பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-3

இந்தக் கடைசித் துண்டு கொஞ்சம் பெரிதாகப் போய்விட்டது. சமாளிக்க முடியாதவர்கள் துண்டு துண்டாய்க் கிழித்துப் படிக்கவும் அல்லது படித்துக் கிழிக்கவும்!

சார்லஸ்டன் (South Carolina) மாநகரிலே இருந்த சுமார் 75 தமிழர்கள் கூடிச் சங்கமமைக்கும் பெரும்பணியில் ஒரு சிறு ஆளாயிருந்து, தைப்பொங்கலுக்குப் பத்துப் பேரோடு வேட்டி கட்டி, கோடைவிழாவிலே அரைக்காற்சட்டை போட்டுக் கொண்டாடிய கூத்தாடியான நான், கனெக்டிகட்டுக்கு வந்த போது 500 பேரைக் கொண்ட தமிழர் கூட்டமொன்றைப் பார்த்துப் பாரடா எனது மானிடப் பிறப்பை, பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம் என்று மனம் தித்திக்கத் தீபாவளி விழா 2003இலே போய் உட்கார்ந்த போதுதான் ஒருத்தர் வந்து welcome address பண்ணி, எத்தனையோ டாலர் நன்கொடை கொடுத்த என்னமோவொரு பணமாளும் நிறுவனக்காரரைப் programஇலே நுழைத்து முதல் முக்கால் மணி நேரத்தை அவருக்குத் தாரை வார்த்தார். அந்த வெள்ளைக்காரர் வந்து படம் போட்டு, காசு சேர்ப்பது எப்படியென்று Aயிலிருந்து Zவரை விளக்கி, எல்லாருக்கும் கேள்வித்தாள் கொடுத்து, பதில் வாங்கி... நான் என் விடைத்தாளில் "இதற்கு இது இடமில்லை, இனியொருமுறை இதை இங்கே நடத்தாதேயும்" என்று எழுதி, என் நண்பனையும் எழுதச் சொல்லிக் கொடுத்தேன். அதன் பின் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து ரெண்டு மணி நேரம் சினிமாப்பாட்டாய்ப் பாடி, அதற்கு ஒரு ஆறேழு பேர் மாறி மாறி மேடையிலே ஆடித் தமிழை வள வள என்று வளர்த்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய், போனதற்கு ஒழுங்காய்ச் சாப்பிட்டுவிட்டு இனித் தமிழை எதிர்பார்த்து இங்கு வருவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அப்படியாபட்ட அனுபவஸ்தனான எனக்கு நியூயார்க் தமிழ்ச் சங்கம் எப்படியிருக்குமென்று காண ஒரு ஆவல்.

நிகழ்ச்சிக்கு முன் சில சங்கப் பெரியவர்களோடு கொஞ்சம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அனைவரிடமும் உறைந்து கிடந்த கவலை, மக்களின் ஈடுபாடற்ற தன்மை, கூட்டங்களுக்குக் கிடைக்கும் சொற்ப ஆதரவு. நாலு மணி நிகழ்ச்சிக்கு நாலரைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஏழெட்டுப் பிள்ளைகளும் ஆசிரியையும் மேடையிலமர்ந்திருக்க நாலேமுக்கால் வரை உள்ளே வாங்க, வந்து உக்காருங்கன்னு தலைவர் ஒலிபெருக்கியில் அழைத்துக் கொண்டேயிருந்தார். நீராரும் கடலுடுத்தவும், பின் பரா பரா பரமேஸ்வராவும் அழகாய்ப் பாடிய குழந்தைகளைக் காணுகையிலும், பின்பு வந்த ஏழெட்டு மழலைகள் எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் பாட்டுக்கு ஆடுகையிலும் கண்கள் பனித்தது உண்மை. தேர்த்திருவிழா எனும் நாட்டியக் கோர்வையில் புள்ளையாரும், பின்னாலே குடை பிடித்து மூன்று பெண்களும் வர, புள்ளையாருக்கு முன்னாலே சதிரும், கும்மியும், காவடியாட்டமும். பிள்ளைகள் அழகாய் ஆடினார்கள். ஆனாலும் இவர்கள் உடம்பிலே இயங்குதன்மை குறைவுதான். தேவராட்டம், ஆப்பிரிக்க மேள நடனம், தப்பாட்டம், வேகமான பரதம் இவைகளிலே இருக்கும் இயக்கத்தை, உயிரை, வேகத்தைப் பிள்ளைகளுக்குக் காட்டிக் கொஞ்சம் தேற்றினால் அசத்தி விடுவார்கள்.

Ground Zeroவிலே கிருஷ்ண பரமாத்மா என்றொரு சிறு காட்சி. கிருஷ்ண வேடமணிந்தவொருவர் திரையிலே தோன்றிய இடியாத, பின்பு இடிந்த நியூயார்க் இரட்டைக் கோபுரங்களை நோக்கி மனம் வருந்தி, தீவிரவாதிகளைத் திட்டிப்பாடிவிட்டு, கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்து, மறுபடியும் இன்னொரு அவதாரம் எடுத்துத் தீவிரவாதிகளை ஒழித்துவிடுவதாகச் சொல்லிவிட்டுப் போனார்.

நடுவிலே மேடைக்கு வந்து பேசியவொருவர் நியூயார்க்கிலே பத்தாயிரம் தமிழர்களிருந்தும் நானூறு பேரைக் கூடக் கூட்ட முடியவில்லையே என்றார். அவர் அழுத்திச் சொன்ன ஒரு விஷயம், இது தமிழை வளர்ப்பதற்கான சங்கமில்லை, தமிழர்கள் கூடுவதற்கான ஒரு இடம், அவ்வளவுதான். பர்மாவிலே, ஈழத்திலே, சிங்கப்பூரிலே தமிழர்களுக்கு நடந்ததையெல்லாம் பார்த்தோம்தானே, அது மாதிரி நாளைக்கு ஒன்று நமக்கு நடந்தால் ஒன்றாய்க் குரலெழுப்ப வேண்டும். அதற்கு ஒருவரை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும். அதற்குத்தான் இந்தக் கூட்டமெல்லாம் என்றார்.

