திருவிழா

ஆடித்திருவிழா மாதிரி இங்க, நியூ ஹேவன்லயும் ஆட்டமும் பாட்டமுமா இந்தக் கோடையில ஒரு திருவிழா நடக்குது. இம்மாதம் 11லேருந்து 26 வரைக்கும். விபரங்கள் இங்கே.

அன்றைக்கு அந்தச் சிகையலங்காரங்களைப் பார்த்தோமல்லவா? அதுக்கப்புறம் ராத்திரி இந்த ஒளிச் சிற்பம். வானவில்லைத் துரத்துதல் என்று பெயராம். நிறைய டியூப் லைட்டை வரிசையா வச்சு, இசைக்குத் தகுந்த மாதிரி அதில் நிறங்களும் வடிவங்களும் தோன்றும்படி செய்திருக்கிறார் ஒரு கணிஞர்/கலைஞர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்கள் இந்தச் சுட்டியைப் பார்க்கலாம். எங்க ஊர்ல சக்கரம் சுத்தும் சீரியல் லைட்டைப் பாக்குறப்போ, அது என்னவோ குழாய் ஸ்பீக்கர் பாட்டோட சேர்ந்து சுத்துற மாதிரி இருக்கும், நெனப்புதான். இங்க நெசத்துலயே ஒளியும் ஒலியும் ஒத்திசைந்திருக்கின்றன.



அப்புறம் நேத்து நகர் மன்றத்துக்கிட்ட இருக்க புல் வெளியில நிறைய நிகழ்ச்சிகள். ஊர்வலம் பார்க்க முடியலை. உள்ளே போகும் போதே ஆப்பிரிக்க மேளச் சத்தம், பந்தலுக்குள் எட்டிப் பார்த்தோம். பார்வையாளர்களைக் கொண்டே அங்கு ஒரு கச்சேரி நடந்தது. நாங்களும் உட்கார்ந்து கொட்டினோம். சத்தமெழுப்ப எத்தனையோ சின்னச் சின்னக் கருவிகள், ஒவ்வொன்றும் தம் போக்கில் தனித்தனியாய், பிசிறலுடனும் நளினத்துடனும். ஆனால் மொத்தமாய் வெளிக்கிளம்பிய அந்தக் கூட்டிசை துடிப்பானது. இதுதான் மக்களிசையோ?



மாசிலன் ஆடியாடி நன்றாய் அனுபவித்தான். படப்பெட்டிக்குச் சக்தி பிரச்சினையால் நினைத்தபடியெல்லாம் எடுக்க முடியவில்லை. அதனால் கோப்பிலிருந்து தோழர் மாசிலனின் படமொன்று! நாங்கள் வெகுநேரம் இங்குதான் செலவிட்டோம்.



இந்த முரசு சீனத்துக் காரர்களுடையது. ஊர்வலம் முடிந்ததும் வைத்துக் காட்டுகிறார்கள். அடிக்க விரும்புபவர்கள் அடித்துப் பார்க்கலாம்.



மாசிலன் போன பக்கமெல்லாம் பின்னாடியே திரிஞ்சோம். திருவிழாவுக்கு வண்டி கட்டிக்கிட்டு வந்த மாதிரி மக்கள் ஆங்காங்கே புற்றரையில் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நடுவிலொரு செயற்கை நீரூற்று, சுற்றிச் சுற்றி வந்தான். பலூன் கேட்டான். மேடையில் ஒரு ஸ்பானியக் குழுவின் பாட்டுக் கச்சேரி. இப்படியாய் ஒரு மூன்று மணி நேரம் சுற்றியிருந்து விட்டுத் திரும்பினோம். ஒவ்வொரு நிகழ்ச்சி/கலைஞரையும் பற்றி ஆழமாய்த் தெரிந்து எழுதலாந்தான், ஆனால் போனோமா, கூத்துப் பார்த்தோமா வந்தோமான்னுதான் இது வரைக்கும் இருக்கேன். பார்க்கலாம்!

2 comments:

said...

அண்ணாச்சியைக் கொம்யூனிஸ்டுப் பார்ட்டியிலே சேர்த்திருக்கின்றீர்களா, என்ன?
கண், பல், சட்டை மூன்றும் சிரிப்போ சிரிப்பென்று சிரிக்கின்றன.

said...

ராஜா, பல்வேறு நாட்டுக் குடியேறிகளால் உண்டான அமெரிக்காவின் பன்முகச் சூழலும், இம்மக்களின் வேற்றின அங்கீகரிப்பும், இது போன்ற கொண்டாட்டங்களில் நம்மைச் சுலபமாகக் கலந்துவிடவே செய்யும். இளையர்களின் நாட்களில் இன்னும் ஆழமான கலத்தல் ஏற்படும் என்பது என் எண்ணம். வேலையிடமோ, விளையாட்டிடமோ அல்லது உணவகமோ இத்தகைய வேற்றுமை உணர்வுகளைக் களைவதற்காகவே இவர்களது சட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. மேலும் ஒரு மனிதனை அவனது உழைப்புக்காகவும் மனிதத் தன்மைக்காகவும் மதிக்கும் குணம் அமெரிக்கப் பொதுஜனத்துக்கு உண்டு என்பது பலராலும் ஒப்புக்கொள்ளப் பட்டது. ஆனாலும் சில இடங்களில், சில பார்வைகளினால் எனக்குள்ளே அந்த "நான் வேறு" என்ற உணர்வு எழும்புவது உண்மையே. வந்துட்டானுகள் என்று சிலர் உள்ளுக்குள் நினைத்தாலும் வெளிக்காட்டுதல் குறைவு. அப்படி வெளிக்காட்டும் தருணங்களில் பாதிக்கப் பட்டோருக்கு நியாயம் கிடைக்கும் வாய்ப்புக்களும் அதிகம். மற்றபடிக்கு, திறவுகோல்களோ, பூட்டுக்களோ நம்மகத்தில்தான் இருக்கின்றன, இல்லையா?!