பீபாடி அருங்காட்சியகம்

இப்போ அப்போ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்து நேற்று ஒருவழியாய்ப் போனோம். இது ஏல் பல்கலையினால் அமைத்துப் பராமரிக்கப் படுகிறது. வரலாறு மற்ற தகவல்களை இங்கே காணலாம்.

3 தளங்கள். தரைத்தளம்: ஆப்பிரிக்கக் குட்டி யானையின் எலும்புக்கூடு வரவேற்றது. பல்லின் கடி/வெட்டுப் பரப்பு ஆப்பிரிக்க யானைக்கும் நம்ம ஊர் யானைக்கும் வேறமாதிரி இருக்குமாம். உள்ளே டைனோசர்களின் மாதிரிகள், புதைபடிவங்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புக்கூடுகள். அதில் ட்ரைசெரடாப்ஸ் என்ற முக்கொம்பரின் மண்டையோட்டைத்தான் பார்க்கிறீர்கள்.ஓ.சி. மார்ஷ் என்பாரின் பங்களிப்பு 1800ன் பிற்பகுதியில் அறிவியல், இக்காட்சியகம், இப்பல்கலை ஆகியவற்றுக்கு மதிப்புக்குரியது. வயோமிங் மாநிலத்தில் யாரோ தோண்டியெடுத்து இன்னாதுன்னு இவர்கிட்ட அனுப்ப, அதை ஆராய்ந்து டொரொசாரஸ் எனக் கண்டது இவரே. டொரொசாரஸின் பெருஞ்சிலையை (கவனிக்க, மார்ஷின் சிலை அல்ல) அருங்காட்சியக வாசலில் நிறுவ ஏற்பாடு நடக்கிறது. ஒவ்வொரு டினோசர் வகைக்கும் வாழ்ந்த காலம், சாப்பாட்டுப் பழக்கம் இதெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது. பக்கச் சுவற்றின் மேற்பகுதியில் 110/16 அடி என்ற அளவில் ஒரு ஓவியம். இது 1942ல் வரையப்பட்டது. 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னான ஒரு வனக்காட்சி, டினோசர்கள் மேய்கின்றன. அப்புறம் புதைபடிவமான மரங்கள், இலைகள் ஆகியவற்றை வெட்டியெடுத்து வைத்திருக்கிறார்கள். புதைபடிவத்துக்குள் உட்சென்ற மண்ணும் உப்புக்களும் கலந்து வண்ணம் காட்டுவது பிரமிப்பு.சற்றுத் தள்ளி ஊர்வன, பாலூட்டிகளின் பல்வேறு வகைகள், பரிணாம வளர்ச்சிகள். நிறைய பொருட்களை அமெரிக்காவிலேயே பெற்றிருக்கிறார்கள். மிகுதி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்கல்/வாங்கல் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் தளம்: விண்கற்கள் (மேலே கருப்பு, உள்ளே வெளுப்பு!). ஒரு கண்டுபிடிப்புக் கூடம். அதிலே பல்வகைத் தாதுக்கள், கடல்வாழ்/செத்த உயிரிகள். சிலதைத் தொட்டு அறியலாம். சிலது ஷ்ஷ்! அப்புறம் பீபாடி, ஓ.சி. மார்ஷ் ஆகியோரின் வாழ்க்கை/பணிகளைப் பற்றிக் கொஞ்சம்.

மூன்றாம் தளம்: கனெக்டிகட்டின் உயிரியல் வளம். பறவைகள், விலங்குகள், நிலப் பரப்பு. தாதுக்கள், உப்புக்களின் வண்ணக் கோலம் கொஞ்சம் தள்ளி. இங்கே பாருங்கள், இந்தக் குருவிகளின் நிறங்களை, கலப்பில் பிறந்தவை. இதெல்லாம் இயற்கையில் சகஜமாம்!பெரும் வெள்ளை அன்னப் பறவைகள். இவற்றை நீங்கள் இன்றும் காணலாம். அப்புறம் செவ்விந்தியர்களின் வாழ்வைப் பற்றிய சேகரிப்புகள். எகிப்தியரின் பழம்பொருட்கள், இரண்டு மம்மிகளும் அடக்கம்.

எப்போதும் இருக்கும் (தத்துவார்த்தமாகப் படிக்கக் கூடாது) காட்சிப் பொருட்களும், வேறு அருங்காட்சியகங்களிலிருந்து வந்து போகும் காட்சிப் பொருட்களுமாக சுறுசுறுப்பாக இயங்குகிறது இக்காட்சியகம். இந்தப் பக்கம் வருபவர்கள் அவசியம் பார்க்கவும்!

கற்றுக் கொண்ட இன்னொன்று: எல்லாவற்றையும் ஆற அமரப் பார்த்துக் குறிப்பெடுத்து வந்து ஒழுங்காய் எழுதத் தனியாய்ப் போனால் ஆகும், இரண்டு வயதுப் பிள்ளையின் அப்பனாகப் போனால் ஆகாது!

0 comments: