பிரபலங்களைத் தாக்குவோம்! 1. பாரா

இன்னும் ஆறு நாட்களுக்கு ஆறு பிரபலங்கள் இங்கு தாக்கப் படுவார்கள் என்ற கட்டியத்துடன் தாக்குவதற்குக் கைவசம் ஆறு பிரபலங்கள் இல்லாத காரணத்தால் இன்றைக்குப் பாராவை மட்டும். 1 போட்டிருப்பது வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு. மற்றபடிக்கு இந்தத் தாக்குதல் பாடுபொருள் சம்பந்தமானது மட்டுமே (நபர் எதிர்ப்பு, வயிற்றெரிச்சல், இதன் மூலம் புகழடைய நினைத்தல் போன்ற இழிபண்புகளால் இல்லை).

பாரா சொல்கிறார், பிரபலங்களைத் தாக்க வலைப்பூக்களைப் பயன் படுத்தாதீர்கள் என்று. நான் சொல்கிறேன், எப்போதுமே நாம் புகழ் பெற்றவர்களைத்தான் தாக்க வேண்டும். ஏன் தாக்க வேண்டும்? ஏனென்றால் புகழ் பெற்றவர்கள் சொல்வதுதான் நிறைய பேரால் கவனிக்கப் படும், அவர்கள் சொல்வதற்கே இளையர்களால் பின்பற்றப் படக்கூடிய சாத்தியங்கள் அதிகம். எனவே இவர்கள் எதையும் தவறாகச் சொல்லிவிடக் கூடாது. இவர்கள் வாயிலிருந்து வருவது நம் பார்வைக்கு ஒழுங்காக இல்லாத பட்சத்தில் இவர்களது புகழைக் கண்டு சும்மா இல்லாமல், நாம் உண்மையென்று நினைப்பவற்றின் துணை கொண்டு இவர்களை நாம் தாக்க வேண்டும். ஒருவர் புகழ் பெற்றவர் என்பதற்காக மட்டுமே அவர் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமா போட்டுக் கொண்டு நாம் இருக்கக் கூடாது.

இப்போது பாரா "இட்டிருக்கும் கட்டளைகள்" வெட்டி, மழுங்கடித்து ஒரே மாதிரியான தொட்டிச் செடிகளை வளர்ப்பதற்கான வழிமுறைகள். வலைப்பூக்கள் காட்டுப் பூக்கள். இந்த ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற தன்மையே எழுத்தின்/வலைப்பூக்களின் வலிமை. இதை நேர் செய்கிறேன் என்ற போக்கில் குலைப்பது ஒரு எழுத்தாளருக்கு அழகில்லை. அவர் தனக்குத் தெரிந்ததை எழுத்து என்று நினைத்து எழுதிக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஒவ்வொரு வலைப்பதிவாளருக்கும் தான் எழுதுவது முக்கியம். அது கடவுள் ஒழிகவோ, ஸ்ரீ ராமஜெயமோ. எனக்குப் பாராவின் எழுத்தை விட என் எழுத்துத்தான் பிடிக்கும். சத்தியமாக. நான் சோர்வடையும்போது பாராவையோ அல்லது வேறு எவரையுமோ படிப்பதில்லை. என்னையும், என் எழுத்துக்களையுமே படித்துக் கொள்கிறேன். என்னைப் பார்க்க எனக்குள்தான் இறங்க வேண்டும். சுந்தர ராமசாமிக்குள் இறங்கி என்னைத் தேட முடியாது. என் எழுத்தையும் நான் சுந்தர ராமசாமியின் எழுத்து மாதிரியே ஆக்கிவிட்டேனென்றால் நான் என்னத்தைப் படிக்க? நம்மை நாம் கண்டறிய உதவுவது நமது எழுத்துக்களே. எழுதுபவது எந்தக் கொம்பன்/கொம்பியாக இருந்தாலும் அவரை நாம் ஓரளவுக்குத்தான் உணர முடியுமே தவிர, நாம் நம்மை உணர்வதற்கு நம் எழுத்துக்களே முதன்மை. எனவே எப்படியாயினும் எழுதுவோம். எல்லா ஆறுகளும் சின்னதாய்த்தான் ஆரம்பிக்கின்றன. வலைப்பூக்கள் பத்திரிகைகளைப் போலக் கட்டமைப்புகளுக்குள் இயங்குவதில்லை. எனவே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளாமல் பிடித்ததை எழுதுவோம். மன ஆற்றின் போக்குக்கு விடுவோம். அது தன் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். பாரா கொடுக்கும் மண்வெட்டிகளை வாங்கிக் கொண்டு வந்து நம் வலைப்பூவை வெட்டிக் கொத்திக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

