பாதை மாறிப் போனோமா?

நேற்று படித்த இரு பதிவுகள் நாளை நிரப்பி விட்டன. ஒன்று எஸ்.ராவின் பூம்புகார்-கொடுங்கலூர்ப் பாதை. இன்னொன்று மதுரபாரதியின் ஆணழகனின் அலங்காரம். இவை இரண்டுமே என்னை ஒரு பழைய காலத்துக்குத் தூக்கிச் சென்றன.

அத்தனை செழுமையாய் ஒரு இனம் வாழ்ந்திருந்திருப்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். நாட்டுக்கு நாடு புராதனங்களைத் தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்தும், கண்டம் விட்டுக் கண்டம் சென்று மனிதர்கள் தம் வேரினைத் தேடியும் வரும் இக்காலத்தில் நாம் என்ன செய்கிறோம்? பழையன என்று நாம் நினைப்பவை எவ்வளவு தூரம் பழையன? மேற்புறத்திலே எஞ்சியிருக்கும் கற்கோயில்களும், கிணற்றாழத்தில் கிடைக்கும் தேவியர் சிலைகள் மட்டிலுந்தான் நம் வரலாறா? இதையும் தாண்டிப் பின்னே போனால் என்னென்ன இருக்கும்?

பள்ளிக்கூடத்தில் படித்து "அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டேங்கி, மல்லல் மதுரையார் எல்லாருந் தாமயங்கி" என்று நெட்டுருப் போட்ட வரிகளோடு சிலப்பதிகாரம் நின்று போனது. அதனை முழுதும் படிக்கும் தாகம் எழுகிறது. மதுரபாரதி வருணிக்கும் ஆடவனும் பின்புலத்தில் நம் மனக்கண்ணில் காட்சியாய் விரியும் நிலமும் பெருமூச்சைத்தான் வர வைக்கின்றன. கபிலன் வாழ்ந்த காலத்தின் இயற்கை அழகை முன்பொருமுறை ஒரு ஆங்கில மாது சொன்னது நினைவுக்கு வந்தது.

தொழில்மயமாக்கலில் சிதைந்து போன இயற்கை வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், அட இப்போதிருக்கும் இச்சமூகத்திலாவது மக்கள் ஒவ்வொருவரும் நிறைவான, மரியாதையான, அறிவான வாழ்வினை வாழமுடியாதா என்ற ஏக்கம் படருகிறது. நமக்குத் தெரியாத விசயம் நாம் யார் என்பதும், நம் முன்னோரின் வாழ்வு என்னவென்பதும்தான். நாமறிந்த பெருங்கட்டிடங்களெல்லாம் கோயில்கள். நாமறிந்த சிற்பங்களெல்லாம் தெய்வங்கள். நாமறிந்த பாட்டுக்களெல்லாம் சாமிகளைப் பற்றியவை. இல்லை. இது நிச்சயமாகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக அண்மையில் நிகழ்ந்தவொரு மாற்றம். நம் கண்ணுக்கு முன்னாலேயே கணேஷா வந்து கடலில் கரைகிறாரென்றால், பல நூறாண்டுகளுக்கு முன்னிலிருந்து என்னென்னவெல்லாம் செருகப் பட்டிருக்கும்? செருகினதெல்லாம் பொய்யென்று சொல்லவில்லை, அவை சொல்வதையெல்லாம் புரட்டென்று சொல்லவில்லை. அவ்விதமான கருத்துக்கள் மானுடத்தில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தின? அத்தகைய மதங்களால் மனிதப் பெரும்பான்மைக்கு முன்னேற்றம், ஆன்மாவிலோ, பொருளியலிலோ, கிடைத்ததா? கிடைக்காத பட்சத்தில் அவற்றை உயர்ந்தவையென்று நாம் ஏன் போற்ற வேண்டும்? கடைபிடிக்க வேண்டும்? வைத்திருக்க வேண்டும்?

ஒன்று "பழையன கழிந்து" வேகமாய் முன்னோக்கிப் போக வேண்டும், அல்லது பின்னோக்கிப் பார்த்து நம்மைச் சரி செய்து கொள்ள வேண்டும். இரண்டுங்கெட்டானாய்க் கிடந்து குழம்புவதில் இழப்புதான் மிஞ்சும். இத்தகைய குழப்பச் சமுதாயத்தில் பிறப்போரெல்லாம் "தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு" இன்னொரு தாழ்வான சந்ததியை உண்டாக்கித் தாழ்வான சாவினைத் தழுவ வேண்டியதுதான். நாம் திரும்பிப் பார்க்க வேண்டும், ஒவ்வொன்றையும். நாம் பார்க்கின்றவற்றுக்கு இன்னும் முந்தைய காலத்துக்கு. ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் மட்டுமே பழமையென்று சொல்லாமல் அதனினும் பழமையான சிலப்பதிகாரத்துக்குச் செல்ல வேண்டும். அதனினும் பழமையாய் ஏதேனும் கிடைத்தால் அதற்கும். நாம் யாரென்பதும், எந்த மொழிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியென்பதையும் தெரியவரும். கபடமில்லா அந்த ஆராய்ச்சியில் நாம் இன்று களைய வேண்டியவை எவையென்பதும் தெரிந்து போகும்.

நிச்சயமாய் மயில்கள் விளையாடும் வீட்டுக் கொல்லைப்புறத்தை நீங்களும் நானும் காணப் போவதில்லை. ஆனால் மனிதர்களாவது நிம்மதியாகவும், பெருமையாகவும், அறிவோடும் வாழலாம். பின்னுக்குப் போய்த் தோண்டிப் பார்த்து நீயெல்லாம் இது நானெல்லாம் இது என்று வேற்றுமையை வளர்ப்பதில்லை நம் நோக்கம், நாமெல்லாம் ஒரு மொழிக்குடும்பத்தினர், நம் மொழியைப் பேசிய இனம் இப்படியிருந்திருக்கிறது, இதிலே இன்னின்ன மாற்றங்கள் வந்து கெடுத்திருக்கின்றன, இவற்றைக் களைவோம், ஒன்றாய் வாழ்வோம். சொல்லச் சுலபந்தான், எத்தனையாயிரம் சிக்கல்களிருக்கின்றன? ஆனாலும் ஒரு நியாயமான தமிழ்ச் சமுதாயத்துக்கான வேட்கையையும், நம்பிக்கையையும் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.

0 comments: