டுக்கள். அல்லது என்னமோ. சிலதுக்கு ஒளி இருப்பதில்லை. சிலவற்றின் பொருண்மை அந்த நீள் ஒளியின் மையத்தையே ஆட்டி இழுக்கும். சாய்க்கும். அது நீள் வட்ட ஒளியாய் இருக்கிறது. அது ஒரு நாள் சொக்கப்பனைப் போல வெடித்தது, அது என்ன ஒரு நாள்? அங்கு நாளில்லை. இந்த சொக்கப்பனைப் போல மெதுவாய் எரியவில்லை. படாரென வெடித்தது. அதனுள்ளிருந்த சிறு கோள்களெல்லாம் வெடித்தன. இல்லை. காணவில்லை. எதையும் காணவில்லை.

அங்கு எத்தனை முறை போய் வந்திருப்பேன். நிறைய. அது ஒரு நாள் மேடையாய் இருக்கும். அந்தக் கோளெல்லாம் பாத்திரங்களாயிருக்கும். இன்னொரு நாள் அது வெண்மையாயிருக்கும், சிதறிய ஒளியெல்லாம் ஏதாவதொரு வண்ணமாயிருக்கும். அகத்தைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கிற விளையாட்டு. விளையாட்டின் முடிவில் ஒன்றுமில்லை. உள்ளே யாரும் இருப்பதில்லை. சாமியார்கள், மணியாட்டிகள், கிடாவெட்டுப் பூசாரி, டிரைவிங் லைசென்சு. இல்ல. திரும்பி வந்தப்புறம் வித்தியாசமாயிருக்கும். நிறைய காணாமப் போயிருக்கும்.

வீட்டுக்குள்ள திரும்பி வந்து குப்பையை ஒழிக்கத் தோணும். முந்தி எங்க ஊரு பஞ்சாயத்து யூனியன் ஆபீசுல அடிபைப்பு போட்டாங்க. அதுக்கு போர்வெல் போட்டாங்க. துளை போட்டதுக்குப் பிறகு நீள இரும்பு பைப்புகளை ஒன்னொன்னாத் திருகித் திருகி எறக்குவாங்க. அப்போ ஏற்கெனவே எறங்குனது ஆழத்துக்குள்ள விழுந்துடாம இருக்கதுக்காக நல்லா நெட்டு எல்லாம் போட்டுத் திருகி நிக்க வச்சிருப்பாங்க. அந்த மாதிரி உள்ளிறங்கவிடாமல் என்னமொ, என்னென்னமோ இழுத்துப் பிடிக்குது. மேலேயே சுத்துறேன். கருப்பர் கோயில் கொடராட்னத்துல சுத்துற மாதிரி. மூச்சு முட்ட மனுசரடைச்ச டவுன்பஸ்ஸுல போறாப்பல. உவ்வாக். வாந்தி. மூச்சு வாங்குது. உவ்வ்வ். வந்தும் வராம. ஒக்காரு. குனி. நெத்தியில கைய வச்சு அமுக்குது அம்மா. உவ்வாக். பொலிட்டிகல்லி கரெக்ட் ரைட்டிங்க் செரிக்காம கிடந்திருக்கு. கண்டதைத் திங்காதேன்னு சொல்றதா, இல்ல தின்னு, கண்ணாடி, விரியன் பாம்பு, இரும்பு எல்லாத்தையும் தின்னு. தின்னுப்புட்டு ஹடயோகி மாதிரி நில்லுங்கறதா? அது அப்புறம். இப்பக்கி இது போதும், வயிறு நல்லாருக்கு. வாய் கொப்புளிச்சுட்டு அடுத்த வேலயப் பாப்பம்.

பொன் குஞ்சு


அவனுக்கு இப்ப ரெண்டு வயசும் 5 மாசமும் ஆவுது. பாய்ச்சல்தான். அதன் நிதானம் அதுக்கு. எங்கே எப்ப முட்டுமோன்னு பின்னாடியே மனசோடும். அதுக்கெல்லாம் நிக்குமா அந்தப் பந்து. விசையுறு பந்து. எத்தனையோ ஆட்டங்கள். எல்லாப் பிள்ளைகளையும் போல. அது என்ன தம்பி? தேயிலை. என்ன செய்யப் போறீங்க? கீழே கொட்டப் போறேன். தெளிவா வருது பதில். கடைக்காரர் விளையாட்டாடும். அதுதான் கடைக்கார். ஏலக்காய் கொடுக்கும். எல்லாச் சாமானையும் கீழள்ளிப் பரப்பும். வெற்றுக்கைக் காசைச் சிரித்து வாங்கிக் கொள்ளும். காலைத் தூக்கித் தூக்கியாடி மேளமடித்து வீட்டுக்குள் ஊர்வலம் போகும். தன்பாட்டுக்குத் தனியே உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கும். பேசுறது புரியலன்னா, தமிழ்ல பேசுங்கன்னு சொல்லும். வீட்டுக்கு வர்ற தொலைபேசிக்கெல்லாம் பதில் சொல்லும். பெருசுகளைப் பேர் சொல்லிக் கூப்பிடும். டேய் என்றால் சிரித்துவிட்டு மறுபடியும் அப்படியே. சில நேரங்களில் பேசென்றால் பேசாது. பல நேரங்களில் அப்பாம்மா தங்களது புத்தகத்தை எடுத்தால் வச்சிடுங்க அப்படிங்கும். ஆடும்போது பிடித்து அமுக்கினால் அவன விட்றுங்க என்று திமிறும். அது கன்றுக்குட்டி, மீன், குருவி, தூங்கும் தேவதைக் குழந்தை. ஆமாம், பொன்குஞ்சு.

சேரிச்சாமிகளும் ஒலக அதிசயமும்!

குடியானவனோட சாமியையெல்லாம் அவங்கிட்டேருந்து புடுங்கியாச்சு. முத்துக்கருப்பையாவையும் முனியனையும் புடுங்கி அவங்களுக்கு முன்னாடி ஒரு ஸ்ரீ சேத்து பேரைத் திரிச்சு மஹாகும்பாபிஷேகம் நடத்திப் புனிதப்படுத்தியாச்சு. அதுக்குள்ள பள்ளு பறையெல்லாம் போனா பிரச்சன. நீயெல்லாம் என்னத்துக்கு இந்தப் புனிதக் கோயிலுக்குள்ள வாற, இந்தா ஒனக்குன்னு ஒரு சாமி, ஒரு கோயில், ஒன்னோட சேரிக்குள்ளயே கட்டிக்க. அங்கேயே கெட. தமிழக அரசாங்கம் இதச் செய்யுது. 2005ம் ஆண்டுக்குள்ள 7000 கோயில்களை தலித்துகளுக்காக அவங்க குடியிருப்புப் பகுதிகள்ல 7.5 கோடி ரூவா செலவுல கட்டப் போவுதாம். நம்ப முடியல. இதுதான் அரசோட தீண்டாமைக் கொள்கையோ? புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

இந்த லெச்சணத்துல மீனாச்சி கோயிலை ஒலக அதிசயமாக்கனுமாம். ஆமா அது அதிசயந்தான், ஒலகத்துல இல்லாத அதிசயந்தான், இந்துக்கள் அல்லாதவர் உள்ளே வரக்கூடாதுன்னு சாமிய மனுசங்கிட்டேருந்து பிரிச்சு வக்கிற அதிசயக் கோயில்தான். நானும், நாம போயி ஓட்டுப் போட்றலாம், நம்ம ஊர்லயும் ஒரு ஒலக அதிசயம் அதனால இன்னும் கொஞ்சம் பிஸினஸ், இன்னம் நாலு வெள்ளக்காரன் வருவான்னு நெனச்சாலும் என்னமோ மனசு ஒப்ப மாட்டேங்குது. இது மட்டும் ஒலக அதிசயமாச்சுன்னா இந்தப் போலிக் கதைமூட்டை இந்துப் புனிதத்துக்கு இன்னும் கொஞ்சம் பவர் கூடிப் போகும்.(இந்து ஞானமரபின் தொண்டரடிப் பொடிகள் உடனே சிலிர்த்தெழுந்து ஞானப்பால், திரட்டு, ஆழ்வார்கள், தாயுமானவனையெல்லாம் தூக்கிக்கொண்டு வரலாம்!). இந்துத்துவாவெல்லாம் ஓட்டுப் போடுங்க போடுங்கன்னு கதறுது. ஏன்னா அம்மாவுக்குப் (மீனாச்சியச் சொல்றேன்) போடுற ஒவ்வொரு ஓட்டும் இந்துத்துவாவுக்குப் போடுற ஓட்டு மாதிரி. இது அதிசயம். இது பெருமை. இதோடு ஐக்கியப்பட்ட நான் இது. இந்து. இப்படியொரு ஈகோ மக்களுக்கு வளர்றது மதவாதிகளுக்கு நல்லதுதானே. மக்களின் அரசியொருத்தியைப் பிடுங்கி அவளைத் தெய்வமாக்கி, இந்துவாக்கி, அதைக் கொண்டு சாதீயத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சாதிவெறியையா உலக அதிசயமாக்கணும்? வேணும்னா தலித்துகளுக்காகக் கட்டப் போற 7000 கோயில்களையும் அப்புடியே ஒட்டு மொத்தமா ஒலக அதிசயமாக்கிரலாம்; இந்தியாவின் சாதீயத்தை ஒலக அதிசயமாக்கலாம்!

கருத்தரங்கு-இடமாற்றம்

உலகத் தமிழ் அமைப்புக் கருத்தரங்கிற்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தேன். கருத்தரங்கு நடக்கவிருக்கும் இடம் கீழ்க்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது:

Center Hall
Busch Campus Center
Rutger University
604 Bartholomew Road
Piscataway, NJ 08854-8002

டிசம்பர் 11, சனிக்கிழமை, காலை 11 மணி.