என்னிசை

எனக்கு இசையைப் பத்தி ரொம்பத் தெரியாது. சின்னப் பிள்ளையா இருந்தப்ப அப்பா ஒரு வால்வு ரேடியோ வாங்கிட்டு வந்தார். போட்டு ரெண்டு நிமிசம் கழிச்சு பச்ச லைட்டு எரிஞ்சு அப்புறமா பாடும். ஓட்டுல ஏரியல்னு ஒரு கம்பி வலை கட்டிருக்கும். அதுல பல்லி ஓடுனா ரேடியோ கர்ர்ர்ன்னு கத்தும். அப்பா எப்போதும் ரேடியோ போட மாட்டார். செய்திக்கு மட்டும். அக்காக்களும் நானும் சினிமாப்பாட்டுக்கு அலைவோம். பக்கத்து வீட்டில் விவிதபாரதி பாடும். எங்க ரேடியோவுக்கு அந்த எடுப்பு ஞானம் இல்ல. ஓசிப்பாட்டு கேக்குறதோட சரி. ஆனா ஞாயிறு முழுக்க மணிமலர், சூரிய காந்தி, நீங்கள் கேட்டவை, நாடகம்னு விடாம கேப்போம். பழசு.

தேர்ந்தெடுக்கும் வசதி வந்ததுக்கப்புறமும் நான் எதையும் பெருசா தேர்ந்தெடுத்துக் கேக்குறதில்ல. காதுல விழறது எல்லாத்தையும் கேக்குறதுதான். சும்மா காட்டுக்கத்தல்னு பேசிக்கிற மேலைச் சங்கீதத்துல இருக்க உண்மையும், தெய்வீகம்னு சபாக்கள்ல நாறுற சங்கீதத்துல இருக்க போலியும், எல்லாம் இந்தக் காதுக்குச் செல்லும். போற ஊர்ல எல்லாம் எதாச்சும் வாங்குறதுதான். ஆனாலும் நாட்டுப்புறப் பாட்டுகள் மேல எப்போதும் ஒரு மயக்கம். நடவு காலத்துல வயல் பக்கம் போனா ஒவ்வொரு வயலுலயும் ஒரு பெரிய கச்சேரி நடக்கும். அந்த ஈரக்காத்துலயும், சேத்து மணத்துலயும் கேக்குற பாட்டு வேற சாதி. சின்ன வயசுல கேட்ட கொல்லங்குடி கருப்பாயி பாட்டுக்கள் பிடிக்கும். ஒரு தரம் எங்க கல்லூரிக்கு விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் ரெண்டுபேரும் வந்தாங்க. ஆடிப் பாடிக் காமிச்சாங்க. அப்புறம் ஒரு விடுதிக் கொண்டாட்டத்துக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி "தமிழ்ல பாடுனா குத்தம்கிறான். நீ என்ன இங்கிலீசுக் காரனுக்கா பொறந்தே?"ன்னு பேசிட்டுப் போனார். இவரோட கச்சேரி ஒன்னைத் திருவான்மியூரில ராப்பட்டினியோட பாத்துக்கிட்டு இருந்தப்ப அய்யனாரு பாட்டுக்கு ரெண்டு பொம்பளங்களுக்குச் சாமி வந்து ஆட. நிற்க.

நாட்டுப்புறப் பாட்டுக்களின் மேலிருந்த ஆசை போன வருசம் ராம்ஜி நாட்டுப்புற ஆராய்ச்சி மையத்திலிருந்து (51/23 பாண்டிய வேளாளர் தெரு, மதுரை-625 001, தொலைபேசி 233 3535, மாறியிருக்கலாம்) கொஞ்சம் பேழைகளை வரவழைத்தது. தெரிந்தவர்களின் பாடல்களோடு 'மக்கள் பாடகர்' மதுரை சந்திரன், கோட்டைச்சாமி ஆறுமுகம், கரிசல் கருணாநிதி, பரவை முனியம்மா, தேக்கம்பட்டி சுந்தர ராஜன், கிடாக்குழி மாரியம்மா என்று நிறைய புதுக் குரல்களைக் கேட்டேன். இது என் குரல். என் மக்களின் குரல். இதுல ஜிகினா சுத்தி செண்டு தெளிக்கல. என் மண்ணு. ஏமாந்த ஆதங்கத்தை, புறக்கணிப்பின் வலியை, போராடுவோம்கற வெறியை அப்புடியே அள்ளி மூஞ்சியில அடிக்கும் பாட்டுக்கள் நிறைய. இதைக் கேக்கணும். தோல் காது இருக்கும் தேசத்துல (பாரதி) இதையும் கேக்கணும். இதுக்கு மேலயும் பாட வக்யனும். அதுதான் நம்மோட, நமதே நமதான இசையக் கண்டு பிடிக்க உதவி செய்யும்.
இதை எழுதத் தூண்டிய பெயரிலிக்கு நன்றி!

0 comments: