கோளாட்டம்!

கோளாட்டம் அப்படிங்கற பேருல நேத்தைய ஆட்டம். எல்லா வயசுக் குழந்தைகளுக்குமானது.



நுழையும் போது ஈயப் பாத்திரக் கடை மாதிரி ஒரே சத்தம். அங்க ஒரு எடத்துல ஒருத்தரு அடுப்படில இருக்க எல்லாப் பாத்திரங்களையும் தூக்கிக்கிட்டு வந்து போட்டிருக்காரு. அடிக்கிறதுக்கு குச்சியும். குஞ்சு குளுவானெல்லாம் குச்சியால சட்டி முட்டியையெல்லாம் அடிச்சுக் கிளப்பினதுகள். தரையில பரப்பி வச்சு, கம்பியில கட்டி வச்சு. பேரு junk yard orchestra.



ஒருவர் புத்தகப் படமொன்றைக் காட்டி, இதான் நெருப்புக் கோழின்னார். இதோ பாருங்க அதோட முட்டை, நிஜ முட்டை (உள்ளீடற்றது!). இன்னும் சில பறவை முட்டைகள், மரத்தால் செய்யப்பட்டவை. ஒரு குவியலா குச்சியெல்லாம் போட்டிருந்தாங்க. பிள்ளைகள் எடுத்து வட்டமா அடுக்கிக் கூடு செய்யலாம். உள்ளேயும் உக்காந்துக்கலாம். கண்ணுக்குக் கண்ணாடி, கைக்கு உறை. பாதுகாப்புக்கு. பிள்ளைகள் பறவைகளைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.



கொஞ்சம் தள்ளி அங்கேயொரு மேசையருகில் மின்காந்தம் செய்து பழகிக் கொண்டிருந்தனர்.



அப்புறம் பாருங்க இவரு, நீல மனுஷன். நல்ல தெளிவான குரல். என் பேரு சீகோ. எனக்கு வயசு 2.6 வருஷம். நியூயார்க்கில பொறந்தேன். ஒடம்பொறந்தார் அறுவர். வாங்க வாங்க, நல்லாருக்கியளா, எந்தூரு, அடடே குட்டிப் பெண்ணே உன் சட்டை நல்லாருக்கே, என்னோடு படம் எடுத்துக்கறியா, ஏ நங்கையே எனக்குக் கை குலுக்கு, என்னோடு ஆட விருப்பமா? இப்படியெல்லாம் பேசியபடி நின்றது ஒரு ரோபாட். காலில் சக்கரத்தைக் கட்டி நகர்ந்தது. அழைத்தால் திரும்பியது, கேள்விக்குப் பதில் சொன்னது. யாரிடமோ ஸ்பானியத்தில் பேசியது. உனக்கு எத்தனை மொழி தெரியுமென்றேன். நான் நிறைய மொழிகளைப் பேசுவதற்குப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கேன், உனக்கு எத்தனை தெரியுமென்றது. தமிழ், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி. உனக்குத் தமிழ் தெரியுமா? தெரியாது நண்பரே, உங்கள் மொழியில் ஹலோ எப்படிச் சொல்வீர்கள்? வணக்கம். Same to you my friend என்று நடையைக் கட்டியது! வாங்கலாம், வாடகைக்கும் எடுக்கலாம். விபரம் வேண்டுமானால் இங்கே பார்க்கலாம், நாங்கள் பார்த்த 'ஆளின்' பெயர் SICO.



ஒரு அகலமான மரத் தொட்டி. அதுக்குள்ள மணல். மணலுக்குள்ள புதைஞ்ச கிளிஞ்சல்கள், சங்குகள், சிப்பிகள். அளைந்து கிடந்த பிள்ளைகள். பிள்ளைகளா, நீங்க ரெண்டு சங்குகளை வீட்டுக்குக் கொண்டு போகலாம்னார் அருகிருந்தவர். அருங்காட்சியகத்துக்காரர். இதெல்லாம் எங்கேருந்து பொறுக்குனீங்கன்னேன். இந்தியப் பெருங்கடலோரத்துலேருந்து. ரொம்ப காலத்துக்கு முந்தி, நீ இந்தியனா, ஓ அப்ப நீ பாத்திருப்பே. ஆமாம். அப்புறம் அவரோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆமா நீ நம்ம அருங்காட்சியகத்துக்கு வந்திருக்கியா? இன்னும் இல்லையே. நீ வரணும், இந்தா ரெண்டு சீட்டுன்னு குடுத்தார். நன்றின்னு வாங்கிட்டேன். மாசிலனுக்கு ரெண்டு சங்குகள்.



அப்புறமா திடீர் வித்தைகள். அதாவது பார்க்க வந்திருக்கும் குழந்தைகளுக்குக் குட்டிக் கரணம் போட, பிரமிடு மாதிரி ஒருவர் மேலொருவராய் ஏறி நிற்கச் சொல்லித் தந்தார்கள். சின்ன மேடையில் பிள்ளைகள் செய்து காட்டுகிறார்கள். ஒரு குட்டியூண்டு திடீர் நாடகமும். இதுவும் உடனடிக் கலைஞர்களால்.

பார்க்க முடியாது போனது சிறு கோளரங்கம். அதற்கான முன்பதிவு முடிஞ்சிருச்சாம். வருகைக்கு நன்றி, வணக்கம்!

0 comments: