வணக்கம்!
நானொரு நூலகம். அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கல்வி நூலகம். ஸ்டெர்லிங் மரணிக்கும் முன்னர் எனக்காக விட்டுச் சென்ற பெருந்தனத்துக்காக அவர் பெயரையே நான் சூடியிருக்கிறேன். 1930ல் நான் கட்டப் பெற்றேன். என் மாடங்கள், சாளரங்கள், கதவுகளெங்கும் சிற்பங்களும், ஓவியங்களும். என்னை உருவாக்கப் புத்தகம் சுமந்து வந்த மாட்டு வண்டியிலிருந்து, என் நாட்டின் வரலாறு உட்பட உலகத்துக் கலாச்சாரங்களை இவ்வேலைப்பாடுகள் பேசும். இவை என் நாட்டு வரலாற்றின் பதிவுகள். கலாச்சாரத்தின் கடைசல்கள். நான் இந்த மக்களின் பெருமை. என்னை இவர்கள் பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறார்கள். பாட்டரைக் காணும் பேரக்குழந்தைகளைப் போல் இவர்கள் வந்து தொட்டுப் பார்க்கிறார்கள். ஒட்டி நின்று புன்னகைக்கிறார்கள். தூணின் விளிம்பில் சின்னச் சிதிலமென்றாலும் பக்குவமாய் மீட்டுருக் கொடுக்கிறார்கள். இவர்கள் என் பிள்ளைகள். இவர்களது காவல் என் பெருமை. வந்தமரும் பறவைகள் பழங்களை உண்டபடி விதைகள் எங்கெங்கோ முளைக்கின்றனவென்று பேசிக் கொள்கின்றன. சூழ்வெண்பனிக் காற்றிலும், வசந்த காலத்தின் வெம்மையிதத்திலும் அவர்கள் என்னைச் சுற்றிப் பாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இசையில் நான் மோனத்திலிருக்கிறேன்.
_______________________________________________
வணக்கம்.
நானொரு நூலகம். 1930களில்தான் நானும் செல்லப்பாவின் சிந்தையிலும் யாழ்ப்பாணத்திலொரு சிறு வீட்டறையிலும் உருப் பெற்றேன். தாகம் கொண்டோர் பெருகப் பெருக என் குடியிருப்பைப் பெரிய வீடுகளுக்கு மாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கும் பிள்ளைகளுண்டு. அவர்களுக்கும் என்னைப் பற்றிய பெருமையுண்டு. பொருளும் திறனும் திரட்டி என்னை இங்கே இருத்தினர். என் தூண்கள் அழகியன. என் கோபுரம் தமிழின் இருப்பை ஓங்கிச் சொன்னது. என் பெட்டகங்களில் எத்தனையோ குரல்களிருந்தன. 97,000 புத்தகங்களென்று யாரோ கணக்கெழுதினார்கள். 1981, மே 31/ஜூன்1ல் சிங்களக் காவல் துறை வந்தது. அந்த இருளில் பெட்ரோல் வெளிச்சத்தில் தமிழ் படிக்க ஆசைப் பட்டது போலும். அந்த இரவின் முடிவில் என்னில் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. கல்லும் தூணுமாய் நான் இன்னும் இருக்கிறேன், என் தீக்காயங்களோடும், என்னைச் சுற்றிலும் தமக்குள்ளேயே சண்டையிட்டு மடியும் என் பிள்ளைகளோடும்.
தொடர்புடைய சுட்டிகள்:
ஸ்டெர்லிங் நினைவு நூலகம், யேல் பல்கலைக் கழகம்.
யாழ் பொது நூலகம் நினைவாக (படம் நன்றி).
யேலும் யாழும்
Posted by சுந்தரவடிவேல் at 10 comments
மதுநமக்கு
மதுநமக்கு, மதுநமக்கு, மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு, மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும், மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு மண்ணு நீரும், மதுநமக்கு மலையெலாம்;
மதுநமக்கொர் தோல்விவெற்றி, மதுநமக்கு வினையெலாம்
மதுநமக்கு மாதரின்பம், மதுநமக்கு மதுவகை
மதுநமக்கு மதுநமக்கு, மதுமனத்தொ டாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.
-மகாகவி சுப்ரமணிய பாரதியார்.
படம்: ஒரு விளம்பரப் பலகை, நியூயோர்க்.
Posted by சுந்தரவடிவேல் at 0 comments
காய் கவர்ந்து விற்றல்!
அப்னா சப்ஜி மண்டி, ஜாக்ஸன் ஹைட்ஸ், நியூயோர்க்.
Posted by சுந்தரவடிவேல் at 4 comments
ஏலே ஏலேலே!
அப்பாம்மா, குடும்பம் குட்டிகளோடு கறுப்பு அங்கி, குஞ்சமாடும் குல்லாய்களோடு புதுப் பட்டதாரிகள். வெளியெங்கும் ஆரவாரமாய் மக்கள். இன்றைக்கு ஏல் பல்கலையில் பட்டமளிப்பு விழா. 304வது வருடம்! சென்னை கவர்னரா இருந்த இலைகு ஏல் (இவரைப் பற்றித் தனியாக ஒரு நாள்) என்பவரின் நிதியுதவியால் ஒரு கல்லூரியாக 1700களின் ஆரம்பத்தில் தொடங்கப் பட்டது இப்பல்கலைக் கழகம். இன்றைக்குப் பல்வேறு துறைகளிலும் சுமார் 3000 மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு புலத்திலும் தனித் தனியாக விழா.
நான் கண்டது மருத்துவப் பள்ளியில். பல்கலைக்கொரு கரவொலி, துணையாயிருந்த குடும்பத்தினருக்கு ஒரு கரவொலி, பாடம் நடத்திய ஆசிரியர்களில் யார் சிறந்தவர் என்று மாணவர்கள் மதிப்பிட்டு அந்த ஆசிரியர்களுக்கு விருதுகள்.
சிறப்புரைக்கு ஒரு விருந்தினர், ஜொய்ஸ்லின் எல்டர்ஸ் (Joycelyn Elders). இவர் அமெரிக்காவின் முன்னாள் பெருமருத்துவர் (Surgeon General of the USA). க்ளிண்டனால் நியமிக்கப் பட்டவர். இப்பதவிக்கு வந்த இரண்டாவது பெண்மணியும், முதல் கறுப்பரினத்தவரும். பருத்தியெடுக்கும் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, எத்தனையோ நிறப் பாகுபாடுகளைச் சந்தித்துத் துணிச்சலுடன் ஏறி வந்திருப்பவர். ஏழைகள், குழந்தைகள் ஆகியோரின் சுகாதாரத்துக்காக ஓயாது குரலெழுப்பியவர். பதின்ம வயதுக் கர்ப்பம், பாலியல் தொற்று நோய்கள் போன்றவற்றைக் குறைக்கப் பள்ளிகளில் பாலியல் கல்வி வேண்டும், கருத்தடைச் சாதனங்களைப் பள்ளியில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று முழங்கி கன்சர்வேட்டிவ்களுக்குப் புளியைக் கரைத்தவர். இவ்விதமான தடாலடிப் பேச்சுக்களால் வற்புறுத்தலின் பேரில் பதினைந்தே மாதங்களில் பெருமருத்துவர் பதவியிலிருந்து விலகினார். இவரே தமக்குப் பட்டமளிக்கையில் பாராட்டுரை வழங்க வேண்டுமென்று மாணவர்கள் தேர்வு செய்திருந்தார்கள். ஆமாம், மாணவர்களின் விருப்பப் படியே இந்த விருந்தினர் அழைக்கப் படுவார்.
எல்டர்ஸின் உரையில் முக்கியமாகக் குறிப்பிடப் பட்டது எல்லோருக்கும் நலத்தைப் போதியுங்கள், அவர்களுக்குச் சுகாதார அறிவு கிடைக்கச் செய்யுங்கள், எண்ணற்ற குழந்தைகள் அன்பும் அரவணைப்புமின்றி இருக்கிறார்கள், உணவின்றிப் பசியோடு உறங்கச் செல்கிறார்கள், அவர்களைக் காக்க முயலுங்கள். முழக்கமாயிருந்தது அவர் பேச்சு. கறுப்பு அங்கிகளும், இவரது ஆளுமையும் மனசில் மோதிக் கிடக்கின்றன. பட்டம் சூட்டிக் கொண்டோருக்கு நம் பாராட்டுக்கள். அப்படியே நம் வலை வெளியில் இருக்கும் புதுப் பட்டதாரிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்!
