புதிய ஆய்வு ஒன்றின் முடிவுகள். அதாவது சிகரெட் நிறுவனங்கள் பெண்களைப் புகைக்கு அடிமைப் படுத்தும் நோக்கில் சிகரெட்டுகளைத் தயாரிக்கின்றனவாம். பெண்கள் விரும்புகின்ற வடிவுடனும், சுவையுடனும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்ற தோற்றத்துடனும் இவை தயாரிக்கப் படுகின்றனவாம். இது உலக நலத்தில், முக்கியமாக வளரும் நாட்டுப் பெண்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
இதற்கு முந்தைய ஆய்வுகளின்படி சிகரெட்டுக் கம்பெனிகளின் விற்பனை உத்திகள் பெண் விடுதலை, அழகு/கவர்ச்சி, வெற்றியடைதல், மெலிந்திருத்தல் போன்றவற்றைச் சுற்றிப் பின்னப் பட்டிருந்தன. ஆனால், சிகரெட்டின் வடிவமைப்பு ஏன் எப்படி பெண்களைப் புகைப்போராய் ஆக்குகிறது என்பது பற்றி இன்று வரை அறியப் படவில்லை.
1998 Tobacco Master Settlement Agreementன் பின்னர், பொதுமக்களுக்கு வெளியிடப்பட்ட சிகரெட் கம்பெனிகளின் ஆவணத்தை ஆராய்ந்த கேரி முர்ரே கார்ப்பெண்டர் (Carrie Murray Carpenter) என்ற ஹார்வர்டு பொதுநலக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் "இது வெறுமனே விற்பனை, விளம்பரம் என்ற கூறுகளையெல்லாம் தாண்டியது", என்கிறார். கடந்த 20 வருடங்களாக இந்தக் கம்பெனிகள் கடும் முயற்சியெடுத்து, பெண்களிடையே புகைப்பதை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பெண்களையும், இளமங்கையரையும் புகைக்க ஊக்குவிக்கும் காரணிகள் என்னென்ன, அவர்கள் எவ்விதமாகப் புகைக்கிறார்கள், எந்தெந்த வகை சிகரெட்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றை இக்கம்பெனிகள் ஆராய்ந்திருக்கின்றன.
இவ்விதமான தந்திரங்களுடன் தயாரிக்கப் பட்டவை இலேசான சிகரெட்டுகள். இவை சுகாதாரமானவையென்றும், பாதுகாப்பானவையென்றும் பெண்கள் நம்ப வைக்கப்பட்டார்கள்; மேம்பட்ட வாசனை, புகைத்தலின் பின்னான உருசி, குறைந்த அளவு புகை இவற்றின் மூலம் இவ்வகை சிகரெட்டுகளை நல்லவை என்று கருத வைக்கப் பட்டார்கள்; இவ்வகை சிகரெட்டுகள் பெண்களுக்குப் பிடித்தமான வாசனையுடனும், இதமான மென்மையான சுவையுடனும் வந்தன; பெண்களின் உடற்கூறியலின்படி இச்சிகரெட்டுகளை எளிதாக உறிஞ்சும்படியும், உணர்வின்பத்தைத் தூண்டும்படியும், நிகோடின் மற்றும் தார் அளவினை மாற்றியும் வடிவமைத்தார்கள். இதற்கெல்லாம் மேலும் பசியைக் குறைக்கும் பொருட்களைக் கலந்து, புகைப்பதன் மூலம் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் உருவாக்கப் பட்டது. இந்த வகை இலேசான, மெல்லிய, நீண்ட சிகரெட்டுகள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்காதவை, மன இறுக்கத்தைப் போக்குபவை, உடலை இளைக்க வைப்பவை போன்ற தோற்றங்கள் உருவாக்கப் பட்டன. இதன் விளைவாக, புகைப்பதற்கு எதிரான முழக்கங்கள் அதிகம் பலனளிக்காமல் போய்விடுகின்றன. புகைக்கும் பெரும்பாலான பெண்களுக்கு இத்தகைய சிகரெட்டுகளில் இருக்கும் நிகோடின், தார் போன்றவற்றின் அளவு தெரிவதில்லை, ஆனால் சிகரெட்டின் தோற்றத்திலிருந்து கேடு குறைவுதான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
1970களிலிருந்து இந்த சிகரெட்டுக் கம்பெனிகள் மனோரீதியாகவும், நடத்தை முறைகளாலும் பெண்களின் புகைக்கும் பழக்கங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றன. ஒரு கம்பெனி சிகரெட்டிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மாறுவோர்களைக் குறிவைத்து கம்பெனிகள் தங்கள் வடிவமைப்பை மாற்றியவண்ணம் இருந்தன, முக்கியமாக 1970க்கும் 90க்குமிடையே. இன்றளவும் சிகரெட்டுக் கம்பெனிகள் பெண்களையே குறிவைக்கின்றன, ஆனால் இவர்களது உத்திகள் பலதரப்பட்டவையாகவும், எளிதில் அடையாளம் காணப்பட இயலாதனவாகவும் இருக்கின்றன.