அடுத்து வந்தது சுமித்ரா ராம்ஜியின் நாடகம். என் பயல் நடத்திய கூத்திலே பாதி நேரம் அவன் மேல் கண்ணிருந்தாலும் மீதி நேரத்திலே பார்த்த பஞ்சாயத்துப் பஞ்சவர்ணம் என்ற இந்த நாடகத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், தமிழில் இது இன்னொரு சராசரி நாடகம். தமிழ்நாட்டு இட்லிப்பொன்னியை அமெரிக்காவிலே கொண்டு வந்து அரைத்ததுதான் புதுமை. வலைப்பூவின் மூலம் நானறிந்த சுமித்ரா ராம்ஜியின் தமிழார்வமும், சமூக நற்பண்புகளும் அவரது நாடகத்தின்மீதான என் பார்வைக்குக் குறுக்கே நிற்கக் கூடாது என்பதிலும் அதே நேரத்தில் நான் எழுதுவது (ஒரு பொருட்டாய் அவர் படித்தால்) அவருடைய படைப்புத்திறனைக் குதறுவதாக இருந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருக்கிறேன். பாடுபட்டு ஒரு காரியத்தை அவர் செய்திருக்கிறார் என்று அவரது உழைப்பை வணங்கும் அதே வேளையில், ஒரு பார்வையாளனாக என் கருத்தைச் சொல்வதை அவசியமென்றே கருதுகிறேன். உன்னால் முடியுமா போன்ற கேள்விகளுக்கு என்னிடம் ஏதும் பதிலில்லை.

இந்நாடகத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும், அவர்களின் குறைநிறைகளையும் நான் அலசுவதிலோ, அல்லது இரு காட்சிகளுக்கிடையே விட்ட இடைவெளியிலே ஒரு இசைக் கச்சேரி நடத்தியிருக்கலாம் என்று பரிகாசம் செய்வதிலோ எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை. இது அமைப்புக் கோளாறு. கதைக் கருவின் கோளாறு. ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்ற நினைப்பினால் விளைந்த கோளாறு. தமிழ் நாடகமென்றாலே கிரேசிமோகன் அல்லது எஸ்வி சேகர் மாதிரியானதாகத்தானிருக்க வேண்டுமா? என்னைவிட சுமித்ரா அவர்களுக்குத் தெரியும், எவ்வளவோ கதைகள் இருக்கின்றன, அழகானவை, சமூக நோக்குக் கொண்டவை, குடும்பப் பாங்கானவை, புரட்சிகரமானவை. அந்தக் கதைகளை முன்மாதிரியாக எடுத்து நாடகமாக்கலாமே. இன்குலாபின் ஒளவையை, எக்ஸ¤பெரியின் குட்டி இளவரசனை, அலெக்ஸேய் அர்புஸவ்வின் தான்யாவை, இன்னும் பல அருமையான நாடகங்களையெல்லாம் மாணவர்கள் கல்லூரிதோறும், ஆண்டு விழாக்கள்தோறும் அரங்கேற்றும்போது, நாடகக் கலையிலே ஊறிக் கொண்டிருக்கும் ஒருவர் வெறும் நாட்டாமைக் கதையை மசாலாத் தூவி நடத்துகிறாரென்றால் கஷ்டமாகத்தானிருக்கிறது.

ஹபீப் தன்வீர் என்பவரின் சரண்தாஸ் ச்சோர் நாடகத்தை நிறையப் பேர் கேள்விப் பட்டிருப்பீர்கள். நான் டில்லிக்குச் சென்ற புதிதில் ஹிந்திப் பரிச்சயம் இல்லாத ஆரம்பநாட்களில் இந்த நாடகத்தைக் காண நேரிட்டது. மொழி நாடகத்துக்குப் பெரிய அவசியமில்லையோ என்று தோன்ற வைத்த நாடகமது. ஒலிவாங்கியில்லை. அலங்கார விளக்குகளில்லை. அங்கங்கள் பேசின, அசைவுகள் கதையைச் சொல்லின, பின்பாட்டிசை உணர்வையள்ளித் தெளித்தது. இன்னொரு மெக்ஸிக நாடகத்துக்குப் போயிருந்தபோதும் இதே உணர்வு. நம்மவர்கள் நடிப்பதில்லை. அங்கங்களை அசைப்பதில்லை. நின்று பேசுகிறார்கள். அந்தம்மா பஞ்சவர்ணமும் இன்னும் சிலருமாவது பேச்சிலே ஏற்றியிறக்குகிறார்கள். மற்றோருக்கெல்லாம் சவிலிருந்து சா வரைக்கும் ஒரே கோடுதான்.

நம் மக்கள் சிரிப்பார்கள்தான். கவுண்டமணியின் கோமுட்டித் தலையிலிருந்து, எஸ்வி சேகரின் அடுத்தவரைக் கேவலமாக மட்டந்தட்டுவது வரைக்கும் எல்லாத்துக்கும் சிரிப்பார்கள்தான். அந்தச் சிரிப்புக்காக ஒரு வெற்றிகரமான நாடகத்தை எழுதுவது அவசியமா என்று கேட்கத் தோன்றுகிறது. எல்லா ஊர்களிலும் அரங்கேற்றம், அரங்கமே சிரிக்கிறது என்பதெல்லாம் வெற்றியின் அறிகுறிகளல்ல. இன்னும் சொல்லப் போனால், அமெரிக்காவில் தேர்ந்தெடுத்துப் பார்க்கவெல்லாம் வழியில்லை, நீங்கள் போடுவதைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்ற நிலை. நல்லது போட்டாலும் பார்த்துத்தான் ஆகணும், இது மாதிரி பஞ்சாயத்தானாலும் சாப்பாடு போடும் வரை பார்த்துத்தானாகணும். எனவே நல்ல நாடகங்களாகப் போட்டால் சின்னப் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நல்லது. இந்தப் பஞ்சாயத்தை இத்தோடு நிறுத்திவிட்டு, Immatured என்ற அடைமொழியைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதுமையான நாடக முயற்சிகளை சுமித்ரா ராம்ஜி போன்ற துணிவும், நாடகத் துறையனுபவமும், கலையார்வமும், சமூக அக்கறையும் உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டும். தன் நாடகத் திறனை வீணாக்கிவிடாமல் ஒரு வளர்ந்த படைப்பாளியாக அவர் உயர வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோளும் வாழ்த்தும்.

அப்புறம் சாப்பிட்டுவிட்டு, ஒரு சங்கத்துக்காரர் சொன்ன வழியிலேயே நூல் பிடித்த மாதிரி ஓட்டி பால்டிமோரில் நடக்க இருக்கும் பேரவையின் (FETNA) ஆண்டு விழாவுக்குச் செல்ல விருப்பத்துடன் ஊர் வந்து சேர்ந்தோம்.

பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-2

மிருகக் காட்சி சாலைக்குள் நுழைந்தோம். ஏழு ரூவா குடு சார்னான். இது வண்டிக்கு. எனக்கொரு நல்ல பழக்கம். கையில் காசே வைத்துக்கொள்ள மாட்டேன். கடனட்டையைக் கொண்டே வாழ்க்கையை ஓட்டுவதில் பெருநம்பிக்கையுள்ளவன். நான் பக்கத்தில் திரும்பிப் பார்க்க, அவர், அதாங்க என் வழிகாட்டி, பாவி என் சிறுவாட்டில் கையை வைத்துவிட்டாயா என்று என்னைப் பார்த்துக் காசைக் கொடுத்தார். அவர் மண்டைக்குள் ஓடியது எனக்குத்தான் தெரியும் "இதுக்குள்ள ஒரு எடத்துலயும் கடனட்டை வாங்க மாட்டான், இந்த ஆள் இன்றைக்கு என் கையிருப்பைக் கரைக்காமல் விடமாட்டார்". அப்புறம் ஆளுக்கு, சாப்பாட்டுக்கு (சாப்பாடா சார் அது!). நல்ல வேளையா பையனுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருந்தோம். அது என்னது தோம்? தாம் தூம். சரி கொண்டு வந்திருந்தார்.

நாலு ஒட்டகங்கள். ஒரு 10 மீட்டர் ரவுண்டுக்கு 5 டாலர் சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஐ! ஒட்டகம்! போதும். சரி எல்லாத்தையும் பாக்க முடியாதுல்ல, இதோ பக்கத்துல இருக்க ஆசியக் காட்டுக்குள்ள போயிட்டுக் கிளம்புவோம். தொட்டி மீன், பொட்டிப் பாம்பு, குரங்குகள், மரத்தில் தூங்கிய கருஞ்சிறுத்தை ரெண்டு, ஆமை, ஆடிய மயில், காட்டுப் பன்றி, செயற்கை மரங்களில் தொங்கிய விழுதுகள், ஆச்சு மணி. கிளம்பினோம். சரி. எப்படிப் போக? தகவல் மையமிருக்கா? ஒட்டகத்துப் பெண் சொன்னார், இருக்கு, காட்டுக்கு அந்தப் பக்கம் போனா இருக்கு. இல்லன்னா வாசல்ல போலீஸ¤கிட்ட கேளுங்க.

போலீஸ¤ன்னாலே ஒரு இது. மூணு தடவை ராத்திரியில கோழி மாதிரி அமுக்கி ஒரு தடவை மட்டும் 190 டாலருக்கு தண்ட நோட்டீஸ் குடுத்தவர். சொன்னார். நல்லாவே சொன்னார். என் மனைவிக்கு, அய்யா நீர் கூத்துப் பாக்கக் கூட்டிக் கொண்டு போகலைன்னாலும் பரவாயில்லை, என்னையும் என் பிள்ளையையும் உருப்படியாய் வீட்டிலே கொண்டுபோய்ச் சேரும், என்றிருந்திருக்கும். போலீஸ் போட்ட ரூட்டிலே நம்ம சங்கத்துக் காரர் ரூட்டையும் சேர்த்து அந்த விழாப் பள்ளிக் கூடத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். மணி சுமார் மூன்று. ஏற்பாடு செய்பவர்கள் அதையும் இதையும் தூக்கி, இறக்கிக் கொண்டிருந்தனர். பட்டுச்சேலைகளைக் கண்டவுடன் என் குழாய்டவுசர் மனைவிக்கு ஒரு பல்பு பொசுக். போய் நின்றோம். வாங்க வாங்க என்று வரவேற்பு பலமாயிருந்தது. அதுவும் வேற்று மாநிலமென்றவுடன் இன்னும் கொஞ்சம் திணறிப் போனார்கள். சாப்பிட்டீங்களா? ஆச்சுங்க (அய்யோ!). இப்படியாக அந்த அரங்கத்தில் மிருகக் காட்சி சாலையிலிருந்து நேராக வந்த நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.

நாளைக்கு முடிச்சிருவோம், சரியா? :)

பஞ்சாயத்துக்குப் போன பரதேசி. துண்டு-1

அருண் வலைப்பூவுல சுமித்ரா ராம்ஜீயைப் பத்தி எழுதியிருந்தாரா, நான் வேறு ஆர்வக் கோளாறிலே, மறுமொழியில் "அடுத்த நாடகம் எங்கே?"ன்னு கேட்கப் போக, பி.கே.சிவகுமார் இதோ பிடி, நியூயார்க் தமிழ்ச் சங்கப் புத்தாண்டு விழாவிலே நீ கேட்ட பஞ்சாயத்துப் பஞ்சவர்ணம் நாடகம் என்று விபரந்தட்ட, சரி என்னதானென்று பார்த்துவிடுவோமே என்று மறுநாள் கூத்துக்குச் சட்டென ஒரு திட்டம் போட்டோம். நியூயார்க் வழியே சில முறைகள் சென்றதுண்டே தவிர அந்த ஊரிலே எதையும் சுற்றிப் பார்த்ததில்லை. ஆகையால் அதையும் பார்த்த மாதிரி இருக்கும் என்று ஒரு எண்ணம். நானிருப்பது பக்கத்து மாநிலம், கனெக்டிகட். காரை ஓட்டிக்கொண்டு போனால் 70 மைல்களாம். கார்ப் பயணத்துக்கு 1.30 மணி நேரமாகலாமாம், வரைபடம் சொன்னது. வரைபடத்தில் சங்க விழா நடக்குமிடத்தைக் காணவில்லையென்பதால் உத்தேசமாய் அந்தப் பகுதிக்கான வரைபடங்களை எடுத்துக் கொண்டேன். வேலைகளை உத்தேசித்துக் காலை 10 மணிக்குக் கிளம்பவும், நேரே போய் க்வீன்ஸ்இல் அமைந்திருக்கும் நவீனக்கலை அருங்காட்சியகத்தைச் (Museum of Modern Arts) சில மணி நேரங்களில் பார்த்துவிட்டு, 4 மணிக்கு விழாவுக்குச் செல்வதென்றும் திட்டம்.

என் வீட்டுச் சின்னத் துரையைக் கிளப்புவது இருக்கிறதே அது பெரும் பாடு. அவருக்கு ஒரு ஆளென்றால் அவருக்குப் பாலிலிருந்து பனியன் வரைக்கும் எடுத்து வைக்க இன்னொரு ஆள் வேண்டும். ஆனால் என்னை மாதிரி ஒரு அப்பன் இருந்துவிட்டாலோ அம்மா பாடு சில நேரங்களில் படு திண்டாட்டம். சட்டை போட்டுக்கொள்ள மாட்டேனென்று தேசிங்குராஜா குதிரை மாதிரி அவன் கனைத்துத் துள்ளுவதும், அவனை அம்மா ஏதேதோ சொல்லித் தெண்டனிடும்போதும்தான், நான் இப்புடிப் போனா என்ன, இங்கேருந்து அங்க போறது எப்படின்னு கணிணியை நோண்டி வரைபடங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தேன். நடுவில் சங்கத்துக்காரர் ஒருத்தருக்குப் போன் போட்டு ஏங்க இந்த வழியில வந்தா சரியாங்கன்னு கேக்க, அவரு இன்னொரு வழி சொன்னது வேறு கதை. இந்தக் கலவரத்துக்குள் எனக்குத் திடீரென்று ஒரு பத்திரிகையாளத் தோரணை மனசுக்குள் தொற்றிக்கொள்ள, மனதளவில் ஒரு பெரிய கவரேஜுக்குத் தயாராகிப் பேப்பர், பேனா, பேனா மூடி எல்லாம் தேடி எடுத்து வைத்துக் கொண்டேன்.

எப்படியோ ஒரு வழியாய் மூட்டை முடிச்சைத் தூக்கி ஏற்றி வண்டியைக் கிளப்பியாயிற்று. இப்போது என் மனைவியின் கையில் ஒரு ஆறேழு வரைபடங்கள். நான் சாரதி. ஒரு வழியாய் ஒரு மணி நேரம் ஓட்டி நியூயார்க் எல்லை வரை வந்தாயிற்று. அப்புறந்தான் பிரச்சினையே ஆரம்பித்தது. அடுத்து எங்க திரும்பனும் என்பேன், அவர் அந்த 18ல் என்று எதாவது ஒரு எண்ணைச் சொல்வார். நான் சும்மா ஓட்டலாம், வாய் இருந்தால்தானே. ஆமா, அந்த மூனாவது மேப்பு என்ன சொல்லுதுன்னு பாரேன். இப்படியாய் ஓடிய வண்டி நுழைய வேண்டிய சந்தில் நுழையாமல் நேரே போய்விட்டது. பின் அடுத்த வெளியேற்றத்தில் வெளியே வந்து ஒருத்தரிடம் வழி கேட்டு, அது வேறெங்கோ இழுத்துப் போக, ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் ஒரு கார் அந்த நியூயார்க் கடலில் கொஞ்ச நேரம் மிதந்தோடியது. திடீரென்று ப்ராங்க்ஸ் உயிரியல் பூங்காவுக்குப் போற ஆளெல்லாம் அடுத்த சந்துல ஓடுன்னு ஒரு பலகை (Bronx Zoo). சரி அருங்காட்சியகமா இருந்தாலென்ன, இதாயிருந்தாலென்ன. பிள்ளைக்கு நாலு பேரைப் பார்த்தமாதிரி இருக்கட்டுமே என்று உள்ளே விட்டோம். அப்போது மணி 1.

நாளைக்குத் தொடர்வோம் சரியா? இப்ப கொஞ்சம் வேலை இருக்கு!

பூச்சியப்பாபிள்ளை

ஒரு வசந்த காலத்தில் ஒரு அப்பா இருந்தார் அவருக்கு ஒரு பிள்ளை இருந்தான். பிள்ளைக்கு ஒன்னே முக்கால் வயசும் அப்பாவுக்கு அப்பா வயசும். அப்பாவுக்கு வசந்த காலம் பற்றிய பேருணர்வேதும் பதிந்திருக்கவில்லை. காலங்களில் வசந்தம் என்பதைப் பிரித்துப் பாராதவராகவே அவர் இருந்தார். மழையும், வெயிலும் வேறில்லாப் பொழுதுதான் அவர் பொழுது. இந்தப் பனி, வெப்பச் சுழற்சியில் ஏறியிறங்கும் மனசைக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் விசேடமாய்த் தயாரித்து, முன்பேயிருந்த மனசோடு பொருத்திக் கொண்டார் அப்பா. கொஞ்சம் கனந்தான்.

அந்தப் பிள்ளைக்குப் புல்லின் மேல் நடக்காதேயெல்லாம் தெரியாதல்லவா, பனியில் அழுகி, வெயில் பட்டுத் துளிர்த்துப் படரும் புல்லின் மேல் ஓடினான். புல்லின் விளிம்பிலே போய்த் தடுக்கி விழுந்தால் மூன்றடிக்குக் கீழே ரோட்டுச் சிமெண்டிலே பல்லுமூக்குடையும். அப்பாவும் பின்னாலே ஓடினார். இதனாலெல்லாம் அப்பாவுக்குப் பூமனசென்று நினைக்க வேணாம். அப்பா நினைத்தால் பூக்களின் மீதும் நடப்பார். புல்லுக்குள் பூச்சிகள் வசிக்கும். அப்பாபிள்ளையின் ஆட்டத்தில் சில எழுந்து பறக்கும், பறக்கத் தவறிக் கால்களின் கீழே மாட்டியவை, அழுத்தத்துக்குத் தகுந்த மாதிரி புல்லின் மடலிலோ அல்லது வேருக்கருகிலோ ஒட்டி நசுங்கும். பிழைக்கலாம், சாகலாம், யார் கண்டது. ரோடு, சிமெண்டு, தறிகெட்டோடும்பிள்ளை, பல்லுமூக்கு. மனுசன்.

அன்று மாலை வீட்டுக்குள் அப்பாவும் பிள்ளையும் படித்தார்கள். புத்தகத்துப் பட்டம் மேலே மேலே பறக்குதென்று கையை உயரக் காட்டினார் அப்பா. பட்டத்தைக் காண மேலே பார்த்த பிள்ளை, பறந்த பூச்சியொன்றை அப்பாவுக்குக் காட்டினான். படபடவென்று அந்துப்பூச்சி மாதிரி சின்னோன்டு. கம்பிவலையடித்த சன்னல்கள். எப்படி வந்ததோ. அப்பாவின் மனசுக்குள் வழக்கம் போல் ஒரு கை ஓங்கியது. இந்த ஓங்கும் கை ஒரு அகங்காரமான, அத்துமீறலின் எதிர்ப்பு, என் வீட்டுக்குள் வந்தாயா எனும் பரிணாமநாய்க் கேள்வி. அதே பரிணாமம் அப்பாவின் மனக்கையைத் தாழ்த்தியது. பிள்ளையின் பார்வை பூச்சியோடு பறந்து போனது, ஒட்டி ஒட்டிக் குந்தியது, பின் எழுந்து பறந்தது. வாயானது பூச்சியும், பார்வையும் போகுமிடத்தையெல்லாம் குழறியது, கம்புட்டர், சேக்கள்... ஏற்கெனவே தாழ்ந்திருந்த அப்பாவின் மனக்கை குவிந்தது. குஞ்சூ பூச்சிக்கு வணக்கம் சொல்லுங்க. பிள்ளை இந்த வார்த்தையை விட அதிகமாய் அந்தப் பூச்சியைக் கொண்டாடிக் கொண்டிருந்திருக்கலாம். வாக்கம் என்றான். சில கணங்களில் அதைக் காணோம். அம்மாப்பாபிள்ளை தின்று தூங்கினார்கள். பூச்சி எங்கே தூங்கியதென்று தெரியாது. விடிந்தெழும்பி வேலைக்குப் போனார் அப்பா. அங்கும் மனசுக்குள் படபடவென்று அது அடித்துக் கொண்டிருந்தது. அம்புட்டுதான் மிஸ்டர் பூச்சியப்பாபிள்ளையின் கதை.

நீதி: ஒரே குழப்பமாயிருக்கிறது. இனிமேல் புல்லில் பிள்ளையின் பின்னால் ஓடாமல் ரோட்டில் நின்றபடி விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பிள்ளை புல்லுக்கு ஓடுமுன் பிடித்து இழுத்து நிறுத்திவிட வேண்டும். ஆனால் இது அவனது ஓட்டச் சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைப்பது. வீட்டுக்குள் வந்த பூச்சியை விரட்டிப் பிடித்துத் தாளில் ஏந்தி அப்பா வெளியில் விட்டிருக்கலாம். பூச்சி, அப்பா, பிள்ளை மூவருக்கும் சாதகமான ஒரு பதிலை நீங்கள் அறிந்திருந்தும் சொல்லவில்லையென்றால் அப்பாவின் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்.

இவ்வாறு சொல்லிய வேதாளம் மீண்டும் இணையத்துக்குள் புகுந்துகொண்டது.

டெஹோர்

நீங்க 1980களில் கரம்பக்குடியில ஏதாவது ஒரு தெருவுலயாச்சும் நடந்திருந்தீங்கன்னா இந்த வார்த்தையை யாராச்சும் ஒரு ஆளாவது சொல்லக் கேட்டிருப்பீங்க. டெஹோர். அந்த வார்த்தையின் சிருஷ்டி கர்த்தா ஒரு பெயிண்டர். ஒரு வேளை வான்கோ மாதிரி இவரும் ஆகியிருந்திருக்கலாம், ஆனா என்னமோ வெறும் தரு.மு. பூச்சிமருந்துக்கடை மாதிரிப் பெயர்ப் பலகை, அப்புறம் சில சைக்கிள்கள் இவற்றோடு மட்டும் நிறுத்திக்கிட்டார். சில்வர், பச்சை, சிவப்பு என்று அடிக்கடி இவர் சைக்கிளின் நிறம் மாறும். உடை மட்டும் வெள்ளை & வெள்ளை. கதர். சைக்கிளில் போய்க்கொண்டே டெஹோர் அப்படின்னு ஒரு இராணுவக் கட்டளை மாதிரிக் குரலெழுப்புவார். அந்தப் பக்கம் கிட்டிப்புள் விளையாடுற பயலுகளோ அல்லது டீக்கடையில கிளாஸ் கழுவுற ஒரு பயலோ எசப்பாட்டுக் குதூகலத்துடன் டெஹோர் அப்புடின்னு கத்துவாங்ய. சில நேரம் கொஞ்சம் பெரிய ஆட்களும் டெஹோர் போடுவதுண்டு. இதுக்கு அர்த்தம் என்னன்னு யாருக்கும் தெரியாது. அந்தப் பெயிண்டருக்குத் தெரியுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா இது பறவைகள் மாத்தி மாத்திக் கத்திக்கும் தெரியுமா அந்த ரகத்தைச் சேர்ந்த ஒரு பரிமாற்றம் மாதிரி இருக்கும். நாளடைவில் இது ஒரு சாதாரண பயன்பாட்டுச் சொல்லாயிருச்சு. உதாரணத்துக்கு, நல்லாயிருந்த ஒரு கபாடி ஆட்டத்தை, "நேத்து அம்புக்கோயிலாங்ய டெஹோர் பறிச்சுட்டாங்ய" அப்படின்னு சொல்ற அளவுக்கு. இவர் சில நேரங்களில் பாட்டுக்களையும் திரிப்பதுண்டு. ஒரு மத்தியான வேளையில் எங்கள் வீட்டுக்குப் பின்புறமிருக்கும் சின்ன ஒலுங்கையில் இவரது வண்ணங்கொண்ட சைக்கிளில் "மானே தேனே கச்சப்பொடி"ன்னு பாடிக்கிட்டு போனது இன்னும் நினைவிருக்கு (உதயகீதம் - மானே தேனே கட்டிப்புடி பாட்டின் திரிபு; கச்சப்பொடின்னா கருவாடு). இவர் சைக்கிள் போற பக்கமெல்லாம் ஒரு சிரிப்பலை கூடவே மிதந்து போற மாதிரி ஒரு பிரமை. இப்போது இவர் எப்படியிருக்கிறார் என்றோ, டெஹோர் சத்தம் தேய்ந்தேனும் எங்காவது ஒலிக்கிறதா என்றோ எனக்குத் தெரியாது. எந்த மலிந்த விலையையும் கேட்காமல் இப்படி உற்சாகத்தைத் தெருவில் விதைத்துக் கொண்டு போகிறவர்களால்தான் தெருக்களில் உயிர் ஓடிக்கொண்டிருக்கிறது!

காந்தள்: பொய்க் கூப்பாடுகளும், சில உண்மைகளும்



நேத்து நம்ம பெயரிலி, "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறான் பாருங்க",ன்னு அலறினாரு. என்னடான்னு பாத்தா டைம்ஸ் ஆப் இந்தியாவுல புலிப்பூ விஷப்பூன்னு சேதி வந்துச்சாம். இது மாதிரிப் பத்திரிகைகள் ஈழச் செய்தின்னாலே ஒரு விஷச்சாயம் பூசுறதுதானேன்னு விட்டிருக்கலாம். பிபிசியோட அன்னம்மா வேற சொன்னுச்சா, சரி என்னதான் இந்தப் பூவப் பத்தி உண்மை இருக்குன்னு பாக்கப் போனேன். நான் கண்டதைச் சொல்லுறேன்.

காந்தள் பூவை ஈழத்தோட தேசியப்பூன்னு அறிவிச்சாங்களாம். இதப்பத்தி வீரநாதன் எழுதினதை சந்திரவதனா போட்டிருக்காங்க. Gloriosa superba அப்படிங்கற காந்தள், ஆயுர்வேத, யுனானியில அரிப்புலேருந்து குட்டம் வரைக்கும் தோல் வியாதி, வயித்து நோய், மூல வியாதியக் குணப்படுத்துதாம்; அதுமட்டுமில்ல வயகரா எபக்டும் இருக்குங்குது. கூகிள்ல காந்தள்னு அடிச்சுக் கேட்டா அவனவன் காந்தள் காந்தள்னு உருகுற 17 சங்க இலக்கியத்தை எடுத்துக்கிட்டு வந்து போடுது. முருகனுக்குக் கால்ல போட்டானாம், போரப்போ கழுத்துல போட்டானாம். ஜிம்பாப்வே காரனும் இதைத்தான் தேசியப் பூங்குறான். அந்த ஊரு பெண்களமைப்புச் சின்னத்துல வரைஞ்சு வக்கிது. நம்ம ஊர்லேருந்து எடுத்துக்கிட்டுப் போயி ஒலகமெல்லாம் தொட்டிக்குத் தொட்டி வச்சு அழகு பாக்குறான். நா 25 ஏக்கராவுல போட்டிருக்கேன், யாருக்காச்சும் கெழங்கு வேணுமா, தண்டு வேணுமான்னு கேட்டுக்கிட்டு வலையில அலையுறான். ஏன்னா மருந்துக்கம்பெனி காரனுக்கு அது வேணும். ஏற்கெனவே கொல்ச்சிசின் (colchicine) அப்படின்னு ஒரு சரக்கைப் பிரிச்செடுத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துறான். இதுக்கு மேலயும் எதாச்சும் தேறுமான்னு தேடுறான்.

இந்தியாவுல அழிஞ்சு போவுது சீக்கிரமாக் காப்பாத்துங்கய்யான்னு இந்திய சுற்றுப்புற-காட்டிலாகா அடிச்சுக்குற ஒரு செடி இது. ஐநா அமைப்பு சீக்கிரமாப் பாதுகாக்க வேண்டிய தாவரம்யான்னும், டில்லிக்காரன், ரொம்ப முக்கியமான மருந்துச் செடி, சுதேசிச் செடி, எந்தப் பயலும் இதை வெளிநாட்டுக்கு ஏத்தப்புடாது கைய வெட்டுவேன்னு அறிக்கை வுடுறான். சவ்வாது மலையிலேருந்து குத்தால மலை வரைக்கும் முந்தி இருந்துச்சாம், இப்ப இல்லையாம். இருக்க ஒன்னு ரெண்டையாச்சும் காப்பாத்துங்கய்யான்னு கை கூப்புது தமிழ்நாடு வனத்துறை. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தக் காந்தளை வளக்கப் புடாதுன்னு எந்த நாடும் சொல்லலீங்க. சொல்லப் போனா இந்த அமைப்புகள் எல்லாஞ் சேந்து ஈழ மக்களுக்கு அவங்களோட சுற்றுப்புறச்சூழல் அக்கறைக்காகக் கை கூப்பனும்.

ஆனா இதுனாலெல்லாம் வெசமில்லன்னு நாஞ் சொல்றதா நெனைக்காதீங்க. வெசந்தான். தின்னா சாகலாம், சாகாமலும் போகலாம். இந்தியாவுல செடியே அதிகமில்ல, அதனால தின்னமாதிரி கேஸ் ரொம்ப அபூர்வம். இலங்கையில ஒரு கி.பி.1990 ஆராய்ச்சிப்படி 4556 பாய்ஸன் கேஸ் (விஷக் காளான், பூச்சி மருந்து... எல்லாம் சேர்த்து). அதுல கணக்குப் போட்டா 50 பேரு (சரியாச்சொன்னா 50.116 பேர்) இந்தக் காந்தளைத் தின்னிருக்கான். இதுக்கு என்னய்யா பரிகாரம் சொல்லுது அந்த அறிக்கை?, சொல்லிக்குடுங்க, எல்லாருக்கும் இது வெசமய்யா, திங்காதீங்கன்னு சொல்லுங்க அப்படிங்குது. அரளி வெதை, பூ, காய், இலை எல்லாத்தையும் தின்னுட்டு நம்ம ஊர்ல சாகற கேஸ் இதைவிட அதிகம். அதையும்தான் வீட்ல, ரோட்ல, கோயில்ல, கொளத்துல, ஆபீஸ்ல வளக்குறோம். அதுக்காக அதை வளக்கக் கூடாதுன்னு யாரும் குதிக்கலையே. அமெரிக்காவுல டெக்ஸாஸ் மாநிலம் கால்வெஸ்டன் நகரத்துல வித விதமா அரளிய வச்சு அலங்காரம் பண்ணி, "அரளி விழா"ன்னு கொண்டாடுறான். அதுக்காக அந்த ஊர்ல அரச்சு அரச்சுக் கோப்பயில ஊத்திக் குடிச்சுக்கிட்டா இருக்கான். இல்ல. ஏன்னா, "பாருங்கப்பா அழகாயிருக்கு ஆனா வெசம்"னு சின்னப் புள்ளயிலேருந்து பெரியாளு வரைக்கும் சொல்லிக் குடுக்குறான். அதே மாதிரி சொல்லிக் குடுத்தாப் போதும். அதவுட்டுட்டு அய்யோ வெசக்கூட்டம் வெசச்செடி வளக்குதுன்னு கூப்பாடு போட்டா என்ன அருத்தமுங்கறேன்? சொல்லுறதயெல்லாம் அப்புடியே நம்பிக்கிட்டு இருந்ததெல்லாம் அந்தக் காலமப்புன்னு எழுதினவங்கிட்ட சொல்லனும்போல இருக்கு.

அச்சமில்லை அமுங்குதலில்லை

ராமாவென்று வீழ்ந்த மகாத்மாவை
மசூதியின்பின்னே இடிந்து புதைந்தாரை
குஜராத்திலேயுயிர் துடித்து எரிந்தாரை
மாமாங்கக்குளத்திலே மிதிபட்டுச் செத்தாரை
இலவசச்சேலைக்கு நெரிந்தழிந்த பெண்டிரை,

காலக் குப்பையிற் புதைத்துமறந்து,
அத்தனைக்கும் பின்னிருந்து திளைத்துத்
தீரத்தீர நம்குருதியைப் பருகுவாரை
மன்னித்துக் கொடிபிடிக்கும் சிங்கத்தமிழா!
போபார்ஸ்காந்தி உயிரென்ன கரும்போதேனோ?

அமைதிப்பூங்காவாம் தமிழ்நாடு அதில்
வந்து மாண்டாராம் அருந்தியாகி,
நாளொருபொய்யும் பொழுதொரு கொலையும்
ஏமாளியாய்த்தமிழன் நின்று கண்டிருக்க
யாருக்குச் சொல்கிறீர்உம் பூங்காக்கதையை?

நிழற்பேய்கண்டு நடுங்கும் சோதர,
போதும் பொய்க்கதை கேட்டுத்துயின்றது
வில்வாளெடுத்துக் களம்புக வேண்டாம்
உண்ணாநோன்பில் உயிர்விட வேண்டாம்
ஓய்ந்திருப்போருக்கே விளையாட்டும் வீண்வம்பும்
உம்மோடு யாமென்று ஒருசொல்லுரைத்து
முழக்கின் அதிர்வில் பொய்கள்பொடியத்
தீண்டாமுரசை யதிர முழக்கு
நாளை
ஈழம்விடிந்து உன்கரம் பற்றும்.

அப்புறமாய் ஒன்று, பாரதி சொன்னது:

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே
செம்மை மறந்தாரடீ".

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வலைப்பூவுல வேலை முடிஞ்சு ரெண்டு மூனு நாளாகியும் அந்த அதிர்ச்சி, அதை அப்புடித்தான் சொல்லனும், இன்னும் மாறலை. எத்தனை விதமான மனிதர்கள், உணர்ச்சிகள். ஒரு பெரிய மாநாட்டுல எல்லா அமர்வுலயும் ஒக்காந்துட்டு வந்த மாதிரி இருக்கு. நான் எங்கிட்ட மீண்டு வர இன்னும் கொஞ்சம் நாளாகும்! அதையும் தாண்டி இந்த அறிவியல் கூட்டு வலைப்பதிவு. இந்தப் புத்தாண்டும் நண்பர்களும் எனக்கும், உங்களுக்கும் ஊக்கமளிக்கட்டும்!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வலைப்பூவில வேலை

ஒரு வாரத்துக்கு வலைப்பூவில வேலை! இங்க பதிய முடியாது. அங்க வாங்க!

கக்கா, சித்த கக்கா

ரெண்டு மூனு நாளா இதப் பத்தி எழுதனும்னு நெனச்சேன். தங்கமணியோட மழைப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் இவ்வளவு அழகா அவன் சொன்னத, இந்த நாத்தம் புடிச்ச பாணியில நாஞ் சொல்லனுமான்னு தோணுது. இருந்தாலும் சொல்லுறேன். நீங்க இந்தக் கக்கா விசயத்துனால உவ்வேன்னு பாதிக்கப்படுற ஆளா இருந்தா சாப்பிட்டுப்புட்டு படிங்க. இல்லன்னா படிக்காதீங்க. இல்லன்னா சாப்புடுறப்ப இத நெனக்காதீங்க!

சிக்கல்கள் இருக்கதுதான் வாழ்க்கை, உடம்பு. எனக்கென்னமோ எல்லாச் சிக்கலையும் விட ரொம்பக் கொடுமையான சிக்கல் இந்தக் கக்கா சிக்கல்தான்னு படுது. எங்க மாமா ஆஸ்பத்திரில கம்பெளன்டர் வேல பாத்தேன், லீவு நாளயில. முடியாமப்போயி வர்றவங்ககிட்ட மாமா கேக்குற மொதக் கேள்வி, "வெளிய ஒழுங்கா போச்சா?" சிரிக்காதீங்க. இது முக்கியம். உள்ள போனது வெளியில வரணும், இல்லன்னா அவஸ்தன்னு கண்ணனே ஒருநா சொன்னாரு! ஒரு நாள் முழுக்க எந்த அறிகுறியுமே இல்லாம ரெண்டாவது நாள் சுத்தமாப் போயிருச்சுன்னா ஒரு திருப்தி வரும் பாருங்க அடடா. அனுபவிச்சாத்தான் தெரியும்.

முந்தி எங்கப்பா எங்களுக்கு வரிசையா நிக்க வச்சுக் குடுப்பாரு பாருங்க, வெளக்கெண்ணெயில வாளப்பளத்தப் போட்டு, யப்பா.... என்னோட வயிறு சாதாரணமா என்ன, அதுக்கும் மசியாதே. அப்புறமாத்தான் அடுத்த அஸ்திரத்த எடுப்பாரு எங்கப்பா. அது பேரு அகத்தியர் குழம்பு. என்னமோ மீன்குழம்புன்னு நெனக்க வாணாம். அது ஒரு சித்தர் குழம்பு. சின்னோன்டு பாட்டில்ல மை மாதிரி இருக்கும். அகத்தியர் மை அப்படின்னும் சொல்லுவாங்க. வயிறு ஓட. உளுந்தளவு எடுத்து பாக்களவு கருப்பட்டிக்குள்ள வச்சு உருட்டி, வெறும் வயித்துல வெந்நீரோட. சனிக்கிழமை முழுக்க மவனே ஓடு. ஒரு தரம் எங்கப்பா இந்தப் பயலுக்கு ஒரு உளுந்தளவெல்லாம் சரிப்படாதுன்னு ரெண்டு மூனு உளுந்தாக் குடுத்துட்டாருன்னு நெனக்கிறேன். ஓட்டம் நிக்கல. சாயங்காலமா எங்கம்மா வசம்பை சுட்டு, தேனுல குழப்பி, முருகா, கருப்பையா, கொம்புக்காரா இத்தோட நிக்கனுமுடான்னு சொல்லி நாக்குல தடவுணாங்க. ஒரு வழியா நின்னுச்சு. நம்ம ஊருல பதினஞ்சு நாளக்கி ஒருக்க பேதிக்குக் குடுப்பாங்க. முக்கியமா சின்னப் புள்ளங்களுக்கு. பூச்சி, கீச்சி ஒன்னும் அண்டாது. இது நல்லது.

இப்ப விசயத்துக்கு வாரேன். ஆக வயித்துக் கசடு போறது நல்லது. திருப்தி தருவது. பாரதி எதுக்கோ சொன்ன மாதிரி உற்சாகந்தருவது, குதூகலந்தருவது. இந்தத் திருப்தியே இப்புடி இருந்தா, அதாவது உடம்புல இருக்க கசடு வெளியில போனாலே இம்பூட்டு லேசா ஆனோம்னா, மனசுல இருக்க கசடு வெளியில போயிட்டா எப்புடி இருக்கும்? இதை அடிக்கடி யோசிச்சுப் பாப்பேன். இதையெல்லாம் அனுபவிச்சுத்தான் யாரோ ஒரு நாயன்மார்(?) பாடியிருக்கார்:

"சித்த மலம் அறுவித்து சிவமாக்கி எனையாண்ட"

...அப்படின்னு. சித்த மலம் போயிருச்சுன்னா சிவம்.

நல்லது, கெட்டது எதுவுமே சித்தத்துல தங்கப்படாதாம். இதுல எனக்குக் கொஞ்சம் குழப்பம் வர்றதுண்டு. அனுபவம், அறிவுன்னு எதையுமே சேக்காம இருக்கது நடைமுறையாகாதே, எப்படி எதையும் கத்துக்காம வாழுறது? ஆனா பாருங்க நம்ம மனசு நம்மளுக்கு துக்கத்தை, அழுத்தத்தை, ஏக்கத்தை, பழசை நினைவுபடுத்துற அளவுக்கு சந்தோசத்தையோ, நிகழ்வையோ, நல்லனுபவத்தையோ திரும்பிப் பார்க்க விடுவதில்லை. அப்ப என்னத்துக்கு அதைச் சேத்து வைக்க? இந்த ஜென் கூட்டம் ஒரு வழி சொல்லுது, கத்துக்கறது, ஆபீஸ¤க்குப் போறது, வேலை செய்றது எல்லாம் அதது செய்ய வேண்டிய நேரத்துல செஞ்சுகிட்டே இருந்தாப் போதும். அப்பப்ப அததுல இருக்கனும். அப்ப ஒண்ணும் சேராது. பயபுள்ள மனசுக்கு முடிஞ்சாத்தானே. வயிறு மாதிரியே இதுவும் அழிச்சாட்டியம் பண்ணுது.

வயிறு முட்ட உப்புத்தண்ணி குடிச்சா வாயால போவும், அகத்தியர் குழம்பு தின்னா வயித்தால போவும், என்னத்தச் செஞ்சா மனசால போவும்? ஒன்னுஞ் செய்யாதே சவமேன்னு பின் மண்டையில ஒரு அடி.