படம் நன்றி: Fred
Posted by சுந்தரவடிவேல் at 16 comments
இன்று தமிழீழ நாள்!
மே 22ஐ தமிழீழ நாளாக அறிவித்து மாசசூசெட்ஸ் மாநில அவையில் 1979ம் ஆண்டு ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மாசசூசெட்ஸ் இதை இப்போதும் கடைபிடிக்கிறதா என்று அறிந்தவர்கள் கூறவும். இது நிறைவேற முக்கியக் காரணமாக இருந்தவர் மரி எலிசபெத் ஹோவே. இவர் இன்றளவும் தமிழர்கள் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்பதிலும், அவர்களுக்குத் தனிநாடு ஒன்றே தம் உரிமைகளைக் காத்துக் கொள்ளும் வழி என்பதிலும் உறுதியாயிருக்கிறார். இவரைப் பேட்டி கண்ட ஆசியா ட்ரிப்யூனி்ன் தயா கமகே புலிகளைப் பற்றி இவரது வாயைக் கிளற எவ்வளவோ முயன்றிருப்பது தெரிகிறது. ஆனாலும் ஹோவே, தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாயிருக்கிறார். இலங்கையில் ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னான சிங்கள ஒடுக்குமுறை வரலாற்றை இத்தீர்மானம் சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
கட்டுரையைத் தமிழாக்கிப் போட நேரமில்லாத நிலை. அதனால் சுட்டி: ஆசியா ட்ரிப்யூன்.
Posted by சுந்தரவடிவேல் at 11 comments
அந்தப் பிள்ளை!
சில்லு விளையாட்டின் மேல்
வண்டியோட்டியவனை
விரட்டியபடி
அல்லது
இடுப்பில் தம்பியோடு
எலந்தைப் பழம் பொறுக்கியபடி
இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்
சிறிய மண்சாலைத் தெருக்களில்
இவளை நீங்கள்
கண்டிருக்கக் கூடும்.
அன்றைக்கு இவள்
அந்தக் கல்யாண வீட்டுக்கு
வந்திருந்தாள்.
Posted by சுந்தரவடிவேல் at 12 comments
எவ்வழி வந்தோம்?
உங்களுக்குக் கற்பனை செய்யத் தெரியுமா? அப்படின்னா என்னோடு வாங்க. ஒரு 150,000 வருசத்துக்கு முந்தி போவோம். இது ஆப்பிரிக்கா. நாமதான் இந்தப் பூமியோட புது மனுசங்க. இப்ப நாம கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர ஆரம்பிக்கிறோம். இதோ இந்தக் கிழக்காப்பிரிக்கக் கடற்கரையோரமாவே வடக்கே போறோம். ஆயிரமாயிரமா வருடங்கள் கடக்குது. நம்ம புள்ளை, அதுக்குப் புள்ளை எல்லாம் நம்மள மாதிரியே நடந்துகிட்டே இருக்கு. செங்கடல் வருது. மேற்கே போக முடியாது, பாலை. செங்கடல் சின்னதாத்தான் தெரியுது. நமக்கு ஓடம் கட்டத் தெரியும். நாம் ஓடம் கட்டி அந்தக் கடலைக் கடக்குறோம். அரேபியப் பிரதேசம் வருது. இங்கேயும் வடக்கேயோ மேற்கேயோ போக முடியலை. வெப்பம். மெல்லக் கடற்கரையோரமாவே போய்க்கிட்டு இருக்கோம். பாதையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளையும் தலைமுறைகளையும் ஒழித்துவிட்டு இந்தியாவுக்கு வருகிறோம். வழியெங்கும் நம் தடங்களை விட்டுக் கொண்டே வருகிறோம். இந்தியாவையும் மெல்லத் தாண்டி அந்தமான் நிகோபார், மலேசியா, ஆஸ்திரேலியா வரை நாம் வந்து விட்டோம்.
ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...........
இப்படித்தான் இருந்திருக்குமாம் மனித இனத்தின் பயணம். இது ஓரளவுக்கு ஒத்துக் கொள்ளப் பட்டதும் தெரிஞ்சதும்தான். ஆனா சரியாத் தெரியாதது என்னன்னா, ஆப்பிரிக்காவுலேருந்து வடக்கு முகமாகக் கிளம்பின கூட்டம் வடக்கே நைல் நதி, ஐரோப்பான்னு போயிட்டு இந்தியா பக்கம் வந்துச்சா (கீழேயிருக்க படத்துல பாருங்க) அல்லது செங்கடலைக் குறுக்கே தாண்டி இந்தியா பக்கம் போச்சான்னு தெரியாம இருந்துச்சு. ஐரோப்பாவில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் வெறும் 45,000ஆண்டுகளுக்கு முற்பட்டவையே. மேலும் இந்த இடம்பெயர்வின் போது அங்கு பாலையின் வெப்பநிலையிருந்ததால் கூட்டம் தெற்கே நகரத்தான் அதிகம் வாய்ப்பிருந்திருக்க வேண்டும். இப்போதைய ஆராய்ச்சிகளின் முடிவு இந்த செங்கடல்-இந்தியப் பாதை ஊகத்தை மேலும் நிச்சயப்படுத்துகிறது.
சுமார் 65,000-70,000 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்குள் இந்த மனித இனம் வந்திருக்கலாம். இங்கிருந்து கிளம்பி அந்தமானுக்குச் சென்ற கூட்டங்களில் ஒன்று அங்கேயே மாட்டிக் கொண்டு இத்தனைக் காலமும் அங்கேயே இருந்திருக்கிறது. நிக்கோபார் தீவிலிருப்பவர்கள் சீனர்களைப் போலிருக்க, அந்தமானில் இருக்கும் இந்த இனம் (அந்தமானீஸ், ஒங்கே, கிரேட் அந்தமானீஸ் குடிகள்) எப்படி ஆப்பிரிக்கர்களை மாதிரி இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. யாருக்கு? ஐதராபாத் தங்கராஜுக்கும்(Centre for Cellular and Molecular Biology) கூட்டாளிகளுக்கும். அந்த இனக்குழுக்களின் இரத்த செல்களிலிருந்து மைட்டோகாண்டிரியா எனும் அறைக்குள் இருந்த மரபணுவைப் (mitochondrial DNA, சுருக்கமாக mtDNA) பரிசோதித்தார்கள்.
இந்த மரபணுவின் சிறப்பு என்னன்னா, இது அம்மாகிட்டேருந்து மட்டுந்தான் பிள்ளைகளுக்குப் போகும். அப்பாகிட்டேருந்து போவாது. அதனால இதிலிருக்கும் மரபு மூலக்கூறு வரிசையை வச்சு அம்மம்........ம்மாவுக்கு அம்மாச்சிக்கு அம்மாயி யாருன்னு சொல்லலாமாம். கிட்டத்தட்ட 150,000 வருசத்து அம்மா வழிக் கதையெல்லாம் தெரிய வாய்ப்பு இருக்காம். இந்த வகையில பாத்தா அந்தமான் காரங்களோட பூர்வீகம் ஆப்பிரிக்கான்னு தெரிஞ்சது. இத வச்சு தலைமுறைக் கணக்குப் போட்டுப் பாத்தாரு தங்கராஜ். கிட்டத்தட்ட 50,000-70,000 வருசத்துக்கு முந்தி இந்த ஆளுக அந்தமானுக்கு வந்திருக்கனும்னு கணிச்சாரு. அப்படின்னா 45,000-50,000 ஆண்டுகளே பழமையான ஐரோப்பிய இனத்திலிருந்து இந்த இந்திய-அந்தமான் இனம் வந்திருக்காது என்பதாகத்தானே அர்த்தம்?
இதே மாதிரிதான் மெக்காலேன்னு ஒருத்தரு (ஸ்காட்லாந்து, க்ளாஸ்கோ பல்கலைக்கழகம்) மலேசியாவுல இருக்க ஓரங் அஸ்லி (Orang Asli) பழங்குடி மக்கள்கிட்ட இதே மாதிரி ஆராய்ச்சி பண்ணி அவங்க 64,000 வருடங்களுக்கு முந்தி மலேசியாவுக்கு வந்திருக்கலாம்னு கணிச்சாரு. இதுவும் வடக்கு நோக்கிய இடம் பெயர்தலை சாத்தியப் படுத்தாமல் செங்கடல்-இந்தியப் பாதைக்கே வலுச் சேர்க்கிறது. இவங்களோட வழித் தோன்றல்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கும் சுமார் 63,000 வருசங்களுக்கு முந்தி போயிருக்காங்களாம். இந்த மக்கள் ஒரு வருசத்துக்கு 4 கிலோமீட்டர் இடம் பெயர்ந்திருக்காங்கன்னு சொல்றார் மெக்காலே. அப்போ ஆப்பிரிக்காவுலேருந்து மனுசப் புள்ள கிளம்பிப் போன பாதையைக் கோடு போட்டம்னா இப்புடி வருதாம்.
இதுல Sinai வழியாப் போகாம செங்கடலைத் தாண்டிய வழித்தடம் இருக்கு பாருங்க, அது வழியாத்தான் நாமெல்லாம் வந்தோம்னு இந்த ஆராய்ச்சி சொல்லுது. இப்பதிவை நாராயணனின் "மனித இனத்தின் வரலாறு" பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். இனி வரும் ஆராய்ச்சிகளில் இந்திய இனக் குழுக்களையும் அவர்களின் குடியேறுதல் பற்றியும் மென்மேலும் அறிவியல் சார்ந்த விளக்கங்கள் கிடைக்கக் கூடும். இதிலிருக்கும் தங்கராஜ் மற்றும் மெக்காலேயின் கட்டுரைகள் மே 13ம் தேதியிட்ட Science பத்திரிகையில் (படம் நன்றி). முழுக்கட்டுரை வேண்டுமெனில் கேளுங்கள் தரப்படும்! இக்கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே காணலாம்: National Geographic.
பிற்சேர்க்கை: ரோசாவசந்த் சுட்டிக்காட்டியதன் பேரில் இப்பதிவோடு தொடர்புடைய இன்னும் இரண்டு பதிவுகள்:
1. அனாதை ஆனந்தன்
2. மாண்ட்ரீஸர் எழுதிய "மொட்டை பிளேடு"
Posted by சுந்தரவடிவேல் at 16 comments
ஒரு நண்பிக்கு!
முற்று முழுதாய் எனக்கேயாய்
வரப்புகளின்றிப் பரந்த நேரம்
இப்போது அலையடித்து நீர்கலக்கும்.
குளிர்க் காற்றில் அவசரமாய்
இழுத்து விட்ட விடுதலை மூச்சில்
நுரையீரல் உறைகிறது.
பெருவாயிலொன்றில் யாரோ
நடந்துள் மறைகின்றார்
உன்னைப் போலே.
சிறுமகவைக் கைப்பிடித்து
நடக்கின்றாள் தாயொருத்தி.
போகட்டும்,
இவையெல்லாம் பெருநடை நடந்தும்
கடக்க முடியா என் வெளியில்.
நீ நலமா?
நம் மகனைக் கேட்டதாகச் சொல்!
Posted by சுந்தரவடிவேல் at 16 comments
மறந்திருந்த விளக்கு
ஊரில் ஒரு நாள்
மின்சாரம் ஒழிந்த இருளில்
மண்ணெண்ணெய் மணத்துடன்
துலங்கிய வெளிச்சமொன்று.
Posted by சுந்தரவடிவேல் at 10 comments
கருப்பன்
அம்மா சொல்லும் வரை உணராமலிருந்தேன், இப்போது ஊரில் கோடை விடுமுறையென்பதை. திருவிழாக்களின் காலம். ஒன்னு போன வாரம் முடிஞ்சு போச்சு. கருப்பையா கோயில். சுட்டுத் தகிக்கும் வெய்யில். சுற்றியாடும் காவடிகள். கூட்டங் கூட்டமாய்ப் போகும் மக்களின் சத்தம். கொட்டும் பறையும் மேளமும். காவடி, பால்குடம், கரும்புத்தொட்டி எல்லாருக்கும் தண்ணி கொண்டுபோய் ஊத்தனும். தார் ரோடு, ஆடும் சாமிக்குச் சுடும். வற்றாத பொய்கை வளநாடு கண்டு மயில்மேலிருந்த குமரா... யாரோ உச்சக் குரலில் பாடுவார்கள். அரோகரா என்கும் கூட்டம். கூட்டத்தில் நானுமிருந்தேன். உற்றாரெனக்கு ஒருபேருமில்லை உமையாள்தனக்கு மகனே...அரோகரா. சித்தப்பாவுக்கு சாமி ஒடனே வந்துரும். சில பேருக்கு நிறைய பாடணும். விரதம் ஒழுங்கா இருந்திருக்கனும். புள்ளையார் கோயில்ல கிளம்புற காவடி கருப்பையா கோயிலுக்கு வரும். வரும் வழியில் சில தண்ணீர்ப்பந்தல்கள். தங்கமணி வீட்லயும் ஒன்னு இருக்கும். பானகம், தாளிச்ச நீர்மோர். எத்தனைக் காவடிகளின் பின்னாலோ யார் கண்டது. எங்க இந்தப் பய, அடேய் சாப்புட்டாச்சும் போடா. ம்ஹ¥ம். காவடிக்கு ஊத்துற தண்ணியில் கால் நனைத்துக் கொண்டு ஓடிக் கொண்டேதானிருந்தேன். தினமும் குளித்துவிட்டுக் கிட்ட நின்று பார்க்கும் சாமிதானென்றாலும் இன்றைக்குக் கல்யாண மாப்பிள்ளை மவுசு கருப்பருக்கு. அண்ட முடியாக் கூட்டமாயிருக்கும். நாளின் முடிவில் வள்ளித் திருமணமோ, பவளக் கொடியோ. முடிந்தது. திருவிழாக் கடைகளையெல்லாம் யாரோ பிரித்து கொண்டு போகிறார்கள்.
நான் ஊருக்குப் போயிருந்தபோது விசாரித்து வரப் போயிருந்தேன். சுகந்தான் என்று முறுக்கிய மீசையும் அரிவாளுமாய் அதே பார்வை பார்த்தார். அவர் குதிரைகளுக்கெல்லாம் புது வண்ணமடித்திருக்கிறார்களாம். சொன்னார். எனக்குப் புது மணி, மோளமெல்லாம் வாங்கிருக்காங்கய்யா, ஆமா, ஐயர் தீவாராதன காட்றப்ப சுச்சு போடுவார், கரண்டுலயே அடிக்கும். பார்த்தேன்.
சுருட்டு வாங்கியாறவான்னேன். இல்ல இப்பல்லாம் வாழப்பழமும் தேங்காயுந்தான். கொம்புக்காரனுக்கும் ஒரு ரூமு கட்டிக் குடுத்திருக்குன்னார், ந்தா அங்கெ. கிளம்பினேன். அடுத்து எப்ப வருவன்னார். தெரியாது கருப்பா. என் கருப்பன் ஒரு வெகுளி, அப்படியேதானிருக்கிறான்.
கருப்பனைப் பற்றித் தங்கமணியின் முந்தைய பதிவொன்று.
Posted by சுந்தரவடிவேல் at 10 comments
செம்மஞ்சள் சரக்கு
ஒடம்பு நாஞ் சொல்றதக் கேக்க மாட்டேங்குது. சோம்பேறித்தனம் கூடிப்போச்சு. அதுவா நானான்னு காலையில ஒரு முடிவா எந்திரிச்சு நிலைமிதிவண்டியைச் சுத்துனேன். பிபிசி தமிழோசை கேட்டுக்கிட்டே. கடைசியில் வந்த அனைவருக்கும் அறிவியலிலிருந்து என்னைத் துணுக்குற வைத்தது ஒரு துணுக்கு. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் படித்தது இது:
வியட்நாமியப் போரின் போது 1961லிருந்து 1971 வரைக்கும் அமெரிக்கா வியட்நாமின் மீது ஒரு வேதிப்பொருளைத் தெளித்தது. கொரில்லாப் போராளிகள் காடுகளுக்குள் ஒளிந்திருந்து தாக்கியதால் அடர்ந்த காடுகளின் இலைகளை அழிப்பதற்காகத் தெளிக்கப் பட்டது இது. இது செம்மஞ்சள் நிறமடித்த உலோகப் பீப்பாய்களில் இருந்ததால் செம்மஞ்சள் சரக்கு (Agent orange) என்றழைக்கப் பட்டது. இது சுமார் 72 மில்லியன் லிட்டர்கள் வியட்நாமில் தெளிக்கப் பட்டது. இதில் 170 கிலோ அளவுக்கு டயாக்ஸின் (dioxin) என்ற நச்சு இருந்திருக்கும்.
டயாக்ஸின் புற்று நோய்கள் உட்பட பல்விதமான கேடுகளை உண்டாக்கும் ஒரு நச்சு. போர் முடிந்து 30 வருடங்களாகியும் நீக்கப்படாத வெடிகுண்டுகள் ஒருபுறமிருக்க, மண், மரம், தண்ணீர் என்று உணவுச்சங்கிலியில் கலந்திருக்கும் இந்த நச்சு, இருக்கும் மக்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு சுகாதாரக் கேடுகளை உருவாக்குகிறது. இதே நச்சினால் தாமும் பாதிக்கப் பட்டிருப்பதாக வியட்நாமில் போர் புரிந்த முன்னாள் அமெரிக்கப் போர் வீரர்களும் அரசிடம் ஏற்கெனவே முறையிட்டிருக்கிறார்கள். இதைத் தயாரித்த டவ் (Dow) கெமிக்கல்ஸ் எல்லா விபரீதங்களையும் தெரிந்தே இதைச் செய்திருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
நான் பல்கலைக்கு வரும் வழியில் முன்னாள் போர் வீரர்களுக்கான மருத்துவமனையொன்று இருக்கிறது. தினமும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் குடாப் போர் நோய்க்குறி (gulf war syndrome), மனோவியல் பாதிப்புகள் என்றெல்லாம் யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. இன்றைக்கு வரும்போது செம்மஞ்சள் சரக்கையும் நினைத்துக் கொண்டேன்!
Posted by சுந்தரவடிவேல் at 24 comments
இளமையெனும் பூங்காற்று!
ஒங்களுக்கு நோயின்றி நீடூழி வாழ ஆசையா? அப்ப வாங்க, போன வாரம் வெளி வந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் பார்ப்போம். இந்தக் கட்டுரை பல வழிகள்ல முக்கியமானதா எனக்குத் தோணுது.
மொதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம ஒடம்புல இருக்க செல்லெல்லாம் தொழிற்சாலைகள் மாதிரி. விளைபொருளும் உற்பத்தியாகும், வேண்டாக் கழிவும் உற்பத்தியாகும். கழிவை நீக்குறது ஒரு ஊருக்கு எப்படி முக்கியமோ அப்படித்தான் செல்லோட கழிவை நீக்குறதும் ஆரோக்கியத்துக்கு முக்கியம். செல்லோட கழிவுன்னு எதைச் சொல்றேன்னா, கொஞ்ச நேரமே உயிரோட இருக்க, ஆனா துருதுருன்னு நாசவேலைகளைச் செய்யுற ஒரு விதமான வேதிப் பொருளை. இதனைக் கட்டிலா உருபுகள் (free radicals; கட்டு இல்லாத உருபுகள்; தமிழ்ல வேற எப்படிச் சொல்லலாம்?) என்று சொல்வார்கள்.
இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குவதற்கு செல்லுக்குள் நிறைய நொதிகள் இருக்கின்றன. ஆனால் பிரச்சினை எங்கே முளைக்கின்றதென்றால், இந்தக் கட்டிலா உருபுகள் அதிகமா உண்டாகும்போது, அல்லது குறைவா நீக்கப் படும்போதுதான். இதுவரைக்குமான ஆராய்ச்சில என்ன கண்டுபுடிச்சிருந்தாங்கன்னா புற்று நோய், இதய நோய்கள், நீரிழிவு நோய் இந்த மாதிரி நிறைய வியாதிகளுக்கு கட்டிலா உருபுகள் அதிகமா இருக்கதே காரணம் அப்படின்னு. அப்போ இவற்றைக் குறைச்சோம்னா இந்த வியாதிகள்லாம் வராதான்னு ஒரு கேள்வி கிளம்புது இல்லையா? அந்தக் கேள்விக்கான விடையைத்தான் இந்தப் புது ஆராய்ச்சிக் கட்டுரை சொல்லுது.
கேட்டலேஸ் (catalase) அப்படிங்கற நொதி இந்தக் கட்டிலா உருபுகளை நீக்குறதுல ஒரு முக்கியமான நொதி. இது ஹைட்ரஜன் பெராக்ஸைடைத் (hydrogen peroxide) தண்ணியாவும், ஆக்ஸிஜனாவும் மாத்துது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்துல இருக்க ஆராய்ச்சியாளருங்க என்ன செஞ்சாங்கன்னா, இந்த கேட்டலேஸ் நொதியை செல்லோட மூன்று இடங்கள்ல அதிகமா உருவாகச் செஞ்சாங்க. எங்கன்னா, ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியா(mitochondria), மரபு மூலக்கூறுகளை வச்சிருக்க உட்கரு(nucleus), அப்புறம் இந்த கேட்டலேஸ் உருவாகுற எடமான பெராக்ஸிசோம்(peroxisome).
இதையெல்லாம் எதுல செஞ்சாங்க, சுண்டெலியில. அப்போ அவங்ககிட்ட மூணு விதமான சுண்டெலிகளும், எந்த மாற்றமும் செய்யப் படாத ஒரு சுண்டெலி வகையும் இருந்துச்சு. சரி, இப்போ இந்த நாலு வகையிலயும் யாரு ரொம்ப நாள் இருக்கது, ஆரோக்கியமா இருக்கதுன்னு பாத்தாங்க. பாத்தா, ஆற்றல் சாலையில கேட்டலேஸ் நிறைய உருவாகுற சுண்டெலிகள் 20% காலம் அதிகமா இருந்துச்சாம் (உதாரணமா 100 வருசத்துக்குப் பதிலா 120 வருசம் மாதிரி). அதோட அந்த சுண்டெலிகளுக்கு இதய நோய், கண்புரை போன்ற நோய்கள் வருவதும் மத்த சுண்டெலிகளை விடக் குறைவா இருந்துச்சாம். ஆற்றல் சாலையான மைட்டோகாண்ட்ரியாவுலதான் நிறைய கட்டிலா உருபுகள் உருவாகறதும், அங்கதான் கேட்டலேஸோட வேலை அதிகமாத் தேவைப்படுறதும்னும் தெரியுது.
இப்போ இது எப்படி நமக்கு முக்கியம்? தமிழர்களின் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப் படும் நிறைய மருந்துகளுக்கு இத்தகைய கட்டிலா உருபுகளைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இது அனேகமாக சீன மருத்துவம் உட்பட கீழைநாட்டு மருத்துவ முறைகள் பலவற்றுக்கும் பொதுவானது. கட்டிலா உருபுகளைக் குறைப்பதன் மூலம் உடம்பின் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பது கீழை மருத்துவத்தின் முக்கியமான கூறு. இத்தகைய பண்பு அகத்திக்கீரை, ஆவாரை தொடக்கம் வெட்டி, வேம்பு என்று சகலத்திலும் காணப் படுவதால் நம் நாட்டு உணவு வகைகளுக்கும் அந்தப் பண்பு இருக்கும். உணவே மருந்து என்பதும் நம் பார்வைகளில் ஒன்று. அதனாலேயே திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உணவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆக, இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாக நம்மிடம் இருக்கும் மருத்துவ/உணவுச் செல்வங்களின் மதிப்பு நமக்கு அதிகம் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. நல்லாச் சாப்பிடுங்க, நல்லாயிருங்க!
தொடர்புடைய சுட்டி
Posted by சுந்தரவடிவேல் at 7 comments
ராம்லீலா
நேற்று ஒரு கூட்டத்துக்குப் போனேன்.உலகக் கலாச்சாரங்களைப் பற்றியவொன்று. அறைக்குள் நுழைந்த போது கரும்பலகையில் இப்படியொரு படத்தை வரைந்து கொண்டிருந்தார் ஒருவர்.