பாரா போன்ற பிரபலங்களுக்கு/வழிகாட்டிகளுக்கொரு வேண்டுகோள், எந்த வலைப்பூவையும் உங்களுக்கு வேண்டுமென்றால் படியுங்கள். இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்ததைப் படித்துக் கொள்ளுங்கள், படித்ததைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை யாரும் வந்து ஐயா என்னுடையதைப் படித்துவிட்டு ஒரு ஐந்து மார்க்கு போட்டுவிட்டுப் போங்கள் என்று கெஞ்சப் போவதில்லை. அறிவுரை என்ற பெயரிலே ஒரே வடிவான ரொட்டிகளை அச்சில் வார்க்கும் ரொட்டிக் கம்பெனியாக வலைப்பூவுலகை ஆக்காதீர்கள்.

கடைசியாய் ஒன்று, நமக்கு ஒவ்வாதவொன்றைச் சொல்வது பிரபலமானவர் என்றால் அதை இன்னும் கொஞ்சம் வலிவாகவே தாக்க வேண்டும். பாராவின் மறுமொழிப் பெட்டியிலும், தத்தம் வலைப்பதிவுகளிலும் பாராவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு 139வது வட்டத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் படுகிறது.

1 comments:

said...

அவர் எதற்காக இத்தனையும் சொன்னார் என்று தெரியவில்லை; முகமிலியாகச் சொல்லியிருந்தால், கண்ணாடிவீட்டிலிருந்து கல் என்றும் சொல்லியிருக்கமாட்டார்கள்; மடலாடற்குழுக்களை விட்டுவிடுவோம்; ஆனால், வலைப்பதிவு என்று வரும்போது, அது தனிப்பட்டவருடையதென்பதால், அதைப் பற்றி ஒவ்வொருவரும் வகுத்துக்கொள்ளும் வரைவிலக்கணம் வேறாகிப் போகின்றது. மடலாடற்குழுபோல, ஒரு பொது வழைமையுட்குள்ளே ஒழுகியே ஆகவேண்டுமென்ற நியதி கிடையாது [அடுத்தவன் தறையிலே பின்னூட்டம் விதைக்கப் போகாத வரைக்கும்]. என்னிஷ்டம்! எதேஷ்டம்!! குழுவலைப்பதிவு, பொது இலக்கு என்பதெல்லாம் அதற்கப்பாலே கருத்தொருமித்தவர்கள் தமக்குப் பொதுப்பட சில நொய் வழக்கு ஆக்கிக்கொண்டு பதிக்கின்றவை; அங்கும் மற்றவர்கள் இதுதான் அதுதான் என்று கோடு கிழிக்கமுடியாது. ஆனால், தனிப்பட்ட பதிவாளருக்கு, அவர் மற்றவர்களின் பின்னூட்டத்தின் எண்ணிக்கையைப் பிடித்துக்கொண்டுதான் அதற்கேற்ப நிகழ்நேரமுடிவுகளிலே (realtime decision) வலைப்பதிவினை ஓட்டுவேனென்று தொங்குவாரென்றால், பாராவின் சில கருத்துகளிலே ஓரளவுக்கு நியாயமுமிருக்கின்றதை ஒத்துக்கொள்ளவும் முடிகிறது. மீதிப்பட்டோர், பாராவின் பாராக்களிலே பாராமுகமாக இருந்தாற் தவறில்லை. அது அவரது பதிவு; அதை இப்படி நாளுக்கு ஒன்பது கட்டளைகளாக எழுதிக்கொள்ள அவருக்கு உரிமையிருக்கிறது.

நீர் இதுக்குப் போய் அலட்டிக்கலாமா? :-)

சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் இல்லை, எந்த ராமசாமியும் கோணங்கியும் போல வரவேண்டுமென்று எழுதும் எந்தப் படைப்பாளியும் உருப்பட வாய்ப்பில்லை. தானாக எழுதவேண்டும்.