போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து...

2. NGO-ஆக்கல்
போராட்ட இயக்கங்கள் எதிர்கொள்ளும் இன்னொரு நச்சு என்னவென்றால், எதிர்ப்பியக்கங்களை NGO(அரசு சாரா நிறுவனங்கள்)-ஆக்குதல். நான் இப்போது சொல்லப் போவதை NGOக்களின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகச் சுலபமாகத் திரித்து விடலாம். அது தவறு. மதிப்புமிக்க பணிகளைச் செய்யும் NGOக்கள் இருக்கிறார்கள், ஆனால் போலித்தனமான NGOக்கள், இருண்ட நீர்ப்பரப்புகளிலிருந்து (திட்டங்களுக்கான பணம், வரி ஏய்ப்புகள்) உறிஞ்சுவதற்காகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. பீகார் போன்ற மாநிலங்களில் இந்நிதிகள் வரதட்சிணை மாதிரிக் கொடுக்கப் படுகின்றன. இந்த NGO கொள்கையைச் சற்றே பரந்த அரசியல் நோக்கில் காணவேண்டும்.

இந்தியாவில் NGOக்களுக்கான நிதியுதவி 1980, 1990களிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. இது இந்தியா தாராளமயமாக்கலுக்குத் (neoliberalism) தன் கதவுகளைத் திறந்துவிட்டபோது நிகழ்ந்தது. இந்த நேரத்தில், இந்தியா, புதிய மாற்றங்களுக்குத் தன்னைச் சரிசெய்துகொள்ளும் வகையில், கிராமப்புற முன்னேற்றம், விவசாயம், சக்தி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டது. வழக்கமாக அரசு செய்யவேண்டிய, ஆனால் புறக்கணித்துவிட்ட, இத்துறைகளில் NGOக்கள் வேலை செய்ய முன்வந்தனர். அரசுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால், NGOக்களிடம் மொத்த தேவைக்கான பணத்தில் ஒரு சிறு அளவே இருந்தது. பெருவாரியான பணம் கொழிக்கும் NGOக்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால், உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள். இந்நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால் மேற்கத்திய அரசுகள், உலக வங்கி, ஐநா மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களெல்லோரும் ஒன்று போலத்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும், இவர்கள் எல்லோருமே இளக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகத்தின் பகுதிகளே. இவர்களது பணி என்னவென்றால் தாரளமயமாக்கலை மேற்பார்வை செய்வதும், அரசுகள் இத்துறைகளில் செலவு செய்வதைக் குறைக்கச் சொல்வதுமாகும்.

ஏன் இந்நிறுவனங்கள் NGOக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்? வெறுமனே பழங்காலத்திய சமயச் சங்கங்கள் மாதிரியா? குற்றமனப்பான்மையா? இது அதற்கும் கொஞ்சம் மேல். NGOக்கள் அரசின் பின்வாங்குதலால் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்புவது போன்ற ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துகின்றன. இவை வேலை செய்கின்றன, ஆனால் பொருள்ரீதியாக ஒரு தேவையற்ற/மடத்தனமான வகையில். இவற்றின் பங்களிப்பெல்லாம் அரசின் மேல் மக்களுக்கிருக்கும் கோபத்தைத் தணிப்பதும், மக்களுக்கு நியாயமான உரிமைகளாகக் கிடைக்க வேண்டியதை இலவசமாகவும், கொடையாகவும் கொடுக்கிறதும்தான். இவர்கள் மக்களின் மனதை நிலைமாற்றுகிறார்கள். இவர்கள் மக்களை ஒரு சார்ந்து நிற்கும் பலிகளாக்கி, அவர்களது அரசியல் எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள். NGOக்கள் அரசுக்கும் மக்களுக்குமிடையேயான ஒரு தாங்கி/தடுப்பாக இருக்கிறார்கள். பேரரசுகளுக்கும் குடிகளுக்குமிடையே இவர்கள்தான் நடுவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதுவர்கள்.

நெடுநோக்கில், இந்த NGOக்கள் இவர்களுக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்களேயன்றி, இவர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அம்மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. இவர்களைத்தான் தாவரவியலாளர்கள் 'காட்டி' (indicator) என்கிறார்கள். தாராளமயமாக்கலினால் விளைந்த சீரழிவுகளை விட NGOக்களினால் விளையும் சீரழிவு அதிகமானதாக இருக்கும் போலத் தோன்றுகிறது. இந்த NGO விவகாரத்தைச் சுரீரென்று சொல்வதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தவுடன், பின்னாலேயே NGOக்களை அனுப்பி அந்தச் சீரழிவுகளைச் சுத்தம் செய்யச் சொன்னது. இந்த NGOக்களுக்குப் பணம் சரியானபடி கிடைக்கவும், இவை அந்தந்த நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படவும், இவை மேம்போக்கான ஒரு அரசியல் அல்லது வரலாற்றுக் காரணத்தைக் வடிவமைத்துக் கொள்கின்றன. எப்படியாயினும், ஒரு சங்கடமான வரலாற்று அல்லது அரசியல் காரணம், ஏழை நாடுகளிலிருந்து வரும் அரசியலல்லாத (அப்படியென்றால் மிகவும் அரசியலானது என அர்த்தம்) துயரச் செய்திகள் இவையெல்லாம் அந்த (இருளடைந்த) நாடுகளிலிருக்கும் (இருளடைந்த) மக்களைப் பாதிக்கப் பட்டோராய்க் காட்டுகின்றன. இன்னொரு ஊட்டச்சத்து குறைந்த இந்தியன், இன்னொரு பசியான எத்தியோப்பியன், இன்னொரு ஆப்கன் அகதி முகாம், இன்னொரு சிதைக்கப்பட்ட சூடானியன்...இவர்களுக்கெல்லாம் ஒரு வெள்ளைக் காரனின் உதவி அவசியப்படுகிறது. இவ்வகையில் (NGOக்கள்) அறியாமலேயே மாறாத நிறவெறியையும், மேற்கத்திய நாகரீகத்தின் கருணையையும் (கடுமையான அன்பு) மறுவுறுதி செய்கிறார்கள். அவர்கள்தான் இந்நவீனவுலகின் மதச்சார்பற்ற சமயச் சங்கத்தார்கள்.

கடைசியில், சிறிய அளவில், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, NGOக்களுக்குக் கிடைக்கும் பொருளானது, ஏழை நாட்டுப் பொருளாதாரத்தில் நிகழும் நிழலான அரசியல் கொடுக்கல் வாங்கலைப் போலவே ஆகிவிடும். இது இன்னதைச் செய் என்று கட்டளையிட ஆரம்பிக்கும். இது மோதலைப் பேச்சுவார்த்தையாக்கும். இது எதிர்ப்பை அரசியலற்றதாக்கிவிடும். உள்ளூர்க் குடிகளின் தன்னம்பிக்கை மிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் குறுக்கிடும். NGOக்களிடம் பணமிருக்கிறது, இந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு போராட்டக்காரனுக்கு வேலை கொடுக்க முடியும், இதன் மூலம் அவர்களை அந்த நேரத்துக்கு ஏதோ நல்லது செய்வதாக (பொருளீட்டுவதாக) நினைக்க வைக்க முடியும். உண்மையான அரசியல் எதிர்ப்புகள் இந்தக் குறுக்குப் பாதைகளையெல்லாம் காட்டாது. அரசியலை NGO-ஆக்கம் செய்வது போராட்டங்களை ஒரு நற்பாங்கான, அறிவார்ந்த, சம்பாத்தியத்துடனான, 9 மணியிலிருந்து 5 மணிவரைக்குமான ஒரு வேலையாக மாற்றுகின்ற ஆபத்தாகிறது. அத்தனையையும் ஒரு சில நாணயங்களை விட்டெறிந்து. உண்மையான எதிர்ப்புக்கு உண்மையான விளைவுகளிருக்கும். சம்பளமிருக்காது.

(இன்னும் ஒன்னு இருக்கு)

2 comments:

said...

என்னால் இந்த வாதத்தை முழுவதுமாக ஒத்துக்கொள்ளமுடியவில்லை. நான் தொண்டனாக இருக்கும் Association for India's Development (http://www.aidindia.org) என்ற லாபத்துக்கல்லாத அமைப்பின் மூலம் இந்தியாவில் பணிபுரியும் NGOக்களுக்கு நிதியுதவி செய்துவருகிறோம். சிலசமயங்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்காக போராடும் NGOக்களுக்கு அவற்றில் முழுநேரப் பணிபுரிவோருக்கு சம்பளமாக அமையும் நாங்கள் அனுப்பும் நிதி. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா? போராடுவதற்காக அவர்களுக்கு பண உதவி செய்யவில்லையெனில் அவர்கள் வீட்டில் அடுப்பு எப்படி எரியும்? நர்மதா போராட்டம் போன்ற உணர்ச்சிமிக்கதாக எல்லா போராட்டங்களும் அமையாது. நர்மதா அணையால் நேரடியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையே அதிகம். மற்ற போராட்டங்களை ஊக்குவித்தாலொழிய அவை தொடராமல் போகலாம். ஆனால், அவர் சொல்வதுபோல் world bank போன்ற அமைப்புகள் சிலசமயம் உள்நோக்கத்துடன் செயல்படுவது உண்மையே. அதனால் எல்லா வெளிநாட்டு உதவியையும் ஒரே தராசில் அளக்கமுடியாது.

இந்த பேச்சினை தமிழில் படிக்கும்போது சுகமாக உள்ளது. நன்றி, சுந்தர்.

said...

(இதற்குத்தான் அவர் எச்சரிக்கையுடன் எல்லோரையும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டார்! :)
மக்களை உரிமைப் போராட்டத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் உங்கள் அமைப்பின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
எல்லா NGOக்களின் முக்கியமான பணியாக இது மாறினால் அது பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும், இல்லையா? மக்களைக் கையேந்தி நிற்போராய் ஆக்குவதில் NGOக்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதில் நான் அவரை ஒப்புக் கொள்ளவே செய்கிறேன்.
இந்த மொழிமாற்றம்/வாசிப்பு ஒரு புதிய அனுபவம்.