அவர் புகழ் பெற்ற நாடக ஆராய்ச்சியாளர் (Performance Studies, நிகழ்வியல் என்று சொல்லலாமா?) ராபர்ட் ஷெக்னர் (Robert Schechner). அவர்தான் முதலில் பேச வந்தார். இராமாயணம் என்னையும் உங்களையும் இன்னொரு முறை பிடித்துக் கொள்கிறது! அவரது உரையின் தலைப்பு:'Ramlila of Ramnagar: Religion and Politics and Performance'. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் காசிக்கருகிலுள்ள ராம்நகரில் நடக்கும் ராம்லீலா எனும் நாடகத்தினைப் பற்றியும் அது சார்ந்த அரசியலைப் பற்றியும் பேசினார். பேச்சின் சாரம் உங்களுக்கு:
"ராம்லீலா என்றால் என்ன?
ராம்லீலா என்பது காசிக்கருகிலிருக்கும் ராம்நகரில் 31 நாட்கள் நடக்கும் இராமாயண நாடகம். ராம்நகரின் ஓரிடம் அயோத்தியாக இருக்கும், ஓரிடம் வனமாக இருக்கும், ஓரிடம் இலங்கையாக இருக்கும். இப்படி ராம்நகரின் ஒவ்வொரு இடமும் நாடகமும் நிகழுமிடம். மக்கள் திரள் பலவிடங்களிலும் இருந்து வந்து குவியும். பக்தி கொண்ட திரள் ராமரையும் சீதையையும் நடிகர்களென நினைப்பதில்லை. அவர்கள் தெய்வங்கள். பாதபூஜை செய்வார்கள், கும்பிடுவார்கள், அவர்களின் கை தம்மீது படாதா என்று ஏங்குவார்கள். தொலைக்காட்சியில் ராமர் வரும்போதும் கூடத் தொலைக்காட்சிக்கு மாலை போடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். போரின் முடிவில் கும்பகர்ணன், இராவணனின் சொக்கப் பனைகள் கொளுத்தப்படும். பட்டாபிஷேகத்தில் சுகமாக முடியும். ராம்லீலா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர்-அக்டோபரில் நடக்கிறது.
ராம்லீலாவின் வரலாறு
1800களில் காசியை ஆண்ட ஒரு மன்னரால் இது தொடங்கப்பட்டது. 1600களில் துளசிதாசர் எழுதிய ஹிந்தி இராமாயணமான ராம்சரிதமானஸே மூலப் பிரதியாகக் கொள்ளப் படுகிறது. அதிலிருந்து உருவாக்கப் பட்ட எளிய பாடல்களையும் வசனங்களையும் கொண்டது ராம்லீலா. இந்நிகழ்வின்போது ராம்சரிதமானஸ் ஓதப் படுகிறது. காசி மன்னரே முன்னின்று நாடக நடிகர்களைத் தேர்ந்தெடுப்பார், ஜூன் - ஜூலை வாக்கில். ராமன், லெட்சுமணன் போன்ற பாத்திரங்களுக்குப் பிராமண சாதிப் பிள்ளைகளும், குரங்கு, கரடி போன்ற பாத்திரங்களுக்குக் கீழ்ச்சாதிப் பிள்ளைகளும். இப்பாத்திரங்கள் குரல் உடையாத சிறார்களும் பதின்ம வயதுப் பிள்ளைகளுமே. இளையவர்களின் குரலும் தோற்றமும் குற்றமற்றதாக இருப்பதால் பெரியவர்களை விட இவர்களது நடிப்பே மனசைத் தொடும். இதே உத்திதான் ஜப்பானிய நாடகக் கலைகள் சிலவற்றிலும் பயன்படுத்தப் படுகிறது. 1857ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தது. இதில் காசி மன்னர் ஆங்கிலேயரின் பக்கம் இருந்தார். இதனால் அவரது ஆட்சிக்கும் ராம்லீலாவுக்கும் பின்னாளில் எந்தக் குந்தகமும் இல்லை. சொல்லப் போனால் ராம்லீலா கொண்டாட்டத்தின் முடிவினை அறிவிக்க பீரங்கிக் குண்டுகள் முழங்குவது சம்பிரதாயமாக்கப் பட்டது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த போது காசியும் இந்திய ஒன்றியத்தில் சேர்க்கப் பட்டது. ஆனாலும் ராம்லீலா நடத்த மன்னர் அவசியம். மன்னரின் இருப்புக்கு ராம்லீலா அவசியம். எனவே காசியில் மன்னர் என்பவர் எப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். 1938லிருந்து 2000 வரைக்கும் இருந்த மன்னர் விபூதி நாராயண் சிங். இவரோடு எனக்கு நெருங்கிய பழக்கமுண்டு. ராம்லீலா ஊர்வலங்களின் போது என்னையும் ஒரு யானையில் அமரச் செய்து சுற்றிவரச் செய்வார். 2000ல் இந்த மன்னர் இறந்ததன் பின்பு அவரது மகன் அனந்த நாராயண் சிங் மன்னராக இருக்கிறார்.
ராம்லீலாவின் அரசியல்
ஆரம்பத்தில் சமய வழிபாடு என்று ஆரம்பித்த ராம்லீலாவும் அதனைச் சார்ந்த ராம பக்தியும் பின்னாளில் வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. 1920களின் பின் வலுப்பெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தி இந்த ராம பக்தியைக் கொண்டு மக்களைச் சுதந்திரப் போராட்டத்தை நோக்கித் திருப்பினார். ராமசரித மானஸின் 'ரகுபதி ராகவ ராஜாராமி'ன் இந்து உணர்ச்சியையும், அதில் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' என்று சேர்த்த போது வந்த இந்திய உணர்ச்சியையும் திறமையாகப் பயன்படுத்தி மக்களை ஒன்றிணைத்தார். சுதந்திரம் அடைந்து சுமார் 25 வருடங்களின் பின்பு இந்த உணர்ச்சி மறுபடியும் தூசு தட்டி எடுக்கப் படுகிறது. இப்போது எடுத்திருப்பது பாரதீய ஜனதா கட்சி. இது ராமன் நம் நாயகன், ராமனைப் போற்றுதல் இந்தியாவைப் போற்றுவதற்குச் சமம் என்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. ராமனை வைத்து முன்னிருத்தப் படும் நடை முறைக் கோட்பாடுகள், ஒழுக்க சூத்திரங்கள் இந்தியாவிற்குப் பொதுவானதென்ற கருத்து உருவாக்கப் படுகிறது. இதன் விளைவாக ராம்லீலாவின் போது சமீப காலங்களில் ஊர்வலம் செல்லும் பாதைகளிலிருக்கும் முஸ்லிம் பகுதிகளில் கல்லெறிதல் போன்றவை நடக்கின்றன. இதில் மன்னருக்கு வருத்தந்தான். பா.ஜ.கவால் கிளப்பப் பட்ட இதே இந்துத்வ உணர்வுதான் 150 மைல் தள்ளியிருக்கும் அயோத்தியில் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. இவ்வாறாக ராமர் ஒரு இந்து/இந்திய அடையாளமாக்கப் பட்டிருக்கிறார். இது பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாக ஆட்சியைப் பிடிப்பது போன்ற பலன்களைத் தரக்கூடும்".
இவ்வாறாக முடிந்தது பேராசிரியர் ஷெக்னரின் பேச்சு. இதன் பின்னணியில் ராமன் எனும் கதாபாத்திரம் முன்னிறுத்தும் குணாதிசயங்களை நெஞ்சிலெடுத்துக் கொண்டு போகும் அம்மக்களை நினைத்துப் பார்க்கிறேன். இவர்களால் கற்பினைக் காரணம் காட்டி சதிமாதாக்களை உண்டாக்க முடியும். மதத்தைக் காரணம் காட்டி மசூதிகளை உடைக்க முடியும். மாற்று மதத்துக்காரன் வீட்டில் கல்லெறிய முடியும். இச்செயல்களை இவர்களது லட்சிய புருஷன் செய்யச் சொன்னதாக இவர்களால் நம்ப முடியும். இவர்கள் ஒரு பெரும் படை. இந்தப் படை அரசியலுக்கு முக்கியம். தந்திரம் தெரிந்தவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு ராம தூண்டுதலைப் பெருமளவில் ஏற்படுத்த முடியாமலிருக்கின்ற இன்றைய நிலையில் புதிது புதிதாகப் பிள்ளையார் கோயில்கள் முளைக்கின்றன. ராம்லீலா செய்வதைப் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்கள் செய்கின்றன. பக்தியைக் காட்டிக் கட்சி வளர்க்கும் பா.ஜ.கவின் எண்ணம் தமிழகத்திலும் ஈடேறிவிடுமா என்று யோசிக்கிறேன்.
