இளமையெனும் பூங்காற்று!

ஒங்களுக்கு நோயின்றி நீடூழி வாழ ஆசையா? அப்ப வாங்க, போன வாரம் வெளி வந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் பார்ப்போம். இந்தக் கட்டுரை பல வழிகள்ல முக்கியமானதா எனக்குத் தோணுது.

மொதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம ஒடம்புல இருக்க செல்லெல்லாம் தொழிற்சாலைகள் மாதிரி. விளைபொருளும் உற்பத்தியாகும், வேண்டாக் கழிவும் உற்பத்தியாகும். கழிவை நீக்குறது ஒரு ஊருக்கு எப்படி முக்கியமோ அப்படித்தான் செல்லோட கழிவை நீக்குறதும் ஆரோக்கியத்துக்கு முக்கியம். செல்லோட கழிவுன்னு எதைச் சொல்றேன்னா, கொஞ்ச நேரமே உயிரோட இருக்க, ஆனா துருதுருன்னு நாசவேலைகளைச் செய்யுற ஒரு விதமான வேதிப் பொருளை. இதனைக் கட்டிலா உருபுகள் (free radicals; கட்டு இல்லாத உருபுகள்; தமிழ்ல வேற எப்படிச் சொல்லலாம்?) என்று சொல்வார்கள்.

இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குவதற்கு செல்லுக்குள் நிறைய நொதிகள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினை எங்கே முளைக்கின்றதென்றால், இந்தக் கட்டிலா உருபுகள் அதிகமா உண்டாகும்போது, அல்லது குறைவா நீக்கப் படும்போதுதான். இதுவரைக்குமான ஆராய்ச்சில என்ன கண்டுபுடிச்சிருந்தாங்கன்னா புற்று நோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் இந்த மாதிரி நிறைய வியாதிகளுக்கு கட்டிலா உருபுகள் அதிகமா இருக்கதே காரணம் அப்படின்னு. அப்போ இவற்றைக் குறைச்சோம்னா இந்த வியாதிகள்லாம் வராதான்னு ஒரு கேள்வி கிளம்புது இல்லையா? அந்தக் கேள்விக்கான விடையைத்தான் இந்தப் புது ஆராய்ச்சிக் கட்டுரை சொல்லுது.

கேட்டலேஸ் (catalase) அப்படிங்கற நொதி இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குறதுல ஒரு முக்கியமான நொதி. இது ஹைட்ரஜன் பெராக்ஸைடைத் (hydrogen peroxide) தண்ணியாவும், ஆக்ஸிஜனாவும் மாத்துது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்துல இருக்க ஆராய்ச்சியாளருங்க என்ன செஞ்சாங்கன்னா, இந்த கேட்டலேஸ் நொதியை செல்லோட மூன்று இடங்கள்ல அதிகமா உருவாகச் செஞ்சாங்க. எங்கன்னா, ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியா(mitochondria), மரபு மூலக்கூறுகளை வச்சிருக்க உட்கரு(nucleus), அப்புறம் இந்த கேட்டலேஸ் உருவாகுற எடமான பெராக்ஸிசோம்(peroxisome).

இதையெல்லாம் எதுல செஞ்சாங்க, சுண்டெலியில. அப்போ அவங்ககிட்ட மூணு விதமான சுண்டெலிகளும், எந்த மாற்றமும் செய்யப் படாத ஒரு சுண்டெலி வகையும் இருந்துச்சு. சரி, இப்போ இந்த நாலு வகையிலயும் யாரு ரொம்ப நாள் இருக்கது, ஆரோக்கியமா இருக்கதுன்னு பாத்தாங்க. பாத்தா, ஆற்றல் சாலையில கேட்டலேஸ் நிறைய உருவாகுற சுண்டெலிகள் 20% காலம் அதிகமா இருந்துச்சாம் (உதாரணமா 100 வருசத்துக்குப் பதிலா 120 வருசம் மாதிரி). அதோட அந்த சுண்டெலிகளுக்கு இதய நோய், கண்புரை போன்ற நோய்கள் வருவதும் மத்த சுண்டெலிகளை விடக் குறைவா இருந்துச்சாம். ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியாவுலதான் நிறைய கட்டிலா உருபுகள் உருவாகறதும், அங்கதான் கேட்டலேஸோட வேலை அதிகமாத் தேவைப்படுறதும்னும் தெரியுது.

இப்போ இது எப்படி நமக்கு முக்கியம்? தமிழர்களின் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப் படும் நிறைய மருந்துகளுக்கு இத்தகைய கட்டிலா உருபுகளைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இது அனேகமாக சீன மருத்துவம் உட்பட கீழைநாட்டு மருத்துவ முறைகள் பலவற்றுக்கும் பொதுவானது. கட்டிலா உருபுகளைக் குறைப்பதன் மூலம் உடம்பின் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது கீழை மருத்துவத்தின் முக்கியமான கூறு. இத்தகைய பண்பு அகத்திக்கீரை, ஆவாரை தொடக்கம் வெட்டி, வேம்பு என்று சகலத்திலும் காணப் படுவதால் நம் நாட்டு உணவு வகைகளுக்கும் அந்தப் பண்பு இருக்கும். உணவே மருந்து என்பதும் நம் பார்வைகளில் ஒன்று. அதனாலேயே திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உணவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆக, இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாக நம்மிடம் இருக்கும் மருத்துவ/உணவுச் செல்வங்களின் மதிப்பு நமக்கு அதிகம் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. நல்லாச் சாப்பிடுங்க, நல்லாயிருங்க!

தொடர்புடைய சுட்டி

7 comments:

said...

/உணவே மருந்து என்பதும் நம் பார்வைகளில் ஒன்று/
இது மெய்யாகவே உடல் கொழுப்பெடுத்து உறுத்துகிற இப்பொழுது புரிகின்றது.

said...

//கொழுப்பெடுத்து//
அதான் தெரியுதே:))

உங்களுக்குப் பிடித்த டீ, முக்கியமாய் பச்சை டீ (அலாஸ்காவில் ரசிகர் மன்றம் ஒன்று இருக்கிறது!) இந்த free radicals ஐ அழிப்பதோடு பசியெடுத்தலையும் குறைக்குமென நம்பப் படுகிறது! நான் இப்போவெல்லாம் காப்பிக்குப் பதில் டீயைத்தான் உறிஞ்சுகிறேன்!

said...

நல்ல பதிவு தம்பி. இதை இந்த விக்கிபீடியாவுல போடு.

free radicals- தளையற்ற உருபுகள் ?

பச்சைக் காய்கறிகள், பழங்கள் கொண்ட உணவும் இந்த கட்டிலா உருபுகளை சுத்தம் செய்வதாகப் படித்தேன்.
பச்சைத் தேநீர் அருந்துகிற மக்கள் நீடுழீ வாழ்க.

said...

//நல்லாச் சாப்பிடுங்க, நல்லாயிருங்க!// நல்லாயிருக்க நல்லதைச் சாப்பிடுங்க ;-)

said...

//தளையற்ற//
இது மாதிரியான வார்த்தையை வெங்கட் போன்றோர் தளையறு (open source) மென்கலனில் பயன்படுத்துகிறார்கள். எனவே அது இங்கே ஒத்து வராதோ எனத் தோன்றியது. இராம.கி அவர்களின் புறத்திட்டு பதிவில் கேட்டிருக்கிறேன்.
நன்றி தங்கமணி, ராதா!

said...

சுந்தரவடிவேல்
பச்சை நிற தேநீரில் உள்ள நொதி 'G2- cell phase தடுப்பதாலும் புற்றுநோய் குறைக்க வல்லதாக அறியப்படுகிறது.
free radicalsகுறைக்கும் தன்மையுள்ளதால் முக சுருக்கமின்றி பொலிவிடும் மாறும் என்றும் சொல்லாமல் விட்டதேனோ!!

said...

//முக சுருக்கமின்றி பொலிவிடும் மாறும்//
ஆ, அப்படியா, இனி பாருங்க :))
நன்றி பத்மா!