சிகரெட் கம்பெனிகளின் இந்த நடத்தை வளரும் நாடுகளிலிருக்கும் நலத் துறையாளர்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துகின்றன. ஏனென்றால் வளரும் நாடுகளில் ஆண்களின் புகைப் பழக்கம் குறைந்து வரும் அதே நேரத்தில், பெண்கள் புகைப்பது குபுகுபுவென்று ஏறிக்கொண்டே செல்கிறது. அதாவது 2025ம் வருடத்துக்குள் இன்னும் 20% பெண்கள் அதிகமாகப் புகைப்பார்களாம். இன்றைய நிலையில் புகைப்பதால் பெண்களுக்கு வரும் சுகாதாரக் கேடுகளுக்கு இந்தக் கம்பெனிகளின் தந்திரமே காரணமென்றும் இதனால் இன்னும் கேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதென்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
புகைக் கட்டுப்பாட்டுக்கு இன்னொரு ஆராய்ச்சியாளர் இந்த அழைப்பை விடுக்கிறார்: "பெண்களைப் புகைக்கு அடிமையாக்கும் வகையில் இந்தக் கம்பெனிகள் சிகரெட்டுகளை வடிவமைக்கின்றன என்று தெரிந்து விட்டது. இனி நாம் இந்த முயற்சிகளைத் தடுக்கவும், புகைப் பழக்கத்தை ஒழிக்கவும் ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இப்புகைக்கு, வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே நம் பெண்டிர் பலரைப் பலி கொடுத்தாயிற்று. இனியேனும் இந்தப் புதிய ஆராய்ச்சியின் முடிவுகளைப் பயன்படுத்தி, வளரும் நாட்டுப் பெண்கள் மடிவதைத் தடுக்க முற்படுவதே நம் தலையாய பணி."
தகவல்: Scienceblog
படம் நன்றி: Womenfitness
தலைப்பு: "இனியும் அழ வேண்டாம் சகோதரி", விவரணப் படத்தின் தழுவல்.
இனியும் புகைக்க வேண்டாம் சகோதரி!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இது பத்மா அரவிந்தின் முன்னுகை, சின்னப் பெட்டியில்! பரந்துபட்ட பார்வைக்காக இங்கே போட்டு வைக்கிறேன். கூடுதல் விபரங்களுக்கு நன்றி பத்மா.
"பெண்கள் சிகரேட்டுகளை வைத்துக்கொள்ள கூட உடைகளுக்கு ஏற்றாற்போல பல case வந்துவிட்டன. ஆணாயினும் பெண்ணாயினும் இது கெடுதல். அதிலும் குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு புகைப்பது அவர்களுக்கும் கெடுதல்.வர்ஜினியா சிலிம்ஸ் ஆராய்ச்சிக்காகவும் வியாபாரத்தை பெருக்கவும் செலவுசெய்யும் தொகை மிக பெரிது.
புகைப்பதால் உடல் மெலிவடையும் என்றே பதின்ம வயது பெண்கள் புகைக்க துவங்குகிறார்கள்."
Padma Arvind
சார் போட்டுவந்த லிப்ஸ்டிக் அழியாத அளவுக்கு சிகரெட்டின் வெளிப்புரம் அமைக்கபடுகிறதாம். நாமெல்லாம் தொழில்நுட்பத்தில் புரட்சி செய்பவர்கள். அப்புறம் எப்படி
நல்ல பதிவு. பண்பாட்டு சீரழிவாக இதை அணுகவில்லை என்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் அதிகமாக pasive smooking ஆல் பாதிக்கப்படும் பெண்களும் குழந்தைகளும் அதிகம்.
இன்னாமா புகை வுடுது.. நம்மால கூட முடியாது டோய்.. ! :)
நல்ல பதிவு !!
வீ .எம்
சுந்தரவடிவேல்,
ஜெர்மனியின் புகைக்கும் பெண்களின் சதவீதம் புகைக்கும் ஆண்களின் சதவீதத்தைவிட அதிகம்.
புகைப்பது பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் கெடுதல்தான். பெண்களுக்கு மட்டும் புத்தி சொல்லாமல் அனைவருக்கும் சொல்ல வேண்டும்.
தன்னை மதிக்காதவர்கள், நுணுக்கச் செயற்பாடுகள் கொண்ட அதிசய இயந்திரமான மனித உடலை appreciate பண்ணாதவர்கள் தான் அதற்குக் கெடுதலானதைச் செய்வார்கள் என்பது என் கருத்து!
Post a Comment