Posted by சுந்தரவடிவேல் at 13 comments
வெங்கட்டுக்கு பதில்
பொழுது விலக்கமும், பாத் திரித்தவன் பொறுப்பும்
நானும் கம்பராமாயணத்தைப் பெருசா படிச்சதில்லை. பள்ளிக்கூடத்துல மனப்பாடப் பாட்டு, கல்லூரியில கொஞ்சம். இப்போ இந்தத் தாடகை வதம் மட்டும் படிச்சுக்கிட்டிருக்கேன். இதனால் நான் கம்பனை விமர்சிக்கும் அருகதையற்றவன் என்று யாரும் சொல்ல முடியாதென்றே நினைக்கிறேன்.
கம்பன் ஒரு தெசாரஸை வச்சுக்கிட்டு எழுதியிருக்கார். ஒரு கதையைச் சொல்லியிருக்கார். வார்த்தைகளுக்குள்ள போட்டுக் கதையை மூடி வச்சிருக்கார். மனுசனுக்கு உடைச்சுப் பிரிச்சுச் சாப்பிடும்போது சுவை கூடுதலா இருக்கும்கற எளிய உத்தியைப் பயன்படுத்தி, சொல்ல வந்த கதையை வார்த்தைகளுக்குள் வைத்துத் தைத்திருக்கிறார். பல்லுங்காம எயிறுன்னு சொல்லியிருக்கார். தேனா ஒழுகுற ஒரு ஓட்டத்தோட கதையைச் சொல்லியிருக்கார்.
இதுதான் அவர் செஞ்சிருக்காரே தவிர புது தத்துவம் எதையும் சொல்லிடலை. ("ராமன் விட்ட அம்பானதூ படிக்காத மடையன்கிட்ட படிச்ச நல்லவர் சொன்ன வாசகம் போனது மாதிரியாகத் தாடகையைத் துளைத்துக் கொண்டு போனதே" மாதிரியான "தத்துவங்கள்" வேண்டுமானால் நிறையக் கிடைக்கும்). இது ஒரு கதை, அவ்வளவுதான். என்ன ஒரு சிறப்பம்சம், ஒரு ராசாவோட கதை. எழுதச் சொன்ன வள்ளலுக்கு ராமனைத் தூக்கிப் பிடிக்கணும். அதுக்குத்தான் காசு குடுத்துக் கம்பனைக் கூப்பிட்டிருக்கார். அவருகிட்ட சம்பளம் வாங்கி இராவண காவியமா எழுத முடியும்? ஜெயலலிதா மேடையில இருக்கப்ப "சோழ நாட்டுக்குக் கரிகாலனால் வந்தது சாதனை, கருணாநிதியால் வந்தது சோதனை"ன்னுதான் ஒருத்தன் பாட முடியும்.
கம்பனை இப்படியொரு கலைஞனாக, கொடுத்த காசுக்குக் காசு கொடுத்தவன் கேட்டமாதிரி செய்தியை வெட்டி ஒட்டிப் போடும் ஒரு பத்திரிகையாளனாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பாரதியும் சீட்டுக்கவி எழுதியே இருந்திருக்கிறான். எவ்வளவு நாள் எவ்வளவு தூரம் இணங்கிப் போகிறான் என்பதிலிருந்துதான் ஒரு கவிஞன்/கலைஞன் தன்னை விற்றுக் கொள்ளாமலிருக்க முடியும். சரி, இப்படி வைத்துக் கொள்வோம், கம்பனுக்கு உண்மையிலேயே ராமபக்தி விஞ்சி அதனால் இராமாயணத்தைப் பாடியிருப்பானேயானால், அதில் எவ்வாறு ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க/வர்ணிக்க முடிகிறது? உயர்ந்த நோக்குள்ள ஒரு புலவனுக்கு, இராமனின் கருணையாலும் தெய்வாம்சத்தாலும் உந்தப்பட்ட ஒரு கவிஞனுக்கு (இவ்விடத்தில் கவிஞன் என்பவன் நாலு எதுகை மோனையப் போட்டு, கேட்டபோது பாட்டெழுதித் தருபவனில்லை என்பது நினைவுக்கு வருகிறது) எப்படி ஒரு பெண்ணை இவ்வளவு கோரமாகவும் வர்ணிக்க முடியும்? (எவ்வளவு கோரமாக என்று தாடகை வதைப் படலத்தைப் பார்த்தால் தெரியும், அதைப் பற்றி விரிவாய் எழுதும் எண்ணமிருக்கிறது). அது அந்தக் காலம், அது அப்படித்தானிருந்தது என்பீர்களேயானால், அதனினும் காலத்துக்கு முந்திய சிலப்பதிகாரம் நினைவுக்கு வருகிறது. இதில் எங்காவது இப்படியான அருவருக்கத்தக்க பாத்திரப் படைப்பை இளங்கோ செய்திருக்கிறானா? எனக்குத் தெரியாது? ஒரு இளங்கோவிடம், வள்ளுவனிடம் இல்லாத இந்த வார்த்தை வன்முறை ஏன் கம்பனிடம் தெறிக்கிறது என்றால், ஒன்று அது ராமவெறி அல்லது வாங்கிய காசுக்கு ரொம்பவும் கண்ணியமாக நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேங்கன்னு எழுதிக் கொடுத்த நாணயம்.
இந்த மாதிரி கொடுக்கல் வாங்கல், வென்றவன் தோற்றவன் விழுமியங்களெல்லாம் காலத்தால் மாறாதது, பண்பாடுகளால் மாறாதது, ஓடுற நாயக் கண்டா குலைக்கிற நாய்க்குக் கொண்டாட்டம் மாதிரிப் பதிஞ்ச பரிணாமப் பண்பு. அந்தக் காலத்து டெரிட்டரி, மேப்பு யாருக்குத் தெரியும், ஆனா மனுசனோட மனசு தெரியும். அது இயங்கும் விதம் புரியும். இப்படித்தான் இருந்தான்னு ஆதார பூர்வமா நிரூபிக்க முடியாது. சில புள்ளிகளை வச்சுக்கிட்டு நீங்க ஒரு கோலம் போட்டுக்கறீங்க, இன்னொரு கூட்டமான புள்ளிகளைக் கூட்டி நா ஒரு கோலம் போடுறேன். இதுல எந்தக் கோலம் யாருக்குப் பூச்சாண்டி காட்டுதுன்னுதான் சிக்கலே. கம்பன் எழுதின பாட்டை அது ஏற்படுத்தின சமுதாயத் தாக்கத்தை ஒதுக்கி வச்சுட்டு என்னால பாக்க முடியாது. இப்போது இருப்பது மாதிரியான ஒரு சீர்கேட்டை அது ஏற்படுத்தியிருக்குன்னா, அது எந்தக் கோலம் காட்டுன பூச்சாண்டின்னு தெரிஞ்சுக்கலாம். இந்த இடத்துல ராம காதைக்குக் கிடைச்ச "ராஜ" மரியாதை மத்த இலக்கியங்களுக்குக் கிடைச்சுதான்னு ஒரு கேள்வி வருது. கூடவே அக்னிதேவர் சாப்பிட்ட ஓலைச் சுவடியெல்லாம் கட்டுக் கட்டாத் தெரியுது. அதை விசிறி விட்டதுல ராமாயண விசிறிக்கும் பங்கு இருக்குங்கறது என்னோட கருத்து, அதையேதான் வேற வார்த்தைகள்ல நீங்களும் சொல்லியிருக்கீங்கன்னு நெனக்கிறேன்.
செவ்வியல் இலக்கியங்களோடு எப்படி உறவு கொள்ளலாம் என்பது குறித்து என் பதில்களை எழுத இப்போது இயலவில்லை. ஒன்றே ஒன்று மட்டும், ஏழாவது பாயிண்டுக்கு,
//ஐந்து பத்து நூற்றாண்டுக்கு முன்னால் கதையெழுதிப் போனவனைக் காவுகொடுக்காமால் இருக்கலாம்.//
செய்யலாம், எப்போதென்றால் அவனைப் போன்றவர்களால் எழுதப்பட்ட கதைகள் இன்று காவு கேட்காமல் இருந்தால்.
Posted by சுந்தரவடிவேல் at 21 comments
அவமதிக்கப்படும் ஒரு போராளி
தாடகை. இவளொரு அரக்கி. அப்படித்தான் நம் புத்தகங்கள் சொல்கின்றன. கம்பராமாயணத்திலிருந்து ராமானந்த சாகரின் பெட்டிப்படம் வரைக்கும் அப்படித்தான் காட்டியிருக்கின்றன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இவளுடைய கருத்தாக்கத்திலிருக்கும் அரசியல் புரியும். நான் புரிந்து கொண்டதை எழுதுகிறேன்.
விசுவாமித்திரன் எனும் அந்தணர் வந்து "கரிய" செம்மல் ராமனையும் கூடவே இலக்குவணனையும் அழைத்துப் போகிறார். எதுக்கு? அவரோட வேள்வியை அரக்கர் கெடுக்குறாராம், அதைக் காப்பாத்த. போகும் வழியில் பாலை நிலமொன்று. இது என்ன இந்த இடம் மட்டும் இப்படிப் பாலையாயிருக்கிறதென ராமன் கேட்க, இதுதானப்பா அந்த அரக்கி தாடகை இருக்குமிடம். ஆயிரம் மதயானை பலசாலி, அவ இடையும், அவ பல்லும், கேடு கெட்டவ, அவளக் கண்டாலே எல்லாருக்கும் நடுங்கும், இலங்கை அரசனோட ஆணைப்படி நம்ம எதிரிகளையெல்லாம் கூட்டி வச்சுக்கிட்டு நம்ம வேள்வியைத் தடுக்குறா. அப்படின்னு சொல்றாரு.
சொல்லிக்கிட்டு இருக்கப்பவே தாடகை வர்றா. அங்கின கம்பர் அவளை யானைத் தும்பிக்கையால புடிக்க முடியாத இடையழகு, எரியும் கண்ணழகு, பிறை போன்ற பல்லழகு, கறுப்பி அப்படின்னெல்லாம் "அழகா" வர்ணிச்சிருப்பார். தாடகை வந்து கேப்பா: "இது என்னோட எடமப்பா, இங்க ஒங்களுக்கு நல்ல எறைச்சி இருக்குன்னு வந்தீகளா இல்ல வேற என்ன வேணும்னு வந்தீக? மரியாதையாப் போறீங்களா, இல்ல வகுந்து எறியவா?" ஒடனே ராமரு யோசிக்கிறாரு அய்யோ பொண்ணாச்சேன்னு. அந்தணர் சொல்லிக் குடுக்குறாரு. தம்பீ அது பொண்ணு இல்ல, நாணம் இருக்கவதான் பொண்ணு, இவகிட்ட ஆம்பளையெல்லாம் தோத்துப் போவான், இவளா பொண்ணு, இந்திரனெல்லாம் இவகிட்ட தோத்தான், அசுரர் தேவரெல்லாம் ஓடுனாங்ய, இவளா பொண்ணு, தாக்கு தம்பீ. சண்டை வருது. அவ கண்ணிமைக்கும் நேரத்துல கடலைத் தூர்க்குற அளவு கல்லெடுத்து எறியுறா. தெரியுந்தானே ராமர் திறம்? தட்டிவுடுறார். அப்புறமா ஒரு அம்பெடுத்து வைரக்குன்றக் கல் மாதிரி இருந்த தாடகையின் நெஞ்சுல பாய்ச்சுறாராம். தாடகை விழுந்தாள். கம்பர் இந்த எடத்துல மறுபடியும் "அழகா" சொல்லுவார். அதாவது மார்புலேருந்து வழிஞ்ச ரத்தம் அந்தக் காட்டைக் கடலாக்கி அந்திவானத்துச் சிவப்போட கலந்துச்சாம். அரக்கர் குலத்துக்கு அன்றைக்குச் சாவு மணி அடிக்க ஆரம்பிச்சுச்சாம்.
எப்படிக் கதை? இதை வாயப் பொளந்து நாம கேட்டுக்கிட்டு இருக்கோம். கம்பனுக்கு விழா எடுக்குறோம். ராமருக்குக் கோயில் கட்டுறோம். அதோட சேர்த்து எதைப் புதைக்கறோம்? ஒரு பூர்வ குடிப் போராளியை. ஆக்கிரமிப்பை மீறி அவள் தொடுத்த முதற் போரை. அவளையும் கொன்னு, அவளையே அரக்கியுமா ஆக்கிக்கிட்டோம். வெக்கமா இருக்கு.
இன்னைக்கும் தாடகை மலை இருக்காம். மிஸ்டர் நாரதர்ன்னு ஒரு சத்யராஜ் படம் புடிச்சாங்களாம். அதுதான் இதுவா, இங்கதான் "அங்க நாடு" இருந்துச்சா அப்படின்னெல்லாம் தெரியாது. ஆனா ஒன்னு தெரியுது, தாடகை வணக்கத்துக்குரிய ஒரு போராளி. வரலாற்றால் சொந்த நில மக்களாலேயே அரக்கியாகச் சித்தரிக்கப் படும் அவலநிலைக்கு ஆளாகிவிட்டாள். சித்தரித்தவன் ஆழ்வானாகவும், கொன்றவன் கடவுளாகவும் ஆகிவிட்டார்கள்.
Posted by சுந்தரவடிவேல் at 19 comments
பிள்ளைகளா சுண்டெலிகளா?
அமெரிக்கா தான் கண்டுபுடிக்கிற மருந்தையெல்லாம் ஏழை நாட்டு மக்கள் மேல குத்திப் பாத்துப் பரிசோதிக்கிற கதை தெரிஞ்சதுதான். இப்போ ஒரு புதுக் கதை. தன் சொந்த நாட்டு மக்கள் மேலயும் ஒரு சோதனை நடத்திப் பாக்குது. மக்கள் யாருங்கறதுதான் முக்கியம். குழந்தைகள். பச்சிளம் குழந்தைகளிலிருந்து பதின்ம வயதுப் பிள்ளைகள் வரை. கருப்பர்களும், ஹிஸ்பானிக்குகளும். எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பிள்ளைகள் அனாதைகள்!
ஆமாம். சுமார் ரெண்டு டஜன் மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில், எயிட்ஸ் உட்பட்ட நோய்களுக்கு, இந்தப் பிள்ளைகளின் மேல் மருந்துகள் ஏவிப் பரிசோதிக்கப் படுகின்றன. 1988 முதல் 2001 வரைக்கும் நியூயோர்க் மட்டும் 465 பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. இதுக்கெல்லாம் National Institutes of Health நிதியுதவியும் செய்திருக்கிறது. Johns Hopkins மாதிரிப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களும் இந்தப் பிள்ளைகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. நிறைய மாநிலங்களில் இது நடக்கலாம். சில மாநிலங்களில் இந்த ஆராய்ச்சிப் பிள்ளைகளைப் பற்றிய கணக்கெதுவுமில்லை. சில சோதனைகளில் மாண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை "வருந்தும்படி" அதிகந்தான் என்றார்களாம்! இவர்கள் உபதேசமெல்லாம் ஊருக்குத்தானோ?
சுட்டியொன்று: Alliance for Human Research Protection.
Posted by சுந்தரவடிவேல் at 4 comments
திருமூலன் அப்படி இருந்திருப்பானோ?
இன்னக்கி ஒரு கூட்டத்துக்குப் போனேன். ஒருத்தரு பேசுனாரு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துல ஒரு விஞ்ஞானி. மூலச் செல் சிகிச்சை (stem cell therapy) ஆராய்ச்சியில கொம்பர். பேரு டக்ளஸ் மெல்ட்டன் (Douglas Melton). இன்னக்கி என்ன சொன்னாருன்னு ஒங்களுக்குச் சுருக்கமாச் சொல்லவா? விரிவா வேணும்னா கேள்வி கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்!
20ம் நூற்றாண்டு கிட்டத்தட்ட மரபணுவான டி.என்.ஏ (DNA) யைச் சுத்தியே வாயப் பொளந்துக்கிட்டு வந்துச்சு. 1900ல மெண்டல்ல ஆரம்பிச்சது, அப்புறமா டி.என்.ஏயைக் கண்டுபிடிச்சது, அதோட மூலக்கூறு வடிவத்தைக் கண்டுபிடிச்சது, வரிசையைப் படிக்கற முறையக் கண்டுபிடிச்சது, அப்புறமா 2001ல மனுச டி.என்.ஏ வரிசையையே வெளியிட்டதுல வந்து நிக்குது. இது ஒரு நல்ல விசயம்னாலும் இந்த நூற்றாண்டு செல்களின் நூற்றாண்டா இருக்கப் போவுது. ஏன்னா செல்களைப் பத்தின ஆராய்ச்சி அதிலும் மூலச் செல்களைப் பத்தின ஆராய்ச்சிதான் மேல நிக்கும்னாரு.
