எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்*

சனியன்று முகத்திற் கருஞ்சாந்தும் வெண்கோடும்
யாரென்று கேட்டேன் பேரொன்று சொன்னது.
பிறிதொரு நாள் நிறமடித்த கொம்பிரண்டு
இன்னொரு பெயரில் யாரோ வைத்தாராம்.
இப்படித் தினமும் வடிவுகொண்டு வருவதும்
குழாயும் விழியும் வழிநீர்க் கொட்டி நானும்
கழுவிக் களைந்து வெளியில் விடுவதும்
மண்ணில் ஈரப் பந்தாய் உருண்டதுவும்
மீண்டுங் கால்மேல் புரட்டிவந்து நிற்பதுவும்.
சொல்லியுங் கெஞ்சியுங் குச்சியை யாட்டியும்
நானுஞ் சொல்வேன் அவனுஞ் சொல்வான்
மெளனகுரு சாமியொருத்தி வருநாளெல்லாம்
விழிமலர்த்திப் புன்னகைத்து உள்ளே போயென்பாள்.
ஈதன்றோ பிள்ளையென்று யாவரும் நோக்கக்
கேட்டுவிழி நீர்சொரிய நிற்கும், வீடு வந்து
உனக்கும் பெப்பே ங்கொப்பனுக்கும் பெப்பேயெனக்
கூரைத் தலையிடிக்கக் குதியாட்டம் போடும்.

ஏ பொல்லாக் குரங்கே, உன்னோடு வாழ்தல் அரிது!

*பின் குறிப்பு:
...முறையாய் நடப்பாய் முழுமூட நெஞ்சே
மேவி மேவித் துயரினில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்...
என்ற வாக்கில் பாரதியார் ஒரு விநாயகர் பாடலில் தன் மனத்தைப் பார்த்துப் பாடியதிலிருந்து, இத்தலைப்புக்கான வரி எடுக்கப் பட்டிருக்கிறது.

1 comments:

said...

இப்படி கவிதைபாடி வலைப்பதிவாளர்கள் எல்லோரையும் உங்கள் பதிவுக்கு இழுப்பதற்காக உங்கள் மீது வலைப்பூ வழக்காடுமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்