காற்றென வந்தது கூற்றமிங்கே



வெஸ்ட் ஹேவன் கடல், கரையில் இந்த அமைதி நேற்று. முந்தாநாள் இப்படியில்லை. பெருங்காற்று. பேரலைகள். கன்னியாகுமரி பாறையில் மோதித் தெறிக்குமே அப்படியாபட்டவை. கலங்கிய தண்ணீர். கருமை. கடற்பருந்துகள் கடலை விட்டு வெகுதூரப் புல்வெளியில் கூட்டமிட்டுத் திரிந்தன. அந்தக் காற்று Frances புயலின் மிச்ச சொச்சமாயிருந்திருக்கக் கூடும்.

அமெரிக்கத் தென்கிழக்குக் கடற்கரையோரம் புயலுக்குப் பிரபலம். ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட ஜூலையிலிருந்து அக்டோபர் வரைக்கும் புயற்காலம். அப்போது கிளம்பும் புயல்கள் ஒவ்வொன்றுக்கும் அகர வரிசையில் பெயர்கள் இருக்கும். வானிலை முன்னறிவிப்புகள் ஓரளவுக்குத் துல்லியமாகவே கிடைக்கும். இங்க, இப்ப, இந்த வேகத்துல வந்து அடிக்கும்னு தெரியும். இந்த அனுமானம் தப்பிப் போகிறதும் உண்டு.

1999ல நான் தென்கரோலினாவில் இருந்தபோது Floyd அப்படின்னு ஒரு புயல் வந்தது. மிகப் பெரும்புயல் என்ற பீதி கிளம்பியது. எல்லோரும் ஊரைவிட்டுக் கிளம்பியோடுங்கள் என்று கண்டிப்பான உத்தரவைக் கொடுத்துவிட்டார்கள். நிறைய நிறுவனங்கள் மூடப் பட்டன. நான் என் பழைய மூத்த ஆய்வாளரோடு கிளம்பி ஒரு 250 மைல் தாண்டி அட்லாண்டா நகருக்குச் சென்றுவிட்டேன். சென்ற பயணம் நெடிது. ஏனெனில் மூன்று தென் மாநிலத்தவர்களை அன்றைக்குத் திடீரெனக் கிளப்பி விட்டு விட்டார்கள். நெடுஞ்சாலையில் நெருக்கடி. புயல் பீதி, சாலை எரிச்சல் எல்லாமாய்ச் சேர்ந்து அந்த இரவைத் தின்றன. எப்படியோ. புயல் வந்தது. நானிருந்த ஊரில் பெரும் அடியில்லை. மேலே போய் வடகரோலினாவைத் தாக்கி, அப்புறம் மேலே மேலே நகர்ந்து வட மாநிலங்களையும் பெருமழையால் குளிப்பாட்டிவிட்டுக் கரைந்து போனது.

பார்த்திருப்பீர்கள், இப்போது ஐவன், ஒரே மாத காலத்தில் மூன்றாவது புயல். க்ரினேடாவைக் கிட்டத்தட்டச் சின்னாபின்னமாக்கிவிட்டு ஜமேய்காவில் இப்போது ஆட்டம். நகர்ந்து புளோரிடாவுக்கு வருமென்று கணிப்பு. நிற்போரும், கிளம்புவோருமாய் அங்கே அமளி. உயிர்களையும் உடைமைகளையும் பெயர்த்தெறிந்துவிட்டு ஒருவாரம் கழித்து இந்தப் பக்கம் வந்து காற்றூதிக் கடல்கலக்கி ஓய்ந்து போகலாம் ஐவன்.
தலைப்பு உபயம்: பாரதியாரின் "புயற் காற்று" கவிதை.

0 comments: