ஒரு துளி காமத்துப்பால்


இது ஒரு இசைக் குறுவட்டு. பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் (பநிதச) வெளியீடு. திருக்குறளில் காமத்துப்பாலில் இருக்கும் சில அதிகாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 குறட்பாக்கள். அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மேலும் அக்குறட்பாக்களின் தமிழ் விளக்கக் கவிதை. தமிழில் தமிழர்களும், ஆங்கிலத்தில் அமெரிக்கர்களும் பாடியிருக்கிறோம். இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு. அக்டோபர் 2, 2012இல் இது தென்கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவொன்றில் வெளியிடப்பட்டது. அவ்விழாவை நான் பார்த்த விதமும், மேலும் சில தகவல்களும். மைக்கைப் பிடித்துப் பெரியவர்கள் பேசிக்கொண்டே இருந்தோம். குழந்தைகள் ஓடிக்கொண்டே இருந்தார்கள். டிஃப்னி என்றொரு பெண்மணி வந்தார். எங்கள் இசைக் கோப்பில் புல்லாங்குழல் இசைத்தவர். அவர் குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். குழந்தைகள் அப்படியே நின்றார்கள். வாசித்து முடிக்கும்வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். டிஃபனி தனது குழலுடன் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார். நோயாளிகளுக்காக வாசிக்கிறார். யோக நிலையங்களிலும் வாசிப்பார். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி முழுவதுமாகப் புரிந்தது. ஏனென்றால் முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்ததாலும், அமெரிக்க முகங்கள், பாடகர்கள், இசைஞர்கள் தமிழ் இலக்கியத்தின், மொழியின் பெருமைகளைப் பற்றிப் பேசியதாலும். அக்குழந்தைகளுக்கு இது தமிழைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை அளிக்கும். டலஸ் ஒருசில வரிகளைப் பாடினார். கணீரென்ற குரல். அத்தனை நெளிவு சுழிவுகளையும் குரலில் காட்டி அவர் பாடும் அழகை எல்லாப் பாடல்களிலும் காணலாம். ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பார்த்தவுடனேயே இந்த இசை முயற்சியில் ஈடுபடப் பெரிதும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய சுயவிபரக் குறிப்பில் "ஒரு துளி காமத்துப்பால்" ஒரு முக்கிய திருப்பம் என்றார். அவர்தான் அமெரிக்க தேசிய கீதத்தையும் அன்றைய நிகழ்வில் பாடினார். அவரும் டேனும் இணைந்து வேறு பல ஆங்கிலப் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் பாடியிருக்கும் ஒரு பாடல்: போங்கோ ஒரு ஆப்பிரிக்கத் தமிழர். நாங்கள் எல்லோரும் முழுக்கால் சட்டையும், முழுக்கை சட்டையுமாகச் சென்றிருந்தபோது வேட்டியில் வந்து எங்களை மகிழ்வித்தவர். அத்தனை இசையையும், குரலையும் தன் இரவு, பகல் பாராத உழைப்பால் உருக்கி வார்த்து உருவமைத்தவர். உலகமெங்கும் ஒழிந்துவரும் கலைகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் கண்டு மனம் வெதும்புபவர். இந்த அக்கறைதான் அவருக்கு எங்கள் மேல் மதிப்பையும், இந்த முயற்சியில் ஈடுபடவும் வைத்தது. இக்கோப்பில் ஆண் குரலில் வரும் ஆங்கிலப்பாடல்களைப் பாடியவர் இவரே. இவருக்கு உறுதுணை மாண்டி என்ற மேளா. அவரும் அருமையான குரல்வளம் கொண்டவர். எங்கள் ஒலிப்பதிவின்போது ஊரில் இல்லாததால் அவரால் பாடமுடியவில்லை. எனவே முன்னுரையில் மேளாவின் குரல் ஒலிக்கிறது. அடுத்த ஒலிக்கோப்பில் அவரும் இருப்பார். போங்கோ மற்றும் அவரது மற்ற இசை வெளியீடுகளைப் பற்றி இங்கே: டேன் இதில் கித்தார் வாசிக்கிறார். அருமையான சித்தார் கலைஞனும்கூட. அவரைக் கண்ட முதல்நாள், இந்த நரம்புகள் சரியில்லை, ஒருநாள் திருத்திக் கட்டவேண்டும் என்று சொல்லிக்கொண்டே சித்தாரை வாசித்தார். அருமையாக இருந்தது என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். டேனுக்கு இந்த வெளியீடு சிறப்பாக வந்ததில் மகிழ்ச்சி. பெரிய வரவேற்பு இருக்கும் என்றார். அரிநாத் எப்போதும் நிறைய பேசுவார். அன்றும் பேசினார். முன்பொருநாள் திருக்குறள் கலந்தாய்வுக் கூட்டத்தில் முப்பாலில் இன்பமான இப்பாலையே முன்னதாக வைக்கவேண்டுமென யுவராஜ் முழங்கியதில் ஆரம்பித்து நிறைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். இக்கோப்பினை உருவாக்க வேண்டும் என்று முன்னின்று தூண்டியவர் இவரே, அல்லது இவருக்குள்ளிருந்த காதலே! டிஃபனியின் குழலிசையோடு அடிக்குரலில் பாடியிருக்கும் சாயலும் நாணும், மற்றும் துள்ளலுடன் யான் நோக்குங்காலை பாடியிருப்பதும் அரிதான். அரிதான் அன்றைய உணவுப் பட்டியலின் பொறுப்பாளர். ஒவ்வொருவரையும் அழைத்து இன்னதுதான் நீங்கள் செய்துகொண்டு வரவேண்டியது என்று இயற்கை உணவுகளைக் கொண்டுவரச் செய்திருந்தார். அண்மைக்காலமாக இயற்கை உண்டியைப் பற்றி அவர் பேசியும், செய்தும் வருகிறார். அதைப் பற்றி அவரது முகநூலில் காணலாம். ஜானகி இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். நானொரு பாடகியே அல்ல, எனக்குப் பாடத்தெரியாது என்றுதான் ஆரம்பித்தார். ஊழிற் பெருவலி யாவுள?! என் இல்லத்தரசி என்பதால் மட்டுமல்ல, இவரது குரலின்மீது எனக்கொரு மயக்கமுண்டு. அதில் மிரண்டுபோவதும் உண்டு! இவர் பாடிய "வாளற்று" எனக்குப் பிடித்த பாடல். அழகான இசை, இழந்தாடும் குரல்கள். பின்னணியில் சந்தியா பாடியிருக்கிறார். பிரிவின் துயரை நெஞ்சிலறையும் வரிகள். யுவராஜ். எங்கள் இசைக் கனவுகளுக்கு உருவம் கொடுப்பவன். எந்தக் குரலிலிருந்தும் இனிமையைக் கொண்டுவந்துவிடுவான். யாரையும் பாட வைத்துவிடுவான். இன்ன இடத்தில் இது வரவேண்டும், இங்கு இப்படி இழுக்காதீர்கள், இதைத் தூக்கி அங்கே போடுங்கள் என்று பார்த்துப் பார்த்துச் செய்தவன். இவனது கவிதைகளையும், தனது கீபோர்டில் போட்டுக்கொண்டு வந்த முதல் பாடலையும் கேட்டபிறகுதான் எனக்கு இந்த முயற்சியில் ஆர்வம் ஓங்கியது. யுவாவின் குரலுக்கு மயங்கிக் கிடப்போர் பலர். என் சிந்தையும், வாயும் அவன் பாடலையே அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருக்கும். இந்த ஒலிக்கோப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடலென்றால் "பிரிவுரைக்கும் வன்கண்ணர்" தான். யுவாவின் குரலும், டலஸின் குரலும், மற்றும் இயந்தொலிக்கும் இசைகளும் அற்புதம்! வாழ்க யுவா! உன்னால் தமிழிசைக்கு ஆகவேண்டியது இன்னும் எவ்வளவோ! (யுவாவைப் பற்றி எழுதினால் நீண்டுகொண்டே போகும். அவரைப் பற்றிப் பிறிதொரு நாளில்!) நானும் பாடியிருக்கிறேன். என்னைப் பற்றி நானே சொல்லிக்கொள்வது நல்லதில்லை. எனவே ஒரு குறுந்தகட்டை வாங்கி, கேட்டுவிட்டு, என் குரல்வளத்தை நீங்கள் வறுத்தெடுக்கலாம் :) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் முனைவர் தண்டபானி வந்திருந்தார். எங்களது தமிழ்ப் பணிகளுக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர். இதுபோன்ற இசை முயற்சிகள் பெருக வேண்டும் என்று வாழ்த்தினார்.அன்றைய நிகழ்ச்சிகளை அருமையான ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர் நமது பனைநிலத்துக் கவலையற்ற காளையருள் ஒருவரான பூபாலன். அவரே இத்திட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு (அதாவது விற்பனை!) எடுத்துச் செல்லவிருக்கும் எங்கள் வினையூக்கி! வந்திருந்த அனைவரும் இயற்கையான நல்லுணவுண்டோம். அடுத்து செய்யவேண்டிய இசை முயற்சிகளைப் பற்றி அளவளாவினோம். அனைவரையும் குறுந்தகடுகளை வாங்குமாறு வேண்டுகிறோம். iTunes: Amazon: or contact us! அனைத்துலக நாடுகளில் விற்பனை முகவர்கள் தேவை. எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

குதிரை



அடுத்த சில மாதங்களில் மயிலின் படம் வெளிவரும். யானையின் படத்தை இப்போது வெளியிடாமல் குதிரையின் படத்தை வெளியிட்டமை சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இருப்பினும் பாகனைச் சுமந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு யானையைவிடத் தன்வயமாய்த் திரியும் குதிரை கண்ணுக்குக் குளுமையாய்த் தெரிகிறது.