தலித் மூட்டிய அடுப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி. 'சிவபுரி' மாவட்டத்துல. 150 பிள்ளைகளில் 115 பேர் "மேல்சாதி". மதிய உணவு சமைக்கும் ஒரு சமையற்காரம்மா. அவரொரு தலித். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மேல்சாதிக் குஞ்சுகள் அந்தம்மா சமைத்ததைச் சாப்பிட மறுத்து விட்டனராம். பிள்ளைகளுக்கு வீட்டில் அப்படிச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தலைமையாசிரியர் மாணவர்களைத் திருத்துவதற்குப் பதில் சாதீயாதிக்கத்துக்கு அடிபணிந்து இன்னொரு மேல்சாதிச் சமையற்காரரைப் பணியமர்த்தினாராம். இப்போ ரெண்டு பேருக்கும் பாதிப்பாதிச் சம்பளம், சமைப்பது மேல்சாதி ஆயா. பிள்ளைகள் தலித்துகளோடு உட்கார மாட்டார்களாம், ஒன்றாயிருந்து சாப்பிட மாட்டார்களாம். ஒரு அரசு அதிகாரி தனக்கு எதுவும் தெரியாது ஆனா தெரிஞ்சா நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாராம்.

இது மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் எங்கோ ஆயிரத்திலொன்றாக நடக்கிறதென்று நான் நினைக்கவில்லை. நாளைய நாட்டை உண்டாக்கும் பள்ளிக்கூடத்தில் இந்த நிலைமை. இந்தப் பிள்ளைகள் வளர்ந்து என்ன செய்யுமென்பதையும் அந்த மேல்சாதீய மனப்பான்மை எப்படிப் பல்கிப் பெருகும் என்பதையும் ஊகிப்பது கடினமில்லை. ஒரு சமையற்காரரின் சுயமரியாதையை அழித்து, அவரது பாதி வயிற்றில் அடித்து இந்தச் சாதீயம் காக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு ஆச்சாரம் பார்க்கிற மேல்சாதியெல்லாம் தலித் சாகுபடி செய்கிற நெல்லை, காய்கறியை, வளர்க்கிற ஆட்டை, கோழியைச் சாப்பிட மாட்டோம், அவன் மேய்க்கிற மாட்டுப் பாலைக் குடிக்க மாட்டோம் என்று சொல்லிவிடுமா?

செய்தி

4 comments:

said...

சமையலுக்கு மட்டும்தான் அனாசாரம். நெல், பச்சைக் காய்கறிகள், பூ முதலியவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

பார்ப்பனர்கள் தலித் 'தீட்டை'ப் போக்க சில வழிகளை வைத்துள்ளனர்.

விலையுயர்ந்த பொருட்கள் மீது தலித் கை பட்டுவிட்டால் அதன்மீது மாட்டு சாணியைக் கரைத்து ஊற்றி (அல்லது லேசாகத் தெளித்து) நாராயணா (அல்லது சிவ சிவ?) என்று மூன்று முறை சொன்னால் 'தீட்டு' போய்விடும். அதன்பின் நல்ல தண்ணீரால் கழுவி வைத்துக் கொள்ளலாம்.

பார்ப்பனரல்லாத பிற மேல்சாதியினர் என்ன வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

===

தேசியப் போராட்டத்தில் பங்குகொண்டவர்களுக்கு இடையிலேயே இந்தப் பிரச்சினை இருந்தது. அதனால்தான் வ.வே.சு அய்யரின் பாரத்வாஜ ஆஷ்ரமத்தில் பிராமணப் பிள்ளைகள் மற்றவர்களோடு சேர்ந்து உணவுண்ண மறுத்தனர். இன்றும் தொடர்கிறது.

எப்பொழுது மனதளவில் உயர்வு-தாழ்வு என்ற எண்ணம் ஆழப்பதிந்து விட்டதோ, வெறும் மேலோட்டமான கல்வியால் எளிதாக மாற்றிவிட முடியாது என்று தோன்றுகிறது.

said...

தற்போது அறியப்படுவது:
//Headmaster Rajendra Srivastava, academic coordinator Brajmohan Singh Jat and assistant teacher Pawan Awasthi were suspended on Friday by collector M. Geeta...//
http://www.telegraphindia.com/1040912/asp/nation/story_3748131.asp (கீழே போய்த் தேட வேண்டும்).

said...

சாதி இல்லாத நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துமதம்/இந்தியா இல்லை. ஏனெனில் சாதிஅமைப்பின் ஒரே நோக்கம் மக்கள் மேல் அதிகாரத்தை படித்தரங்களாக கட்டமைத்து அதை வழிவழியாக நிலை நிறுத்துவது. பெண்கள், உழைக்கும் மக்கள் இவர்கள் மேலான அதிகாரத்தை இழப்பதற்கு இந்து/இந்திய சமூகம் உட்டப எந்தச் சமூகமும் தயாராகவில்லை எனினும் இங்கே அது பிறப்பின் அடிப்படையில் செயல்படும் விதத்திலும், சுரண்டப்படுபர்கள் விழித்துக்கொள்ளாத விதத்திலும் திறம்பட கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகார ஏணிப்படியமைப்பு அடிமைத்தனத்தையும் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டது. ஒவ்வொரு அடிமையும் தனக்குக் கீழுள்ள இன்னொரு அடிமையை அதிகாரம் செய்யுமாறு இது கட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொருவரின் அடிமைத்தனமும் உறுதிசெய்யப்படுகிறது. யாருக்கும் அடிமையாகாத அதிகாரம் செலுத்தாத மனிதனுக்கான ஒரே வழி அவனது தன்மானத்தை உணர்ந்துகொள்ள வைக்கிற கல்விதான். அது மிக ஆபத்தானதென இந்த அமைப்பை நிர்வகிக்கிற சக்திகளுக்குத் தெரியும். எனவேதான் சம்புகவதத்திலிருந்து இன்றுவரை உண்மைக்கான தேடல் அது யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் அது இனங்கண்டுகொள்ளப்பட்டு அழிக்கப்படுகிறது; முடக்கப்படுகிறது.

said...

சாதியோடு கட்டுக்கடங்கா மக்கள் தொகைப் பெருக்கம் வேறு! வடநாட்டின் பல பகுதிகள் இன்னும் சில நூற்றாண்டுகள் பின்தங்கியே உள்ளனவென்று சொன்னால் அது மிகையில்லை. சாதாரண மக்களை அங்கு முன்னேற விடவே மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.