1857ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுத் தனது 150வது வயதை நெருங்குகிறது சென்னைப் பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜன் இங்கு வந்திருக்கிறார். நேற்று அவரோடு இரவுணவுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு யேல் பல்கலையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. செப்டம்பர் 2003ல் பதவியேற்றுத் துரிதகதியில் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிகளுக்குத் திட்டமிடுவதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் ஊக்கம் காட்டும் இவரைப் பற்றிக் கொஞ்சம்: பட்டங்கள், பதவிகள் ஒரு புறம். மறுபுறத்தில் சித்த மருத்துவத்தில் மஞ்சட்காமாலைக்குப் பயன்படுத்தப் படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களை இக்காலத்து அறிவியல் அளவுகோல்களின்படிச் சோதித்துத் தரப்படுத்திப் பல்கலைக்கழகத்தின் மூலம் காப்புரிமை பெற்றுள்ளார். இது தவிரவும் பல்வேறு சித்த மருத்துவ மூலிகைகளைக் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பெரும் ஊக்கம் அளித்து வருகிறார்.
இவருடைய இந்த அமெரிக்கப் பயணத்தின் முக்கிய நோக்கம், சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகமாக்குதலுக்கான முயற்சிகளைச் செய்வது. இதன் மூலம் தேர்ந்தெடுத்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கும் பல்வேறு துறைகளிலும் தொடர்புகளை ஏற்படுத்துதல். இத் தொடர்பின் மூலம் மாணவர்களும், ஆசிரியர்களும் குறுகிய காலக் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பரிமாறிக் கொள்ளப்படுவர். ஏற்கெனவே இது போன்ற சில தொடர்புகள் இருந்தாலும், அவற்றை மேலும் பல துறைகளுக்கும் விரிவாக்குதலில் இங்குள்ள துறை வல்லுனர்களோடு கலந்தாலோசிக்கிறார்.
சமீபத்தில் நடுவணரசின் பல்கலைக் கழக மானியக் குழுவினால் "தனிச்சிறப்புப் பெறுவதற்கான திறன்" இருப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் ஐந்து பல்கலைக் கழகங்களுள் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர், பன்னிரெண்டு அம்சங்கள் அடங்கிய ஒரு திட்ட வரைவினை முன் வைத்து அதன்படிப் பணியாற்ற இருப்பதை விளக்கினார். உயர்கல்வியில் கிராமப் புறத் தொழில்களை/வளங்களை மையப்படுத்திப் பட்டப் படிப்புக்களை உருவாக்கும் முயற்சிகளையும் அதனால் வேலை வாய்ப்பின்மை குறையவும், கிராமத்து இளைஞர்கள் நகர்களுக்குக் குடிபெயர்வது குறையவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார்.
இவரிடம் நான் கேட்டவற்றில் ஒரு கேள்வி: தமிழ் செம்மொழியாவதால் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு என்ன நன்மை? அவரது பதில்: இது பல வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டியது, இப்போதாவது நடக்கிறதே என்று சந்தோஷப் படுவோம். இதன் மூலம் மொழி மட்டுமின்றி, கலை, அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளிலும் தமிழை மையப்படுத்திக் கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் நிறைய பொருளுதவி கிடைக்கும், இது வேண்டும் (பத்ரியும், மெய்யப்பனும் சொன்னதைப் போல்).
கடைசியாக ஒரு விஷயம், நீங்கள் சென்னைக் கடற்கரைச் சாலையில் செல்லும்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாகக் கோபுரங்களுடன் பார்த்திருக்கிறீர்களா ஒரு சிவப்புக் கட்டிடம், 1873ல் கட்டிமுடிக்கப்பட்டது, பராமரிப்பின்றிப் பழுதடைந்துள்ளதாம், புதுப்பித்தலுக்கு நீங்கள் பொருளுதவ நினைத்தால் இங்கு சுட்டுங்கள்.
Yaleல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment