ககர முதல மெய்!


குழந்தைகளோடு இருக்கும் போது மறந்து போன சிலவற்றைத் திரும்பவும் பார்க்கலாம். உதாரணமாய்ப் பால் புட்டியில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியில் வானவில்லின் நிறங்கள். அப்புறம் காலகாலமாக நமக்குப் பழக்கப் பட்ட விஷயங்களை மீள் பார்வை செய்து இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தது நம் இன்றைய கதை. கொஞ்சம் பாமரத்தனமாக இருக்கும், சிரிக்க வேண்டாம்.

உடல் உறுப்புக்களை ஒரு நாள் என் மகனுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இது சில மாதங்களுக்கு முன், அப்போது அவனுக்கு ஒன்னரை அல்லது ஒன்னே முக்கால் வயசிருக்கலாம். கண், காது, கை, கால்...தொட்டுக் காண்பித்துச் சொன்னேன். மாசிலனும் சொன்னான். திடீரென்று எனக்குள் தூங்கிய ஒரு மொழியாராய்ச்சியாளன் ஒரு சிலுப்பு சிலுப்பி எழுந்தான். நிறுத்து சுந்தரா, அது என்ன இந்த உறுப்புக்களெல்லாம் ககர வரிசையிலேயே ஆரம்பிக்கின்றன என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டான் (ககர வரிசை என்பதற்கு 'க'விலிருந்து 'கெள' வரைக்கும் என்று அர்த்தப் படுத்திக் கொள்கிறேன்). உடம்பு, மெய், மெய்யெழுத்து, மெய்யெழுத்தின் முதலெழுத்து க. சொக்கா! (யுரேகாவை இப்படியும் சொல்லலாமாக்கும்).

அப்படியென்றால் இந்த 'க'னாதான் மெய்யெழுத்துக்களிலேயே முதலாவதாகத் தோன்றியிருக்க வேண்டும். அதைத்தான் ஆதிமனிதன் முதலில் உச்சரித்திருந்திருக்க வேண்டும். அதனால்தான் முக்கியமான உறுப்புகளின் பெயர் ககரத்தில் இருக்கிறது. கண், காது, கை, கால். இதை ஒருக்கால் நீங்கள் நீட்டிக் கொண்டு போகுங்கால், கல், கடல், காற்று, காதல், கல்வி, கலவி என்று வாழ்வின் சகலத்துக்கும் போய்ப்பார்க்கலாம். சரி, இதுதான் முதலில் தோன்றியதென்றால் இதன் பயன்பாடும் அதிகமாக இருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால் ககரத்தைப் பயன்படுத்தும் சொற்கள் அதிகமானவையா? சொற்களுக்கு நடுவே ககரம் வருவதைக் கணக்கிடப் போனால் என் மூளை காணாது. ககரத்தில் ஆரம்பிக்கும் சொற்களை வேண்டுமானால் கணக்கிடலாம்.

ந.சி.கந்தையா அவர்கள் தொகுத்து சிங்கப்பூர் EVS Enterprises வெளியிடும் தமிழ் அகராதியை எடுத்தேன். ககரத்தில் ஆரம்பிக்கும் சொற்களை எண்ண ஆரம்பித்தேன். ஒரு சோம்பேறிப் பயல் உள்ளேயிருந்து டேய் என்னத்துக்குடா எல்லாத்தையும் எண்ணுற, மொதல்ல பக்க எண்ணிக்கை கூடுதா கொறையுதான்னு பாரு, அப்புறம் வேணும்னா எண்ணிக்கலாம்னு சொல்லிட்டுப் படுத்துக்கிட்டான். நான் பக்கங்களை எண்ணினேன். இந்த இடத்திலே சராசரியாக ஒரு பக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் எல்லா எழுத்துக்களுக்கும் சமம் என்ற ஒரு உத்தேசத்தைக் கொள்கிறேன். ககரத்துக்கு 120 பக்கங்கள். இதுதான் அதிகமான பக்க எண்ணிக்கை. இதற்கு அடுத்தாற்போல் வருபவர் பகரம். இதற்கு 114. இரண்டும் வல்லினங்கள். சொற்களை எண்ணிப் பார்க்கலாம். இது வேறு ஏதேனும் வழியில் (மின் அகராதிகளின் மூலம்) சுலபமாயிருக்கலாம். இதைப் பின்னொரு நாள் செய்வேன். மாசிலனுக்கும் ககர வரிசைச் சொற்களை உச்சரிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. ஆக, குழந்தையின் மொழி வளர்ச்சியிலும் ககரம் முன்பாகவே வந்து விடுகிறது. இன்னும் மாசிலனால் சொல்ல முடியாத எழுத்துக்கள் ங, ஞ, ர, ற. மற்றபடி ல, ள, ழ எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி சத்தம்தான் எழுப்புவான். ஆக, ககரம் இப்படியாக முக்கியமானதாக எனக்குப் படுகிறது.

இதையெல்லாம் ஏற்கெனவே விற்பன்னர்கள் ஆழமாய் ஆராய்ந்திருப்பார்கள், நான் இங்கு உட்கார்ந்து கொண்டு என் மகனைப் படுத்துகிறேன். உனக்கு மகனாகப் பிறந்து இன்னும் எதையெல்லாம் அனுபவிக்கப் போகிறானோ என்று சிலர் காலை வாருவதுண்டு! ஞாயந்தான் :)

1 comments:

said...

தமிழில் வல்லின மெய்கள் வயிற்றிலிருந்தும் இடையின மெய்கள் நெஞ்சிலிருந்தும் மெல்லின மெய்கள் மூக்கிலிருந்தும் உருவாகின்றன.

வயிற்றிலிருந்து புறப்படும் ஒலி சொல்லின் இறுதியாக வந்தால் அடுத்த சொல்லின் முதல் ஒலியும் வயிற்றிலிருந்து புறப்பட்டால் பேச்சு இனிமையாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் அத்தகைய சொற்கள் வராமல் இருப்பதுதான் சரி என்ற இயல்பான வழக்கிலே தமிழில் வல்லின மெய்யில் முடியும் சொற்களே உருவாகவில்லை என்று எங்கோ படித்ததாக நினைவு.

பேசுவதற்கு இனிமையான இயல்பான மொழி நம்மொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

- பாலமுருகன்