அது என்னங்க மூலச்செல்? விந்தும் அண்டமும் ஒன்னாச் சேருதுல்ல, அப்போ வர்ற கருமுட்டை ரெண்டாகி, நாலாகிக் கொஞ்சம் செல்களோட இருக்கில்ல அந்த செல்களை எடுத்தோம்னா ஒடம்புல இருக்க எந்த செல்லை வேணும்னாலும் ஆய்வகத்துல செஞ்சுக்கலாம். அந்த செல்களைத்தான் கருமூலச்செல் (embryonic stem cell) அப்படின்னு சொல்றாங்க.
மெல்ட்டன் என்ன செய்றாருன்னா சக்கரை வியாதிக்காரங்களோட கணையம் (pancreas) இருக்குல்ல, அதுல இருக்க பீட்டா (beta) செல்லெல்லாம் பாதிப்படைஞ்சதால இன்சுலின் சுரக்க முடியாமப் போவுதுல்ல, அவுங்களுக்கு மூலச் செல் சிகிச்சை செய்யலாங்கறாரு. அது மட்டுமில்ல இத்தனை நாளா பீட்டா செல்லை மூலச்செல் மட்டுந்தான் உண்டாக்கும்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருந்தாங்க, இவருதான் அடேய் பீட்டா செல்லே குட்டி போடுமுடா அப்படின்னு புதுசாப் போன வருசம் கண்டுபுடிச்சிருக்கார். இது ஒரு பரபரப்பு. ஆ, அப்புடின்னா குட்டி போடாதுன்னு நெனச்ச மத்த செல்லெல்லாம் குட்டி போடுமான்னு ஒரு கூட்டம் கிளம்பிருக்கு. ஒடனே நீங்க கேக்கலாம், அப்படின்னா பீட்டா செல்ல வச்சே பீட்டா செல்லை உண்டாக்கலாமே, என்னத்துக்குங்க இந்த அரசியல் சச்சரவு புடிச்ச மூலச்செல் வெவகாரம்னு கேக்கலாம். மெல்ட்டன் விடை வச்சிருக்காரு, அதாவது சக்கரை வியாதிக்காரருக்கு பீட்டா செல்லை வைக்கணும்னா அதைக் குடுக்குறதுக்கு ஒரு சவம் வேணும், ஏன்னா உயிராயிருக்கவங்ககிட்டேருந்து எடுக்குறது கஷ்டம். தானம் செய்றவங்க கிடைக்கிறது, அத ஒடனே போயி எடுக்குறது, பிரிச்செடுக்குறது, உள்ள வக்கிறது, வச்சது எதிர்ப்பாற்றலால சாவாம இருக்கது இதெல்லாம் கஷ்டம். இங்கதான் மூலச்செல் சிகிச்சை சிறப்பாத் தெரியுது. மூலச்செல் கையும் காலும் மொளச்ச கொழந்தயில்ல. அது ஒரு 30, 40 செல். ரொம்ப உணர்ச்சிவசப்படாம இந்தப் பாதிரி மாருங்க மனசு வச்சா ஒழுங்கா ஆராய்ச்சி செய்யலாம். சீக்குக்கு மருந்து கெடைக்கும் அப்படிங்குறாரு மெல்ட்டன்.
யோசிச்சுப் பாக்குறேன், நம்ம திருமூலர் 3000 வருசம் இருந்து வருசத்துக்கொன்னா 3000 பாட்டெழுதுனாராம். அது ஒரே திருமூலரா வெவ்வேற ஆட்களான்னு ஒரு குடுமிபிடி சண்டை போடலாம். ஆனாலும் மூலச்செல்களைத் தூண்டிவிட்டுக்கிட்டு மறுபடியும் மறுபடியும் அங்கமெல்லாம் புதுசாகி ஒரு மனுசன் 3000 வருசம் இருந்திருப்பானோங்கற யோசனை ரொம்பக் கவர்ச்சியா இருக்கு. இது திருமூலன் மேல இன்னும் காதலைக் கூட்டுது.
Posted by சுந்தரவடிவேல் at 9 comments
வசந்தன் ஒரு நட்சத்திரம்!
வசந்தன் ஒரு அமெரிக்கப் புள்ள. நா மொதல்ல பாத்தப்ப அவருக்கு வயசு ஒம்போதிருக்கும். இப்ப 15. நா அவரப் பாத்து கிட்டத்தட்ட ரெண்டு வருசமாச்சு. அவங்கப்பா அன்னக்கி ஒரு சேதி சொன்னாரு. மலைப்பா இருக்கு. சொல்றேன்.
வசந்த் வருசா வருசம் இந்தியாவுக்குப் போவார். கோடை விடுமுறைக்கு. கிருஷ்ணகிரி பக்கத்துல மகனூர்ப்பட்டி பள்ளிக் கூடத்துக்கும் போவார். அவங்கப்பா படிச்ச பள்ளிக்கூடம். மூணு வருசமா ஒவ்வொரு விடுமுறையிலயும் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தர்றார். உங்க அப்பாம்மா மாதிரியே நீங்களும் பண்ணையடிக்கப் போவேண்டியதில்லை, படிச்சு உங்க கனவுப்படியுமாகலாம்னும் சொல்லிக் குடுக்குறார். தோழனாய்க் கூடி விளையாடி நம்பிக்கையூட்டுறார்.
மறுபடியும் அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து அந்த அனுபவத்தையொரு கட்டுரையாய் எழுதப் போக, அங்கிருந்து ஆரம்பிக்கிறது அடுத்த கதை. நம்பிக்கையூட்டிக்கு இன்னொரு திரியைப் பற்ற வைக்கிறார் இந்தவூர் வாத்தியார். நீங்க ஏன் அந்தப் பள்ளியின் வசதிகளை மேம்படுத்தக் கூடாது? உண்டியல். பிள்ளைகளின் ஐந்து செண்ட், பத்து செண்ட், 50 ரூவா, கோடையில கார் கழுவி உழைச்சது. அந்தப் பள்ளி மட்டுமில்ல, ஊர்ல இருக்க நிறைய பள்ளிகள்ல. நிறைஞ்சுக்கிட்டிருக்கு. நேத்து பேசினேன். 5000 டாலர் சேந்திருக்கு. இன்னும் 25 நாள்ல ஊருக்குப் போகப் போறேன். அதுவரைக்கும் கிடைக்கிறதைக் கொண்டு போவேன். அந்த நூலகத்துக்குப் புத்தகம் வாங்கித் தருவேன், ஆய்வகத்தை மேம்படுத்த, மேசை நாற்காலி வாங்க, இப்படி எத்தனையோ செய்றதுக்கு இருக்குன்னார்.
நிஜம். இன்னொரு நம்பிக்கையாளனைப் பார்க்கிறேன். பாராட்டுக்கள் வசந்தன்!
இந்தவூர் செய்தித் தாளொன்றில் வசந்தனைப் பற்றி:
பக்கம் 1, பக்கம் 2.
Posted by சுந்தரவடிவேல் at 12 comments
ஞான்பித்
துருதுருத்த கைக்கும் மெய்க்கும் வாய்த்தது உமக்கும். வழக்கம் போல் எந்த இலக்கணத்துக்கும் பிடிபடாமற் போனால், போனதுதான்!
மன்று பறித்துண் ணாய் மன்றில்
தொன்று காத்தாளை விற்றுண் ணாய்
நன்று பற்காவியம் தீட்டி யோனாய்
இன்று ஞானப்பீடை நக்கி னாயே!
Posted by சுந்தரவடிவேல் at 18 comments
தராக்கி/ஐ. நா. மனு/கையொப்பம்
தராக்கியின் படுகொலை மீது நியாயமான விசாரணை தேவை. இதை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்துதல் அவசியம். இது சம்பந்தமாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் முறையிட ஒரு மனு தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதில் அனைவரும் கையொப்பமிடுவோம். செய்தியை நண்பர்களுக்குப் பரப்புவோம். கையொப்பமிடுவதற்கான சுட்டி இதோ:
http://www.petitiononline.com/Tharaki/petition.html
Posted by சுந்தரவடிவேல் at 10 comments